பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மகப்பேறு மருத்துவம்

மகப்பேறு மருத்துவம் (MIDWIFERY) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

மகப்பேறு செவிலியல் மிகவும் பழைமை வாய்ந்ததும் ஆர்வத்திற்குரிய வரலாறும் கொண்டதாகும். எல்லா காலத்திலும் எல்லா நாட்டிலும் பல நூற்றாண்டுகளாக பெண்கள் மகப்பேறு செவிலியல் என்ற உன்னதமான தொழிலை மேற்கொண்டுள்ளனர். தத்துவ ஞானி சாக்ரடீஸின் அன்னையார் ஒரு மகப்பேறு செவிலியராவார். அவர் அத்தொழிலை ஒரு மதிப்பிற்குரிய தொழிலாக கருதினார்.

தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் கருத்துப்படி இயற்கையான பிரசவத்தின் போது உதவும் மகப்பேறு செவிலியப்பணி மிகவும் இன்றியமையாததும் போற்றத்தக்க பணியுமாகும். மகப்பேறு செவிலியர் பெண்களுக்கு பேறுகாலத்தின் போது அருங்கடமையாற்றுகின்றனர். புனித பைபிளிலும் மகப்பேறு செவிலியர் பணி பற்றி மதிப்புடன் கூறப்பட்டுள்ளது. பழைய ஏற்பாடு நூலில் அவர்களின் அரும்பணி பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டில் இறுதி வரை மகப்பேறு செவிலியப்பணி பெண்களால் மட்டுமே செய்யப்பட்டது. பிரசவத்தின் போது பணிபுரிந்த ஆண்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பதினேழாம் நூற்றாண்டிலிருந்து ஆண்களும் ஆண் மகப்பேறு செவிலியராக பணி மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் பொது மக்கள் மற்றும் பெண் மகப்பேறு செவிலியரிடமிருந்தும் எழுந்த மிகுந்த எதிர்ப்புகிடையிலும் ஆண் மகப்பேறு செவிலியராக பணிபுரிபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.

ஆங்கில சொல்லான மிட்வொய்ஃப் என்றால் பிரசவத்தின் போது அப்பெண்ணுடன் அருகிலிருந்து கவனித்து கொள்பவர் என்ற பொருளாகும். மகப்பேறு செவிலியர் பேறு காலத்தின் போது தாயையும் சேயையும் கவனித்து கொள்ளும் முக்கிய பணியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கர்ப்பகாலம், பேறுகாலம் அதன் பிந்தைய காலத்தின் போது கர்ப்பிணி பெண்களை கண்காணித்து தேவையான பராமரிப்பு அறிவுரைகள் கொடுத்து பிரசவத்தை கவனித்து தாயையும் சேயையும் கவனித்து கொள்ளும் தகுதியை பெற்றிருக்க வேண்டும். பேறுகாலம் என்பது ஆயுளுக்கும் போற்றி பாதுகாக்கப்படும் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். அதைச் சார்ந்த சிறுசிறு நிகழ்வுகளும் எப்போதும் நினைவில் வைத்து கொள்ளப்படுகின்றன.

இத்தகைய முக்கியமான பிரசவ காலத்தின் போது மகப்பேறு செவிலியர்கள் அரும்பணி செய்து சேய்க்கும் பெற்றோருக்கும் ஒரு நல்ல ஆரம்பத்தை ஏற்படுத்துகின்றனர். அத்தகைய பணியை மகப்பேறு செவிலியர்கள் மகப்பேறு பற்றிய தெளித்த அறிவை பெற்றிருந்தால் மட்டுமே அளிக்க முடியும். மகப்பேறு செவிலியருக்கான கல்வி அவர்கள் புரிய வேண்டிய பல கடமைகளுக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்டுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் இருபத்தைந்து ஆண்டுகளாக சில மருத்துவமனைகள் மகப்பேறு செவிலியப் பணியை பயிற்றுவித்து சான்றிதழ் அளிக்க தொடங்கின. 1902 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் மகப்பேறு செவிலியப்பயிற்சியை நன்கு முறைப்படுத்தவும் பாதுகாக்கும் பொருட்டும் அவர்களை மேற்பார்வை செய்யவும் மகப்பேறு செவிலியர் சட்டத்தை இயற்றியது.

1992 இல் உலக சுகாதார நிறுவனம் மகப்பேறு செவிலியர் என்பவர் ஒரு நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு செவிலியல் கல்வி அளிக்கும் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட படிப்புகளை வெற்றிகரமாக முடித்து கற்றுத் தேர்ந்த பணியினை முறைப்படி பதிவு செய்த பின்னரே அவர் சட்டப்படி மகப்பேறு செவிலியப்பணியை மேற்கொள்ளும் தகுதி பெற்றவராகிறார் என்று வரையறுக்கிறது.

மகப்பேறு

 • மகப்பேறு செவிலியல் என்பது மகப்பேறு செவிலியராகப் பணியாற்ற தேவையான முக்கிய அறிவாகும்.
 • மகப்பேறு மருத்துவம் கர்ப்பகாலம் பேறுகாலம் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தை மேலாண்மை செய்யும் மருத்துவ துறையின் ஒரு பகுதியாகும்.
 • இனபெருக்கம் என்பது முதிர்ந்த குழந்தை உருவாகுதலாகும்.
 • கர்ப்பம் என்பது ஒருப்பெண் கரு உண்டாகி பிரசவம் வரை அக்கருவை தனது கர்ப்பபையில் சுமக்கும் நிலையாகும். கர்ப்பகாலம் அல்லது கர்ப்பம் என்றும் கூறலாம்.
 • கிராவிடா என்பது கர்ப்ப காலத்தை கணக்கிடாமல் கர்ப்ப நிலையை மட்டும் குறிக்கும்.
 • பாரா என்பது ஒரு பெண் குழந்தை பெற்றபின் பெறும் நிலையாகும். நல்லிபாரா என்பது ஒரு பெண் இதுவரை பிரசவிக்காத நிலையாகும்.
 • முதல் கர்ப்பம் பிரைமி திராவிடர் என்பது ஒரு பெண் முதன் முறையாக கர்ப்பமுற்றிருக்கும் நிலையாகும்.
 • பலமுறை கர்ப்பம் - மல்ட்டி கிராவிடர் என்பது ஒன்றுக்கு மேற்பட்டு கர்ப்பமுற்றிருக்கும் நிலையாகும்.

இனப்பெருக்கம் அடைதல்

இயற்கையிலேயே பெண்களின் உடலமைப்பு கருவைச் சுமந்து, குழந்தை பெற்று கொள்ளவும், பின் ஒரு தாயாக குழந்தையை பராமரிக்கவும் ஏற்றவாறு அமைந்துள்ளது. குழந்தையை பெற்று கொள்ளுமுன் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை பற்றி அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள்

பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள் வெளிப்புற உறுப்புகள் மற்றும் உட்புற உறுப்புகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

வெளிப்புற உறுப்புகள்

வெளியுறுப்புகள் எல்லாம் சேர்ந்து யோனி எனப்படும். அவை பின்வருமாறு

 • குறிமேடு (மான்ஸ் வெனிரிஸ்) - இது சிம்பிஸிஸ் பியூபிஸ் என்ற எலும்பின் மேல் அமைந்துள்ளது. பூப்பு அடைந்த பிறகு இது சிறு ரோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
 • வெளி உதடுகள் (லேபியா மெஜோரா) - இவை யோனியின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளவை. இவையும் வெளிப்புறத்தில் ரோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
 • சிறு உதடுகள் (லேபியா மைனோரா) - இவை வெளி உதடுகளின் உள்ளே இருப்பவை. இவை சுரப்பிகளின் சுரப்பு நீரால் ஈரமாக இருக்கும்.
 • கிளிடோரிஸ் - இது சிறிய உணர்ச்சி மிகுந்த உறுப்பு. ஆண் குறியைப் போலவே இது விம்மி நிமிரும், திசுக்களை உடையது.
 • வெஸ்டிப்யூல் - இது சிறு உதடுகளுக்கு இடையே உள்ள முக்கோண வடிவ பாகமாகும். சிறுநீர்த் தாரையின் துவாரம் இதில் தான் உள்ளது. இது யோனித் துவாரத்தின் முன்புறம் உள்ளது.
 • சிசுத்தாரைத் துவாரம் - இது ஹைமென் எனப்படும் மெல்லிய சவ்வினால் பகுதியாக மூடப்பட்டிருக்கும்.
 • சிறுநீர்த்தாரை துவாரம் - இது சிறுநீர்த் தாரையின் வெளிப்புற துவாரம்.

