பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கருப்பைத்திசுக்கட்டி

கருப்பைத்திசுக்கட்டி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

கருப்பைக்கு உள்ளும் சுற்றியும் வளரும் புற்று அல்லாத கட்டியே கருப்பைத்திசுக்கட்டி என அழைக்கப்படுகிறது. இது கருப்பைத் தசைக்கட்டி என்றும் சில சமயம் அழைக்கப்படும். கருப்பைச் சுவரின் உள்ளும் புறமும் வளரும் உயிரணுக்கள் மற்றும் பிற திசுக்களால் கருப்பைத்திசுக்கட்டி உருவாகிறது. இதன் காரணம் தெரியவில்லை. அதிக எடையும் உடல் பருமனுமே ஆபத்துக் காரணிகள். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களிடம் பெரும்பாலும் இது காணப்படுகிறது. அவை கருப்பையின் எந்த இடத்திலும் வளரலாம். இடத்தைப் பொறுத்துப் பெயர் பெறுகிறது.

 • அகச்சுவர் கருப்பைத்திசுக்கட்டி: இவ்வகை, கருப்பைத் திசுக்களுக்குள் வளருகிறது. இது வளர மிகவும் பொதுவான இடம் இதுவே.
 • நிணநீர்ச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பை வெளிச்சுவரில் இருந்து இடுப்புப் பகுதிக்குள் வளருகின்றது.
 • சளிச்சவ்வடி கருப்பைத்திசுக்கட்டி: இது பொதுவாக கருப்பையின் உட்சுவரில் இருந்து நடுவை நோக்கிக் காணப்படுகிறது.
 • தனிக்காம்பு கருப்பைத்திசுக்கட்டி: இது கருப்பையின் வெளிச்சுவரில் இருந்து வளர்ந்து ஒரு குறுகிய தனிக்காம்பில் இணைந்துள்ளது.

நோயறிகுறிகள்

கருப்பைத்திசுக்கட்டி உள்ள பல பெண்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால் அவற்றில் அடங்குவன:

 • அதிக, வலியோடு கூடிய மாதவிடாய் அல்லது மாதவிடாய்களுக்கு இடையே உதிரப்போக்கு
 • கீழ் வயிறு நிறைந்திருப்பது போல் உணர்வு
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
 • உடலுறவின் போது வலி
 • கீழ் முதுகு வலி
 • மலட்டுத்தன்மை, பலதடவை கருக்கலைவு அல்லது முன்கூட்டியே குழந்தை பிறத்தல் போன்ற இனப்பெருக்க பிரச்சினைகள்

காரணங்கள்

மென்மையான தசையணுக்களின் மிகை வளர்ச்சியே கருப்பைத்திசுக்கட்டி. கருப்பை பெரும்பாலும் மென்மையான தசைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை:

 • மரபியல் காரணமாக இருக்கலாம்
 • முட்டைப்பையில் உருவாகும் பெண் இயக்குநீரால் கருப்பைத்திசுக்கட்டி பாதிப்படைகிறது. இந்நீர் அதிகமாகும்போது கருப்பைத்திசுக்கட்டி ஊதுகிறது; உதாரணமாகக் கர்ப்பகாலத்தில். மாதவிடாய் நின்ற பின் பெண் இயக்குநீர் குறைவடையும் போது கட்டி சுருங்குகிறது.

நோய் கண்டறிதல்

உடல் பரிசோதனை: மருத்துவர் உள்ளாய்வு (கருப்பை) நடத்தும் போது கருப்பைத்திசுக் கட்டியைக் கண்டறியலாம்.

கருப்பை ஊடுறுவல் கேளா ஒலி: கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய இச்சோதனை சிலசமயம் பயன்படுத்தப்படுகிறது. இது வலியற்ற சோதனை. கருப்பைக்குள் ஒரு சிறு கருவி நுழைக்கப்படுகிறது. ஒலி அலைகள் மூலம் கருப்பையின் பிம்பம் தொலைக்காட்சி திரையில் உருவாக்கப்படுகிறது.

அகநோக்கு அறுவை: இம்முறையில் புகைப்படக் கருவி இணைக்கப்பட்டுள்ள குழாய் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வயிறு அல்லது இடுப்பின் உட்பகுதி ஒரு தொலைக்காட்சித் திரையில் பிம்பமாக மாற்றப்படுகிறது. அகநோக்குக் கருவி வளையும் அல்லது விறைப்பானதாக இருக்கலாம். ஆனால் கருப்பைத்திசுக்கட்டியைக் கண்டறிய விறைப்பான ஒன்று பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

துல்லியமாகக் கண்டறிய மருத்துவரை அணுகவும்.

நோய் மேலாண்மை

அதிக மாதவிடாய்க்கான மருந்துகள்:

 • ஒரு நாளைக்கு 3-4 முறை டிரானெக்சாமிக் அமிலம் பரிந்துரைக்கப்படுகிறது. கருப்பைக்குள் உதிர உறைவு உடைவதை இது குறைக்கிறது.
 • இபுபுரூபன் மற்றும் மெஃபெனாமிக் அமிலம் போன்ற எதிர்-அழற்சி மருந்துகள். இவை மாதவிடாய் வலியையும் குறைக்கும். மாதவிடாயின் போது சில நாட்கள் இவற்றை எடுக்கலாம். கருப்பை படலத்தில் உள்ள வேதிப்பொருளின் (புரோஸ்ட்டோகிளாண்டின்) அளவை இவை கட்டுப்படுத்தும். புரோஸ்ட்டோகிளாண்டின் அதிக வலியுள்ள மாதவிடாயை உண்டாக்குகிறது.

கருப்பைத்திசுக்கட்டியைச் சுருக்கும் மருந்துகள்: கொனடொடிராபின் (gonadotrophin) வெளிவிடும் இயக்குநீர்க்கு ஒத்த மருந்து கொடுக்கப்படுகிறது (GnRH). இது ஒரு இயக்குநீர் மருந்து. இது உடலில் பெண்ணீர் அளவைக் கட்டுப்படுத்துகிறது. பெண்ணீர் அளவு குறையும் போது கருப்பைத்திசுக்கட்டி சுருங்குகிறது. ஆயினும் பெண்ணீர் அளவு குறையும்போது மாதவிடாய் நிற்கும் அறிகுறிகள் தென்படும் (வெப்பச் சிவப்பு போல). இம்மருந்துகள் எலும்புப்புரை நோய் அபாயத்தைக் கூட்டும். இதனால் இந்த மருத்துவம் அதிக பட்சம் ஆறு மாதத்திற்கே கொடுக்கப்படுகிறது. கோஸ்ரெலின் (goserelin- eg Zoladex®) அல்லது லெப்ரோரெலின் அசட்டேட் (eg Prostap® SR) போன்ற ஒத்தமருந்துகள் பொதுவாக அறுவை மருத்துவத்திற்கு முன் 3-4 மாதங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது கருப்பைத்திசுக்கட்டியை எளிதாக அகற்ற உதவும். மாதவிடாய் நிற்கும் போது உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைக்க குறைந்த அளவு இயக்கு நீர் மாற்றுசிகிச்சை (HRT) மருந்துகளும் அளிக்கப்படுகின்றன.

புது மருந்து சிகிச்சை சோதனைகள்: யூலிப்ரிஸ்டல் அசெட்டேட் என்ற மருந்து (UPA) ஆராய்ச்சியின் தொடக்க நிலைகளில் நம்பிக்கை அளித்துள்ளது. தற்போது இது அவசரகால கருத்தடை மருந்தாகப் பயன்படுகிறது. இது இயக்குநீர் புரோகெஸ்ட்டோஜெனின் விளைவுகளைத் தடுக்கிறது. இந்த இயக்குநீரே கருப்பைத்திசுக் கட்டி வளர்ச்சியில் ஒரு பங்கை வகிப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் இம்மருந்து கருப்பைத்திசுக் கட்டியைச் சுருக்க உதவும் என்றும் கருதப்படுகிறது. ஒர் ஆய்வு முடிவு இதை உறுதிப்படுத்தியுள்ளது. பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படவில்லை. இதனை உறுதிப்படுத்த பெரிய அளவில் மருத்துவ மனை சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

அறுவை மருத்துவ முறைகள்: கருப்பைத்திசுக் கட்டியை அகற்ற பல அறுவை மருத்துவ முறைகள் உள்ளன.

கருப்பை அகற்றல்: இதுவே கருப்பைத்திசுக் கட்டிக்கு பரவலானதும் மரபானதுமான முறை. இதன் மூலம் கருப்பை அகற்றப்படுகிறது.

கருப்பைத்திசுக் கட்டி அகற்றல்: எதிர்காலத்தில் குழந்தைப் பேறு வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு இதுவே மாற்று முறை. இதில் கருப்பைத்திசுக் கட்டி அகற்றப்பட்டு கருப்பை அப்படியே விடப்படும். ஆனால் இம்முறை எல்லா நோயாளிகளுக்கும் சாத்தியமானதில்லை.

இடமகல் கருப்பை அகப்படல நீக்கம்: இதில் கருப்பையின் அகப்படலம் அகற்றப்படுகிறது. இது பல முறைகளில் செய்யப்படுகிறது. உதாரணமாக, லேசர் ஆற்றல், சூடாக்கப்பட்ட கம்பி வளையம், அல்லது நுண்ணலை வெப்பமூட்டல். பொதுவாக இம்முறை கருப்பையின் உட்புற படலத்துக்கு அருகில் இருக்கும் கருப்பைத் திசுக் கட்டிகளுக்கே பரிந்துரைக்கப்படுகிறது.

தேசிய சுகாதார இணைய தளம் ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களையே அளிக்கிறது. எந்த ஒரு மருத்துவத்துக்கும் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.

சிக்கல்கள்

பெரிய கருப்பைத் திசுக் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து சிக்கல்கள் உண்டாகின்றன. கீழ்க்காணும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்:

கர்ப்ப காலத்தில்: கர்ப்ப காலத்தில் பெண்ணியக்க நீரின் அளவு இயல்பாக இருப்பதை விட ஐந்து மடங்கு அதிகமாகக் கூடும். கூடுதல் பெண்ணியக்க நீர் அளவு கருப்பைத்திசுக்கட்டி உருவாகக் காரணம் என்று நம்பப்படுவதால் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்சினைகளை உருவாக்குவது மட்டுமன்றி குழந்தைப் பேற்றிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மலட்டுத்தன்மை: கருப்பைத் திசுக் கட்டி பெரிதாக இருந்தால் மலட்டுத்தனமை ஏற்படலாம். சூலுற்ற முட்டை கருப்பைச் சுவரில் பதியம் ஆவதைப் பெரிய கட்டி தடுக்கலாம். ஆனால் இது அபூர்வமானதே.

ஆதாரம் : தேசிய சுகாதார இணைய தளம்

2.97368421053
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top