பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதியோர் உடல்நலம் / சுகாதார வாழ்க்கை முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சுகாதார வாழ்க்கை முறைகள்

சுகாதார வாழ்க்கை முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

உடற்பயிற்சி

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை கீழ்கண்ட முறையில் மேம்படுத்தலாம்.

* நீண்ட கால வாழ்வு

* இருதய இரத்த ஒட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு

* எடை குறைதல்

* சர்க்கரை நோயாளிகள் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்தல், தசைகளின் வலிமை மற்றும் வேலை செய்யும் திறனை அதிகரித்தல்

* மனநிலை சுறுசுறுப்பாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருத்தல்

* உடற்பயிற்சியை வாரத்திற்கு 3-5 நாட்கள் ஒவ்வொரு முறையும் 20 - 60 நிமிடங்கள் பின்பற்றினால் இருதயதுடிப்பை சீராக அதிக நாட்கள் பராமரிக்கலாம்

* வயதான காலத்தில் உடற்பயிற்சி செய்வதில் எடை அதிகரித்தல்.

* இருதயநோய்கள், நுரையீரல் மூச்சுகுழல் சம்பந்தப்பட்ட நோய்கள்

* வாதநோய் மற்றும் மூட்டுகளில் வலி போன்றவற்றை பொருத்து குறைகிறது.

* பலவகையான உடற்பயிற்சிகள் இருக்கின்றன.

* வயதானவர்கள் மகிழ்விக்கக்கூடிய, எளிதில் பின்பற்றக்கூடியவரை தேர்வு செய்யலாம்

* நன்றாக நடத்தல் மற்றும் தசைகளை நீட்டி இழுத்தல் (Stretching போன்ற உடற்பயிற்சிகள் சிறந்ததாக இருக்கும்.

ஆசனம் (Yoga)

உடல் நலத்திற்கு ஒரு சிறந்த பயிற்சியாக இது கருதப்படுகிறது. இதை சரியான முறையில் சற்று மேற்பார்வையின் கீழ் பழகவேண்டும்.

உடற்பயிற்சி தசை வலிமையை அதிகப்படுத்துகிறது. தினசரி நடைபயிற்சி உடல் எலும்புகளை வலிமைப்படுத்துகிறது. இது உடலின் நிலைபாட்டையும், ஒருமைப்பாட்டையும் அதிகரித்து கீழே விழுதலை தடுக்கிறது.

சுகாதார சேவைகளை பயன்படுத்துதல்

வயதானவர்கள் சமுதாயத்தில் கிடைக்கும் சுகாதார சேவைகளை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சுகாதார சேவைகளை பயன்படுத்துதற்கான தடைகள் ஆனவை: நோய் மற்றும் நோயினால் இயலாதன்மை, இயற்கையான ஒன்று, வறுமை, மற்றும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலை செவிலியர் இந்த தடைகளை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும். உடல்நல மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு போன்ற தேசிய சுகாதார நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க ஊக்குவிக்கலாம்.

உடல்நல ஊட்டம்

தினமும் பயன்படுத்தக்கூடிய உணவுகளைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்: பால் மற்றும் பால் பொருட்களை தினமும் மூன்று தடவை பயன்படுத்தலாம், மாமிசம், இறைச்சி, மீன், வெண்ணெய், முட்டை, பீன்ஸ், தானியங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற உணவுகளில் அதிக புரதசத்து உண்டு. அன்றாட உணவில் மேற்கண்ட இரண்டையும் தினமும் சேர்க்க வேண்டும்.

பழம் : தினமும் குறைந்தது ஒரு துண்டு பழமாவது சாப்பிடவேண்டும்.

காய்கறிகள் : இதில் அதிக அளவு நார்சத்து அடங்கியுள்ளது. குறைந்தது ஒருநாளைக்கு மூன்று தடவையாவது காய்கறிகளை பயன்படுத்தவேண்டும்.

வெண்ணெய் மற்றும் கொழுப்பு பொருட்கள்: இவைகள் சக்தியையும், உணவுக்கு அதிக சுவையையும் கொடுக்கிறது. இவைகளுக்கு அதிக அளவு கலோரி இருப்பதால் உடல் எடைக்கு ஏற்றவகையில் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். சிறிதளவு சூரியகாந்தி எண்ணெயை பயன்படுத்தலாம்.

பிஸ்கெட் மற்றும் இனிப்புகள்:

இவை மகிழ்ச்சிக்காக உண்ணலாம். இவையும் உடல் எடையை அதிகரிக்கும்.

பானங்கள் (Drinking) :

டீ, காபி, பழச்சாறு, பால் மற்றும் தண்ணீர் ஒரு நாளைக்கு 6 - 8 டம்பளர்கள் குடிக்கலாம்.

சத்தான எலும்புகள் (Healthy bones)

கால்சியம் மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுப்பொருட்கள்.

வயதான காலங்களில் கால்சியம், மற்றும் வைட்டமின் D அடங்கிய உணவுப் பொருட்கள் அதிகம் சாப்பிடுவதால் எலும்புகளின் உறுதித்தன்மை நன்றாக இருக்கும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் அடங்கிய உணவுக்கு ஆதாரங்கள்: பால் மற்றும் பால் பொருட்கள், பீன்ஸ், பசலைக்கீரை, கொட்டைகள் மற்றும் உலர்ந்த பழங்கள். வயதானவர்கள் கடைகளில் கிடைக்கும் கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ளலாம். ஆண்களுக்கு 500 மி.கி. மற்றும் பெண்களுக்கு 1000 மி.கிராம் கால்சியமும் தேவை.

நல்ல தூக்கம் (Good sleep)

தினமும் சரியான நேரத்தில் தூங்கி ஒரேநேரத்தில் தினமும் எழுந்திருக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். தினமும் 2-4 மணிநேரம் மிதமான உடல் செயல் தூங்குவதற்கு முன் இருந்தால் நல்ல உறக்கம் வரும். தூங்குவதற்கு முன்னால் காபி அல்லது டீ போன்ற பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏதாவது குடிக்க வேண்டும் என்று விரும்பினால் மிதமான சூடு உள்ள பால் 1 டம்ளர் அருந்தலாம். தூங்கும் அறைகள் இருட்டானதாகவும், அமைதியாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும்.

வாய்பராமரிப்பு

சரியான வாய் பராமரிப்பு நல்ல உடல் நலத்தையும் நல்ல தோற்றத்தையும் கொடுக்கும். சரியான வாய் பராமரிப்புக்கு எவ்வாறு பற்களை துலக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் சரியாக பற்களை சுத்தம் செய்தால், பற்களில் படியும் கறைகளை அகற்ற முடியும், அதிகமானவர்களுக்கு உலர்ந்த வாயினால் அடிக்கடி தாகம் மற்றும் சிறிதளவு நீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றும் உமிழ்நீர் சுரப்பி சரியாக வேலை செய்யாத காரணத்தால் வாய் உலர்ந்து காணப்படும். பல மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், ஒருசில நோய்களின் காரணமாகவும் வாய் உலர்ந்து காணப்படும். வாயின் உலர்ந்த தன்மையின் காரணமாக பற்சிதைவும் மற்றும் ஈறுகளில் நோய் ஏற்படலாம். உலர்தன்மையை குறைக்க அதிக அளவில் நீர் குடிக்க வேண்டும். சர்க்கரை திண்பண்டங்கள், காபின், புகையிலை மற்றும் ஆல்கஹால் கலந்துள்ள பானங்கள் வாயின் உலர்தன்மையை அதிகப்படுத்துவதால் அவைகளை தவிர்க்கலாம்.

பொய்பற்கள் வைத்திருந்தால், அவைகளை சுத்தமானதாகவும், உணவு துகள்கள் அடைக்காதவாறும் பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் நிரந்தரமான கறை, துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்படும். செயற்கைப் பற்களை தினமும் ஒரு முறையாவது நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். தூங்கும்போது செய்ற்கை பற்களை தண்ணீரில் (அ) அதற்குரிய திரவத்தில் போட்டுவைக்கவேண்டும். தினமும் காலையிலும், சாப்பிட்டதற்கு பின்னும், படுக்கைக்கு முன்பும் வாயை உப்புநீரினால் கொப்பளிப்பது சிறந்தது

பாத பராமரிப்பு

பாதத்தில் பிரச்சனைகள் பொதுவாக வயதானவர்களுக்கு காணப்படும். நீண்ட நாள் கடுமையான உழைப்பு, பொருத்தாத காலணிகளை அணிவது, பாதங்களுக்கு குறைவான இரத்த ஓட்டம், சரியாக வெட்டப்படாத விரல் நகங்கள் மற்றும் சில நோய்கள் காரணமாக ஏற்படலாம்.

குளிர்ச்சியான நிலையில் நீண்ட நேரம் இருத்தல், காலணிகளால் பாதத்தில், அழுத்தம், நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது ஒய்வெடுத்தல் மற்றும் புகைபிடித்தல் பாதத்தின் இரத்த ஓட்டத்தை குறையச் செய்யும்.

இதற்கு மாறாக, பாதங்களை உயர்த்தி வைத்தல், நிற்றல் மற்றும் நீட்டுதல், நடத்தல் மற்றும் மற்ற வகையான உடற்பயிற்சிகள் இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும்.

சரியான காலணிகளை அணிவதால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம். கடினமான பரப்பில் நடக்கும்போது பாதங்களுக்கு குறைவான அழுத்தம் கொடுக்கவேண்டும். உயரமான குதிகால் உடைய பாதணிகள் அணிவதை தவிர்க்கவேண்டும். உலர்ந்த தோல் சில நேரங்களில் நமைச்சலையும், எரிச்சலையும் பாதங்களில் உண்டாக்கும். பாதங்களுக்கும், கால்களுக்கும் ஒருசில லோஷன்கள் அல்லது மென்மையான சோப்புகளை பயன்படுத்துவதால் உலர் தன்மையை தடுக்கமுடியும்.

எலும்புப்பகுதிகள் பாதணிகளில் உராய்வதாலும், அழுத்தப்படுவதாலும் ஆணிக்கால் (Corn) மற்றும் மரத்துப்போன உணர்ச்சியற்ற தன்மை ஏற்படும் மேலும் இது வலியைக் கொடுக்கும். அறுவை சிகிச்சையின் மூலமாக இதை குணப்படுத்தலாம்.

மரு (Wart) என்பது தோலின் மேற்பகுதியில் வளரும். வைரஸ்களால் உண்டாகக்கூடியது. அறுவை சிகிச்சை அல்லது வேதிப்பொருட்களை கொண்டு எரித்தல் மூலமாக இதை குணப்படுத்தலாம்.

நீண்ட காலம் நிற்பது, பொருந்தாத காலணிகளை அணிவது மற்றும் அதிக உடல் எடை இவற்றின் விளைவாக பாதத்தில் எலும்பில் தோன்றும் வளர்ச்சியை ஸ்பர் (Spur) என்கிறோம். இதற்கு சிகிச்சை சரியான காலணிகளை அணிதல், குதிகால் பஞ்சுதிண்டுகள், குதிகால் கிண்ணங்கள், மருந்துகள் மற்றும் சில நேரங்களில் அறுவைசிகிச்சையும் தேவைப்படலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் புண்களும், நோய்த்தொற்றும் ஏற்படலாம். பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும், தினமும் காயங்கள் அல்லது நோய்த்தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்து, சமமற்ற அல்லது கூரான பொருட்கள் அல்லது தவறும் காலால் நடப்பதை தவிர்க்கவேண்டும்.

ஞாபகசக்தி பிரச்சனை மற்றும் பக்கவாதம்

ஞாபகசக்தி பிரச்சனை : மறந்த நிலை அல்லது வயதின் காரணமாக ஞாபகசக்தி குறைவு என்பதற்கு டிமென்ஷியா என்று பெயர். வயதினால் ஞாபக சக்தி குறையும். 50 வயதிற்குப் பிறகு, படிப்படியாக மறக்கும் தன்மை மற்றும் மனநிலை பாதிப்பு, முழுவதுமாக அறிவாற்றல் பாதிக்கப்படுதல், Dementia இல்லாமல் இருத்தல், நரம்பியல் (அ) மனநிலை நோய்கள் ஏற்படும்.

டிமென்ஷியா (Dementia)

இதில் பல அறிகுறிகள் ஒன்று சேர்ந்து காணப்படும் அதாவது ஞாபகசக்தி பிரச்சனை பேசும்போது, வார்த்தையில் மற்றும் மொழியில் பிழை மற்றும் பலவகையான குணநல பிரச்சனைகள்.

பல நோய்கள் டிமென்ஸியாவுக்கு காரணமாக அமையலாம். இதில் அல்சீமர் (Atzheimers disease) மற்றும் வாஸ்குலர் டிமென்ஸியா (Vascular Dementiaவும் பொதுவாக காணப்படும். மற்ற காரணங்கள் பார்க்கின்சன் நோய், ஆல்கஹால், தைராய்டு சுரப்பியின் குறைவு மூளை உறையான டியூராவில் இரத்தக்கட்டி மற்றும் தலைக்காயம் ஏற்படுதல். மருத்துவரீதியாக 3 நிலையில் அல்சீமர் நோயும் மற்ற Dementiaவும் காணப்படும். முதல் நிலை மனநிலைக் கோளாறு, இரண்டாம் நிலை பகுதி நரம்பியல் பிரச்சனை, மூன்றாம் நிலை முழுவதுமாக நரம்பு மண்டலம் பாதிக்கப்படுதல்.

டிமென்சியாவில் பொதுவாக ஆயுட்காலம் குறைவு

அறிகுறிகளும் அடையாளங்களும்

ஞாபகசக்தி சம்பந்தமான பிரச்சனை (Cognitive Problems in Dementia)

நடத்தையில், உண்டாகும் பிரச்சனைகள் (Behavioral Problems)

மறதி

அசைதல் (அ) கிளர்ச்சி

கூர்ந்து கவனிப்பதில் பிரச்சினை

தோற்றத்தில் மாற்றம்,

பார்வையில் கடினம்

அசாதாரண உணவு பழக்கம்

குறிப்பிடப்படாத பாதிப்பு

அலைந்து திரிதல்

பேச்சு மற்றும் மொழியில் பிரச்சினை

மனநிலைப்பிரச்சினை

நரம்பியல் குறைபாடுகள்

படபடப்பு, அச்சம், பயம்

மொழியை இழத்தல்

மன அமைதி இல்லாத தன்மை

தன்னையும் மற்றவர்களையும் அடையாளம் காணமுடியாத நிலை

தவறான நம்பிக்கை

வலிப்புகள்

பொய்த்தோற்றம்

தசைவலிமை மற்றும் சமநிலை பிரச்சனை

தவறான கொள்கை, கத்துதல், கோபம், வெறித்தனம்

சிறுநீர், மலம் கழித்தலை கட்டுப்படுத்த முடியாமை

விலக்குவதில் பிரச்சனை

படுத்தபடுக்கையிலேயே இருத்தல்.

அளவுக்கதிகமான ஆசை போன்ற குணநலன்.

Dementia நோய் இரண்டு நிலைகளில் கண்டறியப்படும்

1) வயது முதிர்வதால் உண்டாகும். மன நல குறைபாட்டையும் (Dementia) மற்ற மனநல குறைபாட்டையும் வேறுபடுத்தி கண்டறிய வேண்டும்.

2) ஞாபக சக்தி குறைபாட்டிற்கான காரணங்களை நிர்ணயித்தல் வேண்டும்.

டிமென்சியா நோயாளிகளுக்கு சாதாரணமான நோயின் முதல் கட்டத்தில் திடீர்பாதிப்பு, மற்றும் நரம்பியல் அறிகுறிகள் தென்படாது. (பக்கவாதம், பார்வை பிரச்சனை, உணர்ச்சி இழப்பு)

வாஸ்குலர் டிமென்சியா சாதாரணமாக இரத்தக்குழாய்களில் கொழுப்பு அடைத்து சுருங்குதல், திரும்ப திரும்ப ஏற்படும் வாதம் (அ) சில முக்கிய Stroke மூலம் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும்.

அல்சீமர் நோய்க்கான சிகிச்சை 1) அறிகுறிகளுக்கு ஏற்றவாறு (அ) நோயின் தன்மைக்கு ஏற்றவாறு அமையும்.

டிமென்ஸியா நோயாளியின் கவனிப்பு (Care of the dementia patient)

தீங்குகளிலிருந்து பாதுகாப்பு

முடிந்த அளவுக்கு தினசரி வாழ்க்கையில் சுதந்திர மனப்பான்மை

பேசுவதில் முன்னேற்றம்

கடினமான பழக்கங்களை தடுத்தல் மற்றும் குறைத்தல்

கவனிக்கக்கூடிய குடும்பத்தினரை ஆதரித்தல்

பொதுவாக காணப்படும் நடத்தை கோளாறுகள்

பராமரிப்பை எதிர்த்தல், அலறுதல், திரும்ப, திரும்ப செய்தல், தன்னைத்தானே அடித்துக்கொள்ளுதல், தேவையற்ற பாலின பழக்கங்கள், சீரற்ற முறையில் உடை உடுத்துதல் (அ) உடுத்தாமல் இருத்தல், தேவையற்ற பொருட்களை ஒட்டுதல் மற்றும் அசுத்தங்களை முகர்தல்.

முரட்டுத்தனத்தை குறைக்க பின்பற்றவேண்டியவை: தினசரி வேலைகளை முன்னதாகவே வரையறுத்துக் கொள்ள வேண்டும், தேவையானவற்றை செய்ய நேரத்தை ஒதுக்க வேண்டும், எந்த செயலிலும் ஆச்சரியப்படக்கூடாது. விவாதத்தையும், உடல் கடினத்தையும் தவிர்க்கவேண்டும், தனிப்பட்டவரின் கவனத்தை சிதறடித்தல், வயதானவர்களை பொழுதுபோக்கு செயலில் முற்றிலும் ஈடுபடுத்துதல், நோயாளி மற்றும் நோயாளியின் பார்வையாளரை பெயர் சொல்லி அழைக்க வேண்டும், நேரம் காலம் மற்றும் ஆட்களைப் பற்றி திரும்ப, திரும்ப தெரிவித்தல், டிமென்சியா நோயாளிகளை கவனிக்கும் அவருடைய குடும்ப உறவினர்களுக்கு மனதளவில் பெரிய ஆதரவு அளிக்கவேண்டும்.

பக்கவாதம் (Stroke)

இது பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் நரம்பியல் பிரச்சனை அடிக்கடி மருத்துவ மனையில் நோயாளி அனுமதிக்கவும் படலாம்.

ஸ்ட்ரோக் என்பது மூளையில் செயல் திறனில் பாதிப்பு ஒருபகுதியாகவோ (அ) முழுவதுமாக ஏற்பட்டு 24 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் அறிகுறிகள் காணப்பட்டு, இறப்பு கூட நேரிடலாம்.

அறிகுறிகளும், அடையாளங்களும் (Clinical manifestation)

இது இரத்த குழாயில் அடைப்பாலோ, இரத்த கசிவாலோ இருக்கலாம். மொத்த ஸ்ட்ரோக்களில் 65% அடைப்பினாலே (அ) இரத்த ஓட்ட குறைவினாலோ ஏற்படக் கூடியது. இது இரத்தக்கட்டி அல்லது அதன் துகள்கள் பெரிய (அ) சிறிய இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்வதால் ஏற்படக்கூடியது. மூளை இரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைத்துக் கொள்வதால் இரத்த அடைப்பு Storke பொதுவான அளவில் காணப்படுகிறது. துகள்களால் ஏற்படும் வாதம் (Embolic Storking பொதுவாக இருதய அமைப்பில் பிரச்சனை மற்றும் இருதய துடிப்பு சீராக இல்லாத நோயாளிகள் இந்த நோய்க்கு முக்கிய ஆதாரமாகும்.