உட்புற உறுப்புகள்

இடுப்புக் கூட்டில் அமைந்துள்ள உட்புற உறுப்புகள் - முட்டைப்பைகள் (கருவகங்கள்), ஸஃபலோப்பியன் குழாய்கள், கருப்பை, சிசுத்தாரை ஆகியவை.

சிசுத்தாரை (வெஜைனா) - சிசுத்தாரை குழந்தை பிறக்கும் வழியாகவும் கூட பால் உறவின் போது ஆண் குறியை ஏற்றுக் கொள்ளவும் மேலும் மாத விலக்கு ஒழுக்கு வெளியாகும் வழியாகவும் இருக்கிறது. சிசுத்தாரையின் உட்சுவர் மெல்லிய மடிப்புத் தோலால் ஆனது. இது கருப்பையின் கழுத்திலிருந்து யோனிவரை உள்ளது.

கருப்பை - கருப்பை என்பது பேரிக்காய் வடிவத்தில் உள்ள தசை உறுப்பு. இது இடுப்பெலும்புக் குழியின் மத்தியில் உள்ளது. இது கர்ப்பகாலத்தின் போது வளரும் சிசுவை பாதுகாத்து கர்ப்பகால இறுதியில் குழந்தையை வெளியேற்றுகிறது.

கருப்பையில் கீழ்க்கண்ட பகுதிகள் உள்ளன. கர்ப்பபையின் 2/3 மேல்பகுதி கர்ப்பபையின் உடல்பகுதியாகும். ஃபண்டஸ் என்பது ஒரு ஸஃபலோப்பியன் குழாய்களுக்கு இடையில் உள்ள கருப்பையின் மேல்பாகம். கார்ணுவா என்ற பகுதியில் ஸஃபலோப்பியன் குழாய்கள் கருப்பையோடு இணைக்கின்றது. கர்ப்பபையின் உட்பகுதி முக்கோண வடிவில் முன் மற்றும் பின் தசை சுவர்களுக்கு இடையில் உள்ளது. செர்விக்ஸ் (கழுத்து) குறுகலாக இருக்கும்.

கீழ்ப்பகுதி - இது கீழே சிசுத்தாரைக்குள் நீட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் உடல் பகுதியுடன் தொடர்பு கொண்டுள்ள உள்வாய் மற்றும் சிசுத்தாரையுள் சென்று இருக்கும் வெளிவாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அது நார்த்திசுக்களால் ஆன தடுப்புகளால் பல தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சுரப்புத் திசுக்களிலிருந்து வரும் நாளங்கள் எல்லாம் மார்புக் காம்பில் குவிந்து இருக்கின்றன. காம்பின் தட்டையான பகுதியில் அந்த நாளங்களின் துவாரங்கள் உள்ளன.

கருப்பையின் சுவர்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டவை அவை

 • எண்டோமெட்ரியம் - இது மெல்லிய திசுக்களினால் ஆன உள் பக்கச்சுவர்.
 • மையோமெட்ரியம் - இது நடுப்புறமுள்ள கனமான வலிவான தலையாலான அடுக்காகும்.
 • பெரி மெட்ரியம் - இது வெளிப்பக்கமாக இரண்டு ஸிரஸ் அடுக்குகளானது.

கருப்பையின் பணிகள்

மாதவிலக்கு ஒழுக்கு கருப்பையிலிருந்து கருவாயாகிய யோனி வழியாக வெளியேறுகிறது. கருப்பை கருவுற்ற சினை முட்டையை வாங்கிக் கொண்டு வர உதவுகிறது. கருவுக்கு ஊட்டச்சத்து தந்து வளர்க்கின்றது. மேலும் பிரசவத்தின் போது கருப்பைச் சுவர்கள் சுருங்கி வளர்ந்த கருவாகிய குழந்தையையும் நச்சுக் கொடியையும் வெளியேற்றுகிறது.

ஸஃபலோப்பியன் குழாய்கள்

ஃபண்டஸ்க்குக் கீழே கருப்பையின் பக்கவாட்டில் இணைக்கப்பட்டுள்ளன. இரு மெல்லிய குழாய்கள் இவை கருப்பைக்குப் பின்புறமாக வளைந்து கருவகத்தைச் சுற்றி வளைவு போல் உள்ளன. இக்குழாய்கள் கருவகத்திலிருந்து வெளியாகும் முட்டைகளைச் சேகரித்து கருப்பைக்கு அனுப்பவும் மேலும் விந்தணுக்களை ஏற்றுக்கொண்டு கருவுறுதல் நடப்பதற்கான இடமாகவும் விளங்குகின்றன.

கருவகங்கள் (முட்டைப்பைகள்)

பெண்ணின் முக்கியமான இனப்பெருக்க உறுப்பு கருவகம் ஆகும். இங்கு தான் கருவணுக்கள் உற்பத்தியாகின்றன. இது ஃபலோப்பியன் குழாய்களுக்கு இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாகப் பயறு வடிவத்தில் காணப்படுகின்றன.

 • கருவகங்கள் கருவணுவை உற்பத்தி செய்து 28 நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றுவதோடல்லாமல் ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்லோல் எனும் ஹார்மோன்களை உற்பத்திச் செய்கிறது.
 • கருவகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள நீர்க்கருக்கூடுகள் காணப்படுகின்றன.
 • முதிர்ந்த நீர்க்கருக்கூட்டினுள் இருக்கும் கருவணு நீர்க்கருக்கூடு வெடித்து வயிற்றைக்குள் வெளியேற்றப்படுகிது.

மார்பகங்கள்

முழு வளர்ச்சியடைந்த பெண்ணின் மார்பகங்கள் அரை வட்டமான வெளி அமைப்புடன் இருக்கும். கர்ப்ப காலத்தில் பிட்யூட்டரி சுரப்பியிலும், கருப்பையிலும் சுரக்கும் ஹார்மோன்கள் மார்பகங்களை பெருக்கும்படிச் செய்கின்றன. இது பால் உற்பத்தி (லேக்ட்டேஷன்) செய்யும் பணிக்கான ஆயத்த நிலையாகும்.

 • குழந்தை பிறந்து மூன்றாம் அல்லது நான்காம் நாளினில் பால் தடையில்லாமல் சுரந்து குழந்தைக்கு வெளியாகும். குழந்தை சப்பி உறிஞ்சுவதால் எற்படும் தூண்டுதல் காரணமாக பால் சுரப்பது தொடரும்.

பெண்ணின் இடுப்புக்கூடு

 • இடுப்பு எலும்புகள் பக்கத்துக்கு ஒன்றாக சேர்ந்து இடுப்புக்கூட்டை உண்டாக்குகின்றன. இடுப்புக் கூடு என்பது பாத்திரம் போன்ற அமைப்புடைய வளையமான எலும்பு. பெண்களில் இடுப்புக் கூட்டின் கீழ்ப் பகுதியாகிய உண்மைக் கூபகம் குழந்தை பிறக்கும் போது குழந்தையின் தலை இதன் வழியாக வெளியேற வசதியாக வளைந்து இருக்கும்.
 • இடுப்பு எலும்பில் விளிம்பு பகுதி, உட்பகுதி, வெளியேறும் பகுதி என மூன்று பாகங்களுள்ளன.
 • இந்த இடுப்புக் கூடு நான்கு எலும்புகளால் ஆனது. இரண்டு இடுப்பு எலும்புகள் (இந்நாமினேட் எலும்புகள், ஸாக்ரம் பீடிகை (காக்கைச்சிலிகஸ்)), ஒரு மஸ்கரம், ஒரு காக்ஸிஸ்.

விந்துப்பைகள்

சிறிய விந்துப் பைகள் சிறுநீரை வெளியேற்றும் குழாயின் பக்கத்துக்கு ஒன்றாக சிறுநீர்ப் பையின் அடி பாகத்துக்கு அருகில் உள்ளன. விந்துப்பையில் சுரக்கும் திரவத்திற்குச் செமென் என்று பெயர். விந்து குழாய்கள் கொண்டுவரும் விந்தணுவோடு செமென் என்ற திரவத்தைக் கலப்பதால் விந்தணுக்கள் உயிருடன் இருக்கவும் விரைவாக நீந்தவும் ஏதுவாகிறது.

ஆணின் இனப்பெருக்க உறுப்புகள்

ஆணின் இனப்பெருக்க உறுப்புகள் கீழ்க்கண்டவற்றை கொண்டுள்ளன.

விரை

 • இவைகள் தசை நார்களான உறையில் உள்ளன. ஒவ்வொரு விரையும் வெளிர் நிறமான நீள் வட்ட வடிவச் சுரப்பிகளாகும்.
 • ஒவ்வொரு விரையிலும் லட்சக்கணக்கான விந்தணுக்கள் எனப்படும் ஆண் விந்துக்கள் உற்பத்தியாகின்றன.
 • இது டெஸ்டோஸ்ட்ரோன் எனும் ஹார்மோனையும் சுரக்கின்றன. இதுவே ஆண்களின் துணைப்பால் பண்புகளுக்கும் மேலும் விந்து உற்பத்திக்கும் காரணமாக விளங்குகின்றது.
 • இது பருவமடையும் போது உடலில் மாற்றங்களைச் செய்கின்றது.

விரைகள் மூன்று அடுக்குகளைக் கொண்டவை

டியூனிகா வேஸ்குலோசா

இது எபிதீலியத் இணைப்புத் திசுக்களினால் ஆன உள் சுவர் ஆகும்.

டியூனிகா ஆல்புஜினியா

இது நார்த் திசுவினால் செய்யப்பட்டது. இதில் உள்ள நார்கள் விரைகளைப் பல பாகங்களாகப் பிரிக்கின்றன. ஒவ்வொரு பாகத்திலும் மெல்லிய குழாய்கள் காணப்படுகின்றன.

டியூனிகா வெஜினாவிஸ்

இது பெரிடோனியத்தால் ஆன வெளிப்புறச் சுவர்.

இஜாக்குலேட்டரி நாளம் (விந்து வெளியேறும் நிலை)

விந்து நாளமானது செமினல் வெசிக்கிளில் இருந்து புறப்பட்டு பிரோஸ்டேட் சுரப்பியின் வழியாக யுரீத்ரா என்ற பகுதியை அடைகிறது.

புரோஸ்டேட் சுரப்பிகள்

இவை மெல்லிய திரவத்தை சுரந்து சிறு நாளங்கள் வழியாக சிறுநீர் குழாய்க்கு அனுப்புகிறது. மலக்குடலுக்கும் பியூபிஸ் எலும்புக்கும் நடுவில் சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தைச் சுற்றி புரோஸ்டேட் சுரப்பிகள் அமைந்துள்ளது.

ஆண்குறி

இது சிறுநீர் கழிக்கவும் இனப்பெருக்கத்துக்கு உதவவும் ஆணுக்கு உள்ள வெளிப்புற உறுப்பாகும். சிறுநீர் வெளியேற்றும் குழாய் ஆண்குறி வழியாக வந்து கிளான்ஸ் ஆண்குறியில் துவாரத்துடன் உள்ளது. இக்குறி தளர்த்தியான இரட்டை மடிப்புத் தோலினால் ஆனது.

ஆண் பால் ஹார்மோன்கள்

ஆண் பருவம் அடைந்ததும் நாளமில்லா சுரப்பிகள் ஃபாலிக்குலார் தூண்டும் ஹார்மோனையும் லூட்னைசிங் ஹார்மோனையும் சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளைச் செயல்படுமாறு தூண்டுகின்றன. இந்த ஹார்மோன்கள் உடலில் கீழ்க்கண்ட பல்வேறு மாற்றங்களையும் உருவாக்குகின்றன.

 • ஆண் உடல் அதிகத் தசையமைப்பு உடையதாகிறது. குரலில் அழுத்தம் ஏற்படுகிறது. முகம், மார்பு, அக்குள், வயிறு, தொடைச் சந்துப்பகுதி ஆகிய இடங்களில் ரோமங்கள் வளர உதவுகிறது.
 • ஃபாலிக்குலார் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் விந்து மெலி குழாய்களைத் தூண்டி விந்து உற்பத்தியை துவக்கிறது.
 • டெஸ்ட்டோஸ்டீரோன் ஹார்மோனும் சுரக்கப்படுகிறது. ஆண்டிரோஜன் விந்தணுக்கள் உருவாதலுக்குத் துணைபுரிகிறது.
 • டெஸ்டோஸ்டிரோன் ஆண்களிடத்து துணைப்பால் பண்புகள் ஏற்படுவதற்குத் துணை புரிகின்றது.
 • பால் முதிர்ச்சிப் பருவத்தில் விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் தூண்டுகிறது.

விந்தணுக்கள் உருவானதும் நுண்விந்து நாளம் வழியாக இஜாக்கு லேட்டரி நாளத்தை அடைகிறது. இங்கிருந்து சிசுத்தாரையில் 24 மிலி செமன் சேர்க்கப்படுகிறது. இந்த செமினல் திரவத்தில் 100 மில்லியன் விந்தணுக்கள் வேகமாக நீந்தியவாறு இருக்கும். இவை நிமிடத்திற்கு 23 மி.லி நீந்தி வேகமாக முன்னேறி ஃபலோப்பியன் குழாய்களின் அடைந்து கருவணுவை அடையும்.

பெண் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடு

பெண்ணுக்கு பூப்பு 11-14 வயதில் ஏற்படும். இச்சமயத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் சிறப்பான ஹார்மோன்களைச் சுரக்கத் தொடங்குகின்றன. அந்த ஹார்மோன்கள் இனப்பெருக்க உறுப்புகளைச் செயல்படுமாறு தூண்டுகின்றன.

 • கருக்கூடுகள் கருவணுவை உற்பத்தி செய்கின்றன. கருவணுவைச் சுற்றிலும் செல்களால் ஆன உறை உள்ளது. கருவணு கருவினுக்குரிய உயிரணுக்களால் சூழப்பட்டிருக்கிறது. கருவணு முதிர்ச்சியடைந்ததும் கருக்கூடு வெடித்து கருவணு வயிற்றறைக்குள் வெளியேறுகிறது. இந்நிகழ்ச்சிக்குக் கருவணு வெளியிடல் என்று பெயர்.
 • இக்கருவணு ஃபலோப்பியன் குழாயில் நுழைந்து கருப்பையை நோக்கி நகரும். அவ்வாறு நகர்கையில் விந்தணுவினை சந்திக்க நேர்ந்தால், இரண்டும் சேர்ந்து சினை முட்டை உருவாகும்.
 • கருக்கூடு வெடித்து கருவணுவை வெளியிட்ட பின் அது மஞ்சள் கூடாக உருமாறுகிறது. கருவுறுதல் நடைபெறாவிட்டால் இந்த மஞ்சள் கூடு 27 நாட்கள் வரை இருந்து விட்டு பின் மறைந்துவிடுகிறது. கருவுறுதல் நடைபெற்றால் மஞ்சள் கூடு 4-5 மாதம் வரை இருக்கிறது. இது புரொஜெஸ்டிரான் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இரு கருவுற்ற சூலைப் பாதுகாக்க உதவுகிறது.

பெண்பால் ஹார்மோன்கள்

கருவகங்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டிரான் ஆகிய இரு வகையான ஸ்டிராய்டு ஹார்மோன்களை சுரக்கின்றன.

ஈஸ்ட்ரோஜன்

இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் முக்கிய காரணியாக ஈஸ்ட்ரோஜன் விளங்குகிறது. மேலும் பெண் பால் துணைப் பண்புகள் ஏற்படுதலிலும் ஈஸ்ட்ரோஜன் முக்கியப் பங்கு வகிக்கிறது. மார்பகங்களின் வளர்ச்சிக்கும் மாதவிலக்கு ஏற்படுவதிலும் கூட ஈஸ்ட்ரோஜனின் பங்கு இன்றியமையாததாக இருக்கின்றது.

புரொஜஸ்டிரோன்

மஞ்சள் கூடு புரொஜெஸ்டிரோன் எனும் ஹார்மோனைச் சுரக்கிறது. இது தீட்டுச் சுற்றுக்கும் பால் முதிர்ச்சிக்கும் கருப்பை வளர்ச்சிக்கும், கருவின் குழவி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் அல்லது தீட்டுச்சுற்று சுழற்சி ஹார்மோன்களின் பாதிப்பினால் கருப்பையின் உட்சுவரில் (எண்டோமெட்ரியம்) ஒழுங்கு முறைப்படி ஏற்படும் வட்ட சுழற்சியான மாற்றங்களே மாதவிடாய் சுழற்சி என்பதாகும்.

பூப்படைதல்

இனப்பெருக்க உறுப்புகள் முழு வளர்ச்சியடைந்து செயல்படத் துவங்குவதையே பூப்படைதல் என்கிறோம். இது பெண்களிடம் பால் துணை பண்புகள் ஏற்படும் காலமாகும். முதல் மாதவிடாய் சுற்று பூப்படையும் பருவத்தில் ஏற்படும்.

மெனோபாஸ் (மாதவிடாய் நின்று போதல்)

ஒரு பெண்ணின் 45 வயதுக்கும் 50க்கும் இடையில் மாதவிடாய் ஏற்படுதல் ஒழுங்கற்று இருந்து பிறகு முற்றிலும் நின்றுவிடும். இதுவே இறுதி மாதவிடாய் ஆகும்.

 • கருவகங்கள் கருவணுக்களை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் உற்பத்தியும் நின்று விடுகின்றது.
 • இந்த இறுதி மாதவிடாய் வழக்கமாக இரண்டு ஆண்டுகளில் நடக்கிறது.
 • இறுதி மாதவிடாயின் போது சாதாரணமாக ஒரு பெண் அவ்வப்போது உஷ்ணம் உடலில் ஓடுவது போல உணர்வாள். வியர்வை அதிகமாக இருக்கும்.
 • தலைவலி, நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, சோர்வு, இருதயப்படபடப்பு முதலியவை இருக்கும்.

மாதவிலக்கு

மாதவிலக்கு என்பது கருப்பையின் ஒரு முக்கிய பணியாகும். சராசரியாக 13 வயதில் பூப்படையும் போது இது தொடங்குகிறது. ஒவ்வொரு 28வது நாளிலும் ஏற்படும். இது 45 முதல் 50 வயதில் மாதவிடாய் நின்று போகும் வரை நடைபெறுகிறது. மாதவிலக்குச் சுழற்சியின் நோக்கம் கருவடைந்த முட்டைகளை எண்டோமெட்ரியம் பெற்றுக் கொள்ள தயார்படுத்துவதாகும்.

இந்த மாதவிலக்குச் சுற்று மூன்று காலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை .

பழுதுபார்க்கும் காலம் (புரோலிஃபரேட்டிவ் காலம்)

எண்டோமெட்ரிய இரத்த ஒழுக்கைத் தொடர்ந்து வரும் இக்காலத்தில் ஃபாலிக்குலார் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனின் அளவு இரத்தத்தில் அதிகரித்து அதன் மூலம் ஈஸ்ட்ரோஜனின் அளவும் அதிகரிக்கின்றது. இது எண்டோமெட்ரியத்தைப் பழுது பார்த்து தயார்படுத்துகிறது. இரத்த ஒழுக்கு காலத்திலிருந்து கருமுட்டை வெளியிடல் காலம் வரை இப்பழுது பார்த்தல் நீடிக்கும்.

சுரப்பு காலம்

ஓய்வு காலத்தில் எண்டோமெட்ரியம் மெதுவாக வளர ஆரம்பிக்கின்றது. அது பருமனாகவும், மென்மையாகவும் ஆகி அதிக இரத்த ஓட்டமும் பெறுகின்றது. இதே காலத்தில் ஓவுலேஷனும் (கருவணு வெளியிடல்) நடைபெறுகின்றது. ஒவுலேஷன் பொதுவாக இரு மாதவிலக்குக் காலங்களுக்கு நடுவில் உள்ள காலத்தில் நடைபெறும். இந்த நேரம் தான் பெண் சினை அடையும் தன்மையில் உள்ள நேரம்.

மாதவிலக்கு காலம்

கருப்பைக்கு சினை முட்டை வந்து சேரவில்லை எனில், எண்டோமெட்ரியம் உடைந்து சிதைகிறது. அதன் விளைவாக மாதவிலக்கு திரவம் ஒழுகுகிறது. 3 முதல் 5 நாட்கள் வரை எண்டோமெட்ரிய இரத்தம் ஒழுகும். இந்த இரத்தத்தில் எபிதீலிய செல்களும் சளி போன்ற பொருளும் அடங்கி இருக்கும்.

ஃபாலிக்குலார் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோன் :

கருவகங்களை ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி செய்ய தூண்டவும் கருவணு முதிர்ச்சி அடையவும் இந்த ஹார்மோன் உதவி புரிகிறது.

லூடினைசிங் ஹார்மோன்

மஞ்சள் கூட்டினை புராஜெஸ்டிரான் உற்பத்திக்குத் தூண்டுவதே இந்த ஹார்மோனின் வேலையாகும்.

 • கருவகத்திலிருந்து கருமுட்டை வெளியேறியதைத் தொடர்ந்து இந்தக் கருமுட்டை (0.15 மி.மி அளவுள்ளது) ஃபலோப்பியன் குழாய்க்குள் நுழைந்து கருப்பையை நோக்கி நகரும்.
 • இச்சமயத்தில் ஆண் பெண் புணர்ச்சி ஏற்பட்டால் விந்தணுவானது சிசுத்தாரை வழியாக நுழைந்து கருப்பை வழியாக ஃபலோப்பியன் குழாயை அடைகின்றது.
 • கருமுட்டைக்கும், விந்தணுவுக்கும் இடையே புணர்ச்சி ஏற்பட்டு சினை முட்டை உருவாகிறது.
 • 300 மில்லியன் விந்தணுக்கள் சினைத்தாரைக்குள் நுழைந்தாலும் ஒன்று மட்டுமே கருவணுவைத் துளைத்து உள்ளே நுழைகிறது. இதற்கு ஹையாலுரோனி டேஸ் என்ற என்ஸைம் விந்தணுவுக்கு துணையாக விளங்குகிறது.
 • விந்தணு மற்றும் கருமுட்டை ஒவ்வொன்றும் 23 குரோமோசோம்களை தந்து 46 குரோம்சோம்கள் கொண்ட சினைமுட்டையை உருவாக்குகின்றன. சினைமுட்டை மெதுவாக நகர்ந்து கருப்பையை அடைந்து எண்டோ மெட்ரியத்தில் புதைகிறது. இதற்கு நிடேஷன் என்று பெயர். புதைந்த சினைமுட்டையை எண்டோமெட்ரியம் முழுவதுமாக மூடிவிடுகிறது.
 • இந்த சினைமுட்டை கருப்பையை 3-4 தினங்களில் அடைகிறது. இது மிகவும் விரைவாக வளர்கிறது.

செல்கள் பெருகப் பெருக ஓர் குறிப்பிட்ட வடிவில் அமைகின்றன. ஒரு செல் இரண்டாகவும் இரண்டு நான்காகவும் பின்னர் 8, 16, 32 என்று பெருக்கப்பட்டு இறுதியில் செல்லினால் ஆன ஒரு பந்தாக மாறுகிறது. இப்பந்திற்கு மொருலா (மல்பெரி) என்று பெயர். பின்னர் இதில் திரவம் நிரம்பிய ஒரு குழி தோன்றுகிறது. உட்புற செல் பந்து மூன்று பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை:

எக்டோட்ரம்

இது தோல் மற்றும் நரம்பு மண்டலத்தை உருவாக்குகிறது.

மீசோட்ரம்

இது எலும்பு மற்றும் தசைகள் இருதயம் மற்றும் இரத்த நாளங்கள் மற்றும் ஒரு சில உள் உறுப்புகள் ஆகியவற்றை உருவாக்குகிறது.

எண்டோட்ரம்

இது சளிச்சவ்வு மற்றும் சுரப்பிகள் ஆகியவற்றை உருவாக்குகின்றது.

பெண் கருமுட்டை

இதனை பிளாஸ்டோசீல் என்பர். பிளாஸ்டோசிஸ்டின் வெளிப்புறம் ஒரே ஒரு வரிசை செல்கள் அமைந்திருக்கும். இவற்றை ட்ரோபோபிளாஸ்ட் என்பர். உட்புறம் ஒன்றாக அமைந்துள்ள மீதம் அனைத்து செல்களையும் உட்புற செல் பந்து என்றழைப்பர். ட்ரோபோபிளாஸ்ட் நச்சுக் கொடி மற்றும் கோரியான் ஆகியவற்றையும் உட்புற செல்பந்தானது முதிர்கரு மற்றும் ஆம்னியான் என்ற சவ்வினால் ஆன பையையும் உருவாக்கும். ட்ரோபோபிளாஸ்டானது இரண்டு பகுதிகளாக உள்ளது.

வெளிப்புற சின்சிடியோட்ரோபோ பிளாஸ்ட்

இது சினைமுட்டை புதைவதற்காக எண்டோமெட்ரியத்தை அரிக்க உதவுகிறது.

உட்புற சைடோ ட்ரோபோ பிளாஸ்ட்

 • இது மனித கோரியானிக் கோனடோட்ராபின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்யும். இதுவே மஞ்சள் கூட்டைத் தூண்டி ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்ட்ரோஜன் ஆகிய ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது. இவையே கர்ப்பம் தொடர உதவியாக விளங்கும். ட்ரோபிளாஸ்ட் நச்சுக் கொடியை உருவாக்குகிறது. இதுவே பிரசவம் நிகழ்ந்து குழந்தை வெளிவரும் வரை அதற்கு உணவளிக்கின்றது.

கருவுறுதல்

 • கருவுற்ற கருமுட்டை, முதல் மூன்று வாரங்களுக்கு சினைமுட்டை என்று அழைக்கப்படும்.
 • கருவுற்ற மூன்றாம் வாரம் முதல் எட்டாம் வாரம் வரை வளர்ந்துள்ள உருப்புமைவுக்கு கருவுயிர் என்று பெயர். நான்கு வாரங்களில் இந்தக் கருவுயிர் 1 செ.மீ நீளத்தில் தலை, கண்கள், கைகால்கள் ஆகியவற்றோடு உருவாகியிருக்கும்.
 • எட்டு வாரங்களில் இது 3 செ.மீ நீளமும் கைகால்கள் பெற்று மனித முதிர் கருவாகத் தோன்றும்.

நச்சுக்கொடி

சினைமுட்டையின் ட்ரோபோபிளாஸ்ட் பகுதியிலிருந்து நச்சுக்கொடி உருவாகிறது. கர்ப்பகாலத்தின் 10வது வாரத்திலிருந்து முழு வளர்ச்சியடைந்த நச்சுக்கொடி செயல்படத் துவங்குகிறது. இந்த நச்சுக்கொடி வட்டமான தட்டையான உருவுடனும் சுமார் 22 செ.மீ விட்டத்துடனும் 2.5 செ.மீ தடிமனுடனும் பிறக்கும் போது குழந்தையின் எடையில் ஆறில் ஒரு பங்காகவும் இருக்கும்.

முதிர் கரு தனக்கு வேண்டிய உணவுச் சத்தையும் ஆக்ஸிஜனையும் கருப்பை சுவருடன் இணைந்துள்ள நச்சுக் கொடி வழியாகவே பெறுகிறது. நச்சுக்கொடி இரத்தக் குழாய்கள் நிறைந்திருக்கும். அது தாயிடத்திலிருந்தும் முதிர்கருவிடத்திலிருந்தும் உருவாவது. ஆகையால் நச்சுக் கொடிக்குத் தாயின் சார்பும் முதிர்கருவின் சார்பும் உண்டு. முதிர்கருவின் இரத்தமும் தாயின் இரத்தமும் கலப்பதில்லை. அந்த அறையின் சுவர்களின் வழியாக வாயுக்கள் உணவு கழிவுப் பொருட்கள் ஆகியவை பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

நச்சுக்கொடியின் வேலைகள்

முதிர்கருவுக்கு அமினோ அமிலங்கள், குளுகோஸ், உயிர்ச்சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாதுஉப்புகள் அனைத்தும் தாயின் இரத்ததிலிருந்து நச்சுக்கொடி வழியே செல்கிறது. நச்சுக்கொடி, குளுகோஸ், இரும்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்களை சேமித்து வைக்கின்றது. கழிவுப் பொருட்களான கார்பன்டை ஆக்ஸைடு, பிலிருபின், யூரியா ஆகியவற்றை முதிர்கருவிடமிருந்து வெளியேற்றவும் நச்சுக் கொடியே உதவுகிறது. நச்சுக் கொடியானது நுண்ணுயிரிகள் தாயிடமிருந்து கருவுக்கு போகாமல் பாதுகாக்கின்றது. மேலும் நச்சுக் கொடி, மனித கோரியானிக் கோனாடோ ட்ராபின் ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்டிரோன், மனித நச்சுகொடி லேக்டோஜன் ஆகியவற்றையும் உற்பத்தி செய்கின்றது.

முதிர் கருபை

முதிர்கரு பை என்பது இரட்டைச் சவ்வினால் ஆனது. இதனுள்ளே முதிர்கருவும், ஆம்னியாடிக் திரவமும் உள்ளது.

 • வெளிப்புற தடிமனான சவ்வு கோரியான் என்று அழைக்கப்படுகிறது. இது ட்ரோபோபிளாஸ்ட் செல்களில் இருந்து உருவாகிறது.
 • உட்புற சவ்வு, ஆம்னியான் என்று அழைக்கப்படுகிறது. இது உட்புற செல் பந்திலிருந்து உருவாகிறது.

ஆம்னியாடிக் திரவம்

இது தெளிவான, வெளிர் மஞ்சள் நிறத்திலான திரவமாகும். இதில் முதிர் கரு மிதந்து கொண்டிருக்கும். இத்திரவம், கர்ப்பகாலத்தின் இறுதியில் 500-800 மி.லி அளவு இருக்கும். முதிர்கருவின் சீரான வளர்ச்சிக்கும், இலகுவான அசைவுக்கும் ஆம்னியாடிக் திரவம் உதவிபுரிகிறது. மேலும் இத்திரவம் வெளிப்புற அதிர்வுகளிலிருந்தும் முதிர்கருவைப் பாதுகாக்கின்றது.

தொப்புள் கொடி

தொப்புள் கொடி கருவின் இரத்தக் குழாய்களை நச்சுக் கொடியுடன் இணைக்கிறது. இது கருவின் உயிர்பாதை ஆகும். இது முற்றிலும் தாயைச் சார்ந்திருக்கிறது. பிறந்த பின் தான் குழந்தை மூச்சு விடுவதற்காகத் தன் நுரையீரலைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. குழந்தை பிறப்பின் போது இரத்த ஓட்டத்திலும் மாறுதல்கள் நிகழ்ந்து குழந்தை தன்னைத்தானே சார்ந்து இருக்கும். அப்போது தொப்புள் கொடி சுத்திரிக்கப்பட்டுவிடும். தொப்புள் கொடி 50 செ.மீ நீளம் வரை இருக்கும்.

கருவின் வளர்ச்சி நிலைகள்

0-4 வாரங்கள்

 • கரு தட்டு உருவாதல்
 • மத்திய நரம்பு மண்டலம் உருவாதல்
 • இருதயம் உருவாகி, துடிக்கத் தொடங்குதல்

4 - 8 வாரங்கள்

 • விரைவான செல் பெருக்கம் நடைபெறுதல்
 • தலை மற்றும் முக வடிவங்கள் தோன்றுதல்.
 • முக்கிய உறுப்புகள் அனைத்தும் ஆரம்பகால வளர்ச்சி நிலையை அடைதல்
 • வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள் உருவாதல்.
 • கருவின் ஆரம்ப அசைவுகள் அல்ட்ராசவுண்ட் சோதனையில் தெரிதல்.

8-12 வாரங்கள்

 • கண் இமைகள் இணைந்து மூடுதல்
 • சிறுநீரகங்கள் செயல்பட ஆரம்பித்தல். வளரும் கரு 10 வாரங்களில் சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்
 • இரத்த ஓட்டம் தொடங்குதல். கரு ஆணா பெண்ணா என்பது தெளிவாகத் தெரிதல்.
 • முதிர்கரு சப்புதல் மற்றும் முழுங்குதல் ஆகிய செயல்களை செய்ய ஆரம்பிக்கும். முதிர்கரு இலகுவாக அசைய ஆரம்பிக்கும்.

