பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / முதியோர் உடல்நலம் / வயதான ஊனமுற்றோர்களுக்கான தடை இல்லாத சுற்றுச்சூழல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வயதான ஊனமுற்றோர்களுக்கான தடை இல்லாத சுற்றுச்சூழல்

வயதான ஊனமுற்றோர்களுக்கான தடை இல்லாத சுற்றுச்சூழல் அமைப்பு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ அறிவியலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியோடு, தனிப்பட்ட நபரின் வாழ்க்கை காலமும் அதிகரித்துள்ளது. ஒருவர் வெகு சாதாரணமாக, குறைந்தது 80 வருட காலம் வாழ்கிறார். தனது பதவிக்காலம் முடிந்து அதாவது, 60 வயதிலிருந்து சுமார் 20 வருட காலம் முதிய வயதின் உடல் ரீதியான, மனரீதியான அனைத்துப் பிரச்சினைகளுடனும் வாழ்ந்து வருகிறார். இந்தக் கால கட்டத்தில் ஒருவர், ஆரோக்கியமாகவும், சுயசார்புடனும் வாழ முடிந்தால், அவருடைய முதுமைப் பருவத்தை கவுரவமாகக் கழிக்க முடியும். தாங்களாகவே தங்களைக் கவனித்துக் கொள்ளும் வகையில், காப்பகங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் தனித்து விடப்படாமல் இருக்க, தடைகளற்ற, அருமையான, மிகவும் கவனமாக சிந்தித்து, உருவாக்கப்பட்ட, கட்டப்பட்ட மற்றும் கட்டப்படாத தங்கள் வீட்டுச் சூழலில், அவர்கள் சவுகரியமாக உணர்வார்கள். கட்டுமானச் சூழலில் சேர்க்கப்படக்கூடிய இப்படிப்பட்ட ஒருசில சவுகரியங்கள் இங்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நுழைவாயில்

  • எப்போதாவது கீழே விழுவதாலோ அல்லது உடல்நலக் குறைவினாலோ, தற்காலிக அல்லது நிரந்தரமான உடல் குறைபாடுகள் உங்களுக்கு ஏற்படக்கூடும்.
  • இதில் வாக்கர் மூலமாகவோ சக்கர நாற்காலி மூலமாகவோ சென்று வர அடுத்தவர் உதவியை நாட வேண்டியிருக்கும். எனவே, நடைபாதை முதியோர் சுலமாக சென்று வர சவுகரியமான விதத்தில் ஒரேயடியாக இல்லாமல் படிப்படியான சரிவுடையதாக இருக்க வேண்டும்.

படிக்கட்டுகள்

முடிந்த வரையில் நீங்கள் தரை தளத்தில் வசிக்க வேண்டும். குடும்பத்தின் இளையவர்கள் மேல் மாடிகளில் வசிக்கலாம். நீங்கள் மேல் தளங்களில் வசிப்பவராக இருந்தால், மாடிப்படிகளில் மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் ஏறி, இறங்க வேண்டும். நீங்கள் ஆரோக்கியமானவராக இருந்தால், உண்மையில் இது உங்களுக்கு நல்ல ஒரு உடற்பயிற்சி. படிகளில் ஏறும் போது எப்போதும் கண்டிப்பாகப் படிகளில் உள்ள கைப்பிடிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். படிகள் வழுக்கும் தன்மையில்லாத பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்க வேண்டும்.

படிக்கட்டுகளின் கால் வைக்கும் இடம் பொதுவாக கட்டப் படும் அளவில் இருக்க வேண்டும். மேலெழும்பிய பாதிப் படிகள், திருப்பங்களில் முக்கோண வடிவப் படிக்கட்டுகள் ஆகியவை கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. சரியான இடைவெளிகளில் ஏறி இறங்கும் சமயங்களில் நடுவில் அவ்வப் போது ஓய்வெடுக்க வசதியாக சமதளங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த இடங்களில் விழுவதைத் தவிர்ப்பதற்காக சீரான வெளிச்சம் தரும் விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். முதல் மற்றும் கடைசி படிகளில் ஏற்ற இறக்கங்களிலும், ஒவ்வொரு படியில் ஏற்றத்திலும், அந்தப் படியின் நிறத்துக்கு நேரெதிரான வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தத் தயக்கமும் இல்லாமல் நீங்கள் அவற்றில் ஏறி, இறங்க வசதியாக இருக்கும்.

நடைபாதைகள்

வீட்டின் கட்டுமானச் சூழலில், அதன் வாசலில், வராந்தாக்களில், பாதையில், நடையில், தோட்டங்களில் பூச்சாடிகள், குப்பைத் தொட்டிகள் போன்றவை வைக்கப்பட்டிருக்கக்கூடாது. நுழைவாயில் பாதையில் பைப்புகள் நீட்டிக் கொண்டிருக்கக் கூடாது. இவையனைத்தையும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சுவற்றோடு பொருத்தி வைக்க வேண்டும். இப்படிப்பட்ட முன்னெச்செரிக்கைகள் உங்கள் சொந்த வீட்டில் நீங்கள் சுதந்தரமாக நடமாடவும், உங்கள் அன்றாட நடவடிக்கைகளை எளிதாக செய்யவும் உதவுகின்றன. உண்மையில், உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இவை உதவுகின்றன.

கழிவறைகள்

தரையில் நீர் கொட்டுவதால், அது வழுக்கும் தன்மையுடையதாக இருக்கும். இப்படி இருப்பதால், பெரும்பாலும் முதியோர் அதிகமாக விழுவது கழிவறைகளில் தான். தரைகள் வழுக்காத டைல்கள் அல்லது ரப்பர் விரிப்புகளைக் கொண்டு அமைக்கப்படலாம். ஒவ்வொரு முறையும் உபயோகித்த பின் தரைகள் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரப்பர் அடிப்பாகங்களைக் கொண்ட சவுகரியமான காலணிகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இவை வழுக்கும் தன்மையைக் குறைக்கும். கழிவறைகளில் 50 மி.மீ. விட்டம் கொண்ட இரும்பு கைப்பிடிகள் அமைக்கப்படலாம்.

இவை நீங்கள் ஆரோக்கிய குறைவோடு இருந்தாலும் அல்லது மிகவும் வயதானதால் பலகீனமாக இருந்தாலும் அதிக தன்னம்பிக்கையோடு கழிவறையைப் பயன்படுத்த உதவும். பின்னாளில் முதுமையில் பழகத் தொடங்குவதை விட இளம் வயதிலேயே வெஸ்டன் டாய்லெட்டைப் பயன்படுத்தப் பழகிக் கொள்வது மிகவும் பாதுகாப்பானது. மூட்டு வலி உடைய உங்களில் பெரும்பாலானவர்களுக்கும் கூட இந்த வகை டாய்லெட்டுகள் மிகவும் சவுகரியமாக இருக்கும். இவற்றில் பொருத்தப்பட்டுள்ள லீவர்கள் ஆர்த்தடீஸ் பாதிக்கப்பட்டுள்ள விரல்கள், மணிக்கட்டுகள் உடையவர்களுக்கும் சவுகரியமான விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மேஜை, நாற்காலி

மேஜை நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும் முறை, மிகவும் எளிதாகவும் இட நெருக்கடி இல்லாமலும் இருக்க வேண்டும். கேட்கும் திறன் இழப்பு அல்லது ஆரோக்கிய குறைபாடு இவற்றினால் உங்களுக்கு தடுமாற்றம் ஏற்படும் சமயங்களில் கூட வீட்டிற்குள் சுலபமாக நடமாடுவதற்கு சவுகரியமாக இருக்கும். இது அன்றாட வேலைகளை நீங்களாகவே செய்து கொள்ள ஊக்கப்படுத்துவதோடு, உங்களைத் தன்னம்பிக்கையுடன் இருக்க வைக்கிறது. இப்படி இல்லா விட்டால், விழுந்து விடுவோம் என்ற பயத்தில் நடமாடவே தயங்குவீர்கள்.

மேஜை, நாற்காலிகள் சவுகரியமானவையாகவும் இருக்க வேண்டும். இருக்கைகள் மிகவும் கீழிறங்கி இருக்கக் கூடாது. அப்படியிருந்தால், எப்போதெல்லாம் எழுந்து செல்ல வேண்டுமோ அப்போதெல்லாம் உட்கார்ந்திருக்கும் நிலையிலிருந்து உங்கள் உடலை மேலெழுப்பி எழுந்து நிற்பது மிகவும் கடினமாக இருக்கும்.

வெளிச்சம்

உங்களில் பெரும்பாலோர் கண் பார்வை மங்கி வரும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் கண்களில் இருக்கும் நரம்புகள் பலகீனமடைந்து விடுவதால், இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கும் வெளிச்சத்திலிருந்து இருட்டிற்கும் மாறுவது கஷ்டமாக இருக்கும். அதிக பிரகாசமான சூரிய வெளிச்சத்தையோ அல்லது செயற்கை வெளிச்சத்தையோ பார்ப்பதைக் கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். ஜன்னல்களுக்கு வெளியில் உள்ள இடங்களில் பல்புகளைப் பொருத்தி நேரெதிராக உள்ள உட்புற வெளிச்சத்தையும், இரவில் வெளியே இருக்கும் அதிக இருளையும் தவிர்க்கலாம்.

ஸ்விட்ச் போர்டுகள் நல்ல முறையில் அமைக்கப்பட வேண்டும். முடிந்த வரையில் சுவர் நிறத்திற்கு நேரெதிரான வண்ணத்தில் ஸ்விட்சுகள் இருந்தால், சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். வீட்டிற்குள் இருக்கும் வராந்தாக்கள் மற்றும் வெளியில் திறந்த வெளியில் இருக்கும் நடைபாதைகள் ஆகியவை அல்லது அவற்றின் ஓரங்கள் நேரெதிரான நிறங்களில் இருந்தால், சுலபமாகவும் தன்னம்பிக்கையுடனும் நடமாட முடியும்.

செவித்திறன் பாதிப்புக்கான தீர்வு

வயதாக, ஆக உங்களில் பெரும்பாலோருக்கு செவித்திறன் குறைந்து வரும். மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்பது மிகவும் கடினமாக இருக்கும். வீட்டிலுள்ள அறைகளில் எளிமையான சாதனங்களை பொருத்தி கட்டுவதன் மூலம் ஒலியைத் தெளிவாகக் கேட்கச் செய்யலாம். ஒலியை உள்வாங்கிக் கொள்ளும் சாதனங்களான, மேஜை, நாற்காலி சுவர்கள், தடிமனான திரைச் சீலைகள், கம்பளங்கள், தரை விரிப்புகள், ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். இவை எதிரொலியைக் கட்டுப்படுத்துகின்றன. எனவே, உரையாடல்கள் தெளிவாக ஒலிக்கின்றன.

பராமரிப்பு

உங்களுடைய நோய்த் தொற்று எதிர்ப்புத் தன்மை குறைந்து விடுவதால், கட்டுமான சூழல், முடிந்த வரை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். உட்புறச் சுவர்கள் வழவழப்பாகவும், சமமாகவும் இருக்க வேண்டும்.

அழகுணர்ச்சி

உங்களில் பெரும்பாலானவர்கள் குடும்பச் சூழலினாலும், உடல்நலக் குறைவினாலும் ஏற்படும் தனிமை, மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறீர்கள். இவற்றை, அழகுணர்வுடன் கட்டப்பட்டு, நன்கு பராமரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பு உங்களுக்கு உற்சாகமூட்டும். ஒரு ஜன்னல் அல்லது பால்கனிக்கு வெளியே நீங்கள் காணும் காட்சிகளில் உங்களை நீங்களே மறக்கலாம். அதே போல, உங்கள் பேரப் பிள்ளைகள் தத்தம் அன்றாட செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்கு இடையூறில்லாத, அதே சமயம் நடக்கும் அனைத்தையும் பார்க்க முடிவது போல உள்ள ஒரு மூலையில் அமர்ந்தவாறு கவனித்து, ஆனந்தப்படலாம்.

பத்திரமும் பாதுகாப்பும்

சமூகத்தின் விலை மதிப்பில்லாத உறுப்பினர்களான உங்களுக்கு திருட்டு, கொலை ஆகியவற்றிலிருந்து சிறந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். வீட்டிற்கு வருவோர், போவோரை கவனித்து, யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அவர்களின் உண்மையான அடையாளத்தை சரிபார்க்க வாய்ப்பே இல்லை என்பதால், விற்பனைப் பிரதிநிதிகளை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தலாம். சேவைகளுக்காக வருபவர்களின் அடையாள அட்டைகளை சரிபார்த்த பின் அவர்களை உள்ளே அனுமதிக்கலாம். நுழைவாயில் கதவில் வெளியே உள்ளவர்களைப் பார்க்க வசதியாக ஓட்டை, தாழ்ப்பாளில் பொருத்தப்படும் சங்கிலி, உயர் தரம் வாய்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை உள்ளே வீட்டிற்குள் யார் நுழைய வேண்டும் என்பதை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். முதியோர் இருக்கும் அறையிலும் கழிவறைகளிலும் ஒரே ஒரு அவசர கால அழைப்பு மணி வசதியாவது இருக்க வேண்டும். (டெலிஃபோன், பக்கத்து வீட்டாரை அழைக்கும் அலாரம், இன்டர்காம் ஸ்விட்ச் போன்றவை)

முதுமையடைவதால், ஏற்படும், நுகரும் தன்மை குறைபாடு உங்களில் பெரும்பாலோருக்கு ஏற்படும். நல்ல காற்றோட்டமான வீடுகள் இருப்பது மிகவும் அவசியம். தீ விபத்தை ஏற்படுத்தக் கூடிய மின்சார ஷாட் சர்க்யூட் ஏற்படாமல் இருக்க, போதுமான பவர் உள்ள நல்ல தரமான ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத பொருள்களைக் கொண்டு வீட்டின் உட்புறம் கட்டப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால், அங்கிருந்து வெளியேற உங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும். தீப்பிடிக்கும் போது, நச்சுத் தன்மை வாய்ந்த புகையை வெளிப்படுத்தும் வர்ணங்கள், பொருள்கள் ஆகியவற்றை வீட்டின் உட்புறம் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

பெரும்பாலான முதியவர்களுக்கு அதிகமாக மறதி ஏற்படுகிறது. தனியாக வாழும் முதியோர் தாம் எல்லா கதவுகளையும், ஜன்னல்களையும், அலமாரிகளையும் தூங்கப்போகும் முன்பு அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லும் சமயங்களில் முடிவிட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ள ஒரு பட்டியல் தயாரித்து வைத்துக்கொண்டு அவற்றை சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆதாரம் : ஹெல்ப்ஏஜ் இந்தியா அறக்கட்டளை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top