இரத்தக்கசிவு ஸ்ட்ரோக்

35% இந்த ஸ்ட்ரோக் இரத்தக் குழாய் மற்றும் அனுரிசம் (Aneurysm) வெடிப்பதால் ஏற்படுகிறது. இந்த நோயாளிகளுக்கு பொதுவாக இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.

நோய் முன் அறிகுறிகள்

* அதிகமான வயது,

* குடும்ப வரலாறு

* உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்து இரத்தத்தில் அதிகமாக இருத்தல்

* புகைபிடித்தல்

* குறைவான உடற்பயிற்சி

* இருதய கோளாறு

* சீரற்ற இருதயதுடிப்பு

* சர்க்கரை வியாதி

* இரத்தம் உறையா சிகிச்சையில் இருப்பவர்கள்.

ஸ்ட்ரோக் - சிகிச்சை

* பிரச்சனைகளை தடுக்க மருத்துவ சிகிச்சை

* தீவிர சிக்கல்களை தடுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல்

* செவிலியர் கவனிப்பு

* ஊட்டச்சத்து

* தோல் பராமரிப்பு, புரையோடுதலை தடுக்கும் நிலை, சீறுநீர்ப்பை மற்றும் குடல் பராமரிப்பு

* புணர்வாழ்வு

* ஊனத்தைக் குறைக்க வழிமுறைகள்

• நோயாளிகளுக்கு ஸ்ட்ரோக் வருவதை தடுத்தல்

* ஆபத்தான காரணிகளை மாற்றுதல், இரத்த அழுத்தம், புகைபிடித்தல், கொழுப்பு ஆகாரம்

* இரத்தத்தட்டுகளுக்கு எதிரான மற்றும் இரத்தம் உறைவதை தடுக்கும் மருந்து சிகிச்சை.

* நோயாளி மற்றும் நோயாளி உறவினர்களுக்கு இதைக் குறித்த போதனை, பயிற்சி மற்றும் ஆலோசனை தேவை. ஸ்ட்ரோக் நோயாளிகள் வசிக்கும் சமுதாயத்தில் சமுதாயத்திற்கும், மற்றும் வீடுகளுக்கும் புணர்வாழ்வு சேவை அவசியம்.

புனர்வாழ்வு (Rehabilitation)

ஸ்ட்ரோக் புனர்வாழ்வில் ஊனம் போன்ற பிரச்சனைகளை தடுப்பதற்காக பல செயல்களும், போதனைகளும் அளிக்கப்படுகின்றன.

இந்த புணர்வாழ்வில் அடிப்படை கொள்கை குறைகளை பதிவு செய்தல் மற்றும் ஊனங்களை பதிவு செய்தல், மேலும் சார்ந்திருக்கும் தன்மையைக் குறைத்தல், தினசரி செயல்களை பயிற்றுவித்தல் மற்றும் முடக்கு தன்மையை தவிர்த்தல்.

பொதுவான இரத்த ஓட்ட பிரச்சனைகள்

உயர் இரத்த அழுத்தம் (Hypertension)

வயதான உயர் அழுத்த நோயாளிகளுக்கு இதய சுருக்க அழுத்தம் மட்டும் அதிகமாக இருக்கும், இது அதிக அளவில் இரத்த ஓட்டத்தை பாதிக்கும். உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுப்பதால் ஸ்ட்ரோக், இருதய பாதிப்பு மற்றும் இருதய கோளாறுகளை தடுக்கலாம். வாழ்க்கை முறையில் மாற்றம், உணவில் உப்பை குறைத்தல் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றிலிருந்து சிகிச்சை தொடங்கவேண்டும்.

முதலில் B - blocker மற்றும் சிறுநீர் பெருக்கிகள் போன்றவை அல்லது இரண்டும் கலந்தும் கொடுக்கலாம். Calcium channel blockers மற்றும் ACE -inhibitors, உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிக பயனுள்ளதாகவும், இருதயத்தை பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்கும்.

மருந்தின் அளவு சிறியவர்களுக்கு பெரியவர்களின் அளவில் பாதி இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு பயன்படுத்தும் உயர் இரத்த அழுத்த மருந்துகளின் பக்கவிளைவுகள் மோசமானதாக இருக்கும். திடீரென்று இரத்த அழுத்தம் குறைந்து போகலாம். மருந்தினால் ஏற்படும் ஹைபோடென்ஷனை தவிர்க்கலாம்.

இருதய நோய் (Ischaemic Heart Disease)

இந்த நோய்க்கான காரணிகள் அனைவருக்கும் ஒரேமாதிரியாக இருக்கும். அவை உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், கொழுப்பு மற்றும் உடல் பருமன் இதனுடன், மாதவிடாய் நின்றுபோன காலங்களில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு குறைந்து போவதாலும், உடலுக்கு போதிய உடற்பயிற்சி இல்லாததும், மற்ற காரணிகளாகும்.

மருத்துவ சிகிச்சை

குறுகிய மற்றும் நீண்ட செயல் தன்மை கொண்ட நைட்ரேட்டுகள் B- அட்ரீனர்ஜிக் பிளாக்கர்கள் மற்றும் கால்சியம் வழி எதிர் மருந்துகள் போன்றவை பயனளிக்கக் கூடியது. இந்த நைட்ரேட்டுகளை ஏற்றுக் கொள்வது அடிக்கடி பிரச்சனையாக இருந்தாலும், இதுவே சிறந்தது.

மருத்துவ சிகிச்சையில் இருந்தும் தொடர்ந்து பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இதயத்தசை இரத்தக் குழலடைப்பு நீக்கம் (Coronary Anigio plasty) ஒரு சிறந்த சிகிக்சைமுறையாகும்.

தீவிர இதயத்தசை நசிவுறல் நோய் (Acute myocardial infarction இந்த நோய் வயதானவர்களுக்கு ஏற்படும் போது வலி இல்லாத காரணத்தால் தவறிப் போகலாம். மூச்சுத்திணறல் மற்றும் சோர்வு போன்ற அடையாளங்கள் தோன்றலாம். வயதானவர்களுக்கு இந்த கட்டிகளை அழிக்கும் சிகிச்சை பல காரணங்களால் தகுதியற்றதாக இருக்கிறது. மேலும் இறப்பும், சிக்கல்களும் அதிகமாக காணப்படுகிறது.

கன்ஜஸ்டிவ் கார்டியாக் ஃபெய்லியர் (Congestive Cardiac Failure)

வயதானவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயத்தமனிநோய் மற்றும் இரத்த ஓட்ட இதய நோய் ஆகியனவாகும்.

இந்தக் காரணங்கள் இல்லாமலும் பல நோயாளிகளுக்கு இந்த நோய் தோன்றுவதற்கான காரணங்கள்: இதயத்தசையின் கன அளவு மற்றும் விறைப்புத்தன்மை கொழுப்பு சத்து படிவதால், நார்த்திசு, கொழுப்புகளின் இணைப்பு மற்றும் அமைலாய்டுகள் படிவதால் ஏற்படுகிறது. இதயத்தசையின் சிஸ்டாலிக் அழுத்தமும், டையஸ்டோலிக் அழுத்தமும், வேலைகளும் அதிகமாவதால், இதயத்தின் டையஸ்டோலிக் வேலை பாதிக்கப்பட்டு இருதயக்கோளாறு உண்டாகிறது.

ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் தகுதியான காரணி இல்லாத காரணங்களால் வயதானவர்களுக்கு இந்த நோயை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும்.

இருதயசெயல் இழப்பிற்கு முக்கிய காரணங்கள் : மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் திசுக்களில் அதிகமாக நீர் தேங்கியிருத்தல். வயதான நோயாளிகள் உடற் பயிற்சி இல்லாமல் அவர்கள் படுக்கையிலேயே இருப்பதால் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்காது. சோர்வு, பலவீனம் மற்றும் தளர்ச்சி போன்றவை இருக்கும். இன்னொருவிதத்தில் நீண்டகால அசையாத தன்மையாலும், புரோட்டீன் சத்து குறைவு மற்றும் இரத்த ஓட்ட குறைவு காரணமாக திசுக்களில் நீர் தேங்கி காணப்படலாம்.

சிகிச்சை :

நீண்டகால இருதய பிரச்சனைக்கு சிறுநீர் பெருக்கிகள் கொடுக்கப்படுகின்றன. முதலில் 20 மி.கி. புருசிமைட் மருந்திலிருந்து தொடங்கி சிகிச்சை பலனில்லை என்றால் 160 மி.கி வரை தொடரலாம். சிறுநீரகங்களின் வேலைகளையும் தாது உப்புக்களின் நிலையையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சனைக்கு டிஜாக்சின் மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரத்தக்குழாய் விரிவாக்கி (Anti-hypertensive) மருந்துகளை வயதான நோயாளிகளுக்கு கொடுக்கலாம்.

இந்த மாதிரி நோயாளிகளுக்கு மருந்துகள் எதிர்ப்பு தன்மை கொண்டதாக மாறலாம். அவை மோசமான உடல் அமைப்பு, NSAID மருந்துகளை பயன்படுத்துதல், கூடவே B - அட்ரீனர்ஜிக் மருந்துகளை பயன்படுத்துதல், கால்சியம் வழி எதிர்ப்பு மருந்துகளை தொடர்ந்து (அ) அடிக்கடி நாடித்துடிப்பு சீராக இல்லாத காரணத்தால், நோய்த்தொற்று மற்றும் சரியற்ற மதிப்பீடுகள் கொடுப்பதால்.

பொதுவான மூச்சுக்குழாய் பிரச்சனைகள் (Common Respiratory problems)

நிமோனியா

இது சுவாசப்பாதையில் பாதிப்பும், நோய்த்தடுப்பில் மாற்றங்களும் ஏற்படுவதால், வயதானவர்களுக்கு நிமோனியா வரலாம்.

மூளை இரத்தக்குழாய் விபத்துக்கள், நரம்பு தசை பாதிப்புகள், டிமென்சியா, இருதய கோளாறு மற்றும் புற்று நோய்கள் போன்ற மோசமான உடல் நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு நிமோனியா ஏற்படலாம்.

நிமோனியாவுக்கு சிகிச்சை :

தீவிர சிகிச்சை பிரிவில் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தலாகும். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் இறந்துவிடலாம்.

அழற்சியின் அறிகுறிகளான காய்ச்சல், விரைவான நாடித்துடிப்பு, வெள்ளை அணுக்களின் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். இதே அறிகுறிகள் நீண்டநாள் மூச்சுப்பாதை அடைப்பு நோயாளிகளுக்கும் ஏற்படலாம். மருத்துவ சிகிச்சையை தொடராத, நோயாளிகளுக்கு இந்த நோயின் தீவிரம் அதிகமாக இருக்கலாம்.

நீண்ட நாள் மருத்துவமனையில் இருக்கும் வயதான நோயாளிகளுக்கு நிமோனியா சளி கரைவது மெதுவாகத்தான் இருக்கும். நிமோனியாவின் குணமடைதல் மற்றும் முன்னேற்றத்ததைக் தடுக்கும் காரணிகள் காய்ச்சல் இல்லாமல் இருத்தல், சிஸ்டாலிக் குறைந்த அழுத்தம், சிறுநீர் மற்றும் மலம் அடக்கமுடியாமை மற்றும் இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக காணப்படுதல்.

வாய்வழியாக மருந்து உட்கொள்ளும் நடமாடும் நோயாளிகளுக்கு Beta-lactam மற்றும் மக்ரோலைடு போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகளை கொடுக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மருந்துகளை ஊசிகள் மூலமாக 48 - 72 மணி நேரத்தில் கொடுத்து சிகிச்சைக்குப் பிறகு திரும்ப கவனிக்க வேண்டும்.

அதிகமான நுண்ணுயிரிகளுக்கு சிகிச்சை 1 - 2 வாரங்கள் தேவை. ஊசி மருந்து மூலம் ஆண்டிபயாடிக் சிகிச்சை 3 - 6 நாட்கள் கொடுக்கப்பட வேண்டும்.

உயிருக்கு ஆபத்தான காரணிகள் இருக்குமானால் அவர்களை உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

ஆபத்தான காரணிகள்: 65 வயதுக்கு மேல் ஒரு சில சார்ந்த நோய்கள் நீண்ட நாள் மூச்சுப்பாதையில் அடைப்பு, சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு, இருதய கோளாறு, கல்லீரல் நோய் மற்றும் டிமென்சியா நாடித் துடிப்பு அதிகமாதல், குறை இரத்த அழுத்தம், காய்ச்சல், சுய நினைவு இழத்தல்.

பிராங்கியல் ஆஸ்த்துமா (Bronchial Asthma) :

இந்த நோய்க்கும் COPD - நோய்க்கும் எப்பொழுதும் குழப்பங்கள் ஏற்படலாம். ஏனென்றால் இரண்டின் அறிகுறிகளும் ஒன்றுபோல் தென்படும்.

வயதான நோயாளிகளுக்கு எப்பொழுதும் விட்டுவிட்டு இருமல், தும்மல் மற்றும் மூச்சுத்திணறல் இருக்கும். இதே அறிகுறிகள் COPD மற்றும் இடது வெண்டிரிக்கிள் கோளாறு போன்ற நோய்களிலும் பொதுவாக தோன்றி குழப்பத்தை ஏற்படுத்தும்.

