অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

பெண்களின் கர்ப்பகாலம்

பெண்களின் கர்ப்பகாலம்

உடல் எடை

கர்ப்பகாலத்தில் குறைவாக எடை கூடுதல்

இது இரத்த சோகை, இருதய நுரையீரல் பிரச்சினைகள், கருவுயிர்க்கு சீரான வளர்ச்சியின்மை, குறைப்பிரசவம் முதலியவற்றோடு இணைந்தது. மிகவும் குறைவான எடையுள்ள இப்பெண்கள் 500 கலோரிகளும் 20 கிராம் புரதமும் தினப்படி அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் உடல் எடை கூடுதல்

தாய் சேய் நலத்திற்கு உடல் எடை கூடுதல் ஒரு நல்ல அறிகுறியாகும். ஒரு பெண்ணின் ஆரோக்கிய நிலையையும், கர்ப்பமுறுவதற்கு முன் இருந்த எடையையும் சார்ந்து கர்ப்பகாலத்தில் கூடும் எடையானது வேறுபடும்.

கர்ப்பகாலத்தில் அதிக எடை கூடுதல்

பரிந்துரைக்கப்பட்டதை விட அதிக எடை கூடினால் அது அதிக இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் நுண்ணுயிர்க் கிருமிகளால் தாக்கம் அதிக எடையுள்ள குழந்தைகள் பிரசவத்தில் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு வழி வகுக்கும். ஆனால் அதிக எடை கூடிய பெண்கள் கர்ப்பகாலத்தில் எடையைக் குறைக்க முயற்சிகள் ஏதும் செய்தல் கூடாது. உணவின் தரத்தினை மட்டுமே அதிகரிக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உணவினால் ஏற்படக் கூடிய சிக்கல்கள்

அதிக அல்லது குறைவான எடை கூடுதலை தவிரவும் சரியாகத் திட்டமிடப்படாத உணவினால் மேலும் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். இவற்றை ஏற்படுத்தக்கூடிய காரணிகள்

 • அடிக்கடி மகப்பேறு
 • வேறு மருத்துவ அல்லது மகப்பேறு கோளாறுகள்
 • சரியாக திட்டமிடப்படாத உணவு
 • உணவு உண்பதில் குறைபாடுகள்
 • சிறிய வயதில் கர்ப்பமடைதல்
 • உணவினை பற்றிய மூடநம்பிக்கைகள்

பிரசவம்

 • உயிருள்ள முதிர்கருவை கருப்பை மிகுந்த சக்தியுடன் சுருங்கி வெளித்தள்ளுலே பிரசவம் எனப்படும். பிரசவம் சினைத்தாரை வழியாகவோ அல்லது நேரிடையாக வயிற்றின் வழியாகவோ (அறுவை சிகிட்சை மூலம்) நிகழக்கூடும்.
 • கர்ப்பிணி பெண்ணின் ஊட்டச்சத்து நிலையினை அறிய அவரது உடல் எடை அட்டவணை உதவும்.
 • இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தின் கூட்டு முயற்சியின் விளைவால் பலப்பல நிலைகளில் முதிர்கரு மற்றும் நச்சுக்கொடி சவ்வுகள் ஆகிய அனைத்தும் வெளித்தள்ளப்படும் நிகழ்ச்சியே பிரசவமாகும். இது சாதாரணமாக சினைத்தாரை வழியாக தானாக நிகழும்.
 • சாதாரணமாக கர்ப்பமுற்ற 38-42 வாரங்களில் பிரசவம் நிகழும். இதுவே நிறை மாதத்தில் நிகழும் பிரசவமாகும். பிரசவம் 37 வாரங்களுக்கு முன்பே நிகழ்ந்தால் அது குறைபிரசவம் என்று அழைக்கப்படும்.
 • 28 வாரங்களுக்கு முன்பாக நிகழும் பிரசவத்திற்கு கருச்சிதைவு என்று பெயர்.

இயற்கையான பிரசவம்

இயல்பாக நிகழும் பிரசவம் கர்ப்பகாலத்தின் முடிவில் 38-42 வாரங்களில் தானாக நிகழ்ந்து குழந்தையின் தலை முதலில் வெளிவரும். இதனையே சுகப்பிரசவம் என்று அழைப்பர். இது நிகழ்ந்து முடிய சுமாராக 18 மணிநேரங்கள் பிடிக்கும். சுகப்பிரசவம் மூலம் முதிர்கரு நச்சுக்கொடி மற்றும் சவ்வுகள் அனைத்தும் எந்தவித சிக்கலும் இன்றி சிசுத்தாரை வழியாக வெளித்தள்ளப்படும்.

சுகப்பிரசவம் நிகழ கீழ்க்கண்டவற்றைச் சார்ந்துள்ளது.

 • பாதை : பிரசவம் நிகழும் வழிப்பாதை இடுப்புக் குழியின் நீள அகலங்களே ஆகும்.
 • பயணிப்பவர் : குழந்தையின் பரிமாணங்கள் தாயின் இடுப்புக் குழியின் பரிமாணங்களோடு ஒத்து போகின்றனவா என்பது
 • சக்தி : கர்ப்பப்பை சுருங்குவதற்கு அதற்குள்ள மிகுந்த சக்தியும் தாயின் முயற்சியுமே ஆகும்.

