பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சைக்கோஸிஸ்

சைக்கோஸிஸ் பற்றிய தகவல்.

சைக்கோஸிஸ் என்றால் என்ன?

நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே உள்ள பாகுபாட்டைக் கண்டறிய முடியாமல் போகும்போது, அந்த நிலையை ‘சைக்கோஸிஸ்’ என ஆங்கில மருத்துவம் அழைக்கிறது. இதுவே ஒரு வியாதி அல்ல, இது பல மனநோய்களில் ஒரு அறிகுறியாகத் தோன்றும். ‘சைக்கோ’ என்று வழக்கத்தில் நாம் பயன்படுத்தும் சொல்லுக்கும் இந்நோயின் பெயருக்கும் எந்தத் தொடர்புமில்லை.

அறிகுறிகள்

மாய புலன் உணர்வுகள் (hallucination) பிறழ் நம்பிக்கை (delusion) குழப்பமான எண்ணங்களில் சிக்கியிருத்தல் இத்தகைய மாற்றங்கள் தனக்குள் ஏற்பட்டிருக்கிறது என்ற விழிப்புணர்வுகூட இல்லாமல் இருத்தல் மாய புலன் உணர்வுகள் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து புலன் உறுப்புகள் கொண்டு உணர்வதற்குத் தூண்டுதல் தேவை. தூண்டுதலின்றி உணர முடியாது. உதாரணமாக, கேட்பதற்கு ஏதோ ஒரு வகையான சத்தம் வேண்டும். பார்ப்பதற்கு ஏதோ ஒரு பொருள் வேண்டும். ஆனால் இந்நோயின்போது எந்தவிதத் தூண்டுதலின்றி இந்த புலனுறுப்புகள் உணர்கின்றன.

காது:

யாரும் அருகில் இல்லாமலேயே, நோயால் பாதிப்படைந்தவருக்கு ஒன்று அல்லது பல பேச்சுக் குரல்கள் கேட்கும். சில சமயங்களில் இந்தக் குரல்கள் இவர்களை ஏதாவது செய்யத் தூண்டும். நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவத்தில் இவை உண்மையாகத் தோன்றுவதால் அவர்களும் இந்தக் குரல்களை நம்புவர். அந்தக் குரல்களுக்குப் பதில் பேச்சு பேசுவர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் தனியாகப் பேசுவது போலவும், அவர்களுடைய செயல்கள் புதிராகவும், சம்பந்தமில்லாதது போலவும் தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல்கள் தவிர மற்ற சத்தங்களும் கேட்கலாம்.

கண்:

புழு, பூச்சி, பாம்பு, மனிதர்கள், உருவங்கள் தெரியும். அதனால் மிகவும் பயந்து போய் இருப்பர்.

மூக்கு

துர்வாசனைகளை நுகர முடியும்.

நாக்கு

கெட்ட சுவை தெரியும்.

சருமம்:

பூச்சி உடலில் ஊறுவது போலவும், மற்றவர் தொடுவது போலவும் தோன்றும். மேற்கூறிய அனைத்துமே எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதில்லை. வெவ்வேறு சமயங்களில் ஏற்படலாம். இந்நிலையை, பேய் பிடித்திருக்கிறது என்று மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வர். பிறழ் நம்பிக்கை ஒன்றைப் பற்றித் தவறாக மிகவும் ஸ்திரமான நம்பிக்கை கொண்டிருத்தல். இது பொய்யாக அல்லது தவறான அனுமானத்தில் ஏற்பட்டிருக்கக் கூடும் எனப் பிறர் எடுத்துச் சொல்லியும், ஆதாரங்கள் காட்டிய பிறகும், அவர்களது நம்பிக்கையிலேயே நிலைத்திருத்தல். உதாரணமாக, மற்றவர்கள் அவர்களைக் கொல்லப்போவது போலவும், அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் எண்ணங்கள் தோன்றும். இதனால் சாப்பிடுவது, தண்ணீர் பருகுவது போன்றவற்றைத் தவிப்பர். அதிக பயத்திலும் இருப்பர். சிலருக்கு, அவர்கள் கடவுள் என்பதாக எண்ணங்கள் தோன்றும். அந்த நம்பிக்கையில், வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக் கொள்வர். குழப்பமான எண்ணங்கள் எண்ணங்கள் கோர்வையாக இல்லாமல் இருக்கும். இதனால் இவர்களின் பேச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கும். பேச்சு சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்காது. அதிகமாக உணர்ச்சிவசப்படுவர். எளிதில் கோபம், எரிச்சல், அழுகை, சந்தோஷம் என வெளிப்படும். விழப்புணர்வற்ற நிலை அவர்களுடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் தவறானவை, கற்பனையானவை என்று அவர்களால் அறியமுடியாது. சுத்தம், சுகாதாரம் பற்றிக் கவலைப் படமாட்டார்கள். இவை அவர்களது வாழ்வைப் பாதிக்கின்றது என்பதையும் உணரமாட்டார்கள். அவர்களுடைய அனுபவத்தில் இது நிஜமாகத் தோன்றுவதால் சிகிச்சைக்கும் ஒத்துழைக்க மாட்டார்கள். காரணிகள் டோபமின் (dopamine) எனப்படும் ஒருவகை புரதம் மூளையில் அதிகரிக்கும்பொழுது இத்தகைய அறிகுறிகள் தோன்றும்.

இந்த டோபமின் பல்வேறு காரணங்களால் நமது மூளையில் அதிகரிக்கக் கூடும். உடல் மற்றும் மூளையில் ஏற்படும் வியாதிகள் (உதாரணம்) மலேரியா, எய்ட்ஸ், ஆல்சைமர்ஸ்… மன வியாதிகளான மனச்சிதைவு (schizophrenia), பை போலார் டிஸ்ஆர்டர் (Bipolar disorder) மது, போதைப் பழக்கம் இது தவிர குடும்பத்தில் யாருக்கேனும் சைக்கோஸிஸ் இருந்தால் மற்றவருக்கும் மரபு வழிக் காரணங்களால் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். மிகுந்த மன அழுத்தம் அல்லது பதட்டம், அதிக மனச் சோர்வு, அதிக நாள் தூக்கமின்மை போன்றவையும் இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

சிகிச்சை:

தொடர் சிகிச்சையின் மூலம் இந்நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும். எவ்வளவு விரைவில் சிகிச்சை அளிக்கிறோமோ, அவ்வளவு விரைவில் இந்த அறிகுறிகளிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். ‘டோபமின்’ அளவைச் சீர் செய்வதே சிகிச்சையின் நோக்கம். ஊசியின் மூலமாகவோ மாத்திரைகள் மூலமாகவோ சீர் செய்ய முடியும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சிகிச்சைகளை நிறுத்த வேண்டும். நீங்களாகவே மருந்தின் அளவைக் குறைத்தாலோ, நிறுத்தினாலோ மீண்டும் அறிகுறிகள் திரும்பி உடல்நிலை சரியில்லாமல் போக நேரிடும். இவ்வாறு உடல் நிலை சரியில்லாமல் போகும் போதெல்லாம் இயல்பு நிலைக்கு வர அதிக நாட்கள் எடுக்கும். அதிக மருந்தும் தேவைப்படும்.

நோயைத் தடுக்க செய்ய வேண்டியது

  • சரிவர மருந்துகள் உட்கொள்ளுதல் தளர்வு நிலையில் எப்பொழுதும் இருத்தல் சரிவிகித உணவு சாப்பிடுதல்;
  • நன்கு தூங்குதல் மது / போதைப் பொருட்களை உட்கொள்ளாமல் இருத்தல் குடும்பத்தாருக்கு… இந்நோயின் தன்மையையோ இந்நோயினால் பாதிப்படைந்தவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தையோ ஆரம்ப நிலையில் கண்டு கொள்வது கடினம்.
  • சரியாகச் சாப்பிடாமலிருப்பது, தூங்காமலிருப்பது, சுத்தம்,
  • சுகாதாரம் பற்றி கவலைப்படாமலிருப்பது, வேலையில் கவனமின்மை போன்றவற்றை சோம்பேறித் தனம் என நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும்.

மேற்சொன்ன ‘சைக்கோஸிஸ்’ அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது அவசியம். முக்கியமாக, நோயுற்றவர்களைப் பாகுபடுத்தி ஒதுக்கி வைப்பதோ அல்லது அதிக கவனம் செலுத்தி அவர்களை அசௌகரியப்படுத்துவதோ கூடாது.

நோயைப் பற்றிய தவறான செய்திகள் முதிர் மன வியாதிகள் ஒரு மனிதனை அபாயமானவர் ஆக்கி விடுமா? இந்நோயின் காரணமாக மட்டும் யாரும் அப்படி ஆகமாட்டார்கள்.

முதிர் மன நோய் வந்தால் குணமே இல்லைதானே? தவறு! தகுந்த சிகிச்சையின் மூலம் நோய் குணமாகி அனைவரையும் போலவே இயல்பான வாழ்க்கை வாழ முடியும்.

திருமணம் செய்தால் முதிர்மன நோய் சரியாகிவிடும் அல்லவா? தவறு. சிகிச்சை மூலம்தான் இந்நோயைச் சரிசெய்ய முடியும். நோய் கட்டுப்பாட்டில் இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியும். இந்நோயின் தன்மையை மறைத்து திருமணம் செய்வது நல்லதல்ல. பிறகு அதுவே மன அழுத்தத்தை அதிகரித்து நோயின் வீரியத்தை அதிகரிக்கும். இந்நோயுள்ளவர்களுக்குப் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்கிறார்களே? கோவிலுக்குச் செல்வது, பரிகாரம் செய்வது என்று அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செய்யலாம். ஆனால் சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும். மனச்சிதைவு என்றால் ஸ்ப்ளிட் பர்சனாலிடி (split personality) யா? இல்லை. இந்த வியாதி உள்ளவர்கள், நோயின் தன்மையால், ஒரு நேரத்தில் இயல்பாகவும், மற்றொரு நேரத்தில் வேறொரு நபர் போலவும் தோன்றுவர். சிகிச்சை எடுத்தால் சரியாகிவிடும். யோகா எவ்வாறு உதவுகிறது? குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் முதிர் மனநோயின் வீரியத்தைக் குறைக்கவும், இந்நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளைக் (எடை அதிகரித்தல், அதிக தூக்கம், அதிக பசி) குறைக்கவும் உதவும். இருப்பினும் இந்நோய் உள்ளவர்கள் எந்தவிதமான யோகப் பயிற்சியையும் (ஆசனம், பிராணயாமம், தியானம்) நன்கு தேர்ந்த யோகா ஆசிரியரிடம் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும். யோகா கற்கும் முன் நோயின் வீரியம், பெறும் சிகிச்சை பற்றிச் சொல்வது அவசியம். அதற்கேற்ப யோகப் பயிற்சிகள் பரிந்துரைக்க இது உதவும். தகுந்த யோகப் பயிற்சிகள் செய்யாததாலோ, பயிற்சிகளை சரியான முறையில் செய்யாவிட்டாலோ நோய் மோசமடைய வாய்ப்புள்ளது. அதனால் கவனம் தேவை. யோகப் பயிற்சிகள் செய்தாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை நிறுத்தக் கூடாது.

உலக மனநல தினம்

அக்டோபர் 10ம் தேதி அன்று உலகம் முழுவதும் உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. பல பன்னாட்டு அமைப்புகளும், மன நோய்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் பரப்பவும் மனநோய்க்கான சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்தவும் பல முயற்சிகளை அன்று செயல்படுத்த உள்ளன. நாமும் மனநலம் பாதிக்கப்பட்டோரைப் பாகுபடுத்தி ஒதுக்கி வைக்காமல், பொறுப்புடன் செயல்படுவோம்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையம்

3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top