பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நோய் காட்டும் கண்ணாடி

நோய் காட்டும் கண்ணாடி பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

சிறுநீர் என்பது ஒரு நோய் காட்டும் கண்ணாடி என்றால் மிகையில்லை. இதைப் பரிசோதிப்பதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் கண்டறிய முடியும். சென்ற வாரம் சில முக்கியமான சிறுநீர்ப் பரிசோதனைகளைப் பார்த்தோம்.

பரிசோதனைகள்

யூரோபிலினோஜன் பரிசோதனை

கல்லீரலில் சுரக்கும் பித்தநீரின் ஒரு பகுதி ரத்த ஓட்டத்தில் கலந்து, சிறுநீரகத்தை அடையும். அங்கு யூரோபிலினோஜனாக மாற்றப்பட்டுச் சிறுநீரில் வெளிப்படும். அடுத்து இது யூரோபிலின் எனும் வேதிப்பொருளாக மாறும். இதுதான் சிறுநீருக்குக் கொஞ்சம் மஞ்சள் நிறத்தைத் தருகிறது. எனவே, இது குறிப்பிட்ட அளவில் சிறுநீரில் இருக்கும்.

இது சிறுநீரில் இல்லவே இல்லை என்றால், பித்தநீர்ப் பாதை அடைத்துக்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் முக்கியமான தடயம் அது. எப்படியெனில், இந்த நோயின்போது பித்தநீரானது சிறுநீரகத்துக்குச் செல்லமுடியாது. அதனால், சிறுநீரில் இது வெளியேறாது. உதாரணத்துக்கு, பித்தப்பை கல், கணையப் புற்றுநோய் போன்றவற்றைச் சொல்லலாம்.

மாறாக யூரோபிலினோஜன் அளவு சிறுநீரில் மிக அதிகமாக இருந்தால் உடலில் கல்லீரல் பாதிப்பு, மலேரியா, அதீத ரத்த அணுக்கள் சிதைவு எனும் பாதிப்பு போன்றவற்றில் ஒன்று இருப்பதாகக் கொள்ளலாம்.

கீட்டோன் பரிசோதனை

முதலில் ‘கீட்டோன்’ என்றால் என்ன? ரத்தத்தில் சர்க்கரை கட்டுமீறி அதிகரிக்கும்போது, உடலில் உள்ள கொழுப்பு கரைந்து 'கீட்டோன்' எனும் வேதிப்பொருளை வெளிப்படுத்தும். இது ஆரோக்கியத்தைக் கெடுக்கிற அமிலக்கூறு. இதன் அளவு ரத்தத்தில் அதிகரிக்கும்போது, நீரிழிவு நோய் இன்னும் கடுமையாகும். பாதிக்கப்பட்ட நபருக்குக் குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுக் காற்றில் அழுகிய பழநாற்றம் போன்ற அறிகுறிகள் ஏற்படும். நிலைமை மோசமாகும்போது சிறுநீரகமும் மூளையும் பாதிக்கப்படும். நோயாளிக்கு ‘கோமா' எனும் ஆழ்நிலை மயக்கம் வரும். அப்படிப்பட்டவர்களுக்குச் சிறுநீரில் ‘கீட்டோன்’ வெளிப்படும். இதைச் சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உறுதிசெய்வது வழக்கம். ஆரோக்கியமாக உள்ளவர்களின் சிறுநீரில் கீட்டோன் வெளியேறாது.

யாருக்கு இது அவசியம்?

 • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் ரொம்பவே அலட்சியமாக இருப்பவர்கள்.
 • கடுமையான நீரிழிவு நோய் இருப்பவர்கள்.
 • நீரிழிவு நோயுள்ள குழந்தைகள்.
 • கர்ப்பிணிகள்.
 • கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளவர்கள்.
 • நீண்ட காலம் சாப்பிட முடியாமல் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள்.

சிறுநீரில் ரத்தம் - என்ன காரணம்?

ஆரோக்கியமாக உள்ளவர்களுக்குச் சிறுநீரில் ரத்தம் வெளிப்படாது. அப்படி வெளிப்பட்டால் அது சாதாரண நோய்த்தொற்றிலிருந்து புற்றுநோய்வரை எந்த நோயின் காரணமாகவும் இருக்கலாம். சில முக்கியமான காரணங்கள்:

சிறுநீரகத்திலும் சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப் பை எனச் சிறுநீர் வெளியேறும் பாதையிலும் நோய்த்தொற்று இருப்பது.

 • சிறுநீரகக் கல் இருப்பது.
 • புராஸ்டேட் வீக்கம் அல்லது புற்றுநோய் இருப்பது.
 • சிறுநீரகத்தில் உள்ள வடிப்பான் களில் அழற்சி ஏற்பட்டிருப்பது.
 • சிறுநீரகத்தில் காசநோய் இருப்பது.
 • சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர்ப் பையில் புற்றுநோய் இருப்பது.
 • ‘சிக்கில் செல் ரத்தசோகை’ போன்ற பரம்பரை நோய் இருப்பது.
 • விபத்தின்போது சிறுநீரகத்தில் அடிபடுவது.
 • சில மருந்துகள்: முக்கியமாக வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகள்.
 • சிறுநீர்க் கசடுகள் (Urine deposits)

சில நோய்நிலைகளில் சிறுநீருடன் பல வேதிப்பொருள்களும் துகள்களும் ரத்த அணுக்களும் சீழ் செல்களும் கலந்து வரும். அவை ‘சிறுநீர்க் கசடுகள்’ எனப்படுகின்றன. அவற்றை நுண்ணோக்கியில் ஆராய்ந்து தெரிந்துகொள்வதன் மூலம், அந்த நோய்களுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். அவை:

1. சிறுநீரகக் கல் வகையைக் கண்டறியும் பரிசோதனை:

சிலருக்குச் சிறுநீரகக் கல் தோன்றி இருக்கலாம் அல்லது அவை தோன்ற வாய்ப்புகள் இருக்கலாம். அப்போது அவர்களின் சிறுநீரில் அந்தக் கற்களின் துகள்கள் வெளியேறும். இவற்றை நுண்ணோக்கியில் காணலாம்.

சிறுநீரகக் கல்லில் கால்சியம் ஆக்சலேட், கால்சியம் பாஸ்பேட், யூரிக் அமிலம், ஸ்டுரூவைட் கற்கள், சிஸ்டின் எனப் பல வகைகள் உள்ளன. அவற்றின் வடிவத்தையும் தோற்றத்தையும் வைத்து, அவை எந்த வகைக் கற்கள் என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

என்ன பலன்?

ஒருவருக்கு இந்தத் தொல்லை மீண்டும் மீண்டும் ஏற்படும்போது, அவருக்கு ஏற்பட்டுள்ள கல் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருந்துகளைச் சாப்பிடுவதும் உணவு முறையை மாற்றிக்கொள்வதும், மீண்டும் சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்க உதவும்.

2. ரத்தச் சிவப்பணுக்கள்

சிறுநீரில் ரத்தம் வெளிப்படுவதற்குக் காரணமான நோய்களின் ஆரம்ப நிலையில், சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது வெளிப்படையாகத் தெரியாது. ஆனால், ரத்தச் சிவப்பணுக்கள் மிகச் சிறிய அளவில் வெளியேறத் தொடங்கும். இதைக் கண்டறிந்து அந்த நோய்கள் தீவிரமடையாமல் தடுத்துவிடலாம்.

3. ரத்த வெள்ளையணுக்கள்

சிறுநீரில் ரத்த வெள்ளையணுக்கள் வெளியேறுவதை நுண்ணோக்கியில் காண முடியும். சிறுநீரகத்தில் சீழ் பிடித்திருந்தால், வேறு ஏதேனும் அழற்சி ஏற்பட்டிருந்தால் இவ்வகை அணுக்கள் சிறுநீரில் வெளியேறும். சிறுநீர்ப் பையில் நோய்த்தொற்று இருந்தாலும் சிறுநீரில் ரத்த வெள்ளையணுக்கள் வெளியேறும்.

4. சீழ் செல்கள்

சிறுநீரில் சீழ் செல்கள் (Pus cells) வெளியேறுமானால், சிறுநீரக நோய்த்தொற்று தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம்.

என்ன காரணம்?

சிறுநீரகம், சிறுநீர் வடிகுழாய், சிறுநீர்ப் பை, சிறுநீர்ப் புறவழி ஆகிய இடங்களில் நோய்த்தொற்று காரணமாகப் புண் உண்டாவது.

 • சிறுநீரகத்தில் காசநோய் ஏற்படுவது.
 • பால்வினை நோய்கள் இருப்பது.
 • புராஸ்டேட் சுரப்பியில் நோய்த்தொற்று உண்டாவது.
 • ரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்களின் பக்க விளைவு.
 • சிறுநீரகப் புற்றுநோய்.
 • சிறுநீர் கிருமி வளர்ப்புப் பரிசோதனை மற்றும் மருந்துத் தேர்வுப் பரிசோதனை
 • சிறுநீரில் சீழ் தெரிந்தால், சீழில் உள்ள கிருமிகளின் வகை, அவற்றை அழிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கும் பரிசோதனை இது. சிறுநீரை ஆய்வுக்கூடத்தில் ஊட்டச்சத்துப் பொருளில் வைத்து வளர்த்து, அதில் எவ்வகை நுண்கிருமிகள் வளர்கின்றன என்பதைக் கண்டறியும் பரிசோதனை இது. மேலும் அக்கிருமிகள் எந்த மருந்துக்குக் கட்டுப்படும் என்பதையும் இது துல்லியமாகத் தெரிவிக்கிறது. இதன் மூலம் நோய்க் கிருமிகளையும் சரியாகக் கண்டுபிடிக்கலாம்; அவற்றுக்குச் சரியான மருந்து கொடுத்து நோயையும் முழுவதுமாகக் குணப்படுத்திவிடலாம்.

சளிப்பரிசோதனை:

 • உடலில் மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய மூன்று இடங்களில் சளி சேரும். இவற்றில் நுரையீரல் சளி முக்கியமானது. காசநோய் ஏற்பட்டவர்களுக்கு நுரையீரலில் அதிகச் சளி கட்டும். அப்போது அந்த நோயை உறுதி செய்யச் சளிப் பரிசோதனை (Sputum Test) செய்யப்படும்.
 • அதிகாலையில் ஆழமாக இருமி எடுக்கப்படும் சளிதான் பரிசோதனைக்கு உகந்தது.
 • ஆய்வுக் கூடத்தில் கொடுக்கப்படும் குப்பியில் சளியைச் சேகரித்து, உடனே பரிசோதனைக்குக் கொடுத்துவிட வேண்டும்.
 • ஆய்வுக்கூடத்தில் அதைப் பக்குவப்படுத்தி, நுண்ணோக்கியில் ஆராய்வார்கள். சளியில் காசநோய்க் கிருமிகள் காணப்பட்டால் ‘பாசிட்டிவ்’ என்று முடிவு தருவார்கள். இது காசநோயை உறுதி செய்ய உதவும். இந்த நோய்க்குச் சிகிச்சை பெற்ற பிறகு, மீண்டும் சளியைப் பரிசோதிப்பார்கள். இதில் காசநோய்க் கிருமிகள் இல்லை என்று தெரிந்தால், ‘நெகட்டிவ்’ என்று முடிவு தருவார்கள். அப்போது சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.
 • சிலருக்கு இப்பரிசோதனையில் காசநோய்க் கிருமிகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், சளித் தொந்தரவு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்குக் கிருமி வளர்ப்புப் பரிசோதனை மற்றும் மருந்துத் தேர்வுப் பரிசோதனையை (Sputum Culture and Sensitivity Test) செய்ய வேண்டும். இதன் முடிவு தெரியச் சில வாரங்கள் ஆகலாம்.
 • காசநோய் தவிர நிமோனியா, நுரையீரல் பூஞ்சை நோய் போன்றவற்றுக்குக் காரணமான கிருமிகளையும் சளிப் பரிசோதனையில் காண முடியும்.

யாருக்கு இது அவசியம்?

 • குளிர் காய்ச்சல் ஏற்பட்டவர்கள்.
 • சிறுநீர்க் கடுப்பு உள்ளவர்கள்.
 • அடிக்கடி சிறுகச் சிறுகச் சிறுநீர் கழிப்பவர்கள்.
 • சிறுநீர் ரொம்பவும் அசுத்தமாக வெளிப்படுவது.
 • சிறுநீரில் நாற்றம் இருப்பவர்கள்.

ஆதாரம் : டாக்டர். குணசேகரன் பொது மருத்துவர்

3.05
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top