பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / மூட்டு அழற்சியை புரிந்துகொள்ளுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மூட்டு அழற்சியை புரிந்துகொள்ளுதல்

மூட்டு அழற்சியை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

“வீங்கிய மூட்டுகள்” என்று அர்த்தமுடைய கிரேக்க வார்த்தைகளிலிருந்து “மூட்டு அழற்சி” என்ற இந்த வார்த்தை பிறந்துள்ளது. இது 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு முடக்கு வாத நோய்களுடனும் குறைபாடுகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இந்நோய்கள் மூட்டுகளை மட்டுமின்றி அவற்றை தாங்கும் தசைகள், எலும்புகள், தசை நாண்கள், பந்தகங்கள் ஆகியவற்றையும் தாக்கலாம். சில வகை மூட்டு அழற்சி நோய்கள் உங்கள் தோலையும், உள்ளுறுப்புகளையும், கண்களையும்கூட சேதப்படுத்தலாம். பொதுவாக மூட்டு அழற்சி நோய்களுடன் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு வகை நோய்கள் — முடக்கு வாத மூட்டழற்சி (rheumatoid arthritis [RA]), மூட்டுத் தேய்வு (osteoarthritis [OA]) ஆகிய நோய்களை கவனமாக ஆராய்வோம்.

மூட்டின் அமைப்பு

மூட்டு என்பது இரண்டு எலும்புகள் சந்திக்கும் இடமாகும். எலும்புச் சவ்வு மூட்டு என்பது ஓர் உறுதியான நாருறையால் சூழப்பட்டிருக்கும். இவ்வுறை அம்மூட்டை தாங்கி பாதுகாக்கும். இந்த மூட்டு நாருறையை எலும்பிடைச் சவ்வு மூடியிருக்கும். இச்சவ்வு எண்ணெய்ப் பசையுள்ள திரவத்தைச் சுரக்கும். மூட்டு நாருறைக்குள் இரண்டு எலும்புகளின் முனைகள், குருத்தெலும்பு எனப்படும் ஒரு மிருதுவான சுருங்கி விரியும் தன்மையுள்ள திசுவால் மூடப்பட்டுள்ளன. இதுவே உங்கள் எலும்புகள் ஒன்றோடொன்று அழுத்துகையிலும் உரசுகையிலும் தேய்ந்துவிடாமல் அவற்றை பாதுகாக்கிறது. குருத்தெலும்பு ஷாக் அப்ஸார்பரைப் போலவும் செயல்படுகிறது. உங்கள் எலும்புகளின் முனைகளில் குஷன் போல் அமைந்து, அவற்றின் பளுவை எலும்புகளுக்கிடையே பங்கிடுகிறது.

உதாரணமாக, நீங்கள் நடக்கும்போதோ, ஓடும்போதோ, குதிக்கும்போதோ, உங்கள் இடுப்பிற்கும் முழங்கால்களுக்கும் கொடுக்கப்படும் அழுத்தத்தின் அளவு, உங்கள் உடலின் எடையைவிட நான்கு முதல் எட்டு மடங்கு அதிகமாக இருக்கலாம்! அவற்றில் பெருமளவான அழுத்தத்தை, அவற்றைச் சூழ்ந்துள்ள தசைகளும் தசை நாண்களும் தாங்கிக்கொண்டாலும், இந்தக் குருத்தெலும்பு ஒரு கடற்பஞ்சைப் போல அமுங்குவதால் இப்பளுவை உங்கள் எலும்பு பொறுத்துக்கொள்ள உதவுகிறது.

முடக்கு வாதம்

முடக்கு வாதத்தைப் (RA) பொறுத்தவரை, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, எல்லா மூட்டுகளையும் சரமாரியாக தாக்கத் தொடங்குகிறது. புரியாத ஏதோவொரு காரணத்தால், பெருமளவான இரத்த செல்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் டி செல்கள் உட்பட மூட்டு குழிகளுக்குள் நுழைகின்றன. இது அடுத்தடுத்து வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தி, மூட்டு வீங்கும்படி செய்கிறது. எலும்புச் சவ்வின் செல்கள் கட்டுக்கடங்காமல் பெருகுகையில், மரைபடலம் எனப்படும் புடைத்த திசுக் கட்டி உருவாகலாம். இந்த திசுக் கட்டியோ, குருத்தெலும்பை அழிக்கும் கொலைகார என்ஸைம்களை உற்பத்தி செய்கிறது. இதனால் எலும்பின் மேற்பரப்புகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளலாம். இதனால் உறுப்புகளை சரிவர அசைக்க முடியாமல் போகலாம். அத்துடன் தாங்க முடியாத வலியும் ஏற்படலாம். இவ்வாறு மோசமடையும் நிலை, பந்தகங்களையும், தசை நாண்களையும், தசைகளையும் பலவீனப்படுத்துகிறது. இதனால் மூட்டு சமநிலை இழந்து, ஓரளவு விலகிவிடுகிறது. இது பெரும்பாலும் உருச்சிதைந்த தோற்றத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக RA மூட்டுகளை சீராக தாக்குகிறது. இதனால் மணிக்கட்டுகள், முழங்கால்கள், பாதங்கள் அனைத்துமே பாதிக்கப்படுகின்றன. RA இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, தோலுக்கடியில் கழலைகள் அல்லது புடைப்புகள் தோன்றுகின்றன. சிலருக்கு இரத்தச் சோகையும், கண்களிலும் தொண்டையிலும் வறட்சியும் வலியும் ஏற்படலாம். RA-வின் விளைவாக, தசை வலி காய்ச்சல் உட்பட, ஃப்ளூவுக்கான அறிகுறிகளும் களைப்பும் தோன்றும்.

தொடக்கம், நீடிப்பு காலம், விளைவு ஆகியவற்றில் RA ஆளுக்கு ஆள் பெரிதும் வேறுபடுகிறது. ஒருவருக்கு வலியும் இறுக்கமும் பல வாரங்களோ வருடங்களோ கழித்துகூட மெதுவாக தலைதூக்கலாம். இன்னொருவருக்கு, திடீரென ஆரம்பிக்கலாம். சிலரை RA சில மாதங்களுக்கு ஆட்டிப்படைத்துவிட்டு எந்தப் பெரும் சேதத்தையும் ஏற்படுத்தாமல், வந்த சுவடின்றி மறைந்துவிடலாம். மற்றவர்களுக்கோ, அறிகுறிகள் திடீரென அதிகரிக்கும் காலங்களையும் அதற்குப் பின், அந்த அறிகுறிகள் குறையும் காலங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கலாம். அவ்வாறு அறிகுறிகள் குறையும் காலப்பகுதியின்போது அவர்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் தெரியும். சில நோயாளிகளை பல ஆண்டுகளுக்கு இந்நோய் ஆட்டிப்படைக்கும். சிறிதும் தணியாமல் அவர்களை முடமாக்கிவிடும்.

“பொதுவாக நடுத்தர வயது பெண்களை இந்நோய் தாக்குகிறது” என டாக்டர் மைக்கல் ஷிஃப் குறிப்பிடுகிறார். என்றாலும், “பிள்ளைகள், ஆண்கள் உட்பட இது யாரையும் எந்த வயதினரையும் விட்டு வைப்பதில்லை” என ஷிஃப் மேலும் கூறுகிறார். குடும்பத்தில் யாருக்காவது முடக்கு வாதம் வந்திருந்தால் இன்னும் ஆபத்து. புகைபிடித்தல், உடல் பருமன், இரத்தம் ஏற்றியிருத்தல் ஆகியவை அனைத்தும் ஆபத்தை அதிகரிக்கின்றன என்பதாக கூடுதலான பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மூட்டுத் தேய்வு

“மூட்டுத் தேய்வை பெரும்பாலும் காலநிலைக்கு ஒப்பிடலாம். அதாவது அது எங்கும் இருக்கிறது, பெரும்பாலும் தென்படாததாகவும், சில சமயங்களில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது” என மேற்கத்திய மருத்துவ புத்தகம் (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. RA-வைப் போலன்றி, மூட்டுத் தேய்வு (OA) உடலின் மற்ற பாகங்களுக்கு அரிதாகவே பரவுகிறது. ஆனால் ஒன்று அல்லது சில மூட்டுகளை அரித்து விடுகிறது. குருத்தெலும்பு மெது மெதுவாக அரிக்கப்படுவதால், ஓர் எலும்பு மற்றொரு எலும்போடு உரசுகிறது. இதனால் ஆஸ்டியோஃபைட்ஸ் எனப்படும் எலும்பு வளர்ச்சிகள் தோன்றுகின்றன. நீர் கோர்த்த கட்டிகள் தோன்றலாம், பாதிக்கப்பட்ட எலும்பு தடித்து அதன் தோற்றமும் மாறுகிறது. மேலும், விரல் முட்டிகளில் புடைப்புகள், வீக்கமடைந்துள்ள மூட்டுகளிலிருந்து நரநரவென்ற சத்தம், திடீர் தசைச் சுருக்கங்கள் ஆகியவற்றுடன், வலி, விறைப்பு, பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்க முடியாமை ஆகியவை மற்ற அறிகுறிகள் ஆகும்.

முன்பெல்லாம், முதுமை காரணமாகவே OA வருவதாக எண்ணப்பட்டு வந்தது. என்றாலும் வெகுகாலமாக நிலவி வந்த அந்த நம்பிக்கையை நிபுணர்கள் கைவிட்டிருக்கின்றனர். “ஒருவருடைய வாழ்நாளின்போது மூட்டு நல்ல நிலையில் இருக்கையில், உடலுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தால் ஏற்படும் பளுவை தாங்க முடியாமல் செயலற்றுப்போகும் என்பதற்கு ஆதாரம் இல்லை” என அமெரிக்க மருத்துவ பத்திரிகை (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. அப்படியானால், மூட்டுத் தேய்வு எதனால் ஏற்படுகிறது? இதன் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகள் “வெகுவாக முரண்படுகின்றன” என பிரிட்டிஷ் பத்திரிகை லான்செட் தெரிவிக்கிறது. நுண்ணிய முறிவுகள் போன்று முதலில் எலும்புக்கு சேதம் ஏற்படலாம் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது, எலும்பு வளர்ச்சி எனப்படும் முட்கள் வளருவதற்கும் குருத்தெலும்பு பழுதடைவதற்கும் தூண்டலாம். OA குருத்தெலும்பிலேயே ஆரம்பிப்பதாக மற்றவர்கள் நினைக்கின்றனர். அது பழுதாகி நார் நாராக பிரிகையில், அதை ஒட்டிய எலும்பில் அழுத்தம் அதிகரிக்கிறது என்றும் அவர்கள் நினைக்கின்றனர். சேதமுற்ற குருத்தெலும்பை சரிசெய்ய உடல் முயலுகையில், நோய்க்குறிகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

முதுமை மட்டுமே OA-வுக்கு காரணமில்லை என்றபோதிலும், பெரும்பாலும் முதுமை அடைகையில் குருத்தெலும்பை இழக்க நேரிடுகிறது. பாதிக்கப்படும் மற்றவர்கள், மூட்டுப் பரப்புகள் ஒன்றோடொன்று பொருந்துவதில் விகற்பம் உடையோர், அல்லது பலவீனமான கால், தொடை தசைகளை உடையோர், சரிசமமற்ற நீளங்களுள்ள கால்களை உடையோர், அல்லது தண்டுவட எலும்பு வரிசையில் கோளாறு உடையோர் ஆவர். விபத்து காரணமாகவோ, வேலை செய்யுமிடத்தில் அடிக்கடி ஒரு மூட்டை பயன்படுத்துவதாலோ, மூட்டில் காயம் ஏற்படுகையில் மூட்டுத் தேய்வு ஏற்படுகிறது. ஒரு முறை பழுதடைந்தவுடன், உடலின் கூடுதல் எடை காரணமாக மூட்டு அதிகமாக தேய்வுறலாம்.

“மூட்டுத் தேய்வு ஒரு கலவை நோய். அதற்கென்று குறிப்பிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த அபாய அம்சங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கு மரபணு சம்பந்தப்பட்ட காரணமும் பலமானதாக இருக்கிறது.” ஏற்கெனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள குடும்பத்தில் இருக்கும் நடுத்தர வயதினரையும் முதிர் வயதிலுள்ள பெண்களையும் குறிப்பாக OA தாக்குகிறது. இது எலும்பு மெலிதல் நோயிலிருந்து வித்தியாசப்படுகிறது; எலும்பு மெலிவதற்குப் பதிலாக எலும்பு தடிப்பது இந்நோய்க்கு ஆரம்பம். தனிநிலை எலெக்ட்ரானைக் கொண்ட ஆக்ஸிஜன் அணுக்களும், சி, டி வைட்டமின்களின் குறைவும் எலும்புகள் பழுதடைய காரணமாக இருப்பதாய் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிகிச்சை

 • மூட்டு வீக்கத்திற்கான சிகிச்சை, மருத்துவமும் உடற்பயிற்சியும் வாழ்க்கைப் பாணியில் மாற்றமும் கலந்தது. உடற்பயிற்சி மருத்துவர் உடற்பயிற்சிக்கான திட்டத்தை ஆரம்பித்து வைக்கலாம். அதில் ஐசோமெட்ரிக், ஏரோபிக், ஐசோடோனிக் அல்லது பளு தூக்கும் உடற்பயிற்சிகள் போன்ற பல்வேறு அசைவுகள் உட்படலாம். அது மூட்டு வலி, வீக்கம், களைப்பு, காரணமில்லாத உடல் சோர்வு, மனச்சோர்வு ஆகிய எண்ணற்ற அறிகுறிகளுக்குப் பரிகாரம் தருவதாக தெரிகிறது. அதிக வயதானவர்களுக்கும் உடற்பயிற்சியால் பலன் கிடைக்கிறது. எலும்பு அடர்த்தி இழப்பையும் உடற்பயிற்சி கட்டுப்படுத்தலாம். வெப்ப, குளிர் சிகிச்சை, அக்குபங்சர் சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளாலும் வலியிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக சிலர் சொல்லிக் கொள்கின்றனர்.
 • எடை குறைப்பு, மூட்டு வலியை கணிசமாக குறைக்க முடியுமென்பதால், மூட்டு அழற்சியை சமாளிப்பதில் உணவு கட்டுப்பாடு பெரிதும் உதவலாம். கால்சியம் அதிகமாக இருக்கும் உணவை—அடர்ந்த பச்சை நிறமுள்ள, இலையுடன் கூடிய காய்கறிகள், ஃப்ரஷ்ஷான பழங்கள், குளிர்ந்த நீரில் வாழும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமுள்ள மீன்கள் போன்றவற்றை சாப்பிடுவதும், பதப்படுத்தப்பட்ட, தெவிட்டிய கொழுப்புள்ள உணவை தவிர்ப்பதும் எடையை மட்டுமின்றி வலியையும் குறைக்க உதவும். மாமிசம், பால் பொருட்கள், கோதுமை ஆகியவற்றையும், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்தரிக்காய் போன்ற நைட்ஷேட் என அழைக்கப்படும் ஸொலானேஸி குடும்பத்தைச் சேர்ந்த காய்கறிகளையும் தவிர்க்கும் உணவு திட்டங்கள் சிலருக்கு பலன் தருகிறது.
 • சில நோய்களுக்கு மூட்டு அகநோக்கு சிகிச்சை முறை சிபாரிசு செய்யப்படுகிறது. இம்முறைப்படி, அறுவை மருத்துவர் நோயாளியின் மூட்டிற்குள்ளேயே ஒரு கருவியை செலுத்தி, தீங்கிழைக்கும் என்ஸைம்களை உற்பத்தி செய்யும் எலும்பிடைத் திசுவை அகற்றுவார். என்றாலும் இச்சிகிச்சை அதிக பலன் தருவதில்லை. மூட்டுச் சீரமைப்பு என்ற கடுமையான சிகிச்சை முறையும் உள்ளது. இம்முறைப்படி, மூட்டு முழுவதும் (பொதுவாக இடுப்பு அல்லது முழங்கால்) அகற்றப்பட்டு செயற்கை மூட்டு பொருத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் 10 முதல் 15 ஆண்டுகள் எந்தத் தொந்தரவும் இன்றி வாழலாம், வலியைப் போக்க இது பொதுவாக நல்ல பலன் தரும் முறையாக உள்ளது.
 • மூட்டு அழற்சியை குணப்படுத்துவதற்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத போதிலும், அநேக மருந்துகள் வலியையும் வீக்கத்தையும் குறைக்கின்றன; சில மருந்துகள் இந்நோயின் தீவிரத்தை குறைப்பதில் பலனளித்துள்ளன. வலி நீக்கிகள், கார்ட்டிகோஸ்டீராய்ட் தெரப்பி, நான்ஸ்டீராய்ட் ஆன்ட்டி-இன்ஃப்ளமேட்டரி ட்ரக்ஸ் (NSAIDs), டிசீஸ்-மாடிஃபையிங் ஆன்ட்டிருமேட்டிக் ட்ரக்ஸ் (DMARDs), இம்யுனோஸப்ரஸன்ட்ஸ், பையாலஜிக் ரெஸ்பான்ஸ் மாடிஃபையர்ஸ், இம்யூன் ரெஸ்பான்ஸை மாற்றியமைக்க மரபணு பொறியியல் முறையில் உருவாக்கப்பட்ட மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்தி வெவ்வேறு சிகிச்சைகள் அளித்து, பலவீனமாக்கும் மூட்டு அழற்சி நோய் அறிகுறிகளிலிருந்து நிவாரணத்தை தர முயற்சி எடுக்கப்படுகிறது. என்றாலும், இவற்றால் பெரும் சிரமத்துக்குப் பின் நிவாரணம் கிடைத்தாலும், பயங்கரமான பக்க விளைவுகளும் ஏற்படலாம். கிடைக்கும் பலன்களையும் ஆபத்துகளையும் சீர்தூக்கிப் பார்ப்பது, நோயாளி டாக்டர் ஆகிய இரு சாராருக்குமே சவாலை முன்வைக்கிறது.
 • மூட்டுத் தேய்வு, முடக்கு வாத மூட்டழற்சி, செந்தடிப்பு தோல் அழிநோய், இளம் பருவ மூட்டு வாத நோய், கணு வீக்கம், இழைமப் பையழற்சி, மூட்டு வீக்க காய்ச்சல், லைம் வியாதி, மணிக்கட்டுக் குகை நோய்க்குறி, ஃபைப்ரோமையால்கியா, ரைட்டர்ஸ் சின்ட்ரோம், முதுகெலும்பு அழற்சி ஆகியவை இவற்றுள் அடங்கும்.
 • அறியப்பட்டுள்ள உண்மைகளின் அடிப்படையில் சிகிச்சை தேடி, அதை கவனமாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது நோயாளியின் தனிப்பட்ட பொறுப்பாகும்.
 • உடல் பருமன், புகைபிடித்தல், இரத்தம் ஏற்றியிருத்தல் ஆகியவை அனைத்தும் முடக்கு வாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கலாம்

மாற்று சிகிச்சைகள்

சிகிச்சைக்கான சில மருந்துகள் வழக்கமான சிகிச்சைகளைவிட பாதுகாப்பானவையாக, குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்துபவையாக கருதப்படுகின்றன. இவற்றுள் ஓரல் டைப் II கொலாஜன் என்பதும் அடங்கும். இது, முடக்கு வாத நோயில் (RA) மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும் வலியையும் குறைப்பதில் பலனளித்திருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் சொல்லிக்கொள்கின்றனர். எப்படி? இன்டர்லூக்கின்-1 மற்றும் ட்யூமர் நெக்ரோஸிஸ் ஃபாக்டர் α எனப்படும் வீக்கத்தை உண்டுபண்ணுவதற்கு துணைபுரிகிற, கொடிய ஸைட்டோகைன்ஸ்களை கட்டுப்படுத்துவதன் மூலமே. தீங்கு ஏற்படுத்தும் இக்காரணிகளைக் கட்டுப்படுத்துவதில் ஓரிரு இயற்கை ஊட்டப்பொருட்களும் ஓரளவு தங்கள் திறமையை காட்டியுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, நையாஸினமைட், ஐகோஸப்பென்டாயினோயிக் அமிலமும் காமா லினோலினிக் அமிலமும் அதிகமுள்ள மீன் எண்ணெய்கள், போரேஜ் சீட் ஆயில், ஈவினிங் பிரிம் ரோஸ் ஆயில் ஆகியவை அடங்கும். சீனாவில் ட்ரிப்டரிஜியம் வில்ஃபோர்டிய் ஹூக் எஃப் எனப்படும் மூலிகை சிகிச்சை பல ஆண்டுகளாக அளிக்கப்பட்டு வந்துள்ளது. இச்சிகிச்சையால் RA-யின் பாதிப்புகளைக் குறைப்பதில் ஓரளவு பலன் கிடைத்துள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன.

 • ஆரோக்கியமான மூட்டு
 • இழைமப்பை
 • தசை
 • குருத்தெலும்பு
 • தசை நாண்
 • மூட்டு உறை
 • மூட்டுச் சவ்வு
 • மூட்டுச் சவ்வுநீர்
 • எலும்பு
 • முடக்கு வாதம் கண்ட மூட்டு
 • இடைவெளி இழப்பு
 • எலும்பும் குருத்தெலும்பும் அரிக்கப்படுதல்
 • வீங்கிய மூட்டுச் சவ்வு
 • தேய்வு கண்ட மூட்டு
 • குருத்தெலும்பு தனிப்பொருட்கள்
 • குருத்தெலும்பு அரிக்கப்படுதல்
 • வளரும் எலும்பு முள்
 • எந்த வயதினரையும் மூட்டு அழற்சி பாதிக்கலாம்

உடற்பயிற்சியும் சரியான உணவு திட்டமும் ஓரளவு நிவாரணத்தை தரலாம்

ஆதாரம் : ஹெல்த் பிளஸ் மருத்துவ இதழ்

2.90909090909
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top