பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

காலி கார்பனிகம்

காலி கார்பனிகம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

உடலமைப்பு

குளிர்ந்த உடல்வாகு உள்ளவர்கள், ஆரோக்கியமற்ற இரத்த ஓட்டம் உள்ளவர்கள், ஆரோக்கியமற்ற மற்றும் தளர்ந்த தசையமைப்பு உடையவர்கள். தசைகளில் நீர்க்கோர்ப்பு வீக்கம் ஏற்படும். இதயத் தடுப்பான் (Valve) ஓரங்களில் இரத்தத் தட்டையணுக்கள் சேர்ந்துப் படியும் தன்மையுள்ளவர்கள். இதற்குக் காரணம் துணைப்பரிவு நரம்புகள் தூண்டப்படுவதாகும். இவர்கள் எளிதில் உடலில் மற்றும் மனதில் களைப்பு ஏற்பட்டு சிடுசிடுக்கும் தன்மை கொண்டவர்கள்.

இவர்களுக்குக் குளிர்ந்த தென்றல் காற்றுக் கூட ஒத்துக் கொள்ளாது. இதனால் இவர்கள் எப்போதும் கதகதப்பான இருப்பிடங்களில் இருக்கவே விரும்புவார்கள். இவர்களுக்கு “சில்” லென்ற காற்று வீசும் போது, நரம்புவலி ஏற்படும். இவர்களுக்கு வெப்பப் பிரயோகம் (Hot application) வலியை இடம் பெயர்க்கும். பொதுவாக இவர்களுக்கு ஏற்படும் வலிகள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி இடம் பெயரும். வலி ஏற்பட்ட இடங்களில் குளிர்ந்த வியர்வை உண்டாகும். இதற்குக் காரணம், வியர்வைச் சுரப்பிகள் துணைப்பிரிவு நரம்புகளால் தூண்டப்படுவதாகும். இம்மருந்தின் முக்கியக் குறிகளில் ஒன்று, நடுமுதுகிலும் மற்றும் அடிமுதுகிலும் வலி ஏற்பட்டு, அப்பகுதியில் மட்டும் வியர்ப்பதாகும். மேலும் தலைவலி ஏற்படும் பொழுது, நெற்றியில் மட்டும் வியர்க்கும். வெட்ட வெளியில் நடக்கும் பொழுது, தலையில் குளிர்ந்த காற்று பட்டவுடனேயே, தலைவலி உண்டாகும். இதனால் நோயாளர்கள் தலையை துணியால் மூடிக்கொள்வார்கள்.

இந்நோயாளர்களுக்கு முன்பக்க மூக்கு இணைப்புக் காற்றறைகளில் பாதிப்பு ஏற்பட்டு தலைவலியும், எரிச்சலும் உண்டாகும். இந்நோயாளர்கள் வெட்ட வெளியில் நடக்கும் பொழுது, மூக்கடைப்பும், சளியொழுக்கும் ஏற்பட்டு, வீட்டுக்குத் திரும்பி கதகதப்பான அறைகளில் நுழையும் பொழுது, மூக்கடைப்பும், சளியொழுக்கும் விலகிவிடும். மேலும் தலைவலி போன்ற பிரச்சினைகளும் சமனமடைந்து நோயாளர் நலமடைவார். மேலும் குளிர்ந்த காற்று காதுகளில் நுழைந்து, காதுகளில் குத்தல் வலியை ஏற்படுத்தும்.

மேலும் குளிர்ச்சியினால் தொண்டை அழற்சி ஏற்பட்டு, தொண்டை அடைத்துக் கொள்ளும். குளிர்ந்த பண்டங்களையும், பானங்களையும் உட்கொள்ளும் பொழுது, இரைப்பைப் பிரச்சினைகள் உண்டாகும். வயிற்றில் குளிர்ந்த உணர்வு ஏற்பட்டு, வலியும் ஏற்படும். இவையெல்லாம் சற்றுச் சூடான உணவுகளையும், பானங்களையும் உட்கொள்ளும் பொழுது சரியாகிவிடும்.

