অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மனநலிவு நோய்

மனநலிவு நோய்

அறிமுகம்

டவுண் சிண்ட்ரோம் என்ற இந்நோய் முப்பிரி 21 என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மரபியல் நோய். கூடுதலாக இனக்கீற்று 21 அமைந்திருப்பதால் இது ஏற்படுகிறது. அறிவாற்றல், உடல், சில முகக்கூறுகள் போன்றவற்றின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்படுவது இந்நோயின் தன்மைகள் ஆகும்.

முழு வளர்ச்சிபெற்ற ஓர் இளைஞரின் நுண்ணறிவு எண் (ஐக்யூ) 100 என்றால் மனநலிவுற்ற ஓர் இளைஞரின் நுண்ணறிவு 50 ஆக இருக்கும்

நோயறிகுறிகள்

மனநலிவு உடையவர்களின் உடலியல் கூறுகளில் ஒத்த தன்மை காணப்படும். கீழ் வருவன மனநலிவின் கூறுகள் என்றாலும் அனைத்துமே ஒருவரிடம் காணப்படும் என்று கூறுவதற்கில்லை:

  • தசை முறுக்கு குறைந்து தட்டையாக இருத்தல்
  • மூக்கு சிறியதாகத் தட்டையாக இருத்தல்
  • தலை, காதுகள், வாய் சிறிதாக இருத்தல்
  • கண்கள் மேல்நோக்கியும் வெளிப்புறமாகவும் சாய்ந்திருத்தல்
  • முதல் இரண்டு கால் விரல்களுக்கு இடையில் இடைவெளி
  • கை அகன்றும் விரல் குட்டையாகவும் இருத்தல்
  • உள்ளங்கையில் ஒரே ரேகை
  • பிறக்கும் போது அளவுக்குக் குறைவான எடையும் நீளமும்

காரணங்கள்

இது ஒரு மரபியல் கோளாறு. கூடுதலாக ஒரு குரோமோசோம் (இனக்கீற்று 21) அமைந்திருப்பதால் இது ஏற்படுகிறது. வழக்கமாக உயிரணுவில் 46 இனக்கீற்றுக்கள் இருக்கும். இவற்றில் 23 தந்தையிடம் இருந்தும் 23 தாயிடம் இருந்தும் பெறப்பட்டவை. இனக்கீற்று 21-ன் இன்னொரு நகலைக் கூடுதலாக பெற்றிருப்பதால் மனநலிவு உடையவர்களுக்கு 47 இனக்கீற்றுக்கள் இருக்கலாம். கூடுதலாக இருக்கும் இந்த மரபியல் பொருளால் மன நலிவோடு தொடர்புடைய மனம் மற்றும் உடல் வளர்ச்சிக் கோளாறுகள் ஏற்படுகின்றன. மனநலிவுக் கோளாறில் மூன்று வகை உண்டு. ஆனால் அவற்றின் விளைவுகளில் வேறுபாடுகள் இல்லை.

முப்பிரி 21: இதுவே பொதுவான வகை. இவ்வகையில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலுமே இனகீற்று-21ன் ஒரு நகல் கூடுதலாக இருக்கும்.

இடம் மாறல்: ஓர் உயிரணுவின் இனக்கீற்றில், இனக்கீற்று 21-ன் ஒரு பகுதி இணைதல்

பல்மரபணு வகை: இது அரிய வகை. இதில் ஒரு சில உயிரணுக்களில் மட்டுமே இனக்கீற்று 21-ன் கூடுதல் நகல் இருக்கும். இவ்வகைக் கோளாறு உடையவர்களுக்குச் சில வளர்ச்சிப் போக்குகளில் மந்தநிலை காணப்படும்

நோய்கண்டறிதல்

கர்ப்பகால/மகப்பேற்றுக்கு முந்திய சோதனை: எந்த வயதைச் சார்ந்த கர்ப்பிணிகளும் மரபியல் சோதனைகளுக்கு உட்பட வேண்டும். கர்ப்ப கால சோதனை மூலம் கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு ஏற்படக்கூடிய அல்லது ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் கணிக்க முடியும். மனநலிவுக்காகச் செய்யப்படும் சோதனை ’கூட்டுச் சோதனை’ எனப்படும். இதில் இரத்தச் சோதனையும் கேளா ஒலிச் சோதனையும் செய்யப்படும்.

இரத்த மாதிரி எடுக்கப்பட்டு, சில புரதம் மற்றும் இயக்கு நீர்களின் அளவுகள் சோதிக்கப் படுகின்றன. இவை அளவுக்கு மீறி காணப்பட்டால் குழந்தை மனநலிவுக் கோளாறுடன் பிறக்கும் வாய்ப்புகள் உண்டு.

நியூச்சல் டிரான்ஸ்லூசென்சி எனப்படும் கேளா ஒலி வரைவிச் சோதனை செய்யப்படும். குழந்தையின் கழுத்தில் உள்ள  திரவத் தொகுதி சோதிக்கப்படுகிறது. மனநலிவு கொண்ட குழந்தைக்கு இயல்பாக இருப்பதை விட அதிக அளவு திரவம் காணப்படும். திரவ அடர்த்தியை அளந்து குழந்தைக்கு மனநலிவுக் கோளாறு இருக்கிறதா இல்லையா என்று அறிவார்கள்.

பிறப்புக்குப் பின்னான சோதனை: (Post natal diagnosis) குழந்தை மருத்துவரின் ஆய்வகச் சோதனை உறுதியாக சந்தேகத்தைப் போக்கும். இச்சோதனையில் உள்ளடங்கிய ஃபிரைட்டின் கண்டறிதலில் பின்வரும் 8 அறிகுறிகள் அடங்கும்:

  • தட்டையான முகம்
  • காது பிறழ்ச்சி
  • நாக்கு துருத்துதல்
  • கடைவாய் கீழ்நோக்கி கோணுதல்
  • தளர்ச்சி
  • கழுத்துச் சதை மிகை
  • மேல் கண்ணிமை மடிப்பு
  • கால் முதலிரு விரல்களுக்கு இடையில் இடைவெளி

இவற்றில் 0-2 அம்சங்கள் இருந்தால் பிறந்த குழந்தைக்கு மனநலிவுக் கோளாறு இல்லை என்று அர்த்தம். 3-5 வரை இருந்தால் தெளிவாகத் தெரியவில்லை (மரபியல் சோதனைக்கு பரிந்துரைக்கப்படும்).  6-8 வரை இருந்தால் குழந்தைக்கு உறுதியாக மனநலிவு கோளாறு உள்ளது என்பது தெளிவு.

சிக்கல்கள்

மனநலிவுக் கோளாறுகளின் சிக்கல்கள் வருமாறு:

  • இதயக் கோளாறுகள்
  • குடல் பிரச்சினைகள்
  • செரிமானப் பிரச்சினைகள்
  • காது, கண் குறைபாடுகள்
  • தைராயிடு சுரப்பிக் கோளாறு
  • தொற்று நோய் அபாயம்
  • இரத்தக் கோளாறு
  • முதுமை
  • மறதி அபாயம்

சிகிச்சை

மனநலிவுக் கோளாறைக் குணப்படுத்த முடியாது. ஆனால் இக்கோளாறு உடையவர்கள் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, சுதந்திரமான வாழ்க்கையை நடத்த உதவி செய்ய முடியும். நோய் மேலாண்மை திட்டங்களாவன:

குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே கவனிப்பு

குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்து, கடினமான ஆரம்ப காலங்களில் குடும்பத்திற்குத் துணைபுரியும் ஒருங்கிணைந்த சேவைகளே தொடக்க கால கவனிப்பாகும். ஆரம்ப கட்ட கவனிப்பில் மொழியியல் திறமைகள் வளர்க்கப்படுகின்றன.

  • பொதுவான பிரச்சினைகளுக்கான சோதனை
  • தேவைப்படும்போது மருத்துவம்
  • தகுந்த குடும்பச் சூழல்
  • மனநலிவுடைய குழந்தைகளுக்கு முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் தொழிற்கல்வி.
  • கல்வியும், முறையான கவனிப்பும் வாழ்க்கையை மேம்படுத்தும்

சீரமைப்பு அறுவை

மனநலிவு கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக அமைப்பை சீரமைக்க சிலசமயம் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் சமூக நிந்தைகள் குறைக்கப்பட்டு வாழ்க்கை நிலை மேம்படுகிறது.

அறிவாற்றல் மேம்பாடு

மனநலிவு கோளாறுடையவர்கள் மொழி மற்றும் மக்கள் தொடர்பு திறனில் மிகவும் வேறுபடுகின்றனர். நடுக் காது பிரச்சினைகள், காதுகேளாமை ஆகியவற்றைக் கண்டறிய முறையான தொடர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. காதுகருவி மற்றும் ஒலிபெருக்கும் பொறிகளைப் பயன்படுத்துவது மொழி பயில்வதற்கு உதவியாக இருக்கும்.

ஆதாரம் : தேசிய சுகாதார தகவல் மையம்

கடைசியாக மாற்றப்பட்டது : 6/22/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate