பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / கர்ப்ப சுகாதாரம் / பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை

பிரசவத்திற்கு பின் கவனத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பிரசவத்திற்கு பின் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்

பிரசவத்திற்கு பின் 50% உயிரிழப்புகள் நேரிடுவதை பரிசோதனைகள் தெரிவிக்கின்றது. பிரசவத்திற்குப் பின் 1 வார கால கட்டம் மிக முக்கியமானது. கர்ப்பபை, சிறுநீர்பை இவைகளில் தொற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஏற்படும் சூழ்நிலையில் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பிரசவத்திற்கு பின் காணப்படும் ஆபத்தான அறிகுறிகள்

 • வலிப்பு வருதல்
 • அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது
 • காய்ச்சல்
 • அடிவயிற்றில் வலி ஏற்படுவது
 • வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு
 • வலி வீக்கம் ஆகியவை காலிலோ அல்லது மார்பிலோ காணப்படுகிறது
 • சிறு நீர் கழிக்கும்போது வலி ஏற்படுவது
 • கண் இமை, நாக்கு, உள்ளளங்கை வெளிரி காணப்படுவது

பிரசவத்திற்கு பின் மருத்துவமனைக்கு செல்வது

பிரசவத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு செல்வது அவசியம். குழந்தை மற்றும் தாய் சரியாக உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்.

உணவு மற்றும் ஓய்வு

பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். இரும்புசத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வராமல் தடுக்க இயலும். பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். தானியங்கள், பால், கீரைவகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். சரியான அளவிற்கு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வேலைகளை தவிர்க்க வேண்டும்.

சுகாதாரம்

தினமும் இருமுறை குளிப்பதும் இயற்க்கை கழிப்பிற்கு பின் சோப் உபேயாகித்து கைகால்களை சுத்தம் செய்வதும் ரத்தப் போக்கு இருப்பின் சுத்தமான சானிடரி நாப்கின்களை உபேயாகப்படுத்துவதும் பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 4-6 மணி நேரங்களுக்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றிக் கொள்வதும் அவசியம். குழந்தையை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது பால் அளிக்கும் போதோ கைகளை சுத்தமாக கழுவி பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சேயின் நலத்தை காத்துக் கொள்ள முடியும்.

கருச்சிதைவு/ குறைப்பிரசவம்

கர்ப்பந்தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை. சில வேளைகளில் கர்ப்பகாலம் ஒன்பது மாதங்கள் நிறைவுபெறாமலேயே இடையிலே தானாக கலைகிறது. இதனை கருச்சிதைவு/குறைப்பிரசவம் (அ) தானாக எற்படும் கருச்சிதைவு என்று அழைக்கப்படுகிறது. கருச்சிதைவு பொதுவாக 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் மகப்பேறு காலங்களை இடையிலேயே அறுவைச்சிகிச்சையின் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை தூண்டுதலின் பேரில் செய்யப்படும் கருச்சிதைவு எனப்படுகிறது.

குறைப்பிரசவம்/கருச்சிதைவு (அ) தன்னிச்சையாக ஏற்படும் கருச்சிதைவு

கருவில் குழந்தை உயிர்வாழும் சாத்தியம் உள்ள போதும் ஏற்படும் கருச்சிதைவை குறைப்பிரசவம் என்பர். இது முதல் 12 வாரங்களில் ஏற்படுகிறது.

கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?

 • பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது, அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. எனவே கருச்சிதைவு என்பது மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பை தடுக்கும். மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் ஏற்படக்கூடும்.
 • சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையினை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பெல்லோப்பியன் டியூப் எனப்படும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது. அதே போன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இம்மாதிரி கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.

கருச்சிதைவுக்கான அடையாளங்கள்

கருச்சிதைவுக்கு இரண்டு முக்கிய அடையாளங்கள் உண்டு. ஒன்று பெண்குறியில் இரத்தப்போக்கு மற்றொன்று அடிவயிற்றில் ஏற்படும் வலி. இரத்தப் போக்கு முதலில் குறைவாக இருக்கும் பின் அதிகரிக்கும். பின்னர், வெகு விரைவாக இரத்தம் கட்டிகட்டியாக வெளிப்படும். கருச்சிதைவு, கர்ப்ப காலத்தின் ஆரம்ப நாட்களில் ஏற்படும்போது, வலி மற்றும் இரத்தப்போக்கு பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படுவது போல இருக்கும்.

முழுமையான கருச்சிதைவு

 • கருப்பையில் வளர்கின்ற கரு சிதைவடைந்து, அக்கரு மற்றும் அதனை சூழ்ந்துள்ள திசுக்களும் முழுவதுமாக பெண்குறியின் வழியாக வெளியேற்றப்படுவது முழுமையான கருச்சிதைவு எனப்படும். இப்படி முழுமையான கருச்சிதைவு எற்படும்போது, இரத்தப் போக்கு கருச்சிதைவுக்குப் பின் சில நாட்களில் நின்றுவிடுகிறது. இவ்வாறு கருச்சிதைவடைந்த பெண்கள், 2-4 வாரங்களுக்குக் கனமான பொருட்களைத் தூக்கக் கூடாது. இவர்கள் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மேலும் இந்நாட்களில் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முற்றுப் பெறாத கருச்சிதைவு

 • சிதைவுற்ற கருவின் சில பகுதி அல்லது ப்ளாசண்டாவின் ஒருபகுதி கருப்பையிலேயே தங்கியிருப்பதை முழுமையடையாத கருச்சிதைவு/முற்றுப் பெறாத கருச்சிதைவு என்பதாகும். இப்படிப்பட்ட முற்றுப்பெறாத கருச்சிதைவு என்பது 10 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் ஏற்படுகிறது. இந்த நிலையில் இரத்தப்போக்கு தொடர்ந்து இருக்கும். கருப்பையில் தங்கியுள்ள சிதைவுற்ற கரு, மிஞ்சியுள்ள இறந்த திசுக்கள் நோய் கண்டு, இதன் விளைவாக காய்ச்சல் மற்றும் அடிவயிற்றில் வலியினை தோற்றுவிக்கும். கருச்சிதைவு முழுமையற்ற நிலையில் காணப்படும்போது நன்கு பயிற்சி பெற்ற சுகாதார பணியாளரைக் கொண்டு எவ்வளவு விரைவாக எஞ்சியுள்ள திசுக்களை வெளிக்கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவாக சுத்தம் செய்ய வேண்டும்.
 • முற்றுப் பெறாத கருச்சிதைவினால் எற்படும் நோய்த்தொற்றினை சரியாக கவனிக்காவிட்டால் பெல்லோபியன் டியூபில் பாதிப்புகளை ஏற்படுத்தி பெண்ணானவள் கருவுறும் தன்மையை இழக்கச்செய்யும். இவ்வாறு முழுமைபெறாத கருச்சிதைவினால் ஏற்படும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் காணப்படின் அப்பெண் அவசியம் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். கருச்சிதைவுற்ற பெண்கள், குறிப்பாக முற்றுப் பெறாத கருச்சிதவுற்ற பெண்கள் அடுத்த குழந்தையைக் கருத்தரிக்க சில மாதங்கள் காத்திருத்தல் அவசியம். இந்நாட்களில் கருவுருவதைத் தடுக்க, கருத்தடை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

திரும்பத்திரும்ப ஏற்படும் கருச்சிதைவுகள்

சில பெண்களில் கருச்சிதைவானது திரும்பத்திரும்ப ஏற்படும். ஒன்று அல்லது இரண்டுமுறை ஆரம்பநிலையிலேயே கருச்சிதைவு ஏற்படின், கவலைப்பட வேண்டாம். ஆனால் மூன்றாவது அல்லது நான்காவது முறை இதுபோன்ற கருச்சிதைவு கர்ப்ப காலத்தின் பின்பகுதிகளில் ஏற்பட்டால் அப்பெண்ணானவள் மருத்துவ பரிசோதனைகளைச் செய்து அதற்கான காரணங்களை கண்டறிய வேண்டியது அவசியம்.

தூண்டுதலின் பேரில் கருச்சிதைவு அடையச்செய்தல்

சில நேரங்களில் கருவுற்ற பெண் தானாக முன்வந்து கருச்சிதைவு செய்து கொள்வதுண்டு. இதனை, கர்ப்பமுற்ற ஆரம்ப நாட்களிலேயே செய்ய வேண்டும். முதலில் கருவுற்ற பெண்ணிற்கு வலி ஏற்படாமல் இருக்க, வலியை குறைக்கக்கூடிய ஊசியினைப் போட வேண்டும். பின்னர் மருத்துவர் தகுந்த உபரணங்களைப் பெண்குறியின் வழியாகச் செலுத்தி கருப்பையிலுள்ள கருவினைச் சுத்தம் செய்வார். இவ்வகை அறுவைச்சிகிச்சை 15 நிமிடங்கள் வரை நடக்கும். இவ்வகை சிகிச்சை முறை, நன்கு பயிற்சி பெற்ற நபரால், தகுந்த உபகரணங்களைக் கொண்டு, சுத்தமான சூழலில் செய்தால் ஆபத்தானது அல்ல. இவ்வகை சிகிச்சைக்குப் பின், குளிர் ஜுரம், வயிற்று வலி, இடுப்பு வலி, ரத்தப் போக்கு அல்லது துர்நாற்றம் கலந்த வெள்ளைப் போக்கு ஏற்பட்டால், அப்பெண் உடனடியாக சிகிச்சைக்குச் செல்ல வேண்டும். கால தாமதம் மரணத்தை விளைவிக்கக் கூடும்.

சட்ட நிரூபணம்

தேசிய மக்கள் தொகை கொள்கை 2000 ல் கூறப்பட்ட மக்கள் தொகை நிலைப்படுத்தலுக்கான வழிமுறைகளை செயல்படுத்த சட்டங்கள் அவசியம். குறிப்பிட்ட நோக்கங்களுக்காய் இயற்றப்பட்ட இரண்டு சட்டங்கள் உள்ளன. அவைற்றைப் பற்றிய விளக்கம்.

கருவில் உள்ள குழந்தையினை ஸ்கேன் செய்து பரிசோதித்தறிவதை ஒழுங்குபடுத்தும் சட்டம்.

மேற்கூறிய சட்டம் மற்றும் விதிகள் வடிவமைக்கப்பட்டு 1996ஆம் ஆண்டு ஜனவரி மாத ஒன்றாம் தேதி (1.1.1996) லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய சட்டத்தின்படி கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளை மட்டும் ஆராய்ந்துணரலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கருவில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என் ஆராய்ந்துணர்வதை தடை செய்கிறது. இந்த சட்டத்தை மீறுவோறுக்கு தண்டனையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. த ப்ரிநேடல் டையக்னோஸ்டிக் டெக்னிக் (ரெகுலேஷன் மற்றும் ப்ரிவெண்டிங் ஆ ஃப் மிஸ்யூஸ்) ஆக்ட் என்பது கருவில் உள்ள வளரும் குழந்தை பெண்ணா என்பதனை கண்டறிந்து பெண்சிசு கொலை செய்வதை தடுத்து நிறுத்த வகை செய்யும் நடைமுறையில் உள்ள சட்டம்.

மெடிகல் டெர்மினேஷன் ஆஃப் ப்ரெக்னென்ஸி ஆக்ட்

மருத்துவமுறையின்படி கர்ப்பத்தினை குறித்த காலத்திற்கு முன்பே முடிவுக்குகொண்டு வருவதை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும்

கருச்சிதைவு ஏற்படுவதின் மூலம் ஏற்படும் உடற்நலக்குறைவு மற்றும் இறப்பு எண்ணிக்கை போன்றவற்றைக் கட்டுப்படுத்த மேற்கூறிய சட்டம் 1971 ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து (1.4.1972) ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர இந்தியாவின் அனைத்து பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 1976 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.

மருத்துவமுறைப்படி தாயின் தேகநிலை

தாயானவள் ஏதேனும் உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ (அ) மனநல பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ (அ) அவளுக்கு வேறு உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான சூழலில் கர்ப்பகாலத்தை தொடர்வதினால் உயிருக்கே ஆபத்து (அ) உடல் மற்றும் மன அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்ற சூழ்நிலையில், கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம்.

யூஜெனிக்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய் தொற்று, மருந்துகளை உட்கொள்ளுதல், எக்ஸ்ரே மற்றும் கதிர்வீச்சுகளால் பாதிக்கப்படுதல், இரத்த வகைகள் பொருந்தாத நிலையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் பைத்தியமான நிலையில், பிறக்கும் குழந்தைக்கு உடல்நலம் மற்றும் மனநலம் குன்றி பிறக்கும் என்ற ஆபத்தான நிலை ஏற்படும்போது கருச்சிதைவு முறையினை கைக்கொள்ளலாம்.

கர்ப்பம்

கருத்தடை உபகரணங்களை பயன்படுத்தியும் சில வேளைகளில் ஏற்படக்கூடிய கர்ப்பம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வேண்டுதலின் பேரில் கருச்சிதைவு அனுமதிக்கப்படுகிறது. தாயை பாதிக்கும் சமூக பொருளாதார சூழ்நிலைகளில் கருச்சிதைவு அனுமதிக்கப்படுகிறது.

மேற்கூறிய சட்டத்தின்படி, மருத்துவ முறைபடி கருச்சிதைவை, பதிவு பெற்ற, பிரசவ மற்றும் பெண்கள் நோய் பிரிவில் அனுபவம் வாய்ந்த, பரிந்துரைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் மாத்திரமே செய்ய வேண்டும். கர்ப்பம் 12 வாரங்களுக்கு உட்பட்டிருப்பின் ஒரு தனி மருத்துவ நிபுணர் மற்ற மருத்துவர்களின் ஆலோசனையின்றி கருச்சிதைவு செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் 12 வார காலங்களுக்கு மேற்பட்டிருப்பின், இரண்டு மருத்துவ நிபுணர்கள் ஒன்றுகூடி பேசி முடிவெடுத்த பின்னர், அவர்களுள் ஒருவர் கர்ப்ப காலத்தினை முடிவுக்குக் கொண்டு வரலாம். கர்ப்ப காலம் 20 வாரங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களாயிருக்கும் போது, கர்ப்ப காலத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய அவசரநிலை ஏற்படும்போது தனி ஒரு மருத்துவ நிபுணர் மற்ற எந்த மருத்துவரையும் கலந்தாலோசிக்காமலும் மற்றும் அங்கீகாரம் பெறாத மருத்துவமனையிலும் கருச்சிதைவு முறையினை செய்யலாம்.

பெண்களின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெறுவது அவசியம். ஒரு வேளை பெண்கள் வயதில் மைனராக இருந்தாலோ அல்லது மயக்கநிலையில் சுயநினைவற்றிருந்தாலோ அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமான நிலையிலிருந்தாலோ, பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்றுக்கொள்ளலாம். எம்.டி.பி ஆக்ட் 1971ன் படி கருச்சிதைவு செய்து கொள்ளும்போது இதனை ஒரு குறிப்பிட்ட நபரின் சொந்தப்பிரச்சினையாகப் பாவிக்கப்படுகிறது. கருச்சிதைவு செய்து கொண்ட பெண்களின் விவரம் இரகசியமாக காக்கப்பட வேண்டும்.

இப்படி ஒரு மருத்துவர், கருச்சிதைவு முறையினை கையாளும் போது, போதிய முன்னெச்சரிக்கை முறைகள் மற்றும் பராமரிப்பினை மேற்கொண்டால், கருச்சிதைவு செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளிலும் சட்ட நடவடிக்கைகளிலுமிருந்து பாதுகாக்கப்படுவார். ஆனால் விதிகள் மீறப்படும் போது மருத்துவர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.

கர்ப்பத்தினை எம்.டி.பி முறைப்படி மருத்துவ அடிப்படையிலும் மற்றும் யூஜெனிக் அடிப்படையிலும் முடிவுக்குக் கொண்டு வருவது தாய் மற்றும் பிள்ளைக்கு நல்லது. ஆனால் விரும்பத்தகாத, குறிப்பாக கர்ப்பத்தில் வளரும் பெண் குழந்தையை, கர்ப்பத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம் அழித்தல் என்பது ஒரு அநீதியான மற்றும் சமூக விரோதச் செயல். எனவே இதனை அனுமதிக்கக்கூடாது மாறாக தடை செய்யப்படவேண்டும். அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வது தாயின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. இது உடல்நலக்குன்றல் மற்றும் மரணத்தினை தோற்றுவிக்கும். எனவே பெண்களுக்கு இதனை விளக்கிக்கூறி பிற கருத்தடைமுறைகளை மேற்கொள்ளும் படி உற்சாகப்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு தனி அறை

முன்பெல்லாம் அப்பா அம்மா தனியாகவும் குழந்தைகள் பாட்டி, தாத்தாவுடன் படுப்பார்கள். ஆனால் இப்ப தனி குடும்பமாக இருப்பதால் குழந்தைகளை அப்பா, அம்மாவுடன் படுக்கும் சூழ்நிலை வந்துள்ளது. அப்படி ரூம்மில் ஒன்றாக படுக்கும் குழந்தையின் முன்பு பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும்..

2 வயது முதல் 13 வயது வரை இருக்கும் குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் மிகந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகள் மனதில் பார்க்கும் அனைத்து விஷயங்களும் மனதில் பதியும் நேரம். மனதில் ஏதாவது விஷயங்கள் பதிந்துவிட்டால் பெரியவர்கள் ஆனாலும் மனதினை விட்டு நீங்காது மனநலக் கோளாறுகள் வரலாம்

முடிந்த வரை சிறு வயதில் குழந்தையினை தொட்டிலில் போட்டு பழக வேண்டும். அப்பொழுது கூட கட்டிலின் அருகில் தொட்டியில்லாமல் இருப்பது நலம். சின்ன சின்ன சப்தங்கள் கூட இனம் புரியாத பயத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் தூங்காமல் இருக்கும் பொழுது கட்டாயமாக கணவர் மனைவி நெருக்கமாக இருக்கக்கூடாது. பார்க்ககூடாததை குழந்தைகள் பார்த்துவிட்டால் தாய் தந்தை மீது குழந்தைக்கு வெறுப்பு காட்ட தொடங்கும். அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் ஒருவித வெறுப்புடனே இருப்பதாக மனநல மருத்துவர் கூறுகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு திருமணத்தில் கூட நாட்டமில்லாமல் போகுமாம். அல்லது குழந்தைகளுக்கு வேறு விதமான பாதிப்புகள் கூட வரலாம். குழந்தைகள் பார்த்த காட்சி என்னவாக இருக்கும் என்று ஆராயுமாம். இந்த தேடலினால் அவர்கள் கெட்டழிந்த போய்விடவும் வாய்ப்புண்டு.

குழந்தையினை நாமே கெட்டுபோக வழி செய்யாமால் நாமும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம். அதுக்கு சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா அம்மாவுக்கு நடுவில் குழந்தையினை படுக்க வைத்துவிட்டு குழந்தை நன்றாக தூங்கிய பின்பு வேறு ரூம்மிலோ அல்லது அதே ரூம்மிலோ இல்லறத்தில் ஈடுபடலாம்.

5 வயதுக்கு மேல் வெளி நாடுகளில் இருக்கும் பழக்கம் போல் தனி அறையில் படுக்க வைப்பது நல்லது. முதல் கொஞ்ச நாட்களுக்கு கஷ்டமாக இருக்கும். போக போக பழகிவிடும். அவர்களை தனிமையில் படுக்க வைத்தாலும் உங்கள் மேல் பார்வையில் குழந்தையிருப்பது போல் பார்த்துக்கொள்ளவும்.

நோய்த்தடுப்பு

தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்துவிட்டது என்றால் அவ்வீட்டில் ஒரு 'மினி மெடிக்கல் ஷாப்' உருவாகிவிடுகிறது என்றே கூறலாம். காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.

குழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக கவனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது. குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிகஅவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.

காசநோய் மற்றும் போலியோ

குழந்தை பிறந்த இருவாரங்களுக்குள் காசநோய் தடுப்பு மருந்தைக் கொடுக்கவேண்டும். போலியோ சொட்டு மருந்தை பிறந்ததும் ஒருமுறை, ஆறு, பத்து மற்றும் பதினான்காவது வார இறுதியில் ஒவ்வொரு முறை, ஒன்றரை வயதில் ஒருமுறை, நான்கரை வயதில் ஒருமுறை என்றாக முறையே இந்தத் தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும். பெரியம்மை நோய்க்கு அடுத்ததாக உலகிலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தேர்ந்தெடுத்திருப்பது போலியோவைத்தான்.

முத்தடுப்பு ஊசி

டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ் ஆகிய மூன்று கடுமையான நோய்களைத் தடுக்கிறது. இதையும் ஐந்து முறை அளிக்கவேண்டும். 6, 10, 14 ஆவது வாரங்களின் இறுதியில் ஒவ்வொரு முறையும், 18 மாதம் முடியும்போது ஒரு முறையும் ஐந்து வயதை நிறைவு செய்யும்போது ஒருமுறையுமாக அளிக்கவேண்டும்.

ஹெபடிடிஸ் 'பி'

எய்ட்ஸை விட அதிகம் பேர் இறப்பது ஹெபடிடிஸ் 'பி' எனப்படும் மஞ்சள் காமாலை நோய்ப் பிரிவில்தானாம். நல்லவேளையாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள். குழந்தைக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் இந்தத் தடுப்பு மருந்தை அளிக்கலாம். முதல் டோஸ் அளிக்கப்பட்ட அடுத்த மாதத்தில் இரண்டாவது டோஸும், முதல் டோஸ் அளித்த ஆறாவது மாதம் மூன்றாம் டோஸையும் கொடுக்க வேண்டும். ஹெபடிடிஸ் 'ஏ' விற்கும் இப்போது தடுப்பு மருந்து வந்துவிட்டது. ஒரு வயதில் ஒருமுறையும், பிறகு ஒன்றரை வயதில் அடுத்த முறையும் இதற்கான தடுப்பு மருந்து அளிக்கலாம்.

தட்டம்மை மற்றும் எம்.எம்.ஆர்

குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆனபிறகு தட்டம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்தையும், ஒன்றேகால் வயதானபிறகு எம்.எம்.ஆர். எனும் தடுப்பு மருந்தையும் அளிக்கவேண்டும். இரு வருடங்களுக்குப் பிறகு டைபாய்டுக்கான தடுப்பு மருந்தையும் பத்து மற்றும் பதினாறு வருடங்களின் முடிவில் டி.டி. (டெடனஸ்) நோய்க்கெதிரான தடுப்பு மருந்தையும் அளிக்கலாம்.

முன்னெச்சரிக்கை

தடுப்பு மருந்தை அளிப்பதற்கு முன் உங்கள் பரம்பரையில் யாருக்காவது வலிப்புநோய் வந்திருந்தால் அதை டாக்டரிடம் மறக்காமல் கூறுங்கள். அதேபோல் வயிற்றுப்போக்கு, அதிக ஜுரம் போன்றவை குழந்தைக்கு அப்போது இருந்தால் அதையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அப்போது ஒருவேளை டாக்டர் இந்தத் தடுப்பு மருந்தை அளிப்பதை தள்ளிப்போடலாம். காரணம், சிலவகை தடுப்பு மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் உண்டு.

குழந்தைக்கு ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சினைகள்

எடை குறைவாகப் பிறத்தல்

நன்கு போஷிக்கபட்ட கர்ப்பவதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் சுமார் 3.5 கிலோ எடையுடையதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி உடல் எடை 2.7 கிலோவிலிருந்து 2.9 கிலோ வரை இருக்கும். குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள்ளே பிறந்த குழந்தையின் எடையினை பதிவு செய்வது மிகவும் முக்கியம். பிறந்த குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் வளர்ச்சியினையும் மற்றும் உயிர்வாழ் தன்மையினையும் நிர்ணயிக்கிறது. பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை 2.5 கிலோவுக்கு குறைவாக இருக்கும் போது, அவை குறைந்த உடல் எடை கொண்ட குழந்தைகள் என உலகளவில் வரையருக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை கர்ப்பக்காலம் முடிந்த பின்னர் அல்லது முன்னதாக பிறக்கலாம்.

குறைந்த உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்

குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள்

கர்ப்ப காலம் முடிவடைவதற்கு முன் அதாவது 37 வார கர்ப்பத்தின் போதே குழநதை பிறப்பதாகும். கர்ப்பத்தில் இக்குழைந்தைகளின் வளர்ச்சி நன்கு இருக்கலாம்-அதாவது உடல் எடை, உடல் நலம் மற்றும் வளர்ச்சி எல்லாம் சாதாரணமாக எந்த பாதிப்பின்றி இருக்கலாம். பிறந்த 2 முதல் 3 ஆண்டுகளுக்கு சரியான பராமரிப்பு அளிப்பதன் மூலம் குழந்தை தேவையான வளர்ச்சி அடையும்

குறித்த காலத்தில் பிறந்தாலும் அளவில் சிறியதாக காணப்படுதல்.

குறித்த காலம் முடிவுற்ற பின்னர் அல்லது அதற்கு முன்னதாக குழந்தை பிறக்கலாம். அவைகளின் எடை மிக குறைந்து காணப்படும் அவற்றின் எடை கருவளர்ச்சியினைப் பொறுத்து அமைகிறது. இதற்கு பொதுவாக சில காரணங்கள் காணப்படுகின்றன. அவையாவன, கருவிலிருக்கும் குழந்தைக்கும், நஞ்சுக் கொடிக்குமிடையே ஏற்படும் பிரச்சனைகள், தாய்க்கு சத்துப் பற்றாக்குறை, இரத்தக் குறைவு, மிக இளம் வயதில் கர்ப்பமாகும் தாய், பல முறைத் தாய்மை அடைதல், தாய்க்கு மலேரியா நோய் ஏற்படுதல் போன்றவை ஆகும்.

குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதை தவிர்க்க கீழ்க்காணும் முறையினைக் கையாளலாம்.

 • குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் கருவளர்ச்சிப் பருவத்தில் நன்கு அக்கறை செலுத்த வேண்டும்
 • கருத்தரிப்பினை முதலிலேயே பதிவு செய்து ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இனங்கண்டறிய வேண்டும்.
 • கர்ப்ப காலத்தின் போது, மற்றக்காலங்களை விட சத்தான உணவ உட்கொள்ள வேண்டும். எல்லா ஊட்டப் பொருட்களும் கொண்ட சமன்செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு உற்சாகப்படுத்த வேண்டும். கூடுதலான ஊட்டப்பொருட்கள் மற்றும் இரும்புச்சத்து மற்றும் போலிக்ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் செய்ய வேண்டும்.
 • கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
 • புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
 • இரண்டு பிள்ளைகளுக்கு இடையே உள்ள இடைவெளி காலம், அதற்கு தேவையான கருத்தடை முறைகள் போன்றவற்றை கைக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.
 • பெண்ணின் சமூக, பொருளாதார நிலைகள் மேம்படுத்தப் படவேண்டும்.

குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் (குழந்தை நலன் பராமரிப்பு)

குழந்தை நலனில் அக்கறை எடுத்தல் என்பது குழந்தை கருத்தரிப்பதிலிருந்து குழந்தை பிறக்கும் வரை மற்றும் குழந்தை பிறந்ததிலிருந்து 5 வயது ஆகும் வரை குழந்தையைக் குறித்து பெற்றோர் மேற்கொள்ளும் செயல்களாகும்.

ஒரு குழந்தையின் உடல் நலம் என்பது பிற்காலத்தில் ஒரு குழந்தையின் தாயாகப் போகும் பெண்பிள்ளையின் பிறப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. பெண் குழந்தை நலன் பராமரிப்பு என்பது கரு சிசுவாக உருவெடுப்பதிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது குழந்தை கருவில் இருக்கும் போது மற்றும் பிறப்பதற்கு முன் எடுத்துக்கொள்ளும் அக்கறை, குழந்தை பிறந்த 28 நாட்கள் வரை பராமரிப்பு, ஒரு மாத பருவத்திலிருந்து 12 மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது, நடக்கக்கற்றுக் கொள்ளும் (1-2 ஆண்டிற்கு) காலத்தில் பராமரிப்பு, இரண்டு வயது நிரம்பிய பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு எடுக்கும் அக்கறை என எல்லா பருவத்தோடு சம்பந்தப்பட்டது.

குழந்தை பராமரிப்பு பணியின் நோக்கம் என்பது கீழ்க்காண்பவற்றை உறுதி செய்ய வேண்டும்.

 • ஒவ்வொரு குழந்தையும் சரியான பராமரிப்பு மற்றும் போதுமான ஊட்டச்சத்து பெறுவது
 • அவர்களுடைய வளர்ச்சி சரியாக கண்காணிக்கப்படுகிறதா மற்றும் மாறுபாடான வளர்ச்சி கண்டறியப்பட்டு அதற்கான சரியான சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
 • ஏற்படுகிற சுகவீனங்கள் கண்டறியப்பட்டு நோயின் தன்மை மோசமான நிலையை அடையாதவண்ணம் எந்த தாமதமும் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறதா.
 • நன்கு பயிற்சி பெற்ற நபர்களைக்கொண்டு பராமரிக்கப் படுகிறார்களா.
 • தாய் மற்றும் குடும்பத்திலுள்ள நபர்கள் கல்வியறிவு பெற்றவர்களா மற்றும் குழந்தையின் நலனை மேம்படுத்துவதற்கான குழந்தையின் நலனில் அக்கறை எடுக்கும் அளவில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனரா.
 • வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது.
 • குழந்தையின் வளர்ச்சியையும் வளர்ச்சியில் ஏற்படும் முன்னேற்றத்தையும் கண்காணிப்பது என்பது முக்கியமானது ஆகும். இதன் மூலம் குழந்தையின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலை போன்றவற்றை நாம் அறியலாம். அதோடன்றி குழந்தை வளரும் போது பொதுவான வளர்ச்சியும் அதனால் ஏற்படும் முன்னேற்றமும் காணப்படுகிறது. மாறுபட்ட வளர்ச்சி காணப்பட்டால் அதனை சரிசெய்ய குடும்பத்திலும் மற்றும் சுகாதார மையங்களிலும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு முறைகளைச் செய்யவும் உதவியாயிருக்கிறது.

குழந்தையின் வளர்ச்சி

 • குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.
 • சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.
 • எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை. மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது.
 • பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல.
 • தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.
 • உயரம் - உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.
 • தலை மற்றும் மார்பின் சுற்றளவு - குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
 • நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு - குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும்.
 • அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.


குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அவசியம்

ஆதாரம் : தமிழ் மருத்துவம்

2.95726495726
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
Gowrisankar Dec 07, 2017 04:50 PM

நன்று அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top