பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

டாப்ளர் ஸ்கேன்

டாப்ளர் ஸ்கேன் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நோய் கணிக்கும் மருத்துவத் துறையில் ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனையின் அடிப்படையிலேயே சில சிறப்புப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, ‘டாப்ளர் ஸ்கேன்’ (Doppler Scan) பரிசோதனை. இதுவும் கேளா ஒலி அலைகளை (Ultra sound) பயன்படுத்திச் செய்யப்படும் பரிசோதனைதான் என்றாலும், சில வித்தியாசங்கள் உண்டு.

‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனை என்பது உடலுக்குள் அசையாமல் இருக்கிற உறுப்புகளின் தன்மையைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. ‘டாப்ளர் ஸ்கேன்’ பரிசோதனை என்பது உடலுக்குள் அசைகிற, நகர்கிற திசுக்களைப் படம்பிடித்துக் காண்பிக்கிறது. குறிப்பாக, ரத்தக் குழாய்களில் நகர்கின்ற ரத்த செல்களைப் படம்பிடிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை அறியச் செய்கிறது.

அடுத்து, அசையா உறுப்புகளிலிருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி (Pitch) மாறுவதில்லை. ஆனால் அசையும் உறுப்புகளிலிருந்து திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி மாறும். இந்த மாற்றத்தை வைத்து ரத்த ஓட்டத்தின் தன்மையைக் கணிக்க முடியும். இந்த அடிப்படையில்தான் ‘டாப்ளர் ஸ்கேன்’ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

எப்படிச் செயல்படுகிறது?

பயனாளியின் உடலில் எந்தப் பகுதியில் ரத்த ஓட்டத்தைப் பரிசோதிக்க வேண்டுமோ, அந்தப் பகுதியில் ஒரு பசையைத் தடவி, அல்ட்ரா சவுண்ட் புரோபை அழுத்தமாக வைத்து, கேளா ஒலி அலைகளை அனுப்புகிறார்கள்.

ரத்தக் குழாய்க்குள் நகர்ந்துகொண்டிருக்கும் ரத்த செல்களின்மீது இந்த ஒலி அலைகள் பட்டு எதிரொலித்துத் திரும்புகின்றன. புரோப் அவற்றைக் கணினிக்கு அனுப்பிவைக்கிறது. திரும்பி வரும் ஒலி அலைகளின் சுருதி, வேகம், அடர்த்தி, திசை போன்ற பல விவரங்களை அலசி ஆராய்ந்து, ரத்த ஓட்டத்தைக் கணித்து, அதை உருவப் படமாகவும் வரைபடமாகவும் தயாரித்துத் திரையில் காண்பிக்கிறது கணினி. இந்தப் படங்களை ஃபிலிமில் பிரிண்ட் செய்துகொள்ளவும் முடியும்.

‘டாப்ளர் ஸ்கேன்’ பரிசோதனை

 1. டியூப்ளக்ஸ் டாப்ளர் ஸ்கேன் (Duplex Doppler Scan): மேலே கூறப்பட்டது இந்த வகையைச் சேர்ந்தது. ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையைக் காண்பிக்கிறது.
 2. அலை டாப்ளர் ஸ்கேன் (Wave Doppler Scan): இந்தக் கருவியை நோயாளியின் படுக்கைக்கே கொண்டுவந்து பரிசோதிக்க உதவுகிறது. ரத்த ஓட்டப் பாதிப்பை மிக வேகமாகக் கணிக்க இது உதவுகிறது.
 3. கலர் டாப்ளர் ஸ்கேன் (Colour Doppler Scan): இந்த ஸ்கேன் கருவி ஒலி அலைகளை வண்ணப் படங்களாக மாற்றி காண்பிக்கிறது. இதன் பலனால் தமனி, சிரை என்று ரத்தக் குழாய்களைப் பிரித்துக் காண இயலும். ரத்த ஓட்டத்தின் வேகம் மற்றும் திசையையும் காண முடியும்.

எந்த நோய்களைக் கணிக்கலாம்?

 • கை, கால், கழுத்து, மூளைக்குச் செல்லும் தமனி மற்றும் சிரை ரத்தக் குழாய்களின் நிலைமைகளை அறிய உதவுகிறது.
 • ரத்தக் குழாய்கள் இயல்பான அளவில் உள்ளனவா, சுருங்கி உள்ளனவா என்பதை அறியலாம்.
 • ரத்தக் குழாய்க்குள் ரத்தம் உறைந்துள்ளதா என அறியலாம்.
 • ரத்தக் குழாய்க்குள் ரத்த ஓட்டத் தடை ஏற்பட்டுள்ளதா என அறியலாம். முக்கியமாக, ‘ஆழ்சிரை ரத்த உறைவு நோய்’ (Deep Vein Thrombosis) மற்றும் நுரையீரல் ‘ரத்த உறைவுக் கட்டி’(Pulmonary Embolism) நோயை அறிய இதுதான் பெரிதும் உதவுகிறது.
 • ரத்தக்குழாய் வீக்கம் மற்றும் அழற்சியைக் கணிக்க இது பயன்படுகிறது.
 • சுருள் சிரை ரத்தக் குழாய் நோயின் (Varicose Veins) தன்மையை உணர்ந்து, அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
 • கர்ப்பிணியின் கருப்பையில் வளரும் சிசுவின் ரத்த ஓட்டத்தைக் காணலாம்.
 • மூளை மற்றும் கழுத்துத் தமனியின் நிலைமையை அறிவதன் மூலம் பக்கவாதம் வருவதைத் தடுக்கப் பயன்படுகிறது.

யாருக்கு இது அவசியம்?

 • புகைபிடிப்பவர்கள்.
 • கெண்டைக்கால் தசையில் வலி உள்ளவர்கள்.
 • நடக்கும்போது கால் வலிக்கிறது; ஓய்வெடுத்தால் வலி நிற்கிறது என்ற நிலைமை உள்ளவர்கள்.
 • கால் விரல்களில் அழுகல் நோய் வந்தவர்கள்.
 • சுருள் சிரை ரத்தக் குழாய் நோயாளிகள்.
 • காலில் வீக்கமும் சிவப்பு நிற அழற்சியும் ஏற்பட்டவர்கள்.
 • நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமன் உள்ள கர்ப்பிணிகள்.
 • கடந்த பிரசவத்தில் சிசுவுக்கு ரத்த ஓட்டத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்ட கர்ப்பிணிகள்.

‘எக்கோகார்டியோகிராபி’ பரிசோதனை

‘எக்கோ’ பரிசோதனை என்று சுருக்கமாக அழைக்கப்படும் ‘எக்கோகார்டியோகிராபி’பரிசோதனை (Echocardiography) ‘டாப்ளர் ஸ்கேன்’ பரிசோதனையில் ஒரு வகை. இது இதயம் தொடர்பான நோய்களைக் கணிப்பதற்குப் பிரத்யேகமாகப் பயன்படுவதால், இந்தத் தனிப் பெயரைப் பெற்றுள்ளது. இதன் செயல்பாடும் ‘டாப்ளர் ஸ்கேன்’ பரிசோதனையின் செயல்பாடும் ஒன்றுதான். இந்தப் பரிசோதனையில் இதயத்திலிருந்து பெறப்படும் ஒலி அலைகளை எக்கோ கருவியில் உள்ள கணினி இருபரிமாணம் அல்லது முப்பரிமாணப் படங்களாகத் தயாரித்துத் திரையில் காண்பிக்கும். இவற்றைத் தனியாக ஃபிலிமில் பிரிண்ட் செய்துகொள்ளலாம்.

இப்பரிசோதனையில் என்ன காணலாம்?

 • புதிதாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உதவுகிறது. ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு இதயத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் அறிய உதவுகிறது.
 • இதயத்தின் இயக்கத்தைக் காணலாம். இதன்மூலம் இயக்கம் இயல்பாக உள்ளதா, சிரமப்படுகிறதா என்பதைக் கணிக்க முடியும்.
 • இதயத்திலிருந்து ரத்தம் எத்தனை சதவீதம் உடலுக்குச் செலுத்தப்படுகிறது என்ற விவரம் தெரியும்.
 • இதய வால்வுகளின் நிலைமை புரியும். இதன் மூலம் இதய வால்வுக் கோளாறுகளை அறியலாம்.
 • இதயத் துடிப்புக் கோளாறுகளை அறிய முடிகிறது.
 • பிறவி இதயக் கோளாறுகளையும் அறிய முடிகிறது.
 • இதயத்தில் துடிப்பு சப்தங்கள் வித்தியாசப்பட்டால் (Heart Murmurs), அதற்குக் காரணம் தெரிந்துகொள்ள முடியும்.
 • இதயச் சுவரில் அழற்சி உள்ளதா, நீர் கோத்திருக்கிறதா, வீக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கணிக்க இது உதவுகிறது.
 • இதயச்செயலிழப்பு நோயைக் கணிக்கிறது.
 • இதயத்தசைக் கோளாறுகளைக் கணிக்கவும் இதுதான் பயன்படுகிறது.
 • பக்கவாதம் வந்தவருக்கு, இதயத்திலிருந்து புறப்பட்ட ரத்த உறைவுக் கட்டிதான் காரணமா என்பதை அறிய முடியும்.

எக்கோகார்டியோகிராபி : யாருக்கு இது அவசியம்?

 • அடிக்கடி நெஞ்சுவலி வருபவர்கள்.
 • நடந்தால், மாடிப்படி ஏறினால் நெஞ்சுவலி அதிகரிப்பவர்கள்.
 • மூச்சுத்திணறல் உள்ளவர்கள்.
 • நடந்தால் மூச்சுத்திணறல் அதிகரிப்பவர்கள்.
 • கணுக்கால் மற்றும் கால் பாதங்களில் வீக்கம் உள்ளவர்கள்.
 • அடிக்கடி தலைச்சுற்றல், மயக்கம் உள்ளவர்கள்.
 • நெஞ்சு படபடப்பு உள்ளவர்கள்.
 • உடல், நகம், விரல், நாக்கு ஆகியவற்றில் நீலம் பூத்திருக்கும் குழந்தைகள்.
 • விளையாடும்போது மயக்கம் அடையும் குழந்தைகள்.
 • வேகமாக நடக்கவும் ஓடவும் முடியாத குழந்தைகள்.
 • இதயத் துடிப்பில் வித்தியாசம் இருப்பதாக உணர்கிறவர்கள்.
 • கீல்வாதக் காய்ச்சல் (Rheumatic fever) வந்தவர்கள்.
 • உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள்.
 • ரத்தத்தில் தாதுகளின் அளவு மாறுபடுபவர்கள்.
 • காரணமில்லாமல் சோர்வாகக் காணப்படுபவர்கள்.
 • இரவு நேரத்தில் படுத்துறங்கும்போது இருமல் அதிகரிப்பவர்கள்.
 • வயிற்றில் நீர் கோத்திருப்பவர்கள்.
 • மாரடைப்பு ஏற்பட்டுள்ள பரம்பரையில் பிறந்தவர்கள்.
 • நகங்கள் உருண்டு திரண்டு உள்ளவர்கள் (Clubbing of nails).
 • காரணம் தெரியாமல் காய்ச்சல் நீடிப்பவர்கள்.
 • மாரடைப்பு வந்து ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள்.

ஆதாரம் : டாக்டர் கு.கணேசன் - இராஜபாளையம்

3.12727272727
குணா Jul 03, 2016 06:20 AM

மிகவும் அருமையான பதிவு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top