பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மன நலம் / பெண்களில் மனச்சோர்வு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண்களில் மனச்சோர்வு

பெண்களில் மனச்சோர்வு ஏற்படும் காரணங்கள் மற்றும் தீர்வு குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு உடல் சார்ந்த நிலைகளைக் கடக்கிறார்கள்: பருவம் அடைதல், கர்ப்பம், தாய்மை, மாதவிடாய் முடிந்தகாலம் மற்றும் வயதான காலம். இந்த நிலைகள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு மிகவும் திகைப்பூட்டக்கூடும். சில சூழ்நிலைகளில் இந்த நிலைகள் உடல் சார்ந்த நோய்களை உண்டாக்கி, அவை நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடும். அத்தகைய நோய்களைச் சமாளிக்க முயற்சி செய்வது அந்தப் பெண்ணின் மனநலத்தைப் பாதிக்கலாம், மனச் சோர்வு அல்லது பதற்றக் குறைபாட்டுக்கு வழிவகுக்கலாம். ஐந்து பெண்களில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களில் மனச்சோர்வை உண்டாக்கக் கூடிய சில காரணிகள்

 • மாதவிடாய்ச் சுழற்சி மாற்றங்கள், அது தொடர்பான நோய்கள், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய அறிகுறிகள் (PMS), மெனோபாஸ், பாலியல் சார்ந்த மற்றும் உடல் பிம்பம் சார்ந்த பிரச்னைகள்
 • தீர்மானம் எடுக்கும் சுதந்திரம் இல்லாமல் இருத்தல் (பெற்றோர், கணவன் அல்லது மாமனார், மாமியாரால் கட்டுப்படுத்தப்படுதல்)
 • பணி, திருமணம் அல்லது இடம் பெயர்தல் காரணமாக ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள்
 • திருமணம் சார்ந்த பிரச்னைகள், உதாரணமாக விவாகரத்து, கள்ள உறவு அல்லது பொருந்தாத்தன்மை
 • சமூக ஆதரவு இல்லாமல் இருத்தல்
 • விரும்பாத கர்ப்பம், கருச்சிதைவு அல்லது குழந்தைப்பேறு இல்லாமல் இருத்தல்
 • நிறையப் பொறுப்புக்களைச் சுமக்க நேர்தல் அல்லது தனிநபராகக் குழந்தையை வளர்த்தல்
 • உடல் மற்றும் மன முறைகேட்டினால் ஏற்படும் அதிர்ச்சி.
 • நெருங்கிய கூட்டாளியின் வன்முறை.

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு என்பது புதிய தாய்மார்களைப் பாதிக்கிறது, பொதுவாக முதல் ஆறு வாரங்களுக்கு இது நீடிக்கிறது. அதே சமயம் இந்த நோய் பல மாதங்களுக்கு அடையாளம் காணப்படாமலே இருக்கலாம். அல்லது எப்போதும் அடையாளம் காணப்படாமலே இருந்துவிடலாம். குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுக்குச் சிகிச்சை தரப்படவேண்டும்.

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுக்கான உறுதியான காரணம் தெரியவில்லை, திடீர் ஹார்மோன் மற்றும் உடல் மாற்றங்கள், புதிதாகப் பிறந்த குழந்தையைக் கவனித்துக் கொள்கிற அழுத்தம் ஆகியவற்றால் இது ஏற்படலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சில நேரங்களில், கர்ப்பமாக உள்ள பெண்கள் கர்ப்பகால மனச்சோர்வு அல்லது குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு என்கிற மனச்சோர்வை அடையலாம். இந்தச் சூழ்நிலைகளில் நிபுணர்களிடம் உதவி பெறுங்கள். எந்த ஒரு மருந்தையும் எடுத்துக் கொள்வதற்கு முன்னால், உங்களுடைய மருத்துவரிடம் அதைப்பற்றிப் பேசுங்கள், அதனால் உங்களுக்கோ உங்களுடைய குழந்தைக்கோ வரக்கூடிய ஆபத்துகள், நன்மைகளைப்பற்றிக் கேளுங்கள். கர்ப்பகாலத்தில் மருந்துகளை எடுத்துக் கொள்வது உங்களுடைய குழந்தையைப் பாதிக்கக்கூடும். அதே சமயம் மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் உங்களுக்கு, உங்கள் குழந்தைக்கு ஆபத்தைத் தரக்கூடும். இதுபற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள், அதன்பிறகு தீர்மானியுங்கள்.

