பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / எய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

எய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசின் நடவடிக்கைகள்

எய்ட்ஸை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியத்துறைகளில் பல்வேறு சாதனைகளில் படைத்து வரும் இந்தியா ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸை கட்டுப்படுத்துவதில் உலகமே வியக்கும் வண்ணம் உன்னத முன்னேற்றத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவில் புதிதாக ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 50 விழுக்காடு குறைந்திருக்கிறது என்று ஐ.நா. அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட எய்ட்ஸ் தொடர்பான ஆய்வறிக்கைகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் கட்டுப்படுத்தப்பட்டதற்கு காரணம் இந்திய அரசு மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகள்தான்.

இந்தியாவில் எய்ட்ஸ்

எய்ட்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவும், நைஜீரியாவும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கின்றன. எனினும் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவில் எய்ட்ஸ் விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. விகிதாச்சார அடிப்படையில் பார்க்கும் போது எய்ட்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 89வது இடத்தில்தான் உள்ளது என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை எய்ட்ஸ் குறைபாடு தென்மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் தான் அதிகம் காணப்படுகிறது.

இந்தியாவில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாண்மையானோர் இடம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் ஆவர். கிராமப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு போதிய கல்வியறிவு இல்லாததால் அவர்களுக்கு ஹெச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஹெச்.ஐ.வி. பரவுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

எய்ட்ஸ் தோன்றிய வரலாறு

இந்தியாவில் எய்ட்ஸ் குறைபாடு முதன் முதலில் கண்டறியப்பட்டது சென்னையில். கடந்த 1986ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்களுக்கு ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர் சுனிதி சாலமன் கண்டுபிடித்தார். அந்த நேரத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சென்னைக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வண்ணம் இருந்தனர். அவர்கள் மூலமாக சென்னையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்களுக்கு எய்ட்ஸ் பாதிப்பு தொற்றியிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது. அதன்பின் 1987ம் ஆண்டில் இந்தியாவில் மேலும் 135 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு ஹெச்.ஐ.வி. குறைபாடு எய்ட்ஸாக மாறியிருப்பதும் தெரியவந்தது. அதன்பின் படிப்படியாக அதிகரித்த எய்ட்ஸ் பாதிப்பு 2009ம் ஆண்டில் 23.95 லட்சம் என்ற உச்சக்கட்டத்தை அடைந்தது.

அரசின் நடவடிக்கைகள்

எய்ட்ஸ் குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் குறைபாடு 1986ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து 1987ம் ஆண்டிலேயே எய்ட்ஸ் தொடர்பான சுகாதார கல்வி மற்றும் இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் இத்திட்டத்தை செயல்படுத்தவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. எய்ட்ஸ் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் நோக்குடன் தொலைக்காட்சிகளிலும், திரையரங்குகளிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நிதியுதவி ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் நிதியுதவி கடந்த 2003ம் ஆண்டில் தொடங்கி 2007ம் ஆண்டு வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் 2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கிடு 15% குறைந்துவிட்டது.

சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் 5 விழுக்காடு ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ சக்காக பயன்படுத்தப்படுகிறது. ஹெச்.ஐ.வி.க்கு அதிக நிதி செலவிடப்படுவதால் மலேரியா, நீரிழிவு நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவற்றுக்கு போதிய நிதி செலவிட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே எதிர்காலத்தில் ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸுக்கான செலவை குறைக்கும் வகையில் அந்த நோய் பரவுவதை தடுக்க இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். சிகிச்சைகள் ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மாநில சிகிச்சை மையங்கள்

  • மராட்டிய மாநிலத்தில் 43 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இவற்றின் மூலம் மொத்தம் 70,511 பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாட்டில் 36 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு 2439 குழந்தைகள் உட்பட மொத்தம் 39,586 பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
  • கர்நாடகத்தில் 33 மையங்களும், ஆந்திராவில் 31 மையங்களும்,
  • உத்திரப்பிரதேசத்தில் 10 மையங்களும்,
  • குஜராத்தில் 9 மையங்களும்

அமைக்கப்பட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

எய்ட்ஸ் குறைபாடு என்பது சாதி, மதம், இனம், கல்வி தகுதி, சமூக அந்தஸ்து ஆகியவற்றை பொறுத்து ஏற்படுவது இல்லை. எய்ட்ஸ் குறைபாட்டை தடுக்க வேண்டியது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு ஆகும். எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதுதான் இதற்கான முக்கிய கருவி ஆகும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோருடன் பழகுவதன் மூலம் நமக்கு அந்த நோய் தொற்றிக் கொள்ளாது என்பதால் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோரை ஒதுக்கி வைப்பதோ அல்லது அவர்களிடம் பாகுபாடு காட்டுவதோ கூடாது. ஒரு எய்ட்ஸ் நோயாளியைப் பொறுத்தமட்டில் தகாத பாலுறவால் மாத்திரம் நோயைப் பெற்றிருப்பார் என்று கூற முடியாது சில சந்தர்ப்பங்களில் அத்தகைய பழக்கங்கள் இல்லாதவர்களும்கூட அவர்களை அறியாத சந்தர்ப்பங்களிலும் இந்நோய் தொற்றலாம். எனவே எய்ட்ஸ் நோயாளிகளை சாதாரண மனிதர்களாக கருதி அவர்களுக்கு உரிய உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : .இளங்கோவன், முதுநிலை ஆசிரியர், திட்டம், சென்னை

2.98113207547
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top