பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதல் உதவி / சாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன?
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன?

சாலை விபத்துக்கள் (நடந்தால்) – செய்ய வேண்டியது என்ன?

 1. நம் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல. பிறப்பு என்பது பெரும் மகிழ்வையும் பரவசத்தையும் கொடுப்பது. மரணம் என்பது  பெருந்துயரை அளிப்பது. மரணத்தை தவிர்க்க முடியாது. ஆனால், ஒரு கொடூர  விபத்தால் நடக்கும் மரணத்தை நாம் தடுக்க முடியும். ஒரு இயல்பான மரணத்தை விட ஒரு விபத்தால் ஏற்படும் துர்மரணம் மிகக் கொடியது. ஏனெனில், அவ்வகை மரணங்கள் மறைந்திருந்து திடீரென தாக்குகின்றன.
 2. ஒரு விபத்து நடந்தால் அங்கு உடனே செய்ய வேண்டியவை என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை. விபத்தால் திகைப்புற்று பதறிப் போய் என்ன செய்வது என்று தெரியாமல் நாம் திக்குமுக்காடிப் போகிறோம். அல்லது 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, காயம்பட்டவரையே வெறித்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
 3. நெடுஞ்சாலைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. உங்களுடன் வந்த சகா ஒருவருக்கு பலத்தக் காயம். அப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 4. பதட்டப்படாமல் அமைதியாக, முறையாக ஆனால் விரைவாக முதலுதவியை தொடங்குங்கள். காயம் பட்டவருக்கு பெரிய அளவில் இரத்தக் கசிவு இருக்கிறதா? என்பதை முதலில் கவனித்து, அதை நிறுத்தவோ தடுக்கவோ முதலில் முயற்சி செய்யுங்கள். சுத்தமான துணி கொண்டு, காயத்தைக் கட்டியோ, துடைத்தோ நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். மார்புக்குள், மண்டையோட்டுக்குள் அல்லது அடிவயிரில் காயம் பட்டு இரத்தம் வெளியேறினால் அதை உடனடியாக நாம் கண்டறிய முடியாது. ஆனால், மூக்கு வழியாகவோ காது வழியாகவோ, நுரையீரல் வழியாக வரும் இருமல் மூலமாகவோ அல்லது குடலில் இருந்து வரும் வாந்தி மூலமாகவோ இரத்தம் வெளிவரும். சில அறிகுறிகள் மூலம் இதை நாம் உணரலாம். காயம்பட்டவர் மயக்க நிலையில் இருப்பார். தோல் வெளிறி, குளிர்ந்து போய் இருக்கும். அதிகமான வியர்வை வழிய, காயம் பட்டவர் தாகமாக இருப்பதாக உணர்வார். இந்த வகை காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
 5. தீ, உடைந்த கண்ணாடிகள் மற்றும் மின்சாரம் பாய்கின்ற ஒயர்கள் இவை தாக்கும் அபாயம் இருந்தால், அங்கிருந்து காயம்பட்டவரை அப்புறப்படுத்தி, பாதுகாப்பான இடத்தில் கிடத்துங்கள். வேடிக்கைப் பார்க்கக் குழுமி இருக்கும் கூட்டத்தை விலக்கி, அப்புறப்படுத்தி காயம்பட்டவருக்கு புதிய காற்று கிடைக்க வழிவகை செய்யுங்கள். பாதிக்கப்பட்டவரிடம் மென்மையாகவும், ஆறுதலாகவும் பேசி அவருக்கு நம்பிக்கை ஊட்டுங்கள். வாகனத்திற்கு ஏற்பாடு செய்து விபத்தில் பாதிக்கப்பட்டவரை மிக மிக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு தகவலை தெரியப்படுத்துங்கள். முதலுதவி செய்பவர்கள் அளவுக்கதிகமாக எதையும் செய்ய முயலக்கூடாது. நிலைமை மோசமாகிவிடாத அளவுக்கு உதவினாலே போதுமானது.
 6. விபத்து நடந்த நிமிடத்தில் இருந்து விபத்துக் களத்திலிருந்து மிக அருகில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளியை கொண்டு செல்லப்படும் நேரம் மிகவும் பொன்னானது. இதை மருத்துவர்கள் “பொன்னான நேரம்”(Golden Time) என்று தான் சொல்கிறார்கள். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சுவாசக் குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தத்தின் காரணமாக பெரும்பாலான நோயாளிகள் இறந்து விடுகிறார்கள். அதனால், விபத்தால் பாதிக்கப்பட்டவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லுதல் மிகவும் அவசியம். 108 க்கு தொலைபேசித் தகவல் சொல்லியாகிவிட்டது என்று கடமை உணர்வோடு காத்திருத்தல் போதுமானது அல்ல.
 7. பொன்னான நேரம் என்று சொல்லக்கூடிய அந்த முதல் ஒரு மணி நேர சிகிச்சையை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் செய்யலாம் என்ற விதி இருக்கிறது. அதுவும் இலவசமாக செய்யவேண்டும். பிறகு, அரசு மருத்துவமனைக்கோ அல்லது பல்வேறு வசதிகள் கொண்ட பெரிய தனியார் மருத்துவமனைக்கோ நோயாளியை அழைத்து செல்லலாம். காப்பீடு கோரிக்கைக்கு இதனால் எந்த சிக்கலும் பிற்காலத்தில் நேராது.
 8. முதலில் விபத்து அடைந்த நபரின் நிலைமை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதில் மூன்று நிலைகள் இருக்கின்றன. மூச்சு விடமுடியாத நிலை அல்லது இதயத்துடிப்பு இன்மை, பெருமளவு இரத்தம் வெளியாகுதல், நினைவிழந்த மயக்க நிலைமை. இந்த மூன்று நிலையில் உள்ள காயம் பட்டோருக்கு, திறமையாக முதலுதவி செய்தால் அவர்களின் மேலான உயிரை நிச்சயம் காப்பாற்ற முடியும்.
 9. காயம் பட்டவர் நினைவிழந்த நிலையில் இருந்தால் விபத்தால் அவரது காற்றுப்பாதை, அதாவது மூச்சுக்குழல் அடைப்பட்டு இருக்கும் வாய்ப்பு தொண்ணூறு சதம் வாய்ப்பு இருக்கிறது. அப்போது அவர் மிகவும் சத்தமாகவும், மிகுந்த சிரமத்துடனும் மூச்சு விடுவார். இது பல காரணங்களால் நிகழ்கிறது. விபத்தின்போது, அவரது தலை முன்னோக்கி சாய்ந்து, அதனால் அவரது மூச்சுப் பாதை குறுகி இருக்கலாம். தொண்டை தசை அதன் கட்டுப்பாட்டை இழந்து, அதனால் அவரது நாக்கு உள்ளே தள்ளப்பட்டு, காற்றுப் பாதை அடைக்கப்பட்டு இருக்கலாம். அல்லது, உமிழ்நீர், வாந்தி போன்றவை தொண்டையின் பின்பகுதியில் அடைத்துக்கொண்டு காற்றை தடுத்துக்கொண்டு இருக்கலாம்.
 10. இதுபோன்ற எந்த சூழ்நிலையும், காயம் பட்டவரின் மரணத்திற்கு காரணமாகிவிடும். அதனால், முதலுதவி செய்வோர் உடனடியாக, காயம்பட்டவர் மூச்சு விட ஏதுவாக அவரது மூச்சுக் காற்றுப்பாதையை திறக்க வேண்டியது மிகவும் அவசியம். அவர் எந்நிலையில் விழுந்து கிடந்தாலும் அவரது தலை மேல் நோக்கி, அதாவது, அவர் தலை சற்று மேல் நோக்கி சாய்ந்து, அவரது முகவாய்க் கட்டை மேல் நோக்கிய நிலையில் இருக்கும்படி தூக்கி வைக்க வேண்டும். இதனால் நாக்கு தூக்கப்பட்டு, தொண்டையின் உள்ளிருந்து காற்றுப்பாதை தெளிவடைகிறது.
 11. காற்றுப்பாதை ஒரு தடவை திறந்து விடப்பட்டால் விபத்துக்குள்ளானவர் தானாகவே மூச்சு விட ஆரம்பித்துவிடுவார். ஆனால், இந்த முதலுதவி செய்யப்பட்டும், அவரால் மூச்சு விட முடியாவிட்டால், உடனடியாக செயற்கை மூச்சு விடும் முறையை ஆரம்பிக்க வேண்டும்.
 12. காயம்பட்டவரின் அருகில் முட்டிப்போட்டு உட்காருங்கள். கழுத்து, மார்பு மற்றும் இடுப்பு இவற்றை சுற்றியுள்ள ஆடைகளை தளர்த்துங்கள். காயம்பட்டோரின் முகவாய்கட்டையை முன்னோக்கித் தூக்குங்கள். அடையாள விரல் மற்றும் நடு விரல்களால் அவரது நெற்றியைப் பின்புறமாக அழுத்துங்கள். இதனால், அவரது தாடை தூக்கப்பட்டு நாக்கு முன்னேறி காற்றுப்பாதை தெளிவாக்கப்படும்.
 13. காற்றுப்பாதையை நீங்கள் திறந்து விட்டு இருந்தாலும் கூட, வாந்தி அல்லது உடைந்த பற்கள் அல்லது உணவு போன்றவை காற்றுப்பாதையை அடைத்துக் கொண்டு இருக்கக்கூடும். சாத்தியமானால், எந்தப் பொருள் உங்கள் கண்ணுக்கு தென்பட்டாலும், அவற்றை உடனடியாக நீக்கிவிட வேண்டும்.
 14. காயம்பட்டவரின் தலையை ஒரு பக்கமாக திருப்புங்கள். உங்கள் முதல் இரண்டு விரல்களையும் வாயினுள் விட்டு துழாவுங்கள். ஆனால், ஒளிந்திருக்கும் பொருள்களை தேட முயல வேண்டாம். எந்த பொருளையும் தொண்டைக்கு கீழே தள்ளிவிடாமல் கவனமாக இருங்கள். பிறகு, மறுபடியும் அவர் மூச்சுவிடுதலை பரிசோதியுங்கள்.
 15. இதிலும் அவர் மூச்சு விட சிரமப்படுகிறார் என்றால், அவர் மூச்சுவிடுதலை மீண்டும் உருவாக்க ஒரு உத்தி உள்ளது. அதன் பெயர் செயற்கை மூச்சுமுறை. உண்மையிலேயே மிகச்சிறந்த முறை. அது எது தெரியுமா? உங்களது சொந்த நுரையீரல் காற்றைக் காயம்பட்டவரின் நுரையீரலுக்குள் உங்கள் வாய் மூலம் அவரது வாய்க்குள் ஊதுவதுதான்.
 16. அகலமாக உங்கள் வாயை திறங்கள். ஆழமான மூச்சு எடுங்கள். உங்கள் விரல்களால் காயம்பட்டவரின் மூக்கு துவாரங்களை கிள்ளுவது போல் பிடித்துக் கொள்ளுங்கள். அவரது வாயை உங்கள் உதடுகளால் மூடி விடுங்கள். இருமுறை மூச்சு ஊதியபின்பு, கழுத்து நாடியை பரிசோதியுங்கள். இதயத் துடிப்பு இருக்கிறதா? என்பதை பரிசோதியுங்கள். இதயம் துடித்தால், நாடி உணரப்பட்டால் மூச்சு ஊதுதலை ஒரு நிமிடத்திற்கு 12 முதல் 16 தடவை தொடர்ந்து செய்யவேண்டும். அவர் இயற்கையான மூச்சு விடும்வரை இப்படி நீங்கள் தொடர்ந்து உதவலாம்.
 17. அவரது இதயம் துடிக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். இதற்கு வெளிப்புற மார்பு அழுத்தத்தை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதயம் வேலை செய்யாததை கீழ்க்கண்ட குறிகளின் மூலம் நம்மால் எளிதில் அறிய முடியும். அவரது முகம், கண் இமைகளின் உட்புறம், விரல் நகம் ஆகியவை வெளிறி நீல நிறமாக இருக்கும். கண்மணிகள் விரிந்திருக்கும். கழுத்தில் நாடித் துடிப்பு இருக்காது.
 18. இதற்கு முதலுதவி மேற்கொள்ள, காயம்பட்டவரை அவர் முதுகு சமமாக இருக்கும்வகையில், தரையிலோ, பலகையிலோ படுக்க வைக்கலாம். உங்கள் கையால் ஒரு நல்ல “தட்டு” ஒன்றை கீழ் மற்றும் இடது கோரை “ஸ்டெர்ணம்” என்னும் பகுதியில், அதாவது, அவரது இடது மார்பின் மேல் பகுதியில் கொடுக்க வேண்டும். பொதுவாக இது இதயம் மீண்டும் துடிக்கச் செய்ய உதவும். ஒருவேளை இதற்கும் இதயம் மசியவில்லை என்றால், தொடர்ந்து 10,15 நொடிகள் முயற்சி செய்யலாம். ஒரு நொடிக்கு ஒரு தட்டு என்ற வகையில் முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். இது செயற்கை மூச்சு விடும் முறையோடு சேர்ந்து செய்யப்படவேண்டும்.
 19. இவ்வாறு சில முயற்சிகளை நாம் செய்வதன் மூலம், அவரது உடல் விபத்தால் கடுமையான இழப்பை சந்தித்த போதிலும் விழிப்புடன் இருக்கும். பிறகு, ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, கை தேர்ந்த மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கும்.
 20. இந்த செய்முறைகளை படிக்கும்போது நம்மால் இதை எல்லாம் செய்ய முடியுமா என்ற மலைப்பு ஏற்படுவது உண்மையே. ஆனால், சில நாள் பயிற்சிகளின் மூலம் இந்த முதலுதவி நுணுக்கங்களை நாம் கற்றுக்கொண்டால், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு அது நிச்சயம் கை கொடுக்கும்.

ஆதாரம் : சிறகு நாளிதழ்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top