பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழந்தை பிறப்பை திட்டமிடுதல்

குழந்தை பிறப்பை திட்டமிடுதல் குறித்த உபதகவல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

குழந்தைப் பிறப்பை திட்டமிடுதல் குறித்த தகவல்களை செயல்படுத்துவதற்கான அவசியம்

குழந்தைப் பிறப்பு, அதிகமான எண்ணிக்கையிலோ, இடைவெளி இல்லாமலோ, மிக இளம் வயதிலோ அல்லது 35 வயதுக்குப் பின்போ ஏற்பட்டால், அது பெண்களின் உடல் நலனை பெரிதும் பாதிக்கிறது. மேலும் அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இறந்து விடுவதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

குடும்பக்கட்டுப்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை முன்னேற்றச் செய்யும் சிறந்த வலிமைமிக்க வழிகளில் ஒன்றாகும். வளரும் நாடுகளில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான திருமணமான பெண்கள், தங்களின் கருத்தடைக்கான தேவைகள் சந்திக்கப்படாமல் உள்ளதாகக் கூறுகின்றனர். குடும்பக்கட்டுபாட்டுச் சேவையை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், கல்வியை உலகமயமாக்குதல் போன்றவை பிரசவ கால தாய்சேய் இறத்தல் மற்றும் ஊனமான குழந்தைகள் பிறப்பதை தடுக்க உதவும்.

முக்கிய குறிப்புகள்

ஒவ்வொரு குடும்பமும், சமூகமும், குழந்தைப் பிறப்புக்காலத்தைக்குறித்து அறிந்து கொள்ள வேண்டியவைகள் பின் வருமாறு

  1. 18 வயதிற்கு முன்போ அல்லது 35 வயதுக்கு பின்போ கருத்தருப்பரிது தாய், சேயின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை அதிகரிக்கிறது.
  2. தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொரு குழந்தைப் பிறப்புகளுக்குமிடையே குறைந்த பட்சம் இரண்டு வருட இடைவெளி இருப்பது மிக அவசியம்.
  3. நான்கு கருத்தரிப்பிற்குமேல் கருத்தரிப்போ, பிரசவமோ ஏற்படும் போது பெண்ணின் உடல்நிலை அதிக பாதிப்புக்குள்ளாகிறது.
  4. எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வது, எத்தனை குழந்தைகள், எவ்வளவு வருட இடைவெளியில் பெற்றுக்கொள்வது, எப்பொழுது குழந்தை பெறுவதை நிறுத்துவது போன்ற திட்டமிடுதலைக் குறித்த தகவல்களை சுகாதார மையம் மக்களுக்கு அளிக்கிறது. கருவுறுவதை தவிர்க்கின்ற பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளும் பல உள்ளன.
  5. குடும்பக்கட்டுபாடு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் உரிய பொறுப்பாகும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தின் மேன்மையைக் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும்.

குழந்தை பிறப்பை திட்டமிடுதல் குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு 1

18 வயதிற்கு முன்போ அல்லது 35 வயதுக்கு பின்போ கருத்தருப்பரிது தாய், சேயின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை அதிகரிக்கிறது.

ஒவ்வொரு வருடமும் சுமார் 515,000 பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகளால் இறக்கின்றனர். அவ்வாறு இறக்கும் ஒவ்வொரு பெண்ணைப்போல், மேலும் சுமார் 30 பெண்கள் உடலளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதுபோன்ற இறப்பக்களையும், ஆபத்தான பிரச்சினைகளையும், குடும்பக்கட்டுப்பாடு மூலம் தடுக்க முடியும்.

ஒரு பெண் குறைந்தபட்சம் 18 வயதுவரை, தான் கருவுறுதலைத் தள்ளிப்போடுவதால், பாதுகாப்பான கர்ப்பம் மற்றும் சுகமான பிரசவத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் எடைகுறைவான குழந்தைகள் பிறக்கின்ற அபாயத்தைக் குறைக்கிறது. இளம் வயதிலேயே திருமணம் நடத்திவைக்கப்படும் வழக்கமுடைய நாடுகளுக்கு இவை அனைத்தும் மிகமுக்கியமான ஒன்றாகும்.

ஒரு பெண் சுமார் 18 வயது அடைகிறவரை உடலளவில் குழந்தையை சுமக்கிறதற்கு தயாராகிறதில்லை. பெரியவர்களை விட இளம் வயதினருக்கு பிரசவம் கடினமானதும் ஆபத்து நிறைந்ததுமாக உள்ளது. இளம் தாய்க்குப் பிறக்கின்ற குழந்தைகள் முதல் வருடத்திலேயே இறந்துவிடுவதற்காண வாய்ப்புகள் அதிகம். எந்த அளவுக்கு தாயானவள் குறைவான வயதில் கருத்தரிக்கின்றாளோ அந்த அளவுக்கு தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து அதிகமாகிறது.

இளம் பெண்களுக்கு கருவுருவதைத் தள்ளிப்போடுவதற்கு சிறப்பான உதவிகள் தேவை. இளம் பெண்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிக இளவயதில் கருவுருவதால் ஏற்படுகின்ற ஆபத்தைக் குறித்தும், அவை எங்ஙனம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதைக்குறித்தும் அறிவுறுத்த வேண்டும். 35 வயதுக்குப்பிறகு கருத்தரித்தல் மற்றும் குழந்தைபிறப்பில் இருக்கின்ற ஆபத்து அதிகமாகிறது. நான்கு முறைக்குமேல் கருத்தரிப்போ/ பிரசவமோ ஏற்பட்ட 35 வயதிற்கும் அதிகமான ஒரு பெண், மீண்டும் கருத்தரித்தால்/பிரசவித்தால், அது அவளுடைய ஆரோக்கியத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் வெகுவாக பாதிக்கிறது.

தகவல் குறிப்பு - 2

தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு, ஒவ்வொரு குழந்தைப் பிறப்புகளுக்குமிடையே குறைந்த பட்சம் இரண்டு வருட இடைவெளி இருப்பது மிக அவசியம்.

ஒவ்வொரு குழந்தை பிறப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி இரண்டு வருடங்களுக்குள்ளாக இருந்தால், குழந்தை இறப்பதற்கான வாய்ப்பு சுமார் 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது.

இரண்டு வயதுக்குள்ளான குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது மற்றொரு குழந்தைப் பிறத்தல் ஆகும். முதல் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை வெகு சீக்கிரத்தில் நிறுத்துவேதாடு, இரண்டாம் குழந்தைக்குத் தேவையான உணவை ஆயத்தமாக்க தாயானவளுக்கு மிகக்குறைந்த காலமே உள்ளது. அவளால் மூத்த குழந்தைக்குத் தேவையான கவனிப்பையோ, அரவணைப்பையோ, குறிப்பாக மூத்த குழந்தையின் சுகவீன நேரங்களில் கூட கொடுக்க முடிகிறதில்லை. இதன் விளைவாக, இரண்டு வருட இடைவெளிக்குள்ளாக பிறக்கின்ற குழந்தைகள் பொதுவாக உடல், மன ரீதியாக நல்ல வளர்ச்சியை அடைவதில்லை.

கருத்தரிப்பு மற்றும் பிரசவத்திலிருந்து ஒரு பெண்ணின் உடல்நிலை மீண்டும் இயற்கை நிலையை அடைய சுமார் 2 வருடங்கள் தேவைப்படுகிறது. ஆகவே தொடர்ந்து குழந்தை பிறப்பதனால் தாயினுடைய ஆரோக்கியம் பாதிப்படைவதும் அதிகரிக்கிறது. மீண்டும் கருத்தரிக்கும் முன்பு ஒரு தாய்க்கு போதிய உடல்வலிமை, ஆரோக்கியம் மற்றும் நல்ல உணவு தேவை. குழந்தை பிறப்புகளுக்கிடையே இரண்டு வருட இடைவெளி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஆண்களும் அறிந்து கொள்வது மிக அவசியம். மேலும் அளவோடு கருத்தரிப்பது / குழந்தை பெற்றுக்கொள்வது முதலியன குடும்ப ஆரோக்கியம் பாதுகாக்கப்பட உதவியாக உள்ளது.

ஒரு தாய்க்கு முந்திய பிரசவத்திலிருந்து பூரண குணமடையும் முன் மீண்டும் கருத்தரித்தால், குறைமாதத்தில், எடை குறைவான குழந்தையைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு மிக அதிகம். சரியான எடையுடன் பிறக்கும் குழந்தைகளைவிட எடைகுறைவாக பிறக்கின்ற குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் குறைவாகவும், சுகவீனமடைகிற விகிதம் அதிகமாகவும், முதல் வருடத்திலே இறந்து விடுகின்ற வாய்ப்பு நான்கு மடங்கு அதிகமாகவும் காணப்படுகிறது.

தகவல் குறிப்பு - 3

நான்கு கருத்தரிப்பிற்குமேல் கருத்தரிப்போ, பிரசவமோ ஏற்படும் போது பெண்ணின் உடல்நிலை அதிக பாதிப்புக்குள்ளாகிறது.

திரும்பத் திரும்ப கருத்தரித்தல்/பிரசவித்தல், தாய் பாலூட்டல், குழந்தைகளை கவனித்தல் போன்றவைகளால் ஒரு பெண்ணின் உடல்நிலை மிக எளிதில் தளர்வுக்குள்ளாகிறது. நான்கு கருத்தரிப்புக்கு மேல், அதுவும் ஒவ்வொரு குழந்தைப்பிறப்புகளுக்குமிடையே இரண்டு வருடத்திற்கும் குறைவான இடைவெளியில் பிரசவித்த ஒரு பெண், அனீமியா (இரத்தேசாகை) மற்றும் ஹிமரேஜ் (இரததப்போக்கு) போன்ற ஆபத்தான உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்கிறாள். நான்கோ அதற்கு மேற்பட்ட கருத்தரித்தலைக் கொண்ட தாய்க்குப் பிறக்கின்ற குழந்தை இறப்பதற்கான ஆபத்து மிக அதிகம்.

தகவல் குறிப்பு - 4

எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வது, எத்தனை குழந்தைகள், எவ்வளவு வருட இடைவெளியில் பெற்றுக்கொள்வது, எப்பொழுது குழந்தை பெறுவதை நிறுத்துவது போன்ற திட்டமிடுதலைக் குறித்த தகவல்களை சுகாதார மையம் மக்களுக்கு அளிக்கிறது. கருவுறுவதை தவிர்க்கின்ற பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளும் பல உள்ளன.

நடைமுறைக்கு ஏற்ற, பாதுகாப்பான, சௌகரியமான, பலன் அளிக்கிற, செலவு குறைந்த குடும்பபக்கட்டுப்பாட்டு முறையைக்குறித்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்கு சுகாதார மையங்கள் அறிவுரை வழங்க வேண்டும். எல்லா கருத்தடைமுறைகளிலும் ஆணுறை மட்டுமே கருத்தரித்தல் மற்றும் எச்.ஐ.வி / எயிட்ஸ் போன்ற பாலியல் நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாக்கிறது. பிரசவித்த ஆறு மாதம் வரை, குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், ஒரு தாய் மீண்டும் கருத்தரித்தலை 98% தடுக்கிறது. ஆனால், இது குழந்தை ஆறு மாதம் ஆகும் வரை மட்டுமோ அல்லது பெண்ணின் மாதவிடாய் மறுபடியும் வரும் வரையோ அல்லது தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் ஒரு தாய்க்கு மட்டுமே பொருந்தும்.

தகவல் குறிப்பு -5

குடும்பக்கட்டுபாடு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் உரிய பொறுப்பாகும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்தின் மேன்மையைக் குறித்து அறிந்து கொள்வது அவசியமாகும்.

திட்டமிடாத கருவுருதலைத் தடுக்கும் பொறுப்பை கண்டிப்பாக ஆண்களும் பெண்களும் எடுத்தல் வேண்டும். குடும்பக்கட்டுபாடு முறைகள் பற்றிய தகவல்களை சுகாதார ஊழியரிடமிருந்து அறியும் வசதி இவர்களுக்கு தேவை. மருத்துவர், செவிலியர், ஆசிரியர், குடும்பக்கட்டுபாடு மருத்துவமனை, பெண்களுக்கான சேவை அமைப்புகள் போன்றவர்களிடமிருந்தும் இது பற்றிய தகவல் பெற இயலும்.

3.02985074627
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top