பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நோய்களை கண்டறியும் முறைகள்

நோய்களை கண்டறியும் முறைகள் பற்றிய குறிப்புகள்

ஆயுர்வேதம்

“திடமான, குழப்பமடையாத மனநிலை, புரிந்துக் கொள்ளும் திறமை இவை உள்ள மருத்துவர், அறிகுறிகளை கவனித்து, சரியான வியாதிகளை கண்டறிய வேண்டும். – சரக சம்ஹிதை” ஆயுர்வேதம், ஆங்கில வைத்யம், யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் எதுவானாலும் சரி, நல்ல மருத்துவரை இனங்காட்டும் அறிகுறி அவரது நோய் கண்டறியும் திறமை. இதை நாம் டாக்டரின் ‘கை ராசி’ என்கிறோம். ஒரு மருத்துவரின் நோயறியும் திறமை, நோய் உண்டான காரணங்கள், சரியான சிகிச்சை முறைகள், நோயாளியின் உடலுக்கேற்ற மருந்துகள் இவைகளை உணர்ந்து செயல்படும்.

ஆயுர்வேதம் வாழ்க்கையின் விஞ்ஞானம். ‘ஆயுர்’ என்றால் வாழ்க்கை; வேதம் என்றால் அறிவு, ஞானம். ‘சாங்கிய’ வேதாந்தத்தை தழுவியவை ஆயுர்வேத கோட்பாடுகள். வியக்தி (வெளிக்காட்டு) வெளிப்பாடில்லாத ‘அவியக்தி’யிலிருந்து உருவானது. மனிதனும் பிரபஞ்சமும், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற கால சக்கரத்திற்கு உட்பட்டவை. ஆரோக்கியம் என்பது உடல், புலனேந்திரியங்கள், மனம், ஆத்மா இவை ஒரே ஒழுங்கில் சீராக அமைவது. உள்ளும், புறமும், உடலும் வெளி எண்ணங்களும் ஒன்றுபட்டு, ஒன்றை ஒன்று சீராக சார்ந்திருப்பது ஆரோக்கியம்.

ஆயுர்வேத சிகிச்சையின் அடிப்படை கொள்கைகள்

• உடல் சிகிச்சை – உணவு, பத்தியம், மூலிகை மருந்துகள், உடற்பயிற்சி இவை தேவை.

• மன சிகிச்சை – மனத்தை சமநிலையில் நிறுத்த, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.

• உடலுள் உறையும் “ஆத்மா”விற்கு – ஆன்மிக பயிற்சி பரிந்துரைக்கப்படும்.

• ஆயுர்வேதம் இயற்கையின் நடப்புகளை சூரிய உதயம், சூரியன் மறைதல், பருவ காலங்கள், சீதோஷ்ண நிலை, பிறப்பு, இறப்பு இவற்றோடு இணைந்ததாக மருந்துகள், உணவு மாற்றங்கள், வழிமுறைகள் இவற்றை எல்லாமே சிகிச்சை முறையில் கையாளுகிறது.

• நோயாளியின் குறிப்பிட்ட வியாதிக்கு குறிப்பிட்ட மூலிகை கலவை மருந்துகள் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் மட்டுமில்லாது, நோயாளியின் நோய் தடுப்பு சக்தி மற்றும் பொதுவான ஆரோக்கியம் மேம்பட சிகிச்சைகள் தரப்படும்.

• ஆயுர்வேத தத்துவங்கள் – ஆயுர்வேதம் சார்ந்திருக்கும் அடிப்படை வேதாந்தம் – எல்லா உயிர்களும், பொருட்களும் “பிரக்ருதி” (உடல் அமைப்பு) யிலிருந்து, நுட்பமான “புருஷ” (ஆத்மா) கலப்பினால் உருவானவை. அதாவது உடலும், உள் உறையும் ஆத்மாவும் நுட்பமாக இணைந்தவை.

• மனிதனும் பிரபஞ்சமும் ஒரே மாதிரியான பஞ்ச மூலங்களால் உருவானவை – பூமி அல்லது திடப்பொருள், நீர் அல்லது திரவப்பொருள், நெருப்பு (உடல், அக்னி, ஜாடராக்கினி), வாயு (காற்று) மற்றும் ஆகாசம் (உடல் ரீதியாக சொன்னால் உடலின் துவாரங்கள், வெற்றிடங்கள்).

ஆயுர்வேதம் மட்டுமின்றி, இந்திய வேதாந்தமே, உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்ற கருத்தை கொண்டது. இவை பஞ்ச பூதங்கள் (அ) பஞ்சமகா பூதங்கள் எனப்பட்டன. இவை பூமி (ப்ருத்வி), நீர் (அப்பு), அக்னி (தேஜா), காற்று (வாயு) மற்றும் ஆகாயம் (ஈதர்). பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவானவை. பிரபஞ்சத்திற்கும், மனிதருக்கும் உள்ள ஒற்றுமை, அணுக்களின் அமைப்பில் தெரியும். சூரியமண்டல கிரகங்கள் போல, அணுவில் ஒரு நீயுகிலியசை (கரு), சுற்றி வரும் கிரகங்கள் போல, ப்ரோட்டான், எலக்ட்ரான் போன்றவை சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கின்றன. “அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது” என்கிறார் திருமூலர். இந்த பஞ்ச பூதங்கள் உடலில் 3 தோஷங்களாகவும், 7 தாதுக்களாகவும், 3 மலங்களாக வெளிப்படுகின்றன.

ஆயுர்வேத குரு, சரகர் இந்த தத்துவத்தை “ஏட்டுச் சுரைக்காய்” அல்ல. நிதர்சனமானவை என்கிறார். உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், தோஷங்களுக்கென்று தனி உறைவிடம் உடலில் உண்டு. ஒவ்வொரு தோஷத்திற்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தோஷங்கள் தனியாகவோ, மூன்றும் சேர்ந்தோ, 62 வழிகளில் வியாதிகளை உண்டாக்கும் குணம் படைத்தவை. இந்த தோஷ ஏறு – மாறுகளை ஆயுர்வேத வைத்தியர் சரியாக கண்டுபிடிக்க வேண்டும். வியாதியை கண்டுபிடிப்பதை விட, தோஷ மாறுதல்களை கவனிப்பதே முதல் செயல்.

ஒரு மனிதனின் குணத்தை ரஜாஸ், தாமஸ் சத்வம் என்பவை நிர்ணயிக்கும். இந்த முக்குணங்களை தவிர, மூன்று தோஷங்களும் கூட மனநிலையை பாதிக்கும். எனவேதான். ஆயுர்வேதம் உடல் சிகிச்சை அளிக்கும் போது மனசிகிச்சையையும் சேர்த்து செய்கிறது. இந்த 3 தோஷங்களை விரிவாக பார்ப்போம்.

வாதம்

பொது

மூன்று தோஷங்களின் தலைவர் வாதம் – அதாவது வாயு. வாயு என்றால் அசைவது. உடலின் இயக்கத்தை நடத்துவது வாயுதான். கபத்தையும், பித்தத்தையும் “கன்ட்ரோல்” செய்வதும் வாயுதான்.

வாயுதோஷம்

வியாதிகள்

காக்காய்வலிப்பு, மனவியாதிகள், சரும நோய்கள், ஜுரம், அதீத உடல் பருமன், சோகை, நீரிழிவு, மலச்சிக்கல், பேதி, தைராய்ட், அட்ரீனலின் சுரப்பிகளின் நோய்கள்.

வாயுவின் வகை

1. பிராண – மூச்சுவிடுதல், உணவை உட்கொள்ளுதல், இதயம், உணர்வு இந்திரங்கள், ரத்தஓட்டம் இவற்றை பாதுகாப்பது. மணம், நரம்புகள், அறிவு – இவற்றை சீராக வைத்தல் உயிர் வாழ தேவை.

2. உதான – பேச்சுக்கு தேவை. உடல் வலிமை, மனவலிமை, ஞாபகசக்தி இவற்றை பராமரிப்பது.

3. சமான – உணவு ஜீரணிக்க, ஜீரணசாறுகள் சுரக்க. உணவை வாங்கி, ஊட்டச்சத்தையும், கழிவையும் பிரித்து. கழிவை வெளியேற்றுவது.

4. வியான – ஊட்டச்சத்தை உடலெங்கும் பரப்புவது. வியர்வை ஏற்படுத்துவது. கண்ணிமை திறந்து, மூட, உடல் நாளங்களை சுத்தம் செய்வது. விந்துவின் செயல்பாட்டுக்கு உதவுவது.

5. அபான – கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுவது.

பித்ததோஷம்

பொது: பித்தம் என்றால் ‘உஷ்ணம்’ ஜீரண அக்னியால் உணவை செரிக்க உதவும். பித்தம் ‘தேஜஸ்’ – அக்னியின் பிரதிபலிப்பு. நாளமில்லா சுரப்பிகளை நடத்தும்.

பித்ததோஷ குறைபாட்டால் வரும் நோய்கள்: வயிறு சங்கடம், அதிக அமிலசுரப்பு, ஜுரம், வாந்தி, காமாலை, சோகை, ஆஸ்த்துமா, சர்ம நோய்கள், கிருமி தொற்று நோய்கள்.

பித்தவகை

1. பாசக் – ஜீரணத்திற்கு பொறுப்பானது. மற்ற பித்தங்கள் இயங்க உதவுவது.

2. ரஞ்சக – ரத்தத்திற்கு நிறம் சேர்க்கும். ரத்த உற்பத்தியில் உதவும்.

3. சாதக – ஞாபகசக்தி, அறிவு செயல்பட உதவும். நரம்பு திசு வளர்சிதை மாற்றத்திற்கு உதவும்.

4. ஆலோசகா – பார்வைக்கு உதவும்

5. ப்ராஜக – சர்ம நிறத்திற்கு பொறுப்பு, உடல் உஷ்ணநிலையை பராமரிக்கும்.

கபதோஷம்

பொது: நிலமும் நீரும் சேர்ந்தது கபம். உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். உடலுக்கு ஊட்டச்சத்து சேர உதவும்

கபக்கோளாறினால் வரும் வியாதிகள்: ஜலதோஷம், நுரையீரல் நோய்கள், காமாலை, எக்ஸிமா, பருக்கள், ஆர்த்தரைடீஸ், மூளைக்காய்ச்சல், சிறு நீரக பாதிப்பு.

கபத்தின் வகை

1. அவலம்பகா – இதயத்தை, நுரையீரலை காக்கிறது. சுவாசத்திற்கு உதவும்.

2. கிலேடகா – வயிற்றில் உணவு “ஈரமாக” உதவும். அடி, மேல் வயிற்றை அமிலத்திலிருந்து பாதுகாக்கும். அதிக சூடு, குளிர் உணவுகளை உட்கொள்ளும் போது, வயிற்றை காக்கும்.

3. தர்பாகா – மூளைக்கு தேவையான சக்தியை பெற உதவும். உஷ்ண மாறுதல்கள். நச்சுப்பொருட்கள் இவற்றிலிருந்து மூளையை பாதுகாக்கும். முதுகுத் தண்டை பாதுகாக்கும்.

4. போதகா – வாயை ஈரப்பசையுடன் வைப்பது, ருசியை அறிய உதவும்.

5. ஸ்லேசகா – மூட்டுக்கள் விறைப்பாகமல், எண்ணெய்பசையால் பாதுகாக்கும்.

ஆயுர்வேத சாஸ்திரங்கள் தோஷங்கள் அதிகமானாலோ குறைந்தாலோ ஏற்படும் பாதிப்புகளை விஸ்தாரமாக விவரித்துள்ளன. எந்த தோஷம் கெட்டிருக்கிறது. என்பதை கண்டுபிடித்து விட்டால், பிறகு சிகிச்சை முறை சுலபமாகிவிடும். குணமும் தெரியும்.

நோய் கண்டறியும் முறைகள் விவரமாக, தெளிவாக ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. முதலில் நோயாளியின் மருத்துவ ‘சரித்திரம்’ கவனித்து தெரிந்துக் கொள்ளப்படும். நோயாளியின் தாய், தந்தையர்களின் நோய்கள், இவைகளும் கேட்டு தெரிந்து கொள்ளப்படும். ஏனெனில் பல நோய்கள் பரம்பரையாக வரும். நோயாளியின் உடல்வாகு, வயது, வயிற்றின் கொள் திறன் இவை கணிக்கப்படும். பிறகு தலையிலிருந்து கால்வரை, பரிசோதிக்கப்படும். கை நகங்கள், கண், கண்ணிமைகள், நாசி, நாசித்துவாரங்கள், பற்கள், கை, கால் இவை அனைத்தும் பார்க்கப்படும். உடல் முழுவதும் கோளாறுக்களுக்காக கவனிக்கப்படும்.

எட்டு முக்கிய விஷயங்கள் – நாடித் துடிப்பு, சிறுநீர், மலம், நாக்கு, குரல், தொடும் உணர்ச்சி, பார்வை, உடல்தோற்றம் இவை பார்க்கப்படும். மருத்துவர் எந்த அவயம் அல்லது உடலின் எந்தபாகம் சூடாகவோ, குளிர்ந்தோ இருக்கிறது என்று கவனிப்பார். தவிர உடலின் எந்த பாகம், ஈரமாகவோ, உலர்ந்தோ, பருமனாகவோ, மெல்லியதாகவோ, மென்மையாகவோ, கடினமாகவோ, உணர்ச்சியுடனோ, இல்லை உணர்ச்சிகள் தெரியாமலோ இருக்கிறது என்று பரிசோதிப்பார்.

தோல் கரடுமுரடாகவோ அல்லது மென்மையாக உள்ளதா என்பதும் கவனிப்படும்.

உடலின் வாசனையும், நாற்றமும் பிரத்யேகமாக கவனிக்கப்படும். சிறுநீர் கழித்த இடத்தில் எறும்புகள் மொய்க்கின்றனவா என்று பார்க்கப்படும். ஏதாவது அடிவண்டல்கள் சிறுநீரில் தங்கியுள்ளதா என்பதும் பார்க்கப்படும். சிறுநீரின் அடர்த்தியை கண்டுபிடிக்க அதில் சிறிது எண்ணை விடப்படும். மலத்தின் நிறம், தோற்றம், நாற்றம், அடர்த்தி, பூச்சிகள் தென்படுவது இவை அனைத்தும் ஆயுர்வேத மருத்துவர் கவனிப்பார். ஜீரணசக்தியை அறிய, மலத்தை ஒரு தண்ணீர் நிறைந்த மண்பாண்டத்தில் கழிக்க வைத்து, மலம் தண்ணீரில் மூழ்குகிறதா இல்லையா என்று பார்க்கப்படும்.

இவை தவிர, நோயாளியின் ரத்தஒட்டம், தசை, கொழுப்பு, எலும்பு, வந்து இவை கண்காணிக்கப்படும். மூன்று வகை தோஷங்களில் மாறுபாடுகள், எங்கெங்கே இந்த மாறுபாடுகள் தாக்கியுள்ளன இவை கவனிக்கப்படும். நோயாளியின் உடல்பலம், அப்போதுள்ள சீதோஷ்ண நிலை, ஜீரண சக்தி, குணாதிசயங்கள், கோபதாபங்கள், வயது, உண்ணும்உணவு வகைகள், உண்ணும் நேரம், முறைகள், செய்யும் வேலை, உடற்பயிற்சி முறைகள் (நோயாளி செய்துகொண்டிருந்தால்) இவை அனைத்தும் தெரிந்து கொள்ளப்படும்.

ஒரு நல்ல மருத்துவர், நாடியை பிடித்தே வியாதியை சொல்லி விடுவார். இரண்டு கை மணிக்கட்டுகளிலும், நாடி பார்க்கப்படும். கட்டைவிரல் கீழே உள்ள ரத்தக்குழாயை மருத்துவர் தன் மூன்று விரல்களால் அழுத்தி, நோயாளியை தாக்கியிருக்கும்.

வியாதியின் தன்மை, மூன்று தோஷங்களின் மாறுபாட்டை உணரலாம். ஆயுர்வேத புத்தகங்கள் நாடிபிடித்து நோயை அறியும் முறைகளைப்பற்றி விரிவாக விளக்கியுள்ளன.

நோயாளியின் நாக்கை பரிசோதித்தால் ஒரளவு நோயை தெரிந்துக் கொள்ளலாம். உதாரணமாக, மங்கலான, நிறம் மங்கிய, வெளிறிய நாக்கு-சோகை.

மஞ்சள் நிறமுள்ள நாக்கு – கல்லீரல் கோளாறுகள்

வெள்ளை நிற நாக்கு – கபம் மாறுபடுதல்

நீல வண்ண நாக்கு – இதய நோய்கள்

சிகப்பு (அ) பச்சை – மஞ்சள் நிற நாக்கு – பித்த மாறுபாடு

கறுப்பு அல்லது பழுப்பு நிறநாக்கு – வாத மாறுபாடு.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நோயாளியின் முகத்தின் சுருக்கங்கள் கோடுகள், கவலை ரேகைகள் இவையும் கவனிக்கப்படும். சிறுநீரின் அளவும் நோயாளியின் வியாதியை காட்டும்.

கடைசியாக நோயாளியின் மனநிலை ஆராயப்படும். மன ஆரோக்கியம் உடல் ஆரோக்கியத்தை காக்கும். மனநிலை கோளாறுகளால், வலிப்பு, ஹிஸ்டீரியா, தூக்கமின்மை, பேதி, சித்தப்பிரமை, ஜுரம் இவைகள் உண்டாகலாம். வாததோஷங்கள் பாதிப்பால் மனச்சோர்வு, பயம் சோகம் இவை ஏற்படும்.

பித்ததோஷம் இருந்தால் பேராசை, பயம் போன்ற உணர்வுகளால் பித்தநீர் அதிகம் சுரக்கும். கபகுறைபாட்டால், பேராசையும், சோம்பேறித்தனமும் பெருகும்.

மேற்கொண்ட முறைகளால் வியாதியை தெரிந்துக் கொண்ட பின்னர்தான் ஆயுர்வேத மருத்துவர் சிகிச்சையை தொடங்குவார். அந்த சிகிச்சை உடலுக்கு மட்டுமில்லாமல், மனதிற்கும் கொடுக்கப்படும். நோயாளிக்கு ஏற்ற வைத்தியம் செய்யப்படும். அவர் வசிக்கும் இடத்தில் சூழ்நிலை, அவர் குடும்ப சூழ்நிலை இவற்றையும் மருத்துவர் கேட்டு அறிவார்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் உபயோகிக்கும் நவீனமுறை இயந்திரங்களும் சாதனங்களும் நோயை கண்டறிய உதவும்போது, பழங்கால ஆயுர்வேத முறைபாடுகள் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். இந்த நவீன முறைகள் மனித உலகின் இயற்கையான வளர்ச்சியால் தோன்றியவை.

பல நூற்றாண்டுகள் நாம் அடிமைகளாக இருந்ததால் இம்முறைகளின் வளர்ச்சி ஆயுர்வேதத்தில் பயன்படுத்த முடியாமல் போனது. ஆயுர்வேதத்தின் தடைப்பட்ட வளர்ச்சி தற்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டது. இதனால் இந்த புதிய நோயை கண்டறியும் சாதனங்களும், முறைகளும் ஆயுர்வேதத்திலும் கடைப்பிடிக்கும் காலம் வந்துவிட்டது.

ஆதாரம் : தீபம் நலவாழ்வு கல்விச் சங்கம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top