অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மனசு போல வாழ்க்கை

மனசு போல வாழ்க்கை

மூன்று விதிகள்

எதிர்மறை எண்ணங்கள் நோய்களையும் பிரச்சினைகளையும் உண்டாக்குவது உண்மை என்றால் நேர்மறை எண்ணங்கள் அதைச் சரி செய்யும் சக்தி கொண்டவை.

அஃபர்மேஷன் என்பதை நேர்மறை சுய வாக்கியங்கள் எனலாம். அவற்றை அமைக்க மூன்று அடிப்படையான விதிகள் உள்ளன:

 1. .“நான்” அல்லது “என்” என்று தன்னிலை அவசியம் இருக்க வேண்டும்.
 2. நேர்மறை வினைச்சொல் ஒன்றோ அதற்கு மேலோ இருக்க வேண்டும். “ஏற்றுக்கொண்டு”, “உறுதிகொண்டு” என்பதைப் போல.
 3. முக்கியமான விதி: நிகழ்காலத்தில் அமைய வேண்டும். “இருக்கிறேன்”, “செய்கிறேன்”, “ஆகிறேன்” என்று முடிய வேண்டும்.

சரி, உங்கள் வாழ்க்கையின் முதல் அஃபர்மேஷனை எழுதுங்கள். வலது கைக்காரர்கள் என்றால் இடது கையாலும், இடது கைக்காரர்கள் என்றால் வலது கையாலும் எழுதுங்கள். உங்கள் ஆழ்மனப் பதிவுக்கு இது உதவும்.

“நான் என்னை விரும்பி ஏற்றுக்கொள்கிறேன்!”

இதில் மூன்று விதிகளும் கடைப் பிடிக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள்.

நொடியில் செயல்

 1. “நான் எனும்போது செயலும் பொறுப்பும் உங்களுடையது என்பதை மனம் புரிந்துகொள்ளும். விரும்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளுதலில்தான் நேர்மறைச் செயல்பாடுகள் நடக்கின்றன. தன்னை நிந்திப்பதையும், தான் நினைத்ததை எண்ணி வருந்துவதையும் இந்தச் செயல்பாடுகள் நேரடியாகக் கையாள்கின்றன.
 2. முக்கியமான விதி நிகழ்காலத்தில் உள்ளது. “ஏற்றுக்கொள்கிறேன்” எனும்போது நிகழ வேண்டிய காலம் இந்த நொடி என்பதை உணர்ந்து உங்கள் ஆழ் மனது அதற்கு இசைந்து கொடுக்கிறது. இந்த வாக்கியத்தைச் சொன்ன நொடியே செயல்பாடு தொடங்கிவிடுகிறது.
 3. பணக்காரன் ஆவேன் என்றால் எதிர்காலம். அது post dated cheque போல. ஆனால், உடனே செய்ய எதுவுமில்லை என்று உணர்ந்து மனம் இந்த செயல்பாட்டைத் தள்ளிப் போடுகிறது. இதனால், பணக்காரன் ஆவேன் ஆவேன் என்று சொல்பவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால், பணக்காரர்கள் ஆவதில்லை.

வருமா,வராதா?

 1. நெப்போலியன் ஹில்லும் இதைத்தான் சொல்கிறார். “நான் பண வரவைத் தொடர்ந்து பெற்று வருகிறேன்” என்றால் அது நல்ல அஃப்ர்மேஷன் எனலாம். காரணம் பண வரவுக்கான வேலையை, பணத்தைக் கவரும் வேலையை, பண வரவை முடக்கும் சிந்தனையை எதிர்க்கும் வேலையை உங்கள் ஆழ்மனம் உடனே செய்ய ஆரம்பிக்கிறது.
 2. தொடர்ந்து சொன்னால் பணம் வருமா என்ற சிந்தனை வருகிறதா? இதை புரட்டிப் போட்டு யோசிக்கலாம். முதலில் பணம் தொலைத்தவர்கள் எல்லாரிடமும் ஒரு பொதுச் சிந்தனை இருக்கும். அது பணம் பற்றிய ஏதோ ஒரு முரணான, தவறான சிந்தனை. அது தொடர்ந்து பேச்சிலும் செயலிலும் தொடரும்.
 3. “நம்ம ராசிங்க. சாண் ஏறுனா முழம் சறுக்கும்.” “நமக்குன்னு ஏதாவது ஒண்ணு கரக்டா வந்து சொதப்பிடும்”. “பணம் வந்தா நிம்மதி போயிடும். நான் இப்ப நிம்மதியா இருக்கேன்”. “பணம் வரும், போகும். அதுவா முக்கியம்?”
 4. இப்படி இறுகிய எண்ணங்களைத் தொடர்ந்து வைத்திருக்கும்போது அவை தவறான முடிவுகளையும் தவறான சூழ்நிலைகளையும் கவர்ந்து இழுத்து வரும்.

நடக்கும், நடக்காது

 1. வாரன் ப்ஃபே உலகின் தலை சிறந்த முதலீட்டாளர். தன் முழு வாழ்க்கையையும் முதலீடு செய்வதையே முழு நேரத் தொழிலாகச் செய்தவர். மிக அழகாக ஒரு உளவியல் கூற்றைப் போகிற போக்கில் சொல்கிறார். தவறான முதலீட்டு முடிவுகளை எடுப்பவர்கள் பயம், பேராசை என்கிற இரண்டு எதிர்மறை உணர்வுகளால் அத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள்.
 2. இது போல ஆராய்ந்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விதை ஒரு சில அடிப்படையான சிந்தனைகளும் உணர்வுகளும்தான். அஃபர்மேஷன் முறையில் இரண்டையும் திருப்ப முடியும். “ஹூம்.. இதெல்லாம் இனிமே சொல்லி என்னத்தை செய்ய.. இதெல்லாம் நடக்காது !” என்று நினைத்தால் உங்கள் ஆழ்மனம் அதை அப்படியே ஏற்று அஃபர்மேஷனுக்கு எதிராக வேலை செய்யும்.

முடியும், முடியாது

 1. “என்னால் முடிகிறது”, “என்னால் முடியாது” என்று இரண்டு வாக்கியங்களில் எந்த ஒன்றையும் உணர்வுபூர்வமாக நம்பிச் சொல்லும் போது அது பலிக்கிறது. அதனால் தான் ஒரே வேலையை, ஒரே சவாலை இரண்டு பேர் முயலும்போது ஒருவரால் செய்ய முடிகிறது. இன்னொருவரால் செய்ய முடியாது. மனம் ஒரு அடிமை. உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப அது செயல்படும்.
 2. ஆறு அடி தாண்ட முடியுமா என்று கேட்டால் ‘கஷ்டம்தான்’ என்று பதில் வரும். தாண்டிப்பார்த்தால்கூட முடியாது. ஆனால், இரவில் ஒரு நாய் துரத்துகையில் அதே ஆறு அடி அளவுள்ள பள்ளத்தை “தப்பிக்கிறேன், தாண்டுகிறேன்” என்று எண்ணங்கள் தருகிற வலிமையில் அனாயாசமாகத் தாண்டுவீர்கள்.
 3. சாதாரண மனிதர்கள் அசாதாரண செயல்களைச் செய்வது இந்த நம்பிக்கையில்தான். உங்கள் பிரச்சினைகளை எழுதுங்கள். வாக்கியங்களைப் படித்து அதில் உள்ள எதிர்மறைச் சிந்தனையை நேர்மறை சுய வாக்கியங்களாக மூன்று விதிகளை நினைவில் வைத்துக்கொண்டு மாற்றி எழுதுங்கள். அவற்றை ஒரு வாரம் மந்திரம்போல ஜபித்து வாருங்களேன். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!

ஆதாரம் : தன்னம்பிக்கை வழிகாட்டி

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate