பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / ராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ராகி - சேமிக்கும் தொழில்நுட்பம்

பண்டைய காலத்தில் ராகியை சேமிக்கும் தொழில்நுட்பம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

அரிசிக் கஞ்சியை அனைத்து வயதினரின் உடலும் எளிதில் ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால் தென்னிந்திய மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அரிசிப் பயன்பாட்டாளர்களே. நம்முடைய மரபணுவில் அரிசி ஏற்புத் திறன் பொதிந்திருக்கிறது. ஆனால்இன்றைய அரிசிபோதிய சத்துகளை நம் உடலுக்கு அளிப்பதாக இல்லை. காரணம் எடைக்கு எடை அதில் உறைந்துள்ள வேதிக் கூறு. அத்துடன் அரிசியின் மிகைப் பயன்பாடு உடலுக்குத் தொல்லை தருவதாகவும் இப்போது மாறிவிட்டது.

கோலோச்சும் கேழ்வரகு

 • அரிசிக்கு அடுத்தபடியாகத் தென்னிந்தியர்களின் உடல் அதிகமாக ஏற்றுக்கொள்வது சிறுதானியங்கள். அதிலும் தலைமைப் பீடத்தைப் பிடித்துக் கோலோச்சுவது தென்னகமெங்கும் ராகி என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படும் கேழ்வரகு. தென் தமிழகத்தில் கேப்பை என்றும், வட மாவட்டங்களில் கேவுர் என்றும் இதைக் கூறுவார்கள்.
 • கேப்பவன் கேனையனா இருந்தால் கேப்பையில நெய் வடியுமாம்என்றொரு கிராமப் பழமொழி உண்டு. மற்ற சிறுதானியங்களை இடித்துக் கூழாக்கினால் மேலே நெய் ஊற்றியது போல மினுமினுப்பு தென்படும். எடுத்து வாயில் போட்டால் நொழுநொழுவென்று வழுக்கிக் கொண்டு இரைப்பையைச் சென்றடையும்.
 • ராகியில் அந்தத் தன்மை கிடையாது. கொஞ்சம் வறண்ட தன்மை உடையது; மிகவும் கெட்டியானது. ராகியைத் திருகையில் இட்டு மாவாகத் திரிக்கும் வேலை என்றால் கடும் உழைப்பாளியின் தோள்பட்டையும் கன்றிப் போகும். அத்தனை வலுமிக்க தானியம் ராகி.
 • களியாக உண்டால் உடலின் நீரை ஈர்த்துக்கொள்ளக் கூடியது. புதிதாக உண்ணும் சிலருக்கு மலம் கட்டும். அதே ராகியைக் கூழாக்கி உண்டால் மலத்தை இளக்கும். எந்த வடிவத்தில் உண்டாலும் இரைப்பைக்கு சக்தி தரக்கூடியது ராகி.
 • மற்ற சிறுதானியங்களை எவ்வளவுதான் பதப்படுத்திவைத்தாலும் ஓரிரு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. வேளாண்குடி மக்கள் தங்களுடைய தானியங்களில் சோளம், கம்பு, வரகு, குதிரைவாலி என்ற வரிசையில் ஒவ்வொன்றாகக் காலி செய்துகொண்டே வந்து, கடைசியாகத்தான் கேழ்வரகுக் குதிரின் கொண்டியை விலக்குவார்கள்.

வியப்பூட்டும் நுட்பம்

 • தானியங்களைப் புழு பூச்சி பிடிக்காமல் இயற்கை வழியில் பாதுகாக்கும் முறையைத் தமிழர்கள் கற்று வைத்திருந்தார்கள். அந்த முறை எந்தத் தொழில்நுட்பவியலாளருக்கும் வியப்பூட்டுவது. உழைப்பைத் தவிர பைசா செலவு வைக்காதது, அந்தப் பாதுகாப்பு முறை.
 • பெரும் பெரும் தாழியிலோ அல்லது குதிரிலோ (தானியச் சேமிப்புக் குதிர் இன்று சுத்தமாக வழக்கொழிந்து விட்டது) சுக்காகக் காய வைத்த தானியத்தை நிரப்பி கொள்கலனைச் சுற்றிலும் வைக்கோலைத் தூவி, மெலிதாக அனல் ஏற்றுவார்கள். உள்ளிருக்கும் காற்று வெப்பத்தில் வெளியேறியதும் நிழலில் காய வைத்த நொச்சியிலை, வேப்பந்தழை ஆகிய பூச்சிக் காப்பு இலை தழைகளை அரையடி உயரத்துக்குப் போட்டு, அதன் மீது ஒரு அடுக்கு வரகுத் தாளைப் போடுவார்கள். வரகுத் தாள் நீரைக் கடத்தாது, இற்றுப் போகாது என்பதுதான் காரணம். அதன் மீது கால் அடி உயரத்துக்குக் குழைத்த சேற்றை இறுகப் பூசிவிடுவார்கள்.

ரகசியச் சேமிப்புக் கிடங்கு

 • நிலத்தின் ஒரு மூலையிலேயே பத்தடி ஆழத்தில் சுற்றிலும் பலகைக் கல் பதித்து உள்ளே ராகியைக் கொட்டி மேற்சொன்ன விதத்தில் சேறு பூசி, நீர் கசியாத வண்ணம் அதன் மீது கல் பலகையை ஒரு அடுக்கு வைத்துக் காட்டுச் செடிகளை வளர்த்துவிடுவார்கள். அதற்குக் கீழே ஒரு தானியக் கிடங்கு இருப்பதற்கான எந்தத் தடயமும் தெரியாது.
 • குறுநில மன்னர்களுக்கிடையே போர் ஏற்பட்டால் படைச் சிப்பாய்கள் முதலில் ஆடுமாடுகளை இழுத்துச் செல்வதும், தானியங்களைக் கொள்ளையடிப்பதும் வழக்கமாக இருந்தது. அல்லது வீட்டுடன் சேர்த்துத் தானியக் குதிருக்கும் தீ வைத்து விடுவார்கள். அதனால் கொள்ளையில் இருந்தும் தீவைப்பில் இருந்தும் தானியங்களைப் பாதுகாக்க நிலத்தடியில் சேமித்து வைத்து, போர் அடங்கிய காலத்தில் எடுத்துப் பயன்படுத்துவது அந்நாளில் பழக்கமாக இருந்தது.
 • மிகு விளைச்சல் காலத்தில் ஊர்ச்சமூகம் இவ்வாறு தானியத்தைச் சேமித்து வைத்துப் பஞ்ச காலங்களில் பயன்படுத்துவதும் உண்டு.

ததும்பும் உயிர் ஆற்றல்

 • ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சத்தீஸ்கர் அகழாய்வில் மண் குடுவையில் சேமிக்கப்பட்ட ராகி கண்டெடுக்கப்பட்டது. அதன் வயது 1200 ஆண்டுகள்.
 • அந்த ராகி உளுத்துப் புழுபூச்சி பிடிக்காமல் இருந்தது என்பதுகூட வியப்பில்லை; முளைக்கும் திறனோடு இருக்கிறதா என்பதை அறிய மண்ணில் தூவிப் பார்த்தார்கள். மண்ணை முட்டி பிளந்து, வெளிர் பச்சைத் தளிர் விட்டு, ஆய்வாளர்களை வியக்க வைத்தது அந்த ராகிப் பயிர்.

கேள்வி பதில்கள்

1. ராகி கதிர்களை கதிரடிக்கும் போது, கருத்தில் கவனம் செலுத்த வேண்டியவை யாவை?

பசுங்கதிர்களை அறுவடை செய்திருந்தால், நல்ல விதைகளுடன் முதிராத விதைகள் கலக்கக் கூடும். மேலும் சுத்தம் செய்தல், துாற்றுதல் மற்றும் தரம் பிரித்தல் ஆகியவற்றில் சிரமம் ஏற்படக்கூடும். எனவே கதிர்களின் ஈரப்பதத்தை 15% க்கு உலர்த்தி, மூங்கில் குச்சி அல்லது கதிரடிக்கும் இயந்திரம் கொண்டு கதிரடிக்க வேண்டும்.

2. கதிரடித்தப்பின் ராகி கதிர்மணி விதைகளை எவ்வாறு தரப்படுத்துவது?

சூரிய ஒளியில் உலர்த்தும் முன் விதைகளை சுத்தம் செய்து விட வேண்டும். விதைகளை 12% ஈரப்பதத்திற்கு, உலர்த்தி பின் தரம் பிரிக்க வேண்டும். தரம் பிரிப்பதில் உள்ள அளவுகோல்கள்

பி.எஸ்.எஸ் 10 x 10 (துளை அகலம் 2.4 மி.மீ) - ஸ்கேல்பர்

பி.எஸ்.எஸ் 12 x 12  (துளை அகலம் 2.0 மி.மீ)- கிரேடர்

இதில் 10-15% தானிய அளவு குறையக் கூடும்.

3. ராகி விதைகளை அறுவடை செய்து, தரம்பிரித்த பின் எவ்வாறு கடினப்படுத்துவது?

விதைகளை 0.5% கால்சியம் குளோரைடில், 1:1 விகிதத்தில் முளைப்பு தெரியும் வரை ஊற வைக்கவும். பிறகு விதைகளை முந்தைய ஈரப்பதத்திற்கு காற்றில் உலர்த்தவும்.

4. அறுவடை செய்முறைகளுக்குப்பின் ராகி விதைகளை எவ்வாறு சேமிக்கலாம்?

காற்றின் ஈரப்பதம் குறைவாக உள்ள இடங்களில், குறுகிய கால சேமிப்பிற்கு, புதிய காடா துணியை பயன்படுத்தவும்.  நீண்ட நாட்கள் சேமிப்பதற்கு, ஈரப்பதம் உள்ள இடங்களில், 700 காஜ் பாலித்தீன் பைகள் பயன்படுத்தலாம்.  மெட்டல் டின்கள், மண் பானைகள் மற்றும் சணல் கோனிப் பைகளிலும் சேமிக்கலாம். கர்நாடகாவில் மண் குழிகளில், “ஹவேகு” ராகி சேமிக்கப்படுகிறது. ராகி விதைகள் பூச்சி மற்றும் பூஞ்சாணத்தை எதிர்க்கும் திறன் பெற்றிருந்தாலும் சேமிக்கும் பைகளில் லிண்டேன் துாவி வைப்பது நல்லது.

ஆதாரம் : தி – ஹிந்து நாளிதழ்

3.03703703704
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top