பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / கர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்

கர்ப்பிணிப் பெண்கள் கவனிக்க வேண்டி குறிப்புகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. கரு உருவாகி கர்ப்பப்பையில் நிலைக்கும் காலம் இது. இந்தக் காலத்தில் ஏற்படும் வாந்தியினால் திடமான உணவைச் சாப்பிடவே பிடிக்காது. சாப்பிட ஆசை இருந்தாலும் வாய் ஒத்துழைக்காது. ஆனால், அதற்காகச் சாப்பிடாமலும் இருக்கக்கூடாது. வாந்தி வரும்போது சாப்பிடாமல், சிறிது நேரம் கழித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சுலபமாக, செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறுகிய இடைவெளியில் பழம், காய்கறி சாலட், சத்து மாவுக் கஞ்சி என்று அடிக்கடி சாப்பிடுகையில் கொஞ்சம் வாந்தி எடுத்தாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் மிஞ்சி இருக்கும். முதல் மூன்று மாதங்களில் நோய்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வரவிடாமல் தவிர்ப்பது மிக முக்கியம்.

தொற்று நோய்

காற்று, நீர் மூலமாக நோய்க்கிருமிகள் அதிக அளவில் பரவும். எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீரை அருந்த வேண்டும். போதிய அளவு நீர்ச்சத்து உடலில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். நோய்க் கிருமித் தொற்று எந்த வகையிலும் நம்மை அணுகாத வகையில் பாதுகாப்பாக இருப்பது அவசியம். இதற்காக, வளர்ப்புப் பிராணிகள் அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும். செல்லப் பிராணிகளிடம் இருந்து தொற்று நோய் ஏற்பட்டுவிட்டால் அது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்குக் கெடுதல். வைரல் கிருமியால் அலர்ஜி, எரிச்சல், காய்ச்சல் வரலாம். தொற்று ஏற்பட்டுவிட்டால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

தாய்மையின் முதல் மூன்று மாதங்களில் இருமல், சளி வராமல் உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மக்கள் அதிக அளவில் கூடும், திரையரங்கம், மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது. கூட்டமான இடங்களில் மற்றவர்கள் மூச்சுக்காற்று மூலம் நோய்த் தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. பொதுவாகக் கர்ப்பக் காலத்தில், உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும். இந்நிலையில் வெளியில் இருந்து நோய்க்கிருமி தாக்கிவிட்டால் உடனடி பாதிப்புகள் ஏற்படும். அதனால் மிகுந்த கவனம் தேவை.

சிறுநீர்ப் பாதைக் கிருமித் தொற்று (யூரினரி இன்பெகஷன்)

சிறுநீர் வருவதுபோல இருந்தால் அடக்கி வைக்கக்கூடாது. அடி வயிற்றில் அழுத்தம் ஏற்படுவதால், மிகவும் தொந்தரவாக இருக்கும். பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்த நேர்ந்தால், தண்ணீர் நிறைய ஊற்றிவிட்ட பின்னரே பயன்படுத்தவேண்டும். இப்படிச் செய்வதன்மூலம் சிறுநீர்ப்பாதைக் கிருமித் தொற்றைத் தவிர்க்கலாம்.

வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், வைரல் தொற்றுகள்

சுத்தமான இடத்தில் சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும். கூடுமானவரையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே சாப்பிட வேண்டும். வெளி உணவுகளைச் சாப்பிடுகையில் ஃபுட் பாய்ஸன் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க பாதுகாப்பாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை

 • முதல் மூன்று மாதங்களில் உடலையும் மனதையும் தேவை இல்லாமல் வருத்திக் கொள்ளக்கூடாது.
 • வாந்தி வருவதைத் தவிர்க்க அடிக்கடி சிறிய இடைவெளிகளில் சாப்பிட வேண்டும்.
 • தொற்று நோய்த் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 • தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
 • மிகவும் சோர்வு ஏற்படுத்தக்கூடிய வேலைகளைச் செய்ய வேண்டாம்.
 • தாயின் கவனம் முழுக்க கருவில் வளரும் தன் குழந்தையின் மீது இருப்பது நலம்.
 • இரவுப் பணி செய்பவர்கள், பணி நேரத்தை அவர்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்வது நலம். முதல் மூன்று மாதங்கள் மிக முக்கியமானவை. இந்த நேரத்தில் எல்லாவிதத்திலும் விழிப்பு உணர்வுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் தாய் இருக்க வேண்டும்.
 • சளி, காய்ச்சல் என ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மகப்பேறுமருத்துவர் அல்லாமல் பொது மருத்துவரிடம் காண்பிக்க நேர்கையில், தான் தாய்மை அடைந்திருப்பதாகச் சொல்ல வேண்டும். அந்தப் பொது மருத்துவர் அதற்கேற்றபடியான மருந்துகளைப் பரிந்துரை செய்வார்.
 • நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.
 • முதல் மூன்று மாதத் தாய்மையில் கம்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்வது நல்லது அல்ல. சேரில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி சிறிது தூரம் நடந்து வர வேண்டும். கனிப்பொறியில் இருந்து வெளிப்படும் கதிர்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது இல்லை.
 • வலியோ, லேசாக ரத்தக் கசிவு அல்லது ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகவேண்டும். லேசாகத்தானே இருக்கிறது என்று அலட்சியப்படுத்திவிடக் கூடாது.

மாத்திரைகள்

கர்ப்பக் காலத்தில் தேவையற்ற மாத்திரைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், ஆஸ்துமா, அலர்ஜி, தைராய்டு போன்ற பாதிப்பு இருந்து, அதற்கான மருந்துகளை எடுப்பவராக இருந்தால், முதற்கட்ட பரிசோதனையின் போதே மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். அதற்கு ஏற்றபடி அவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் அவள் தாயாகும் தருணம் தான். தாய்மை அடைந்திருக்கும் வேளையில் ஒரு பெண் உடல் அளவிலும் மனதிலும் ஆரோக்கியமாக இருந்தால் தான் பிறக்கும் குழந்தை குறையின்றிப்பிறக்கும். கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்று ஸ்கேன் மூலம் பார்க்கும் மருத்துவ முன்னேற்றம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய வரம்.

தாயின் வயிற்றில் கரு உருவாகிய முதல் மூன்று மாதங்கள் ‘ஆர்கனோ ஜெனிஸஸ்’ என்று மருத்துவரீதியாக சொல்லப்படும் காலகட்டம். அதாவது தாயின் கருப்பையில் குழந்தையின் எல்லா உறுப்புக்களும் உருவாகிக் கொண்டிருக்கும் காலகட்டம் அது. முதல் மூன்று மாதங்களில், தேவையற்ற மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய், ஆஸ்துமா, அலர்ஜி, தைராய்டு போன்ற பாதிப்பு இருந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், முதற்கட்ட பரிசோதனையின் போதே தங்களின் மருத்துவரிடம் எதற்காக மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லிவிட வேண்டும்.

ஸ்கேன்

8 லிருந்து 9 வாரத்திற்குள் இருக்கும் போது முதல் ஸ்கேன் எடுக்கலாம். இதை ‘எர்லி ஸ்கேன்’ அல்லது ‘டேட்டிங் ஸ்கேன்’ என்பர். இது ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிக்கும். குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா, இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க 8 முதல் 10 வாரங்களில் முதலில் ஸ்கேன் எடுக்க வேண்டும். குழந்தையின் மூளை வளர்ச்சி, முதுகுத் தண்டு வளர்ச்சி, மற்றும் நரம்பு மண்டலம் சரியாக உருவாகி இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க மூன்றாவது மாதத்தில் ஒரு ஸ்கேன் எடுக்கப்படும்.

