অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

கோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு

கோடை கால நோய்களில் இருந்து தற்காப்பு

தற்காப்பு வழிகள்

கோடைக்காலத்தில் பெரும்பான்மையான நோய்கள் சூரியக் கதிரின் வெப்ப பாதிப்பினால் ஏற்படுகின்றது. சன் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் கடுமையான வெய்யில் காரணத்தால் சிலருக்கு ஏற்படுவதுண்டு. மேலும் உடற்சோர்வு, அதிக வியர்வையால் ஏற்படும் வியர்க்குரு என்று கோடை காலத்தில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி சீர் செய்து, உடலின் சமன்நிலையைப் பாதுகாப்பது:

எந்த ஊராக இருந்தாலும் அதன் சிறப்பு மற்றும் செழிப்பு நீர் வளத்தைப் பொருத்துதான் அமைகின்றது. தண்ணீர் வாழ்வாதாரம். அதைக்கூட மனிதர்கள் வணிகமயமாக்கிவிட்டது காலக் கொடுமை. கடும் கோடைக்காலத்தை சமாளிக்க முதலில் நம் உடலின் தட்பவெட்ப நிலை அதிக மாறுதலுக்கு உள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், விதவிதமான நோய்களுக்கு நேரான பாதையை நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுவோம்.

பிரச்னைகள்

  • தண்ணீர் சுத்தமாக குடிக்காததால் வரும் நோய்கள்
  • உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாததால் வரும் நோய்
  • மிகவும் குளிர்ந்த தண்ணீரைக் குடிப்பதனால் வரும் நோய்
  • வியர்வை, தூசி மற்றும் அழுக்கால் பாதிக்கப்பட்ட சருமத்தை நீரால் கழுவி சுத்தமாக வைக்காவிட்டால் வரும் நோய்கள்

தண்ணீர் சுத்தமாக குடிக்காததால் வரும் நோய்கள்

நம்  மூளையில் உள்ள பிட்யூட்டரி க்ளாண்ட் அருகில் அமைந்துள்ள thirst என்ற ஒரு இடத்திலிருந்துதான், தண்ணீர்க் குடிக்க வேண்டும் என்ற தாகத்துக்கான கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. மனித உடலுக்குத் தேவையான தண்ணீரை இயல்பாகவே தாகம் எடுப்பதன் மூலம் உடல் கேட்கிறது. தாகம் எடுக்கும்போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது தவறு. நிறைய தண்ணீர் குடிப்பது, பொதுவாக உடல் நலத்துக்கு நல்லதுதான். ஆனால் அந்தத் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும்.

குடிநீரை நன்றாக வடிகட்டி காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும். இதைப்பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களின் மூலம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவசர யுகத்தில் இதையெல்லாம் கடைபிடிக்காமல் இருப்பவர்கள் அநேகம். ஆனால், கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் என்பதுபோல், அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் விளைவாக டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்கள் உடனடியாகத் தாக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். உலக அளவில், சுகாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளின் பட்டியிலில் இந்தியா இன்றளவும் இடம் பெற்றுள்ளது என்பது வெட்கக்கேடு.

தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் சாதாரண வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காலரா, மஞ்சள் காமாலை, எலி ஜூரம் (லெப்டோ ஸ்பைரோசிஸ்), டைபாய்டு போன்ற நோய்களைத் தவிர்க்கலாம்.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகையில், கை கால்களை சுத்தமாக கழுவுவதன் மூலம் சில நோய்களைத் தவிர்க்க முடியும். உணவு சாப்பிடும் முன்னர் நிச்சயம் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

தற்போது கேன் வாட்டர் பரவலாக பயன்பாட்டில் உள்ள நிலையில், அதன் தரத்தைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதே நலம். கேனில் ஐஎஸ்ஐ (ISI) முத்திரைக் குத்தப்பட்டு இருந்தால் மட்டுமே சுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. உணவு கெட்டுப்போகாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டியைப் பதப்படுத்துகிறோம். ஆனால் அவற்றை வெளியில் எடுத்து அறையின் தட்பவெட்பத்துக்கு வந்த பிறகு அந்த உணவை சூடு பண்ணிச் சாப்பிடுவதன் (55 டிகிரி) மூலம் உணவை நஞ்சாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

பழச்சாறு கடைகளில் ஜூஸ் தயாரிப்பவர் கைகளில் உறை அணிந்திருப்பது நலம்.  அங்கு பயன்படுத்தும் பாத்திரத்தின் சுத்தம், பழங்களின் தரம், அது தயாரிக்கப்படும் மிக்ஸியின் சுத்தம் என எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். தவிர ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கப் போடப்படும் ஐஸ் கட்டிகள் தரமானவையா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஜூஸ்தானே குடிச்சேன் என்று பின்னர் வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு வந்த பின்னர் யோசிப்பது பயனில்லை.

குறைவான தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள்

பொதுவாக, உடலின் தண்ணீர் தேவை சுமார் ஒன்றரை லிட்டரிலிருந்து இரண்டு லிட்டர் வரை. ஆனால் அவரவர் வேலை மற்றும் அவர்களின் உடலின் வியர்வைக்கேற்ப இது மாறுபடும். உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மாலையில் களைப்பு, உடல்வலி, நீர்க்கடுப்பு, காலையில் மலச்சிக்கல், நாள்பட சிறுநீர்ப் பாதை கல், மூலம், வயதானோர்க்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உதடுகள் காய்ந்துபோவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது, எப்போதும் தூக்கம் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். வியர்வை நீருடன் உப்பும் சேர்ந்து வெளியேறிவிடுவதால் உடலுக்கு உப்புச் சத்தை மீண்டும் தராமல் இருப்பதாலும் உடற்கேடுகள் விளையும்.

குளிர்ந்த நீரைப் பருகுவதால் வரும் பிரச்னைகள்

தண்ணீர் அல்லது குளிர்பானங்களை மிகவும் குளிர்ச்சியாக (ஐஸ் கோல்ட்) குடிப்பதால் தொண்டை வலி, மூக்கடைப்பு, காது வலி, இருமல், சளி போன்ற நோய்கள் ஏற்படும். இதைத்தவிர, அறையை குளிரூட்டும் ஏ.ஸி. கருவிகள் வீட்டுக்கு வீடு வந்த பிறகு அதிகமான குளிர் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்ட நிலையில், நாளடைவில் சில பாதிப்புக்கள் ஏற்படும். வீட்டில் ஏ.ஸி, காரில் ஏ.ஸி, அலுவலகத்தில் ஏ.ஸி என்று எல்லா இடங்களிலும் ஏ.ஸி.யிலேயே வசிப்பதால் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்துக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. வைட்டமின் டி, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய சத்து என்பது கோடை நகரான சென்னைவாசிகளுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. ஆனால், இந்தியாவில் வைட்டமின் டி குறைபாட்டினால் அவதிப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உடலை நீரால் கழுவி சுத்தமாக வைக்காவிட்டால் வரும் நோய்கள்

சருமத்தின்  அடியில் ‘எக்ரைன்’ எனும் வியர்வைச் சுரப்பி இருக்கிறது. இந்த சுரப்பிகள்  தூண்டப்படும்போது உடலில் இருந்து வியர்வை வெளியேறும். உடலில் சூரிய ஒளி படும் இடங்களான முகம் கைகளில் வியர்க்கும்போது எவ்வித வாடையும் வராது. ஆனால் அப்போக்ரைன் எனும் சுரப்பி அக்குள் மற்றும் மறைமுக இடங்களில் சுரந்து, அவ்விடங்களில் வியர்க்கும்போது துர்நாற்றத்தை ஏற்படும். நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு  அவை அமிலமாகிறது. உணவுப் பொருள்கள் (உதாரணமாக பூண்டு, வெங்காயம், அசைவ உணவுகள் மற்றும் மசாலா வகை உணவுகள்) சாப்பிட்டால் அந்த வாடை வியர்வையுடன் கலந்துவிடும்.

வெளியிலிருந்து பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் உள் நுழைவதைத் தடுக்க சில நுண்ணுயிர்கள் நம் உடலில் இயற்கையாகவே இருக்கும். இந்தப் பாதுகாப்பையும் மீறி சில கிருமிகள்  வியர்வையுடன் சேர்ந்து, தோலின் மேல்புறத்தில் பூஞ்சைக்காளானை (ஃபங்கஸ்) உருவாக்கும். (உதாரணத்துக்கு தயிர் அல்லது ஊறுகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியே நான்கைந்து நாள்கள் வைத்துவிடுகையில், அதன்மேல் மஞ்சளாகப் படர்ந்திருக்கும் கிருமிதான் ஃபங்கஸ்). இந்த ஃபங்கஸ், பாக்டீரியா, தோல் வியர்வை மற்றும் அழுக்கு, புரதம் போன்றவை எல்லாம் சேர்ந்து சருமத்தில் விரும்பத்தகாத துர்நாற்றத்தை உருவாக்கிவிடும். இது பரம்பரையாக சிலருக்கு வருகிறது என்று சொல்லப்பட்டாலும் அப்படி இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம். வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

வியர்க்கும்போது ஏற்படும் அரிப்புக்கு, சொரிவதால் தோலில் சின்னச் சின்ன காயங்கள் ஏற்பட்டு கிருமிகளால் தோலில் கட்டிகள் உருவாகும். வியர்வை சருமத்தை நன்றாகக் கழுவி, ஈரத் துணியில் துடைத்தால் வியர்க்குரு வராது.

வியர்வையை சுத்தமாக கழுவவில்லை எனில், உடல் இடுக்குகளில் மடிப்புகளில் காளான் நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்க, கோடை காலத்தில் தினமும் காலை மாலை இருவேளை குளிப்பது அவசியம்.

சுத்தமாக துவைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும். வெய்யில் காலத்தில் காட்டன் உடைகள் அணிவது நல்லது. இவை, அதிகப்படியான வியர்வையை உறிஞ்சிவிடும்.

அதிக வியர்வைப் பிரச்னை உடையவர்கள் வசதி மற்றும் வாய்ப்பு இருந்தால் ஒரு நாளில் இரண்டு தடவை உடை மாற்றிக் கொள்ளலாம்.

வெயிலில் செல்லும்போது தொப்பி, குடை எடுத்துச்செல்வது பாதுகாப்பானது.

தினமும் ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் (8 - 10 க்ளாஸ்) தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி சுத்தமாகக் குடிக்க வேண்டும்.

உணவுப் பண்டங்களை சுத்தமான நீரில் கழுவிச் சாப்பிடுவது அவசியம்.

இளநீர், மோர், பழச்சாறு, சாதம் வடித்த தண்ணீர், கஞ்சி, கூழ், நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கோடைக் காலத்தில் அதிகம் உட்கொள்வது நல்லது.

அடிக்கடி கைகளை தண்ணீரால் சுத்தம் செய்வது அவசியம்.

சமைத்த உணவை நன்றாக சூடுபடுத்தி சாப்பிடுவது நலம்.

மிகவும் குளிர்ந்த நீரையோ உணவையோ உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

அதிக நேரம் ஏஸி அறைகளில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஆதாரம் : மருத்துவர் எம்.அருணாசலம், அரசு பொது மருத்துவமனை



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate