অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்

மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்

அறிமுகம்

மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் வன்முறை, தாக்குதல்கள் போன்ற குழந்தை அல்லது பதின்பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும், மன நோய் ஏற்படவும் இதற்கு காரணங்களாகின்றன. இத்தகைய காலப்போக்கிலான அனுபவங்களின் கூட்டு விளைவால் அதிக வாய்ப்புகள் ஏற்பட்டாலும், ஒரேயொரு பெரிய அதிர்ச்சியாலும் மன நோய்கள் ஏற்படக்கூடும். இதற்கெதிரான தாங்குதிறன் நபர்களை பொறுத்து மாறுகிறது. பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள், எண்ணங்கள், பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக தாங்குதிறன் வேறுபடுகிறது.

மன அழுத்தம் என்றால் என்ன?

நோய்களை உண்டாக்கக்கூடிய உடல் அல்லது மனரீதியான பதட்டம் அளிக்கும் எந்தவொரு உடலியல், இரசாயன அல்லது மனவியல் காரணிகளை மன அழுத்தம் எனக் கருதலாம். அதிர்ச்சி, நோய்தொற்று, விஷம், உடல்நலக் குறைபாடு, காயங்கள் போன்றவற்றை உடலியல் மற்றும் இரசாயன காரணிகளாக கூறலாம். பலவகையான மனவியல் காரணிகள் இருக்கின்றன. மன அழுத்தத்தை பலர் மன நோயுடன் ஒப்பிட்டாலும், விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இதை உடல்ரீதியான செயல்பாடு மற்றும் சமநிலையில் குறைபாடுகளை ஏற்படுத்தும் ஆற்றலாக இதை குறிக்கிறார்கள். தங்களை சுற்றி நடப்பவை காரணமாக அழுத்தம் ஏற்படும் போது, அதற்கு எதிர்வினையாக சில இரசாயனங்கள் சுரந்து இரத்தத்தில் கலக்கின்றன. இந்த இரசாயனங்கள் அவர்களுக்கு அதிக ஆற்றல் மற்றும் பலத்தை அளிக்கிறது.

குறைவான அளவில் மன அழுத்தம் அல்லது பதட்டம் சில நேரங்களில் பயனுள்ளதாக அமைகிறது. உதாரணமாக, ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக நாம் சிறப்பாக கவனம் செலுத்தி அதிக ஆற்றலுடன் அந்த வேலையை செய்கிறோம். இரண்டு வகையான அழுத்தங்கள் உள்ளன: நேர் அழுத்தம் (eustress - "positive stress") மற்றும் சவால்கள் அல்லது அதிக பளு என பொருள்படும் எதிர்மறை அழுத்தம் (distress - "negative stress"). மன அழுத்தம் அதிகமாகும் போதும், சரியாக நிர்வகிக்கப்படாமல் இருக்கும் போதும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன.

மன அழுத்தம் ஏற்படுத்தும் முக்கிய காரணங்கள்

வாழ்வியல் அழுத்தம்

தன்னை ஏதாவது உடல்ரீதியாக தாக்கும் என ஒரு நபர் பயந்தால், உடல் உடனடியாக அதிகபட்ச ஆற்றலை தந்து அச்சூழ்நிலையில் தன்னைக் காத்துக்கொள்ள அல்லது தப்பிச்செல்ல உதவுகிறது.

உள்நிலை அழுத்தம்

இதனால் மக்கள் தாங்களாகவே அழுத்தத்தை உண்டாக்கி கொள்கிறார்கள். நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை பற்றி கவலைகளை வளர்த்துக் கொள்ளும் போது இது ஏற்படுகிறது. சிலர் இவ்வகை வாழ்நிலைக்கு பழகிவிடுகிறார்கள். அவர்கள் மேலும் அழுத்தமான சூழ்நிலைகளை விரும்பி ஏற்கிறார்கள்.

சுற்றுச்சூழல் அழுத்தம்

சத்தம், கூட்டம், வேலை அல்லது குடும்ப பளு போன்ற காரணிகளால் ஏற்படும் அழுத்தம். அழுத்தம் ஏற்படுத்தும் சூழல் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்ப்பதன் மூலம் அழுத்த அளவை குறைக்கலாம்.

களைப்பு மற்றும் அதிக வேலைப்பளு

அதிக நாட்களின் பளு காரணமாக ஏற்படும் இவ்வகை அழுத்தத்தால் அதிக உடல் பாதிப்புகள் ஏற்படும். வீடு அல்லது பள்ளியில் அதிக அல்லது கடினமான வேலையை செய்வதால் இது ஏற்படுகிறது. ஓய்வு மற்றும் பொழுதுபோக்குக்கு நேரத்தை சரியாக திட்டமிட்டு செயல்படாததாலும் இது ஏற்படும். பலர் இதனை கட்டுப்படுத்துவது சிரமம் என்று நினைப்பதால், இதுவே மிக கடுமையான அழுத்தமாக கருதப்படுகிறது.
மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறுகிய (acute) மற்றும் நீண்ட கால (chronic) பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகைகளாவும் வகைப்படுத்தலாம்:

  • குறுகியகால காரணங்களால் ஏற்படும், உதாரணமாக ‘சண்டையிடு’ அல்லது ‘ஓடிவிடு’ வகை விளைவுகள், குறுகிய கால அழுத்தமாக கருதப்படுகிறது. இவை, ஆபத்துக்கள் அல்லது அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தாக்கும் போது மூளையின் பழைமையான பகுதி மற்றும் மூளையில் உள்ள சில இரசாயனங்களால் ஏற்படும் துரிதமான விளைவுகளாகும்.
  • சண்டையை அல்லது ஓட்டத்தைத் தூண்டும் காரணிகள் முடிந்த பிறகும் நடைமுறையில் இருக்கும் அல்லது தொடர்ந்த காரணிகள் நீண்டகால பாதிப்புக்களாக கருதப்படும். தொடர்ந்த அழுத்தம் ஏற்படுத்தும் வேலை, உறவுமுறை சிக்கல்கள், தனிமை, நிதிநிலை தொடர்பானக் கவலைகள் ஆகியவை இவற்றுள் சில.

மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகளை அல்லது தாங்குதிறனை பாதிக்கும் காரணிகள்

ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் கீழ்கண்ட ஒன்று அல்லது பலவித காரணிகளால் ஏற்படுமாதலால், நபருக்கு நபர் இத்திறன் வேறுபடுகிறது. ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் காலகட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம்:

  • குழந்தைபருவ அனுபவங்கள் (கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்)
  • நபர்களின் செயல்முறைகள் (சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம்)
  • பரம்பரை (பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை)
  • நோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள் (மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் தாங்குதிறன் குறைகிறது)
  • வாழ்க்கைமுறை (சத்தில்லாத உணவு மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்)
  • மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தோன்றும் கால அளவு

மன அழுத்தத்தை கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்

  • தூக்க தொந்தரவுகள்
  • பசியின்மை
  • குறைவான கவனம், ஞாபகமறதி
  • குணத்திற்கு மாறான தவறுகள், தாமதங்கள்
  • கோபம்
  • வன்முறையான அல்லது சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள்
  • மனவியல்ரீதியான வெளிப்பாடுகள்
  • மது அல்லது பிற போதைப்பொருள் பயன்பாடு
  • படபடப்பான நடவடிக்கைகள்

மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகள்

உடல்ரீதியான விளைவுகள்

பெரும்பாலும் நரம்பு, சுரப்பிகள் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தொடர்பாக வெளிப்படுகின்றன. எந்த வகை காரணியால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், உடல் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  • படபடப்பு, அதிகரிக்கும் இதய துடிப்பு
  • அதிகரிக்கும், மேலோட்டமான மூச்சு வாங்குதல்
  • நடுக்கம்
  • குளிர் அல்லது வேர்த்து வழிதல்
  • ஈரமான புருவப்பகுதி
  • இறுக்கமான தசைகள், வயிற்றுப்பகுதி தசைகள் இறுகுதல், முறுக்கிய கைகள், பற்களை கடித்தல்
  • வயிற்று உபாதைகள்
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  • முடி கொட்டுதல்

மனவியல்ரீதியான விளைவுகள்

சரியான முறையில் சிகிச்சை பெறாத போது பலவிதங்களில் வெளிப்படுகின்றன. தீர்க்கப்படாத மனவியல் பிரச்சினைகள் மனநிலையையும் பிறகு உடல் நிலையையும் பாதிக்கும்.

  • கவனம் செலுத்துவதில் சிரமம்
  • முடிவெடுப்பதில் சிரமம்
  • தன்னம்பிக்கை இழத்தல்
  • அடக்கமுடியாத ஆசைகள்
  • தேவையற்ற கவலைகள், படபடப்பு
  • அதீத பயம்
  • பயத்தால் பாதிப்புகள்
  • குணாதிசயத்தில் அடிக்கடி மாற்றங்கள்

செயல்பாட்டு விளைவுகள்

பாதிக்கப்பட்ட நபர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதில் வெளீப்படுகின்றன:

  • அதிகமாக புகைபிடித்தல்
  • நரம்பியல் தூண்டல்கள்
  • அதிகமாக மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல்
  • பற்களை கடித்தல், முடிகளை இழுத்தல் போன்ற பழக்கங்கள்
  • ஞாபக மறதி
  • விபத்துக்குள்ளாதல்
  • முரட்டுத்தனமான வன்முறை செயல்களுக்கு தூண்டப்படுதல்

செயல்பாட்டு விளைவுகள் அபாயகரமானவை மற்றும் சமூக, தனிமனித உறவுகளை பாதிக்கக்கூடியவை.
தனிமை, வறுமை, சோகம், அழுத்தம், விலக்கி வைக்கப்படுதலால் ஏற்படும் விரக்தி போன்ற விளைவுகள் நீடித்து இருப்பது மட்டுமன்றி, சாதாரண சளி முதல் எய்ட்ஸ் வரையான வைரஸ் தாக்குதல்களுக்கெதிரான நோய் எதிர்ப்புத்திறனையும் குறைக்கின்றன.
ஹார்மோன்கள், மூளையில் உள்ள நரம்பு மண்டல கடத்திகள், பிற சிறு அளவிலான இரசாயணங்கள், முக்கிய வினை ஊக்கிகள், உடல் செயல்பாடு ஆகியவற்றை சில வகை மன அழுத்தம் உண்டாக்குகின்றன.

மன அழுத்தம் தொடர்பான சில நோய்கள்

  • வயிற்று நோய்கள்
  • போதைக்கு அடிமையாதல்
  • ஆஸ்த்துமா
  • களைப்பு
  • படபடப்பு, தலைவலி
  • இரத்த அழுத்தம்
  • தூக்கமின்மை
  • வயிற்று, ஜீரண கோளாறுகள்
  • இருதய நோய்கள்
  • மனநிலை பாதிப்பு
  • உடலுறவில் செயல்பட இயலாமை
  • சொரியாசிஸ், படை, அரிப்பு, உணர்ச்சியற்ற தோல் போன்ற தோல் வியாதிகள்

மனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol) மற்றும் DHEA (dehydroepiandrosterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.

ஹொம்ஸ் ராகே அளவீட்டின்படி (Holmes and Rahe Stress Scale), வாழ்க்கையை மாற்றும் விதத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த (Life Change Units) எண்ணிக்கையை சேர்த்து இறுதி மதிப்பீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, கணவன் அல்லது மனைவியின் இறப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு 100 மதிப்பெண்கள் தரப்படும்.

  • கூட்டு மதிப்பெண்கள் 300+ ஆக உள்ளபோது நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது
  • 150-299 கூட்டு மதிப்பெண்கள் – நோய்க்கு ஆளாகும் அபாயம் 30% வரை குறைவு
  • 150 கூட்டு மதிப்பெண்கள்- நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு

மன அழுத்தத்தை சமாளித்தல்

மன அழுத்த்த்தை நிர்வகிப்பது, அதை ஏற்படுத்தும் காரணிகளை அறிவதில் தொடங்குகிறது. சொல்வது போல் இது எளிதான காரியமல்ல. உண்மையான காரணிகளை அறிய, உங்கள் குணம், நடைமுறைகள் மற்றும் அடிக்கடி கூறும் சாக்குபோக்குகளை ஆராயுங்கள்:

  • உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தற்காலிகமானது என்று எண்ணுகிறீர்களா? கடந்த முறை அவ்வாறு ஏற்பட்டது எப்போது என மறந்தேவிட்டீர்களா?
  • உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வீடு அல்லது அலுவலக் வேலையுடன் தொடர்புபடுத்துகிறீர்களா?
  • உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு பிறர்தான் காரணம் என்று கருதுகிறீர்களா அல்லது இது இயற்கையானதே என நினைக்கிறீகளா?

உங்கள் காரியங்களுக்கு நீங்கள் பொறுபேற்கும் வரை, மன அழுத்தத்தை உங்களால் கட்டுப்படுத்த இயலாது.

மன அழுத்த விபரத்தை பதிவு செய்யுங்கள்

இவ்வாறான பதிவுகள் மூலம், வழக்கமாக அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகளை அடையாளம் காணவும் அவற்றை தவிர்க்கவும் இயலும். மன அழுத்த பாதிப்பு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால், அதை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யப்படும் பதிவு மூலம், நாளடைவில் ஒரு பொதுத்தன்மையை உணர முடியும்.

  • எதனால் மன அழுத்தம் ஏற்பட்ட்து (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
  • நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் (சரியாக அறிய முடியாவிட்டால் யூகம் செய்தாவது எழுதுங்கள்)
  • உடல் மற்றும் மன்வியல்ரீதியாக எப்படி உணர்ந்தீர்கள்?
  • எப்படி நீங்கள் செயல்பட்டீர்கள்?
  • நீங்கள் இயல்பு நிலையை அடைய என்ன செய்தீர்கள்?

தற்போது மன அழுத்தம் ஏற்பட்டால் அதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று சிந்தியுங்கள். இதற்கு உங்கள் பதிவுகள் உங்களுக்கு உதவக்கூடும். உங்கள் சமாளிப்பு உத்திகள் ஆரோக்கியமானதா அல்லது அழுத்தத்தை அதிகப்படுத்தும் வண்ணம் உள்ளதா? பலர், தங்கள் எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள் மூலம், மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள்

இவை தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:

  • புகை பிடித்தல்
  • அதிகமாக மது அருந்துதல்
  • அதிகமாக அல்லது குறைவாக உண்பது
  • தொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
  • நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது
  • அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது
  • அதிகமாக தூங்குவது
  • பிறரை தூற்றுவது
  • பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது
  • உங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை)
  • மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.
  • மன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்.

ஆதாரம் : டாக்டர். செந்தில் குமார், விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம், சென்னை

கடைசியாக மாற்றப்பட்டது : 7/15/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate