பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மனிதனின் உடற்செயலியல் பாகம் 2
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மனிதனின் உடற்செயலியல் பாகம் 2

மனிதனின் உடல் உறுப்புகள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இரத்தச் சிவப்பணுக்கள் (Erythrocytes/RBC)

இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட்கரு இல்லை. ஆண்களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.6-5.2 மில்லியன்) அமைந்திருக்கும்.

தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 um ஆகும். ஓர் சிவப்பணுவின் முக்கிய அங்கம் ஹீமோகுளோபின் எனும் இணைவுப் புரதமாகும். இப்பொருள் இரத்தத்தின் சிவப்பு நிறத்திற்குக் காரணமாகிறது. ஹீமோகுளோபின் உடலினுள் ஆக்ஸிஜனைக் கடத்தும். ஆக்ஸிஜனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்ஸிஹீமோகுளோபின் என்று பெயர்.

ஆண்களின் இரத்தத்தில் சிவப்பணுக்கள் 120 நாட்களும் பெண்களில் 110 நாட்களும் வாழ்ந்திருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவை விலா எலும்புகள், முதுகெலும்புகள் ஆகியவற்றின் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன. முதிர்வடைந்த சிவப்பணுக்கள் கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன.

இரத்த வெள்ளையணுக்கள் (Leucocytes / WBC)

இவை ஹீமோகுளோபின் போன்ற நிறமிகளற்ற தெளிவான செல்கள். இச்செல்களில் உட்கரு உண்டு. இவை அமீபாக்களைப் போன்று நகரக்கூடியவை. உடலினுள் நுழையும் நுண்ணுயிரிகளிலிருந்து இவை நமது உடலைப் பாதுகாக்கின்றன.

பல்வேறு வகைப்பட்ட வெள்ளையணுக்கள்

(அ). நியூட்ரோஃபில்கள் (நடுவமைச்செல்கள்) (Neutrophils) பெரும்பாலான வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை (60-70%) இவற்றில் உட்கரு பல வடிவங்களில் அமைந்திருக்கும். எனவே இவற்றிற்குப் பல்லுரு உட்கரு நியூட்ரோஃபில்கள் (Polymorphonuclear Neutrophils) என்று பெயர்.

(ஆ). இயோசினாஃபில்கள் (இயோசினேற்பிகள்) (Eosinophils) - 0.5-3.0%. இவை நகரும் இயல்புடையவை. உடல் உறுப்புகளின் திசுக்களில் வீக்கம் ஏற்படின் இவை அங்கு நகர்ந்து செல்கின்றன. ஒவ்வாமைத் தன்மையில் (Allergy) இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

(இ). பேசோஃபில்கள் (காரச்சாய மேற்பிகள்) (Basophils) - 0.1%. ஒவ்வாமை நிலை உடல் திசு வீக்கங்கள் ஏற்படுதல் ஆகிய வேலைகளில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இவற்றிலுள்ள ஹிப்பாரின் எனும் பொருள் இரத்தம் உறைதலைத் தடைசெய்யும்.

(ஈ). லிம்போசைட்டுகள் (நிணநீர்ச் செல்கள்) (Lymphocytes) - 20-30%. இவை மிகச்சிறிய வெள்ளையணுக்கள். நிணநீர்க் கணுக்கள், மண்ணீரல், டான்சில் எனும் தொண்டை முளை, தைமஸ் போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. B செல்கள் எனப்படும் லிம்போசைட்டுகள், ஆன்டிபாடி (Antibody) எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை பாக்டீரியங் களுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை. T செல்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் வைரஸ்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரஸ்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.

(உ). மோனோசைட்டுகள் (ஒற்றைச் செல்கள்) (Monocytes) - 1-4%. இவை பெரிய வெள்ளையணுக்கள். பாக்டீரியங்கள், இறந்த செல்கள், செல் துணுக்கைகள் போன்றவற்றை அழித்துவிடும் தன்மையுடையவை. உடல் தொற்றுநோயால் தாக்கப்படும் வேளைகளில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.

இரத்த பிளேட்லெட்டுகள் (இரத்தத் தட்டையச் செல்கள்) (Blood Platelets)

துரோம்போசைட்டுகள் : இவை செல்களின் சிறு பிரிவுகளாகத் தோன்றுபவை. இரத்தம் உறைதலில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை 5-9 நாட்கள் வாழக்கூடியவை.

இரத்தம் உறைதல் (ஹீமோஸ்டாசிஸ்)

ஓர் இரத்தக் குழல் பாதிப்படைந்தால் இரத்தம் உறைதல் ஏற்படும். ஓர் உறைந்த இரத்தக் கட்டியானது நூல்களைப் போன்ற புரோட்டீன் நார்களின் பின்னலால் ஆனது. அப்பின்னலில் இரத்தச் செல்கள், பிளேட்லெட்டுகள் போன்றவை சிக்கியிருக்கும்.

பிளாஸ்மாவில் உள்ள பல புரோட்டீன்களால் இரத்தம் உறைதல் ஏற்படுகிறது. இவற்றிற்கு உறைதல் காரணிகள் என்று பெயர். பொதுவாக இக்காரணிகள் செயலற்ற நிலையில் இரத்தத்தில் அமைந்திருக்கும். காயம் ஏற்படுகையில் இவை உறைதலை உண்டாக்கத் தூண்டி விடப்படுகின்றன. இத்தூண்டுதல் மூன்று நிலைகளில் ஏற்படும்.

முதல்நிலை

துரோம்போகைனேஸ் தோன்றுதல் - பாதிப்பு அல்லது காயமடைந்த திசுக்கள் லிப்போ புரோட்டீன்களையும், பாஸ்போலிப்பிடுகளையும் வெளியேற்றுகின்றன. இவற்றிற்குத் திசுக்காரணிகள் (Tissue factors - TF) (அ) துரோம்போபிளாஸ்டின் என்று பெயர். இக்காரணிகள் துரோம்போகைனேஸ் அல்லது புரோதுரோம்பின் எனும் பொருளைத் தோற்றுவிக்கின்றன.

இரண்டாம் நிலை

துரோம்பின் தோன்றுதல் - இந்நிலையில் பிளாஸ்மாவில் கரைந்துள்ள புரோதுரோம்பின் எனும் புரோட்டீன் துரோம்பின் எனும் என்சைமாகிறது. இந்நிகழ்ச்சிக்கு புரோதுரோம்பினேஸ் எனும் என்சைம் தேவை. கல்லீர-ல் புரோதுரோம்பின் தயாரிப்பில் வைட்டமின் K உதவுகிறது.

மூன்றாம் நிலை

பிளாஸ்மாவில் கரைந்துள்ள ஃபைபிரினோஜன் எனும் புரோட்டீன் கரையா புரோட்டீனாகிய ஃபைபிரின் எனும் பொருளாக மாறும். இந்நிகழ்ச்சி துரோம்பினால் ஏற்படும்.

ஃபைபிரின் ஃபைபிரின், நார் அமைப்புடையது. இந்நார்கள் உறைதலில் ஓர் வலைப்பின்னல் அமைப்பைத் தோற்றுவிக்கின்றன.

துரோம்போசிஸ் (இரத்தம் உறைதல் திரைப்புவாதை) (Thrombosis)

இரத்தக் குழாய்களினுள் இரத்தம் உறைதலுக்கு துரோம்போசிஸ் என்று பெயர். இரத்தக் குழலின் சுவர்ப் பாதிப்படைந்து இரத்தம் வெளியேறுவதை உறைதல் தடுக்கும். குழாய்களினுள் இரத்தம் உறைந்து துரோம்பஸ் தோன்றுவது இயற்கைக்கு மாறான நிலையாகும்.

ஓர் தமனியினுள் தோன்றும் இரத்தக் கட்டியினால் இரத்த ஓட்டம் தடைப்படலாம். இதனால் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் செல்லவேண்டிய இரத்தம், ஆக்ஸிஜன் சென்றடையாது.

இதயத்தசைத் தமனிகளினுள் இரத்தக் கட்டி ஏற்படின் அதற்கு கோரோனரி துரோம்போசிஸ் என்று பெயர். இந்நிகழ்ச்சியால் மாரடைப்பு ஏற்படும்.

மூளைக்குச் செல்லும் தமனியில் ஏற்படும் இரத்தக் கட்டியால் பக்கவாதம் (Cerebral thrombosis அல்லது Stroke) ஏற்படும். இரத்தக் கட்டியின் ஒரு சிறு துணிக்கை இரத்த ஓட்டத்தில் இடம் பெயர்ந்தால் அதற்கு எம்போலஸ் (Embolus) என்று பெயர். இந்நிகழ்ச்சியால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு உடல் பாதிப்புகள் தோன்றும்.

ஒருங்கிணைவு உறுப்புகளின் தொகுப்புகள்

 • (CO-ORDINATIONSYSTEMS) அனைத்து உயிரிகளும் உடலினுள் நிலையான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலை மாறுபட்டாலும் நிலைத்த தன்மையைப் பெற்றிருக்கின்றன. இதற்கு ஹோமியோஸ்டேஸிஸ் என்று பெயர். இது ஒருங்கிணைவு உறுப்புகளின் செயல்பாடு ஆகும். விலங்குகளின் உடலில் உள்ள ஒருங்கிணைவு உறுப்புகள் தூண்டல்களுக்கு ஏற்ப துலங்குதல் செய்து உடலுறுப்புகளைக் கட்டுப்படுத்திச் சீராகச் செயல்படச் செய்கின்றன.
 • ஒருங்கிணைவு உறுப்புகள் தூண்டல்களைப் பெற்று, கடத்தும் திறனுள்ளவை. இவ்வுறுப்புகள் தூண்டல்களின் அழுத்தம் மற்றும் வேகம் ஆகியவற்றைக் கண்டறிந்து அதற்கேற்ப துலங்குதல் ஏற்படக் காரணமாகின்றன.
 • பாலூட்டிகள், இரு ஒருங்கிணைவு தொகுப்புகளைக் கொண்டுள்ளன. அவை (அ) நரம்பு உறுப்புகளின் தொகுப்பு, (ஆ) வேதிய ஒருங்கிணைவு (நாளமில்லா சுரப்பிகள்) ஆகும்.
 • நரம்பு ஒருங்கிணைவு நியூரான்கள் சேர்ந்த அமைப்பு நரம்புத் தொகுப்பு ஆகும். இந்நியூரான்கள், உணர் உறுப்புகள் - தண்டுவடம், மூளை மற்றும் செயலுறும் உறுப்புகள் இடையே மின்-வேதிய மாற்றங்களால் தூண்டுதல்களைக் கடத்த உதவுகின்றன. இத்தொடர் நிகழ்வுகள் நியூரான்களின் உள்ளும் புறமுமாக 'Na' மற்றும் 'K' அயனிகளின் இடமாற்றத்தால் ஏற்படுகின்றன. இதற்கு சோடியம் - பொட்டாசியம் பம்ப் என்று பெயர். இத்தகைய தொடர்மின்-வேதிய நிகழ்வுகளையே உணர்வுத் தூண்டல் என்கிறோம்.
 • நரம்பு செல் இணைப்பு ஒரு நரம்பு வழியில், நரம்பு செல்களின் இணைப்பிற்கு நரம்பு செல் இணைப்பு என்று பெயர். ஒரு நரம்பு செல்- ன் ஆக்ஸானின் முடிவில் உள்ள குமிழ் போன்ற (பௌட்டான்) பகுதி அடுத்த நரம்பு செல்-ன் டென்டிரைட்டுடன் தொடர்பு கொள்ளும். இந்த இணைவே நரம்பு செல் இணைப்பு ஆகும். இந்த இணைப்பில் ஒரு சிறிய பிளவு உள்ளது. அதன் விட்ட அளவு 10-20 நானோமீட்டர். இந்த இணைப்புப் பகுதியில் அசிட்டைல்கொலைன் எனும் வேதியப் பொருளினால் உணர்வலைகள் (தூண்டல்கள்) கடத்தப்படுகின்றன.
 • நரம்புத் தொகுப்பில் உள்ள ஆக்ஸான்களின் கற்றைகளைச் சுற்றி மயலின் உறை உள்ளது. இதுவே வெண்மைப் பொருளாகக் கருதப்படுகிறது. மயலின் உறை இல்லாத ஆக்ஸான்களின் கற்றைகள் சாம்பல் நிறப் பொருளாகக் கருதப்படுகிறது.
 • மத்திய நரம்புத் தொகுப்பில் உள்ள ஆக்ஸான்கள் வெண்மைப் பொருளாகும். இவையே நரம்பு பாதைகளாகவும் உள்ளன. இந்த ஆக்ஸான்கள் நரம்பு செல்லின் செயல்திறனைப் பரவச் செய்கின்றன. சாம்பல் நிறப்பகுதிகள் மத்திய நரம்புத் தொகுப்பில் ஒருங்கிணைப்பு வேலையைச் செய்கின்றன. மூளையின் புறணிப்பகுதி சாம்பல் நிறமாகவும், மத்தியப்பகுதி வெண்மை நிறப்பகுதியாகவும் காணப்படுவதற்கு முறையே மயலின் உறை இல்லாத ஆக்ஸான்களும் உறை உள்ள ஆக்ஸான்களும் அமைந்திருப்பதே காரணமாகும். மூளையில் சாம்பல் நிறத்திட்டுகளின் தொகுப்புகள் காணப்படுகின்றன. இவற்றிற்கு நியூக்ளியஸ் என்று பெயர்.
 • மூளை : ஒரு மனித மூளையில், ஓராயிரம் மில்லியன் நியூரான்களுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு கணக்கெடுப்பின்படி, பெருமூளை புறணியில் மட்டும் சுமார் 102783000 நரம்பு செல் இணைப்புகள் உள்ளன. ஆகவே மூளை ஒரு சிக்கலான உறுப்பு.
 • அமைப்பிலும், வேலை செய்யும் முறையிலும், மூளையை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. முன்மூளை 2. நடுமூளை 3. பின் மூளை
 • முன்மூளை (புரோசென் செஃபலான்) : - இப்பகுதி பெருமூளையையும் டையன்செஃபலானையும் உள்ளடக்கியது. டையன்செஃபலானில், தலாமஸ் மற்றும் ஹைபோதலாமஸ் உள்ளன.
 • தலாமஸ் : - இது டையன்செஃபலானின் பெரும்பகுதி. இதில் உட்கருக்களின் தொகுப்புகள் பல காணப்படுகின்றன. பெருமூளையின் புறணிப் பகுதிக்குச் செல்லும் பெரும்பாலான உணர்வு தூண்டல்கள் தலாமஸ் வழியே செல்கின்றன. ஒலி, பார்வை மற்றும் பிற உணர்வு தூண்டல்களை எடுத்துச் செல்லும் ஆக்ஸான்கள், தலாமஸில் ஒரு மனிதனுடைய பயம் மற்றும் கோபம் போன்றவற்றிற்கான மனநிலை மற்றும் பொதுவான உடல் அசைவுகளைத் தூண்டுகின்றன.

ஹைபோதலாமஸ்

இப்பகுதி சிறிய உட்கருக்களையும், நரம்பு பாதைகளையும் உள்ளடக்கியது. இந்த உட்கருக்களுக்கு மாமில்லரி உறுப்புகள் (Mamillary bodies) என்று பெயர். இவை நுகர்தலுக்கான அனிச்சை செயலிலும், நுகர்ச்சிக்கான உணர்ச்சி மிகு செயல்பாட்டிலும் சம்பந்தப்பட்டவை.

 • இதில் உள்ள புனல் போன்ற இன்பன்டிபுலம், பிட்யூட்டரி சுரப்பியின் நியூரோஹைபோபைசிஸை, ஹைபோதலாமஸுடன் இணைக்கிறது. ஆகவே ஹைபோதலாமஸ் பிட்யூட்டரியின் சுரப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.
 • ஹைபோதலாமஸ் பல்வேறு உணர்வு உறுப்புகளிலிருந்து உணர்வலை களைத் தூண்டல்களாகப் பெறுகிறது. குறிப்பாக நாக்கு, மூக்கு மற்றும் வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள் அனுப்புகின்றன. ஆகவே இப்பகுதி மனநிலை மற்றும் பொதுவாகப் பலமுறை தீர்மானிக்கப்படுகிறது. ஒரே நிகழ்ச்சி, இருவருடைய மூளை களில் இருவேறு எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. எனவே தான் ஓர் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள் அதே நிகழ்ச்சியை வெவ்வேறாக விளக்குகின்றனர்.
 • மூளையின் புறணியில் முதன்மை இயக்கப்பகுதி, உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாகக் கைகளின் நுண்ணிய இயக்கங்களை இப்பகுதி கட்டுப்படுத்துகிறது. அதிக நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள முகத்தசைகளின் நுண்ணிய அசைவுகளையும் முதன்மை இயக்கப்பகுதி கட்டுப்படுத்துகிறது. புறணியின் பெரும்பகுதி முதன்மை இயக்கப்பகுதியாகச் செயல்படுகிறது.
 • புறணியின் முதன்மை இயக்கப்பகுதியின் முன்பகுதிக்கு முன் இயக்கப்பகுதி என்று பெயர். ஒரு செயல் செய்வதற்கு முன், முன் இயக்கப் பகுதியில் இயக்கத் தூண்டல்கள் தோற்றுவிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட பின் இயக்க நரம்புகள் வழியாகத் தசைநார்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கையை உயர்த்த வேண்டுமானால் அதற்கான செயல்முறைகள் முன் இயக்கப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆகவே நம்மால் எந்த அளவுக்கு, எந்த வேகத்தில் கையை உயர்த்த வேண்டுமோ அந்த அளவுக்கு உயர்த்த முடிகிறது. இவை அனைத்தும் முன்னதாகவே நம் மூளையில் நிர்ணயிக்கப்படுகிறது.
 • இந்த முன் இயக்கப்பகுதி குரங்கினங்களிலும் (Primates) மனிதனிலும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. நம் உடலில் நடைபெறும் உணர்ச்சி மிகு செயல் களையும் மனநிலை சம்பந்தப்பட்ட செயல்களையும் இப்பகுதி கட்டுப் படுத்துகிறது. உத்வேகம், செயல்திட்டம் வகுக்க உதவும். நடுமூளை அல்லது மீசன் செஃபலான்
 • நடுமூளையின் கூரையில் நான்கு உட்கருக்கள் உள்ளன. இந்த உட்கருக்களுக்கு கார்போரா குவாட்ரி ஜெமினா என்று பெயர். இதில் 2 மேல் கோலிகுலிகள் 2 கீழ் கோலிகுலிகள் உள்ளன. மேல் கோலிக்குலிகள் பார்வை சம்பந்தப்பட்ட அனிச்சைச் செயலில் ஈடுபடுகின்றன. அவை கண் மற்றும் தலையின் அசைவுகளைக் கட்டுப்படுத்துகின்றன. அசையும் பொருட்களின் பார்வைப் பாதையைத் தொடர உதவுகின்றன. கீழ் கோலிகுலிகள் கேட்டலில் ஈடுபடுகின்றன.

பின் மூளை அல்லது ராம்பன்செஃபலான்

பின் மூளையில், சிறுமூளை, பான்ஸ் மற்றும் முகுளம் ஆகியவை அடங்கியுள்ளன.

சிறுமூளை

சிறுமூளை பிடங்கிள்களில் மூன்று நரம்பு பாதைகள் உள்ளன. இவற்றின் வழியாகவே சிறுமூளை, மத்திய நரம்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சிறுமூளையில் அடங்கியுள்ள உறுப்புகளும் அவற்றின் வேலைகளும்

ஃபிலாக்குலோனோடுலர் - உடலின் சமநிலை மற்றும் தசைநார்களின் ஓய்வு விறைப்பு நிலை (Muscle tone)

வெர்மிஸின் முன் பகுதி - இயக்க அலைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தசை நார்களின் ஓய்வு விறைப்பு நிலை (Muscle tone)

வெர்மிஸின் பின்பகுதி - நுண்ணிய இயக்க அலைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் தசை நார்களின் ஓய்வு விறைப்பு நிலை. சிறுமூளையின் வேலைத்திறன் குறையுமாயின் தசைநார்களின் செயல்பாடு, உடல் சமநிலை பேணுதல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை பாதிக்கப்படும்.

பான்ஸ் : இப்பகுதி பெருமூளையிலிருந்து செய்திகளைச் சிறுமூளைக்குக் கடத்துகிறது. இப்பகுதி உறக்கத்திற்கும் சுவாசத்திற்குமான மையப்பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி முகுளத்துடன் இணைந்து சுவாசத்தின் போது நடைபெறும் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது.

முகுளம் : இது, மூளைத்தண்டின் கீழ்ப்பகுதியாகும். மேல், கீழ் செல்லும் நரம்புப் பாதைகளின் கடத்தும் இடைப்பகுதியாக இப்பகுதி செயல்படுகின்றன. முகுளத்தில் உள்ள உட்கருக்கள் பல அனிச்சைச் செயல்களின் மையமாகச் செயல்படுகிறது. குறிப்பாக இதயத்துடிப்பின் வீதம், இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை , சுவாசம், விழுங்குதல், வாந்தி எடுத்தல், இருமல் மற்றும் தும்மல் போன்றவற்றின் அனிச்சை செயல்களில் ஈடுபட்டுள்ளது.

நினைவாற்றல்

நினைவாற்றல் என்பது மூளையின் ஒரு குறிப்பிட்ட செயலைக் குறிக்கிறது. நினைவாற்றல் என்பது சில நிமிடங்களில் இருந்து பல ஆண்டுகள் வரை நீடிக்கும் திறனாகும்.

நினைவாற்றலின் வகைகள் :

உணர்வுகளின் நினைவாற்றல் : உணர்வு தூண்டல்களை ஏற்று, அனுபவித்துப் பின்னர் மூளையில் நினைவாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இதுவே நினைவாற்றலின் தொடக்கச் செயலாகும்.

முதல் நிலை நினைவாற்றல் : இது உண்மையில் நடந்தவை, சொற்கள், எண்கள், எழுத்துக்கள் அல்லது வேறு பிற செய்திகளை நம் நினைவில் வைத்திருத்தல் ஆகும். இச்செய்திகள் நம் நினைவில், உடனடியாகக் கிடைக்கும்படி அமைந்துள்ளது. இச்செய்திகளுக்காக நீண்ட சிந்தனை தேவையில்லை.

இரண்டாம் நிலை நினைவாற்றல் : சில செய்திகள் நிரந்தரமாக நம் மூளையில் பதிவாகியுள்ளன. இச்செய்திகள் சில மணி நேரங்களுக்கு பின்போ , அல்லது சில நாட்களுக்கு பிறகோ அல்லது சில வருடங்களுக்கு பிறகோ தேவைப்படுபவை. இந்த நினைவாற்றலுக்கு நீண்ட கால நினைவாற்றல் அல்லது, நிரந்தர நினைவாற்றல் அல்லது இரண்டாம் நிலை நினைவாற்றல் என்று பெயர்.

நினைவாற்றலின் உடற்செயலியல் விளைவுகள்

தூண்டல்கள், நரம்பு செல்களின் வழியே கடத்தப்படும் போது நரம்பு செல்கள் இணைப்புப் பகுதிக்கும் முன்பகுதியில் வேதிய, இயற்பியல் மற்றும் உள்ளமைப்பு மாற்றங்கள் நடைபெறுகின்றன. இம்மாற்றங்கள் நரம்பு செல்களின் இணைப்புப் பகுதிகளில் நிரந்தரமாகத் தூண்டல்கள் கடத்தப்படுவதற்கு உதவுகின்றன.

இவ்வாறு எல்லா நரம்பு செல்களின் இணைப்பும் தூண்டல்களைக் கடத்தும் வசதிபெறுமானால் அது ஒரு சிந்தனை சுற்று (Circuit) ஆக உருவெடுக்கிறது. இந்த சர்க்யூட் ஏதாவது சம்பந்தப்பட்ட தூண்டல்களினால் பின்னாளில் தூண்டப்படும் போது ஒரு நிரந்தர நினைவு நிலையை அடைகிறது. இந்த முழு சர்க்யூட்டிற்கு நிரந்தர நினைவுப் பதிவு (Memory engram) அல்லது நினைவு தொடர்தல் என்று பெயர்.

அம்னீசீயா

அம்னீசீயா என்பது நினைவாற்றலின் இழப்பு ஆகும். இந்நோய் கண்டவர்கள் கடந்த கால நிகழ்வுகளை நினைவு கூற இயலாது.

உறக்கம்

ஒவ்வொரு நாள் இரவும் ஒரு மனிதன் நினைவிழந்த நிலையை அடைகிறான். அதிலிருந்து மீளத் தகுந்த புறத்தூண்டல்கள் தேவைப்படுகின்றன. இச்செயலை நாம் உறக்கம் என்கிறோம்.

உறக்கத்தின் வகைகள்

ஒவ்வொருவரும் இரவில் உறங்கும் போது, இருவேறு உறக்க நிலைகள் ஒன்றையொன்று மாறி, மாறி நிகழ்கின்றன. அவை 1. மெதுவான அலை உறக்கம் மற்றும் 2. REM (துரித கண் அசைவுகளுடன் கூடிய) உறக்கம்.

மெதுவான அலை உறக்கம்

இவ்வகை உறக்கத்தின் போது மூளையில் அலைகள் மிக மெதுவாகக் காணப்படுகின்றன. இந்த உறக்கத்தைப் பொதுவாக நாம் கனவற்ற உறக்கம் என்று கூறினாலும், கனவுகள் அடிக்கடி தோன்றுகின்றன. இந்த உறக்கத்தின் போது அச்சமூட்டும் (Night mare) கனவுகளும் தோன்றுகின்றன. ஆனால் நம்மால் அக்கனவு நிகழ்ச்சிகளை நினைவு கூற இயலாது. இந்த உறக்கத்தின் போது நம் உடலின் இரத்த அழுத்தம், சுவாசத்தின் வீதம் மற்றும் அடிப்படை வளர்சிதை மாற்றங்கள் குறைந்து நம் உடலுக்கு நன்மை பயக்கிறது.

REM உறக்கம் (Rapid Eye Movement sleep) (துரிதக் கண் அசைவுகளுடன் கூடிய உறக்கம்) : ஒரு சாதாரண இரவுத் தூக்கத்தின் பொழுது, ஒவ்வொரு 90 நிமிட இடைவெளியில் இவ்வுறக்கம் நிகழ்கிறது. இவ்வுறக்கம் 5 முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும். பொதுவாக இவ்வுறக்கத்தின் பொழுது கனவுகள் அதிகமாகத் தோன்றுகின்றன.

தசை நார்களின் தூண்டப்பட்ட நிலை தாழ்வடைகிறது. இது மூளையிலிருந்து செய்திகளைத் தண்டுவடத்திற்கு அனுப்பும் அமைப்பு ஏற்படுத்தும் ஒரு தடையினால் நடைபெறுகிறது.

இக்கனவுறக்கத்தின் போது இதயத்துடிப்பின் வீதம் மற்றும் சுவாச இயக்கங்கள் சீரற்று இயங்குகின்றன. மூளை துடிப்புடன் இயங்குகிறது ஆனால் மூளையிலிருந்து பல்வேறு திசைநோக்கிச் செல்லவேண்டிய மின்தூண்டல்கள் சரிவரச் செல்லாததால், நமக்குச் சுற்றுப்புற விழிப்புணர்வு இன்றி, விழித்தெழும் நிலையுமின்றி உறங்குகின்றோம்.

உறக்கத்தின் உடற்செயலியல் விளைவுகள்

உறக்கம், நமது நரம்பு உறுப்புத் தொகுப்புகளின் உணரும் திறனையும், சமநிலை பேணுதலையும் புத்துணர்வுடன் செயல்படச் செய்கிறது. நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் விளைவாகத் தமனியின் இரத்த அழுத்தம் குறைகிறது, நாடித்துடிப்பின் வீதம் குறைகிறது, தோல் இரத்தக் குழல்கள் விரிவடைகின்றன. உடற்தசைகள் தளர்ச்சி அடையும், ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றங்கள் 10% முதல் 30% வரை குறைகின்றன.

பக்கவாதம் (Stroke)

பக்கவாத நோய் மூளையின் செயல்களைத் துரிதமாக முடக்கி, தொடர்ந்து இந்நிலை 24 மணி நேரம் நீடித்தால் மரணத்தில் முடியக்கூடிய நோயாகும், (WHO). இரத்தக்குழாய்களினுள் இரத்தம் உறைதலைத் தடுக்கப் பல காரணிகள் காணப்பட்டாலும், இரத்த உறைவு ஏற்படலாம். இது சிரைகளில் அதிகம் தோன்றும். இரத்தக் குழாய்களில் இரத்த உறைவு ஏற்பட்டால் அதற்கு திராம்போஸிஸ் என்று பெயர். மூளைக்கு இரத்தத்தைச் செலுத்தும் பெருமூளைத் தமனியில் இரத்த உறைவு ஏற்பட்டால், பக்கவாத நோய் உண்டாகிறது. இந்த இரத்த உறைவு அக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மூளையில் உள்ள செல்கள் ஆங்காங்கே இறக்கின்றன. இதனையடுத்து மூளை செயலிழக்கிறது.

இரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு இரண்டு வகையாகும்.

அவை : திராம்போடிக் மற்றும் எம்போலிக்

எம்போலி வகையில் இரத்த உறைவுக் கட்டி பிரிந்து இரத்த ஓட்டத்தில் செல்லும் இதனால் முக்கிய உள்ளுறுப்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதால் அவ்வுறுப்புக்களின் திசுக்கள் மடிந்து விடுகின்றன.

மூளையில் இரத்தக் கசிவு : அதிக இரத்த அழுத்தத்தினால் மூளையில் உள்ள இரத்தக் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இரத்தக் குழாய் வெடிப்பிற்கு முன், இரத்தக்குழாயானது பை போன்று வீங்கி, பின்னர் வெடிக்கிறது. பக்கவாதம் மற்றும் இரத்தக் கசிவு ஆகியவை இரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பேயாகும்.

பக்கவாத நோயினால், மூளையும் உடலும் முடங்கிச் செயலிழக்கின்றன. இது உலகளவில் பரவியுள்ள ஒரு பொது நலப்பிரச்சினையாகும். பக்கவாதம் எந்த வயதிலும் ஏற்படலாம். கொரோனரி இதய நோய்கள், நீரிழிவு நோய், இரத்தத்தில் அதிகக் கொழுப்புக் காணப்படுதல், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், புகை பிடித்தல், மற்றும் இரத்தக் குழாய்களின் சுருக்கம் போன்ற அபாயக் காரணிகளும் பக்கவாத நோய் ஏற்படக் காரணமாக உள்ளன. இந்த அபாயக் காரணிகளைத் தடுப்பதன் மூலம் பக்கவாத நோயைத் தவிர்க்கலாம்.

அல்ஸீமியர் நோய்

அல்ஸீமியர் நோய் என்பது ஒரு தீவிர மூளைக் குறைபாடு. நீண்ட கால நினைவாற்றல் இழப்பும், பின்னர் மூளையின் சிந்தனைத் திறன் குறைந்து இறப்பும் ஏற்படலாம். இந்த நோய் பொதுவாக முதியவர்களிடம் காணப்படுகிறது. மிக அரிதாக 50 - 40 வயதிற்குட்பட்டவர்களையும் இந்நோய் தாக்குகிறது. 65 முதல் 74 வயதிற்குட் பட்டவர்களில் 5 சதவீதம் மக்கள் இந்நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் இந்நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெருமூளைப் புறணிப்பகுதி செயலிழப்பு, அல்ஸீமியர் நோயுடன் தொடர்புடையது. பெருமூளைப் புறணியில் உள்ள நியூரான்கள் சிதைவடைவதால், அவற்றின் ஆக்ஸான்களும், டென்ட்ரைட்டுகளும் சிதைவடைகின்றன. இதுவே அல்ஸீமியர் நோய்க்குக் காரணமாகிறது.

பொதுவாக அல்ஸீமியர் நோய், ஜீன் திடீர் மாற்றத்தினால் தோன்றுகிறது. டவுன்ஸ் நோய்க்குறியீடு உள்ளவர்கள், இந்நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். 21வது குரோமோசோமில் உள்ள இரண்டு அல்லது மூன்று ஜீன்களினால் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்நோய்க்கு மரபியல் பண்பே காரணம் எனக்கூற இயலாது.

மூளைக் காய்ச்சல் (மூளைச்சவ்வு காய்ச்சல்) (Meningitis)

மூளைச்சவ்வு காய்ச்சல் என்பது மூளையைச் சுற்றி உள்ள மூளைச் சவ்வுகளின் வீக்கமாகும். பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகள் போன்ற நோய்க்காரணிகளினால் இந்நோய் ஏற்படுகிறது. தலைவலி, ஒளி விரும்பாமை, எரிச்சல், கழுத்துப் பகுதியில் தசை இறுக்கம், காய்ச்சல் மற்றும் பிற நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

நிலைப்படுத்தப்பட்ட அனிச்சை செயல் (Conditioned Reflex)

முதன் முதலில் ரஷ்ய உடற்செயலியல் அறிஞர், ஐவன் பேவ்லோவ் நிலைப்படுத்தப்பட்ட அனிச்சைச் செயலை நிரூபிக்கச் சோதனை ஒன்றை நடத்தினார். பெருமூளையின் புறணி இச்செயலைக் கட்டுப்படுத்துகிறது. இது பழக்கத்திற்குட்பட்ட செயல் எனவும் அழைக்கப்படுகிறது.

பேவ்லோவ், தன் சோதனையில் முதலில் நாய்க்கு ஒரு மாமிசத் துண்டை (நிலைப்படுத்தப்படாத தூண்டல் - UCS) அளித்தார். அந்நாய் மாமிசத்தைக் கண்டவுடன் தன் வாயில் உமிழ் நீரைச் சுரந்தது. (நிலைப்படுத்தப்படாத எதிர்விளைவு - UCR) அதே சமயம் இரண்டாவதாகச் சமநிலைத் தூண்டலை அளித்தார். (மணி ஓசை - NS) மணி ஓசை மட்டும் அளிக்கப்பட்ட போது உமிழ்நீர் சுரக்கப்படவில்லை. ஆனால் மணியோசையையும் மாமிசத் துண்டத்தையும் சேர்த்துப் பலமுறை அளிக்கப்பட்ட பின்னர் மணியோசை மட்டுமே உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது.

இச்சோதனையில் சமநிலைத் தூண்டலையும், நிலைப்படுத்தப்படாத தூண்டலையும் (UCS) சேர்த்து ஒன்றாகப் பலமுறை அளிக்கும் போது, படிப்படியாகச் சம நிலைத் தூண்டலுக்கான எதிர்விளைவு தோன்றுகிறது. இந்நிலையில் சமநிலைத் தூண்டலுக்கு நிலைப்படுத்தப்பட்ட தூண்டல் (CS) என்றும் எதிர்விளைவுக்கு நிலைப்படுத்தப்பட்ட எதிர்விளைவு (CR) என்றும் பெயர்.

ஆகவே நிலைப்படுத்தப்பட்ட அனிச்சை செயல், அவ்விலங்கின் நடத்தையாக மாறிவிடுகிறது. இது கற்றலுக்கும் மற்றும் நினைவாற்றலுக்கும் அடிப்படையாக அமைந்து விடுகிறது.

எலக்ட்ரோ என்செஃபலோகிராஃபி (EEG)

பெருமூளைப் புறணியில் பெருமளவிலான நியூரான்கள் அடங்கிய உறுப்புகள் உள்ளன. இவ்வுறுப்புகளுக்கிடையே சீரான மின்னோட்ட அலைவு காணப்படுகிறது. எலக்ட்ரோ என்செஃபலோகிராஃப் என்னும் கருவியின் மூலம் எலக்ட்ரோடுகளின் உதவியுடன் இந்த மின்னோட்ட அலைவுகளை பதிவு செய்யலாம். இக்கருவி அனைத்து நியூரான்களின் மின்னோட்டத் திறனைத் தோராயமாகப் பதிவு செய்கிறது. இதன் மூலம் மூளையினுடைய செயலைக் கண்டறியலாம். குறிப்பாகப் பல்வேறு வேலைகளில் ஈடுபடும் போதும், உறக்கத்தின் போதும், விழித்திருக்கும் நிலையிலும் மூளையினுடைய செயல்களை அறியலாம். மேலும் இக்கருவியின் உதவியினால் மூளை தொடர்பான நோய்களான, புற்றுநோய் கட்டி, புண்கள் போன்ற நோய்களையும், வலிப்பினையும் கண்டறியலாம்.

வலது, இடது மூளைகளின் ஒருங்கிணைப்பு

பெருமூளை இடது அரைக்கோளப் புறணி உடலின் வலது புறத்தோலின் உணர்வு வாங்கி உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. வலது புறத்தசைகளின் இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது பெருமூளை வலது அரைக்கோளப் புறணி உடலின் இடது புறத்தில் உள்ள உணர்ச்சி உறுப்புகளுடன் இணைக்கப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதி உடலின் இடதுபுறத் தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. இரு அரைக்கோளங்களும் கண்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. இடது கண்ணின் பார்வை நரம்பு வலதுபுற மூளையுடனும் வலது கண்ணின் பார்வை நரம்பு இடது புற மூளையுடனும் பார்வை நரம்பு குறுக்கமைவின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே இடது மூளை, உடன் வலப்புறப் பகுதியையும் வலது மூளை உடன் இடப்புறப் பகுதியையும் உணர்கின்றன.

பெருமூளையின் இடது, வலது அரைக்கோளங்கள் கார்பஸ் கல்லோசம் என்னும் திசுவின் வழியாகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன. மேலும் முன்புற இணைப்புத் திசு மற்றும் ஹிப்போகேம்ப்பல் இணைப்புத் திசுவின் மூலமும் இவ்விரு அரைக்கோளங்களும் செய்திகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இவ்வாறு இவ்விரு அரைக்கோளங்களும் செயல்களைப் பிரித்து அறிந்து செயல்படுவதினால், இவ்வரைக் கோளங்களின் செயல் இருபக்க உணர் இயக்கம் (Laterization) என அழைக்கப்படுகிறது.

பெருமூளையின் அரைக்கோளங்கள் இரண்டும் தனியே செயல்படாமல் இணைந்தே செயல்பட கார்பஸ் கல்லோஸம் உதவுகிறது. முன்புற இணைப்புத் திசுக்கள், உணர்ச்சிமிகு தருணத்தில் இரு அரைக்கோளங்களும் இணைந்து சமமாகச் செயலாற்ற உதவுகிறது. கார்பஸ் கல்லோஸம் திசுவில் ஏற்படும் சிதைவு, பெருமூளையின் இரு அரைக்கோளங்களுக்கிடையேயான பரிமாற்றத் தொடர்பைத் தடுக்கிறது.

இடது மூளை, மொழி, எண்திறன், உள்ளுணர்வு, பேசும் மொழி, அறிவியல் திறன் மற்றும் வலது கை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

வலது மூளை, விழிப்புணர்வு, கற்பனை, பார்வைச் செயல், உணர்ச்சி மிகுதல், இசையறிவு, முப்பரிமாணம் மற்றும் இடது கை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இடது பக்க மூளை பகுத்தாய்வினையும் வலது பக்க மூளை படைப்புத் திறனையும் கொண்டுள்ளன.

தண்டுவடத்தின் வேலைகள்

தண்டுவடம் மூளையை, உடலின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் செயலைச் செய்கிறது. உணர்ச்சி உறுப்புகளிலிருந்து பெறப்படும் உணர்வலைகளை மூளையில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பும் வேலையைத் தண்டுவடம் செய்கிறது. அதே சமயம் மூளையில் உருவாக்கப்படும் இயக்க அலைகளை மூளையிலிருந்து அவை செயலாற்றும் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. மேலும் மூளையைப் போன்று இயக்கத் தூண்டல்களைத் தோற்றுவித்து செயலாற்றுகிறது. இச்செயல் அனிச்சை செயல் எனப்படும்.

அனிச்சைச் செயல்

உணர் உறுப்புகளின் தூண்டுதல்களினால் நம் இச்சைக்குட்படாமல் மற்றும் நாம் அறியாமல் விரைவாக நடைபெறும் நிகழ்ச்சியே அனிச்சைச் செயல் எனப்படும். (எ.கா) தூசி விழும் போது கண்களை விரைவாக மூடிக் கொள்ளுதல், கையில் வெப்பம் பட்டவுடன் உடனே இழுத்துக் கொள்ளல், அனிச்சைச் செயல்கள், நம் இச்சைக்குட்படாமல் தாமாகவே நடைபெறும். இச்செயலில் ஈடுபட்டுள்ள உறுப்புகளின் தொகுப்பு அனிச்சை வில் எனப்படும். இவை உணர் உறுப்பிற்கும், செயல் உறுப்பிற்கும் இடைப்பட்ட தொகுப்பான நரம்புச் சங்கிலிகள் ஆகும்.

அனிச்சை வில்லில் அடங்கியுள்ள உறுப்புகள்

உணர் உறுப்புகள் -> உணர்வு நரம்பு -> தண்டுவடத்தின் சாம்பல் நிறப்பகுதி > இடையீட்டு நரம்பு > இயக்க நரம்பு > செயல் உறுப்புகள்.

மூளை தண்டுவட திரவம்

மூளையின் வெண்ட்ரிகிள்கள் மற்றும் தண்டுவட மையக் குழியினுள்ளும் நிரம்பியுள்ள நிறமற்ற, தெளிவான திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் ஆகும். மூளையின் வெண்ட்ரிகிள்களில் உள்ள கொராய்டு பிளக்ஸ்ஸின் சுரப்புச் செல்கள் மூளைத் தண்டுவடத் திரவத்தைச் சுரக்கின்றன. சராசரியாக, ஒரு மனிதனில் உள்ள இத்திரவத்தின் அளவு 150 மில்லி லிட்டர். ஒரு நாளில், 550 மில்லி லிட்டர்த் திரவம் சுரக்கப்படுகிறது. மூளைத் தண்டுவடத் திரவத்தின் பணிகள் 1. தலை அசையும் பொழுது, அல்லது மத்திய நரம்பு மண்டலம் அதிர்ச்சிக்குள்ளாகும் போது இத்திரவம் அதிர்வு தாங்கியாகச் செயல்படுகிறது.

மத்திய நரம்பு மண்டலத்தின் பாதுகாப்பு உறையாகவும், மூளையின் மிதவை இயல்பையும் சரிசெய்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்திற்கு தேவையான ஹார்மோன்களையும், உணவுப் பொருட்களையும் இது சேமித்து வைக்கிறது. இது இயக்கத் தாங்கி (Mechanical buffer) ஆக இயங்குகிறது. மத்திய நரம்பு மண்டலத்தின் உள்ளும் புறமும் அமைந்து இயக்க அழுத்தத்தைச் சரி செய்கிறது. கபாலத்தின் உள்ளழுத்தம் இத்திரவத்தை வெளியேற்றுகிறது. இவ்வழுத்தம் குறையும் போது இத்திரவம் வெளிச்செல்வது நிறுத்திக் கொள்ளப்படுகிறது.

வேதி ஒருங்கிணைவு

நாளமில்லா சுரப்பிகளின் தொகுப்பும், நரம்பு உறுப்புத் தொகுப்பும் நம் உடலில் ஒருங்கிணைவை ஏற்படுத்தும் இரு பெரிய உறுப்புத் தொகுப்புகளாகும். நரம்பு உறுப்புத் தொகுப்புகளில் உருவாகும் மின் தூண்டல்கள் நரம்பு செல்லின் வழியாக வேகமாகக் கடத்தப்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், ஹார்மோன்கள் மூலமாகத் தன் வேலைகளை மேற்கொள்கின்றன. ஹார்மோன்கள் வெவ்வேறு இடங்களில் உள்ள நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கப்பட்டாலும், இரத்தத்தின் வழியாக அவைகள் செயல்படும் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. திசுக்களில், ஹார்மோன்கள், தங்களுக்கான வேலைகளைச் செய்கின்றன.

ஹார்மோன்கள் என்பவை, நாளமில்லா சுரப்பிகளில் உற்பத்தியாகின்ற வேதிப்பொருட்கள், இவை இரத்தத்தின் மூலம் அவை செயல்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்கு ஹார்மோன்கள் உடற்செயலியல் வேலையைச் செய்கின்றன. எனவே ஹார்மோன்களுக்கு வேதியத் தூதுவர்கள் என்று பெயர்.

நாளமில்லா சுரப்பிகளின் பணிகள்

நம் உடலின் உள் சூழ்நிலையைச் சீராகப் பராமரிப்பதே நாளமில்லா சுரப்பிகளின் வேலையாகும். மேலும் பல்வேறு உடற்செயலியல் செயல்களையும் ஒருங்கிணைக்கின்றன. கார்போஹைட் ரேட்டுகள், புரோட்டீன்கள், கொழுப்புகள், தாது உப்புகள், நீர் முதலானவற்றின் வளர்சிதை மாற்றங்களை, ஹார்மோன்கள் சீர்படுத்துகின்றன. விலங்குகளில், இனப்பெருக்கச் செயல்களையும் இவைகள் கட்டுப்படுத்துகின்றன. நம் உடலில் உள்ள அட்ரீனல் சுரப்பி, அவசரக் காலங்களில் நம் உடலைத் தயார்படுத்துகிறது. செல்களுக்கிடையேயான தொடர்பையும், ஹார்மோன்களே செயல்படுத்துகின்றன.

ஒவ்வொரு நாளமில்லா சுரப்பியும், அதிக அளவில் ஹார்மோன்களைச் சுரக்கின்றன. ஒரு ஹார்மோனின் உடற்செயலியல் வேலை முடிந்தபின் எதிர் தூண்டல் இயக்க (Negative feed back) முறை மூலம், அச்செய்தி அந்த நாளமில்லா சுரப்பிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் அந்தச் சுரப்பி தன் சுரப்பைக் குறைத்துக் கொள்கிறது. ஒரு ஹார்மோனின் சுரப்பு மிகக் குறைவாக இருந்தால், அதற்கான குறிப்பிட்ட உடற்செயலியல் வேலை நடைபெறாது, இச்செய்தியும், அந்த நாளமில்லா சுரப்பிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அச்சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் அச்சுரப்பி அதிக அளவு ஹார்மோனைச் சுரந்து அந்த உடற்செயலியல் வேலையை மேற்கொள்ளச் செய்கிறது. இதனால் ஹோமியோஸ்டேசிஸ் (Homeostasis) சமநிலை மீண்டும் நிலைபெறுகிறது.

ஹைபோதலாமஸ்

ஹைபோதலாமஸ், மத்திய நரம்பு உறுப்புத் தொகுப்பையும், நாளமில்லா சுரப்பிகளையும் ஒருங்கிணைக்கிறது. பிட்யூட்டரி தலைமைச் சுரப்பியாகச் செயல்பட்டு மற்ற சுரப்பிகளைக் கட்டுப்படுத்தினாலும், பிட்யூட்டரி ஹைபோதலாமஸின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. ஹைபோதலாமஸ் விடுக்கும், வெளிவரும் காரணி (Releasing factor) அல்லது தடைசெய்யும் காரணி (Inhibitory factor) போன்ற ஹார்மோன்களால் பிட்யூட்டரியின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது.

ஹைப்போதலாமஸ் நரம்புத் திசுவினால் பிட்யூட்டரியின் முன் கதுப்புடனும், எபித்தீலியத் திசுக்களால் முன்கதுப்புடனும் இணைக்கப் பட்டுள்ளது. ஹைபோதலாமஸ் செல்களிலிருந்து வெளியிடும் காரணிகள் ஆக்ஸான்கள் வழியாக பிட்யூட்டரியினை அடைகின்றன. பிட்யூட்டரியினால் சுரக்கப்படும் ஹார்மோன்கள், இரத்தத்தில் கலக்கின்றன.

பிட்யூட்டரி சுரப்பி

இச்சுரப்பி ஹைபோஃபைசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது மூளையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் பரிமாணங்கள் தோராயமாக 1.செ.மீ நீளமும் 1 முதல் 1.5 செ.மீ வரை அகலமும், 0.5 செ.மீ. கனமும் உடையது. இதன் எடை சுமாராக 500 மி.கி. உள்ளமைப்பில், பிட்யூட்டரி சுரப்பி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை முன்பகுதியில் உள்ள, அடினோ ஹைபோஃபைசிஸ் மற்றும் பின்பகுதி, நியூரோஹைபோஃபைசிஸ் ஆகும். அடினோ ஹைபோஃபைசிஸ் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை பார்ஸ் டிஸ்டாலிஸ், பார்ஸ் இண்டர்மீடியா மற்றும் பார்ஸ் டியூபராலிஸ். கருவளர்ச்சியின் போது, அடினோஹைபோஃபைசிஸ் மூலவாய்க் குழியிலிருந்து உருவாகிறது. இதுபோன்று நியூரோஹைபோஃபைசிஸ், டையன்செஃபலானின் தரைப் பகுதியிலிருந்து உருவாகிறது.

இன்பன்டிபுலம் காம்பு

 • நியூரோஹைபோஃபைசிஸ்
 • அடினோஹைபோஃபைசிஸ்

பிட்யூட்டரி சுரப்பி முன்பகுதி பிட்யூட்டரியின் ஹார்மோன்கள்

அடினோஹைபோஃபைசிஸ் ஆறு டிராப்பிக் ஹார்மோன்கள் அல்லது டிராப்பின்களை சுரக்கிறது. அவை வளர்ச்சி ஹார்மோன் அல்லது சோமாட்டோ டிரோபிக் ஹார்மோன் (GH / STH), தைரோட்ரோபின் அல்லது தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன் (TSH), அட்ரினோ கார்டிகோடிரோபிக் ஹார்மோன் (ACTH), ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டிவிடும் ஹார்மோன் (FSH), லூட்டினைசிங் ஹார்மோன் (LH), மற்றும் லூட்டியோடிரோபிக் ஹார்மோன் (LTH) அல்லது புரோலாக்டின்.

வளர்ச்சி ஹார்மோனின் வளர்சிதை மாற்றங்கள்

வளர்ச்சி ஹார்மோன், பொதுவாகப் பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கு பொறுப்பு வகிக்கிறது. வளர்ச்சியைத் தூண்டும் பல்வேறு வளர்சிதை மாற்றங்களில், இந்த ஹார்மோன் பங்கு வகிக்கிறது. கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் கொழுப்பு போன்றவற்றின் வளர்சிதை மாற்றங்களை இது தூண்டுகிறது. வளர்ச்சி ஹார்மோன் எலும்பு மற்றும் குருத்தெலும்பு உருவாக்கத்தைத் தூண்டுகிறது. நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் சோடியம் போன்ற தாது உப்புக்களை நம் உடலில் தக்க வைத்துக் கொள்ளச் செய்கிறது. இவை வளர்ச்சிக்கு உதவுகின்றன.

குழந்தை பருவத்தில் வளர்ச்சி ஹார்மோன் குறைந்தால், வளர்ச்சி தடைப்படுகிறது. எலும்பு உறுப்புகளின் வளர்ச்சி தடைப்படுவதால் குள்ளத்தன்மை ஏற்படுகிறது. இக்குறைபாடு உடையவர்கள் 0.9 - 1.2 மீ. உயரம் வரை மட்டுமே வளருவார்கள். இவர்கள் பால் முதிர்ச்சி அடைவதில்லை. இரண்டாம் நிலை பால் பண்புகளையும் பெறுவதில்லை.

குழந்தை பருவத்தில் இந்த வளர்ச்சி ஹார்மோன் அதிகம் சுரக்குமானால், இராட்சத தன்மை ஏற்படுகிறது. இக்குறைபாடு உடையவர்களின் உடலில் எலும்புகள் அதிக அளவில் வளர்ச்சி அடைகிறது. இவர்கள் 7-9 அடி உயரத்தை அடைவர். பெரியவர்களில் இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்கப்பட்டால் கீழ்த்தாடை, கை, கால் எலும்புகள் தடித்துக் காணப்படும். இந்நிலைக்கு அக்ரோமெகலி எனப்படும்.

தைரோடிரோபின் அல்லது தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன் (TSH)

தைரோடிரோபின் 28,000 டால்டன்கள் மூலக்கூறு எடையையுடைய ஒரு கிளைகோபுரதமாகும். இதில் 211 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இதன் செயல்படும் உறுப்பு, தைராய்டு சுரப்பியாகும். இது தைராய்டு சுரப்பியைத் தூண்டி, தைராக்ஸினைச் சுரக்கச் செய்கிறது.

ஹைபோதலாமஸின் வெளிவிடும் காரணிக்கும், இரத்தத்தின் தைராக்ஸின் அளவுக்கும் இடையே ஒரு எதிர்த் தூண்டல் அமைப்புச் செயல்படுகிறது. இரத்தத்தில் தைராக்ஸின் அளவு குறையுமேயானால், ஹைபோதலாமஸ் TSH-க்கான வெளிவிடும் காரணியைச் சுரந்து, பிட்யூட்டரியின் TSH-யை வெளிவரச் செய்து, அதன் மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டி தைராக்ஸினைச் சுரக்கச் செய்கிறது. இதே போன்று, தைராக்ஸின் அளவு இரத்தத்தில் அதிகமாகக் காணப்பட்டால், ஹைபோதலாமஸ் எதிர்மறையாகச் செயல்பட்டு தைராக்ஸின் சுரப்பைக் கட்டுப்படுத்தப்படுகிறது.

அட்ரினோ கார்டிகோடிரோபிக் ஹார்மோன் (ACTH)

இது ஒரு புரத ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோனும் எதிர்த் தூண்டல் முறையில் செயல்பட்டு, அட்ரீனல் சுரப்பியின் கார்டெக்ஸ் (புறணி) சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. இதன் வேறு சில செயல்கள். தோலின் மெலனோ சைட்டுகளைத் தூண்டி, தோல் நிறமிகள் தோன்றுவது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுவது மற்றும் அடிப்போஸ் திசுக்களிலிருந்து கொழுப்புகளை இடமாற்றுவது ஆகும்.

ஃபாலிக்கிள் செல்களைத் தூண்டிவிடும் ஹார்மோன் (FSH)

இது ஒரு கொனடோடிரோபின் ஹார்மோனாகும். இது ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின் இனச் செல்கள் தோன்றல் வேலைகளைத் தூண்டுகிறது. மனிதனின் FSH என்பது ஒரு சிறிய கிளைகோபுரதம் ஆகும். பெண்களில், இதன் செயல்படும் உறுப்பு, அண்டகங்களாகும். இது அண்டகத்தின் கிராஃபியன் ஃபாலிக்கிள்களின் வளர்ச்சியைத் தூண்டி, அண்டகத்தின் ஒட்டுமொத்த எடையை அதிகரிக்கச் செய்கிறது. ஆண்களில் விந்தகங்களில் செயல்பட்டு, விந்தக நுண்குழல்களில் உள்ள ஆண் இனச்செல் உற்பத்தி செய்யும் எபிதீலிய அடுக்கைத் தூண்டுகிறது. இதனால் விந்து செல்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. எஸ்டிரோஜன் சுரப்பையும் தூண்டுகிறது.

லூட்டினைசிங் ஹார்மோன் (LH) அல்லது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் ஹார்மோன் (ICSH) மனிதனின் LH ஒரு கிளைகோ புரதமாகும். பெண்களில் இந்த ஹார்மோன், அண்டகத்தின் பாலிக்கிள் செல்களின் முதிர்ச்சியைத் தூண்டி, அண்டம் விடுபடுதல் செயலையும் செய்கிறது. ஆண்களில் இந்த ஹார்மோன், விந்தகத்தில் உள்ள இடையீட்டுச் செல்களைத் தூண்டிவிட்டு, டெஸ்டோஸ்டீரான் (ஆண்ட்ரோஜென்) சுரக்குமாறு செய்கிறது.

புரோலாக்டின் அல்லது லூட்டியோடிரோபிக் ஹார்மோன் (LTH) லூட்டியோடிரோபின், லூட்டியோடிரோபிக் ஹார்மோன், லாக்டோஜெனிக் ஹார்மோன், மாம்மோடிரோபின் போன்ற பல்வேறு பெயர்களால் புரோலாக்டின் அழைக்கப்படுகிறது. இவை புரோட்டீனால் ஆனவை. இது பெண்களில், பால் சுரக்கும் செயலைத் தூண்டுகிறது. மேலும் இது கார்பஸ் லூட்டியத்தின் மீது செயல்பட்டு புரோஜெஸ்டிரோன் சுரக்கச் செய்கிறது. எஸ்ட்ரோஜனுடன் சேர்ந்து பால்சுரப்பி வளர்ச்சிக்கும், பால் சுரத்தலுக்கும் தயார் செய்கிறது.

நியூரோஹைபோபைசிஸின் ஹார்மோன்கள்

இது பிட்யூட்டரி சுரப்பியின் பின்பகுதியாகும். இப்பகுதி ஆக்ஸிடோசின் மற்றும் வாஸோப்பிரஸ்ஸின் என்னும் இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது. ஆக்ஸிடோசின், தொடர்ச்சியான அமினோ அமிலங்களை உள்ளடக்கியது. ஆக்ஸிடோசின் என்னும் சொல்லுக்குத் 'துரிதப் பிறப்பு' என்று பொருள். அதாவது, இந்த ஹார்மோன், கருப்பையின் மென்மையான தசைகள் மீது செயல்பட்டு, அவற்றைச் சுருங்கச் செய்து, குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது. இதனுடைய அடுத்த முக்கிய செயல், பால் சுரப்பைத் தூண்டிப் பாலை சுரக்கச் செய்தல் ஆகும். ஆக்ஸிடோசின், பால் சுரப்பிகளில் உள்ள குழல்கள் மற்றும் குழிகளைச் சுற்றியுள்ள மையோ எபிதீலியச் செல்களைத் தூண்டுகிறது. மையோஎபிதீலியப் பகுதி சுருங்குவதால், அங்கிருந்து பாலானது, பெரிய குழல் அல்லது சைனோஸஸ் பகுதியை வந்து அடைகிறது. பின்னர் சைனோஸஸ் பகுதியிலிருந்து பால், வெளித்தள்ளப்படுகிறது.

வாஸோப்பிரஸ்ஸின்

இந்த ஹார்மோன், ஆண்டிடையூரிடிக் ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது, சிறுநீரகக் குழல்களில் செயல்பட்டு, நீரை, நம் உடலில் நிறுத்திக் கொள்கிறது. இது, நெப்ஃரானின் சேய்மை சுருண்ட குழல் மற்றும் சேகரிக்கும் குழல்கள் மீது செயல்பட்டு, சிறுநீரக வடிதிரவத்திலிருந்து நீரை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. இது எல்லா இரத்தக் குழல்களையும் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது யூரியாவை நிறுத்தி வைக்கிறது. இந்த ஹார்மோனின் குறைவால் டையாபெடீஸ் இன்சிபிடஸ் என்னும் நீரிழிவு நோய் தோன்றுகிறது. இந்நோய் கண்டவர்கள், அதிக அளவில் சிறுநீரை வெளியேற்றுவார்கள் (பாலியூரியா). இதனைத் தொடர்ந்து அதிக அளவில் தாகம் கொண்டு பெருமளவு தண்ணீர் அருந்துவார்கள் (பாலிடிப்ஸியா).

தைராய்டு சுரப்பியும் தைராக்ஸின் ஹார்மோனும்

தைராய்டு சுரப்பி இரண்டு கதுப்புகளைக் கொண்டது. இவை கழுத்துப் பகுதியில் குரல்வளையின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளன. இந்த இரு கதுப்புகளும் இஸ்த்மஸ் எனப்படும் குறுகிய சுரப்புத்தன்மையுடைய முன்பக்கத் திசுவால் இணைக்கப் பட்டிருக்கின்றன. தைராய்டு சுரப்பியின் ஒவ்வொரு கதுப்பும் பல நுண் கதுப்புகளைக் கொண்டுள்ளது. இந்த நுண்கதுப்புகள் ஃபாலிக்கிள் களாலானவை. இந்த ஃபாலிக்கிள்கள், அசினஸ் என்றழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அசினஸின் ஓரமும் கன சதுர வடிவ எபிதீலியல் செல்களைக் கொண் டுள்ளது.

அசினஸின் உட்குழியினுள் ஜெல்லி போன்ற கொல்லாய்டு திரவம் நிரம்பியுள்ளது. இத்திரவத்தில் தைராக்ஸின் அடங்கியுள்ளது. தைராக்ஸினில் 65% அயோடின் அடங்கியுள்ளது. இது டைரோசின் என்னும் அமினோ அமிலத்தாலானது.

தைராய்டின் பணிகள் : இது இயல்பான உடல் வளர்ச்சியையும் குறிப்பாக எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியையும் தூண்டி விடுகிறது. இது செல் ஆக்ஸிகரண வீதம் மற்றும் அடிப்படை வளர்சிதை மாற்றச் செயல்களையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் அடிப்படை வளர்சிதை மாற்ற வீதத்தை அதிகரிக்கிறது. உடலும் மனமும் பூரண ஓய்வில் இருக்கும் போது, 20°C அறை வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட கால அளவில், உடலில் உண்டாகும் வெப்பத்தின் அளவே அடிப்படை வளர்சிதை மாற்ற அளவு ஆகும்.

தைராக்ஸினின் செயல்பாடுகள்

குழந்தை பிறக்கும் தருவாயிலும், பிறந்த முதல் ஓராண்டு காலங்களில் குழந்தையின் நரம்பு உறுப்புத் தொகுப்புகளின் வளர்ச்சிக்கு இந்த ஹார்மோன் மிகவும் அவசியம்.

மூளை, இனப்பெருக்க உறுப்புகள், பால் உறுப்புகள், நிணநீர் முடிச்சுகள், மண்ணீரல் மற்றும் நுரையீரல் ஆகிய உறுப்புகள் தவிர மற்ற திசுக்களின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

 1. சிறுகுடலிலிருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதில் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. சீரம் கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது.
 2. புரத வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
 3. இது, இதயத்துடிப்பின் வீதம், இதயச் சுருக்கத்தின் வேகம் இரத்த நாளத்தில்
 4. இரத்த அழுத்தம் போன்ற செயல்களை அதிகரிக்கச் செய்கிறது.
 5. இரத்தத்தில் சரியான அளவு தைராக்ஸின் நிலை நிறுத்தப்பட்டால், அது தசை நார்களின் செயல்களைச் திறம்பட நடைபெற வைக்கிறது.
 6. இரத்தத்தில் உள்ள தைராக்ஸினின் சரியான அளவு இனப்பெருக்க உறுப்புகள், திறம்பட செயல்பட உதவுகிறது.

ஹைபோதைராய்டிஸம்

தைராக்ஸின் சுரத்தலின் பற்றாக்குறை ஹைப்போதைராய்டிஸம் ஆகும். அயோடின் குறைபாட்டினால் எளிய காய்டர், கிரிட்டினிஸம் மற்றும் மிக்ஸிடிமா போன்ற குறைபாடு நோய்கள் தோன்றும். நாம் உண்ணும் உணவில் அயோடின் குறைவாக இருந்தால், (ஒரு நாளைக்கு 10 மைக்ரோகிராமுக்கு குறைவாக) தைராக்ஸின் உற்பத்தியில் குறைவு ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் தைராக்ஸின் அளவு குறைவதால், அதிக அளவு TSH சுரக்கப்படுகிறது. இது தைராய்டு சுரப்பியை வீங்கச் செய்கிறது. இந்நிலைக்கு எளிய காய்டர் என்றும் பெயர் உண்டு. இதற்கு என்டமிக் காய்டர் என்று பெயர். ஏனென்றால் இந்நோய் மண்ணில் அயோடின் குறைவாக காணப்படும் இடங்களில் காணப்படுகிறது.

கிரிட்டினிஸம்

குழந்தைகள் பிறக்கும் போதே தைராக்ஸின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டால் இந்நிலைமை ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளாவன, நரம்பு மண்டல வளர்ச்சி தடைபடுதல், உடல் வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படுதல், நாக்கு வெளியே தள்ளுதல், வயிற்றுப் பகுதி வீக்கமுற்று காணப்படுதல், அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம் குறைதல், உடலின் வெப்பநிலை குறைதல், எலும்பு உறுப்புகளின் வளர்ச்சி குன்றுதல் மற்றும் பருவ முதிர்ச்சி அடையாதலினால் பால் பண்புகளின் வளர்ச்சி தடைபடுதல் ஆகும்.

மிக்ஸிடிமா

தைராக்ஸின் பற்றாக்குறையினால், பெரியவர்களுக்கு மிக்ஸிடிமா என்னும் நோய் தோன்றுகிறது. குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்ற வீதம், தோல் தடித்து, உலர்ந்து சொரசொரப்பாகுதல், உணர்ச்சிகளற்ற உப்பிய முகம், தோலில் முடி உதிர்தல், குரலில் மாற்றம், மெதுவான பேச்சு, மெதுவான சிந்தனை, ஞாபக மறதி போன்றவை மிக்ஸிடிமாவின் அறிகுறிகள் ஆகும். இந்நோயின் மற்ற பிற குறைபாடுகள், உடல் சோர்வு, குறைந்த இரத்த அழுத்தம், இரத்தச் சோகை, சீரம் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை. ஹைபர்தைராய்டிஸம் அல்லது தைரோடாக்ஸிகோஸிஸ் (கிரேவின் நோய் அல்லது எக்சோஃப்தால்மிக் காய்டர்) தைராய்டு சுரப்பியின் சுரப்பு அதிகரிப்பதால், கிரேவின் நோய் ஏற்படுகிறது.

இந்நோயின் அறிகுறிகளாவன:

மிகையான அடிப்படை வளர்சிதை மாற்றம், மிகையான சுவாசம், பிதுங்கிய கண்கள், மிகையான இதயத்துடிப்பு, நரம்பு கிளர்ச்சி, உணர்ச்சி வசப்படும் போது நிலைத்தன்மையை இழத்தல், உடல் எடை குறைதல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுதல், சீரம் கொலஸ்ட்ரால் அளவு குறைதல், பால் உறுப்புகளின் செயல்பாட்டில் மாறுபாடு ஏற்படுதல் போன்றவை.

பாராதைராய்டு சுரப்பி : மனிதனில் பாராதைராய்டு சுரப்பி, மஞ்சள் - பழுப்பு நிறத்தில், நீள்வட்ட வடிவத்தில், தைராய்டு சுரப்பியின் பின்பகுதியில் அமைந்துள்ள சுரப்பியாகும்.

இச்சுரப்பி இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது. அவை,

பாராதார்மோன்

பாராத்தார்மோன் ஓர் பாலிபெப்டைட் சங்கிலி ஆகும். இது உயிர் செயல்பாட்டினில் குறைந்த நேரமே செயல்படுகிறது. இதன் அரைவாழ்வுத் தன்மை இருபது முதல் முப்பது நிமிடங்களே ஆகும்.

பாராதார்மோன் நம் உடலில் மூன்று வேறுபட்ட இடங்களில் தன் வேலையைச் செய்கிறது. அவை, எலும்பு உறுப்புகள், சிறுநீரகம் மற்றும் உணவுக் குடல் ஆகும். எலும்பு உறுப்புகளில் இந்த ஹார்மோன், எலும்புத் திசுவின் மீது செயல்பட்டு, ஆஸ்டியோகிளாஸ்ட் செல்களின் செயலைத் தூண்டுகிறது. (எலும்பைச் சிதைக்கும் செல்கள்) இதனால் எலும்பு மஜ்ஜையிலிருந்து, கால்சியம் விடுவிக்கப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது. இச்செயல் எலும்புகளுக்கு புதுவடிவம் கொடுக்கிறது.

சிறுநீரகங்களில், பாராதார்மோன், பாஸ்பேட்டை வெளியேற்றத் தூண்டுகிறது. உணவுக்குடலிலிருந்து பாஸ்பேட் மற்றும் கால்சியம் உப்புகளை உறிஞ்சத் துணைபுரிவதன் மூலம் வைட்டமின் D உற்பத்தியையும் உயர்த்துகிறது. இதன் விளைவாகச் சுழற்சி இரத்தத்தில் பாஸ்பேட் மற்றும் கால்சியத்தின் அளவு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் வேறு சில உடற்செயலியல் வேலைகளையும் செய்கிறது. அவை, 1. எலும்பை உருவாக்கும் செல்கள் (ஆஸ்டியோபிளாஸ்ட்) மீது ஒரு தடையை ஏற்படுத்துகிறது. 2. சிறுநீரிலிருந்து பைகார்பனேட்டை மீண்டும் உறிஞ்சுதல் மற்றும் சிறுநீரின் pH (கார-அமில நிலை) அளவைக் குறைத்தல் ஆகியன.

கால்சிடோனின்

இது கால்சியத்தைக் குறைக்கும் ஹார்மோன். இந்த ஹார்மோன் சுரப்பியின் பாராஃபாலிக்குலர் செல்களினால் சுரக்கப்படுகிறது. இது ஒரு புரதமாகும். இது பாராஃதார்மோனுக்கு எதிராகச் செயல்படுகிறது. சிறுநீரகங்களில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் பல அயனிகள் மீண்டும் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இரைப்பையில் சுரக்கும் HCI-ன் அளவைக் குறைக்கிறது. மேலும் இன்சுலின் மற்றும் குளுக்கோகான் சுரப்புகளின் அளவைக் குறைக்கிறது.

ஹைபர் பாராதைராய்டிசம்

இது, இரத்தத்தில் அதிக அளவு பாராதைராய்டு ஹார்மோன் இருப்பதைக் குறிக்கிறது. பாராதைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கப்பட்டால் எலும்புகளிலிருந்து தாது உப்புகள் நீக்கப்படுகின்றன. மேலும் புரதமேட்ரிசும் உறிஞ்சப்படுகிறது. இதனால் எலும்பு சவ்வுப்பைத் தோன்றி, இரத்தத்தில் கால்சியத்தின் அளவு உயர்ந்து விடுகிறது. சிறுநீரகம், தமனி, வயிறு, நுரையீரல் ஆகியவற்றில் கால்சியப்படிவு ஏற்படுகிறது.

ஹைபோபாராதைராய்டிசம்

பாராதைராய்டு சுரப்பி உடலிலிருந்து நீக்கப்படும் போது இரத்தத்தின் கால்சியத்தின் அளவு குறைந்து டெட்டனி அல்லது கிட்டிப்போதல் என்னும் நிலை உண்டாகிறது. டெட்டனியினால், சீரம் கால்சியம் அளவு குறைகிறது. (ஹைபோகால்சிமியா), சிறுநீரகம் வெளியேற்றும் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டின் அளவுகளும் குறைகின்றன. நரம்புடன் ஒட்டிய தசைப்பகுதிகள் அதிகமாகத் தூண்டப்படுதல் மற்றும் தசை நார்களின் இறுக்கம் வலிப்பு போன்றவை அறிகுறிகளாகத் தோன்றுகின்றன.

கணையம்

கணையத் திசுவில் காணப்படும் சிறப்பு வகை நாளமில்லா சுரப்பி செல்களுக்கு லாங்கர்ஹானின் திட்டுகள் என்று பெயர். இச்செல்கள், உற்பத்தி செய்து, சேகரித்து, சுரக்கும் ஹார்மோன்கள், இன்சுலினும், குளுக்கோகானும் ஆகும். இச்செல்களில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. அவை ஆல்ஃபா மற்றும் பீட்டா செல்கள் ஆகும். ஆல்ஃபா செல்கள், குளுக்கோகானையும், பீட்டா செல்கள் இன்சுலினையும் சுரக்கின்றன. இவையல்லாது கூடுதலாக டெல்டா செல்களும் கணையத் திசுக்களில் காணப்படுகின்றன. சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, இச்செல்கள் ஆல்ஃபா மற்றும் பீட்டா செல்களுக்கும் இடையேயான தற்காலிக நிலை.

இன்சுலின்

இது ஒரு புரதம் அல்லது பாலிபெப்டைடு. இதில் 51 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. மனித இன்சுலின் மூலக்கூற்றின் எடை 5,734 டால்டன்கள். இது (அ) மற்றும் (ஆ) என்னும் இரண்டு சங்கிலித் தொடரைக் கொண்டது. இத்தொடர்கள் டைசல்பைடு பாலங்கள் மூலம் இரண்டு சிஸ்டைன்களுக்கு இடையே இணைக்கப்பட்டுள்ளன.

இன்சுலினின் உடற்செயலியல் செயல்கள்

இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை மூன்று வழிகளில் குறைக்கிறது.

(அ) இது குளுக்கோஸை, கிளைக்கோஜனாக மாற்றிக் கல்லீரல் மற்றும் தசைகளில் சேமிக்கப்படுவதை அதிகரிக்கச் செய்கிறது.

(ஆ) திசுக்களில் குளுக்கோஸ் ஆக்ஸிகரணம் அடையும் வீதத்தை அதிகரிக்கச் செய்கிறது.

(இ) குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்படுவதை அதிகரிக்கச் செய்கிறது.

(ஈ) அமினோ அமிலங்கள் சிதைவுற்று நீர் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு ஆக மாறும் செயலின் வீதத்தை ஒழுங்குப்படுத்துகிறது.

(உ) மிதமான அளவில், கல்லீரலில் கார்போஹைட்ரேட் அல்லாத பொருளிலிருந்து குளுக்கோஸ் உற்பத்தியையும் (குளுக்கோ நியோஜெனிஸிஸ்) சீராகப் பராமரிக்கிறது.

ஆகவே, இன்சுலின் இரத்தத்திலுள்ள குளுக்கோசின் அளவை குறைக்கிறது (ஹைபோகிளைசிமியா) போதுமான அளவு இன்சுலின் சுரக்காவிடில் தசைகள், கல்லீரல் இவற்றால் குளுக்கோஸை, கிளைகோஜனாக மாற்ற இயலாது. இதன் விளைவாக இரத்தத்தில் குளுக்கோஸ் அதிக அளவு சேர்வதால் இரத்தச் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. இந்த மிகைச் சர்க்கரை நிலைக்கு ஹைபர்கிளைசிமியா என்று பெயர். இதன் காரணமாக, அதிக அளவு குளுக்கோஸ் சிறுநீருடன் வெளியேற்றப்படும்.

இதுவே நீரிழிவு நோயாகும் (டயாபடீஸ் மெல்லிடஸ்). நீரிழிவு நோயாளி ஒருவர், அதிக அளவு சிறுநீரை வெளியேற்றுவார், (பாலியூரியா), மேலும் அதிகமாக நீர் அருந்துவர், (பாலிடிப்ஸியா), எப்போதும் பசி ஏற்பட்டு அதிகமாக உணவு உட்கொள்வர் (பாலிபேஜியா). இன்சுலின் அளவு குறையும் போது கொழுப்புச் சிதைவு அதிகரித்து குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இதனால் இரத்தத்தில் மேலும் குளுக்கோஸ் அளவு அதிகமாகி, அதன் விளைவாக கீட்டோன் பொருட்கள் சேர்கின்றன. இந்நிலைக்கு கீட்டோஸிஸ் என்று பெயர்.

இரத்தச் சர்க்கரை அதிகரிப்பு (Hyperglycemia)

உணவுண்ணா நிலையில் இயல்பான இரத்தச் சர்க்கரையின் அளவு 70 - 110 மி.கி / டெ.லிட்டர் ஆகும். இந்த அளவு அன்றாட பல நிகழ்ச்சிகளிலும் மாறாதிருக்கும். கார்போஹைட்ரேட் மிகுந்த உணவினை உட்கொண்டபின் இரத்தச் சர்க்கரை உச்சகட்டமாக 140 மி.கி / டெ.லிட்டர் அளவை எட்டலாம். இவ்வகை உயர் அளவு இரத்தத்தில் நீடித்தால் அதற்கு ஹைப்பர்கிளைசீமியா என்று பெயர். இந்நிலை தொடர்ந்து நீடித்தால் உடல் உறுப்புகளின் பாதிப்பும், மரணமும் நேரிடலாம். 400 மி.கி / டெ.லிட்டர் அளவு ஒரு சில நாட்கள் நீடிப்பினும் உடல் நீர் இழப்பு, கோமா மற்றும் மரணம் நிகழும்.

இரத்தச் சர்க்கரைக் குறைவு (Hypoglycemia)

இந்நிலையில் இரத்தப் பிளாஸ்மாவில் குளுக்கோசின் அளவு குறையும். உணவுண்ணா நிலையில் மிகவும் குறைந்துவிடும். இதற்கு உண்ணாநிலை ஹைப்போகிளைசீமியா என்று பெயர். அதிக அளவு இன்சுலின் சுரப்பு, பிற உடற்செயல் காரணிகளால் சர்க்கரைக் குறைவு நிலை தோன்றும். ஹைப்போகிளைசீமியா நிலைக்குச் சர்க்கரையின் அளவினைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் இயலாது.

உணவுண்ணா நிலையில் இரத்தச் சர்க்கரை அளவு குறைவினால் பசியுணர்வு, அதிகரிக்கப்பட்ட இதயத் துடிப்பு, பதற்றம் போன்றவை ஏற்படும். இத்தன்மைகள் பரிவு நரம்பு மண்டலத்தின் செயல்களால் தோன்றுகின்றன. மூளைக்குக் கிடைக்கும் குளுக்கோஸ் சர்க்கரையின் அளவு குறைவதால் தலைவலி, குழப்பம், பேச்சுக் குழறல் போன்றவை ஏற்படும். மூளை பாதிப்பால் வலிப்பு, கோமா நிலை போன்றவையும் ஏற்படலாம்.

டையாபெட்டிஸ் மெலிட்டஸ் (Diabetes mellitus) சர்க்கரை நோய்

டையாபெட்டிஸ் எனும் சொல் கிரேக்க மொழியில் 'ஓடுகுழல்' அல்லது 'ஊடாக ஓடுதல்' எனும் பொருள் கொண்டது. இந்நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிக அளவில் சிறுநீர் கழிப்பதை இச்சொல் குறிப்பிடுகிறது. ' ெம - ட்டஸ்' என்பதற்கு இனிப்பு என்று பொருள். தொடர்ந்த ஹைப்பர் கிளைசீமியாவினால் சர்க்கரை நோய் தோன்றும். இந்நோய் இனிசுலின் குறைவினாலோ அல்லது இனிசுலினுக்கு உடல் செல்கள் இயங்காத நிலையிலோ ஏற்படலாம்.

முதல்வகை டையாபெட்டிஸ் (இனிசுலின் சார்பு நிலை)

இவ்வகை நோயில் லாங்கர்ஹான் திட்டுக்களிலும், பிளாஸ்மாவிலும் இனிசுலின் ஹார்மோன் மிகவும் குறைந்திருக்கும். அரிதாகக் காணப்படும் இவ்வகையில் கணயத்தின் 8 செல்கள் பாதிப்படைந்திருக்கும்.

இரண்டாம் வகை டையாபெட்டிஸ் (இன்சுலின் சாராத நிலை)

இரத்தப் பிளாஸ்மாவில் இன்சுலின் இயல்பான அல்லது இயல்பிற்கும் அதிகமான நிலைகளில் இருக்கும். இரத்தத்தில் சுற்றிவரும் இன்சுலினால் உடல் செல்கள் தூண்டுதல் பெறுவதில்லை. இந்நிலை உடல் குண்டாதல், அதிக உணவு உட்கொள்ளுதல், உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் ஏற்படும்.

உணவின் வழியாகப் பெறும் கலோரி அளவினைக் கட்டுப்படுத்துவதால் செல்களின் இனிசுலினால் தூண்டப்பெறும் திறனை அதிகப்படுத்தலாம். எனவே வேறு எவ்வித சிகிச்சையும் இல்லாமல் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாகவே சில வேளைகளில் இரண்டாம் வகை சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்த இயலும். உடற்பயிற்சியின் மூலமும் இனிசுலினால் தூண்டுதல் பெறும் இடங்களை அதிகரிக்கலாம்.

குளுக்கோகான் : இது ஆல்ஃபா செல்களினால் சுரக்கப்படும் 29 அமினோ அமிலங்களை உடைய பாலிபெப்டைடு ஹார்மோனாகும்.

குளுக்கோகானின் உடற்செயலியல் செயல்கள்

கல்லீரலில், கிளைக்கோஜன் மீது செயல்பட்டு கிளைக்கோஜெனோலைசிஸ் செயல் மூலம் குளுக்கோஸை உற்பத்தி செய்து இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. எனவே குளுக்கோகான், ஹைபர் கிளைசீமிக் ஹார்மோன் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த ஹார்மோன் கல்லீரலில் உள்ள அமினோ அமிலங்கள் மீது செயல்பட்டு குளுக்கோ நியோஜெனிஸிஸ் என்னும் செயல்மூலம் குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. அடிப்போஸ் திசுக்களில் கொழுப்புச் சிதைவைத் தூண்டிக் கொழுப்பு அமிலங்களை விடுவிக்கிறது. கொழுப்பு அமிலங்களின் அதிகமான ஆக்ஸிகரணம், கீட்டோஜெனிஸிஸ் செயலில் முடிகிறது. மேலும் இது இதயத்தசைகளைச் சுருங்கச் செய்கிறது. சிறுநீரகங்களில், பிளாஸ்மா செல்லுதலையும் குளோமருலார் வடிகட்டும் திறனையும் இந்த ஹார்மோன் அதிகரிக்கிறது. இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க இன்சுலின் மற்றும் குளுக்கோகான் ஆகிய இரு ஹார்மோன்களுக்கு இடையே ஒரு சரியான சமநிலை அவசியமாகிறது.

அட்ரீனல் சுரப்பிகள்

அட்ரீனல் சுரப்பி அல்லது சிறுநீரக மேற்புறச்சுரப்பியின் வெளிப்புறம் கார்டெக்ஸ் மற்றும் உட்புற மெடுல்லா என்னும் இருபகுதிகளை உடையது. இவற்றில் அட்ரீனல் கார்டெக்ஸ் பெரும்பகுதியாகும். வளர்ந்தவர்களில், கார்டெக்ஸ் பகுதி, மூன்று அடுக்குகளை உடையது. அவை மெல்லிய வெளி அடுக்கு - சோனா குளோமருலோசா, தடித்த நடு அடுக்கு - சோனா பேசிகுலேட்டா மற்றும் தடித்த உள் அடுக்கு - சோனா ரெட்டிகுலாரிஸ் ஆகும். மனிதனில் சோனா பேஸிகுலேட்டா மற்றும் சோனா ரெட்டிகுலாரிஸ் செல்கள் ஒன்று போல் செயல்பட்டு, முக்கிய பணியாக குளுக்கோ கார்டிகாய்டுகளையும், சிறிதளவு ஆண்ட்ரோஜன் மற்றும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன்களையும் சுரக்கின்றன. சோனா குளோமருலோசா தாது கலந்த கார்டிகாய்டுகளை (அல்டோஸ்டீரான்) சுரக்கிறது. எல்லா அட்ரீனல் கார்டிகாய்டுகளும் ஸ்டீராய்டு வகையைச் சேர்ந்தவை.

குளுக்கோ கார்டிகாய்டுகளின் செயல்கள்

கார்ட்டிஸோன், அதனோடு இணைந்த ஸ்டீராய்டுகள் ஆகியவைகள் முக்கிய குளுகோகார்டிகாய்டுகள் ஆகும். இவை கொழுப்புகள், அமினோ அமிலங்கள் போன்ற கார்போஹைட்ரேட் அல்லாதவைகளிலிருந்து குளுக்கோஸ் உற்பத்தியாவதை தூண்டுகின்றன. பொதுவாகத் திசுக்களில் குளுக்கோஸின் உபயோகத்தை குளுக்கோகார்டிகாய்டுகள் குறைக்கவும் செய்கின்றன. இச்செயல்களால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கின்றது. கார்ட்டிசோன் அழற்சி தடுப்புப் பொருளாகவும் செயல்படுகிறது.

தாது கலந்த கார்டிகாய்டுகளின் செயல்கள்

இவை முக்கியமாகச் சோடியத்தின் வளர்சிதை மாற்றத்தையும், மறைமுகமாகப் பொட்டாசியத்தின் வளர்சிதை மாற்றத்தையும் கண்காணிக்கின்றன. தாதுகலந்த கார்ட்டிகாய்டுகளில் முக்கியமானது அல்டோஸ்டீரோன் ஆகும். சிறுநீரக குளோமருலஸ் வடிதிரவத்திலிருந்து சோடியம் அயனிகளை உறிஞ்சிக் கொள்ளுதலை அதிகரிக்கச் செய்வதே இதன் முக்கிய பணியாகும். சோடியம் அயனிகளை நிறுத்திக் கொள்வதனால், சிறுநீரகங்கள் குளோரைடை அதிகமாகவும் பொட்டாசியத்தைக் குறைவாகவும் நிறுத்திக் கொள்கின்றன. அட்ரீனல் கார்டெக்ஸின் முக்கிய வேலை, நெருக்கடி சகிப்பில் (Stress tolerence) பங்கேற்பதாகும்.

அட்ரீனல் மெடுல்லா

இப்பகுதி, புற அமைப்பிலும், உடற்செயலியல் அமைப்பிலும், கார்டெக்ஸ் பகுதியிலிருந்து வேறுபட்டது. கரு வளர்ச்சியின் போது கார்டெக்ஸ் மற்றும் மெடுல்லா பகுதிகள் தனித்தனியான திசுக்களிலிருந்து தோன்றியவை. மனிதனிலும் மற்றும் பிற பாலூட்டிகளிலும் மெடுல்லா பகுதி, கார்டெக்ஸ் பகுதியினுள் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. அட்ரீனல் மெடுல்லாவின் செல்கள் பெரிய முட்டை வடிவமானவை. தூண் வகையைச் சேர்ந்த இச்செல்கள் இரத்த நாளங்களைச் சுற்றிக் கூட்டமாக அமைந்துள்ளன. அட்ரீனல் மெடுல்லா 1. அட்ரீனலின் அல்லது எபிநெஃப்ரின் மற்றும் 2. நார் - அட்ரீனலின் அல்லது நார் எபிநெஃப்ரின் என்ற இரு ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த இரு ஹார்மோன்களும் கேட்டிகோலமைன் (Catecholamine) வகையைச் சேர்ந்தவை.

அட்ரீனலின் அல்லது எபிநெஃபரினின் பல்வேறு உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியல் பணிகளை கீழ் காணலாம்

 1. அட்ரீனலின் ஹார்மோன் சிறுகுடல், சிறுநீரகம் மற்ற உள்ளுறுப்புகள் தோல்ஆகியவற்றிற்குச் செல்லும் இரத்த நாளங்களைச் சுருங்கச் செய்கிறது. மேலும் எலும்புத் தசைகள், இதயத் தசைகளுக்கு செல்லும் இரத்த நாளங்களை விரிவடையச் செய்கிறது.
 2. இதயத்துடிப்பின் வீதத்தையும், இதயத்தின் அலைவு எண்ணையும் அதிகரிக்கச் செய்கிறது.
 3. உணவுக் குழலின் மென்மையான தசைகளை விரிவடையச் செய்வதன் மூலம் உணவுக் குழலின் அலை இயக்கத்தை (பெரிஸ்டால்டிக்) நிறுத்தி விடுகிறது. மூச்சுக்குழல்கள் விரிவடைதல், கண்பாவை விரிவடைதல், சுருக்குத் தசைகள் சுருங்குதல், வியர்வை உற்பத்தியை அதிகரித்தல் ஆகியவை இதன் செயல்களாகும்.
 4. உரோமக் கால்களுக்கு செல்லும் தசைகளில் சுருக்கத்தை உண்டாக்கி உரோமம் குத்திட்டு நிற்கச் செய்கிறது.
 5. சுவாசத்தை அதிகரிக்கச் செய்து மூளை விழிப்புணர்வைத் தூண்டுகிறது.
 6. கிளைக்கோஜனை குளுக்கோஸாக மாற்றி, அதன் காரணமாக, ஆக்ஸிஜன்
 7. உள்ளிழுத்தல், மற்றும் வெப்ப உற்பத்தியைத் துரிதப்படுத்துகிறது.
 8. உயிர் வேதியியல் செயல்களில், கொழுப்பு அமிலங்களை விடுவிக்கிறது. மேலும், இரத்தச் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.

அட்ரீனலின் நெருக்கடி சமயத்தில், தகவமைப்பில் பங்கேற்கிறது. ஆகவே இந்த ஹார்மோனுக்கு கோபம், ஓட்டம் மற்றும் பயமுறுத்தல் (Fight, Flight, Fright) ஹார்மோன் என்று பெயர்.

நார் - அட்ரீனலின் பணிகள் : பொதுவாக இது அட்ரீனலின் போல செயல்பட்டாலும், இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழல்கள் தவிர மற்ற இரத்தக் குழல்களில் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது. அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் ஆகிய இரு ஹார்மோன்களும் இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. இது இதயச் சுருக்கத்தின் போதும் விரிவடையும் போதும் காணப்படும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. உணவுக்குடலின் மென்மையான தசைகள் மீது இது செயல்பட்டு, அவைகள் சுருக்கமடைவதை ஓரளவு தடுக்கிறது. இருப்பினும், நுரையீரல் சிறுகுழல்களின் தசைகளைத் தளர்வடையச் செய்வதில்லை. நார் அட்ரீனலின், கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திலும் ஆக்ஸிஜன் ஏற்பதிலும் மிகக் குறைந்த அளவே செயல்படுகிறது.

இனப்பெருக்கச் சுரப்பிகள்

விந்தகங்களும், அண்டகங்களும் இனச்செல் உற்பத்தி செய்யும் உறுப்பாகவும், நாளமில்லா சுரப்பிகளாகவும் செயல்படுகின்றன.

விந்தகம் : ஆண்களில், இனச்செல்களை உற்பத்தி செய்யும் எபிதீலியச் செல்கள் அல்லாது, இன்னும் பிற எபிதீலியாய்டு செல்களும் உள்ளன. இவைகளுக்கு இடையீட்டுச் செல்கள் அல்லது லீடிக் செல்கள் என்று பெயர். இச்செல்கள் நாளமில்லா சுரப்பிகளாகச் செயல்படுகின்றன. இச்செல்கள் டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண்ட்ரோஜன் வகை ஹார்மோனைச் சுரக்கின்றன. இந்த ஆண்ட்ரோஜன்கள் ஸ்டீராய்டு வகையைச் சேர்ந்தவை. பருவ முதிர்ச்சி பெற்ற ஓர் ஆணில், சாதாரணமாக ஒரு நாளில், 4-9 மி.கிராம் அளவுக்கு டெஸ்டோஸ்டீரான் சுரக்கிறது.

டெஸ்டோஸ்டீரானின் பணிகள்

 • ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் கருவியல் வளர்ச்சிக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் காரணமாகிறது.
 • பருவமடையும் போது, இரண்டாம் நிலை பால் பண்புகளான உடல் வளர்ச்சி, உரோம வளர்ச்சி, ஆண்குரல். ஆணினத்துக்கான பழக்க வழக்கங்கள், போன்றவை தொடரவும், டெஸ்டோஸ்டீரான் இன்றியமையாதது.

அண்டகம்

வயிற்றுக் குழியின் இடுப்புப்பகுதியில் காணப்படும் இணையான முட்டை வடிவமுடைய அமைப்புகளே அண்டகங்கள் ஆகும். இவை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் என்னும் இரண்டு ஹார்மோன்களை சுரக்கின்றன.

ஈஸ்ட்ரோஜன்

அடினோ ஹைபோஃபைசிஸில் சுரக்கப்படும் FSH ன் உதவியுடன் அண்டம் வளர்ந்து, கிராபியன் ஃபாலிக்கிள்களினால் சூழப்படுகிறது. கிராபியன் ஃபாலிக்கிளோடு இணைந்த செல்கள் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஸ்டீராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஈஸ்ட்ரோஜன் C-18 வகை ஸ்டீராய்டு கூட்டுப் பொருளாகும். இது பெண் இனப்பெருக்க உறுப்புகள் வளரவும், இரண்டாம் நிலை பெண்பால் பண்புகள் உருவாகவும் இன்றியமையாதது.

புரோஜெஸ்டிரான்

கிராபியன் ஃபாலிக்கிளிலிருந்து அண்டம் விடுபட்ட பின்பு, வெடித்த ஃபாலிக்கிள் செல்கள் கார்பஸ்லூட்டியம் என்னும் தற்காலிக நாளமில்லா சுரப்பியாக மாறுகின்றன. இந்தக் கார்பஸ் லூட்டியம் மேலும் கூடுதலாக புரோஜெஸ்டிரானை உற்பத்தி செய்கிறது. மேலும் தாய் சேய் இணைப்புத் திசுவும், கர்ப்பக் காலங்களின் பின்பகுதியில், புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன் C-21 வகை ஸ்டீராய்டு கூட்டுப்பொருளாகும். புரொஜெஸ்டிரான், கருத்தரிக்காத பெண்ணின் கர்ப்பப்பையில் மாதவிடாய்க்கு முன்பான வளர்ச்சி நிலைக்குக் காரணமாகிறது. கருவுற்ற அண்டம் கருப்பையில் பதிவதற்கும், கர்ப்பக் காலத்தில் தாய் சேய் இணைப்புத் திசு வளர்ச்சிக்கும் இது இன்றியமையாதது.

ரிலாக்ஸின்

கருவுற்ற பெண்ணின் கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானுடன், ரிலாக்ஸின் என்னும் மற்றுமொரு ஹார்மோனையும் சுரக்கிறது. ரிலாக்ஸின் மகப்பேறு நிகழும் சமயத்தில் இடுப்புப் பகுதியிலுள்ள தசைகளையும், தசைநார்களையும் தளர்வடையச் செய்கிறது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top