பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / அறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள்

அறுவை சிகிட்சைக்கான தொற்று நீக்கு முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்த முறை எல்லாப் பொருள்களையும் சம்மந்தப்பட்ட இடங்களையும் “நோய் தொற்று நீக்கி’ எந்த நுண்ணுயிர் கிருமிகளும் இல்லாமல் வைத்திருப்பதாகும். அறுவை சிகிட்சைக்குரிய தொற்று நீக்கு முறை அறுவை சிகிச்சை அறைகள், பிரசவ அறை, அறுவையின் பின் கட்டுக் கட்டுதல் இன்னும் உடம்பின் உள்ளாக செயல்படும் பல செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

செவிலியர்கள் அறுவை முறைக்கான தொற்று நீக்குதல் செய்வது பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கொள்கைகளை எப்போதும் கடைப்பிடிப்பவராகவும் நம்பத் தகுந்தவராகவும் இருக்கவேண்டும். அறுவை சிகிட்சைக்குரிய கைகளைக் கழுவும் முறையின் நுட்பம், நோய்த்தொற்று நீக்கும் முறையும், நோய்த்தொற்று நீக்கிய கருவிகளை கையாளும் முறையும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

அறுவை சிகிட்சை சார்ந்த செயல்களின் போது முகத்திரை, கையுறைகள், அங்கிகள் பயன்படுத்துதல்

முகத்திரை

அறுவை சிகிட்சை சார்ந்த செயல்களின் போது முகத்திரை அணிவதன் நோக்கம் : செவிலியர்கள் சுவாசப் பாதையிலிருந்து எந்தக் கிருமியும் அறுவைப் புண்ணின் மேல் அல்லது நோய்த் தொற்று நீக்கிய பொருட்களின் மேல்படாமல் தடுப்பதே ஆகும். முகத்திரை அதை அணிபவரின் மூக்கு வாய் ஆகிய இரண்டையும் நன்றாக மூடி இருக்க வேண்டும். நீண்ட சதுரவடிவில் அல்லது மூக்குக்குப் பை போன்ற வடிவில் உள்ளதாகவும் இரண்டு அல்லது மூனறு அடுக்குகள் கொண்டதாகவும் தலையின் பின்புறம் இழுத்துக் கட்ட நாடாக்கள் கொண்டதாகவும் அது இருக்கும். அது அணியப்பட்ட பிறகு அதன் முகப் பகுதி கையால் தொடப்படக்கூடாது. வேர்வையால் அல்லது தும்மலால் நனைந்துவிட்டால் அது மாற்றப்படவேண்டும். அறுவை சிகிட்சையின் போது அதிகமாகப் பேசக் கூடாது. ஒவ்வொரு செயல் முறையின் போதும் புதிய முகத்திரை அணிய வேண்டும். முகத்திரை கழுத்தில் தொங்கவிடப்படவோ, மடித்துப் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளவோ கூடாது. பயன்படுத்திய பிறகு, முகமூடியைக் கழற்றி அதன் நாடாவைப் பிடித்து உடனே நேராக நச்சுக் கொல்லிக் கரைசலில் போட்டுவிட வேண்டும். ஒவ்வொரு நாள் வேலை முடிந்ததும். பயன்படுத்தப்பட்ட முகத்திரைகள் துவைக்கப்பட்டு உலத்தப்பட்டு அதன் நாடாக்கள் வெளியே இருக்கும்படி மடிக்கப்பட்டு நோய்கிருமிகள் நீக்கப்பட்டு வைக்கப் படவேண்டும். அப்போது தான் அது அடுத்த நாள் பயன்படுத்தத் தயாராக இருக்கும். சில மருத்துவமனைகளில் எறியப்படத்தக்க முகத்திரை (Use and throw) பயன்படுத்தப்படுகின்றன.

கையுறைகள்

அறுவை சிகிச்சைக்குரிய கையுறைகள், பல்வேறு அளவுகளில் உள்ளன. அறுவை மருத்துவர் அதை அணிந்தாலும் தொடு உணர்ச்சியை இழந்து விடாமல் இருக்கும் அளவுக்குச் சிறப்பான மெல்லிய ரப்பரால் செய்யப்பட்டிருக்கும்.

