பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனவிறுக்கம்

மனவிறுக்கம் நோயின் காரணங்கள் மற்றும் மேலாண்மை முறைகளை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மனவிறுக்கம் (Autism spectrum disorder (ASD) என்பது சிக்கலான நரம்புவளர்ச்சிக் கோளாறுகளின் தொகுதியாகும். சமூகப் புரிதலில் தடங்கல்கள், தொடர்பு சிக்கல்கள், கட்டுப்படுத்தப்பட்ட, திரும்பத் திரும்ப செய்யும் ஒரே மாதிரியான நடத்தை ஆகியவை இதன் கூறுகள். இது ஒரு மூளைக்கோளாறு. இது ஒருவரின் பிறரோடு தொடர்பு கொள்ளும் திறனைப் பாதிக்கிறது. இக்கோளாறுகள் பொதுவாக குழந்தைப் பருவத்தில் தொடங்கி வளர்ந்த பின்னும் தொடர்கிறது.

மனவிறுக்கத்தின் வகைகள்:

 • மனவிறுக்கக் கோளாறு : இதுவே மனவிறுக்கத்தின் பொதுவான வகை. மனவிறுக்கக் கோளாறு உடையவர்களுக்கு மொழித்தடங்கல், சமூக மற்றும் தொடர்பு பிரச்சினைகள், இயல்பற்ற நடத்தைகளும் விருப்பங்களும் இருக்கும். இக்கோளாறுடைய பலருக்கு அறிவுத்திறன் குறைபாடும் இருக்கலாம்.
 • அஸ்பெர்ஜர் நோய்க்குறி : அஸ்பெர்ஜர் நோய்க்குறி கொண்டவர்களுக்கு மனவிறுக்கக் கோளாறின் லேசான அறிகுறிகள் இருக்கும். அவர்களுக்கு சமூக ரீதியான சவால்களும் அசாதாரண நடத்தைகளும் விருப்பங்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குப் பொதுவாக மொழி அல்லது அறிவுத்திறன் குறைபாடு இருப்பதில்லை.
 • படர் வளர்ச்சிக் கோளாறு : மனவிறுக்கக் கோளாறு, அஸ்பெர்ஜர் நோய்க்குறி ஆகிய இரண்டின் ஒரு சில அறிகுறிகள் காணப்படும். ஆனால் அனைத்தும் அல்ல. மனவிறுக்கக் கோளாறைவிட லேசான மிகச் சில அறிகுறிகளே இருக்கும். சமூக மற்றும் தொடர்புப் பிரச்சினைகளை உண்டாக்கும்.

நோயறிகுறிகள்

மனவிறுக்கக் கோளாறு பொதுவாக மூன்று வயதுக்கு முன் தோன்றி ஒருவருடைய வாழ்க்கை முழுவதும் நீடிக்கும். நாட்பட நாட்பட சற்று குணம் தெரியலாம். பிறந்து சில மாதங்களிலேயே இந்நோயுள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உண்டாகப்போகும் பிரச்சினைகளின் கூறுகள் புலப்படும். சிலருக்கு 24 மாதம் வரை அல்லது அதற்கு மேலும் அறிகுறிகள் தென்படும். நோயுள்ள சில குழந்தைகள் 18-20 மாதங்கள் வரை இயல்பாக வளரும். பின் புதிய திறன்களைப் பெறுவது நின்று போகும் அல்லது இருக்கும் திறன்களையும் இழந்து போவர்.

மனவிறுக்கக் கோளாறுள்ள ஒரு குழந்தை:

 • 12 மாதம் வரை தனது பெயரைப் புரிந்துகொள்ளாது
 • 18 மாதங்கள் வரை விளையாடாது
 • கண்ணை நோக்குவதைத் தவிர்த்து தனியாக இருக்கும்
 • பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவும் சிரமப்படும்
 • பேச்சும் மொழித்திறனும் காலங்கழித்தே வெளிப்படும்
 • சொற்களையும் சொற்றொடர்களையும் திரும்பத் திரும்ப கூறும் (எதிரொலிப்புநோய்)
 • கேள்விக்குத் தொடர்பில்லாத பதிலைத் தரும்
 • சிறு மாற்றங்களைக்கூட விரும்பாது
 • ஆட்டிப்படைக்கும் விருப்பங்கள் இருக்கும்
 • சில வேளைகளில் கைதட்டும், உடலை ஆட்டும் அல்லது வட்டமிட்டுச் சுழலும்
 • ஒலி, மணம், சுவை, பார்வை, உணர்வு ஆகியவற்றிற்கு அசாதாரணமான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்தும்.

காரணங்கள்

மனவிறுக்கத்துக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் அது மரபியல் மற்றும் சூழல் காரணிகளோடு தொடர்புடையதாக இருக்கலாம். இக்கோளாறுடன் தொடர்புடைய பல மரபணுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.

மனவிறுக்க நோயாளிகளுக்கு மூளையின் பல பகுதிகளில் குறைபாடுகள் இருப்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளன.

இநோயாளிகளுக்கு மூளையில் இயல்புக்கு மாறாக அதிக அளவில் செரோட்டோனின் அல்லது வேறு நரம்புக்கடத்திகள் இருப்பதாகப் பிற ஆய்வுகள் கூறுகின்றன.

மூளை வளர்ச்சியையும் மூளை உயிரணுக்கள் தங்களுக்குள் எவ்வாறு செய்திப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் உள்ள குறைபாடுகளால் கருவளர்ச்சியின் போது இயல்பான மூளைவளர்ச்சியில் ஏற்பட்ட இடையூறுகளின் விளைவாகவே மனவிறுக்கக் கோளாறுகள் தோன்றுகின்றன என்பதையே இவ்வசாதாரண நிலைகள் எல்லாம் உணர்த்துகின்றன. இதற்குக் காரணம் மரபணு செயல்பாடுகளின் மீது சூழல் காரணிகளின் தாக்கமாக இருக்கக் கூடும்.

நோய் கண்டறிதல்

இரத்தப் பரிசோதனை போன்ற மருத்துவ சோதனைகள் எதுவும் இல்லாத காரணத்தால் மனவிறுக்கத்தைக் கண்டறிவது கடினம். மருத்துவர் குழந்தையின் நடத்தை மற்றும் வளர்ச்சியைக் கொண்டே நோயைக் கண்டறிய முடியும்.

ஆயினும், சிறு குழந்தைகளில் மனவிறுக்கம் இருப்பதைக் காணும் சரிபார்க்கும் பட்டியல் போன்று, கேட்டறிந்து, தர்க்கமுறையில் மதிப்பீடு செய்தும், பொதுப் பரிசோதனை மூலமும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

நோய் மேலாண்மை

இந்நோய்க்கு சிகிச்சை இல்லை. ஆனால் மருந்துகள் மற்றும் சிறப்பு பயிற்சி மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம்.

ஆரம்ப கட்டத்திலேயே கவனம் செலுத்துவதன் மூலம் குழந்தை முன்னேற்றம் அடையலாம். குழந்தை பேசவும், நடக்கவும், பிறரோடு பழகவும் உதவி செய்யப்படும்.

ஆகவே, விரைவில் குழந்தைநல மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது முக்கியம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top