உயிரினங்களின் உடல் இயக்கம் இரத்த ஓட்டத்தினால் நடைபெறுகின்றது என்றால் வியப்பில்லை. அதற்கான முக்கிய காரணம் இரத்தத்தில் அடங்கியுள்ள மூலப் பொருட்களின் சேவையே எனலாம். உடலின் உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை இரத்தமே. செல்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக நுரையீரலுக்கு சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் இரத்தமே. இரத்தத்தில் பிளாஸ்மா எனும் திரவமும், இரத்த செல்கள் எனும் நுண்பொருட்களும் உள்ளன.
பிளாஸ்மா மஞ்சள் நிறம் கொண்டது. பிளாஸ்மாவில் ஆல்புமின், பைபிரினோஜென், குளோபுலின் எனும் 3 முக்கிய புரதப்பொருட்கள் உள்ளன. இந்த புரதப் பொருட்கள் குறைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். காயம்பட்ட இடத்தில் இரத்தம் கட்டியாக உறைய பைபிரினோஜென் அவசியம். குளோபுலின் தொற்று நோய்களை எதிர்த்து போராடும்.
மீண்டும் மீண்டும் தொற்று நோய் ஏற்படுபவர்களுக்கு குளோபுலின் புரதம் குறைந்திருக்கலாம். பிளாஸ்மா திரவத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் எனப்படும் ரத்தத்தட்டுகள் ஆகியன மிதக்கின்றன. சிவப்பணு இருபுறமும் குழிந்த தட்டுபோல இருக்கும். 7 மைக்ரான் அளவு விட்டம் கொண்டது.
ஒரு மைக்ரான் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்காகும். நன்கு வளர்ச்சி அடைந்த மனிதனின் உடலில் 330 லட்சம் கோடி சிவப்பணுக்கள் இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
ஒரு வினாடியில் லட்சக்கணக்கான சிவப்பணுக்கள் பிறப்பதும், அழிவதுமாக உள்ளன. எலும்பு மஜ்ஜையில் இந்த சிவப்பணு பிறப்பு நிகழ்கிறது. 4 மாத காலம் ஆயுள் கொண்டது. அழியும் சிவப்பணுவின் புரதமும், இரும்பும் எலும்பு மஜ்ஜைக்கு திரும்பப்பட்டு புதிய சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது.
சிவப்பணுக்களில் உள்ள குளோபின் எனும் நிறமிப் பொருள் நுரையிரலில் ஆக்சிஜனை கிரகித்து உடல்செல்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
அத்துடன், உடற்செல்களில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை எடுத்து வந்து நுரையீரலில் சேர்ப்பதும் இதுவே. உடலில் குளோபின் குறைவதால் ரத்தசோகை ஏற்படும். இது பல நோய்களுக்கு வழி வகுக்கும். வெள்ளையணுக்கள், சிவப்பணுவின் எண்ணிக்கையில் ஐம்பதில் ஒரு பங்குதான் காணப்படுகிறது.
இவை நோய் எதிர்ப்பு படையாக செயல்படுபவை. இதில் அதிகமாக காணுப்படும் நியூட்ரோபில்களே இந்த எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன. பாக்டீரிய கிருமிகளை உண்டு அழிக்கும் ஆற்றலுடையவை நியூட்ரோ பில்கள். லிம்போசைட் எனப்படும் மற்றொரு வெள்ளையணுவின் பகுதிப்பொருள் ரத்தத்தில் அன்னியப் பொருட்களுக்கு எதிர்ப்புத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
பிறகு மானோசைட்டும், லிம்போசைட்டும் சேர்ந்து நோய் உண்டாக்கும் தீமைப் பொருட்களை அழிக்கின்றன. அதனால்தான் வெள்ளையணுக்களை உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கின்றார்கள்.
எல்லோருடைய இரத்தமும் சிவப்பு நிறமாக இருப்பதனால் அனைவரினது இரத்தமும் ஒரே வகை அல்ல. 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத் திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை
1. “A” வகை ரத்தம்,
2. “B” வகை ரத்தம்,
3. “AB” வகை ரத்தம்
4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
இரத்தப் பிரிவுகளில்… A வகையினர் 42%மானவர்களும், B வகையினர் 8% மானவர்களும், AB வகையினர் 3% மானவர்களும், O வகையினர் 47% மானவர்களும் உலகில் காணப்பெறுகின்றனர்.
‘O’ வகை ரத்தமானது பொது இரத்த தானத்திற்குத் தகுதியானது அதனை “Universal Donor” என் பார்கள். ஏனென்றால் ‘O’ வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம்.
அதுபோன்று AB ரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை ரத்தமுள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்தங்களில் எதனையும் செலுத்தலாம் (ஆயினும் அந்தந்த வகை ரத்ததிற்கு அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறை தான் சிறந்தது)
ரத்தப்பிரிவுகளைக் கண்டுபிடித்த பின்னர், ஒரே ரத்த வகையைத் தானம்செய்த போதிலும் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக மருத்துவ அறிஞர்கள் இரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் இறங்கினர். Rh ரத்த வகையைக் கண்டுபிடித்தனர் A, B, AB, O இரத்த வகைகள் 1900லும், Rh ரத்த வகை கள் 1940-லும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தப் புதிய ரத்த வகையானது Rhesus என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Rh-group என்று பெயரிடப் பட்டது. இது Rh – positive group என்றும் Rh – negative group என்றும் பிரிக்கப்பட்டது.
இதன் பின்னர்… A வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு A வகை ரத்தம் செலுத்தும்போது Rh வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகு முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது A வகையினர் Rh+ ஆக இருந்தால் அவர்களுக்கு A வகை Rh+ ரத்தம் தான் கொடுக்க வேண்டும். Rh நெகடிவ் உள்ளவருக்கு Rh நெகடிவ் ரத்தமே சேரும்.
இரத்தம் பெறுபவர், தருபவர் இருவரின் ரத்தவகையும், ஒன்றாக இருக்கவேண்டும். இரத்தம் வழங்குபவருக்கு எவ்வித தொற்று நோய்களும் இருக்கக் கூடாது. (உம். மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எய்ட்ஸ்).
இரத்ததானம் செய்பவருக்கு இரத்தம் போதுமானளவு இருக்க வேண்டும் (HB 8% க்கு மேல் தேவை). இளைஞர்கள், நடுத்தர வயதினர் ரத்தம் வழங்கலாம். 60 வயதிற்கு குறைந்தவராக இருத்தல் அவசியம். ஒரு முறை ரத்தம் கொடுத்தவர் குறைந்தது மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொடுப்பது நல்லது. ரத்தம் செலுத்தும் முன்பு Cross matching செய்ய வேண்டும்.
இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலா சீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக் கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்த தானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.
கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 - 4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்த தானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.
இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்த தானம் செய்து பல உயிர்களை வாழச்செய்யலாம். மேலும் ரத்த தானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
இரத்தம் தொடர்பான வியாதிகளில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும் பாலும் ஆண்களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இரத்தம் உறையச் செய்யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
இரத்தத்தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோபிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமியோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும். இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து: பாஸ்பரஸ். இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோபிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.
இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, இரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
இரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “வலை’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
இரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
இரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
ஆதாரம் : தமிழ் மருத்துவம்