பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நீர் எனும் அற்புதம்

நீர் எனும் அற்புதம் பற்றிய குறிப்புகள்

இயற்கையின் பரிசு

‘நீரின் அருமை தெரியும் கோடையிலே’ என்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இன்றியமையாது உயிர்நாடியாக விளங்குவது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும். மூன்றாம் உலகப் போரே உதிக்கலாம் என்கிற சூழ்நிலையைக் கூட உருவாக்கும் அளவு நீரின் தேவை உலகை வியாபித்திருக்கிறது.

நீரற்ற உலகை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்... தாகத்துக்கு ஏங்கியபடி ஜீவராசிகள் அலைந்து கொண்டிருக்கும்... எல்லா நீர்நிலைகளிலும் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்பதை சுலபமாக எண்ணி விடலாம்... கடல் பகுதிகள் அத்தனையும் பொட்டல் வெளிகளாக காட்சி தரும்... நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா? இத்தனை அருமை பெருமைகளை உடைய தண்ணீரை சரியான முறையில் அருந்தினால் நம் உடலுக்கு அருமருந்தாகும். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது. நமது மூளையில் 74 சதவிகிதம், ரத்தத்தில் 83 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. எலும்பில் கூட 22 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.

தண்ணீரே பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகும். எப்படி?

தண்ணீர் சிறுநீரகக் கற்களை வர விடாமல் செய்கிறது. முறையாக தண்ணீர் குடிக்காத தாலும் சிறுநீரகக்கற்கள் ஏற்படும். தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது. சிறுநீர் வரும் வழியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும்  தண்ணீர் அதை சுத்தப்படுத்தி வெளியேற்றி விடுகிறது. கேடு விளைவிக்கும் பாக்டீரியா சிறுநீர்ப்பையில் இருந்தாலும்கூட நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கு பிரச்னை வராது... தண்ணீர் அதனை துவம்சம் பண்ணி வெளியேற்றி விடும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் நிவாரணம் அளிக்கிறது. வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்தை இழந்தவர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் டீஸ்பூன் உப்பையும் கலந்து கொடுத்தால் இழந்த நீர்ச்சத்தை மீட்டு, போதிய சக்தி பெற உதவும்.காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் அதிக சூடு  இருக்கும்.

நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் அடிக்கடி வரும். இதனால் காய்ச்சல் விரைவில் குறைகிறது. இருமல், சளி, தொண்டைப்புண், சுவாசப்பாதை தொற்று போன்றவை குணமாகக் கூட தண்ணீர் உதவுகிறது. கெட்டியான சளியை கூட தண்ணீர் இலகுவாக்கி வெளியேற்றிவிடும். நுரையீரலில் தங்கி இருக்கும் தேவையில்லாத கோழையையும் வெளியேற்றும் தன்மை உடையது தண்ணீர். உணவு சாப்பிட்ட பின் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடும். மலத்தையும் இலகுவாக்கும். தண்ணீர் உங்கள் உடலில் உள்ள சக்தியை நீட்டிக்கச் செய்கிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூளை சோர்ந்து இருக்கும் வேளையில் தண்ணீர் குடித்தால் சுறுசுறுப்படையச் செய்கிறது. தலைவலி கூட இதனால் சரியாகிறது. தண்ணீர், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன்னால் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் அதன் பிறகு எவ்வளவு சாப்பிட்டாலும் கொழுப்பு உடலில் தங்காமல் செய்து விடும். தண்ணீர் தோலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களின் தோல் உலர்ந்தும் கண்கள் குழி விழுந்தும் காணப்படும். அழகிய சருமத்தை பெற நிறைய தண்ணீர் குடியுங்கள்.

தண்ணீர் குடிக்க சரியான வழிகள்:

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

தூக்கத்தின் போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைந்து விடும். தூங்கப்போகும் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருக்கும். காலையில் போதுமான நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் எளிதில் வெளியேறி உங்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.

தினமும் 8 முதல் 12 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஏன்?

55 கிலோ எடையுள்ளவருக்கு தினமும் 8 கிளாஸ் தண்ணீர் தேவை. 86 கிலோ எடையுள்ளவருக்கு 12 கிளாஸ் தண்ணீர் அவசியம்.  அவ்வப்போது சிறுநீரின் நிறத்தையும்  கவனிக்க வேண்டும். வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் என்கிறது அமெரிக்க நலவாழ்வியல் அமைப்பான மாயோ கிளினிக். தினம் 16 கிளாஸ்களுக்கு அதிகமாகவும் தண்ணீர் அருந்த வேண்டாம்.

தண்ணீரை ஒரே மூச்சில் மடக் மடக் என்று குடிக்காமல் மிடறு மிடறாகப் பருகுவது நல்லது. ஏன்?

ஒரு சொம்பு தண்ணீரை ஒரேடியாக குடித்தால் இதயம் வெகு வேகமாக வேலை செய்யும். இது நல்லதல்ல. மிடறு மிடறாகப் பருகினால் இதயத்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும். உடல் தண்ணீரை மெதுவாக எடுக்கும். இதனால் சோர்வு வெகுவாகக் குறையும்.

தண்ணீர் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது. ஏன்?

தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரில் 2 கிளாஸ் குறைவாகவே குடிப்பீர்கள். முதியோருக்கு சரியாக தாகம் எடுக்காது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்லது.

தண்ணீருக்கு மாற்றாக வேறு பானங்கள் அருந்தக்கூடாது. ஏன்?

சிலர் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வேறு குளிர்பானங்கள் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை அருந்துவார்கள். இதில் அதிக சர்க்கரையும் பாஸ்பரஸுசும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் எலும்புகளின் வலுவை குறைக்கும் ஆஸ்டியோபோரசிஸ் பிரச்னை, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைகிறது. மதுபானங்கள் அருந்துபவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் சுத்தமாக வெளியேறும். அதனால் சோர்வடையச் செய்கிறது.

குழந்தைகளுக்கு முறையாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏன்?

குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கு அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டிலில் போதுமான தண்ணீரை கொடுத்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வரும் சிறுநீரகக் கற்களை தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. அதனால் உடல் திரவச் சமநிலையை அடைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடல்நலமில்லாமல் இருக்கும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

உடல்நலமில்லாமல் இருக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவு நீர்ச்சத்து கிடைத்து, உடலில் உள்ள தொற்றுக் கிருமிகளையும் வெளியேற்றி, உடலை நல்ல நிலைக்கு மீட்க தண்ணீர் உதவுகிறது.

கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

பால் சுரப்பதற்கும் குழந்தைக்குப் பாலூட்டவும் தண்ணீர் நிறைய குடிப்பது அவசியம். கர்ப்பமாக இருக்கும் போது தினமும்  10 கிளாஸ் தண்ணீரும், பாலூட்டும் போது  13 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும்.

ஆதாரம் : தினகரன்

3.10843373494
தி. சுப்ரமணியன், பாண்டிச்சேரியில்.3 Jun 09, 2019 07:12 PM

உடலில் நீர்ச்சத்து குறையை நீக்க சர்க்கரைக்கு பதில் வெல்லம் மற்றும் உப்பை சேர்க்கலாமா?

ramesh kumar Dec 01, 2018 04:49 PM

தண்ணீரின் பங்கு அபாரம்...
உடல் எடைக்கு உண்டான சரியான தண்ணீர் அளவை லிட்டரில் கூறுங்களேன்..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top