பிரசவ வலி துவங்குதல்

பிரசவம் துவங்குவதற்கான தூண்டுதலாக விளங்கும் நேர்காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

 1. கர்ப்பப்பை இழுக்கப்பட்டு நீள்கிறது. மேலும் அதன் அழுத்தம் அதிகரித்து செயல் மாற்றங்கள் ஏற்படுத்துகிறது.
 2. கர்ப்பப்பை சுருங்குதலுக்கு காரணமாயிருக்கும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனின் அளவு அதிகரித்தல்.
 3. கர்ப்பப்பையின் டெசிடுவா மற்றும் கருவுயிரின் சவ்வுகள் இணைந்து ப்ராஸ்டாகிளான்டின் என்ற நொதிப் பொருளை அதிகம் சுரக்கின்றன.
 4. ஆக்சிடோசின் மற்றும் ப்ராஸ்டாகிளான்டின் இணைந்து கருப்பை சுருங்கி விரியத் தேவையான விசையை அளிக்கின்றன.

பிரசவம் துவங்கப் போவதற்கான அறிகுறிகள்

கர்ப்பகாலத்தின் கடைசி வாரங்களில் தாயின் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படும். அவை.

 • குழந்தையின் தலையோ அல்லது வேறு பாகங்களோ பிரசவம் துவங்குவதற்கு முன்னமே இடுப்புக் குழிக்குள் இறங்கும்.
 • இதுவே பிரசவம் நிகழப் போவதற்கான தலையாய அறிகுறி ஆகும்.
 • இதனால் உதரவிதானத்தின் மீது இருந்த அழுத்தம் குறைவதால் தாய்க்கு சுவாசிப்பது எளிதாகின்றது. இதையே (இலகுவாதல்) என்று அழைப்பர்.
 • அதே சமயம் முதிர்கருவின் தலையோ வேறு பாகங்களோ இடுப்புக் குழியில் இறங்கியிருந்தால் தாய்க்கு நடப்பது சிரமமாகின்றது. சிறுநீர்ப்பை அழுத்தப்படுவதால் சிறுநீர் கழிக்கும் முறைகள் அதிகமாகின்றன.
 • சாக்ரோ இலியாக் மூட்டுகள் தளர்ந்து கொடுப்பதால் முதுகு வலி அதிகமாகும்.
 • பொய்யான பிரசவ வலி ஏற்படுதல்.

உண்மையான நிஜமான பிரசவ வலியின் இயல்புகள்

 1. சீரான இடைவெளியில் கருப்பை சுருங்குதலும் பிரசவ வலி ஏற்படவும் ஆரம்பிக்கும்.
 2. நேரம் அதிகரிக்க அதிகரிக்க வலியின் தீவிரமும் அதிகரிக்கும்.
 3. வலி இடுப்பிலும் வயிற்றிலும் அதிகமாக இருக்கும். நடத்தல் வலியை அதிகரிக்கும்.

தூக்க மருந்துகளோ வலி நிவாரணிகளோ இந்த வலியைக் குறைக்காது. பிரசவ வலி அதிகரிக்கும்போது கர்ப்பப்பை வாய் சிறிது சிறிதாக விரிவடையும் போது இவையே நிஜமான பிரசவ வலியின் தன்மைகளாகும்.

பிரசவத்தின் நிலைகள்

அ. முதல் நிலை

 • செர்விக்ஸின் வாய் அகன்று விரிதலே முதல் நிலையாகும். நிஜமான பிரசவ வலியுடன் தொடங்கி செர்விக்ஸ் முழுமையாக விரியும் வரை முதல் நிலை எனப்படும்.
 • இந்நிலை தோராயமாக முதல் கர்ப்ப பிரசவத்தில் 13 மணி நேரங்களும் மற்றவைக்கு 7.5. மணி நேரங்களும் நீடிக்கும்.
 • கருப்பை சுருங்கி விரிந்து செர்விக்ஸ் அகன்று மேலெழும்புவதும் அபிவிருத்தியடைந்தவாறு இருக்கும்.
 • இறுதியில் சவ்வுகள் கிழிந்து பனிநீர் வெளிவரும்.

ஆ. இரண்டாம் நிலை

 • குழந்தை சிசுத்தாரை வழியாக வெளித்தள்ளப்படுதலே இரண்டாம் நிலையாகும்.
 • செர்விக்ஸின் வாய் முழுமையாக அகன்று விரிவடைவதில் தொடங்கி குழந்தை வெளிவரும் வரை இரண்டாம் நிலையாகும்.
 • இரண்டாம் நிலை முதல் பிரசவத்திற்கு ஒன்று முதல் ஒன்றரை மணி நேரமும் மற்றவைக்கு 20 முதல் 45 நிமிடங்களும் பிடிக்கும்.

இ. மூன்றாம் நிலை

இந்நிலையில் நச்சு கொடியும் சவ்வுகளும் கர்ப்பபையின் சுவரிலிருந்து பிரிந்து வெளித்தள்ளப்படும். இந்நிலை குழந்தை முழுமையாக வெளிவந்ததிலிருந்து நச்சு கொடி வெளிவரும் வரை நீடிக்கும். மூன்றாம் நிலை அதிகபட்சம் 30 நிமிடங்களே எடுக்கும்.

ஈ. நான்காம் நிலை

நச்சு கொடியும் சவ்வுகளும் வெளிவந்ததிலிருந்து தாய் நிதான நிலைக்கு வரும் வரை நான்காம் நிலை எனப்படும். தோராயமாக 1 மணி நேரம் பிடிக்கக்கூடிய இந்நிலையில் தாய் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

பிரசவத்தின் முதல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள்

 • செர்விக்ஸ் சுரக்கும் திரவம் அதிகமாகவும் இரத்தத்துடன் கலந்து வெளிவரும் இதையே Show என்பர். செர்விக்ஸ் அகன்று விரிந்து மேலெழும்புதல் செர்விக்ஸ் அகல ஆரம்பித்து முழுவதுமாக விரிந்தவுடன் மேலெழும்பிகொள்ளும்.
 • நீர்ப்பை தோன்றுதல் : செர்விக்ஸ் நன்றாக அகன்ற பிறகு கீழ்பகுதியில் உள்ள சவ்வுகள் பிடிமானமின்றி பனிக்குடம் வெளியே வீங்கினாற் போல் தோற்றமளிக்கும். இதையே நீர்ப்பை என்று அழைப்பர்.

முதல் நிலையில் செவிலியரின் பணி

 1. சுருக்கமாக தேவைப்படும் விவரங்களை சேகரித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
 2. கர்ப்பிணி பெண்ணை வெதுவெதுப்பான நீரில் குளிக்கவோ அல்லது வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகளை மட்டும் சுத்தம் செய்யவோ பரிந்துரைக்கலாம்.
 3. சோப்பும் தண்ணீரும் கரந்து எனிமா கொடுக்கப்பட வேண்டும். பனிக்குடம் உடையாத வரை கர்ப்பிணி பெண் அவரது விருப்பம் போல் நடக்கவோ உட்காரவோ படுக்கவோ அனுமதிக்கலாம்.
 4. ஆனால் பனிக்குடம் உடைந்த பின்னர் படுத்திருப்பது மட்டுமே சிறந்தது. மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப வலி நிவாரணிகள் தரலாம். கர்ப்பிணி பெண்ணுக்கு நீராகாரமாக அளிக்கலாம். பழச்சாறுகள், சூப் வகைகள், எலுமிச்சை சாறு, தண்ணீர் போன்றவை கொடுக்கலாம் மற்றும் திட ஆகாரங்களை தவிர்த்தல் நலம்.
 5. கர்ப்பிணி பெண் அடிக்கடி சிறுநீர் கழித்து சிறுநீர்ப்பையை காலியாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
 6. பிரசவம் எவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை பார்டோகிராப் பதிவு செய்வதன் மூலம் அறியலாம்.
 7. Partograph மூலம் தாயின் உயிர்நிலை அறிகுறிகளைப் பரிசோதித்தல். செர்விக்ஸ் விரிவடைந்துள்ள அளவு குழந்தையின் தலை இருக்கும் நிலை செர்விக்ஸ் மேலெழும்பியுள்ளதா என்ற விவரம் சவ்வுகள் உடைந்தனவா இல்லையா குழந்தையின் இருதயத்துடிப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
 8. தாய் சேய் நலத்தினை கண்காணித்தவாறே இருத்தல் வேண்டும். தாயின் நாடித்துடிப்பு ரத்த அழுத்தம் வெப்பநிலை ஆகியவற்றை இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறையும் குழந்தையின் இருதயத்துடிப்பினை ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறையும் பரிசோதிக்க வேண்டும்.
 9. சிறுநீர் வெளியேறும் அளவினைக் காண்காணித்தல் வேண்டும்
 10. கர்ப்பிணிப் பெண்ணை உளவியல் ரீதியாக பிரசவத்துக்கு தயார் செய்தல் வேண்டும்.

பேறுகால இரண்டாம் நிலையில் ஏற்படும் மாற்றங்கள்

அதிக தீவிரமான அதிக நேரம் நீடிக்கக்கூடிய அடிக்கடி தோன்றும் கருப்பைச் சுருக்கங்களே இரண்டாம் நிலையின் பிரதம அறிகுறியாகும். தாய் மிகவும் சோர்ந்த நிலையில் இருத்தல்.

இரண்டாம் நிலையில் செவிலியரின் பணி

 • குழந்தை இயல்பாக வெளிவர துணை செய்து உதவுதல்.
 • பெரினியல் சவ்வு கிழிபடாமல் பாதுகாத்தல்.
 • பிரசவத்திற்கு நுண்ணுயிரிகளால் தாக்கப்படாத வகையில் பாதுகாத்து துணை செய்தல்.
 • கவனமாக கண்காணித்தல்

பிரசவத்தின் மூன்றாவது நிலையில் ஏற்படும் மாற்றங்கள்

நச்சுக்கொடி பிரிந்து வெளியேறிய பின்னர் அது கருப்பையுள்ள இணைந்திருந்த பகுதி சுருங்கி அளவில் சிறிதாகி இரத்தப்போக்கினை குறைக்கிறது.

மூன்றாவது நிலையில் செவிலியரின் பணி

 1. நச்சுக் கொடியை பிரித்து வெளியே இழுக்க முயலும் முன்னர் அது கருப்பை சுவரிலிருந்து பிரிந்து விட்டதற்கான அறிகுறிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். (தொப்புள் கொடியின் நீளம் அதிகரித்தல்) சிசுத்தாரை வழியாக புதிய இரத்தம் வெளியேறுதல், மேலும் சிம்பைசிஸ் ப்யூபிஸ்ற்கு மேலுள்ள இடம் லேசாக வீங்குதல் போன்ற அறிகுறிகள் நச்சுக்கொடி பிரிந்ததற்கான அறிகுறிகள் ஆகும். நச்சுக் கொடியை கவனத்துடன் தொப்புள் கொடியைப் பிடித்தவாறு கண்காணிப்பின் கீழ் மெதுவாக வெளி இழுக்க வேண்டும்
 2. கருப்பை நன்றாக சுருங்கி இரத்தப் போக்கினைக் கட்டுப்பாட்டில் வைக்க மெதர்ஜின் ஊசி அளிக்க வேண்டும்.
 3. தாயின் உயிர் நிலை அறிகுறிகள் : கர்ப்பபையின் கடினத்தன்மை கர்ப்பபையின் உயரம் இரத்தப்போக்கின் அளவு ஆகியவற்றை தவறாது கண்காணித்தல் வேண்டும்.
 4. வெளியிழுக்கப்பட்ட நச்சுக் கொடி மற்றும் சவ்வுகளை ஏதேனும் இயற்கைக்கு மாறான அமைப்பு மாற்றங்கள் உள்ளனவா என்று பரிசோதிக்க வேண்டும்.
 5. சிசு அல்லது பச்சிளம் குழந்தை (0-28 நாட்கள்) பிறந்ததிலிருந்து 28 நாட்கள் வரை பிறந்த குழந்தையை சிசு என்று கூறுவர். நிறை மாதத்தில் ஆரோக்கியமாக (38-42) வாரங்களில் பிறந்த குழந்தை தோராயமாக 2500 முதல் 3000 கிராம் எடை இருக்கும்.
 6. சிசு பிறந்த உடன் அழுகின்றது. தானே சுயமாக சுவாசிக்க ஆரம்பிக்கின்றது. மாறிய சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாறிக் கொள்கின்றது. 0-28 நாட்கள் வரை சிசு அல்லது பச்சிளங் குழந்தை என்று அழைக்கப்படும் பிறந்த குழந்தை பின்னர் ஒரு வயது வரை இளம் குழந்தை என்று அழைக்கப்படும்.

பிறந்த குழந்தையை உடனடிப் பரிசோதனை செய்தல்

பிறக்கும்போது குழந்தையின் ஆரோக்கிய நிலையை அறிந்து கொண்டு மேற்கொண்டு குழந்தைக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுகிறதா என்பதைத் தீர்மானிக்க பிறந்த குழந்தையை உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும். இதற்கு அப்கார் மதிப்பீடு மிகவும் உதவுகின்றது. கீழ்க்கண்டவற்றை பரிசோதித்தலின் மூலம் அப்கார் மதிப்பீடு செய்யப்படுகின்றது.

 1. இருதயத் துடிப்பு
 2. சுவாசம்
 3. தசைத்திறன்
 4. தொடுவதனால் ஏற்படும் அசைவு
 5. நிறம்

இவற்றில் இருதயத் துடிப்பும் சுவாசத்துடிப்பும் மிகவும் முக்கியமானதாகும்.

எடை

நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் வழக்கமாக பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமுக்கு மேல் இருக்கும் இந்தியாவின் பிறந்த குழந்தையின் எடை 2.7 முதல் 3.1 கிலோ கிராம் வரை இருக்கும்.

தலையுடன் ஒப்பிடும்போது முகம் சிறிதாக இருக்கும். கண்கள் மூடியே இருக்கும். கன்னங்கள் முழுதும் கொழுப்பு தேங்கியிருப்பதால் குண்டாக இருக்கும்.

கழுத்து மற்றும் உடம்பு

கழுத்து குறுகியதாக இருக்கும். மார்புச் சுற்றளவு தலைச் சுற்றளவை விடச் சற்றே குறைவாக இருக்கும்.

இனப்பெருக்க உறுப்புகள்

ஆண் குழந்தைகளுக்கு விரையானது விரைப்பையில் கீழ் இறங்கி உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். பெண் குழந்தைகளில் சிறிய உதடுகளையும் கிளிடோரிஸையும் வெளி உதடுகள் மூடியவாறு இருக்கும்.

வெப்பநிலை

பிறந்த குழந்தைக்கு ஹைபோதலாமஸ் முதிர்ச்சியடையாமல் இருப்பதால் உடல் வெப்பநிலையில் திடீர் திடீரென மாற்றங்கள் ஏற்படும். சில சமயங்களில் உடல் வெப்பநிலை 97°F கீழேயும் செல்லக்கூடும்.

சிறுநீர்

பொதுவாக குழந்தை பிறந்த போதோ அல்லது சிறிது நேரத்திற்குள்ளோ சிறுநீர் கழித்துவிடும். முதல் ஒரு வாரத்தில் குறைந்த அளவு சிறுநீரே கழிக்கும் (24 மணி நேரத்தில் 68 தடவைகள் மட்டுமே) ஆனால் 2வது வாரத்தில் இருந்து சிறுநீர் கழிக்கும் அளவு கழிக்கும் தடவைகளும் அதிகரிக்கும் (24 மணி நேரத்தில் 20 தடவைகள்)

மலம்

முதல் 3-4 நாட்கள் வரை குழந்தை வெளியேற்றும் மலத்திற்கு மெக்கோரியம் என்று பெயர். இது கரும்பச்சை நிறத்தில் பிசு பிசுவென்று இருக்கும்.

குழந்தை பிறந்த உடன் கவனிப்பு

குழந்தை பிறந்த உடன் முதல் சில நிமிடங்களிலும் மணித்துளிகளிலும் நிகழும் நிகழ்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கவனிப்பு கீழ்க்கண்டவற்றை சார்ந்ததாகும்.

 1. சுவாச மண்டலம் செயல்பட ஆரம்பித்தல்
 2. வெப்பநிலை மிகவும் கீழறங்காது பாதுகாத்தல்
 3. தாய்பாலூட்ட ஆரம்பித்தல்
 4. நுண்ணுயிர்களால் தாக்கப்படாமல் பாதுகாத்தல்

பச்சிளம் குழந்தைக்கு அளிக்கப்படும் கவனிப்பு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படும்.