மார்கர்ஸ்

பின்னால் வரக்கூடிய பிரச்னைகளை முன்னரே கண்டறிவதை ‘மார்க்கர்ஸ்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இதனை அறிந்து கொள்ள குழந்தையின் கழுத்துப் புறத்தில் சேரும் நீரின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் ‘ஸ்கின் போல்ட் திக்னெஸ்’. இருதயம் சம்மந்தப்பட்டவை, ரத்த ஓட்டம், இதில் ஏற்படும் மாறுதல்கள் எல்லாமே மார்க்கரில் தெரிந்துவிடும். இதன் மூலம் குழந்தைக்கு டவுன் சின்ட்ரோம் என்ற பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதித்து முடிவு செய்துவிட முடியும்.

அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன்

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் என்பது ஒலி அலைகளை பயன்படுத்தி கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் குழந்தையின் உருவத்தை கம்ப்யூட்டரின் திரையில் உருவாக்குவது. இது குழந்தை இருக்கும் நிலை மற்றும் அதன் இயக்கத்தை காட்டுகிறது. இந்த ஸ்கேனின் முக்கியமான நோக்கமே குழந்தை சரியாக வளர்கிறதா என்பதை கண்ட‌றிவது தான்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுப்பதால் ஆபத்து உண்டா என்று பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஸ்கேன் எடுக்கையில் வயிற்றின் மீது அழுத்தத்தை உணர்வதைத் தவிர வேறு எவ்வித பாதிப்பும் இருக்காது. இந்த ஸ்கேனை எப்போது எடுக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் பரிந்துரைப்பார்கள். இது கர்ப்பம் எந்த மாதத்தில் இருக்கிறது என்பதைப் பொறுத்து இதன் பயன்களைச் சொல்லலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனை பயன்படுத்தி கீழ்கண்டவற்றை தெரிந்து கொள்ளலாம்:

குழந்தையை அளவிடுவதன் மூலம் பிரசவ தேதியை கணக்கிட முடியும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, அடிவயிற்றில் வலி, ரத்தக்கசிவு, போன்றவை இருந்தால் இந்த ஸ்கேனில் தெரிந்துவிடும்.

கருப்பைக்கு உள்ளே அல்லது வெளியே குழந்தை வளர்கிறதா என்பதை 8 & 9 வாரத்தில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரிந்துவிடும்.

 • கர்ப்பத்தில் இருப்பது ஒரு குழந்தை தானா? அல்லது வேறு ஏதேனுமா? என்பதை சோதிக்க முடியும்.
 • பின்னால் வரக் கூடிய பிரச்னைகள் முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.
 • அமினோ திரவங்களின் அளவையும், பிளசன்ட்டாவையும் அளக்க முடியும்.
 • அந்த வாரத்துக்கான வளர்ச்சியுடன், அதற்கான தேதியில் சரியான வளர்ச்சி இருக்கிறதா?
 • குழந்தைக்கு இதயத் துடிப்பு (பீடல் ஹார்ட்) இருக்கிறதா?
 • தொடர்ந்து ஸ்கேன் எடுப்பதன் மூலம் குழந்தை வளரும் வேகத்தை கண்டறியலாம். மேலும் லைஃவ் ப்ரெக்னென்சியாக இருக்கிறதா என்பதை கண்டறியமுடியும்

இப்படி அனைத்து பரிசோதனைக்குப் பிறகும் பிரச்னை ஏதேனும் உணரப் பட்டால்,  மேற்கொண்டு சில பரிசோதனைகள் செய்து அதன் முடிவில், டவுன் சின்ட்ரோம் உள்ளதா என்று 95 சதவீதம் சொல்லி விடலாம்.  தாய்க்கு குறைபாடுள்ள குழந்தைப் பற்றிய தகவலை சொல்லி அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்தால் குழந்தைப் பிறப்புக்கான சாதக பாதக‌ங்களை சொல்லி புரிய வைக்கவேண்டும்.

11 & 14 வாரத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேன்

இதை ‘ஜெஸ்டேஷனல் ஏஜ்’ என்கிறார்கள் மருத்துவர்கள். நிச்சயமாக கர்ப்பமான அனைவருக்குமே இந்த ஸ்கேன் எடுக்கப்பட வேண்டும். குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது, மிகப் பெரிய பிரச்னை ஏதேனும் இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். இதில் மரபணு குறைபாடுகள் உள்ளதா என்று ஸ்கேனில் பார்க்கப்படுகிறது

20வது வாரத்தின் போது எடுக்கப்படும் ஸ்கேன் குழந்தை சரியாக வளர்கிறதா என்பதைக் காட்டும்.

சில சமயங்களில் மேலும் சில ஸ்கேன்கள் எடுக்கப்படலாம். ஏதாவது வலி இருந்தாலோ அல்லது கர்ப்பத்தின் ஆரம்பத்தில் இரத்தக் கசிவு இருந்தாலோ ஆறாவது அல்லது ஏழாவது வாரத்தில் ஸ்கேன் எடுக்கலாம்.

பெண்ணின் முந்தைய பிரசவத்தின் போது பிறந்த குழந்தை சிறியதாக இருந்தாலோ அல்லது தற்போது இரட்டைக் குழந்தையாக இருந்தாலோ குழந்தையின் வளர்ச்சியை அறிய கடைசி மூன்று மாதங்களில் மேலும் சில ஸ்கேன்களை எடுக்கும்படி டாக்டர்கள் சொல்லலாம்.

கருவுற்ற பெண்ணுக்கு நீரழிவு நோய் இருந்தாலும் மேலும் சில ஸ்கேன்கள் எடுக்க வேண்டியிருக்கும்.

குழந்தையின் உருவம் சராசரியைவிட பெரிதாக இருந்தால் அதன் வளர்ச்சியை அறிய மேலும் சில ஸ்கேன்களை எடுக்கும்படி டாக்டர் கூறலாம்.

இத்தகைய ஸ்கேன்கள், கர்ப்பத்தைப் பற்றிய பயனுள்ள, சரியான தகவல்களைத் தரும்.

குழந்தைக்கு ஏதாவது தீவிரமான மருத்துவப் பிரச்னை இருக்குமெனில் இது பற்றி தாய்க்கும் குடும்பத்துக்கும் முடிவெடுக்க உங்களுக்கு நேரம் தேவைப்படும். தேவையென்றால் கர்ப்பத்தை கலைத்து விடலாம் அல்லது மருத்துவ பிரச்னைகள் கொண்ட, சிறப்பான கவனம் தேவைப்படும் குழந்தையை பெற்றுக்கொள்ளவும் தயாராகலாம். சில சமயங்களில் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளலாம்

ஸ்கேனைப் பொருத்தவரை வரும் முன் காப்போம் என்பது தான் அதற்கான இலக்கணம். ஆனால் எக்ஸ் ரே அப்படியல்ல. கர்ப்பமானவர்கள் எக்ஸ் ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிலிருக்கும் கதிரியக்கம் (ரேடியேஷன்) கருவிலிருக்கும் குழந்தைக்கு மிகவும் கெடுதல். தவிர்க்க முடியாத வேளையில் எக்ஸ் ரே எடுக்கப் பட வேண்டும் என்ற சூழலில் அப்டாமினல் ஷீல்டிங் வைத்து எடுக்கலாம். பல் வலி ஏற்பட்டு அதற்கான எக்ஸ் ரே என்றால் பரவாயில்லை, அதுவும் கூட பல் மருத்துவரிடம் கர்ப்பம் என்பதை தெரிவித்துவிட வேண்டும். ஆனால் விபத்து அல்லது வேறு எதாவது பிரச்னைக்கு எக்ஸ் ரே எடுத்தாக வேண்டிய சூழலில் டாக்டரின் அறிவுறுத்தலின்படி, வயிற்றுப் பகுதியை மூடி வைத்து எக்ஸ் ரே எடுப்பது மிகவும் முக்கியம்.

ஆதாரம் : தினமணி நாளிதழ்

3.04861111111
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top