பயன்படுத்திய பிறகு கையுறைகள் குளிர் நீரில் கழுவப்பட்டுப் பிறகு சோப்பு நீர் கொண்டு கழுவ வேண்டும். கையுறைக்குள் நீர் நிரப்பி அதில் துளைகள் உள்ளனவா என அறியலாம். கையுறைகள் உலரும்படி துடைத்து அடுக்குத் தட்டுகளில் தொங்கவிடப்படலாம். உட்புறத்தை வெளிப்புறத்தில் திருப்பி அப்படியும் உலர வைக்கலாம். நோய்தொற்று நீக்கிட கையுறையின் உள்ளும் வெளியிலும் கையுறைப் பவுடர் தூவவும். சொர சொரப்பான பக்கம் வெளிப்பக்கமாக இருக்கட்டும். மணிக்கட்டுப் பகுதியை 5 செ.மீ பின்புறம் திருப்பவும். ஒரு சிறிய கையுறைப் பவுடர் பொட்டலத்தை வலது கையுறையுள் வைக்கவும். பயன்படுத்திய பின்பு எறிந்து விடத்தக்கக் கையுறைகளும் பழக்கத்தில் உள்ளன.

அங்கிகள்

நீராவியில் நோய்த் தொற்று நீக்கிய அங்கிகள் அறுவைக் கூடத்தில் அணியப்படும். நுண்ணுயிர் நீக்கப்படாத ஆனால் சுத்தமான அங்கிகள் அறுவை சிகிச்சையில் நேரடியாகப் பங்கு கொள்ளாதவர்களால் அணியப்படுகின்றன. அறுவை சிகிட்சை மருத்துவருக்கும். அவர் உதவியாளருக்கும் நெருங்கிய நெசவு கொண்ட துணியால் அங்கிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அங்கிகளின் கைகள் மணிக்கட்டில் கையுறைகளுக்குள் சென்ற அடங்கும் அளவுக்கு தைக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா அங்கிகளும் முதுகுப் புறத்தில் கட்டப்படுகின்றன. நோய்த் தொற்று நீக்கப்படாத ஒருவர் அங்கிகளில் முதுகுப் புறத்து நாடாக்களை நோய்த் தொற்று நீக்கிய அங்கிகளின் வெளிப்புறங்களைத் தொடாதபடி கட்டி விடுகிறார். பயன்படுத்தப்பட்ட பிறகு, இரத்தக்கறை இருந்தால் அங்கிகள் குளிர் நீர்ல் போடப்பட்டு உலர்த்துவதற்காக தொங்கவிடப்படுகின்றன.

பிறகு சலவையகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அல்லது சூடான சோப்பு நீரில் துவைக்கப்பட்டு பெட்டி போட்டு மடித்து வைக்கப்படுகின்றன. நோய்த் தொற்று நீக்கப்பட வேண்டிய அங்கிகள் அவற்றின் உட்புறங்கள் மட்டும் அவற்றை நேரடியாக உபயோகிப்பவர்களால் தொடப்படுமாறு. மடித்துச் சுற்றி வைக்கப் படுகின்றன. அவை பீப்பாய்களில் அடைக்கப்பட்டு அல்லது கட்டிப் போடப்பட்டு நீராவி அழுத்த முறையைப் பயன்படுத்தித் (autoclaving) தயாராக வைக்கப்படுகின்றன.

தொப்பிகள், உடைகள், காலணிகள்

அறுவை சிகிச்சைக் கூடங்களில் புழுதி அழுக்கு குறிப்பாக டெட்டனஸ் கிருமிகள் நுழைந்துவிடும் அபாயம் எதுவும் நிகழ்ந்து விடாதபடி இருக்க வேண்டும். ஆகையால் அங்கு நுழையும் ஒவ்வொருவரும் சுத்தமான உடையும் சுத்தமான அறுவை சிகிட்சைக் கூடக் காலணிகள் அல்லது கான்வாஸ் ஷூ அணிந்து இருக்க வேண்டும். கூடத்தை விட்டு வெளியே வரும்போது இவைகளைக் கழற்றி வைத்துவிட்டு வரவேண்டும். சுத்தமான அறுவை சிகிட்சைக் கூடத் தொப்பியினால் தலைமுடி முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அறுவை சிகிட்சை செய்வோர் கைகளைத் தேய்த்து கழுவுதல்

எல்லா அறுவை சிகிட்சை பணிகளிலும் கைகளையும் நகங்களையும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நகங்கள் வெட்டப்பட்டு குட்டையாக இருக்க வேண்டும். அறுவை சிகிட்சை மருத்துவருக்கும் அவருக்கு அறுவை சிகிட்சையில் உதவி செய்வோருக்கும் நுண்ணுயிர் நீக்கும் முறைகளிலும் அறுவை சிகிச்சைக்குரிய கைதேய்த்துக் கழுவுதல் மிகவும் அவசியமாகும். கைகளுக்கு நுண்ணுயிர் நீக்கிய கையுறைகளை அணிந்து கொள்ள முடியுமே தவிர, கைகளையே நுண்ணுயிர் நீக்கியவைகளாகச் செய்ய முடியாது.

தேவையானவை

 1. ஒடும் தண்ணீர்
 2. ஆன்டிசெப்டிக் சோப்பு அல்லது சோப்புக் கரைசல்
 3. நுண்ணுயிர் நீக்கிய பிரஷ்
 4. நுண்ணுயிர் நீக்கிய துண்டு.
 5. சுத்தமான தொப்பி மற்றும் சுத்தமான முகத்திரை

செய்முறை

 1. ஒடும் நீரில் முழங்கைவரை கைகளை நனைக்கவும்.
 2. கைகளிலும் கரங்களிலும் நன்கு நுரை வருமாறு சோப்புப் போட்டு அவ்வப்போது நீர் சேர்த்து நுரை உண்டாக்கவும்.
 3. 30 வினாடிக்குப் பிறகு முழுவதுமாக அலசவும்.
 4. நகங்களிலும் விரல் நுனிகளிலும் விரல்களுக்கு இடையிலும் சிறப்பான கவனம் செலுத்தவும். சிறிது சிறிதாக நீர் சேர்த்து நுரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இது போல மற்றொரு கரத்துக்கும் செய்யவும்.
 5. முழங்கையிலிருந்து தண்ணீர் கைகளுக்கு ஓடி வராமல் இருக்கும்படியாக முன்னங்கையை மேலே உயர்த்தியபடி கரங்கள் கைகள் ஆகியவற்றை கழுவவும்.
 6. நுண்ணுயிர் நீக்கிய துண்டு கொண்டு கையிலிருந்து மேலே நோக்கித் துடைத்து உலர்த்தவும்.

நூண்ணுயிர் நீக்கிய அங்கி, கையுறைகள் அணிதல்

 1. தேய்த்துச் சுத்தமாக்கப்பட்ட கைகளால் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள அங்கியை எடுத்துப் பிடித்துச் சுருட்டப்பட்டுள்ள அதை விரித்து கரங்களை அங்கியின் கைகளில் நுழைத்து உதவியாளரை முதுகின் பின்னால் கட்டிவிடச் சொல்லவும். அங்கியின் வெளிப்புறத்தைத் தொடாமல் விழிப்பாக இருக்க வேண்டும்.
 2. நுண்ணுயிர் நீக்கப்பட்ட (Sterilised) பவுடரைக் கையில் தூவி கையுறைகளை அணிந்து கொள்ளவும். முதல் கையுறையை (உட்புறம் வெளியே திருப்பப்பட்ட) மணிக்கட்டுப் பகுதியில் பிடித்துக் கொண்டு கையை உள்ளே நுழைக்கவும். அடுத்து இரண்டாவது உறையினை மணிக்கட்டுப் பகுதிக்கு அடியில் உறையிட்ட விரல்களை நுழைத்து அடுத்த கையை நுழைக்கவும். ஒவ்வொரு உறையின் மணிக்கட்டுப் பகுதியும் பிரிக்கப்பட்டு அங்கியின் கரங்களின் நுனிக்கு மேல் முழுவதுமாக இழுத்து விடப்பட வேண்டும். மணிக்கட்டில் இடைவெளி இருக்கக்கூடாது. அறுவை சிகிட்சையில் கையுறையின் உட்புறத்தையோ அங்கியையோ தொடக்கூடாது.
 3. முதலில் கை சுத்தம் செய்து கையுறை அணிந்த ஒருவர் மற்றவர்களுக்காக, நுண்ணுயிர் நீக்கப்பட்ட கையுறைகளைப் பிடித்துக் கொள்ள மற்றவர்கள் அவற்றில் கைகளை நுழைக்க உதவி செய்யலாம்.

செவிலியர்கள் கைகளை நன்கு சுத்தம் செய்த பிறகு நுண்ணுயிர் நீக்கிய பொருட்களை மட்டுமே தொட வேண்டும். அறுவை சிகிட்சைக்குரிய கருவிகள் உள்ள மேஜை மற்றும் அறுவை சிகிட்சை நடக்கும் இடம் முழுவதும் நுண்ணுயிர் நீக்கிய பெரிய துணிகளாலும் துண்டுகளாலும் போர்த்தப்பட்டிருக்கும். அறுவை சிகிட்சை செய்யாத உதவியாளர்கள் இடுக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்கியப் பொருட்களைக் கொண்டு வந்து தரலாம்.

நண்ணுயிரி நீக்கிய பொருட்களை கையாளுதல்

 • நுண்ணுயிர் நீக்கிய பொருட்களைக் கையாளும் போது முகத்திரை அணிந்து இருக்க வேண்டும்.
 • நுண்ணுயிர் நீங்கிய பொருட்கள் நுண்ணுயிர் நீக்கிய பாத்திரங்களிலோ நுண்ணுயிர் நீக்கிய துண்டுகளின் மேலோ பயன்படுத்தப்படும் வரை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • ஈரம் இல்லாதபடி பார்த்துக் கொள்ளவும். ஈரமான பொருட்களில் நுண்ணுயிர்கள் உண்டாகிவிடும்.
 • நுண்ணுயிர் நீக்கப்படாத எந்தப் பொருளும் கைகள் கரங்கள் உட்பட நுண்ணுயிர் நீக்கப்பட்ட இடத்துக்கு மேலே கடந்து செல்லக்கூடாது.
 • அறுவை சிகிட்சைக்குத் தேவையான பொருட்கள் உள்ள பொட்டலங்கள். பாத்திரங்கள் ஆகியவற்றின் உட்புறத்தை விரல்களால் தொடக் கூடாது. இடுக்கிகளைப் பயன்படுத்தவும்.
 • நுண்ணுயிர் நீக்கும் கரைசல் இருக்கும் பாட்டிலின் கார்க்கை எடுக்கும்போது கார்க்கின் உட்பகுதியையோ அல்லது பாட்டிலின் விளிம்பையோ அசுத்தமாக்காமலிருக்க அதிகம் கவனம் செலுத்தவும். கவனமாகக் கார்க்கை திரும்பவும் அடைத்து வைக்க வேண்டும்.
 • நுண்ணுயிர் நீக்கிய பாத்திரத்தின் மூடியை எடுத்தால் மூடியின் உட்பாகம் மேலாகயிருக்கும் படி வைக்கவும். பின் உடனே மூடி விடவும்.

இடுக்கியை பயன்படுத்தும் முறைகள்

 1. இடுக்கிகள் வைக்கப்பட்டிருக்கும் நுண்ணுயிர் நீக்கப்பட்ட ஜாடி தினமும் சுத்தப்படுத்தபட்டு நுண்ணுயிர் நீக்கம் செய்து நிரப்ப வேண்டும். தினமும் அதில் புதிய நச்சுக் கொல்லி கரைசலை நிரப்ப வேண்டும். இடுக்கிகள் சுத்தப்படுத்தப்பட்டு அழுத்த நீராவியில் நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டும் அல்லது கொதிக்க வைக்கப்பட வேண்டும்.
 2. பயன்படுத்தும் போது இடுக்கிகளை முழங்கை மட்டத்தில் வைத்துக் கொள்ளவும். அதன் முனை கீழ்நோக்கி இருக்கும்படி வைக்கவும். ஏனெனில் அதை மேல் நோக்கிப் பிடித்திருந்தால் கரைசல்கள் கீழே ஒழுகி வந்து கை வழியாக வழிந்து மீண்டும் இடுக்கிக்குப் போய், எல்லாவற்றையும் நுண்ணுயிர் நீக்கிய தன்மை இல்லாமல் செய்துவிடும்.
 3. பயன்படுத்திய பிறகு இடுக்கிகளைத் தாமதம் இன்றி ஜாடிக்குள் போட்டுவிடவும். ஜாடியின் விளிம்பைத் தொடாமல் கவனமாக வைக்கவும். இடுக்கிகள் அசுத்தப்பட்டு விட்டால் அது மீண்டும் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்டு அதன் பிறகே ஜாடியில் மீண்டும் போட வேண்டும்.

நண்ணுயிர் நீக்குதல்

அறுவை சிகிச்சை முறையின்போது பயன்படுத்தப்படும் பொருட்களை நுண்ணுயிர் அற்றுப் போகும்படி அதாவது நோய்க் கிருமிகள் இல்லாமல் செய்யும் முறையாகும்.

நண்ணுயிர் நீக்கிடப் பொருள்களை தயார் செய்தல்

ஒவ்வொரு வகை அறுவை சிகிச்சைக்கும் தேவையான அல்லது நுண்ணுயிர் நீக்கும் முறைக்குத் தேவையான கருவிகள் : உறிஞ்சு பஞ்சு, ஒற்றும் பஞ்சு, கட்டுத்துணிகள், துண்டுகள், தையல் பொருட்கள் ஆகியவற்றைத் தொகுதி தொகுதியாகத் தயார் செய்வது மிகவும் எளிதானதாகும். இந்தத் தொகுதிகள் கட்டப்பட்டு ஒரு பீப்பாயில் பொட்டலமாகவோ, தட்டின் மேல் வைக்கப்பட்டோ இருக்கும். அவற்றின் மேல் பெயர் எழுதி ஒட்டப்பட்டு நுண்ணுயிர் நீக்கப்படத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் எந்தப் பொருள் முதலில் பயன்படுத்தத் தேவைப்படுமோ அது மேலே இருக்கும் படி கவனமாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீராவி புகுந்து செல்லும் விதமாக அவை தளர்த்தியாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். பின்களின் துளை வரிசை திறந்து இருக்க வேண்டும். பொட்டலங்களாக இருந்தால் நெருங்கிய நெசவுள்ள துணியை இரண்டாக மடித்து அதனால் அல்லது காகிதத்தால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

கட்டுத்துணிகள், உறிஞ்சு பஞ்சு, ஒற்றும் பஞ்சு ஆகியவை அறுவை சல்லாத் துணியால் பல்வேறு பருமன்களில் தயாரிக்கப்படுகின்றன. ஒழுங்கற்ற அதன் ஓரங்கள் உட்புறமாக மடிக்கப்பட வேண்டும். உறிஞ்சும் பஞ்சு உறைகளும். கட்டுத் துணிகளும் தேவையான அளவுக்கு மீண்டும் மடிக்கப்படலாம். அடி வயிற்றில் அறுவை சிகிட்சை செய்யும் போது பயன்படுத்தப்படும் ஒற்றும் பஞ்சு பெரியதாக இருக்க வேண்டும். அதன் ஓரங்கள் எல்லாம் தைக்கப்பட்டு ஒரு மூலையில் நாடாவும் வைத்துத் தைக்கப்பட்டு இருக்க வேண்டும். நாடாவின் நுனியில் தமனி இடுக்கு கருவியினால் பிடிக்கும் போது அந்த ஒற்றும் பஞ்சு அறுவை சிகிட்சைக்கு பின் வயிற்றினுள்ளேயே விடப்பட்டு விடும் அபாயம் இருக்காது.

பேக்கிங்காஸ் : இது பல்வேறு அளவுகளில் செய்யப்படுகின்றன. கட்டப்படும் மூட்டையின் அகலம் எவ்வளவோ, அதுபோல் நான்கு மடங்கு அகலத்துக்கு சல்லாத்துணி எடுத்துக் கொள்ளவும். நான்கு முனைகளையும் மடித்து அதன் நடுப்புள்ளியில் ஒன்று சேரும்படி வைக்கவும். அதன் நடுவில் மீண்டும் பிடித்துச் சுருட்டி வைக்க வேண்டும்.

பஞ்சு உருண்டைகள் : இது பல முறைகளில் தயாரிக்கப்படுகிறது. உள்ளங்கைகளில் பஞ்சு வைத்து உருட்டப்பட்டு பஞ்சு உருண்டைகள் பல அளவுகளில் செய்யப்படுகின்றன. உட்புற அறுவை சிகிட்சைக்கு தேவைப்படும். சல்லாத் துணியில் வைத்துக் கட்டப்படும். இத்தகைய உறிஞ்சு பஞ்சு உறைகள் நீளமான கைப்பிடிகள் உள்ள இடுக்கிகளில் பிடித்துக் கொள்ளப்படும்.

கருவிகள்

 • பயன்படுத்தப்பட்ட பின்பு அறுவை சிகிட்சைக் கருவிகள் முதலில் குளிர் நீரில் கழுவப்பட்டுப் பிறகு வெதுவெதுப்பான சோப்பு நீர் கரைசலில் கழுவப்பட வேண்டும். சரியான முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்வதற்குக் கருவிகளின் மேல் உலர்ந்த இரத்தமோ ஒழுக்குகளின் அடையாளமோ இருக்கக் கூடாது. சுத்தமான நீரில் அலசி 5 நிமிடம் கொதிக்க வைத்துப் பிறகு உலர்த்த வேண்டும்.
 • கூர்மையான கருவிகளான கத்திகள், ஊசிகள் தனியாக தொற்றுநீக்கம் செய்ய வேண்டும். வெட்டிவிடாமலும் குத்திப் புண்ணாகாமலும் கவனமாகச் செய்ய வேண்டும்.

ஊசிக் குழல்கள், ஊசிகள்

ஊசிப் பீற்றுக் குழலைப் பயன்படுத்திய பிறகு முடிந்த அளவு விரைவில் சிறிது நீரை உறிஞ்சி ஒவ்வொரு ஊசியையும் பொருத்தி நீரைப்பீய்ச்ச வேண்டும். இதனால் அடைப்புகள் இருக்கின்றனவா என்று அறியலாம். நோய்த்தொற்று இருக்கக்கூடிய ஊசிப் பீற்றுக் குழாய் (இரத்தம். சீழ் உறிஞ்சப்பயன்படுத்தப்பட்ட குழாய்கள்) உடனே நோய்த்தொற்று நீக்கிக் கரைசலில் கழுவப்படவேண்டும். அடுத்து ஊசிப் பீற்றுக் குழல்களையும் ஊசிகளையும் வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் கழுவவேண்டும். குழாய் பகுதியைக் கழுவ பாட்டில் பிரஷ் பயன்படுத்த வேண்டும். சுத்த நீரில் பிறகு அலசவும். குழாய்களையும் அழுத்திகளையும் கலந்து விடாமல் ஜோடி ஜோடியாக வைத்திருக்க வேண்டும்.

ஊசிகள் கூர்மையாக உள்ளனவா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். விரல்களைக் குத்திவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குத்துவதால் நோய்த்தொற்று பரப்பப்படும்.

இரப்பர் குழாய்கள்

இவற்றைப் பயன்படுத்திய பின்பு குளிர் நீரில் சுத்தப்படுத்திப் பின்பு சூடான சோப்பு நீரில் சுத்தப்படுத்திப் பிறகு அலச வேண்டும். உட்புறம் முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும். கொதி நீரில் இடப்பட்டு பிறகு நீர் வடிவதற்காக இரும்புச் சட்டங்களின் மேல் தொங்கவிடப்பட வேண்டும். இரப்பர் குழாய்களின் இரு முனைகளில் நீரைப் பாய்ச்சி சுத்தம் செய்யப்பட வேண்டும். குளிர் நீரில் கழுவி அலசி 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு துண்டினால் துடைத்து அல்லது தொங்கவிட்டு உலர்த்தவும்.

நுண்ணுயிர் நீக்கும் முறைகள்

உலர் வெப்பம்

ஊசி மற்றும் குழல் உட்பட கண்ணாடிப் பொருட்களை நுண்ணுயிர் நீக்கப் பொதுவாக வெப்பக்காற்று அடுப்பில் 160°Cயில் ஒரு மணி நேரத்துக்கு வைக்கப்படுகிறது. இம்முறையில் கருமூலங்களுடன் மற்ற எல்லா நுண்ணுயிர்களும் கொல்லப்படுகின்றன. ரப்பர் இந்த வெப்பத்தைத் தாங்காது. கட்டுத் துணிகள். துண்டுகள் அங்கிகள் ஆகியவற்றின் வெப்பம் ஊடுருவிச்செல்ல வேண்டி இருப்பதால் அவற்றிற்கு கிருமி நீக்கம் செய்ய இம்முறை ஏற்றதல்ல.

அழுத்த நீராவி முறை

பெரும்பாலும் எல்லாப் பொருள்களுக்கும் நம்பகமான இம்முறையைக் கையாளலாம். அழுத்த நீராவி கருவி உலோகத்தால் ஆன ஒரு பெட்டி இதற்கு வெளிப்புறத்தில் சுற்றிலும் உறை மூடி அல்லது கதவு ஆகியவை இருக்கும். மூடி இறுக்கமாக மூடப்பட்டு இருக்கும். ஒரு கொதிகலனில் அல்லது வெளி உறையில் நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது.

உலோகப்பெட்டியிலிருந்து நீராவியைப் பாய்ச்சி இடப் பெயர்ச்சியால் காற்று வெளியேற்றப்படுகிறது. பிறகு நீராவி அந்தப் பெட்டிக்குள் செலுத்தப்பட்டு அழுத்தம் உண்டாகச் செய்யப்படுகிறது. பொதுவாக அழுத்தம் சதுர அங்குலத்துக்கு 15 முதல் 20 பவுண்ட் வரை இருக்கும். இந்த அழுத்தத்தில் 15 முதல் 30 நிமிடம் வரை இருக்கச் செய்யப்படுகிறது. பிறகு வெப்பம் நிறுத்தப்படுகிறது. அழுத்த நீராவியில் இருந்த பொருள்கள் உலரவிடப்படுகின்றன. அவை அழுத்த நீராவியிலிருந்து வெளியே எடுக்கப்படும் போது முற்றிலும் உலர்ந்து இருக்க வேண்டும்.

நினைவில் இருக்க வேண்டிய குறிப்புகள்

 • சீழ் போன்ற நுண்ணுயிர் உள்ள பொருள்கள் இருந்தால் நீராவி ஊடுருவிக் செல்லுவது தடுக்கப்படும்.
 • அழுத்த நீராவிப் பாத்திரத்தில் வைக்கப்படும் பீப்பாய்களின் துளைகள் திறந்திருக்க வேண்டும். அவற்றை வெளியே எடுத்தவுடன் அவை மூடப்பட வேண்டும்.
 • உள்ளே போடப்படும் கட்டுகள் மிகப் பெரியவையாகவோ இறுக்கமாகவோ இருக்கக்கூடாது. கட்டின் நடுப்பகுதியில் கூட நீராவி ஊடுருவிச் செல்ல தக்கவாறு இருக்க வேண்டும்.
 • ரப்பர் கையுறைகள் உயர்ந்த வெப்பத்தை அதிக நேரம் தாங்காது. அழுத்த நீராவியில் அவைகளைத் தனியாக 15 பவுண்ட் அழுத்தத்தில் 15 நிமிடம் வைத்திருக்கலாம்.
 • திரவங்கள் இருக்கும் பாட்டில்களை அழுத்த நீராவியில் வைக்க ஸ்குரு மூடியைத் தளர்த்திவிட்டு நீராவியை மெதுவாக வெளியேற்ற வேண்டும்.

கொதிக்க வைத்தல்

 • இந்த முறையானது எனாமல், உலோகம், கண்ணாடி ரப்பர் பொருள்களுக்கு ஏற்றது.
 • பொருள்கள் முற்றிலும் சுத்தமாக இருக்கின்றனவா நீரில் முழுவதும் மூழ்கி இருக்கின்றனவா என்றும் பார்க்கவும்.
 • நீர் கொதிக்கத் தொடங்கும் போதுதான் நேரத்தைக் கணக்கிட தொடங்க வேண்டும். மேலும் அதிகப் பொருள்களைச் சேர்த்தால் நுண்ணுயிர் நீக்கத்துக்கு ஆகவேண்டிய நேரத்தை மீண்டும் அப்போதிருந்து கணக்கிடத் தொடங்க வேண்டும்.
 • 5 நிமிடங்களுக்குத் தீவிரமாகக் கொதிக்க வை. கொதிக்க வைத்தல் கருமூலத்தைக் (Spores) கொல்லாது.

இரசாயன முறையில் நுண்ணுயிர் நீக்கம்

கண் அறுவை சிகிட்சைக்குரிய உபகரணங்கள் போன்ற மெல்லிய மென்மையான உபகரணங்கள் இம்முறையின் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.

 • பொருள்கள் சீழ், இரத்தம். எண்ணெய் போன்றவை இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
 • நோய்த்தொற்று நீக்கிக் கரைசலில் முழுவதும் மூழ்கி இருக்க வேண்டும்.
 • நோய்த்தொற்று நீக்கிக் கரைசல் குறிப்பிட்ட அடர்த்தி உள்ளதாகவும். பொருள்கள் அத்துடன் மூழ்கி குறிப்பிட்ட நேரம் வரையிலும் இருக்க வேண்டும்.
 • நுண்ணுயிர் நீக்கம் முடிந்த பிறகு பொருட்களை நுண்ணுயிர் நீக்கிய நீரில் நன்கு அலசிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

தொகுப்புரை

இந்தியாவின் சுகாதாரமின்மையாலும் உணவுச் சத்துக் குறைபாட்டினாலும் பல நோய்கள் காணப்படுகின்றன. நமது உடலில் நுண்ணியிரிகள் நுழைந்து உடலை பாதித்து நோயுற செய்வதை நோய்த்தொற்று என்கிறோம். பொதுவாக நுண்ணுயிரிகள் ஜீரண பாதை சுவாசபாதை பாதிப்படைந்த தோல் மற்றும் சளி சவ்வுபடலம் வழியாக நம் உடலில் உட்புகுகின்றன. சில நோய்கள் நீர் மூலமாகவும் சில நோய்கள் காற்று மூலமாகவும் பரவுகின்றன. டைபாய்டு. சீதபேதி காலரா, வயிற்றுபோக்கு. இளம்பிள்ளை வாதம் ஆகியவை நீர் மூலம் பரவும் நோய்களாகும். நிமோனியா, தட்டம்மை. புட்டாளம்மை ஆகியவை காற்று மூலம் பரவும் நோய்களில் சிலவாகும். செவிலியர்கள் தகுந்த மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைக்குரிய தொற்று நீக்கு முறைகளை கையாள்வதின் மூலம் குறுக்குத் தொற்றையும் (Cross infection) மற்றும் மருத்துவமனையில் சேர்வதால் பெறப்படும் நோய்களையும் (Hospital acquired infections) தடுக்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு குடும்ப நலத்துறை கையேடு

3.3
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top