தீவிர ஆஸ்துமா நோய் சிகிச்சைக்கு செயற்கை முறையில் அதிக அளவு ஆக்சிஜனும், நெபுலைசேஷன் சிகிச்சையும் கொடுக்கப்படவேண்டும். பயன்படுத்தும் மருந்துகள் சால்புட்டமால் மற்றும் இப்ரோவென்ட், அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடை கொண்டுள்ள நோயாளிகளுக்கு எந்திரக் காற்றோட்டம் (mechanical ventilation) தேவை, ஆனால் அதிலிருந்து அவர்கள் வெளிவருவது கடினம்.

நீண்ட நாள் ஆஸ்துமா வியாதியில் இருப்பவர்களுக்கு சால்பூட்டாமால், Steroid மற்றும் ipratropium போன்ற (Inhaler) - (இன்ஹேலர்) மருந்தினால் சிகிச்சையளிக்கலாம். நீண்டநாள் தீவிர ஆஸ்துமா நோயில் இருப்பவர்களுக்கு வாய்வழியாக கார்டிகோஸ்ட்டீராய்டு மருந்துகள் தேவை. அவைகளுக்கு சில பக்கவிளைவுகள் உண்டு.

நீண்ட நாள் மூச்சுக்குழல் அமைப்பு நோய் (COPD)

இந்த நோய்க்கு புகைப்பிடித்தல் ஒரு முக்கிய காரணமாகும், புகைபிடிப்பவர்களுக்கு இருமல் முதலில் ஆரம்பித்து பிறகு மூச்சுக்குழல் சுழற்சி ஏற்பட்டு 60% மூச்சுத்தின்றல் ஏற்படும்.

அறிகுறிகள்:

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக காணப்படுதல், சோர்வு, எடைகுறைதல் மற்றும் தூக்கப்பிரச்சனை போன்றவை பொதுவாக காணப்படும். அறிகுறிகள் அடையாளங்கள் : விரிந்த மார்பு, மூச்சு வாங்குதல், பாலிசைதீமியா மற்றும் நீலம் பரித்தல் மற்றும் உடல் திசுக்களில் வீக்கம், கழுத்து சிரையில் அழுத்தம் அதிகமாக காணப்படக்கூடிய வலது இருதய கோளாறு.

சிகிச்சை

முக்கிய நோக்கம் மூச்சுப்பாதை அடைப்பை சரிசெய்தல். ஸ்ட்டீராய்டு இன்ஹேலர் இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக உள்ள நோயாளிகளுக்கு வீட்டிலேயே நீண்ட நாட்களுக்கு ஒரு நாளைக்கு 16 மணிநேரம் ஆக்சிஜன் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

காற்று மாற்றத்திற்கு உடற்பயிற்சி சுவாச தசை உடற்பயிற்சி, உடல் செயல்களை சரிசெய்தல், சளி மற்றும் நியூமோகாக்கை தடுப்பு மருந்து இந்த நோய்க்கு முக்கியமாக தேவை, மருத்துவமனையில் நோயாளியின் அனுமதி இந்த நோயின் தீவிர நிலைக்கு தேவை, மூச்சுப்பாதையின் மேல் கீழ் பகுதியில் நோய்த்தொற்று ஏற்படுவதால் இது தீவிர நிலையை அடையும். இதனால் ஹைபாக்சியா என்னும் நிலை ஏற்பட்டு இறப்பு நேரிடலாம். ஆண்டிபயாடிக்குகள், மூச்சுக்குழல் விரிவாக்கிகள், முகமூடி மூலம் ஆக்சிஜன் போன்ற சிகிச்சை தேவைப்படும். ஸ்ட்டீராய்டு மருந்துகளுக்கு எந்த பங்கும் இல்லை. இந்த சிகிச்சைகளுக்கு சரியாகாத நோயாளிகளுக்கு தீவிர ஹைபாக்சியா உண்டாகும். அவர்களுக்கு எந்திரகாற்றோட்டம் (Mechanical Ventilation) தேவை. இதற்கு வயது காரணமல்ல.

செரிப்புப்பாதையில் காணப்படும் பொதுவான பிரச்சனைகள் (Common Disorders of the GI Tract)

வயதான காலங்களில் மேல் செரிப்புப்பாதையில் காணப்படும் பொதுவான பிரச்சனை Hiatus Hernia மற்றும் Gastro - esophageal reflex. இந்தத் தன்மை 50 வயதுக்கு மேல் அதிகமாகும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பாக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவர். இந்த நிலை பெண்களுக்கு அதிகமாக காணப்படும். நெஞ்சு எரிச்சல், விழுங்குவதில் சிரமம், மார்பெழும்பின் கீழ்பகுதியில் வலி, வயிற்று உப்புசம், உணவு மேலே வருதல், மற்றும் வாந்தி. கீழ்கண்டவைகளை சரிசெய்ய வேண்டும். உடல் பருமனானவர்கள் எடையை குறைக்க வேண்டும். சிறிய அளவிலான ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும். காபி, தேநீர் மற்றும் கோலா போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். கரையாத கொழுப்பின் அளவை குறைக்க வேண்டும் (Saturated fat), 2-3 தலையணைகளை பயன்படுத்தி பாதி உயர்த்திய நிலையில் உறங்குதல் எரிச்சலை தடுக்க அல்லது குறைக்க அமில நீக்கிகளை எடுக்கலாம். ஏடு நீக்கிய பால் பயனுள்ளதாக இருக்கும்.

செரிப்புப்பாதையில் புற்றுநோய்

வயதான காலங்களில் புற்றுநோய் அதிகமாக காணப்படும். பெருங்குடல் புற்றுநோய் ஆண்களுக்கு பொதுவாக அதிக அளவில் காணப்படும்.

மலம் கழித்தலில் மாற்றம், புதியதாக மலச்சிக்கல் அல்லது பேதி, மலத்தின் அளவு குறைதல், மலத்தில் இரத்தம் காணப்படுதல், பசியில்லாமல் இருத்தல், தசை கரைதல், எடை குறைதல், சோர்வு, முதுகுக்கு பரவக்கூடிய வலி போன்ற அடையாளங்கள் காணப்படும்.

புற்று நோயை கண்டுபிடிக்க மலக்குடல் ஆசனவாய் பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக வயதானவர்களுக்கு செய்யப்படும் உடல் பரிசோதனையில் டிஜிட்டல் ஆசனவாய் பரிசோதனையும், மலத்தில் இரத்த பரிசோதனையும் செய்யப்பட வேண்டும்.

வயதான காலங்களில் வாய் உணவுக்குழல் மற்றும் வயிற்று புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. புகைபிடிப்பவர்களுக்கும், புகையிலை புகைப்பவர்களுக்கும் ஆல்கஹால் மற்றும் சூடான பானங்களை தொடர்ந்து குடிப்பவர்களுக்கும் வாயில் புண் மற்றும் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.

மலச்சிக்கல்

இளைஞர்களைவிட வயதானவர்களுக்கு இந்தப்பிரச்சனை அதிகமாக காணப்படும்.

குறைவாக நார்சத்துப் பொருட்கள் மற்றும் குறைவாக தண்ணீர் குடித்தல் போன்றவை மலச்சிக்கலுக்கு முக்கிய காரணங்களாகும்.

மருந்துகள் :

சீறுநீர் பெருக்கிகள், ஒபியாய்டுகள் மற்றும் மன அழுத்த நீக்கிகள்.

மனநல பிரச்சனை: மன அழுத்தம் மற்றும் டிமென்சியா, மலமிளக்கிகளை பயன்படுத்துதல். குறைவாக நார்சத்து உணவை உண்ணுதல், நீண்டநாள் இயலாதத் தன்மையில் இருத்தல், உடற்பயிற்சி இல்லாமை நீண்டகால மலச்சிக்கலினால் ஏற்படும் கோளாறுகள் மலம் அடைத்து கொள்ளுதல், பெருங்குடல் வீங்குதல், இருதய நோய்த்தொற்று மற்றும் சிறுநீர் அடக்கமுடியாத நிலை மற்றும் குழப்பமான நிலை. வெளியேறாத மலம் மனித உதவியால் வெளியே எடுக்கப்படவேண்டும். அது துர்நாற்றம் மற்றும் தொல்லை கொடுக்கக்கூடியதாக இருக்கும். இதனால் ஆசனவாயில் இரத்தக்கசிவு ஏற்படலாம். பொதுவாக வயதான காலங்களில் மலமிளக்கிகளையும், பேதி மருந்துகளையும் அதிகம் பயன்படுத்துவார்கள். வயதான காலங்களில் சரியான வாழ்க்கை முறையும், மலமிளக்கிகளும் மலச்சிக்கலை நிவர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.

நாளமில்லா சுரப்பிகளில் உண்டாகும் நோய்கள்

சர்க்கரை வியாதி (Diabetes mellitus)

வயதான சர்க்கரை வியாதி நோயாளிகள் இன்சுலினை சாராதவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தற்போது இன்சுலின் சிகிச்சையை சார்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

வெறும் வயிற்றில் சிரை இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 120mg% அல்லது அதற்கு மேல், மற்றும் 75 mgm குளுகோஸ் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் 180 மி.கி.% அல்லது அதற்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என உறுதியளிக்கப்படுகிறது.

மற்றவர்களை விட வயதான சர்க்கரைவியாதி நோயாளிகளுக்கு இரத்த ஒட்ட மற்றும் நரம்பு பிரச்சனை 2 - 3 மடங்கு அதிகமாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் டிமென்சியா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வயதான சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையின் நோக்கங்கள் : அதிக சர்க்கரையின் அடையாளங்களை நிவர்த்தி செய்தல், எடை குறைதல் அல்லது அதிகரித்தல் போன்றவற்றை சரிசெய்தல், உடலில் சர்க்கரை குறைதலை தடுத்தல் மற்றும் மருந்தின் விளைவுகளை தடுத்தல்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்களை மதிப்பிடுதல். பரிசோதித்து சிக்கல்களை தடுத்தல். உடல்நலமின்மையை குறைத்து, நலமுள்ள தரமான வாழ்க்கையை மேம்படுத்துதல்.

சர்க்கரை நோய் சிகிச்சையின் போது ஏற்படும் மற்ற பொதுவான பிரச்சனைகள்: சாப்பிடுவதில் ஒழுங்கற்ற நிலை (குழப்பம், சாப்பிட பிடிக்காத மனநிலை மற்றும் உடல் நலக்குறைவு, மீண்டும் மீண்டும் ஏற்படும் நோய்த்தொற்று மேல் மற்றும் கீழ் மூச்சுப்பாதை மற்றும் தோல்) காலில் புண், படுக்கைப்புண், ஹைபோகிளை சீமியாவின் தீவிரநிலை அதிகரித்தல், மற்ற பொதுவான பிரச்சனைகள், பேசுவதில் சிரமம்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் முறை

* போதுமான (அ) சரியான உணவு, உடற்பயிற்சி

* இன்சுலினை சாராதவர்களுக்கு வாய்வழியாக மருந்துகள் மற்றும் இன்சுலினை சார்ந்தவர்களுக்கு இன்சுலின் கொடுத்தல்

* நோயாளி வாய்வழி மருந்தில் இருந்தாலும் நோய்த்தொற்று, ஆசிடோஸிஸ். ஆஸ்மோலர் நிலை அதிகரித்தல், அறுவை சிகிச்சை மற்றும் டையபடிக் நியூரோபதி போன்ற நிலைகள் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு இன்சுலின் கொடுக்கப்படுகிறது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு செவிலியர்கள் கீழ்கண்ட சுகாதார போதனைகளை அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உணவு, இன்சுலின் ஊசி, ஹைபோசிளை சீமியாவின் அறிகுறிகள், பாத பராமரிப்பு, கண் பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தம் கணக்கிடுதல்.

எலும்பு மூட்டுகளில் வேக்காடு (Osteoarthritis)

இது மூட்டுகளில் சிதைவுகளினால் ஏற்படக்கூடிய நோய் வயதான மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் பாதிக்கப்படுவதால் சிறிது சிறிதாக தீவிரமடையும் ஒரு நோய் ஆகும். தேய்ந்து போன எலும்பு மூட்டுக் குருத்தெலும்புகள் முற்றிலுமாக அரிக்கப்படுகின்றன. இதனால் எலும்புகளின் முனைப்பகுதிகள் மூட்டு ஒன்றையொன்று உரசிக் கொள்கின்றன உடனே வலியும் இயலாத்தன்மையும் ஏற்படுகிறது.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பொதுவாக எடையை தாங்கக்கூடிய மூட்டுகளான கால் மூட்டு, இடுப்பு, முதுகின் கீழ்பகுதி, கழுத்து முள்ளெலும்பு மற்றும் விரல் எலும்புகள், நோயின் தீவிர நிலை படிப்படியாக இருக்கும். சிதைவுறக்கூடிய நோயாக இருந்தாலும், இதன் சிகிச்சை மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. வலி நீக்கிகள் மற்றும் பிசியோதெரபி மூலம் அடையாளங்களை நிவர்த்தி செய்தல், இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டுகளை மாற்றியமைத்தல். ஆனால் இந்த சிகிச்சையை பலராலும் அதிக செலவின் காரணமாக செய்துகொள்ள முடியாது.

ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis)

இந்த பொதுவான நோயில் எலும்பின் அடர்த்திதன்மை மிகவும் குறைந்து பொதுவான வளர்சிதை மாற்றங்களால் எலும்பு முறிவு வாய்ப்பு அதிகம். ஆபத்தான காரணிகள்: வயதானவர்கள், பரம்பரை மற்றும் ஈஸ்ட்ரோஜன் நிலை.

மற்றகாரணிகள்:

* குறைபருவம் அல்லது அறுவைசிகிச்சை முறையில் மாதவிலக்கு நின்றுபோதல்.

* அதிகமாக புகையிலை மற்றும் காபின் பயன்படுத்துதல்.

* மது அருந்துதல்.

* உணவின் குறைந்த அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் D அடங்கிய உணவுப் பொருட்களை உண்ணுதல்

* சுறுசுறுப்பில்லாத வாழ்க்கை முறை.

* மருந்துகள், கார்டிகோஸ்டிராய்டுகள் மற்றும் வலிப்பு நீக்கி மருந்துகள்.

* பொதுவாக மணிக்கட்டு, இடுப்பு மற்றும் முதுகெலும்புத் தொடரில் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். ஒரு குறிப்பிட்ட ஒரு முதுகெலும்பு சிதைந்து போவது கடுமையான வலியைக் கொடுக்கும். இதனுடன் அடிக்கடி வலி, எண்ணற்ற நொறுங்கி முறிவுகள் முடிவில் உயரம் குறைந்து கைபோஸிஸ் Kyphosis நிலை ஏற்பட்டு இதனால் இருதயம் மற்றும் மூச்சுக் குழல்களில் சிக்கல்கள் ஏற்படும். முற்றிலும் உடற்பயிற்சி செய்யமுடியாத இயலாத் தன்மை ஏற்படும்.

ஆஸ்டியோபோரோஸிஸ் சிகிச்சை

பல மருந்துகள் இந்த நோயின் சிகிச்சைக்கும், தடுப்புக்கும் பயன்படுகிறது. அவைகள் ஈஸ்ட்ரோஜன், பிஸ்போனேட்டுகள், கால்சியம், கால்சிடோனின், பாராதைராய்டு ஹார்மோன், வைட்டமின் D மற்றும் அனபாலிக் ஸ்ட்டீராய்டுகள்.

ஆஸ்டியோபோரோஸின் முதன்மையான தடுப்புகள்

* அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல்.

* புகையிலை, ஆல்கஹால் அதிக அளவில் டீ மற்றும் காபி போன்றவற்றை தடுத்தல்.

* விரைவான உடற்பயிற்சிகள்.

* மாதவிலக்கு நின்று போனவர்களுக்கு ஹார்மோன் சிகிச்சையளித்தல்.

புரோஸ்டேட் சுரப்பி வீங்குதல் (Benign Prostatie hypertropty)

புரோஸ்டேட் சுரப்பி வீங்கி காணப்படுவதால் சிறுநீர்க்குழாயின் நுனிப்பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரக அடைப்பு உண்டாகிறது. ஆசனவாய் பரிசோதனை மற்றும் சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் ஸ்கேன் மூலம் நோய் உறுதி செய்யப்படுகிறது. சிகிச்சையை முடிவு செய்வதற்கு யூரோடைனமிக் (Urodynamic) தேவைப்படுகிறது. முதலில் வயிற்றிலும், பிறகு சிறுநீரகக் குழாய் வழியாக மட்டும் இந்த அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. மருத்துவ சிகிச்சையில் சில குறிப்பிட்ட நீண்டகால அட்ரீனர்ஜிக் அண்டகோனிஸ்டுகளும் மற்றும் ரிடக்டேஸ் இன்ஹிபிட்டர் reductase inhibitors களும் பயன்படுத்தப்படுகிறது. மற்றும் சிறந்த முடிவையும் கொடுக்கிறது.

சிறுநீர் அடக்கமுடியாத நிலை (Urinary in continence)

இது தீவிரநிலையாகவோ, நாட்பட்ட நிலையாகவோ இருக்கலாம்.

தீவிரம் அல்லது திடீரென்று கட்டுப்படுத்த முடியாக நிலை, சிறுநீர் பாதை தொற்று, சிசுத்தாரை தொற்று, மலம் அடைத்து காணப்படுதல், மருந்துகளின் பயன்பாடு, குழப்பம் மற்றும் பொதுவாக தொற்றுகள் காரணமாக ஏற்படலாம். நோய்க்கான காரணத்திற்கு சிகிச்சையளித்தால் நோய் நீங்கிவிடும். நீண்ட காலம் சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத நிலை கீழ்கண்ட காரணங்களால் ஏற்படும்:

* அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை

• இருமுதல், தும்முதல், சிரித்தல் அல்லது மற்ற உடல் செயல்களில் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து சிறுநீர் வெளியேறும்.

* சிறுநீர் இல்லாமலே சிறுநீரை வெளியேற்ற அடிக்கடி முயலுதல்.

* கட்டுப்படுத்த முடியாத நிலை அதிகரித்தல் : சிறுநீர் இல்லாமலே சிறுநீர்பை உப்புசமடைந்து காணப்படுதல். இந்த மாதிரி அடையாளங்கள் பழக்கவழக்க முறையிலும் சுற்று சுழலுக்கேற்றவாறும் குறைக்கலாம்.

* இடுப்புதசைகளை பலப்படுத்துவதன் மூலம் அழுத்தத்தால் ஏற்படும் கட்டுப்பாடற்ற தன்மையை சமாளிக்கலாம்.

• கட்டுப்படுத்த முடியாமையைக்கு Anti-cholinergic மருந்துகள் மற்றும் இடுப்புத்தசை உடற்பயிற்சி மூலம் சிகிச்சையளிக்கலாம்.

• சிறுநீர்ப்பை நிறைந்து ஏற்படும் பிரச்சனைக்கு மூலநோயைக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

* நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனையால் சிறுநீர்ப்பை பாதிக்கப்படும்போது, குழாய் மூலம் சிறுநீரை எடுக்கவேண்டும்.

நோயாளிகளுக்கு பல உடல்நலப் போதனைகள் தேவை

அவை: சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கட்டாயநிலை இல்லையென்றால் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கவேண்டும்.

* பகல் நேரத்தில் திரவ உணவு உட்கொள்ளுதலை கட்டுப்படுத்துதல்

* கசிவுகள் இருக்கும்போது பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளுதல்

* தளர்ச்சியான ஆடைகளை அணிவதால் உடைமாற்றம் சுலபமாக இருக்கும்

* சுறுசுறுப்பான உடற்பயிற்சியை தவிர்க்கலாம்

* எரிச்சலூட்டக்கூடிய உணவுகளை கட்டுப்படுத்துதல்

* ஓய்வுபற்றி பயிற்சியளித்தல். சுத்தத்தையும் தோல் பராமரிப்பையும் கையாளுதல்

* சிறுநீர் பாதை தொற்றை பரிசோதித்தல்

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

3.15789473684
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top