 1. பிரசவத்திற்கு தயார்ப்படுத்துதல்
 2. சிசு பிறக்கும் போது உடனடிக் கவனிப்பு
 3. பிறந்த பிறகு அளிக்கப்படும் கவனிப்பு
 4. பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பு

பிரசவத்திற்கு தயார் படுத்துதல்

 • பிரசவம் நிகழப்போகும் அறை நன்கு வெளிச்சமாகவும் நல்ல காற்றோட்டத்துடனும், மிதமான வெப்பநிலை கூடியதாகவும் தயார்ப்படுத்தப்பட வேண்டும்.
 • சிசுவை குளிர் தாக்கக் கூடிய நிலை இருத்தல் கூடாது. சிசுவை வைக்கப்போகும் இடத்தில் கீழ்க்கண்டவற்றை தயார் செய்தல் வேண்டும்.
 • 100-200 வாட்ஸ் மின்சார விளக்கு (50 செ.மீ உயரத்தில் தொங்க வேண்டும்)
 • மிகவும் சுத்தமான துணிகள் துண்டுகள் படுக்கை விரிப்புகள் சிசுவைச் சுற்றி வைக்க துணிகள் ஆகியவை.
 • தொப்புள் கொடியை வெட்டுவதற்கு தேவையான உபகரணங்கள் (மிக பரிசுத்தமான கத்தரிக்கோல்) பஞ்சு உருண்டைகள் துடைப்பதற்கான சிறிய துணிகள்.
 • பிராணவாயு அளிக்கக்கூடிய கருவிகள் சளியை உறிஞ்சுவதற்கான கருவிகள் (mucous Sucker) மற்ற உயிர் காக்கும் உபகரணங்கள் ஒட்டுவதற்கான டேப்கள் கத்தரிக்கோல் ஆகியவை. எடைபார்க்கும் கருவி அளவெடுக்கும் நாடா அளவுகோல் தெர்மா மீட்டர் அடையாள அட்டைகள்.
 • உயிர்காக்கும் மருந்துகள் அடங்கிய ட்ரே (டிஸ்டில்ட் வாட்டர் சலைன் விட்டமின் கே சிரிஞ்சுகள் மற்ற உயிர்காக்கும் மருந்துகள் அடங்கியவை).

சிசு பிறக்கும்போது அளிக்கப்படும் உடனடிக் கவனிப்பு

 • சிசு பிறந்து தாயிடமிருந்து பிரிக்கப்பட்டவுடன் தொப்புள் கொடி வெட்டப்பட்டு சுத்தமான ஈரமற்று காய்ந்த நுண்ணுயிர் அற்ற துவாலையால் சுற்றி வைக்கப்பட வேண்டும்.
 • தலையானது தாழ்ந்த நிலையிலும் உடல் உயர்த்தப்பட்ட நிலையிலும் வைக்கப்பட வேண்டும்.
 • இவ்வாறு வைப்பதனால் மேல் சுவாசபாதையில் நுழைந்த பனி நீர் வடிவதற்கு ஏதுவாகும்.
 • வாயிலும் மூக்கிலும் காணப்படும் பனிநீரையும் சளியையும் சளி உறிஞ்சி அல்லது சிறு ரப்பர் குழாய் வைத்து உறிஞ்சி அகற்றப்பட வேண்டும்.
 • வாயையும் நாக்கையும் சுத்தம் செய்யும் போது மிகவும் மென்மையாக செய்ய வேண்டும்.
 • விநாடிகளுக்கு அதிகமாக உறிஞ்சுதல் கூடாது. இருதயத் துடிப்பை கண்காணித்தவாறே இருத்தல் அவசியம் ஆகும்.
 • பிறந்த ஒரு நிமிடத்திலும் 5வது நிமிடத்திலும் குழந்தையின் ஆரோக்கிய நிலையை அப்கார் அட்டவணை கொண்டு மதிப்பிட வேண்டும்.
 • குழந்தைக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுமானால் உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
 • இவற்றைச் செய்யும் போது குழந்தை வீறிட்டு அழவும் நன்கு கைகால்களை அசைக்கவும் ஆரம்பிக்கும்.

சிசு பிறந்த பிறகு அளிக்கப்படும் கவனிப்பு

பிறக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் தனித்தனியாக மிக சுத்தமான உபகரணங்கள் உபயோகிக்கப்பட வேண்டும். சிசுவின் கண்களை சலைன் வாட்டரில் நனைக்கப்பட்ட மிக சுத்தமான பஞ்சினால் உள்ளிருந்து வெளிப்புறமாக சுத்தம் செய்ய வேண்டும்.

சிசுவின் தொப்புள் கொடியை முதல் 3 விரல் அகலத்திற்கு 23 செ.மீ விட்டு வெட்ட வேண்டும். வெட்டிய பின் இறுக்கமாக ரிப் நாட் முடிச்சு போட்டு கட்ட வேண்டும். வெட்டிய தொப்புள் கொடியின் மேல் முகப்பவுடர் சாணி சாம்பல் சுண்ணாம்பு போன்ற எதையும் குழைத்து தடவுதல் கூடாது. இவை நுண்யிர்த் தொற்றினை உண்டாக்கும். ஆசன வாய் திறந்திருக்கிறதா என்பதை ஒரு ரப்பர் கேதீடரை நுழைத்து பார்க்கலாம். ஆசனவாய் திறந்திராவிடில் உடனடியாக மருத்துவருக்குத் தெரிவித்தல் வேண்டும்.

பிரசவத்திற்குப் பின் காலத்திய கவனிப்பு

குழந்தை தொடுவதற்கு கதகதப்பாகவும் பாதங்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருத்தல் வேண்டும். தொப்புள் கொடி சுத்தமாகவும் காய்ந்தும் இருத்தல் வேண்டும். வெட்டப்பட்ட தொப்புள் கொடி இறுக்கமாக கட்டப்பட்டும் இரத்தப்போக்கு இல்லாமலும் இருக்கிறதா என்பதை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். குழந்தை பிறந்த 1/2 மணி நேரத்திற்குள்ளாகவே தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தை நன்கு சப்புகிறதா என்பதை கண்டறிய வேண்டும். குழந்தை நன்கு வீறிட்டு அழுகிறதா என்றும் சிரமமில்லாது மூச்சு விடுகிறதா என்பதையும் கண்காணித்தல் வேண்டும். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக குழந்தை நல நிபுணரை அணுக வேண்டும்.

பிரசவத்திற்குப் பின் வீட்டிற்கு அனுப்பும் போது தரப்பட வேண்டிய ஆலோசனைகள்

தாய்க்கு கூற வேண்டிய ஆலோசனைகள் வெட்டப்பட்ட தொப்புள் கொடியை சுத்தமாகவும் ஈரமில்லாமலும் பராமரித்தல் அவசியம். மேலும் அதன் மீது எதையும் தடவுதல் கூடாது.

குழந்தையை நன்கு துணியால் மூடி வைத்து அதிகக் குளிர் அல்லது வெப்பம் தாக்காமல் காத்தல் வேண்டும்.

 1. பிறந்து ஆறுமாதம் வரையில் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்தல் வேண்டும்.
 2. வேறு எந்த வித உணவுப் பொருளோ தண்ணீரோ கூட கொடுத்தல் கூடாது. குழந்தையின் தேவைக்கேற்ப இரவு பகல் இரண்டு வேளைகளிலும் தாய்ப்பால் கொடுக்கவும்.
 3. கண்களுக்கு எதையும் தடவுதல் கட்டாயம் கூடாது.

பியூர்பேரியம் பிரசவத்தைத் தொடர்ந்து உடனடியாக உள்ள ஆறு வாரகாலமே பியூர்பேரியம் என்று அழைக்கப்படுகிறது. இக்கால கட்டத்தில் இனப்பெருக்க உறுப்புகள் கர்ப்பகாலத்திற்கு முன்பிருந்த நிலைக்குத் திரும்புகின்றன. தாய்ப்பால் சுரக்க ஆரம்பிக்கின்றன. தாய் பிரசவத்தினால் ஏற்பட்ட உடல் அசதி மற்றும் மன உளைச்சலிலிருந்து மீள்கிறார்.

நச்சுக்கொடி வெளிப்பட்டதிலிருந்து உடனடியாக உள்ள 6 வாரகாலம் (42 நாட்கள்) பியூர்பேரியம் எனப்படுகிறது. இனப்பெருக்க உறுப்புக்கள் பழைய நிலைக்குத் திரும்புதலை இன்வல்யூசன் (Involution) என்று அழைக்கிறோம்.

கர்ப்ப பை பழைய நிலையை அடைதல்

பிரசவத்தைத் தொடர்ந்து கருப்பை மிகவும் கடினமாகவும் 1000 கிராம் எடையுள்ளதாகவும் இருக்கும். ஆறு வார கால முடிவில் அதன் பரிமாணங்கள் கர்ப்பத்திற்கு முன்பிருந்த நிலைக்கே திரும்புகின்றது. மேலும் அதன் எடையும் 60 கிராம் மட்டுமே இருக்கும். பிரசவத்திற்குப் பின் இரண்டாவது வாரத்திலேயே கர்ப்பபை இடுப்புக்குழிக்குள் இறங்கிவிடுகிறது.

லாக்கியா

கருப்பை செர்விக்ஸ் மற்றும் சினைத்தாரையிலிருந்து வெளிப்படும் திரவ ஒழுக்கே Lochia நுண்மயிர்கள் வெர்னிக்ஸ் கேசியோசா மற்றும் மெக்கோனியம் ஆகியவை கலந்திருக்கும்.

லாக்கியாவின் நிறம் 1. லாக்கியா Rubra சிவப்பு நிறத்தில் இருக்கும். முதல் 14 நாட்கள் வரை இது இருக்கும். லாக்கியா Serosa மஞ்சள் அல்லது வெளிர் பிரெளன் நிறத்தில் 59 நாட்கள் வரை இருக்கும். லாக்கியா Alba வெள்ளை நிறமாக 10-15 நாட்கள் வரை இருக்கும். பியூர்பேரியம் இயல்பாக உள்ளதா என்பதை லாக்கியாவின் நிறத்தைக் கொண்டு அறியலாம்.

பேறுகால பின் கவனிப்பின் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள்

 1. பிரசவத்திற்கு பின் ரத்தப்போக்கு
 2. நுண்ணுயிர்க் கிருமிகளால் தாக்கம்
 3. பிரசவத்திற்குப் பின் ஏற்பட கூடிய மனோவியாதி
 4. உறைந்த இரத்தக் கட்டிகள் ஏற்படுதல்.
 5. தாய்ப்பால் சுரக்காமல் போதல்.

தாய்ப்பாலூட்டுதல்

பிரசவத்திற்குப் பின் தாய்பாலூட்டத் தொடங்குதல் மிக மிக அவசியமானதாகும். முதல் இரண்டு நாட்களுக்கு அதிக புரதச் சத்தும் இம்மியூனோ குளோபுலின்களும் கொண்ட மஞ்சள் நிற திரவம் சுரக்கப்படும். இது கொலஸ்டிரம் என்று அழைக்கப்படும். கொலஸ்டிரம் நுண்ணுயிர்க் கிருமிகளால் தாக்கம் ஏற்படாத வகையில் சிசுவைக் காக்கின்றது.

முதல் முறை பாலூட்டுவது தாய் சேய் இருவருக்குமே மிக முக்கியமான அனுபவமாகும். வெற்றிகரமாக நன் முறையில் தாய்ப்பாலூட்டுவதற்கு தாய் சிறந்த முறையில் சந்தோஷத்துடன் தாய்ப்பாலூட்டும் முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் அளிக்கப்பட வேண்டும். சாதாரணமாக ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒரு நாளில் 6-8 தடவைகள் தாய்ப்பால் அருந்தும் ஒவ்வொரு தடவையும் சுமார் 10 நிமிடங்கள் நீடிக்கும்.

தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்

 • தாய்ப்பால் மிகவும் உயர்வான ஓர் சிறந்த கலவை ஆகும். இது குழந்தை மிக எளிதில் சீரணிக்குமாறு உள்ளது. தாய்ப்பாலில் குழந்தையைப் பாதுகாக்கக் கூடிய பல காரணிகள் உள்ளன.
 • தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பேதி சுவாச மண்டல நோய்கள் போன்ற தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை.
 • தாய்ப்பால் உடனடியாகக் கிடைக்கக்கூடியது. கிருமிகள் இல்லாத கலவை ஆகும். அனைவருக்கும் ஏற்றதாகவும் எளிதாகக் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளது. தயார் செய்யவோ ஏதும் செலவு செய்யவோ தேவையில்லை.
 • அலர்ஜி நோய்கள் வராமல் குழந்தையைக் காக்கின்றது. குழந்தை எளிதாக மலம் கழிக்க தாய்ப்பால் உதவுகிறது. மலச்சிக்கல் வராமல் காக்கின்றது.
 • தாய்க்கும் சேய்க்கும் இடையே நல்ல நேசப் பிணைப்பினை உண்டாக்குகிறது.
 • தாய்ப்பாலூட்டுதல் ஓர் இயற்கையான கர்ப்பதடையாகவும் விளங்குகிறது. பாலூட்டும் சமயத்தில் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.
 • கர்ப்பபை பழைய நிலைக்கு சுருங்கவும் தாய்ப்பாலூட்டும் செயல் உதவுகிறது.
 • தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் அதிக புத்திசாலித்தனத்துடனும் பிற்கால வாழ்க்கையில் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய், இருதய நோய், கல்லீரல், கேன்சர் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படாமலும் இருக்கிறார்கள்.
 • தாய்க்கு தாய்பாலூட்டுவதால் மார்பகப் புற்றுநோய் கருவகப் புற்றுநோய் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.
 • பணம், நேரம் ஆகிய அனைத்தையும் சேமிக்க உதவுவதோடல்லாமல் தாய்ப்பாலூட்டுதலினால் குடும்பம் சமூகம் ஆகியவை பால், ஆரோக்கியம் நோய்களுக்காக மிகக் குறைவாகவே செலவு செய்கின்றன.

பேறுகால பின் கவனிப்பு

பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பு கீழ்க்கண்டவற்றை கொண்டுள்ளது.

 1. தாயின் உடல் நலத்தைப் பேணுதல் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு போதுமான அளவு தண்ணீர் சுத்தம் சுகாதாரம் வசதியான நிலை உடற்பயிற்சி ஆகியவற்றை அளித்து பிரசவித்த தாயின் உடல் நலத்தைப் பேணுதல் வேண்டும்.
 2. பிரசவித்த பெண்ணை சீக்கிரமாகவே நடக்கச் செய்தல் வேண்டும்.
 3. உடல் நலத்தோடு சேர்ந்து மன நலமும் பேணிடல் வேண்டும்.
 4. தாய்ப்பாலுட்டல் துவக்க வேண்டும்.

இவற்றைச் செய்வதன் மூலம் பியூர்பேரியத்தை சிக்கல்கள் ஏதுமின்றி சமாளித்தல் இயலும்.

பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பில் கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

 1. போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அளிக்க வேண்டும்.
 2. தொற்று நோயின் அறிகுறிகளோ அதிக இரத்தப்போக்கு உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

உணவு

 • சமச்சீரான உணவு போதுமான அளவு புரதம் (90 கிராம்) தாது உப்புக்கள் உயிர்ச்சத்துக்கள் கொண்ட உணவினை அளித்தல் வேண்டும்.
 • கூடுதலான தண்ணீர் குடிக்க பரிந்துரைக்க வேண்டும்.
 • உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
 • வலிநிவாரணிகளும் ஆன்டிபயாடிக் மருந்துகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கப்பட வேண்டும்.
 • நோய் தொற்றுவதற்கு வழியில்லாத வகையில் கவனத்துடன் பெரினியல் சவ்வினை சுத்தம் செய்ய வேண்டும்.

சிறுநீர் கழித்தல்

பிரசவம் ஆனதும் முதல் சில நாட்களுக்கு சிறுநீர் கழித்தல் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனாலும் சிறுநீர்ப்பை முழுவதுமாக காலியாகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல்

 • பெருங்குடலில் பெரிஸ்டால்டிக் அசைவுகள் மிகவும் மந்தமாக இருப்பதால் பியூர்பேரியத்தில் மலச்சிக்கல் பொதுவாக அதிகமாக காணப்படும் பிரச்சினையாகும்.
 • நார்ச்சத்து அதிகம் உள்ள உணவினை திட்டமிடுவதால் இப்பிரச்சினை தீரும்.

பிரசவத்திற்குப் பின் செய்ய வேண்டிய உடற்பயிற்சி

 • கர்ப்பத்தின் போது பிரசவத்தின் போதும் மிகவும் இழுக்கப்பட்ட தசைகளின் சக்தியை திரும்பப் பெறுவதற்காக, உடற்பயிற்சி செய்ய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து பயிற்சிகளை கற்றும் கொடுக்க வேண்டும்.
 • இரும்புச்சத்து மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள அறிவுறுத்தல் வேண்டும்.
 • தினப்படி செயல்களை மெதுவாக செய்ய ஆரம்பிக்குமாறு உற்சாகப்படுத்த வேண்டும். தாய்ப்பாலூட்டவும் சிசுவுக்கு அளிக்க வேண்டிய கவனிப்பையும் அறிவுறுத்த வேண்டும்.
 • குடும்ப நல ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
 • 6 வாரங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.

குடும்ப நலம்

பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் தாய்க்கு தற்காலிக (அ) நிலையான கர்ப்பத்தடை முறைகளைப் பற்றி அறிவுறுத்தி அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பின்பற்றுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் குடும்ப நலத்திட்டம்

இந்தியாவில் தேசிய குடும்ப நலத்திட்டம் 1975ல் தொடங்கப்பட்டது. இதில் 5 அம்சங்கள் உண்டு. அவையாவன

1. தாய் சேய் நலப்பணி

2. கர்ப்பிணிப் பெண்ணுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி டெடனஸ், டாக்சாய்ட் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி. (பி.சி.ஐ. போலியோ, டிபிடி (DPT) தட்டம்மை ஆகியவற்றை தவறாது அளித்தல்.

3. ஊட்டச்சத்துள்ள உணவு அதிகப்படியான இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகப்படியான உயிர்ச்சத்து அ வும் தவறாது அளித்தல்.

ஆரம்ப சுகாதார பராமரிப்பு பற்றிய சுகாதாரக் கல்வி. மருத்துவ கண்காணிப்பின் கீழ் கருக்கலைப்பு செய்தல் 1972 முதல் சட்டபூர்வமாக கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டதால் சட்டவிரோதமாக கருக்கலைப்புகள் செய்வது குறைக்கப்பட்டு பெண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

மகப்பேற்றில் உதவும் பெண்கள் பிரசவத்தில் மிக முக்கியமாக பங்கு வகிக்கின்றனார்கள். கரு முட்டை வெளியிடலைத் தொடர்ந்து கருமுட்டையும் ஆணின் விந்தணுவும் இணைந்து சினை முட்டையை உருவாக்குகின்றன. கருவுற்ற சினை முட்டையானது செல் பெருக்கம் அடைந்து 270 நாட்களுக்குள் முதிர்கருவாக வளர்ச்சியடைகிறது.

நச்சுக் கொடியானது முதிர்கருவுக்கு சுவாசப் பையாக பணிபுரிகிறது. ஆக்ஸிஜனை அளித்து கார்பன் டை ஆக்ஸைடை வளர்ச்சிதை மாற்றத்தினால் விளையும் மற்ற கழிவுப் பொருட்களையும் வாங்கி தாயின் இரத்தத்திற்கு அனுப்புகிறது. மேலும் குளுக்கோஸ் அமினோ அமிலங்கள் கொழுப்பு அமலங்கள் உயிர்ச்சத்துக்கள் தாதுஉப்புக்கள் போன்றவற்றை தாயின் இரத்தத்திலிருந்து உறிஞ்சி பெற்றுத் தருகிறது. ஆம்னியாடிக் திரவம் என்பது தெளிவான மஞ்சள் நிற திரவம். இதில் தான் முதிர்கரு மிதந்தவாறு இருக்கும். கர்ப்பகாலத்தில் தாயின் உடல் உறுப்புகளில் முக்கியமாக இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் பல விதமான மாற்றங்கள் ஏற்படும்.

கர்ப்பத்தை உறுதிப்படுத்த அதன் பலவித அறிகுறிகள் மற்றும் இம்யூனோலாஜிகல் பரிசோதனைகள் உதவும். கர்ப்பகால கவனிப்பு என்பது கர்ப்பத்தைப் பதிவு செய்தல், தவறாது பரிசோதனை செய்து கொள்ளுதல், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுத்தல், இரணஜன்னிக்கு எதிரான தடுப்பூசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தாயின் ஆரோக்கியத்தைப் பேணவும், வளரும் முதிர்கருவின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு மிகவும் இன்றியமையாததாகும்.

பிரசவம் என்பது கருப்பை மிகுந்த சக்தியுடன் சுருங்கி குழந்தை, நச்சுக்கொடி மற்றும் சவ்வுகளை வெளித்தள்ளுதல் ஆகும். பிரசவம் நிகழும் போது அதற்குப் பின்னும் செவிலியரின் பணி அதிகம் தலையிடாமல் கவனத்துடன் கண்காணித்து வருதலும் பிரசவம் முன்னேறுவதை மிகுந்த கவனத்துடன் கவனித்தலே ஆகும். பிரசவத்தைத் தொடர்ந்து தாய்ப்பாலூட்டத் தொடங்க வேண்டும். மருத்துவமனையை விட்டு வெளியில் அனுப்பும் போது தாய்க்கு மற்ற குடும்பத்தினருக்கும் சிசுவிற்கு அளிக்க வேண்டிய தடுப்பூசிகள் பிரசவத்திற்கு பின் காலத்திய கவனிப்பு சிசு கவனிப்பு ஆகியவற்றைப் பற்றிய சுகாதாரக் கல்வி அளித்து அனுப்ப வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate