பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

உணர் உறுப்புகள்

உணர் உறுப்புகள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உயிரினங்கள் சுற்றுபுறங்களில் உள்ள தகவல்களைப் பெற்று, ஒன்றுபடுத்தி, சரியான செய்திகளாக, செயல் உறுப்புகளுக்கு செலுத்தி வாழ்கின்றன. உடலின் வெளி மற்றும் உட்புறத் தகவல்களைப் புலன் உறுப்புகள் மூலம் பெற்றுக் கொள்ளுகின்றன. இவ்வுறுப்புகளில் உள்ள செல்கள், வேதிப்பொருள், கதிர்கள், மின்சாரம் அல்லது இயக்கத் தூண்டல் போன்ற தூண்டல்களை மின் தூண்டலாக மாற்றி மத்திய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இங்கு இத்தரவுகள் ஒன்றுப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது. உணர் செல்களில் இச்செயல் ஊடுகடத்தல் எனப்படும். எனவே உணர் உறுப்புகள் ஊடுகடத்திகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அளவு, அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை நமது பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் அறிய முடிகின்றது.

கண்ணில் ஒளியைக் குவியப்படுத்தும் முறை

கண்ணின் வழியே ஒளி செல்லும் போது ஒளிச் சிதறலும், ஒளித்திசை மாறுதலும் ஏற்படுகிறது. ஒளியானது, விழித்திரையை அடையும் முன் மூன்று பரப்புகளில் ஒளிச்சிதறல் அடைகின்றது. அவை, கார்னியா, லென்சின் முன்பகுதி மற்றும் லென்சின் பின்பகுதிகளாகும். கார்னியா மற்றும் லென்சுக்கு இடையில் காணப்படும் நீர்மமான திரவம் அக்குவஸ்ரீமர் எனப்படும். லென்சுக்கும், விழித்திரைக்கும் இடையில் உள்ள பின் அறையில் விட்ரஸ்ஹீமர் என்ற திரவம் உள்ளது. இது கூழ்மமான மீயூக்கோ புரதத்தினாலானது. இத்திரவங்கள் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதினால் ஒளி, விழித்திரையினைத் தடையில்லாமல் அடைகின்றது.

மனிதனின் கண்ணில் உள்ள லென்சின் குவிந்த பகுதி பார்க்கும் பொருளின் தூரத்திற்கு ஏற்றவாறு தானே குவித்தன்மையை மாற்றும் தன்மையைக் கொண்டது. இத்தன்மை விழியின் ஏற்பமைவு (Accomodation) எனப்படும். இவ்வேற்பமைவு, சிலியரி தசைகள், சிலியரி உறுப்புகள் மற்றும் தாங்கு இழைகள் மூலம் நடைபெறுகின்றது.

கண்ணால் தூரத்தில் உள்ள பொருளைப் பார்க்கும் போது சிலியரி தசைகள் முழுவதுமாகத் தளர்ந்து விடுகிறது. பொருளிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் குவிக்கப்படுகிறது எனவே தெளிவான பிம்பம் தெரிகின்றது. பொருளைக் கண்ணின் அருகினில் கொண்டு வரும்போது, விழியின் ஏற்பமைவுத் தன்மை அதிகரிப்பதினால் ஒளிச்சிதறல் தன்மை உயர்கிறது. இத்தன்மை லென்சின் மேற்பரப்பின் வளைவுப் பகுதி அதிகரிப்பதினால் ஏற்படுகிறது. எனவே அருகில் உள்ள பொருள்களின் பிம்பம் தெளிவாகத் தெரிகிறது. இதைப் போன்றே தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்கும் போது லென்சை தாங்கியுள்ள தாங்கு இழைகள் மூலம் லென்சானது நீட்சியுற்று லென்சின் தன்மை மாறுபடுகிறது.

விழித்திரையில் உள்ள பார்வை நிறமிகளில் நடைபெறும் ஒளி வேதிவினை

கண்ணின் குச்சி செல்களின் (120 மில்லியன்கள்) வெளிப்புறப் பகுதியில் காணப்படும் சிவப்புக் கலந்த ஊதா நிறமி, ரொடாப்சின் அல்லது பார்வை ஊதா எனப்படும். இதில் புரத ஆப்சின் (ஸ்காட்டாப்சின்) உடன் அல்டிஹைடு சேர்ந்த வைட்டமின் ஏ-யினால் ஆன, பகுதியினை ரெட்டினே1 அல்லது ரெட்டினோ என்று அழைக்கப்படுகிறது. ஒளியானது ரொடாப்சின் மீது விழும் பொழுது நிறமற்றுப் போகிறது. ஏனென்றால் இவை ரெட்டினே மற்றும் ஆப்சினாக உடைக்கப் படுவதினால் ஒளி இல்லாத வேளையில் இவைகள் மறுபடியும் இணைகின்றன.

சில ரெட்டினேக்கள், ஸ்காட்டாப்சின் உடன் மறுபடியும் இணைந்து ரொடாப்சினாகவும், சில வைட்டமின் A ஆகவும் குறைக்கப்படுகின்றன. குச்சிசெல்கள், அதிக ஒளி உணர்தன்மை கொண்டவை. எனவே குறைந்த ஒளியிலும் பார்ப்பதற்கு இவை உதவுகின்றன. இப்பார்வை ஸ்காட்டோபிக் பார்வை (Scotopic vision) எனப்படும்.

கூம்பு செல்களில் காணப்படும் பார்வை நிறமிகள், ரெட்டினே உடன் சேர்ந்த புரத ஆப்சின் (போட்டோப்சின்) களால் ஆனவை. மனிதரில் வெவ்வேறு அலை நீளம் கொண்ட மூன்று நிறமிகள் காணப்படுகின்றன. மூன்று முதன்மை நிறங்கள்; சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகும். அதிக அளவு ஒளிகொண்ட பார்வையின் செயல் தான் நிறப்பார்வையாகும். இதில் கூம்பு செல்கள் நிறங்களை உணர்கிறது. அதிக அளவு ஒளியின், நிறங்களை விழித்திரையிலுள்ள போவியா பகுதி உணர்கிறது. இப்பகுதியில் குச்சிசெல்கள் காணப்படுவதில்லை. கூம்பு செல்கள் மட்டும் தான் உள்ளன. குறைந்த ஒளி வேளையில் போவியா புறப்பகுதியில் உள்ள குச்சிச் செல்கள் செயல்படுகின்றன. இப்பகுதியில் நிறங்களை உணர முடியாததினால், நிறங்கள் மங்கிக் காணப்படுகிறது. கூம்பு செல்கள் அதிக ஒளியில் செயல்படுவதினால் இத்தொகுதி அதிகத் தெளிவாகச் செயல்பட்டு நிறங்களை உணர முடிகிறது. (போட்டோபிக் பார்வை - Photopic vision)

விழித்திரையின் செயல்பாட்டில் ஒளி வேதிவினை மூலமாக ஒளிச்சக்தியானது நரம்பு தூண்டலாக மாற்றப்படுகிறது. இச்செயல் மூலம் நரம்பு இழைகள் தூண்டப்பட்டு, நரம்புத் தூண்டல்கள் கடத்தப்படுகின்றன.

உணர் உறுப்புகளில் உருவாகும் தூண்டல்கள், கூம்பு செல்களில் உருவாகும் மின் அழுத்தத்தைப் பொறுத்து, மூளையினால் சரியான நிறமாகப் பகுக்கப்படுகிறது. நமது கண்களினால் காண்கின்ற அல்லது பகுத்தறியப்படுகின்ற நிறமுள்ள படங்கள், மூளையின் ஓர் கடினமான செயல் தொகுப்பாகும். இச்செயல் பெருமூளையின், ஆக்ஸ்பிட்டல் கதுப்பின் புறணிப் பகுதியில் நடைபெறுகிறது.

கண்ணின் பின் பகுதியின் வழியாக வெளிவரும் நரம்பிழைகள் கண் நரம்பாக மாறுகின்றன. இந்நரம்பு கபாலத்தினுள் செல்லுகிறது. விழித்திரையின் நரம்பு தோன்றும் இப்பகுதியில் உணர் செல்கள் காணப்படுவதில்லை. எனவே இப்பகுதியில் விழும் பிம்பத்தினை உணர முடியாது. இப்பகுதியினைக் கண்தட்டு (Optic disc) என்றும் பார்வையை உணராத பகுதியாக உள்ளதினால் குருட்டு மையம் என்றும் அழைக்கப்படுகிறது.

கண்களின் குறைபாடுகள்

குறைபாடற்ற கண்ணில், தூரத்தில் உள்ள பொருள்களில் இருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள், சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. வெகு தொலைவு முதல் 25.செ.மீ. அருகில் உள்ள பொருட்கள் வரை தெளிவாகப் பார்க்கும் வகையில் குறைபாடற்ற விழி ஏற்பமைவு பெற்றுள்ளது. இச்சரியான ஒளிச்சிதறல் நிலையை இமெட்ரோபியா (Emmetropia) என்பர். இமெட்ரோப்பியா நிலையினிலிருந்து மாறுபாடு அடைந்தால் அதனை ஏமெட்ரோப்பியா (Ametropia) என்பர். ஏமெட்ரோப்பியாவின் முக்கிய நிலைகள் மையோபியா (Myopia) ஹைப்பர் மெட்ரோபியா (Hyper Metropia) அஸ்டிக்மேட்டிசம் (Astigmatism) மற்றும் பிரஸ்பையோபியா (Prespiopia) ஆகும். ஏமெட்ரோபியாவிற்கான காரணம், கண் கோளம் நீளமாகுதல் அல்லது கண்ணின் ஒளிச்சிதறல் தன்மையில் வேறுபாடு ஏற்படுவதாகும்.

(அ) மையோபியா - கிட்டப்பார்வை குறைபாடு

மையோபியா எனும் கிட்டப்பார்வை கண் லென்சின் புற வளைவுப் பகுதி அதிகரிப்பதினாலும் கண்கோளம் நீட்சியுருவதாலும் ஏற்படுகிறது. உள் செல்லும் ஒளிக்கதிர்கள் தேவைக்கு அதிகமாகச் சிதறலடையும் போது, ஒளிக்கதிர் விழித்திரைக்கு முன்னாலேயே குவிக்கப்படுகிறது. இதனால் பிம்பம் தெளிவற்றதாக உணரப்படுகிறது. இந்நிலை கிட்டப்பார்வை எனப்படும், ஏனெனில் தூரத்தில் உள்ள பொருட்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்பட இயலவில்லை. இந்நிலையைக் குழி லென்சின் மூலம் சரி செய்யலாம். எவ்வாறு எனில் குழி லென்சின் புறப்பகுதியின் வழியாக உள் செல்லும் ஒளிக்கதிர்கள் சற்றே விலக்குவதால் ஒளிச்சிதறலடைதலும் மாறுபாடு அடைகிறது. இம்மாற்றத்தினால் மையோபியோ நிலையுடைய கண்ணில் ஒளி சரியான முறையில் விழித்திரையில் குவிக்கப்படுகிறது.

(ஆ) ஹைப்பர் மெட்ரோபியா - தூரப்பார்வை

கண்ணின் லென்சு பகுதியில் போதுமான புறவளைவு இல்லாததினால் ஹைப்பர் மெட்ரோபியா நிலை உண்டாகிறது. இதனால் ஒளிக்கதிர்கள் போதுமான அளவு சிதறலடையாததால் ஒளியானது விழித்திரைக்குப் பின் பகுதியில் குவிக்கப்படுகிறது. இந்நிலை தூரப்பார்வை எனப்படும். ஏனென்றால் அருகில் உள்ள பொருள்களில் இருந்து வரும் கதிர்கள், தூரத்தில் உள்ள பொருள்களிலிருந்து வரும் கதிர்களைப் போல் சரியாகக் குவிக்கப்படுவதில்லை. இந்நிலையை குவிலென்சின் மூலம் சரி செய்யலாம். எவ்வாரெனில் குவிலென்சானது கண்ணின் உள் ஒளிக்கதிர் விழும் முன் ஒளியை மேலும் குவித்து விடுவதினால் ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் சரியாகக் குவிக்கப்படுகிறது.

(இ) அஸ்டிக்மேட்டிசம் :

இக்குறைபாட்டில் கார்னியா அல்லது லென்ஸ் பாதிப்படைக்கிறது. கண்ணின் ஒரு பகுதியில் ஒளிச்சிதறல் அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ காணப்படும், இதனால் ஏற்படும் பிம்பங்கள் சரிவரக் குவிக்கப்படுவதில்லை. பொருளின் ஒரு பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்கு முன்னால் மையோபியா போன்றும் மற்ற பகுதியில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்னால் ஹைப்பர் மெட்ரோபியா போன்றும் குவிக்கப் படுகின்றன. அஸ்டிக்மேட்டிசத்தைக் கண்ணுக்கு முன் லென்சு வைத்துச் சரிசெய்யலாம். இந்த லென்சின் புறப்பகுதியின் வளைப்பகுதி மாறுபட்டுக் காணப்படுவதால் இவை கண்ணின் குறைபாட்டினைச் சரி செய்கிறது.

(ஈ) பிரஸ்பையோபியா:

வயது முதிர்ச்சியால் கண்ணின் லென்ஸ் கடினமாவதினாலும், மீள்த்தன்மை குறைவதினாலும் விழி ஏற்பமைவுத் தன்மையில் (Accomodation) குறைவு ஏற்படுகிறது. எனவே இது சிக்கலான நிலையை ஏற்படுத்துகிறது. இக்குறைபாடு 40 வயதிலிருந்து ஆரம்பிக்கிறது. வாசிப்பதில் ஏற்படும் குறைபாட்டினைக் குவி லென்சின் மூலம் சரிசெய்யலாம், கண்ணில் ஏதேனும் குறைபாடு தோன்றினால் உடனே கண் லென்சு சம்பந்தப்பட்ட ஆலோசகரை அணுகவேண்டும்.

பார்வைக் கணக்கீடு

கண்ணின் பார்வை தன்மையை அறிந்து அதற்கு ஏற்ற கண்ணாடிகள் அல்லது கான்டெக்ட் லென்சுகளை உபயோகித்துப் பார்வை குறையை நிவர்த்தி செய்யும் முறை பார்வை கணக்கீடு (Optometry) எனப்படும். கண்களைத் தகுதிவாய்ந்த பார்வைக் கணக்கீட்டாளர் மூலம் சோதனைச் செய்து ஒளிச்சிதறல் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனைக் கண்ணாடிகள் அல்லது கான்டெக்ட் லென்சுகள் மூலம் சரி செய்யலாம். இப்பார்வைக் கணக்கீட்டாளர்கள் கண்ணின் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்குச் சிகிச்சை அளிக்கும் தகுதி உடையவர்கள் அல்ல. ஆனால் அக்குறையை நிவர்த்தி செய்யக் கண் மருத்துவர்களிடம் பரிந்துரை செய்யலாம்.

ரெட்டினோபதி

(அ) விழித்திரை நோய்

விழித்திரையில் ஏற்படும் பாதிப்பு ரெட்டினோபதி எனப்படும் இதற்குக் காரணம் நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகலாம். இரண்டு வகையான ரெட்டினோபதி கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு சார்ந்த ரெட்டினோபதி

இவ்வகைப் பாதிப்பில் விழித்திரையில் உள்ள தந்துகிகளில் (நுண்ணிய இரத்த நாளங்கள்) சிறிய பலூன் போன்று புடைப்புக் காணப்படுகிறது. இரத்த நாளங்கள் உடைந்து விழித்திரையின் மேல் இரத்தம் பரவுகிறது. இரத்தக் கசிவு விட்ரஸ் ஹீமரிலும் ஏற்படலாம். மேலும் நார்த்திசுக்கள் விட்ரஸ் ஹீமரினுள் வளர்ச்சியுறலாம். லேசர் கதிர்கள் மூலம் அறுவை சிகிச்சை செய்வதினால் இந்நிலைத் தொடராமல் தடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் சார்ந்த ரெட்டினோபதி :

விழித்திரையில் உள்ள தமனிகள் குறுகலாக மாறுவதினால் ஏற்படுகிறது. இதனால் விழித்திரையின் பகுதிகள் பாதிப்புள்ளாகி இரத்தக் கசிவு மற்றும் வெள்ளைப் படிவு போன்றவை விழித்திரையில் ஏற்பட்டு விழித்திரை தனியே பிரிந்து விடுவதற்கும் காரணமாகலாம். இதனை லேசர் கதிர்ச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

கண்புரை (Cataract)

கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் கண்புரை ஏற்படுகிறது. சாதாரணமாக ஒளியானது, லென்சின் வழியாக ஊடுருவி விழித்திரையை அடையும், ஒளிபுகும் தன்மை குறைவதினால் ஒளி விழித்திரையை அடைய முடிவதில்லை எனவே தெளிவாகக் காண இயலாது. லென்சில் உள்ள மெல்லிய புரத இழைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாகக் கண்புரை ஏற்படுகிறது. கண்புரையினால் முழுக்குருட்டுத் தன்மை ஏற்படாது. ஆனால் ஒளிப்புகும் தன்மை குறையும். இதனால் பிம்பத்தின் தெளிவு மற்றும் பண்புகள் தொடர்ச்சியாகக் குறைகிறது. கண் பார்வை வழியாக லென்சின் முன்புறத்தில் ஒளிபுகாத்தன்மை மற்றும் வெண்மையாகுதல்களைக் காணலாம்.

கண்புரையாகுதலுக்கு காரணங்கள் வயதாகுதல், அதிக சூரியஒளிபடுதல், புகை பிடித்தல், உணவு பற்றாக்குறை, கண் காயமடைதல், முழு உடல் நோய்களான நீரழிவு, தொற்று நோய்கள், காயங்கள், ஸ்டிராய்டு கலந்த மருந்துகளை உண்ணுதல் போன்றவைகளாகும். ஜெர்மன் தட்டம்மை கருவுற்ற தாயினைத் தாக்கும் போது குழந்தைக்குக் கண்புரை உண்டாகக் காரணமாகலாம்.

சத்தான உணவை உட்கொள்ளுதல், அதிகச் சூரியஒளி, X கதிர்கள், அதிக வெப்பம் ஆகியவை கண்ணில் படுவதைத் தவிர்த்தல், சிபிலிஸ் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆரம்பக் காலத்திலேயே சிகிச்சை செய்தல் போன்றவற்றால் கண்புரை உருவாவதைத் தள்ளிப்போடலாம்.

இரண்டு வகையான கண்புரைகள் உள்ளன. அவை அடர்மத்தி கண்புரை (லென்சின் மையத்தில் கண்புரை உருவாதல்) மற்றும் வெளிப்புறக் கண்புரை (லென்சின் புறப்பகுதியில் கண்புரை). கண்புரைக்கு மருத்துவச் சிகிச்சை கிடையாது. ஒரே தீர்வு அறுவை சிகிச்சை தான். ஒருமுறை கண் புரை நீக்கப்பட்டால் கண்ணில், லென்ஸ் இல்லாத காரணத்தால் ஒளியைக் குவிக்க முடியாது. எனவே செயற்கையான லென்சை உபயோகப்படுத்தலாம். இம்முறையில் லென்சானது, கண்ணாடி, கான்டெக்ட் லென்சுகள் அல்லது கண் உள்செலுத்தும் லென்சுகளாக இருக்கலாம்.

தற்காலத்தில் மருத்துவ முன்னேற்றத்தால் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. புதிய அறுவை சிகிச்சை முறை மற்றும் கண் உள் லென்சு செலுத்துதல் மூலம் பார்வையில் நல்ல முன்னேற்றம் (97%) உருவாக்க முடியும்.

லென்ஸ் மாற்றி அமைத்தல்

நாற்பது வயதினைக் கடந்தவர்கள் கண் அறுவைச் சிகிச்சை மூலம் கண்ணாடி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பதினைத் தவிர்க்கலாம். தெளிவான லென்ஸ் மாற்று (CLR) (Clear Lens Replacement) ஓர் நல்ல தீர்வாகும். இம்முறையில் இயற்கையான லென்சை எடுத்து விட்டு வேறு லென்சை கண்ணுள் திரும்பப் பதிய வைக்கப்படுகிறது. இம்மாற்று முறையில் இயற்கையான லென்சை எடுத்து விடுவதினால், பாதிப்படைந்தவரால் அருகில் உள்ள பொருள் சரியாகத் தெரிவதில்லை. 40 வயது கடந்து இரு முகப்பு லென்சுகளை உபயோகிப்பவர்களுக்கு CLR மாற்று லென்ஸ் ஒத்துப் போவதில்லை. விழி ஏற்பமைவு தன்மையை இழந்தவர்களுக்குப் பலகுவிய லென்ஸ் IOL மாற்றுச் சரியான தீர்வாகும். இதனால் தொலைவு மற்றும் அருகில் உள்ள பொருட்களைக் கூட எளிதாகக் காணமுடியும்.

கிளாக்கோமா

இது கண்ணின் அபாயகரமான ஓர் பாதிப்பு. இதுவே பார்வை இழப்பிற்கு ஒரு பொதுவானக் காரணமாகும். கண்ணிற்குள் உள்ள திரவ அழுத்தம் அதிகரிப்பதினால் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு அதனால் கண் வட்டுப் பகுதியும் பாதிக்கப்படுகிறது. பின்னர் சிறிது சிறிதாக பக்கவாட்டு கண்பார்வை குறைவு ஏற்படுகிறது. மேலும் விழித்திரைக்கு இரத்தத்தை செலுத்தும் தமனி கண் வட்டின் வழியாகவே கண்ணினுள் நுழைகிறது. ஏற்கனவே கண் வட்டுப்பகுதிப் பாதிக்கப்பட்டிருப்பதால் இத்தமனியும் பாதிக்கப்பட்டு விழித்திரையில் சிதைவு ஏற்படுகிறது. குளுகோமா ஏற்படுவதற்கு காரணங்கள் தெளிவாகத் தெரியாவிட்டாலும் தொற்றுநோய் மற்றும் விபத்துகள் இதற்கு காரணமாகலாம்.

நிக்டோலோப்பியா / மாலைக்கண் நோய்

வைட்டமின் A பார்வை நிறமிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. வைட்டமின் A குறைபாட்டின் முதல் அறிகுறி மாலைக் கண் அல்லது நிக்டோலோப்பியா ஆகும். தொடர்ச்சியாக அதிகக் காலம் வைட்டமின் A குறைபாடு ஏற்பட்டால் விழித்திரையினில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இப்பாதிப்பு ஏற்படுவதற்கு முன் வைட்டமின் A யை உட்கொண்டு விழித்திரையின் செயல்பாட்டினைப் பாதுகாக்கலாம். விழித்திரை செயல்பாட்டிற்கு மற்ற வைட்டமின்களான B தொகுதியும் தேவைப்படுகிறது.

கண் நோய்கள்

 • 1) கண்கட்டி (Stye) : கண் இமைகளின் ஓரங்களில் அமைந்துள்ள சுரப்பிகளில் ஏற்படும் தீவிர தொற்று ஸ்டை எனப்படும். இதனால் வீக்கம், வலி, எரிச்சல் மற்றும் கண் இமையின் ஓரப்பகுதி சிவப்பாகுதல் ஏற்படுகிறது. தொடர்ச்சியாக வெப்ப ஒத்தட சிகிச்சை அளிக்கலாம்.
 • 2) கன்ஜக்டிவிடிஸ் (கண்வலி) : கன்ஜக்டிவாவினில் ஏற்படும் தொற்றினை கன்ஜக்டிவிடிஸ் என்கிறோம். தொற்று ஏற்படுவதினால், கன்ஜக்டிவாவினில் உள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணிய இரத்த நாளங்கள் பருமனாகி விடுகிறது. இப்பாதிப்பினால் கண் சிவப்பாகுதல், கண் அழற்சி, மற்றும் பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து பொருள் வெளியேறுதல் ஏற்படுகிறது. பொதுவாக சிறுவர்களுக்கு தொற்று மூலமாகவும் பெரியவர்களுக்கு ஒவ்வாமை மூலமாகவும் கன்ஜக்டிவிடிஸ் ஏற்படுகிறது.
 • 2(a) கன்ஜக்டிவிடிஸ் தொற்று : கன்ஜக்டிவாவில் பாக்டீரியா (உ.ம்.ஸ்டெபைலோ காக்கி) மூலம் தொற்று ஏற்படுகிறது. இவை பரவும் முறை கைகளிலிருந்து உண்டாகும். கண்ணிற்கு தொடுதல் மூலமாகவும் அல்லது வைரஸ் தாக்குதலினால் சாதாரணச் சளி, தொண்டைப்புண், தட்டம்மை, வைரஸ் கன்ஜக்டிவிடிஸ் மூலமும் பரவும். இது ஓர் தொற்று நோயாகும். இந்நோய் பள்ளிகளில் மற்றும் கூட்டமாக வாழ்பவர்களிடம் வேகமாகப் பரவும்.
 • 2(b) ஒவ்வாமை கன்ஜக்டிவிடிஸ் : இப்பாதிப்பு ஒவ்வாமையை உண்டு பண்ணும் பலவகைப் பொருள்களான அழகு சாதனப் பொருள்கள், கான்டெக்ட் லென்சுகளை சுத்தமாக்கும் திரவம், மற்றும் மகரந்தத் தூள் போன்றவைகளால் ஏற்படுகிறது.

அறிகுறிகள் : எல்லா வகையான கன்ஜக்டிவிடிஸ்களிலும், கண் சிவப்பாகுதல், எரிச்சல், உறுத்தல், பொருள் வெளியேறுதல் மற்றும் ஒளி விரும்பாமை (Photophobia) போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. தொற்று கன்ஜக்டிவிடிஸில் சீழ் வெளித்தள்ளப் படுகிறது. இதனால் காலையில் விழிக்கும் பொழுது கண் இமைகள் ஒன்றொடொன்று ஒட்டிக் கொள்கின்றன. ஒவ்வாமை கன்ஜக்டிவிடிஸில் கண் இமைகள் வீங்கி நிறமற்ற பொருளை வெளித்தள்ளுகின்றன.

சிகிச்சை : வெதுவெதுப்பான நீரை உபயோகித்து கண் இமைகளுடன் ஒட்டியுள்ள வெளித்தள்ளியுள்ள பொருள்களை நீக்க வேண்டும். நோய் தொற்றுதலைச் சரிசெய்ய கண் சொட்டு மருந்து அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஒவ்வாமை கன்ஜக்டிவிடிஸ் நோயைக் குணப்படுத்த ஆன்டி ஹிஸ்டமைன் கலந்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.

கண்பாதுகாப்பு

கண் ஒரு மிக முக்கியமான உறுப்பு, எனவே அதனைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம்.

 1. கண்ணை அடிக்கடி பரிசோதித்து, அதன் பார்வைக் குறைபாடு மற்றும் சில குறைகளுக்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதை தெரிந்த கொள்ளவேண்டும்.
 2. கண்ணின் மீது சில தூசுகள் விழுகின்றன. இவை கண்ணினுள் செல்லலாம். ஆகவே கண்ணின் மீது விழுந்த தூசிகளை மிக கவனமாக, கண்ணை சேதப்படுத்தாவண்ணம் அகற்ற வேண்டும்.
 3. கண்ணின் விழித்திரையை (ரெட்டினா) அடிக்கடி பரிசோதித்து, அது அதிக அழுத்தத்துடன் காணப்படுகிறதா அல்லது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளில் இது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
 4. சுயமாக கண் மருந்து எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மங்கலான பார்வை தோன்றினாலோ அல்லது கண்ணில் உடனடி வலி ஏற்பட்டாலோ, கண் மருத்துவரை நாடுவது நல்லது.

காது (Ear)

நமது காதுகள் இரு முக்கிய, ஆனால் வேறுபட்ட புலன்களை நமக்கு அளிக்கின்றன. அவை கேட்டல் மற்றும் சமநிலைப்படுத்துதல் ஆகும். செவிகளால் உணரப்படும் ஒலியானது நமது சுற்றுப்புறத்தைக் குறித்த தகவல்களை நமக்கு அளிப்பதோடு மட்டுமல்லாது, நாம் தொடர்பு கொள்ளவும் பயன்படுகின்றன. மேலும் நாம் கீழே விழாதபடி நிமிர்ந்த நிலையில் நிற்பதற்குத் தேவையான சமநிலை உணர்வினைக் காதுகள் நமக்கு அளிக்கின்றன.

ஒலி என்பது வெளிப்புறச் சூழலின் நீள் அதிர்வினால் ஏற்படும் உணர்வாகும். ஒலியின் கனமானது ஒலி அலைகளின் வீச்சினைப் பொறுத்தது. தொனியானது அலை அதிர்வெண்களைப் பொறுத்தது (அலைகளின் எண்ணிக்கை / கால அலகு). மனிதரால் கேட்கக்கூடிய ஒலி 20-20,000 cps (cycles per second அல்லது Hertz) இளம் வயதினர் மட்டுமே இவ்வளவீட்டில் முழுமையாகக் கேட்கலாம். ஒலியினை உணர்தல் என்பது கனம் மற்றும் அலை அதிர்வெண்களைப் பொறுத்தது. மனிதரின் செவியால் 50-5000 ஹெர்ட்ஸ் ஒலி வீதத்தை உணர முடியும். நாம் பொதுவாகக் கேட்கக்கூடிய ஒலியானது 500 - 5000 ஹெர்ட்ஸ் அளவிற்குள் இருக்கும். மனிதனின் காதுகள் ஒலி அலைகளின் மிகுந்த அளவினை வேறுபடுத்தும் தன்மை கொண்டதால், (நாம் உணரக்கூடிய மிகக் கனத்த சத்தமானது, மெல்லிய குரலைக் காட்டிலும் சுமார் 1012 மடங்கு அதிகமானதாகும்). ஒலியின் அடர்வினை அளப்பதற்கு டெசிபெல் (db) என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது.

நாம் கேட்கும் தன்மையானது, காதில் நடைபெறும் பல சிக்கலான தொடர் நிகழ்ச்சிகளைச் சார்ந்துள்ளது. காற்றில் காணப்படும் ஒலி அலைகள் பல்வேறு அமைப்புகளின் மூலமாக அதிர்வுகளாக ஏற்பு உறுப்புகளை அடைவதால் கேட்க முடிகின்றது. சூழலின் அதிர்வுகள் உணரப்பட்டு மின் தூண்டல்களாக மாற்றப்படுகின்றன. இந்த மின் தூண்டல்களாக நரம்புகள் மூளைக்கு எடுத்துச் சென்று அங்கு அவை குறிப்புணரப்படுகின்றன. அவ்வாறு குறிப்புணர்ந்த தகவல்கள் மூலம் ஒலிகளை நாம் தர வேறுபடுத்தி உணரமுடிகின்றது.

கேட்டலின் இயக்கமுறை

 • புறச்செவியின் பணி : ஒலி அலைகள் புறச்செவிப் புறவழி, மற்றும் புறச்செவி குழாய் வழியாகச் செவிப்பறையை அடைகின்றது. இதனால் செவிப்பறை அதிர்கின்றது.
 • நடுச்செவியின் பணி : நடுச்செவி என்பது டெம்போரல் எலும்பில் அமைந்துள்ள காற்று நிரம்பிய குழிவான பகுதியாகும். இது செவிக்குழாயின் வழியே மூக்குத் தொண்டைப் பகுதியினுள் திறக்கின்றது. நமது வாயசைத்தல், விழுங்குதல் மற்றும் கொட்டாவி விடுதலின் போது செவிக்குழாய் திறப்பதால், செவிப்பறையின் இருபுறமும் அழுத்தமானது சமநிலைப் படுத்தப்படுகின்றது.
 • நடுச் செவியில் மூன்று செவிக் குருத்தெலும்புகள் அமைந்துள்ளன. இவற்றுள் மால்லியஸ் செவிப்பறையுடன் இணைந்துள்ளது; ஸ்டேப்பிஸ் நடுச்சுவரில் அமைந்துள்ள நீள்வட்டப் பலகணியுடனும்; இன்கஸ் இவ்விரு எலும்புகளுடனும் இணைந்துள்ளது.
 • இவ்வாறு செவிப்பறையின் அதிர்வுகள் நீள்வட்டப் பலகணியினை அடைகின்றன. செவிப்பறை சுமார் 90 சதுர மி.மீ. பரப்பினையும், ஸ்டேப்பிஸின் அடித்தட்டு 3.2 சதுர மி.மீ. பரப்பினையும் கொண்டுள்ளதால், இந்தக் குருத்தெலும்புகளின் நெம்புகோல் தொகுதி இந்த அழுத்தத்தினை 1.3 மடங்கு அதிகரிக்கின்றது.
 • நீள்வட்டப் பலகணியின் அதிர்வுகள் வெஸ்டிபுலார் குழாயில் அடங்கியுள்ள திரவத்தில் அழுத்தத்தினை உண்டாக்குகின்றன. இந்த அழுத்த அலைகள் நடுக்குழாயினை அடைந்து பேசினார் சவ்வினை அதிர்வடையச் செய்கின்றன. நீள்வட்டப் பலகணியின் கீழ்ப்புறமாக அமைந்துள்ள வட்ட வடிவச் சவ்வாகிய வட்டப் பலகணியுடன் செவிப்பறை குழாய் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் அழுத்த அலைகள் செவிக்குழாய் (Cochlea) திரவத்தினை அடைகின்றன.

காக்லியாவின் பணிகள் :

உட்செவி (லேபிரிந்த்) காக்லியா மற்றும் வெஸ்டிபியூல் ஆகியவற்றால் ஆனது. உட்செவியின் காக்லியா பகுதி 2.75 சுற்றுகள் கொண்ட குழாய் போன்ற அமைப்புடையது. அதன் நீளம் முழுவதும் பேசினார் மற்றும் ரெய்ஸ்னர் சவ்வினால் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நடு அறையில் (ஸ்கேலா மீடியா) உள்திரவமும், மற்ற இரு அறைகளிலும் (ஸ்கேலா வெஸ்டிபுலை, ஸ்கேலா டிம்பனை) சுற்றுத் திரவமும் அடங்கியுள்ளது.

கார்டை உறுப்பு : (Organ of Corti)

பேசிலார் சவ்வில் கேள் உணர்திறன் கொண்ட கார்டை உறுப்பு அமைந்துள்ளது. பேசிலார் சவ்விலிருந்து நான்கு வரிசை மயிரிழை செல்கள் தோன்றுகின்றன.

மயிரிழை செல்களின் தூண்டுதல் :

ஸ்டேப்பிசின் அடித்தட்டின் அசைவுகள் ஸ்கேலா வெஸ்டிபுலையில் காணப்படும் சுற்றுத் திரவத்தில் தொடர்வலைகளை உண்டுபண்ணுகின்றன. இதன் தொடர்ச்சியாக வெஸ்டிபுலார் சவ்விலும், மற்றும் ஸ்கேலா மீடியாவில் அடங்கியுள்ள உள்திரவத்திலும் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அலைகள் ரெய்ஸ்னர் சவ்வில் வளைவினை ஏற்படுத்துவதோடு, பேசிலார் சவ்வமைப்பிலும் மாற்றங்கள் நிகழ்வதால் கார்டை உறுப்பின் மயிரிழை செல்களின் மயிர்கள் வளைகின்றன. இதன் விளைவாக இதனோடு தொடர்புடைய நரம்பிழைகளில் உண்டாகும் தூண்டுதல் செவி நரம்பின் மூலம் கடத்தப்படுகின்றது.

கார்டை உறுப்பில் உண்டாகும் அதிகபட்ச அசைவுகள் ஒலியின் அதிர்வெண்களைப் பொறுத்தது. மிகுந்த தொனியுடன் கூடிய ஒலியானது காக்லியாவின் அடிப்பகுதியில் மிக உயர்ந்த அலைகளையும், குறைந்த தொனியானது நுனிப்பகுதியிலும் தோற்றுவிக்கும். ஒலியின் இரைச்சல் அளவினைப் பொறுத்து கார்டை உறுப்பில் மாற்றம் ஏற்படுகின்றது. இத்தூண்டலின் உணர்வுகள் செவிப்புறணியில் ஏற்படுகின்றன.

ஒலி உணர் பாதை

ஒலி அலைகள் - செவிப்பறை அதிர்வடைதல் - காது எலும்புகளின் அசைவுகள் - நீள்வட்டப் பலகணி அதிர்வு - சூழ்திரவ அலைகள் - உள்திரவ அலைகள் - ரெய்ஸ்னர் சவ்வில் வளைவு - பேசினார் சவ்வில் ஏற்படும் மாற்றம் - மயிர்ச் செல்களின் வளைவு - வினைமாற்ற நிகழ்வு - செவி நரம்பின் மூலம் கடத்தல்.

காதுகளின் குறைபாடுகள்

காதுகளில் ஏற்படும் குறைபாடுகளினால் காது கேளாமல் அல்லது செவிடாகும் நிலை ஏற்படும். காதில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களில் ஏற்படும் குறைகளினால் காது கேளாமல் பழுதடைகின்றது.

காது கேளாத் தன்மையின் வகைகள் :

காது கேளாத்தன்மையில்- சில வகைகள் உள்ளன. அவையாவன : கடத்தல் வகை, உணர்தல் வகை, கலப்புக் கடத்தல் வகை, மற்றும் நரம்புக் கோளாறுகள் ஆகும்.

கடத்தல் மற்றும் கேளாத்தன்மை :

வெளி அல்லது நடுச்செவியில் கோளாறு ஏற்படுமானால், இத்தன்மை உண்டாகிறது. கடத்தல் காது கேளாத்தன்மையால் பாதிக்கப்படும் குழந்தைகள் சிறிதளவு காதுகேளாமல் அவதியுறுவர். ஆனால் இது தற்காலிகமானது; ஏனெனில் மருத்துவப் பராமரிப்பு இதனை மாற்ற உதவி செய்யும்.

உணர்தல் வகை காது கேளாத்தன்மை :

காக்லியாவில் அமைந்துள்ள சிறிய மயிரிழை செல்கள் பழுதடைவதால் அல்லது அழிக்கப்படுவதால் இக்குறைபாடு ஏற்படுகின்றது. இக்குறைபாட்டின் அளவினைப் பொறுத்து, ஒருவர் பல சத்தங்களைக் கேட்கும் நிலையிலோ (அவை குழம்பிய நிலையில் இருந்தாலும்) அல்லது சில சத்தங்களை மட்டுமோ அல்லது எந்தச் சத்தங்களையும் கேட்காத நிலையிலோ இருக்கலாம்.

உணர்தல் வகை காது கேளாத்தன்மை அநேகமாக நிரந்தரமானது. பொதுவாகப் பேசும் தன்மையும் இதனால் பாதிக்கப்படும்.

நரம்பியல் காது கேளாத்தன்மை :

காக்லியாவிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளால் இது ஏற்படுகின்றது. காது கேளாத்தன்மை மரபியல் தொடர்புடையதாகவோ, நடுச்செவி திரவத்தினாலோ, மூளை உறை நோய் போன்ற கடும் தொற்று நோய்களாலோ, தலைக்காயம், தலையில் மாட்டும் ஃபோன்கள் மூலம் கனத்த சத்தமாகச் சங்கீதம் கேட்டல், இயந்திரங்களினால் மீண்டும் மீண்டும் ஏற்படும் கனமான ஒலியினைக் கேட்டல் ஆகியவற்றினால் ஏற்படலாம்.

கடத்தல் காது கேளாத்தன்மைக்கு பொதுவான காரணம், செவிக்குழாயைச் சார்ந்துள்ள தோலில் அமைந்துள்ள செருமினல் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் மெழுகினால், புறச்செவியானது அடைக்கப்படுதல் ஆகும். சிலருக்கு இந்த மெழுகானது கடினமாவதால், செவிப்பறையை அழுத்துகின்றது. பிரத்யேகமான உறிஞ்சு குழாய்கள் மூலம் இக்கடின மெழுகினை அகற்றுவதால், மீண்டும் கேட்கும் தன்மையினை அடையலாம்.

கடத்தல் காது கேளாத்தன்மைக்கு மற்றொரு காரணம் துளையுள்ள செவிப்பறையாகும். நடுச்செவியில் தொற்றல், (Infection) அருகாமையில் ஏற்படும் வெடிச்சத்தம் மற்றும் தலையில் திடீரென அடிபடுவதால் ஏற்படும் இயக்கங்களினால் உண்டாகும் காயங்கள் ஆகியவை துளை ஏற்படக் காரணங்களாகும். தலையில் காயம் ஏற்படுதலால் நடுச்செவி எலும்புகள் துண்டிக்கப்பட்டு, காக்லியாவுடன் தொடர்பு விடுவிக்கப்படுகின்றது.

அதிர்வலைகள் உட்செவிக்குத் திறம்பட கடத்தப்படினும், காக்லியா மற்றும் செவி நரம்பு பழுதடைதலால் கேளாத்தன்மை ஏற்படலாம். இவ்வகை காதுகேளாத்தன்மை உணர்நரம்பியல் காது கேளாத்தன்மை எனப்படும்.

தொற்றல், தலைக்காயம், வெடிச்சத்தம் மற்றும் கனத்த சத்தம் கேட்டல் ஆகியவை இந்நிலை காரணமாகும்.

கேள் உதவி கருவி (Hearing Aid)

முழுமையாகக் குணப்படுத்த முடியாத நிலையிலுள்ள கடத்தல் காது கேளாத்தன்மை கொண்ட நோயாளிகளுக்கு 'கேள் உதவி கருவி' பயன்படும். இது மின்கலத்தால் இயங்கும் மின்னணு கருவியாகும். தொடர்பினை மேம்படுத்துவதற்காக இக்கருவி ஒலியினைப் பெருக்கி அல்லது மாற்றி அமைக்கின்றது. காது கேள் கருவிகளில் ஒரு சிறிய மைக்ரோஃபோன் ஒலியினைப் பெற்று ஒலி அலைகளை மின் சமிக்ஞைகளாக மாற்றுகின்றன. இந்தச் சமிக்ஞைகளை ஒரு பெருக்கியானது (Amplifier) அதிகரிக்கச் செய்து ஒலிபெருக்கியின் மூலம் காது புறக் குழாயினுள் செலுத்துகிறது. மின் சமிக்ஞைகள் மீண்டும் ஒலி அலைகளாக மாற்றப்படுகின்றன.

உட்செல்லும் ஒலியின் அளவினை இக்கருவியில் அமைந்துள்ள ஓர் சிறிய சக்கர வடிவ ஒலிக் கட்டுப்படுத்தியின் மூலம் ஒழுங்கு செய்யலாம்.

ஒலியினை மிக அதிகமாகப் பெருக்கமடையச் செய்யும் சக்திவாய்ந்த கருவிகள் தற்சமயம் கிடைக்கின்றன. இக்கருவிகளில் மைக்ரோஃபோன், பெருக்கி மற்றும் மின்கலம் ஆகியவை உடம்பில் அணியக்கூடிய ஓர் பெட்டியினுள் அடங்கியுள்ளன. காது அருகில் உள்ள பகுதிக்கு ஓர் மெல்லிய மின்கம்பி (Wire) மூலம் மின்சாரம் எடுத்துச் செல்லப்படும். கடத்தல் காது கேளாத்தன்மை கொண்ட, குறிப்பாகக் காது குழாயில் தொற்றுதல் அல்லது சீழ் வடிதல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலும்பு கடத்தி (Bone conduction) காது கேள் கருவியினைப் பயன்படுத்தலாம். இவ்வகை காதுகேள் கருவி ஓர் கண்ணாடி பட்டை அல்லது கூந்தல் பட்டையின் மீது பொருத்தப்படலாம்.

காது கேளாதவர் பயன்படுத்தக்கூடிய பிற கருவிகளாவன - ஒலி பெருக்கிய டெலிபோன்கள், அழைப்பு மணி மற்றும் டெலிபோன் மணிக்குப் பதிலாகப் பிரகாச ஒளி விளக்குகள், ஒலியினை உணரும் அதிர் கருவிகள், தலையில் பொருத்தும் ஃபோனுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டிகள், தொலை தட்டச்சு எந்திரங்கள், மற்றும் வழி நடத்தும் ஒலிகள் முதலியன.

இரைச்சலினால் மாசுறுதல்

இரைச்சல் (Noise) என்ற சொல் 'Nausea' என்ற இலத்தீன் மொழியிலிருந்து தோன்றிய வார்த்தையாகும். அது வயிற்றில் ஓர் குமைச்சலை ஏற்படுத்தி வாந்தி எடுக்கச் செய்யும் ஓர் உணர்வாகும். விரும்பத்தகாத, தேவையற்ற ஒலியானது இரைச்சல் எனப்படும். அது மாசுறுதலின் ஓர் வகையாகும். நமது அன்றாட வாழ்க்கையில் ஊடுருவக்கூடிய தேவையற்ற எதிர்ப்புடன் கூடிய ஒலியே இரைச்சல் மாசுறுதல் எனப்படும். அது அநேகப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சமீபக் காலங்களில் காற்று, நீர் மற்றும் உயிர் சூழ்மண்டலத்தை மாசுறச் செய்யும் பிற வேதி மாசுபடுத்திகளைப் போன்று இரைச்சலும் ஓர் பெரும் மாசுபடுத்தியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரைச்சல் மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பதோடு, அதன் விளைவுகள் மீண்டும் சரிசெய்ய முடியாதவை.

இரைச்சலுக்கு அநேக மூலக் காரணங்கள் உண்டு. அவற்றினைத் தொழில்சார்ந்த மூலங்கள், தொழில் சாரா மூலங்கள் என வகைப்படுத்தலாம். தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் மூலம் உருவாகி விண்வெளியில் திணிக்கப்படும் இரைச்சல் தொழில் சார்ந்த மூலங்களில் அடங்கும். பெருநகர வளர்ச்சியினால் தோன்றும் இரைச்சல்; தரை, விமான, இரயில் போக்குவரத்து; ஒலிபெருக்கிகள்; வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள், கட்டுமான பகுதிகள், அண்டை வீட்டார் பொழுதுபோக்கில் எழும் ஒலி அளவு, மேலும் பெருநகர வாழ்க்கையின் செயல்பாடுகள் ஆகியவை இரைச்சலின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.

ஒலியானது அநேகக் கூட்டுத் தொகுதிகளால் அளக்கப்படுகிறது. ஒலியினை அளப்பதற்கு மிகச்சிறந்த அலகு டெசிபெல் ஆகும். இது சர் ஆல்ஃபிரட் பெல் என்பவரைக் குறிக்கும். இந்திய தொழில் இரைச்சல் அளவீட்டின் கணக்கின்படி அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு 81 dB முதல் 120 dB வரை ஆகும்.

கனத்த சத்தமானது (130 dB க்கு மேல்) நடுக்காதின் தசைகளுக்கு நிலையான சேதத்தையோ, காது எலும்புகளின் உறுதித் தன்மை பாதிப்பையோ, காக்லியாவின் மயிரிழை செல் குறைபாட்டையோ, அல்லது செவிப்பறை கிழிவுற்றோ, கேட்டல் தன்மையினை மிகவும் குறைவடையச் செய்கின்றது.

உடல் தோல்

உடலின் மேல்தோலானது உடலின் பெரிய உறுப்பாகும். இவ்வுறுப்பு உடலின் மொத்த எடையில் 8% ஆக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 1.1-2.2 சதுர மீட்டராகும். உடலின் அனைத்து மேல்பரப்பினையும் சூழ்ந்துள்ள உடல் தோலானது உடலுக்கும் சுற்றுச் சூழலுக்குமிடையில் ஓர் இடையுறுப்பாக அமைந்துள்ளது. உடல் துவராங்களின் சவ்வுப்பகுதிகள் மற்றும் கண், காது போன்ற உறுப்புகளின் வெளிப்பரப்புகள் மேல் தோலின் தொடர்ச்சியாகும்.

தோலில் புறப்படைச் செல்களின் மாறுபாடுகளாக வியர்வைச் சுரப்பிகள், எண்ணெய்ச் சுரப்பிகள், உரோமம் தோன்றும் புடைப்புகள், நகங்கள் போன்றவை அமைந்துள்ளன. சீபம் எனும் எண்ணெய் பொருளைச் சுரக்கும் எண்ணெய்ச் சுரப்பிகள் உரோமக்கால்களுக்கருகில் திறந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகளில் இரு வகைகளுண்டு. அவை பகுதிச் சுரப்பிகள் (Merocrine glands), புறச்சுரப்பிகள் (Apocrine glands) எனப்படும். பகுதிச் சுரப்பிகள் உடல் முழுவதும் பரவியுள்ளன. இவை தெளிந்த நீர்ப்பொருளைச் சுரக்கின்றன. புறச்சுரப்பிகள் கக்கங்கள், மார்புக் காம்பு முகட்டு வட்டம், பூபிசு (Pubis), விதைப்பை, மலத்துவாரம் சூழ் பகுதிகளில் உள்ளன. இவை உரோமக் கால்களிலும் திறந்திருக்கலாம்.

தோலின் டெர்மிஸ் பகுதியில் இணைப்புத் திசுக்களுள்ளன. இங்கு அமைந்துள்ள எலாஸ்டிக் மற்றும் கொலாஜன் இழைகள் தோலுக்குரிய வலுவினையும் நீள்தன்மையினையும் அளிக்கின்றன. மேலும் இப்பகுதியில் தான் இரத்தக் குழாய்கள், நிணநீர் நாளங்கள், நரம்புகள் மற்றும் நோய் தடுப்பிற்கான செல்கள் போன்றவையுள்ளன. தொடு உணர்வு, வலியறிதல், அழுத்தம், வெப்பம், குளிர், மற்றும் அதிர்வுகளை அறிவதற்கான உணர்ச்சி உறுப்புகள் தோலில் உள்ளன.

தோலின் வழியாகச் செல்லும் இரத்த ஓட்டத்தினால் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவதோடு உடல் வெப்பமும் வெளியேறுகிறது.

தோலின் வேலைகள்

 • நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்களைத் தடுக்கும் அரணாகத் தோல் அமைந்துள்ளது.
 • உடலிலிருந்து நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. வேதியப் பொருட்கள் வெப்பம், ஒளித்தாக்கம், ஊடுகலப்பு ஆகியவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
 • உடலிலிருந்து வெப்பம் வெளியேறுதலைக் குறைத்துக் கட்டுப்படுத்துகிறது.
 • சிறிதளவு கழிவு நீக்கம் மற்றும், உட்கிரகித்தல் நடைபெறச் செய்கிறது.
 • வைட்டமின் D உற்பத்தியில் உதவுகிறது.
 • தோல் பலவகை உணர் உறுப்புகளைக் கொண்ட ஓர் உணர்ச்சிப் பரப்பாக அமைந்துள்ளது.
 • தோலின் மேல் அமைந்துள்ள கெராட்டீன் தோலுக்கு ஓர் குறிப்பிட்ட வழவழப்புத் தன்மையளித்துள்ளது.
 • இத்தன்மையால் உடல் அசைவுகளும் பல பொருட்களைக் கையாளுதலும் எளிதாகியுள்ளன.

மெலானின் செயல்கள்

மெலானின் ஓர் பழுப்பு கலந்த கருப்பு நிறமுடைய நிறமியாகும். இது ஹீமோகுளோபினற்ற பொருள். இந்நிறமி உரோமம், தோல், கண்ணின் கோராய்டு உறை, ஆகிய பகுதிகளில் உள்ளது. இவை மெலனோபோர் எனும் செல்களினுள் சிறு துகள்களாகச் சேமிக்கப்படுகின்றன. இச்செல்கள் தோலின் கீழுள்ள டெர்மிஸ் பகுதியில் உள்ளன. இச்செல்களில் டைரோசின் எனும் அமினோ அமிலத்திலிருந்து மெலானின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென டைரோசினேஸ் என்சைம் அச்செல்களில் அமைந்துள்ளது.

டைரோசின் + டைரோசினேஸ் = மெலானின். மெலானின் நிறமி தோற்றத்தில் உள்ள குறைபாடுகளால் நிறம் அதிகரிப்போ அல்லது குறைதலோ நிகழலாம்.

பொதுவான நிறம் அதிகரிப்பு :

அ. அடிசனின் நோயில் பொதுவான நிறமதிகரிப்பு நிகழும். ஒளிபடும் தோல்பரப்புகள், உள்வாய் பகுதிகளில் நிறமி பரவல் ஏற்படும்.

ஆ. ஈஸ்டிரோஜன் ஹார்மோன், கருவுற்ற காலங்களில் அதிகரிப்பதால் முகம், மார்பு ஆகிய இடங்களில் நிறம் அதிகரிக்கும்.

இ. ஆர்சனிக் நச்சுப்பொருளால் உடல் முழுவதும் சிறு புள்ளிகளாக நிறமிகள் அமையும்.

பொதுவான நிறக்குறைவு :

அல்பினிசம் எனப்படும் வெண்மைத் தோல் நோய், குறைபாடுடைய நிறமிகள் தோலில் தோன்றுவதால் ஏற்படுகிறது. இது ஒரு மரபணு குறைபாடு நோய். மெலானின் தோன்றுவதற்கான டைரோசினேஸ் செயல் நடைபெறு வதில்லை. இவர்களுக்கு வெண்பொன் நிறமான தலைமயிர், பார்வைக் குறைபாடு, ஒளி வெறுப்பு போன்ற தன்மைகள் ஏற்படும். இவர்களது தோலில் அதிக அளவு சூரிய ஒளியால் புற்றுநோய்ப் புண்கள் தோன்ற வாய்ப்புண்டு.

ஆங்காங்கு நிறம் குறைதல் :

அ. லியூக்கோடெர்மா எனும் வெண்தோல் குறைபாட்டில் ஆங்காங்கு வெண்மைத் திட்டுகள் தோலில் அமைந்திருக்கும். இது ஒரு பாரம்பரியக் குறைபாடு.

ஆ. விட்டிலிகோ எனும் வெண்தோல் குறைபாட்டில் ஆங்காங்கு வெண்மைப் பகுதிகள் தோன்றும்.

இ. பெறப்படும் நிறக்குறைபாடுகள் : லெப்ரசி எனும் தொழுநோய், குணமாகும் காயங்கள்

கதிரியக்கம் - விளைவுகள்

சூரியனின் புறஊதாக்கதிர்கள் கண்களுக்கு தெரிவதில்லை. இவை சூரியனின் ஒளிக்கற்றையில் நாம் காணும் ஒளிக்கதிர்களுக்கும் கற்றையின் வெளி ஓரத்தில் உள்ள எக்ஸ் கதிர்களுக்கும் இடையில் உள்ளன. நீண்ட அலை நீளத்தினைக் கொண்ட புற ஊதாக்கதிர்கள், காணும் ஒளி அலையின் அருகில் உள்ளன. இவற்றை UVA என்று குறிப்பிடுவோம். வெளி ஓரத்தில் எக்ஸ் கதிர் அருகில் உள்ள புற ஊதாக்கதிர்கள் UVC என்று கூறப்படும். UVA, UVC ஆகிய கதிர்களின் மையத்தில் UVB புற ஊதாக்கதிர்கள் உள்ளன.

UV கதிர்கள் சூரிய ஒளி, UV விளக்குகள், வெல்டிங் வேலைகள் ஆகியவற்றில் பெறப்படுகின்றன. UV கதிர்கள் தோலில் ஒரு சில மில்லி மீட்டர்கள் மட்டுமே நுழையக்கூடியவை. எனவே இவற்றின் பாதிப்பு எபிடெர்மிஸ் பகுதியில் மட்டுமே அமைந்திருக்கும். மனிதனின் தோலில் UV கதிரியக்கத்தால் அடுக்கு எபித்தீலிய கார்சினோமா, கீழ்செல் கார்சினோமா தீவிர தன்மையுடைய மெலனோமா போன்ற பலவகை தோல் புற்றுநோய்கள் தோன்றலாம். UV ஒளியின் பாதிப்பினைத் தோலின் மெலானின் தனது அடர்த்தியினைப் பொறுத்துத் தவிர்க்கலாம். வெண்மை நிறமுடையவர்களுக்கும் மெலானின் அடர்வு குறைவாக உள்ளவர்களுக்கும் (Fair skinned) UV கதிர்ப் பாதிப்புகள் விரைவில் தோன்றும் வாய்ப்புகளுண்டு. பூமத்திய ரேகை நாடுகள், பகலில் வெளியில் நின்று பணிபுரிவோர், விவசாயிகள் ஆகியோரை ஒளிக்கதிரியக்கம் பாதிக்கலாம்.

தோல் மாற்றுச் சிகிச்சை

பாதிப்படைந்த தோல் பகுதியினைச் சீர்செய்யத் தோல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இச்சிகிச்சையில் உடலின் ஒரு பகுதியில் நன்கு அமைந்துள்ள தோல் நீக்கப்பட்டுப் பாதிப்புள்ள பகுதியில் பொருத்தப்படும். அங்கு புதிய செல்கள் வளர்ந்து பாதிப்படைந்த தோலைச் சீர் செய்துவிடலாம்.

இரட்டையர்களின் தோலை ஒருவருக்கொருவர் மாற்றிப் பொருத்தலாம். ஆனால் வேறொருவரின் அல்லது மற்றொரு விலங்கின் தோலினைப் பொறுத்த இயலாது. பொருத்தினால் அத்தோல் நிராகரிக்கப்பட்டு விடும். உடல் தோலின் பரப்பளவு அதிகம். எனவே இணைத்துத் தைக்க இயலாது. இணைத்தால் சில வேளைகளில் உடல் அமைப்பு மாறுவதோடு உடல் அசைவுகளும் பாதிப்படையலாம்.

டெர்மடைட்டிஸ் (Dermatitis) சருமநோய்

இந்நோயினால் உடல் தோலில் வீக்கம் ஏற்படும். இந்நிலை , ஒவ்வாமையினாலோ அல்லது குறிப்பிட்ட காரணமின்றியோ ஏற்படலாம். ஒருவகைத் தோல் நோய்க்கு எக்ஸிமா என்று பெயர். செபோரிக் சருமநோய், தொடர்பு சருமநோய், ஒளிச்சருமநோய் எனவும் மூன்று தோல் நோய்களுண்டு.

தொடர்பு சருமநோய்

தோலுடன் சில பொருட்கள் தொடர்பு கொள்ளுவதால் தோலில் கனற்சி (Rash) தோன்றும். இந்நோய் நேரடியாக அப்பொருளினாலோ அல்லது ஒவ்வாமையினாலோ ஏற்படலாம். பொதுவாக டிடர்ஜென்ட் சோப்புகள், நிக்கல் (கைக்கடிகாரப் பட்டை, கை வளையல், உள்ளாடைக் கொக்கிகள்) போன்றவற்றால் சருமநோய் தோன்றலாம். சில தாவரங்கள், வாசனைப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவையும் காரணமாகலாம். பொருளின் வகையைப் பொருத்துத் தோலில் கனற்சி தாக்குதல் வேறுபடும். அரிப்பு, தோலில் உலர்ந்த பிளவுகள் போன்றவை ஏற்படும்.


கண்ணின் குறைபாடுகள்

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.19047619048
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top