மேலும் மார்புப் பகுதிகளிலும், கைகால்களிலும் கூட குளிர்ச்சியான உணர்வு உண்டாகும். பொதுவில் இந்நோயாளர்களுக்கு, குளிர்ச்சியான தட்ப வெப்பம் ஒத்துக் கொள்ளாது. ஆனால் வெப்பமான தட்ப வெப்பம் நலமளிக்கும்.

இந்நோயாளர்களுக்கு, மாலை மற்றும் இரவு நேரங்கள், மாதவிடாய்க்கு முன்னர், களைப்பு ஏற்பட்ட பின்னர், திறந்த வெளி, உணவு உட்கொண்ட பின்னர் ஆகிய நிலைகள் ஒத்துக் கொள்ளாது.

ஆரோக்கியமற்ற இரத்தஓட்டம்

இம்மருந்துக்குரிய நோயாளர்களுக்கு குளிர்ச்சியால் தான் ஆரோக்கியமற்ற இரத்த ஓட்டம் ஏற்படுகிறது. கை கால்களில் குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலையால் குளிர்ந்த உணர்வு ஏற்படுவதுடன், மரத்துப் போகும் நிலையும் உண்டாகிறது. இவை, குறுக்காக கைகளைப் பிணைத்துக் கொள்வதாலும், ஒருகாலின் மேல் குறுக்காக மற்றொரு காலைப் போட்டுக் கொள்வதாலும் ஏற்படுகிறது. கை கால் விரல்களின் முனையிலும் மற்றும் கட்டை விரல்களின் முனையிலும் வலியுணர்வு உண்டாகிறது. உள்ளங்கால்களில் தரையின் குளிர்ச்சி விரைவாக ஊடுருவுகிறது. தோல் குளிர்ந்தும், வெளுத்தும் மற்றும் பருத்தும் காணப்படுகிறது.

இந்நோயாளரின் தோலில் ஏற்படும் நீர்க்கோர்ப்பு வீக்கம் இதய பாதிப்பினால் உண்டானதா அல்லது பகுதி திசுக்களின் பாதிப்பினால் உண்டானதா என்பதை மருத்துவர் தெளிவாக அறிந்துக் கொள்வது என்பது சற்றுக் கடினம் தான் கண்களின் புருவங்களுக்கும், மேல் இமைகளுக்கும் இடையில் பை போன்ற நீர்க்கோர்ப்பு வீக்கம் ஏற்படுவது, அப்பகுதி திசுக்களின் பாதிப்பினால் என்று மருத்துவர் போயிங்ஹாசன் தனது காலி கார்பானிகம் மருந்தின் விவரணையில் குறிப்பிடுகிறார் இதற்கு மாறாக, வயதானவர்களுக்கு ஏற்படும் நீர்க் கோர்ப்பு வீக்கம், இதயத் தசை பாதிப்பினால் ஏற்படுகிறது என்று பல மருத்துவர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

இளம் பெண்களுக்கு ஏற்படும் முகம் வெளுத்து வீங்கிப் பருத்திருப்பது போன்ற நிலை, இரத்த சோகையால் உண்டாகிறது. இதற்குக் காரணம் அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த இரத்த சோகைக்கு மறைமுகமான காரணம் அவர்களின் இரத்தத்தில் பொட்டாசியச் சத்து அதிகரித்தது தான் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமற்ற இரத்த ஓட்டத்தின் விளைவாக இந்நோயாளர்களுக்கு உணவு உண்ட பின்பு, தூக்கம் எளிதில் ஏற்படுகிறது. இதே போல, ஆண்களுக்கு உடலுறவின் போது விந்து வெளியேறிய பின்பு களைப்பு உண்டாகிறது. பெண்களுக்கு மாதவிடாயின் போது எளிதில் களைப்பு உண்டாகிறது. நாடித்துடிப்பு குறைவதும், இதயத் துடிப்பு குறைவதும் இந்நோயாளர்களுக்கு ஏற்படும் பிற அறிகுறிகளாகும். அதீத உடலுறவில் திளைக்கும் இந்நோயாளர்களுக்கு, “பார்வை மங்கல்” ஏற்படுகிறது.

காலி கார்பனிகம் நோயாளர்களுக்கு மனதில் பயம், பதட்டம் ஆகியவை எளிதில் ஏற்படுகிறது. இவர்கள் எளிதில் மனமுடைந்துப் போகிறார்கள். மிக்க கற்பனையாற்றல் இவர்களிடம் உள்ளது. தான் அச்சமடைந்த விஷயத்தைப் பற்றி விவரிக்கும் பொழுது, இவர்களின் கற்பனை ஆற்றல் பிறருக்கு எளிதில் புரிபடும். இவ்வாற்றல் இதயத் தசை பலவீனத்தால் பாதிக்கப்பட்ட நோயாளரிடம் அதிக அளவில் காணப்படுகிறது. இவர்களை பாதித்த அந்த பயங்கரமான விஷயம், இரைப்பைச் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்நோயாளர்களிடம் அதீத எரிச்சல் உணர்வு காணப்படுகிறது. ஆனால் நகைச்சுவை உணர்வு சிறிதும் இல்லை.

ஆரோக்கியமற்ற தசைகள்

இம்மருந்து இயங்குதசைகளில் நன்கு வேலை செய்து, பாரிச வாயுவை குணப்படுத்துகிறது. அதே போல, தசைகளை எலும்புகளுடன் பிணைக்கும் தசைநார்களையும் வலுப்படுத்துகிறது. மூட்டுகள் முடங்கிப் போவது, முதுகு வலி, முக்கியமாக நடுமுதுகு மற்றும் அடிமுதுகு வலி மற்றும் கால்வலி ஆகியவைகளையும் குணப்படுத்துகிறது.

நடந்து செல்கையில், திடீரென்று முதுகும், கால்களும் இயங்காமல் ஒருவர் நடுவழியிலேயே உட்கார்ந்து விட்டால், அவரை இம்மருந்து எழுப்பி நடக்கச் செய்யும். மருத்துவர் ஃபாரிங்டன் அவர்கள் இம்மருந்தின் மூன்று முக்கியக் குறிகளாக, வலிமையிழப்பு, முதுகுவலி, மற்றும் வியர்த்தல் ஆகியவைகளைக் குறிப்பிடுகிறார். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அடி முதுகுவலி, கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்குடன் கூடிய பாரமான அடிமுதுகுவலி ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் இம்மருந்துக்கு உண்டு. இவ்வலி இடுப்பு, பிட்டம், தொடை ஆகிய பகுதிகளுக்கும் பரவும். மேலும், இம்மருந்து தசைகளில் ஏற்படும் பிடிப்பு, முறுக்கம், நடுக்கம் ஆகிய பாதிப்புகளையும் சரி செய்யும். வயதானவர்கள் படிக்கட்டுகளில் ஏறும் போது ஏற்படும் வலிகளுக்கு இம் மருந்து சிறந்த நிவாரணி. தசைகளை நீட்டி மடக்குவதால் ஏற்படும் எல்லா பாதிப்புகளையும் இம்மருந்து குணப்படுத்துகிறது.

வயதானவர்களுக்கு ஏற்படும் ஆசனவாய் சுருக்குத் தசை விரிவடையாமை மற்றும் சிறுநீர்ப்பை சுருக்குத் தசைச்சுருங்காமை, இருமும் போதும் மற்றும் தும்மும் போதும் வெளியேறும் சிறுநீர்க்கசிவு பாதிப்புகளையும் காலி கார்பனிகம் குணப்படுத்துகிறது.

வலியின் தன்மை

காலி கார்பனிகத்தின் எல்லா வலிகளும் குத்தும் தன்மை வாய்ந்தவை. இம்மருந்தின் வலிகள் யாவும், பாதிப்படைந்த பகுதியை கீழே வைத்துப் படுப்பதால் அதிகரிக்கும்; பிறகு, அந்தப் பகுதி மரத்துப் போகும் என்பது இம்மருந்தின் தனித்தன்மையாகும். பிரையோனியா என்ற மருந்தின் தன்மையும் குத்தும் வலியை ஏற்படுத்துவதாகும். பிரையோனியா வலிகள் யாவும் பூந்தசைகளில் ஏற்படுவதாகும். ஆனால் காலி கார்பானிகத்தின் வலிகள் யாவும் தசைகளில் ஏற்படுவதாகும். இது மட்டும் தான் இந்த இரு மருந்துகளையும் வேறுபடுத்தும் தன்மையாகும்.

மற்றபடி, பிரையோனியாவின் வலிகளும் பாதிப்புற்ற பகுதியை கீழே வைத்துப் படுப்பதால் அதிகரிக்கும். மேலும் அந்தப்பகுதி குளிர்ச்சியடையும். மேலும் அசைவதினால் வலிகள் சமனமடையும். வலிகள் அடிக்கடி இடம் மாறும். வெப்பப் பிரயோகத்தினால் வலிகள் சமன மடையும்.

மேலும், பிரையோனியாவிலும் தொண்டையழற்சியின் போது தொண்டை காலி கார்பானிகத்தைப் போலவே அடைத்துக் கொள்ளும். காலி கார்பானிக்தைப் போலவே, ஆசனவாயில் மலம் கழித்த பின்பு குத்தும் வலி ஏற்படும். அடிமுதுகிலும் காலி கார்பானிகத்தைப் போலவே குத்தும் வலி உண்டாகும்.

பிற கார தாது உப்பு மருந்துகளைப் போலவே, காலி கார்பானிகமும் கீழ்வாதத் தன்மையை நலமாக்கும். அதே போல அடிமுதுகு, பிட்டம், இடுப்பு, தொடை, முட்டி ஆகிய பகுதிகளில் ஏற்படும் அசையாத் தன்மையையும் காலி கார்பானிகம் குணப்படுத்தும். இடுப்பு மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு சவ்வு வீக்கம் ஆகிய பாதிப்புகளுக்கும், பிற கார தாது உப்பு மருந்துகளைப் போலவே, காலி கார்பானிகம் நிவாரணமளிக்கும். யூரிக் அமில மிகுதியால் உண்டாகும் கீழ்வாதத் தன்மையை, பிற கார தாது உப்பு மருந்துகளைப் போலவே, காலி கார்பனிகமும் அதற்கே உரிய தனித் தன்மையுடன் போக்குகிறது. பொட்டாசிய தாது உப்புக்கு யூரிக் அமிலத்தை முறியடிக்கும் தன்மை இருப்பதால் தான், கீழ்வாத நோயாளருக்கு பொட்டாசியம் சத்து மிகுந்த உணவு வகைகளை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள்.

    இம்மருந்து செயல்படும் உறுப்புகள் :-

  • இதயம், மூச்சு மண்டலம் மற்றும் ஜீரண மண்டலம்.

இம்மருந்து முன்னொரு காலத்தில் அலோபதி மருத்துவத்தில் “இதய நச்சு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹோமியோபதி மருத்துவத்தில் தான் இம்மருந்தை இதயம் சார்ந்த நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பேராசான் ஹானிமன் தனது “நாட்பட்ட நோய்கள்” என்ற மருந்துகளின் பண்புக்களஞ்சியத்தில், இம்மருந்தின் பண்பு நலன்களை, தனது “நிரூபணம்” மூலம் தெரிவித்துள்ளார்.

அவற்றில் சில முக்கியமான பண்பு நலன்கள் :-

  1. பசியெடுக்கும் போது ஏற்படும் இதயத் துடிப்புகள்.
  2. பதட்டத்தினால் ஏற்படும் இதய படபடப்புகள்.
  3. இதயத்துடிப்பில் அடிக்கடி ஏற்படும் விடுபடுதல்கள்.
  4. இதயம் மற்றும் அதைச் சுற்றி ஏற்படும் அழுத்தும் வலிகள்; இவ்வலி மூச்சை உள்ளுக்கு இழுக்கும் போதும் மற்றும் இருமும் போதும் மட்டும் ஏற்படுதல்.
  5. நோயாளர்கள் சில படிகள் ஏறுவதற்குக்கூட மிகவும் சிரமப்படுதல்; ஆனால் சமதளங்களில் நடக்கும் போது, அவ்வித சிரமம் ஏற்படாமை.
  6. கீழ்க்காணும் அறிகுறிகள் இதயம் சார்ந்த ஆஸ்துமா நோயில் தென்படுதல்.

காலை வேளையில் மூச்சுத் திணறல், இரவு நேரங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளர் தூக்கத்திலிருந்து விழித்தெழுதல், இரவில் நோயாளர் மல்லாந்துப் படுத்திருக்கும் போது, ஸ்டெதாஸ்கோப்பை அவர் நெஞ்சில் வைத்துக் கேட்டால் களகளவென்று சப்தம் கேட்டல், மூச்சு திணறல், ஆழ்ந்து மூச்சு விடும் பொழுது நெஞ்சில் பாரம், அழுத்துவது போல உணர்தல், இதய வெளி உறையில் வலி, தொண்டை வறண்டு போவதால், காலை ஐந்து மணிக்கு ஏற்படும், விட்டு விட்டு தொண்டையை அடைக்கும் இருமல், இதன் காரணமாய் நெஞ்சில் பாரம் ஏற்பட்டு, பேசுவதில் சிரமம், உடல் முழுவதும் வியர்த்து, முகம் சிவத்தல்.

அறிகுறிகளாவன:-

நடுநிசிக்குப் பிறகு, இடதுபக்க நெஞ்சில், இதயம் இருக்கும் இடத்தில் ஏற்படும் கடுமையான அழுத்தம் வலி; இவ்வலி சில சமயங்களில் முதுகிற்கு இடம் பெயரும் போது வலப்புறமாக திரும்பிப் படுத்தால் தாங்கும் அளவிற்கும் மற்றும் இடப்புறமாக திரும்பினால் தாங்கமுடியாத அளவிற்கும் இருத்தல்; மற்றும் மறுநாள் இரவில் நெஞ்சில் தாங்க முடியாத அழுத்தும் வலி ஏற்பட்டு சீக்கிரமே விழித்தல்; இடப்புறமாகப் படுப்பதால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அதைத் தாங்க முடியாமல் வலப்புறமாக திரும்பிப் படுத்தல்; மூன்றாவது நாள் மல்லாந்தப் படுத்தல்; மூச்சு விடுவது விரைவாகவும் மற்றும் மேலெழுந்த வாரியாகவும் இருத்தல்; சாப்பிடும் போதும், குடிக்கும் போதும் மற்றும் விழுங்கும் போதும் மூச்சை நிறுத்தி விடுதல்; அதிகாலை வேளைகளில் மற்றும் படுக்கையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் தருணங்களிலும் மற்றும் உடலை வருத்தாத தருணங்களிலும், இதயச் செயல் குறைபாட்டினால் இதயத்தின் கடத்தும் ஆற்றலில் ஏற்படும் தடங்கல்கள், முக்கியமாக மூச்சுத் திணறல். இந்நிலைக்கு காலி கார்பனிகம் கொடுத்து, மருத்துவமனைகளில் ஒவ்வொரு முறையும் குணமடைவு நிகழ்ந்துள்ளது.

மூச்சு மண்டல உறுப்புகளின் முக்கியமாக, இரத்த நாளங்கள் குளிர்ச்சியால் குறுகிவிடும் நிலையை இம்மருந்து குணப்படுத்துகிறது. தொண்டை அழற்சி, குரல்வளை அழற்சி மற்றும் மூச்சுக் குழல் அழற்சி ஆகிய நோய் நிலைகளை, சில முக்கியமான மாறுமைக் குறிகளை அடிப்படையாகக் கொண்டு காலி கார்பானிகம் நலப்படுத்துகிறது. காச நோயின் தொடக்க நிலையில் காலி கார்பானிகம் கொடுக்கப்பட்டு, நலமாக்கல் நிகழ்த்தப்பட்டுள்ளது. குளிர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட கபம், மேல் மூச்சு மண்டல உறுப்புகளிலிருந்து, கீழ் மூச்சு மண்டல உறுப்புகளுக்கு பரவுவதை காலி கார்பனிகம் தடுத்து நிறுத்துகிறது.

இதயம் சார்ந்த பாதிப்புகளின் விளைவாக ஏற்படும் மூச்சுக் குழல்கள் குறுகும் நிலையை காலி கார்பனிகம் சரி செய்கிறது. இருமலின் காரணமாக மேல் மூச்சு மண்டல குழல்களின் அழுத்தம் வலி ஏற்பட்டு அதன் காரணமாக அவற்றில் ஏற்படும் வறட்சி, கடினப்படுதல் மற்றும் களைப்பு ஆகிய நிலைகளை நலப்படுத்துகிறது.

மருத்துவர் போயிங்ஹாசனால் காலி கார்பானிகம் கொடுக்கப்பட்டு, கக்குவான் இருமல் குணப்படுத்தப்பட்டுள்ளது. அந்நோயாளரின் முகம் வீங்கி, கண் இமைகளுக்கு மேல் உள்ள பகுதியை போல வீங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. நிமோனியா காய்ச்சலில் அல்லது சின்னம்மை நோயில், நோயாளருக்குக் காலை 3 மணியிலிருந்து 5 மணி வரை தொடர்ந்த வறண்ட இருமல் ஏற்படும் போது அதை காலி கார்பானிகம் குணப்படுத்துகிறது. மேலும் நிமோனியாக் காய்ச்சலின் போது நுரையீரல் திசுக்கள் கடினமாகும் கட்டத்தில் காலி கார்பானிகம் ஒரு சிறந்த நிவாரணியாகும். இந்நிலை ஏற்பட இதயத்தின் செயல்பாடு குறைந்து இரத்தத் தேக்கம் ஏற்படுவது காரணமாகும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் நோயாளர் வலப்புறமாக படுத்தால் நெஞ்சில் கூர்மையான வெட்டும் மற்றும் அழுத்தும் வலி உண்டாகும். (பிரையோனியா என்ற மருந்தில் இடப்புறமாகப் படுத்தால் இவ்வலி ஏற்படும்) இந்நிலையில் நோயாளருக்கு வறண்ட இருமல் விட்டு விட்டு ஏற்படும். குமட்டலும் மற்றும் வாந்தியும் கூட ஏற்படும். நெஞ்சில் கபம் சேர்ந்து ஒட்டிக் கொண்டு, அதை வெளியேற்ற முடியாமல் நோயாளர் சிரமப்படுவார். காலை வேளைகளில் தொண்டையில் சளி சேரும். மாலை வேளைகளில் சளியை நோயாளர் வெளியே துப்பாமல், விழுங்கிவிடுவார். சில சமயங்களில், நோயாளர் இருமும் போது சளியும் கூடவே வெளியே சிதறும்.

காலி கார்பானிகத்தின் மற்றொரு வகை இருமலையும் இங்கு குறிப்பிட வேண்டும். இது இதயச் செயல் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். இந்நோயாளர்களின் நெஞ்சில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்துக் கேட்டால், கள கள வென்றுக் கேட்கும். இருமும் போது வெளியேறும் சளி, ஒட்டும் தன்மை கொண்டதாகவும், அழுகிய வெண்ணெய் போன்ற வாடை கொண்டதாகவும் இருக்கும். நோயாளர் குனிந்து முட்டியை நாற்காலியில் வைத்துக் கொண்டு இருமுவார். இந்த இருமல் காலை 3லிருந்து 5 மணிக்குள்ளாக அதிக அளவில் ஏற்படும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் அஜீரணக் கோளாறில், காலி கார்பானிகத்திற்கும், கார்போவெஜ் என்ற மருந்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. காரணம், கார்போ-வெஜ் என்ற மரக்கரியிலும் பொட்டாசியமும், கரியும் சேர்ந்திருப்பது தான். இந்நோயாளர்களின் வயிறு உப்பிசமாகவும், குளிர்ந்திருப்பது போலவும் உணருவார்கள். வயிறு எப்போதும் நிரம்பியிருப்பது போலவே உணருவார்கள்.

சாப்பிட்ட பின்பு இந்நிலை மிகவும் மோசமடையும். குமட்டல் படுத்த பின்பு குறைவதாகச் சொல்லுவார்கள். புளிப்புச் சுவை உணவு வகைகளை மிகவும் விரும்புவார்கள். நாக்கில் வெண்மையான படிவம் படர்ந்திருக்கும். உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும். வாயில் கொப்புளங்கள் ஏற்படும். வயிறு உப்பிசத்தால் வலி உண்டாகும். இவ்வலி ஏப்பம் விட்டால் தற்காலிகமாகத் தணியும். குடற்தசைகள் வலுவிழப்பதாலும், வயிற்றுப்பகுதியில் இரத்த ஓட்டம் குறைவதாலும், வெளியேறும் மலம், அதிக பருமனைவதால், மலக்குடல் அதனை வெளியேற்ற சிரமப்படும். மூலநோய் உண்டாகும். இதன் காரணமாய் ஆசனவாயில் குத்தும் வலியும், எரிச்சலும் ஏற்படும். இந்நிலைகளை காலி கார்பானிகம் நலப்படுத்தும்.

மலம் வெளியேற சிரமம், மலக்குடல் பிதுக்கம், இயங்கு தசைகளில் வலிமையின்மை, ஆசனவாயின் சுருக்குத் தசை விரிவடைவாமை ஆகிய பிரச்சினைகளுக்கு கார்போ-வெஜ் என்ற மருந்தும் காலி கார்பானிகத்திற்கு இணையாகப் பயன்படுகிறது. வலது கீழ் வயிற்றுப் பகுதியில், “சுருக் சுருக்” என்ற வலி மற்றும் வயிறு வீக்கம் ஆகிய குறிகள் காலி கார்பானிகத்தை நினைவூட்டினாலும், “வாயுத்தொல்லை” என்ற குறிதான் அதை உறுதி செய்கிறது.

இதே போல சிறுநீர்ப்பையின் சுருக்குத் தசை சுருங்காமை என்ற குறிதான் சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் காலி கார்பானிகத்தை நினைவூட்டுகின்றன. இதே பிரச்சினைக்கு காஸ்டிகம் என்ற மருந்தும் நினைவுக்கு வரவேண்டும். ஆனால் சிறுநீரில் வண்டல் தன்மை மற்றும் சளிப்படலம் கலந்திருத்தல், சிறுநீர் அடிக்கடி பிரிதல், மேலும் இதயச் செயல் குறைப்பாட்டால் இப்பிரச்சினை தோன்றுதல் போன்றவை தான் இம்மருந்துகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை உணர்த்துகின்றன.

பல்வேறு மாதவிடாய்ப் பிரச்சனைகளை காலி கார்பானிகம் தீர்த்து வைக்கிறது. ஆனால், தொடர்ந்து அதிக அளவில் ஒழுக்கு, எப்பொழுதும் சிறு இடைவெளிகளில் இரத்தக் கசிவு, மாதவிடாய்க்குப்பின் ஏற்படும் களைப்பு, கடுமையான அடிமுதுகுவலி, இரத்த சோகை போன்ற அறிகுறிகள் தான் காலி கார்பனிகத்தை உறுதி செய்கின்றன. பேராசான் ஹானிமன், சிறுமிகளுக்கு ஏற்படும் தாமதித்த மாதவிடாய்க்கு ஏற்ற மருந்து என காலி கார்பானிகத்தைக் குறிப்பிடுவார். தாமதித்த மாதவிடாய், முகம் வெளுத்திருத்தல், குறைந்த அளவு விடாய் போன்ற குறிகள் இம்மருந்தை நினைவுபடுத்தினாலும், அடிமுதுகு வலி தொடை வரை இடம் பெயர்தல் மற்றும் உடலமைப்பு ஆகியவை தான் இம்மருந்தை உறுதி செய்கின்றன.

ஆதாரம் : கீற்று இணையதளம்

 

Filed under:
3.06976744186
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top