சிறுநீர் என்பது நம் உடலில் உண்டாகிற ஒரு கழிவுப்பொருள். நம் ரத்தத்தில் தேவையில்லாத பல பொருட்கள் உள்ளன. அவற்றைச் சிறுநீரகங்கள் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. சிறுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் சிறுநீரக நோய்கள் மட்டுமன்றி, பல உடல் கோளாறுகளையும் கண்டறியலாம்; சிகிச்சைக்குப் பிறகு நோய் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதையும் அறியலாம்.
இந்தப் பரிசோதனை பல நோய்களுக்கு ஓர் அடிப்படை சோதனையாகவும் ஆரம்பச் சோதனையாகவும் உள்ளது; செலவு குறைந்த, வலி இல்லாத, மிக எளிதான, விரைவான பரிசோதனையாகவும் உள்ளது. அதேநேரத்தில் இதை மட்டும் வைத்துக்கொண்டு நோயை உறுதிப்படுத்துவதில் சில சிரமங்களும் உள்ளன. அப்போது ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு நோய்கள் உறுதி செய்யப்படும்.
சராசரியாக ஒருவருக்குத் தினமும் 1,200-லிருந்து 1,500 மி.லி. சிறுநீர் வெளியேறும். கோடை, குளிர் பருவகாலத்துக்கு ஏற்ப இந்த அளவு சிறிதளவு குறையலாம்; கூடலாம். மாறாக, எப்போதும் சிறுநீர் அதிகமாகப் போனால் நீரிழிவு நோய் இருக்க வாய்ப்புள்ளது. நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறியும் இதுதான். சில மருந்துகளாலும் சிறுநீர் அதிகமாகப் போகும். பயம், பதற்றம். கிருமித்தொற்று போன்ற காரணங்களால் சிறுநீர் அடிக்கடி போகும். அடிக்கடி போவதற்கும் அதிகமாகப் போவதற்கும் வித்தியாசம் உண்டு. அடிக்கடி சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரின் ஒரு நாள் மொத்த அளவு அதிகரிக்காது.
வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிக வியர்வை, காய்ச்சல், தீக்காயம் போன்ற நிலைமைகளில் சிறுநீரின் அளவு குறையும். திடீரென ரத்த அழுத்தம் குறைவது, தீவிரச் சிறுநீரகச் செயலிழப்பு, இதயச் செயலிழப்பு போன்றவற்றின்போதும் சிறுநீர் பிரிவது குறையும். சிறிதுகூட சிறுநீர் பிரியவில்லை என்றால், சிறுநீர் வெளியேறுகிற பாதையில் சிறுநீரகக் கல், புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய் போன்றவை அடைத்திருக்க வாய்ப்பு உண்டு.
புரதப் பரிசோதனை (Albumin Test)
இந்தப் பரிசோதனை சிறுநீரில் ‘ஆல்புமின்’ (Albumin) எனும் புரதம் வெளியேறுகிறதா எனக் கண்டறிவதற்குப் பயன்படுகிறது. சிறுநீரகம் பழுதடைந்துள்ளது எனத் தெரிவிக்கும் பொதுவான பரிசோதனை இது. சாதாரணமாக ஒரு முறை மட்டும் சிறுநீரைச் சேகரித்துப் பரிசோதிப்பது வழக்கம். ‘பிளஸ்’ எனும் அடையாளத்தைக் கொண்டு, இதன் முடிவுகள் தரப்படும். ஒரு நாள் முழுவதும் சிறுநீரைச் சேகரித்து அதில் புரதம் எவ்வளவு இருக்கிறது என்று பரிசோதிப்பதும் உண்டு. இது 2 8 / டெசி லிட்டர் எனும் அளவில் இருந்தால், அது இயல்பு அளவு. அதிகமென்றால் சிறுநீரகப் பாதிப்பு உள்ளது என அறியலாம். தவிர, கடுமையான ரத்தசோகை, புற்றுநோய், இதயநோய், தைராய்டு மிகைச்சுரப்பு, குடல் அடைப்பு, வலிப்புநோய் போன்ற காரணங்களாலும் சிறுநீரில் புரதம் வெளியேறும்.
அதேநேரத்தில் கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, அதிக வேலைப்பளு, அதிக அலைச்சல், காய்ச்சல் உள்ளவர் களுக்கும் சிறுநீரில் புரதம் வெளியேறும். இவர்களுக்கு அதிகாலையில் வெளியேறும் சிறுநீரைப் பரிசோதித்தால், அதில் புரதம் வெளியேறாது. சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு எந்நேரமும் சிறுநீரில் புரதம் வெளியேறும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன் முடிவு ஒரு பிளஸ் என்றால் 0.1 % க்குக் குறைவாகப் புரதம் உள்ளது. இரண்டு பிளஸ் என்றால் 0.1% புரதம் உள்ளது. மூன்று பிளஸ் என்றால் 0.2 0.3% புரதம் உள்ளது. நான்கு பிளஸ் என்றால் 0.5% க்கு மேல் புரதம் உள்ளது.
நுண்புரதப் பரிசோதனை (Micro Albumin Test)
இந்தப் பரிசோதனையின்போது சிறுநீரில் நுண்புரதம் (Micro Albumin) வெளியேறுகிறதா என்று பரிசோதிக்கப்படும். இதன் அளவு ஒரு நாளில் 20 மி.கிராமுக்கும் கீழ் இருந்தால் சரியான அளவு. இந்த அளவைக் கடந்தால், சிறுநீரகப் பாதிப்பு ஆரம்பித்துவிட்டது என்று பொருள். இந்தப் பரிசோதனையின் மூலம் சிறுநீரகப் பாதிப்பை மிகவும் ஆரம்ப நிலையிலேயே கவனித்து, சில தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துச் சிறுநீரகம் மேன்மேலும் பாதிக்கப்படுவதைத் தடுத்துவிட முடியும். முக்கியமாக, நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், அவர்களுக்கு அந்தப் பாதிப்பை ஆரம்பத்திலேயே அறிய இப்பரிசோதனை உதவுகிறது. தவிர, உயர் ரத்தஅழுத்தம், இதயநோய் உள்ளவர்களுக்கும் இந்தப் பரிசோதனை தேவைப்படும்.
இதில் உள்ள குறைகள்
மஞ்சள் காமாலை பரிசோதனை
சிறுநீரில் ‘பிலிருபின்’ எனும் பித்த உப்பு வெளியேறுகிறதா என்பதைக் கண்டறிந்து காமாலை நோயைக் கணிக்கும் பரிசோதனை இது. ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குச் சிறுநீரில் பிலிருபின் வெளியேறுவதில்லை. கல்லீரல் பாதிக்கப்பட்டு, மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே இது வெளியேறும்.
எப்படி?
வயதாகிப்போன ரத்த செல்கள் மண்ணீரலில் அழிக்கப்படும்போது, ‘பிலிருபின்’ வெளிவருகிறது. இது கல்லீரல் சுரக்கின்ற பித்தநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால், ரத்தத்தில் இதன் அளவு 0.8 மி.கி. வரை இருக்கும். கல்லீரல் பாதிக்கப்படுமானால், இதன் அளவு அதிகரிக்கும். அப்போது சிறுநீரிலும் இது வெளியேறும். இது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் சிறுநீரும் மஞ்சளாகப் போகிறது
ஆதாரம் : தி-ஹிந்து நாளிதழ்