எடுத்துக்காட்டு

மேகா ஓர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார், அவருடைய குடும்பம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது. ஆனால், சில நாள் கழித்து மேகா மிகவும் அமைதியின்றிக் காணப்பட்டார். குழந்தை ஏதேதோ நேரங்களில் பால் குடிப்பதும் ஒழுங்காகத் தூங்காமல் இருப்பதும் மேகாவுக்கு நிறைய மன அழுத்தத்தை உண்டாக்கியது. அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார், கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார். சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அவர் எரிச்சல் அடைந்தார், தன்னுடைய உடலைப்பற்றிக் கவலைப்பட்டார், தன்னுடைய குழந்தையைக் கவனித்துக்கொள்ள மறுத்தார். அவருக்குப் பசி எடுப்பதில்லை, அவர் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. அவருடைய நடவடிக்கைகளால் குழப்பமடைந்த அவருடைய குடும்பம் அவர்களுடைய பொது மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை கேட்டது, அவர்கள் ஓர் உளவியல் நிபுணரைச் சந்திக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை சொன்னார். அந்த மருத்துவர் மேகாவுக்கு குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு வந்திருப்பதை உறுதிப்படுத்தினார்

இந்தக் கற்பனையான விவரிப்பு நிஜ வாழ்க்கையில் இந்தக் குறைபாடு எப்படி அமையக்கூடும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகத் தரப்பட்டுள்ளது. குழந்தை பெறுவதன் வலி மற்றும் அழுத்தம், அத்துடன் பதற்றம், பயம், மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் ஆகியவை ஒன்றாகச் சேர்ந்து ஓர் இளம் தாயை மிகவும் பாதிக்கக் கூடும்.

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனத் தளர்ச்சி

பெரும்பாலான தாய்மார்களுக்கு இந்த விதமான உணர்வுகள் ஏற்படுகின்றன. அவர்கள் மனச்சோர்வுடன் காணப்படலாம், அவ்வப்போது அழலாம், எரிச்சல் அடையலாம், பதற்றம் அடையலாம், பசி எடுப்பதில் பிரச்சினைகள் வரலாம், தலை வலி ஏற்படலாம், ஞாபக மறதி வரலாம். இவையெல்லாம் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சி ஆகும். இந்த நிலை தாற்காலிகமானது, பத்து நாள்களுக்குள் அந்தத் தாய் குணமடைந்து விடுவார். இந்த மனநிலை மாற்றங்கள் பல வாரங்களுக்குத் தொடர்ந்தால் அது குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு என்கிற பிரச்னையாக இருக்கலாம்.

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வின் அறிகுறிகள்

 • குறைந்த சுயமதிப்பு மற்றும் தன்னால் குழந்தையை வளர்க்க இயலுமா என்பது பற்றிய சந்தேகங்கள்
 • தனக்கு யாரும் உதவுவதில்லை என்றும் எரிச்சலாகவும் உணர்தல். உண்மையில் இவர்களுக்கு சமூக, உணர்வு நிலை ஆதரவு நன்றாக இருந்தாலும் இவர்கள் இப்படி உணர்வார்கள்
 • எப்போதும் குழந்தையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருத்தல் அல்லது குழந்தையைக் கவனிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருத்தல்
 • வீட்டில் ஒழுங்கு நிலை மாறியிருப்பதால் ஏற்படுகின்ற அழுத்தம்
 • உடல் மாற்றங்களைப்பற்றிக் கசப்பாக உணர்தல்
 • குழந்தை தூங்கிக்கொண்டிருக்கும்போது கூட இவர்களால் தூங்கமுடியாமல் இருத்தல்
 • தங்களால் வேலைக்குத் திரும்ப இயலுமா இயலாதா என்பது பற்றிய அதீத பதற்றம்
 • தீவிர சூழ்நிலைகளில் தாய்க்குத் தற்கொலை அல்லது குழந்தையைக் காயப்படுத்துகிற சிந்தனைகள்கூட வரலாம். தனக்குப் பிரச்னை இருப்பதையே அவர் உணராமல் இருக்கலாம். அவருக்கு உடனடியாக உளவியல் உதவி தேவை, சில நேரங்களில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கலாம். குடும்பம் அவரை நன்கு ஆதரித்து உதவினால் அந்தத் தாய் விரைவில் சிகிச்சை பெற்றுக் குணமாகிவிடுவார்.

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வை உண்டாக்கக் கூடிய ஆபத்துக் காரணிகள்

 • அந்தத் தாய்க்கு ஏற்கனவே குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு வந்திருக்கலாம்
 • கர்ப்பத்துடன் தொடர்பு இல்லாத ஒரு மனச்சோர்வு நிலை ஏற்கனவே இருந்திருக்கலாம்
 • அவருக்கு ஏற்கனவே இருதுருவக் குறைபாடு இருந்திருக்கலாம்
 • குழந்தைப் பேற்றின்போது மருந்துகளைக் குறைத்திருக்கலாம் அல்லது நிறுத்தியிருக்கலாம்
 • ஒரு கடினமான அல்லது மிகவும் அழுத்தம் தருகிற திருமணம் அல்லது உறவு அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்
 • கர்ப்பத்தின்போது அல்லது குழந்தைப் பேற்றின்போது மன அழுத்தம் தரும் வாழ்க்கை நிகழ்வுகள் ஏற்படடிருக்கலாம். (உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும்போது தீவிர உடல்நலக்குறைவு, குழந்தை முன்கூட்டியே பிறத்தல் அல்லது சிரமமான பிரசவம் அல்லது அன்புக்குரிய யாரையாவது பறிகொடுத்தல்)
 • குடும்பம் அல்லது நண்பர்கள் ஆதரவளிக்காமல் இருக்கலாம்
 • மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் தீவிரமாக இருக்கலாம்

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வுக்குச் சிகிச்சை பெறுதல்

சில தாய்களுக்கு உளவியல் சார்ந்த மருத்துவமோ மருந்துகளோ இரண்டுமோ சிகிச்சையாக வழங்கப்படும். அந்தத் தாயால் இயன்றால், அவர் தொடர்ந்து குழந்தைக்குப் பால் கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தையும் ஊட்டச்சத்து பெறும், அவரும் குழந்தையுடன் ஒரு பிணைப்பை உண்டாக்கிக் கொள்வார். மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இருக்கிற ஆபத்துகள் மற்றும் பலன்களின் சமநிலையை மருத்துவரும் அந்தத் தாயும் விவாதிப்பார்கள், ஆனால் மருந்துகளை எடுத்துக்கொள்வதா வேண்டாமா என்று அந்தத் தாய்தான் தீர்மானிக்க வேண்டும். குடும்பத்தினர் அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நன்கு ஆதரவளித்து அந்தத் தாயைப் பராமரித்தால் அவர் விரைவில் குணமாகி விடுவார்.

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வைச் சமாளித்தல்

குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வை எப்படித் தடுப்பது என்பது நமக்குத் தெரியாது, காரணம் அது ஒரு நோய், அந்த நோய் உண்டாகும்போது அது எவருடைய தவறாலும் உண்டாவதில்லை. அதே சமயம் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்றாக அந்தத் தாய்க்கு ஆதரவளிக்கலாம், ஒருவேளை நோய் வந்துவிட்டால் அதன் தீவிரத்தன்மையை, ஆபத்தைக் குறைக்கலாம்.

ஒருவர் சிகிச்சை பெறும்போது, பெரும்பாலான நேரங்களில் அவரிடம் காணப்படும் முன்னேற்றங்களை அவரைவிட அவருடைய குடும்பத்தினர் தான் முதலில் காண்பார்கள். அவர்கள் இந்த நிலையைச் சமாளிப்பதற்கான சில வழிமுறைகள் இவை:

 • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ஆதரவு, உதவி கேட்கலாம். அப்படிக் கேட்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருந்துவிடக்கூடாது.
 • குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்குப் பிறருடைய உதவியைக் கேட்கலாம், அதன்மூலம் தங்களுக்குத் தேவையான தூக்கத்தை அவர்கள் பெற இயலும்.
 • வீட்டு வேலைகளான சுத்தப்படுத்துதல், சமைத்தல், துவைத்தல் மற்றும் இஸ்திரி போடுதல் போன்ற வேலைகளுக்குப் பிறருடைய உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
 • தன்னுடைய குழந்தை தூங்கும்போது தூங்க முயற்சி செய்யவேண்டும்.
 • இவர்களுக்கு ஓர் ஒழுங்கு ஏற்படுவதற்குப் பலவாரங்கள் ஆகலாம்.
 • இவர்கள் தங்களுடைய சாப்பாடு, குளித்தல் மற்றும் சிறிய அளவிலான உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்து நேரம் செலவிடவேண்டும்.
 • ஒருவர் தான் நன்றாக உணரவில்லை, தனக்குக் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கிறது என நினைக்கிறார் என்றால், எவ்வளவு சீக்கிரம் இயலுமோ அவ்வளவு சீக்கிரம் அவர் தன்னுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதைப் பற்றி விவாதிக்கவேண்டும்.
 • மது மற்றும் பிற போதைப் பொருள்களை எடுத்துக் கொள்ளக்கூடாது.
 • குழந்தை பிறப்பதற்கு முன்னால் தான் மகிழ்ச்சியோடு செய்த ஏதாவது ஒன்றைக் கண்டறிந்து அதில் நேரம் செலவிடவேண்டும்.
 • நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு சிரமப்படக்கூடாது, அதே சமயம் எந்த வேலையும் செய்யாமலும் இருக்கக்கூடாது.
 • ஒரு நேரத்தில் ஒரு வேலையைப் பூர்த்தி செய்யவேண்டும்.
 • பெரிய வேலைகளைச் சிறிய வேலைகளாக மாற்றி எவ்வளவு இயலுமோ அவ்வளவு செய்யவேண்டும்.
 • பிறருடன் நேரம் செலவிடவேண்டும், ஒரு நண்பர் அல்லது உறவினரிடம் தன்னுடைய உணர்வுகளைப் பற்றிப் பேசவேண்டும்.
 • தன்னுடைய குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்குக் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அல்லது நர்சின் உதவியை நாடலாம்.
 • தான் நன்றாக உணரும்வரை முக்கியமான வாழ்க்கைத் தீர்மானங்களை எடுக்காமல் இருக்க முயற்சி செய்யவேண்டும்.
 • நிதி, வேலை போன்ற முக்கியமான விஷயங்களைத் தன் குடும்ப உறுப்பினர்களிடம் விவாதிக்கவேண்டும்.
 • தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொள்ளக்கூடாது.
 • குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனச்சோர்வு எந்தப் புதிய தாயையும் பாதிக்கக் கூடும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top