অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

எலும்பு வங்கி

எலும்பு வங்கி

அறிமுகம்

மருத்துவத் துறையில் சமீப காலமாகப் பரவலாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று எலும்பு வங்கி. சமீப காலமாகப் பேசப்பட ஆரம்பித்தாலும், கால் நூற்றாண்டுக்கு முன்னரே (1988) இந்தியாவின் முதல் எலும்பு வங்கி மும்பை டாடா நினைவு மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கோவை கங்கா மருத்துவமனையில் முதல் எலும்பு வங்கி தொடங்கப்பட்டது. தற்போது சென்னை மருத்துவகல்லூரி மருத்துவமனையிலும் உள்ளது என்பதை அறிவோம்.

நாட்டின் முன்னோடி எலும்பு வங்கிகளில் ஒன்று இது. எலும்பு மாற்று அறுவைச் சிகிச்சை வளர்ந்துகொண்டிருக்கும் முக்கியமான சிகிச்சை முறைகளில் ஒன்று. ஆனால், இது பற்றிப் போதிய அளவு விழிப்புணர்வு இன்னும் நம்மவர்களிடம் உருவாகவில்லை.

விபத்து, கிருமித்தொற்று அல்லது புற்றுநோய் காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும்போது, பாதிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு, அங்கு உண்மையான எலும்பைப் பொருத்துவது, எலும்பு மாற்றுச் சிகிச்சை. இறந்தவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் ஏன்உயிரோடு இருப்பவர்களிடமிருந்தும்கூட எலும்பைப் பெற்று, முறைப்படிப் பாதுகாத்து, எலும்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே எலும்பு வங்கி. ரத்த வங்கி, கண் வங்கிபோல இதுவும் உறுப்பு தானத்தை எதிர்பார்த்துச் செயல்படும் ஓர் அமைப்பு. இதயம், கண், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளைத் தானமாகத் தருவதுபோல் எலும்பையும் தானமாகத் தரலாம்; பெறலாம்.

எலும்பு பாதுகாப்பு

மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலிலிருந்து உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பயன் படுத்துவதுதான் உறுப்பு தானத்தின் முக்கிய அம்சம். தமிழகத்தின் உறுப்பு தானத் திட்டத்தில் இணைந்த மருத்துவமனைகளில் யாருக்கேனும் மூளைச்சாவு நிகழ்ந்தால், உடனே உறுப்புதான ஒருங்கிணைப்புக் குழுவுக்குத் தெரிவிப்பார்கள். இக்குழுவில் உள்ளவர்கள் அந்த மருத்துவமனைக்குச் சென்று, மூளைச்சாவு ஏற்பட்டவரின் உறவினரிடம் பேசி உறுப்புகளைத் தானம் கொடுப்பதன் அவசியத்தைப் புரியவைப்பார்கள். அவர்களின் சம்மதம் கிடைத்ததும், அதற்கான உறுதிமொழிக் கடிதத்துடன் உறுப்புகளைப் பெற்றுக்கொள்வார்கள்.

உடல் உறுப்புகள் தேவைப்படும் நோயாளிகள், மருத்துவமனை மூலமாக ஏற்கெனவே இந்தக் குழுவினரிடம் பதிவுசெய்திருப்பார்கள். அப்படிப் பதிவுசெய்தவர்களுக்கு முன்பதிவு அடிப்படையில் உடல் உறுப்புகள் வழங்கப்படும். பொதுவாக, இதயம். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகளை உடனடியாகப் பொருத்திவிட வேண்டும். கண், தோல் மற்றும் எலும்பைப் பாதுகாத்துப் பின்னாளில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எலும்பைப் பாதுகாப்பதற்கு அதிநுண்ணிய தொழில்நுட்பம் எதுவும் தேவையில்லை. மிகவும் எளிதான வழியில், குறைந்த செலவில் எலும்புகளைச் சேமிக்க முடியும். மூளைச்சாவு ஏற்பட்டவரிடமிருந்து பெறப்பட்ட எலும்பை ஆல்கஹாலில் கழுவிச் சுத்தப்படுத்தி, அதில் எய்ட்ஸ் மற்றும் மஞ்சள் காமாலைக் கிருமிகள் இல்லை என்பது உறுதியானதும், மைனஸ் 80 டிகிரி செல்சியஸில், குளிர்சாதனப் பெட்டியில் பல வருடங்களுக்குப் பாதுகாக்கலாம். எலும்புகளை காமா கதிர்கள் கொண்டு தொற்றுநீக்கம் செய்து பாதுகாப்பதும் உண்டு.

இயல்பாக இறந்தவரின் உடலிலிருந்து 12 மணி நேரத்துக்குள் எலும்பைப் பெற்றுக்கொண்டால், அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். உயிரோடு இருப்பவரிடமிருந்தும் எலும்பைப் பெறலாம். உதாரணத்துக்கு, இடுப்பு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது, அங்குள்ள பந்துக்கிண்ண மூட்டு எலும்பைச் சேமித்து, அடுத்தவர்களுக்குத் தானமாகத் தரலாம். மார்புக்கு அருகிலுள்ள முதுகெலும்புச் சிகிச்சையின்போது விலா எலும்புகளைவெட்டி எடுப்பது நடைமுறை. இந்த எலும்புகளையும் பாதுகாத்துப் பின்னாளில் மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியும். விபத்தின்போது கை, கால்கள் துண்டாகி தசைகள் நசுங்கிவிட்டால், அவற்றின் எலும்புகளை மட்டும் இம்மாதிரி சேமித்துப் பயன்படுத்த முடியும்.

ஒருவரிடமிருந்து தானமாகக் கிடைத்த எலும்புகளைக் குறைந்தது 20 பேருக்குப் பயன்படுத்தலாம். பெரிய எலும்புகளை அப்படியே பயன்படுத்தலாம். சிறிய எலும்புகளைப் பொடி செய்து பயன்படுத்த முடியும். எலும்பைச் சார்ந்த கார்ட்டிலேஜ் மற்றும் தசைநாண்களும் பயன்படும்.

எலும்புச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிளேட் மற்றும் ஸ்குரூக்களுக்குப் பல லட்ச ரூபாய் செலவாகும். ஆனால், தானமாகப் பெறப்பட்ட எலும்புகளைப் பயன்படுத்த சிலஆயிரங்களே ஆகும். உறுப்பு மாற்றுச் சிகிச்சையின்போது சிலருக்குப் புதிய உறுப்பு ஒப்புக்கொள்ளாமல் போவதும் உண்டு. இதைத் தடுப்பதற்காக இவர்கள் வருடக் கணக்கில் தன் தடுப்பாற்றல் எதிர்முறிவு மருந்துகளைச் சாப்பிட வேண்டியது கட்டாயம். இதற்கு மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிவரும். ஆனால், இந்தப் பிரச்சினைகள் எலும்பு மாற்றுச் சிகிச்சையில் ஏற்படுவதில்லை என்பது கூடுதல் நன்மை.

தடைகள்

இத்தனை நன்மைகள் இருந்தும் எலும்பு தானம் மக்களிடம் பிரபலமாகாமல் இருப்பது ஏன்? இதயம், கண், சிறுநீரகம் போன்றவற்றைத் தானமாகத் தர முன்வருபவர்கள்கூட எலும்பைத் தானமாகத் தருவதற்குத் தயங்குகிறார்கள் என்றால், அதற்கு சென்டிமென்ட் சிக்கல் முக்கியமான காரணம். எலும்புகளைத் தானமாகத் தந்துவிட்டால், இறந்தவரின் உடலமைப்பு மாறிவிடும். உண்மையான உடல்போல் தெரியாது என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! எலும்புகளை அகற்றிய இடத்தில் மரக்கட்டைகள் மற்றும் பஞ்சு வைத்துத் தையல் போட்டு மூடிவிடுவதால், இறந்தவரின் உடலமைப்பு மாறாது என்பதை உறவினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு முக்கியமான விஷயம், ஆண்டுதோறும் எலும்புச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிளேட்டுகள் மற்றும் ஸ்குரூக்கள் மட்டும் ரூ.4,000 கோடிக்கு மேல் விற்பனையாகின்றன. இதில் அதிக லாபம் பார்த்துப் பழகிய உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் எலும்பு வங்கி வளர்ச்சியை மறைமுகமாகத் தடுக்கின்றன.

செய்யவேண்டியவை

நாட்டில் சாலை விபத்துகளில் எலும்பு சேதம் அடைபவர்கள்தான் அதிகம். இவர்களில் 80% பேருக்கு எலும்பு மாற்றுச் சிகிச்சை தேவைப்படுகிறது. கோவையில் ஒரு மருத்துவமனையில் மட்டும் ஆண்டுக்கு 6,000 பேருக்கு இச்சிகிச்சை தேவைப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த அளவுக்குத் தேவைப்படுகிற எலும்பு வங்கி முழுப் பயன்பாட்டுக்கு வர வேண்டுமானால், மக்களிடம் எலும்பு தானம் குறித்த விழிப்புணர்வு மேம்பட வேண்டும். அதற்கு அரசின் பங்கேற்பும் முக்கியம்.

உறுப்பு தானம் தொடர்பான கருத்துகளைப் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி சமூகத்தின் எல்லா மூலைகளுக்கும் அரசு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், இப்படி உறுப்பு தானம் செய்பவர்களை உற்சாகப்படுத்த சமூகத்துக்கு அவர்களுடைய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் செயல் திட்டங்களை ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். எங்கோ அவர்களுக்கு அளிக்கப்படும் ஒரு முன்னுரிமை, எதிலோ அவர்களுக்குக் காட்டப்படும் ஒரு சலுகை அவர்களைத் தனித்துக் காட்டும். மேலும் பலரை ஈர்க்கும். பல உயிர்களைக் காக்கும்!

ஆதாரம் : கு.கணேசன், பொதுநல மருத்துவர்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/6/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate