பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள்

பெண் பிறப்புறுப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள்

பெண் குறியின் வெளி மடிப்பு

பெண் குறியின் வெளி மடிப்பு என்பது மிருதுவான தோல் மடிப்பாகும். இது ரோமத்தால் மூடப்பட்டுள்ளது. இவை பிறப்பு வாய் மற்றும் உறுப்புகளை மூடி பாதுகாக்கின்றன. பெண் குறியின் உள் உதடு பெண் குறியின் வெளி மடிப்பிற்கு உள்ளே அமைந்துள்ள இரண்டு மடிப்புகளாகும். இந்த உதடுகள் பிறப்பு வாய் மற்றும் சிறுநீர் தாரை ஆகியவற்றை பாதுகாக்கின்றன.

மகளிர் கந்து

மகளிர் கந்து பட்டாணி அளவில் உள்ள ஒரு உறுப்பாகும். இது அதிக உணர்ச்சியுள்ள பகுதி மற்றும் இது பெண்களின் பாலுணர்வின் உச்சகட்ட இன்பத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இது ஆண் குறியை ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. பெண் குறியின் உள்உதடு மேற்புறத்தில் இணையும் இடத்தில் இது அமைந்துள்ளது. சிறுநீர் தாரை மற்றும் பிறப்பு வாய் திறப்பு ஆகியவை மகளிர் கந்துக்கு கீழே அமைந்துள்ளன.

பிறப்பு வாய் குழாய்

பிறப்பு வாய் குழாய் என்பது தசையாலான ஒரு குழாய். இது உடலுறவின்போது ஆண் குறி உள்ளே நுழைவதற்கும் குழந்தை பிறக்கும் போது அது கருப்பையிலிருந்து வெளியே வருவதற்கும் ஏற்றவாறு விரிந்து கொடுக்கும் தன்மையுள்ளதாக அமைந்துள்ளது. கருப்பையிலிருந்து மாதவிடாய் உதிரப்போக்கு கருப்பை வாய் குழாய் மூலம் வெளியேறுகிறது. கருப்பை வாய் குழாயில் நரம்புகள் ஆரம்பிக்கின்றன. எனவே இங்கு அழுத்தம் ஏற்படும்போது உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இதனால் இன்பம் கிடைக்கிறது. பிறப்பு வாய் குழாய் கருப்பை வாயருகில் முடிவடைகிறது. பிறப்பு வாய் குழாயின் திறப்பு சில நேரங்களில் கன்னித்திரை என்ற மிக மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும். இந்த கன்னித்திரை பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக விளங்குகிறது என்ற மூட நம்பிக்கை உள்ளது. அதே போன்று இந்த கன்னித்திரை முதல் உடலுறவின் போது மட்டுமே கிழிந்து இரத்தம் வெளிப்படும் என்றும் தவறாக நம்பப்படுகிறது. இயல்பாக அதிக உடல் செயல்பாடுகளான விளையாட்டுக்கள், கடின வேலைகள் ஆகியவை செய்யும்போதும் இந்த கன்னித்திரை கிழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இது முதல் உடலுறவின் போது கிழிந்தாலும் கூட இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்படாது. மாறாக சிறு துளி உதிரமே வெளிவரும்.

கருப்பை வாய்

கருப்பை வாய் என்பது கருப்பையின் திறப்பு பகுதியாகும். இது கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. கருப்பையிலிருந்து மாதவிடாய் உதிரம் இந்த கருப்பை வாய் வழியாக பிறப்பு வாய் குழாயை வந்தடைகிறது.

கருப்பை

கருப்பை என்பது பேரிக்காய் வடிவிலான உறுப்பு. இது உத்தேசமாக நம் கை முஷ்டி அளவு இருக்கும். இது வயிற்றின் கீழ்ப்பகுதியில் தொப்புளுக்குக் கீழே அமைந்துள்ள தசையாலான ஒரு வெற்று பை ஆகும். இது சிறுநீர் பைக்கும் மலக்குடலுக்கும் நடுவே அமந்துள்ளது. இது கரு முழு வளர்ச்சியடைவதற்கு ஏற்றவாறு விரிந்து குழந்தை பிறந்த பின் சுருங்கிவிடும் தன்மை உள்ளது. மாதவிடாய் உதிரம் கருப்பையின் உட்புற சுவற்றிலிருந்து வெளியேறும். உடலுறவின் போது பெண்ணுக்கு உச்ச கட்ட இன்பம் தோன்றும்போது கருப்பையின் மேல்புறம் சுருங்கும்.

சினைக் குழாய்

இரண்டு சினைக் குழாய்கள் உள்ளன. அவை கைகளைப்போல் கருப்பையின் இரண்டு பகுதிகளிலும் சினைப்பையை நோக்கி நீண்டிருக்கின்றன. ஆனால் அவை சினைப்பையை தொடுவதில்லை. சினைப்பையிலிருந்து சினை முட்டை வெளியாகும்போது சினைக்குழாய் அதை தன்னுள் இழுத்துக் கொண்டு குழாயின் உட்புறத்தினுள் தள்ளுகிறது. கருவுருதல் சினைக்குழாய்க்குள் தான் நடைபெறுகிறது. உடலுறவின்போது உச்சகட்டத்தில் சினைக்குழாய்களும் சுருங்குகின்றன.

சினைப்பைகள்

கருப்பையின் இரண்டு புறமும் சினைப்பைகள் உள்ளன. இவை பாதாங்கொட்டை போன்ற அமைப்பிலும் அளவிலும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் சினைக்குழாய்க்கு அருகில் இருக்கும் ஆனால் சினைக்குழாயோடு இணைந்திருக்காது. சினைப்பையில் சினை முட்டைகள் உருவாகின்றன. அத்துடன் பெண் இயக்கு நீரான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் இவற்றில் சுரக்கின்றன. ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் ஒரு முட்டை அவளது சினைப்பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. ஒரு பெண்ணின் இனப்பெருக்க காலத்தில் சுமார் 400 முற்றிய முட்டைகள் மட்டுமே வெளியேறுகின்றன. 40 அல்லது 45 வயதில் முட்டை உருவாவதும் மாதவிடாய் உதிரப்போக்கும் நின்றுவிடுகின்றன.

மாதவிடாய் சுழற்சி பற்றிய சில தகவல்கள்

விடலைப்பருவப் பெண்களுக்கு 10 முதல் 19 வயதிற்குள் மாதவிடாய் உதிரப்போக்கு ஆரம்பமாகிறது. ஒவ்வொரு மாதமும் 5 அல்லது 6 சினை முட்டைகள் முதிற்சியடைய ஆரம்பிக்கும். ஆனால் ஒரே ஒரு நன்கு முற்றிய முட்டை மட்டுமே வெளியேறும். அதை சினைக்குழாய் உறிஞ்சி தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும். முட்டை கருப்பையை நோக்கி மெதுவாக நகரும். அதே நேரத்தில் சினைப்பையில் சுரக்கும் இயக்கு நீர்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் ஆகியவை ஆண் விந்தவுடன் இணைந்து சினைப்பட்ட கருவை சுமப்பதற்கு ஏற்றவாறு கருப்பை சுவற்றை கெட்டியாக்கும் செயலில் ஈடுபடும். முட்டை கருவாகாவிட்டால் அது சிதைந்துவிடும். இப்போது கருவை சுமக்கவும் அதற்கு உணவு ஊட்டவும் உருவான கருப்பை சுவருக்கு வேலை இல்லை. எனவே அது கலைந்து மாதவிடாய் உதிரப்போக்காக வெளியேறும். இவ்வாறே மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் சுமார் 50 மிலி இரத்த இழப்பு ஏற்படும். மாதவிடாய் உதிரப்போக்கு மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். இந்த சுழற்சி 28 அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை தொடரும். இந்த சுழற்சியில் நாள் அளவு தொடர்ச்சி ஆகியவற்றில் நபருக்கு நபர் அதிக வேறு பாடு இருக்கும். ஒரு சிலருக்கு அதிக அளவிலும் நீண்ட நாட்களுக்கும் உதிரப்போக்கு இருக்கும். ஒரு சிலருக்கு மிகக்குறைந்த உதிரப்போக்கு இருக்கும். இவ்வாறு குறைந்த உதிரப்போக்குக்கு காரணம் இரத்த சோகையாகும். வாய்வழியாக மாலா டி கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பெண்களுக்கும் மிதமான உதிரப்போக்கு இருக்கும். மாதவிடாய் சினைப்பைகள் பிறப்பு வாய் குழாய் கருப்பை வாய் கருப்பை சினைக் குழாய் சுழற்சியில் மிக முக்கியமான காலம் கருவுருதல் நடைபெறும் காலமாகும். 28-30 நாள் சுழற்சியில் மூன்று நாட்கள் மட்டுமே கருவுறுவதற்கு ஏற்ற காலமாகும். இந்த நாட்களில் முட்டையின் வெள்ளைக்கரு போன்ற பிசுபிசுப்பான திரவம் வெளிப்படும். இந்த வெள்ளைப்படுதல் இயல்பானது. கலந்தாலோசகர்கள் இயல்பான வெள்ளைப்படுதலுக்கும் இயல்புக்கு மாறான வெள்ளைப்படுதலுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டியது அவசியம். கருமுட்டை வெளிப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாகவும் இரண்டு நாட்கள் கழித்தும் மட்டுமே கருவுருதலுக்கான வாய்ப்புகள் உள்ளன.

மாதவிடாய் சுகாதாரம்

மாதவிடாய் ஏற்படும் காலங்களில் தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். இனஉறுப்புகளை மென்மையான சோப்பு மற்றும் மிதமான சுடு நீரில் தினமும் கழுவுவது உடலில் துர்நாற்றம் இல்லாமல் இருக்க உதவும்.

மாதவிடாய் உதிரப்போக்குக்கு அணையாடை

மென்மையான பருத்தி துணி அல்லது கடைகளில் விற்கப்படும் சுகாதார பஞ்சுப்பொதிகளை மாதவிடாய் உதிரத்தை உறிஞ்ச பயன்படுத்த வேண்டும். உதிரப்போக்கின் அளவுக்கேற்றவாறு இவற்றை 3 அல்லது 4 முறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை அணையாடையை மாற்றும் போதும் பிறப்புறுப்புகளை சுத்தமாக கழுவ வேண்டும். கைகளை சோப்பு மற்றும் நீரால் கழுவ வேண்டும். துணியாலான அணையாடையை பயன்படுத்தினால் அதை சோப்பிட்டு சுத்தமாக துவைத்து வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். ஈரமான துணிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவற்றால் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் கிருமித்தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க ஒரே துணியை மற்ற பெண் குடும்ப உறுப்பினர்களும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 3 அல்லது 4 மாதத்திற்கு ஒரு முறை பழைய துணியை அப்புறப்படுத்திவிட்டு புதிய துணியை பயன்படுத்த வேண்டும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சுகாதார அணையாடையை ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு அப்புறப்படுத்திவிட வேண்டும். பயன்படுத்திய அணையாடையை ஒரு பேப்பரில் சுற்றி குப்பைக்கூடையில் போட வேண்டும். எச்ஐவி பாதிப்புக்காளான பெண்கள் தங்கள் அணையாடையை பிளீச்சிங் பௌடர் கலந்த நீரில் நனைத்தபின் அப்புறப்படுத்த வேண்டும். அதே போன்று துணி பயன்படுத்துபவர்களாக இருந்தால் துணியை துவைப்பதற்கு முன் பிளீச்சிங் பௌடர் கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்தபின் சோப்பிட்டு நன்கு துவைக்க வேண்டும்.

மார்பக வளர்ச்சி

ஆண் பெண் இருபாலாருக்குமே மார்பகங்கள் அமைந்திருந்தாலும் பெண்ணின் மார்பகமே தனித் தன்மையுடையதாக உள்ளது. மார்பகத்தின் அளவு ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. மார்பகம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ எப்படி இருந்தாலும் அதன் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இருக்காது. குழந்தை பிறந்தவுடன் பாலூட்டுவதற்காக மார்பக சுரப்பிகளிலிருந்து பால் சுரக்கும்.

ஆதாரம் : தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம்

3.06976744186
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top