অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்

வெப்ப நோய்களை தடுக்கும் வழிகள்

நோக்கம்

வெயில் தலைநீட்ட தொடங்கியதுமே அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்து விட்டதுபோல் வெப்பம் நம்மை சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது.

வியர்க்குரு

கோடை காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை நாளங்கள் பாதிக்கப் பட்டு வியர்க்குரு வரும்.

வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.  இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம்.

வேனல்கட்டியும் புண்களும் சருமத்தின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் வியக்குருவில் அழுக்குபோல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா கிருமிகள் தொற்றி அந்த இடம் வீங்கிப் புண்ணாகிவிடும். இதுதான் வேனல்கட்டி. குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் கோடை காலத்தில் அடிக்கடி சருமத்தில் புண்கள் வந்து சீழ் பிடிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சுக் களிம்புகள்  பயன்படுத்தினால், இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கலாம். கிருமி நாசினி கொண்ட சோப்பை உபயோகித்தால், மீண்டும் இந்தப் புண்கள் வராது.

தேமல் தொற்று

உடலில் வியர்வை தேங்கும் பகுதிகளான மார்பு, முதுகு, அக்குள்களில் பூஞ்சைக் கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, மலாஸ்ஸிஜியா ஃபர்ஃபர் (Malassezia furfur) எனும் பூஞ்சைகள் சருமத்தில் தொற்றும்போது அரிப்புடன் கூடிய ‘தேமல்’ (Tinea Versicolar) தோன்றும். தேமலைக் குணப்படுத்தும் வெளிப்பூச்சுக் களிம்பு அல்லது பவுடரை தடவி வந்தால் குணமாகும். இதன் தாக்குதல் அதிகமாக இருந்தால் பூஞ்சை எதிர்ப்பு மாத்திரைகள் தேவைப்படும்.

படர்தாமரை

சரும மடிப்புகளிலும் உடல் மறைவிடங்களிலும் காற்றுப் புகாத உடல் பகுதிகளிலும் அக்குள், தொடையிடுக்கு போன்ற உராய்வுள்ள பகுதிகளிலும் டிரைக்கோபைட்டன், எபிடெர்மோபைட்டன் போன்ற காளான் கிருமிகள் தாக்கி, ‘படர்தாமரை’ (Tinea Corporis) எனும் சரும நோய் வரும். இரவு நேரத்தில் அரிப்பும் எரிச்சலும் அதிகத் தொல்லையைக் கொடுக்கும். கோடை வெப்பத்தால் உண்டாகும் வியர்வை, இந்தத் தொல்லைகளை அதிகப்படுத்தும்.

உள்ளாடைகளை தினமும் துவைத்துச் சுத்தமாகப் பயன்படுத்தவும். முக்கியமாக, குளித்து முடித்தபிறகு மீண்டும் பழைய ஆடைகளை உடுத்தக் கூடாது. மென்மையான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம். செயற்கை   இழைகளால் ஆன ஆடைகளும்  ஆகாது.

சருமம் கறுப்பாவது ஏன்?

சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்கு சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக்கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாகச் சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள ‘பி’ வகை புற ஊதாக்கதிர்கள் (B type Ultra violet rays) சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ. (DNA)க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காக சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.

தற்காப்பு நடவடிக்கைகள்

சருமம் கறுப்பாவதைத் தடுக்கக் கடுமையான வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலையக் கூடாது.

பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகிற பாதுகாப்பு. அவசியம் வெளியில் செல்ல வேண்டுமென்றால், எஸ்.பி.எஃப். 25 (Sun Protecting Factor 25) சன்ஸ்கிரீன் லோஷனை உடலின் வெளிப்பகுதிகளில் தடவிக்கொண்டு செல்லலாம்.

சருமத்தில் எரிச்சல்

அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக்கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்தவேளையில் CXCL5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகி அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இந்த பாதிப்புள்ளவர்கள், மருத்துவரை அணுகி வலி நிவாரணி மாத்திரைகள், எரிச்சலைக் குறைக்கும் களிம்புகளை பயன்படுத்திப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளலாம்.

‘வெப்பப் புண்’ (Sun Burn) என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பிரச்னையை எளிதில் தடுத்துவிடவும் முடியும். வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் ஏற்கனவே சொன்ன சன்ஸ்கிரீன் லோஷனை தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எளிய வழி. மேலும், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை ஆடைகளை அணிவதும் சருமத்துக்குப் பாதுகாப்பு தரும். கருப்புநிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக்கதிர்களை அதிகமாக உறிஞ்சி சரும எரிச்சலை அதிகப்படுத்திவிடும். ஆகவே, கோடையில் வெள்ளைநிற ஆடைகளை அணிவதே நல்லது.

சூரிய ஒளி ஒவ்வாமை

உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை என்று இருப்பதுபோல், ஒரு சிலருக்குச் சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். இவர்கள் வெயிலுக்குச் சென்றுவிட்டால் போதும், உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத்  தொடர்ந்து சருமம் உரியும்.

‘சோலார் அர்ட்டிகேரியா’ (Solar Urticaria) என்று அழைக்கப்படும் இந்தத் தொல்லையைத் தடுக்க வேண்டுமானால், கோடையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உடல் முழுவதையும் மறைக்கின்ற வகையில் ஆடை அணிய வேண்டும். ‘சன் பிளாக்’ லோஷன்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பிரச்னைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெற வேண்டியதும் முக்கியம்.

