மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரை பாதிப்பது, வலிப்பு நோய். ‘காக்காய் வலிப்பு’ என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். பிறந்த குழந்தை, இளைய வயதினர், முதியவர் என எல்லா வயதினரையும் இந்த நோய் பாதிப்பதாலும், வலிப்பு பற்றிய மூடநம்பிக்கைகள் நம் சமூகத்தில் அதிகம் என்பதாலும், இது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டியது அவசியம்.
‘வலிப்பு’ என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ தெரிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது. ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் இழுக்கும். வாயில் நுரை தள்ளும்.
கண்கள் மேலே சுழன்று, நாக்கு பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits/Seizures/Convulsions). ஒருவருக்கு இரண்டுமுறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.
மூளை மற்றும் நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின் புயல் போல கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம். பூமியின் உள் அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப்போல, மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.
பிறக்கும்போது ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடுகள், குறைப் பிரசவம், பிரசவ காலத் தொற்றுநோய்கள், பிரசவத்தின்போது தலையில் அடிபடுதல் போன்றவற்றால் குழந்தைகளுக்கு வலிப்பு வருகிறது. இவர்களின் ரத்தத்தில் கால்சியம், குளுக்கோஸ், மெக்னீசியம் அளவு குறைந்தாலும் வலிப்பு வரும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வருவது உறுதி. சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.
மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial seizure). நாம் அவ்வப்போது காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு ‘முழுவீச்சு வலிப்பு’ (Generalised seizure) என்று பெயர். இவை தவிர, இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்பச் சிகிச்சை முறை மாறுவது மருத்துவ நியதி.
முன்னெச்சரிக்கை அறிகுறிகள்
பொதுவாக வலிப்பு நோய் திடீரென்றுதான் வரும். என்றாலும், அது வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, ‘ஆரா’ (Aura) என்று அழைக்கப்படுகிற எச்சரிக்கை மணி அடிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அவை:
சிகிச்சை
இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 70 சதவிகிதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.
வலிப்பு உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமோ என அச்சப்படத் தேவையில்லை. மருந்து / மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்து, 3 ஆண்டுகள் வரை வலிப்பு வரவில்லை என்றால், மாத்திரைகளைச் சிறிது சிறிதாகக் குறைத்து, பின்னர் முழுவதுமாக நிறுத்திவிடலாம். மாத்திரைகளை நேரம் தவறி உட்கொள்வதோ, விட்டுவிட்டுச் சாப்பிடுவதோ, உடனடியாக நிறுத்துவதோ கூடாது. வலிப்புக்கான சிகிச்சையில் இதுதான் முக்கியம்.
2 முதல் 3 சதவிகித நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் ‘மைக்ரோ அறுவைச் சிகிச்சை’ தற்போது உள்ளது. இந்தச்சிகிச்சையை செய்து கொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும்.
கர்ப்பத்துக்கு முன்பும் பின்பும் கர்ப்பிணிகளை முறைப்படி பராமரிப்பது, மருத்துவமனையில் தேர்ச்சிபெற்ற மருத்துவரிடம் பிரசவம் மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வலிப்பு உண்டாவதைத் தடுக்கலாம். குழந்தைக்குக் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்வது, காய்ச்சல் வந்தால் உடனடியாக காய்ச்சலைக் குறைக்கும் மருந்துகளைக் கொடுப்பது, காய்ச்சல் கண்ட குழந்தையின் உடலில் ஈரத்துணி கொண்டு ஒத்தடம் கொடுப்பது, காய்ச்சல் உள்ள குழந்தையைக் குளிரூட்டப்பட்ட அறையில் படுக்க வைப்பது ஆகிய முதலுதவிகளை உடனே செய்வது போன்றவற்றால் காய்ச்சல் வலிப்பைத் தடுத்துவிடலாம். வலிப்பு மருந்துகளைத் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் குழந்தைக்கு மீண்டும் வலிப்பு வருவதைத் தவிர்த்துவிடலாம்.
பாதுகாப்பது எப்படி?
ஆதாரம் : தி-ஹிந்து தமிழ்