பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சிறுநீரக நுண்தமணி அழற்சி

சிறுநீரக நுண்தமனி அழற்சி-(க்ளோமெருலோநெப்ரைடிஸ் – Glomerulonephritis) பற்றிய தகவல்.

சிறுநீரகம்

நமது சிறுநீரகங்களில் ஒவ்வொன்றிலும் 10 லட்சம் நுண்தமனி எனப்படும் மயிரிழை போன்ற இரத்தக்குழாய்களால் ஆன வடிகட்டி போன்ற உறுப்புக்கள் உள்ளன.  இவைகள் தான் சிறுநீரகங்களின் முக்கிய வேலையான இரத்தத்திலிருந்து கழிவுகளை சுத்தப்படுத்தி சிறுநீரில் பிரித்தனுப்பும் பணிக்கு அடிப்படையான நெப்ரான் (Nephron) என்று அழைக்கின்றோம் இவை பல்வேறு விதமான காரணங்களால் பாதிக்கப்படலாம். இதனையே ஆங்கிலத்தில் க்ளோமெருலோனெப்ரைடிஸ் என்றும் தமிழில் சிறுநீரக நுண்தமனி வடிகட்டி அழற்சி என்றும் அழைக்கின்றோம்.

குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் இந்த நோய் பாதிக்கலாம்.  இது திடீரெனவும் வரலாம்.  சில வாரங்கள், மாதங்கள்  என மெல்ல மெல்லவும் வரலாம்.  பலருக்கு வருடக்கணக்கில் புகைந்து கொண்டிருப்பது போல இருந்து சிறுநீரகங்களை படிப்படியே அழித்து சிறுநீரக செயலிழப்பாக ஆக்கியும் விடலாம்.

இந்த நோய்க்கு பல காரணங்கள் உள்ளன.  இந்த நோய் வந்தவர்களின் வயதைப் பொறுத்து முக்கிய காரணங்கள் மாறுபடலாம்.  சிலருக்கு லேசானதாகவும் சிலருக்கு கடுமையானதாகவும் வரலாம்

இந்த பாதிப்பின் அறிகுறிகள்

இந்த பாதிப்பு வந்தவர்களுக்கு கை, கால் முகம் வீக்கம், சிறுநீரில் இரத்தம் கலந்து போகுதல், உயர் இரத்த அழுத்தம் என்ற அறிகுறிகள் வரலாம்.  கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறுநீரகம் வேகமாக செயலிழந்து அதனுடைய பல அறிகுறிகள் (வாந்தி, விக்கல், மூச்சுத் திணறல் முதலானவை) உண்டாகலாம்.  இன்னும் சிலருக்கு வேறு காரணங்களுக்காக சிறுநீர் பரிசோதனை செய்யும் போது அதில் இந்த நோயின் அறிகுறிகள் தெரிய வந்திருக்கலாம்.  இந்த நோய் உள்ள அனைவருக்கும் சிறுநீர்ப்பரிசோதனையில் புரதச்சத்து (Protein). இரத்த சிவப்பணுக்கள் (Redblood cells), வெள்ளை அணுக்கள் (White Blood cells), சிறுநீரக நுண்குழாய்களின் அச்சு வடிவங்கள் (Tubular casts) ஆகியன இருக்கும். கடுமையான பாதிக்கப்பட்டு சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் ஆகியவற்றின் அளவுகள் இயல்பை விட அதிகமாகலாம்.  எனவே எளிய சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனைகள் மூலம் இந்த நோய் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம். ஆனால் என்ன காரணத்தால் இந்த பாதிப்பு வந்தது என்பதை அறிய வேறு பல சோதனைகள் செய்ய வேண்டி வரும். சிலருக்க சிறுநீரக பயாப்ஸி எனப்படும் சிறுநீரக தசைத் துணுக்குப் பரிசோதனை தேவைப்படலாம்.

குழந்தைகளுக்கு வரும் சிறுநீரக நுண்தமனி அழற்சி

குழந்தைகளுக்கு வரும் இந்த நோய்க்கு காரணம் பெரும்பாலான சமயங்களில் காரணம் குழந்தைகளுக்கு வரும் சில வகைக் கிருமி பாதிப்புக்கு ஏற்படும் ஒரு வகை ஒவ்வாமை (அலர்ஜி - allergy)யால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதுதான். உதாரணமாக நம் நாட்டில் வெயில் காலத்தில் சாதரணமாக குழந்தைகளுக்கு தோலில் வரும் வெயில் கொப்புளங்களில் உள்ள ஸ்ட்ரெப்டோக்கஸ் (Streptococcus) எனப்படும் கிருமியை எதிர்த்து நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு உண்டாக்கும் சில எதிர்ப்பு சத்துக்கள் (Antibodies) குறிதவறி நமது சிறுநீரகங்களையே பாதிப்பதால் சிறுநீரக நுண்தமனி அழற்சி உண்டாகிறது.

இதே கிருமி தொண்டை வலியை உண்டாக்கும் போதும் இதே போல ஒவ்வாமை ஏற்பட்டு இதே போல சிறுநீரக பாதிப்பு உண்டாகலாம்.  பொதுவாக தோல் புண் அல்லது தொண்டை வலி வந்து சரியான பின்னர் 2-3 வாரங்கள் கழித்தே சிறுநீரக நுண்தமனி அழற்சியின் விளைவுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. சில சமயம் குறுகிய இடைவெளியிலேயே தெரிய வரலாம்.  இவ்வாறு வரும் குழந்தைகளில் 100க்கு 99 சதவிகிதம் பேருக்கு 1-2 வரங்களில் சிறுநீரகங்களின் ஏற்பட்ட பாதிப்பு தானாகவே சரியாகிவிடும்.  1% பேருக்கு பாதிப்பின் தன்மை கடுமையாக இருக்கும். இவர்களுக்கு அதிக வீக்கம், சிறுநீரில் மிக அதிக புரத ஒழுக்கு, வேகமான சிறுநீரக செயலிழப்பு ஆகியன உண்டாகலாம். சிலருக்கு இரத்த அழுத்தம் மிக விரைவில் அதிகமாகி அதனால் இதயம், மூளை இவை பாதிக்கப்படுவதால் மூச்சுத் திணறல், சுயநினைவு தவறுதல், ஜன்னி ஆகிய தொந்திரவுகள் உண்டாகலாம்.  இதனால் இந்த பாதிப்பு வந்ததாக கண்டறியப்பட்ட குழந்தைகள் சிறுநீரக மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டியது அவசியம். மேற்கூறிய கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியிருக்கும். இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் கூட பெரும்பாலும் முறையான சிகிச்சை மூலம் நன்கு குணமடைய நல்ல வாய்ப்பு உண்டு. லேசாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளி நோயாளி சிகிச்சையே போதுமானது. இவர்களுக்கு நோய் பாதிப்பு உள்ள சமயங்களில் உப்பு, நீர் குறைக்கப்பட்ட உணவு முறை, இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க மருந்துகள், வீக்கம் இருந்தால் சிறுநீரை அதிகம் போகச் செய்து வீக்கத்தைக் குறைக்கும் நீர் மாத்திரைகள் கொடுக்கப்படும். இந்த பாதிப்பு பொதுவாக ஸ்ட்ரோப்டோகாக்கஸ் கிருமியின் பின்விளைவு என்பதால் உடலிலிருந்து அந்த கிருமியை முற்றிலும் ஒழிக்க தகுந்த கிருமிக் கொல்லி மருந்துகள் குறிப்பிட்ட காலம் கொடுக்கப்படும்.

பெரியவர்களுக்கு சிறுநீரக நுண்தமனி அழற்சி வரக்காரணங்கள் முற்றிலும் வேறானவை.  இவர்களுக்கு கிருமிப் பாதிப்பிற்கு பின் ஒவ்வாமை காரணமாக சிறுநீரக நுண்தமனி அழற்சி வரலாம். என்றாலும் அது குறைந்த சதவிகிதமே. இவர்களுக்கு பல்வகை தன் திசு எதிர்ப்பு வியாதிகள் (Autoimmune diseases) காரணமாக சிறுநீரக நுண்தமனி அழற்சி வருவதே அதிகம். அதிலும் IgA க்ளோ-மெருலோனெப்ரைடிஸ், FSGS, எனத் தொடங்கி பலவகை வியாதிகள் உண்டு. சில சமயங்களில் சில வகை மருந்துகள் (உதாரணம் : வலி நிவாரண மருந்துகள், வேறு வகை கிருமிகள் - உதாரணம்-லெப்டோஸ்பைரோசிஸ், டைபாய்ட், அம்மை வகை நோய்கள் இவைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமைகள் காரணமாகவும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.)

பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கு வரும் அதே அறிகுறிகள் இந்த வியாதியில் வரும். சிறுநீர்க் குறைவு, கை, கால், முகம் வீக்கம், சிறுநீரில் இரத்தம் கலந்து போகுதல், உயர் இரத்த அழுத்தம் போன்றவை. சிலருக்கு வேறு சில வியாதிகள் சிறுநீரகங்களையும் பாதிக்கக்கூடிய தன்மை உள்ளவைகளாக இருந்தால் சிறுநீர், இரத்தம் இவைகளை பரிசோதித்து சிறுநீரக நுண்தமனி அழற்சியின் அடையாளங்கள் உள்ளது தெரிய வரலாம். (உதாரணம் லூப்பஸ் வியாதி-பார்க்க லூப்பஸ் சிறுநீரக பாதிப்பு)

பெரியவர்களுக்கு இந்த பாதிப்பு வந்தால் முன்பு கூறியிருந்தது போல சிறுநீர், இரத்தப் பரிசோதனைகளைத் தவிர அநேகமாக சிறுநீரக நுண்தமனி அழற்சி உள்ள பெரியவர்கள் அனைவருக்கும் சில சிறப்பு தன்திசு எதிர்ப்பு வியாதிகளைக் கண்டறிய உதவும் இரத்தப் பரிசோதனைகளும் தவிர சிறுநீரக தசைத் துணுக்கு எனப்படும் கிட்னி பயாப்ஸி பரிசோதனையும் தேவைப்படும் (பார்க்க சிறுநீரக சதைத் துணுக்கு பரிசோதனை) இப்பரிசோதனையில் சிறுநீரக நுண்தமனி அழற்சியின் மூல காரணம் என்ன தெளிவாக தெரியும்.

பெரியவர்களுக்கு வரும் இவ்வியாதி நோயின் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை செய்யப்படும்.  பெரும்பாலான சமயங்களில் தன்திசு எதிர்ப்பு ஒவ்வாமை (Autoimmune Disease) காரணமாகவே இவ்வியாதி வருவதால் இதற்குரிய மருந்துகளும் நோய் எதிர்ப்பு அணுக்களின் வீரியத்தைக் குறைக்க உதவும் ஸ்டீராய்ட், சைக்ளோஸ்போரின், சைடோடாக்சிக் மருந்துகள் எனப்படும் மருந்துகளே நோயின் தன்மை, கடுமை ஆகியவற்றை பொறுத்து பலவிதமாக உபயோகப்படுத்தப்படுகின்றன.  இதனை ஒரு சிறுநீரக மருத்துவர்தான் முடிவு செய்வார்.

சில வகை காரணங்களால் வரும் சிறுநீரக நுண்தமணி அழற்சி நோய் இத்தகைய மருத்துவங்களுக்கு நன்கு கட்டுப்படும் (உதாரணம்: லூப்பஸ் சிறுநீரக அழற்சி, வாஸ்குலைடிஸ் (நுண் இரத்தக் குழாய் அழற்சி), மெம்ப்ரேனஸ் நெப்ரோபதி போன்றவை). ஆனாலும் சில வகை வியாதிகளில் எந்த மருத்துவத்திற்கும் இந்த நோய் கட்டுப்பாடமல் சிறுநீரகங்கள் படிப்படியாக செயலிழந்து கடைசியில் சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது தொடர் ஹீமோடயாலிசிஸ் சிகிச்சை என்ற நிலை வரக்கூடும்.  அப்போது கூட தகுந்த சிகிச்சை பெற்றால் மேலும் பல வருட காலம் நல்ல உடல் ஆரோக்யத்துடன் வாழ இயலும். எனவே இந்நோய் வந்தவர்கள் மனம் தளர்வடையாமல் தகுந்த சிறுநீரக மருத்துவரை நாடி முறையான சிகிச்சை பெற்றுக் கொண்டால் நல்ல குணமடைந்து ஆரோக்யமாக வாழ முடியும்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர், ஈரோடு

2.96428571429
K.Kadambavanam Jul 21, 2019 03:38 PM

An useful as well as very informative essay in an elegant style.

Ajay ca Jun 13, 2017 09:56 AM

Good message

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top