நீர்க்கடுப்பு

கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னை சரியாகும். அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்றோ, சிறுநீரகக்கல்லோ இருக்க வாய்ப்புள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.

வெப்பத் தளர்ச்சி

வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவைத் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு  உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு ‘வெப்பத் தளர்ச்சி’ (Heat Exhaustion)  என்று பெயர்.

வெப்ப மயக்கம்

 • நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்கிறவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்கள், உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் திடீரென மயக்கம் அடைவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது ‘வெப்ப மயக்க’த்தின் (Heat Syncope) விளைவு. இதற்குக் காரணம், வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தநாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி செய்து விடுகிறது. இதனால் இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்து ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது; மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காமல் உடனே தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது.
 • வெப்ப மயக்கத்துக்கு முதலுதவிவெப்பமயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரைக் குளிர்ச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள். மின்விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் (Intra Venous Fluids) செலுத்த வேண்டியதும் முக்கியம். ஆகையால் உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.

மணல்வாரி அம்மை

 • கோடை கால வெப்ப நோய்கள் பெரியவர்களைவிட குழந்தைகளைத்தான் எளிதில் பாதித்துவிடுகிறது. மணல்வாரி அம்மை அவற்றில் குறிப்பிடத்தக்கது. மீசில்ஸ் எனும் வைரஸ் கிருமிகளால் இது வருகிறது. இந்தக் கிருமிகள் கோடை காலத்தில் அதிக வீரியத்துடன் செயலாற்றும். முதலில் காய்ச்சல், வறட்டு இருமலில் தொடங்கும். மூக்கில் நீர் வடியும். தொடர்ந்து குழந்தையின் முகமும் கண்களும் சிவந்துவிடும். முகம், மார்பு, வயிறு, முதுகு, தொடை ஆகிய பகுதிகளில் மணலை அள்ளித் தெளித்ததுபோல் இளஞ்சிவப்பு நிறத்தில் சின்னச் சின்ன தடிப்புகள் தோன்றும்.
 • இவற்றின் மீது காலமைன் லோஷனை தடவி வர, 10 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இந்தக் குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, வெல்லத்தில் தயாரித்த ஜவ்வரிசிக் கஞ்சி, பால், மோர், தண்ணீர், இளநீர், பழச்சாறுகள் உள்ளிட்ட நீராகாரங்களை நிறைய தர வேண்டும். வீட்டைச் சுத்தமாகப் பராமரித்துக் குழந்தைக்கு நிமோனியா எனும் நுரையீரல் தொற்று வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

சின்னம்மை

 • இது வேரிசெல்லா ஜாஸ்டர் (Varicella zoster) எனும் வைரஸ் கிருமியால் வருகிறது. கோடையில் இந்தக் கிருமி அதிக ஆற்றலுடன் செயல்படுகிறது. மாசடைந்த காற்று வழியாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. முதலில் கடுமையான காய்ச்சலும் உடல்வலியும் ஏற்படும். உடல் முழுவதும் அரிக்கும், அதன் பிறகு நீர் கோர்த்த கொப்புளங்கள் தோன்றும்.
 • இது குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லோரையும் தாக்கும். நோயாளியைத் தனியாக வைத்திருந்தால் மற்றவர்களுக்கு இது பரவுவதைத் தடுக்கலாம். இதன் வீரியத்தைக் குறைக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்துவிட்டால், மற்றவர்கள் உடனே தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. இந்த நோயுள்ளவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு வகைகளையும், ஆவியில் வேகவைத்த உணவு வகைகளையும், நீர்ச்சத்து மிக்க பழங்களையும் அடிக்கடி தர வேண்டும்.
 • வயிற்றுப்போக்கும் சீதபேதியும் கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் விரைவில் வளரும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்குக் கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.
 • ஆகையால் கோடை காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விடவும். வெளியில் வைக்கப்படும் உணவுகள் மீது ஈக்கள் வராமல் மூடிப் பாதுகாக்கவும். தண்ணீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கின் ஆரம்பநிலையிலேயே எலெக்ட்ரால் போன்ற பவுடர்களை தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.

கோடையை வெல்வது எப்படி?

 • 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர் மற்றும் வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதைவிட இளநீர், மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்ஸி ஆகிய இயற்கை பானங்களை குடிக்கவும். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
 • தர்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ அடிக்கடி சாப்பிடுங்கள். கோடையில் வெளியில் செல்லும்போது குடையோடுதான் செல்ல வேண்டும். இயன்றவரை நிழலில் செல்வது நல்லது. குழந்தைகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். கண்களுக்கு சூரியக்கண்ணாடியை (Sun glass) அணியலாம்.
 • கோடையில் காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள், அசைவ உணவுகள் ஆகியவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் குறைத்துக் கொள்ளுங்கள். இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கம்பங்கூழ், வெங்காயப் பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக் கீரை, பீட்ரூட், கேரட், முள்ளங்கி, பாகல், தக்காளி ஆகியவை சிறந்த கோடை உணவுகள்.
 • இவற்றை அதிகப்படுத்துங்கள். வெப்ப மயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரை குளிர்ச்சியான இடத்துக்கு அப்புறப் படுத்துங்கள்.

ஆதாரம் : தினகரன் நாளிதழ்© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate