பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர்களுக்கான யோகா பயிற்சி

இளைஞர்களுக்கான யோகா பயிற்சி குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது சிறுவர்களையும் இளைய வயதினரையும் தங்கள் வாழ்க்கைக்கான பொறுப்பினை எடுத்துக் கொள்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு செயல்முறை ஆகும். இந்த அதிகாரம் அளித்தல் என்பது முதலில் அவர்களின் சூழ்நிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. பிறகு அவர்களுக்கு மூலவளங்கள் கிடைப்பதை மேம்படுத்துகிறது. அடுத்த நிலையில் அவர்களின் நம்பிக்கைகள், மதிப்பீடுகள் மற்றும் மனப்போக்குகள் மூலமாக அவர்களது பிரக்ஞையில் மடைமாற்றத்தைச் செய்கிறது. இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிகாரம் பெறுவதற்கான நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் இளைஞர்கள் அதிகாரம் பெற வாய்ப்பு ஏற்படுகிறது. இளைஞர் மேம்பாடு என்ற கருத்தாக்கம் இளைஞருக்கு அதிகாரம் அளித்தல் என்பதில் இருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் மேம்பாடு என்பது தனிநபர்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டதாகும். அதிகாரம் அளித்தல் என்பது இளைஞர்களிடமும் சமுதாயத்தினரிடமும் தனித்தியங்குதலின் சாத்தியங்களை அதிகரிக்கவும் தன் முனைப்பை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இளைஞர்கள் தாங்கள் வாழும் சமுதாயத்தில் தங்களின் நலன்களைப் பொறுப்புடனும் சுயநிர்ணய முறையிலும் முன்வைக்கும் நடவடிக்கைகளையும் குறிக்கிறது. தங்களின் சொந்த அதிகாரத்தின் மீது இளைஞர்கள் செயல்பட்டு இதனை முன்வைத்தாக வேண்டும்.

இளைஞருக்கு அதிகாரம் அளித்தல் என்ற கோட்பாடானது மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. அவை:

 1. தனிநபருக்கு அதிகாரம் அளித்தல்
 2. நிறுவனத்துக்கு அதிகாரம் அளித்தல், மற்றும்
 3. சமுதாயத்திற்கு அதிகாரம் அளித்தல்

என்பவை ஆகும்.

தனிநபருக்கு அதிகாரம் அளித்தல்: கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும் தங்களின் திறனை அதிகரித்துக் கொள்ளவும் இளைஞர் அல்லது வயது வந்தோருக்கு மேம்பாட்டுத் திறன்கள் அதேபோன்று நிறுவனங்கள் மற்றும் சமுதாயத்தினருக்கு நன்மைகள் கிடைப்பதை திறம்பட ஒருங்கிணைப்பதற்காக விமர்சன விழிப்புணர்வை மேம்படுத்துதல்.

நிறுவனத்துக்கு அதிகாரம் அளித்தல்: இளைஞர்களுக்கு அல்லது வயது வந்தோருக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற மற்றும் அவர்களிடம் இருந்து பலன்களைப் பெறுகின்ற அமைப்புகள் - தங்களது வாழ்க்கை மீது கட்டுப்பாடு செலுத்தத் தேவைப்படும் திறன்களை இளைஞர்கள் பெற இத்தகைய அமைப்புகள் உதவும். கொள்கை முடிவுகளை உருவாக்கும் மற்றும் அவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அமைப்புகளுக்கும் அவற்றின் சேவைகளுக்கும் பதிலீடுகளை வழங்குதல்.

சமுதாயத்திற்கு அதிகாரம் அளித்தல்: சமுதாய மேம்பாட்டுக்காக எடுக்கப்படும் முயற்சிகள் வாழ்க்கைத் தரத்திற்குச் சவாலாக இருப்பவற்றை எதிர்கொள்ளுதல் மற்றும் உள்ளூர், மாநில, தேச அளவில் குடிமக்கள் பங்கேற்புக்கான வாய்ப்புகளை வழங்குதல்

இளைஞர்களைப் பாதிக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகள்

இளைஞர்கள் பற்றி கிடைக்கக் கூடிய சான்றாதாரங்கள் இளையோர் பலவிதமான ஆரோக்கிய பாதிப்பு நிலைமைக்கு ஆளாகும் வாய்ப்புகள் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. தனிப்பட ஒருவர் எடுக்கும் முடிவுகள், சுற்றுச்சூழல் தாக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், தொற்றும் மற்றும் தொற்றாத நோய்கள், விபத்துக் காயங்கள் உள்ளிட்டவை இத்தகைய நிலைமைகளை உருவாக்குகின்றன. இளைஞர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சமூக மற்றும் பொருளாதாரம் சார்ந்தவை மட்டும் அன்று. அவர்களின் பல பிரச்சினைகள் உளவியல் சார்ந்தவையாகவும் இருக்கின்றன. உறவுகளால் பிணைக்கப்பட்டும் அதே சமயம் துயரம் நிரம்பிய தனிமையிலும் இளைஞர் மற்றும் வயது வந்தோர் போதைப் பழக்கத்திற்கும் மதுப் பழக்கத்திற்கும் தூண்டப்படுகிறார்கள். இதர முக்கியமான பிரச்சினைகள் எதுவெனில் ஒத்த வயதினரின் வற்புறுத்தல், குடும்பக் கடன்கள் மற்றும் பணிச்சுமை ஆகும். மேலும் முறையான ஆலோசனை/பராமரிப்பு சரிவர கிடைக்காததால்/ இல்லாததால் இளைஞர்கள் தங்களது வாழ்க்கையைத் தற்கொலையில் முடித்துக் கொள்ள முயல்கிறார்கள்.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள்

 • அதிக உடல் எடை மற்றும் பருமன்
 • மன அழுத்தம்
 • பதற்றம் - மனச்சோர்வு
 • இளைஞர்களுக்கு இடையில் ஏற்படும் தனிப்பட்ட முறையிலான நேருக்கு நேர் வன்முறை
 • தற்கொலைச் சிந்தனைகள்
 • புகையிலைப் பயன்பாடு
 • மது மற்றும் போதைப்பொருள் பழக்கம்
 • தொற்றாத நோய்கள் (என்.சி.டி)

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் யோகா ஆசனங்கள் மற்றும் பிராணாயாமங்கள் ஆகியன உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. அவை உடல் வலிமையை அதிகப்படுத்துகின்றன. உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றுகின்றன. உடல் மற்றும் மனத்தை இறுக்கமின்றித் தளர்வாக வைத்துக் கொள்கின்றன. மனஅழுத்தத்தைக் குறைக்கின்றன. பிரிவு மற்றும் இணைப்பிரிவு நரம்பு மண்டங்களுக்கு இடையில் சமநிலையைப் பேணுகின்றன.

அதனால் பலவகையான தொற்றாத நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. எனவே, ஆசனங்களும் பிரணாயாமங்களும் கீழ்வருவனவற்றிற்கு உதவுகின்றன:

 • மனஅழுத்தம் - பதற்றத்தில் இருந்து விடுவிக்கின்றன
 • ஆக்கப்பூர்வமான ஆற்றல் மற்றும் மனோநிலையை மேம்படுத்துகின்றன
 • ரத்த அழுத்தத்தை இயல்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது
 • சுற்றி உள்ள தசைகளை மசாஜ் செய்வதன் மூலம் சீரற்ற மற்றும் தேக்கமான செறிமானத்தை விரைவுபடுத்துகிறது.
 • அமைதி மற்றும் நல் வாழ்வு உணர்வுகளை அதிகப்படுத்துகின்றன. எனவே நெடுங்கால மனஅழுத்தப் பாதிப்புகளில் இருந்து தற்காப்பு அளிக்கிறது.
 • இதயத் துடிப்பையும் மூச்சு விடுதலையும் மெதுவாக்குகிறது.
 • ரத்த அழுத்தத்தை இயல்பாக்குகிறது.
 • ஆக்சிஜன் மிகத் திறமையாகப் பயன்படுத்தப்பட ஏதுவாகிறது.
 • அட்ரினல் சுரப்பிகள் மிகக் குறைவாகவே கார்ட்டிசாலைச் சுரக்கின்றன.
 • நோய் எதிர்ப்புச் சக்தியையும் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

மனஅழுத்தத்தைக் குறைப்பதற்கு யோகா

மனஅழுத்தமானது தன்னியக்க (தன்னிச்சையாக இயங்கும்) நரம்பு மண்டலத்தின் சமச்சீர் நிலையைக் குலைக்கிறது. இணைபிரிவு நரம்பு மண்டல ச் செயல்பாடுகளைக் குறைப்பதாலும் பிரிவு நரம்பு மண்டல அமைப்பின் செயல்பாடுகளை அதிகப்படுத்துவதாலும் இந்தச் சமச்சீர் குலைவானது ஏற்படுகின்றது. புலன் உணரும் ஒரு தேவையும் அந்தத் தேவையை நிறைவு செய்வதற்கான ஒருவரின் தகவமைப்பு திறனும் பொருந்தாமல் போகும் போது மனஅழுத்தமானது ஏற்பட்டு அது உணரப்படுகிறது. வெளிப்புறச் சூழல் மீதான ஒருவரின் உணர்வுப்பூர்வமான மற்றும் உளவியல்ரீதியான எதிர்வினைகளும் இதில் உள்ளடங்கும். ஒருவர் தொடர்ந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால், அந்த அழுத்தம் உண்மையானதாக அல்லது புலன் உணரப்படுவதாக இருந்தாலும், அவரது நரம்பு மண்டலம் பிரிவு நிலையைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு மாறும். இந்தப் புள்ளியில் பிரிவு நரம்பு மண்டலத்தின் இயல்பான நடவடிக்கைகள் குறையத் தொடங்குகின்றன. எபிநெஃப்ரின் விடுவிப்பு குறையத் தொடங்கும். ஆனால், அதே சமயம் கார்டிகோஸ்டீராய்டு விடுவிப்பு வழக்கமான அளவு நிலையைவிட கூடுதல் அளவு என்னும் நிலைக்கு முடுக்கிவிடப்படுவது தொடர்ந்து இருக்கும். அத்தகைய தருணத்தில், அந்தத் தனிநபர் தான் மனஅழுத்த நிலைமையில் இருக்கின்றோம் என்பதைக்கூட உணர முடியாமல் இருப்பார்.

யோகாவானது இணைப்பிரிவு நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் தன்னியக்க நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமான சமச்சீர் நிலைமைக்கு மீண்டும் கொண்டு வருகிறது. நமது உடல் அல்லது மனம் அச்சுறுத்தலை உணர்ந்தால் அல்லது மன அழுத்தத்துக்கு ஆளாவது போல புலன் உணர்ந்தால், அந்த அழுத்தம் “நேர்மறையானதாக” அல்லது "எதிர்மறையானதாக” எப்படி இருந்தாலும் நமது பிரிவு நரம்பு மண்டலம் அல்லது “ஆபத்துக்கால எதிர்வினை அமைப்பு” செயல்படத் தூண்டப்படுகிறது. இந்தப் "பதுங்கு அல்லது போராடு” என்ற எதிர்வினையானது நரம்புச் சுருக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் முனைப்புள்ளிகளுக்கு ரத்தம் பாய்வது குறைகிறது. அதே போன்று செரிமான மண்டலத்துக்கு ரத்தம் பாய்வதும் குறைகிறது. உயிர்வாழத் தகவமைத்துக் கொள்ள முன்னேற்பாடு செய்வது போல இந்தச் செயல்கள் அமைகின்றன. இதேபோன்று யோகாவானது வேறு வழிமுறைகளிலும் உடல் மற்றும் மன நலத்துக்குப் பலன்களைத் தருகிறது.

ஹைப்போதாலமி பிட்யூட்டரி - அட்ரினல் அச்சு மற்றும் பிரிவு நரம்பு மண்டலத்தின் உணர்வுக் குறைப்பு வழியாக இப் பல ன் கள் அடையப்படுகின்றன. யோகா மூலம் மனதிற்கு சாந்தியும் அமைதியும் தரப்படுவதானது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, நாடித்துடிப்பு மற்றும் மூச்சு விடும் வேகத்தைக் குறைக்கிறது. கார்ட்டிசால் மற்றும் அசெட்டில்கோலைன் ஆகியவற்றின் அளவு நிலையைக் குறைப்பதன் மூலம் இது எட்டப்படுகிறது. பொதுவாக இந்த அழுத்தக் காரணிகளை உடல் எதிர்கொள்ளும் போது அதிகரிக்கச் செய்யும். வேதிப்பொருள் சுரப்பைக் குறைப்பதன் விளைவாக, உளவியல் முரண்பாடுகள், மன அமுக்கங்கள், மிகை உணர்வுத் திறன்கள் ஆகியவற்றைக் குறைக்கப்படுகின்றன. இவைதான் உடல்மன சிக்கல்களைத் தூண்டிவிடும் கூறுகள் எனப் பார்க்கப்படுகின்றன. யோகப் பயிற்சிகளின் விளைவாக, மெலாடோனின் அளவுநிலை, முன்னேற்றம் பெற்ற உளவியல் நிலை, இதயசுவாச நிலைகள் ஆகியன அதிகரித்துள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு யோகா

போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து மீள்வதற்கான முக்கிய சிகிச்சைக் கூறாக யோகா உள்ளது. உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து முழு மனிதனாக ஒருவரை மாற்ற யோக சிகிச்சையானது உதவும். மேலும் உடலை வலுப்படுத்த, மனதைச் சாந்தப்படுத்த, உடல் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை அதிகப்படுத்த, மனத்தின் பதற்றத்தைக் குறைக்க யோகா உதவுகிறது. அதுமட்டுமின்றி சரியான சுவாச முறைகளையும் மேம்படுத்துகிறது. உடல் தோற்றநிலை விழிப்புணர்வை அதிகரித்து தகவமைப்பு திறன்களை மேம்படுத்தி மன உறுதியையும் கவனக் குவிப்பையும் ஊக்குவிக்கிறது. கவனம் முழுவதும் செலுத்தி மேற்கொள்ளப்படும் யோகப் பயிற்சிகளில் உள்ள பல்வேறு வகையான உடல் இயக்கங்கள் இளைஞர்களின் கவனத்தை அந்தத் தருணத்தை நோக்கி செலுத்த உதவுகின்றன. உடல்மனம் தொடர்ச்சியில் உண்டாகும் உணர்வுகள் குறித்த தெளிவை அவர்கள் பெறவும் உதவும். பின்புறமாக வளைதல் போன்ற குறிப்பிட்ட தோற்ற நிலைகள் உந்தி நரம்பு முடிச்சுவலைப் (சோலார் பிளெக்சஸ்)" பகுதியில் உணரக் கூடிய உணர்வுகள் குறித்த புரிதலை ஏற்படுத்துகின்றன.

உடல் பருமனுக்கு யோகா

சமச்சீரான உணவும் முறையான பயிற்சியுடன் ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் இணைந்த யோகா உடல்பருமனுக்குச் சரியான தீர்வாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் மூட்டுவலியால் சிரமப்படுவார்கள். மூட்டுகளில் சிரமத்தையும் அழுத்தத்தையம் குறைக்கும் வகையில் உடல் அமைப்பை மேம்படுத்த யோகா உதவுகிறது. இதனை உடல்எடையத் தாங்கும் வகையில் சட்டகத்தை வலுப்படுத்துவதன் மூலம் யோகா சாத்தியமாக்குகிறது. வலிமை மற்றும் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்துகிறது. உடல்சமநிலையை யோகா சீரமைக்கிறது. பொருத்தமான உடல்கட்டை மேம்படுத்துதல் மற்றும் நல்ல மனநிலையை ஏற்படுத்துதல் மூலம் ஒருவர் தன்னை சிறப்பாக உணர்ந்து கொள்ள யோகா உதவுகிறது. தொடர்ச்சியான யோகப் பயிற்சிகள் உடல் பருமனாக உள்ள நபர்மீது பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. எடை குறைப்புக்காக மேற்கொள்ளப்படும் பல உத்திகளை ஒப்பிட்டுப் பார்த்தால் யோகாவால் ஏற்படும் நல்ல விளைவுகள் நிரந்தரமான ஒன்றாகும்.

உடல் பருமனுக்குச் சிசிச்சை அளிப்பதில் சூரிய நமஸ்காரம் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. சூரிய நமஸ்காரம் ஒரு முழுமையான சிகிச்சை முறையாக இருப்பதற்குக் காரணம் இந்தப் பயிற்சியானது நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தில் விசேஷமான தாக்கத்தை ஏற்படுத்துவதே ஆகும். இது உடல்பருமனை அதிகப்படுத்தும் வளர்சிதை மாற்ற சமநிலையின்மையை மீண்டும் சீர் செய்கிறது. உடல்பருமன் பிரச்சினைக்குப் பரிந்துரைக்கப்படும் பிராணாயாமங்களாக பாஸ்த்ரிகா, கபாலாபாதி, சூரியபேதனம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவைகளை உடலைச் சமநிலையில் வைத்திருக்க உதவும் பயிற்சிகளோடு சேர்த்து செய்ய வேண்டும். மேலும் இவை வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி சமநிலையைப் பராமரிக்கவும் உதவுகின்றன.

தொற்றாத நோய்கள்

இளைஞர் என்ற பருவம் ஒருவரின் வாழ்நாளில் இளமையாக இருக்கும் போது ஏற்படுவது ஆகும். மேலும் தெளிவாகக் கூறுவதென்றால் குழந்தைப் பருவத்திற்கும் வயது வந்தோர் பருவத்திற்கும் இடைப்பட்ட காலகட்டமாகும். இந்தப் பருவம் மேலும் இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது: ஒருவர் இளமையாக இருக்கிறார் என்றால் அது தோற்றம், புத்துணர்ச்சி, வீரியம் மற்றும் சுறுசுறுப்பு முதலான குணங்களால் வெளிப்படும். தொற்றாத நோய்கள் (என்.சி.டி) என்பவற்றில் நடத்தை மற்றும் வாழ்க்கை முறை தொடர்புடைய பல்வேறு நிலைமைகள் உள்ளடங்கும். இந்தியாவில், குறிப்பாக இளம் வயதினர் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளும் முறையில் மாற்றத்தை அனுபவிக்கின்றனர். இவர்கள்தான் உயர்ரத்த அழுத்தம், மன அழுத்தம், நீரிழிவு மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய்கள் போன்ற வயது வந்தோருக்கான தொற்றா நோய்களுக்கு அதிக எண்ணிக்கையில் ஆளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்றா நோய்களுக்கு யோகா

இன்றைய காலகட்டத்தில் தொற்றாத நோய்கள் ஏற்பட முதன்மைக் காரணமாக இருப்பது வாழ்க்கை முறையே ஆகும். புகையிலைப் பயன்பாடு, உடல் உழைப்பு இல்லாத செளகரியமான வாழ்க்கை முறை, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் நீண்ட கால உள சமுதாய மன அழுத்தம் ஆகியன இதில் உள்ளடங்கும். பல தொற்றாத நோய்களில் பொதுவான கூறுகளாக இருப்பது நாட்பட்ட அழற்சி மற்றும் மன அழுத்தம் ஆகும். இவற்றைக் குணப்படுத்துவதில்தான் யோகாவானது மிகச்சிறந்த பலனைத் தருகின்றது. யோகப் பயிற்சிகளையும் மன ஒருங்கிணைப்புப் பயிற்சிகளையும் தொடர்ந்து செய்து வருவது பல வழிகளில் உடலில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருத்தல், இருதயநாள அமைப்பை ஆரோக்கியமான வைத்திருத்தல் முதலானவை இதில் அடங்கும். யோகப் பயிற்சி என்பது சுறுசுறுப்பாக இருப்பதை மேம்படுத்த உதவுவதால், யோகா உளவியல் சார்ந்த முக்கியமான பலன்களை அளிப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் தனது சுயத்துடன் மீண்டும் தொடர்பு கொள்வதற்கு யோகா உதவுகிறது. ஒருவருக்கு நோய் எதனால் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்று கண்டறியவும் இது உதவுகிறது. நோயில் இருந்து ஒருவரை மீட்டெடுக்க உடலோடு இணைந்து யோகாவும் உதவுகிறது. ஒருவர் தன்னைச் சுற்றி உள்ள உலகத்தோடு எவ்வாறு செயலாற்றுகிறார் என்பதைத் தெரிந்துக் கொள்ள யோகப் பயிற்சிகள் உதவுகின்றன. வேறுபட்ட பார்வைக் கோணத்தில் உலகைப் பார்க்கவும் வாழ்க்கையின் சவால்களை வித்தியாசமாகப் பார்க்கவும் அவை உதவுகின்றன. நமது மனதை மெதுவாக இயங்கச் செய்து சாந்தப்படுத்தி நம் உள்ளே இருக்கும் சுயத்தோடு தொடர்புபடுத்த யோகா உதவுகிறது. இதனால் அந்த நபர் மாய உலகத்தில் இருந்து உண்மையான தற்போதைய யதார்த்த தருணத்தில் காலூன்ற முடியும். நவீன அவசர யுகத்தின் அழுத்தங்கள் மற்றும் அந்த அழுத்தங்கள் ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து விடுபட யோக முதன்மையாக உதவுகிறது. இதனால் தொற்றாத நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.875
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top