12-16 வாரங்கள்

 • எலும்பு வளர்ச்சி துரிதமடைதல். குடலில் மெக்கோனியம் இருத்தல்.
 • மூக்கின் மேடு, மேல் அன்ன எலும்புகள் ஒன்று சேர்தல். நுண்முடிகள் தோல் மேல் தோன்றுதல்.
 • வாய்ப்பகுதியில் சுரக்கப்படும் வெள்ளை நிறத்திரவம் அளவில் அதிகமாக சுரக்கப்பட்டு ஆபர்குலம் எனப்படும் அடர்த்தியுள்ள பொருளாக மாறி கருப்பையின் கீழ் பகுதியின் வெளிவாயை அடைத்துக் கொள்கிறது.
 • இது நுண்ணுயிர்க் கிருமிகள் கருவுயிரை தாக்காது காக்கும் பொருட்டு இவ்வாறு கர்ப்பபையின் வெளிவாயை அடைக்கின்றது.

மகப்பேற்றின் போது ஏற்படும் மாற்றங்கள்

 • மகப்பேற்றின் போது மாதவிடாய்ச் சற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கருமுட்டை வெளியிடல் நடப்பதில்லை.
 • நச்சுக் கொடி உருவாகும் வரை மஞ்சள் கூடு (கார்பஸ் லூட்டியம்) செயல்பட்டு பின் மறைந்து விடு.
 • ஃபலோப்பியன் குழாய்கள் கருப்பை இடுப்புக் குழியிலிருந்து மேலெழும்பும் போது அதனுடன் சேர்த்து இக்குழாய்களும் இழுக்கப்படுகின்றன.

மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்

மார்பகங்கள் அளவில் பெரிதாகியும் இரத்த ஓட்டம் அதிகரித்தும் காணப்படும். மார்புக் காம்புகளும் அளவில் பருத்தும் நிறம் ஏறியும் தூண்டுதல் உறும்போது விறைப்பாகவும் இருக்கும். மார்பகக் காம்புகளைச் சுற்றியுள்ள பகுதியில் மாண்டோகமரி டியூபர்கிள் உருவாகும்.

 • கர்ப்பம் தொடங்கி 3 முதல் நான்கு வாரங்களிலேயே மார்பகங்களில் அதிக இரத்த ஓட்டம் ஏற்படுவதனால் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
 • மார்பகங்கள் கனத்து இருப்பதைப் போன்ற உணர்ச்சியும் உறுத்துவது போன்ற உணர்ச்சியும் ஏற்படும்.

இதய மற்றும் இரத்த ஓட்ட மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

அதிகரிக்கும் தேவைகளுக்கேற்ப கர்ப்பகாலத்தில் தாயின் உடலில் சுழன்று வரும் இரத்த ஓட்டத்தின் அளவு கிட்டத்தட்ட 50% அளவு அதிகரிக்கின்றது. இரத்த நாளங்கள் புரஜஸ்டிரான் என்ற ஹார்மோனின் செயலால் விரிவடைகின்றன. பிளாஸ்மாவின் அளவு 40% மற்றும் சிவப்பு இரத்த செல்களின் அளவு 20% அதிகரிக்கின்றது. இதனால் இரத்தம் நீர்த்துப் போய் மகப்பேற்றின் போது இரத்த சோகையை உண்டு செய்கிறது. நச்சுக் கொடிக்கும் முதிர்கருவுக்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு தாயின் இருதயத் துடிப்பு அதிகரிக்கின்றது.

சுவாச மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 • கருப்பை முதிர்கருவின் வளர்ச்சியைத் தொடர்ந்து அளவில் வளர வளர மேல் நோக்கி எழும்பி உதரவிதானத்தின் மீது சென்று அழுத்துவதால் சுவாசித்தல் சிரமமாகிறது.
 • இலகுவாக சுவாசிக்க இயலாமையால் அதிக முறைகள் சுவாசிக்க நேரிடுகிறது. பிராணவாயுவை கிரகித்தலும் 15% அதிகரிக்கின்றது.

சீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 • மகப்பேறு வாய்ந்த ஆரம்ப காலங்களில் வாந்தியும் வாந்தி வருவது போன்ற உணர்ச்சியும், பொதுவாக காலை நேரங்களில் அதிகம் ஏற்படுவதுண்டு.
 • மேலும் அஜீரணமும் வயிற்றில் எரிச்சலும் ஏற்படக்கூடும். புரஜஸ்டிரோனின் செயலால் மலச்சிக்கலும் அடிக்கடி ஏற்படும். அதிக உமிழ்நீர் சுரக்கும். இதனை டயலிசம் என்று அழைப்பர்.
 • வித்தியாசமான சத்து அதிகம் இல்லாத உணவுப்பொருட்கள் உண்ணும் இச்சை ஏற்படும். இதனை பிக்கா என்று கூறுவர். சில பெண்களுக்கு ஈறுகளிலிருந்து இரத்தம் வடியவோ (அ) பற்கள் தாமாகவே விழவோ கூடும்.

தோலில் ஏற்படும் மாற்றங்கள்

 • மார்பகங்களின் காம்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கருமை நிறம் அதிகரிக்கும்.
 • வயிற்றின் நடுவில் நீளவாட்டத்தில் தொப்புள் பகுதியிலிருந்து கீழ் வரை கோடு போன்ற நிறம் ஏறிய பகுதி தென்படும்.
 • மேலும் முகத்திலும் (முன் நெற்றி மற்றும் கன்னங்களிலும்) கூட தோலின் நிறம் அதிகரிக்கும்.
 • தொடைகளிலும், மார்பகங்களிலும் வயிற்றிலும் தோல் இழுக்கப்படுவதால் இழுப்புக் குறிகள் உருவாகும்.

எலும்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 • கருப்பை அளவில் வளர்வதனால் புவி ஈர்ப்பு விசையின் நடுமத்தியப் புள்ளி மாற்றம் பெறுகிறது. இதனால் நிற்கும் நிலை நிறுத்தும் நடக்கும் முறை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது.
 • ரிலாக்ஸின் என்ற ஹார்மோன் செயல்பாட்டினால் எலும்பு மூட்டுக்கள் அதிகம் அசைந்து கொடுக்கும்.
 • முதுகு வலி, பின்கால் சதை வலி ஆகியவை பெரும்பாலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது கால்சியம் குறைபாட்டினால் ஏற்படுகிறது.

கழிவு நீக்கும் மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 • சிசுவை சுமந்து அளவில் பெரிதாகும் கருப்பையானது, சிறுநீர்ப்பை மீது சென்று அழுத்துவதால் கர்ப்பமுற்ற பெண் அதிக தடவைகள் சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.
 • கருப்பை வயிற்றில் மேலெழும்பிய பின் இது சற்றே குறையும். ஆனால் பிரசவ சமயத்தில் குழந்தைகள் தலையோ அல்லது வேறு பாகங்களோ இடுப்புக் குழிக்குள் இறங்கிய பின் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்ச்சி அதிகமாகின்றது.

நாளமில்லா சுரப்பு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

 • கார்டிக்கோஸ்டீராய்ட் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கின்றது. முன் பிட்யூட்டரி சுரப்பி அளவில் பெரிதாகின்றது.
 • அட்ரினோ கார்டிகோ ட்ராபிக் ஹார்மோன், தைரோட்ராபிக் ஹார்மோன் மெலனோசைட் தூண்டும் ஹார்மோன் ஆகியவற்றின் செயல்பாடும் அதிகரிக்கின்றது.

கர்ப்பம் தரித்தலின் அறிகுறிகள்

கர்ப்பம் தரித்ததற்கு பல அறிகுறிகள் உண்டு. அவை மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அனுமான அறிகுறிகள்

இவற்றை கண்டு கர்ப்பம் என்று நினைத்துக் கொள்ளலாமே தவிர அவை கர்ப்பத்தை உறுதி செய்யாது.

சாத்தியமான அறிகுறிகள்

இவை தென்பட்டால் பெண் கர்ப்பமுற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.

உண்மையான அறிகுறிகள்

கர்ப்பத்தினை உறுதிசெய்ய உறுதியான அறிகுறிகள் உதவுகின்றன.

அனுமான குறிகள்

அமினோரியா

 • பெண்கள் தாம் கர்ப்பமுற்றதை முதன் முதலில் அறிந்து கொள்ள உதவும் அறிகுறி மாதவிலக்குச் சுழற்சி நின்றுபோதலே ஆகும்.
 • கருவுயில் எண்டோமெட்ரியத்தில் புதைந்ததைத் தொடர்ந்து அது டெசிடுவாக மாற்றமடைந்து மாதவிலக்குச் சுற்று ஏற்படுவதைத் தடுக்கின்றது.
 • கர்ப்பகாலம் 10 மாதங்களும் மாதவிலக்கு ஏற்படுவதில்லை.

காலையில் ஏற்படும் உபாதைகள்

வாந்தியும் வாந்தி வருவது போன்ற உணர்ச்சியும், சீரணக்கோளாறுகள் ஆகியவை மனித கோரியானிக் கோனடோட்ராபின் என்ற ஹார்மோனால் ஏற்படுகிறது.

சிறுநீர்ப்பையில் ஏற்படும் மாற்றங்கள்

முதிர்கருவின் வளர்ச்சியினால் வளர்ச்சி அடைந்துள்ள கருப்பை சிறுநீர்ப்பையின் மீது அழுத்துவதனால் அதிக தடவைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படும்.

கர்ப்பத்தை பரிசோதனையின் மூலம் உறுதி செய்தல்

நச்சுக்கொடி உற்பத்தி செய்யும் மனித கோரியானிக் கோனடோட்ராஃபின் என்ற ஹார்மோன் சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது. மாதவிலக்கு தள்ளிய ஒரு வாரத்திலேயே இந்த ஹார்மோன் சிறுநீரில் இருப்பதைக் கண்டு பிடிக்க முடியும். பயோலாஜிகல் மற்றும் இம்யூனோலாஜிகல் பரிசோதனைகள் மூலம் இந்த ஹார்மோன் சிறுநீரில் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

இம்யூனோலாஜிகல் பரிசோதனைகள்

ஹார்மோனுக்கு எதிர் தோன்றும் குணங்கள் உள்ளதை அடிப்படையாக வைத்து இந்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன

குயிக்கனிங்

குழவியின் அசைவினை முதன் முதலில் தாய் உணர்வதையே குயிக்கனிங் என்று கூறுகிறோம். வழக்கமாக கர்ப்பமுற்ற 18 முதல் 20 வாரங்களுக்குள் தாயினால் குழவியின் அசைவினை உணர முடியும்.

சாத்தியமான அறிகுறிகள்

 • கருவுற்ற 4 முதல் 12 வாரங்களில் HCG சிறுநீர் மற்றும் இரத்தத்தில் கலந்திருப்பதைச் சோதனை மூலம் கண்டறிதல்.
 • ஹேகர் அறிகுறி - கருப்பையின் உடல் பகுதிக்கும் செர்விக்சுக்கும் இடையே உள்ள இஸ்துமஸ் என்ற பகுதி மிகவும் மென்மையுறுவதையே ஹேகர் அறிகுறி என்கிறோம்.
 • கோடல் அறிகுறி - செர்விக்ஸ் மென்மையடைவதை கோடல் அறிகுறி என்கிறோம்.
 • சாட்விக் அறிகுறி - செர்விக்ஸ் மற்றும் சினைத்தாரைக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் அவற்றின் உட்புற சவ்வு நீலம் (அ) கத்தரிப்பூ நிறத்துக்கு மாறுகிறது. இதையே சாட்விக் அறிகுறி என்பர்.
 • ஓஸியாண்டர் அறிகுறி - சிசுத்தாரையின் போர்னிக்ஸ் பகுதியில் நாடித்துடிப்பு ஏற்படும். இதையே ஓஸியாண்டா அறிகுறி என்கிறோம்.
 • பிராக்டன் ஹிக் சுருக்கங்கள் - கருப்பைச் சுருக்கங்கள் வலியின்றி மிகவும் மிதமாக இருக்கும்.

கருப்பையின் அளவிலும் தோற்றத்திலும் ஏற்படும் மாற்றங்கள்

 • எட்டாவது வாரத்திலிருந்தே கருப்பை அளவில் வளர ஆரம்பிக்கும்.
 • மேலும் கருப்பை மிகவும் மென்மையாகவும் உருண்டை வடிவத்திலும் மாறுகிறது.

உண்மையான அறிகுறிகள்

எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் ஆகியவற்றில் முதிர்கருவைப் பார்க்க முடிதல். முதிர்கருவின் இருதயத்துடிப்பை கருவுற்ற 20வது வாரம் முதல் கேட்டறிய முடிதல் (உபகரணங்கள் மூலம்) குழந்தையின் அசைவுகளை 22 வாரம் முதல் பரிசோதகர் உணர முடிதல். கருவுற்ற 24 வாரங்களில் குழந்தையின் உடல் பாகங்களை உணர முடிதல்.

சாதாரண கர்ப்பம்

மகப்பேறு என்பது ஒரு பெண் தனது கர்ப்பபையில் ஒரு கருவுயிரை அது உருவானதில் இருந்து பிரசவிக்கப்படும் வரை சுமத்தலே ஆகும். கர்ப்பம் என்பது ஜெஸ்டேஷன் என்றும் அழைக்கப்படும்.

 • கர்ப்ப காலம் (கருவுற்றதிலிருந்து 9 மாதம் 7 நாட்கள்)
 • பிரசவம் நிகழும் காலம்
 • பிரசவத்திற்கு பின் வரும் காலம் - நச்சுக்கொடி வெளிப்பட்டதிலிருந்து 42 நாட்கள் வரை

கர்ப்பகால கவனிப்பு

கருவுற்ற பெண்ணுக்கு கர்ப்ப காலம் முழுமைக்கும் அளிக்கப்படும் ஒழுங்காக வரையறுக்கப்பட்ட கண்காணிப்பே கர்ப்பகால கவனிப்பு ஆகும்.

கர்ப்பமுற்ற ஒவ்வொரு பெண்ணும், சிக்கலற்ற பிரசவ காலத்தை அடைந்து நன்கு வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கத் தேவையான கல்வி கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தாயின் உடல் நலத்திற்கோ (அ) மனநலத்திற்கோ எந்த விதமான சேதமும் ஏற்படாது அளிப்பதே கர்ப்பகால கவனிப்பின் தலையாய நோக்கமாகும்.

கர்ப்பகால கவனிப்பின் குறிக்கோள்கள்

 • தாயின் ஆரோக்கியம் மற்றும் கருவுயிரின் வளர்ச்சி சரியான பாதையில் முன்னேறுகிறதா என்பதைக் கவனித்தல்.
 • அல்லது இயல்பான முன்னேற்றத்திலிருந்து ஏதேனும் மாற்றமோ தடைகளோ ஏற்பட்டால் அதை உடனடியாகக் கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை அளித்தல்.
 • தாய் கர்ப்பகாலம் முடிந்து பிரசவ காலத்தை அடையும் போது உடலாலும் மனதாலும் பிரசவத்தை எதிர்நோக்கத் தகுந்தபடி தயார் செய்யப்பட்டிருக்கிறாளா என்பதனை உறுதி செய்தல்.
 • அதிக சிக்கல்களுடைய கர்ப்பதை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுத்தல்.
 • கர்ப்ப காலத்திலோ பிரசவத்தினாலோ தாய் சேய் மரணம் ஏற்படாமல் தடுத்தல்.
 • தாய்ப் பாலூட்ட தொடங்குவதில் தாய்க்கு உதவுதல்.
 • குடும்ப நல ஆலோசனைகள் வழங்குதல்.

கர்ப்ப கால கவனிப்பு கீழ்க்கண்டவற்றைக் கொண்டது :

 • கர்ப்பமுற்றதைப் பதிவு செய்தல்.
 • கர்ப்பமுற்ற பெண்களைப் பற்றிய விவரங்களை கேட்டல்.
 • கர்ப்பிணிப் பெண்களை பரிசோதனை செய்தல்
 • சுகாதாரக் கல்வி அளித்தல்.

பதிவு செய்தல்

கருவுற்ற 12 வாரங்களுக்குள் மகப்பேறு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் கர்ப்பமுற்றதைப் பதிவு செய்தல் வேண்டும்.

விவரங்களைக் கேட்டறிதல்

கர்ப்பிணிப் பெண் முதன் முறை மகப்பேறு கிளினிக் வரும்போதே, அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கேட்டறிதல் வேண்டும்.

 • பெயர், வயது, முகவரி, திருமணமான விவரங்கள், மதம், கல்வி, வேலை போன்ற சுய விவரங்கள்,
 • மாதவிலக்கினைப் பற்றிய விவரங்கள்,
 • கர்ப்பமுற்ற பெண்ணைப் பற்றிய சுய விவரங்கள்,
 • கர்ப்பமுற்ற பெண்ணைப் பற்றிய மருத்துவ சிகிட்சை மற்றும் அறுவை சிகிட்சை ஏதேனும் நடைபெற்றதா என்ற விவரங்கள்,
 • குடும்பத்தினைப் பற்றிய விவரங்கள்,
 • தற்போதைய கர்ப்பத்தினைப் பற்றிய விவரங்கள்,
 • இது வரையிலான கர்ப்பங்களின் எண்ணிக்கை, பிரசவம், சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள்

எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதியினைக் கணக்கிடுதல் - கருவுற்ற பெண்ணின் கடைசி மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து 9 மாதங்களும் 7 நாட்களும் கூட்டிக் கொள்வதன் மூலம் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதியினைக் கணக்கிடலாம்.

கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதனை செய்தல்

கர்ப்பமுற்ற பெண்ணை தலைமுதல் கால்வரை முழுவதுமாகப் பரிசோதனை செய்தல் வேண்டும்.

 • உயரம் : கர்ப்பிணிப் பெண்ணின் உயரத்தை கவனத்துடன் அளத்தல் வேண்டும். ஏனெனில் 5 அடி அல்லது அதற்கும் குறைவான உயரம் உள்ள பெண்களின் இடுப்புக்குழி சிறியதாகவும் குறுகியதாகவும் இருக்ககூடும். அது பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
 • எடை : ஒழுங்காகவும் முறையாகவும் எடையினை பரிசோதனை செய்தல் மிகவும் அவசியம். கர்ப்பகாலத்தில் இயல்புக்கு மாறானவற்றை கண்டுபிடிக்க இது உதவும்.
 • வெளுத்த தன்மை : கண்கள், நாக்கு, நகக்கணுக்கள் ஆகியவற்றில் வெளுத்த தன்மை உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். மிகவும் வெளுப்பாய் இருந்தால் அது இரத்த சோகையாய் இருக்கக்கூடும்.
 • மஞ்சள் காமாலை : கண்களிலும் வாயின் உட்புற சவ்விலும் மஞ்சள் நிறம் படிந்துள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். மஞ்சள் நிறமாயிருப்பின் அது காமாலையாயிருக்கக் கூடும்.
 • நாக்கு, பற்கள் மற்றும் ஈறுகள் : தொற்று நோய் அல்லது உணவுப் பற்றாக்குறைக்கான அறிகுறிகள் நாக்கு, பற்கள் மற்றும் ஈறுகளில் தென்படுகிறதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
 • கால்கள் : கால்களில் வீக்கமுள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.
 • மார்பகங்கள் : கர்ப்பத்தினால் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மார்புக காம்புகளின் நிலை (வெடிப்பு உள்ளதா அல்லது உட்புறமாக திரும்பியுள்ளதா) ஆகியவற்றைக் கவனிக்க மார்பகங்களைப் பரிசோதனை செய்தல் மிகவும் அவசியமாகும்.
 • வயிறு மற்றும் சிசுத்தாரையைப் பரிசோதித்தல் : கர்ப்பபையின் நிலையினை அறிந்து கொள்ள இரண்டு கைகளாலும் தாயின் வயிற்றினைப் பரிசோதித்தல் வேண்டும். மிகுந்த தேவையன்றி சிசுத்தாரை வழியாகப் பரிசோதிப்பதில்லை.
 • பரிசோதனை நிலையத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் : இரத்தப் பரிசோதனை (இரத்த அணுக்களின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின்) இரத்த வகை மற்றும் RH கண்டுபிடித்தல், வெளிரியல் நோய்களுக்கான இரத்தப்பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை (ஆல்புமின் சர்க்கரை சீழ்செல்கள் ஆகியவை உள்ளதா என சிறுநீரைப் பரிசோதித்தல் வேண்டும்)

இரண ஜன்னி தடுப்பூசி இரண்டு தடவையும் இரும்புசத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

மகப்பேறு கிளினிக்கு அடுத்தடுத்த வருகைகள்

 • 28 வாரங்கள் வரை 4 வாரங்களுக்கு ஒருமுறை கர்ப்பிணிப் பெண்ணை பரிசோதனை செய்தல் வேண்டும்.
 • 29 வாரங்கள் முதல் 36 வாரங்கள் வரை 2 வாரங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
 • அதன் பிறகு பிரசவ தேதி வரையில் ஒவ்வொரு வாரமும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு வருகையிலும் பரிசோதனை முடிவுகளை ஒரே அட்டையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

சுகாதார கல்வி

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் சுகாதாரக்கல்வி கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியவாறு இருத்தல் வேண்டும்.

உணவு

கர்ப்பிணிகள் உண்ணும் உணவு கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட வேண்டும்.

 • தாயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும்,
 • வளரும் கருவுயிரின் தேவைகளை பூர்த்தி செய்யவும்
 • பிரசவம் நிகழும் போது தாய்க்குத் தேவையான சக்தியை அளிக்கவும்
 • பால் உற்பத்திப் பணியை செவ்வனே தொடங்கவும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு அளிக்கப்படும் உணவானது எளிமையானதாகவும் அதே சமயம் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் எளிதில் சீரணிக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அது புரதசத்து, தாதுஉப்புகள், உயிர்சத்துக்கள், நார்ச்சத்து அனைத்தும் கொண்டதாகவும் தேவையான கலோரிகளை அளிப்பதாகவும் இருத்தல் வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணின் சமூக பொருளாதார நிலை உணவுப் பழக்க வழக்கங்கள் விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை மனதில் கொண்டு உணவினைப் பற்றிய சுகாதாரக் கல்வி வடிவமைக்கப்பட வேண்டும். 20வது வாரத்திலிருந்து அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் இரும்புச்சத்து மாத்திரைகள் அளிக்கப்பட வேண்டும்.

சுய சுகாதாரம் பேணுதல்

ஓய்வு மற்றும் தூக்கம் : கர்ப்பிணிப் பெண் கர்ப்பக்காலத்தில் தான் வழக்கமாகச் செய்யும் தினசரி அலுவல்களைத் தொடரலாம். ஆனால் கடினமான வேலைகளை தவிர்த்தல் வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 மணி நேரத்தூக்கம் அவசியமாகும். (இரவில் 8 மணி நேரமும் பகலில் 2 மணி நேரமும்)

மலச்சிக்கல் : கர்ப்பமுற்ற போது பொதுவாக மலச்சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என்பதால் நிறைய பச்சைக் கீரை காய்கறிகள், பால், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளல் வேண்டும்.

குளியல் : ஒவ்வொரு நாளும் இருமுறை குளித்தல் நன்மை பயக்கும்.

ஆடை அணிகள் : கர்ப்பிணிப் பெண் இறுக்கமற்ற தாராளமாக வசதியான ஆடைகளையே அணிய வேண்டும். அதிக உயரம் உள்ள காலணிகளைத் தவிர்த்தல் வேண்டும்.

பற்கள் : கர்ப்பகாலத்தில் பல் மருத்துவரை ஒரு முறையேனும் அணுகி பற்களைப் பேணுதல் நலம் பயக்கும்.

மார்பகங்களைப் பேணுதல் : மார்பகங்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அமைப்பில் ஏதேனும் குறைபாடு இருக்குமெனில் மருத்துவரை அணுக வேண்டும்.

உடலுறவு : கருவுற்ற முதல் மூன்று மாதங்களிலும் கடைசி 6 வாரங்களிலும் கணவருடன் உடலுறவைத் தவிர்த்தல் வேண்டும்.

பயணம் : நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்த்தல் வேண்டும். ரயில் வழிப் பயணங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது.

புகைபிடித்தலும் மது அருந்துதலும் : இரண்டுமே வளரும் கருவுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்துமென்பதால் கர்ப்பிணிப் பெண்கள் இரண்டையும் தவிர்த்தல் வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மருந்துகளை தானாகவே எடுத்துக் கொள்வதை கட்டாயமாகத் தவிர்த்தல் வேண்டும். பல மருந்துகள் வளரும் கருவுக்கு அமைப்பில் நிரந்தரப் பாதிப்பினை ஏற்படுத்த வல்லவை.

கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் கருவின் உறுப்புக்கள் அனைத்தும் உருவாகும். இந்தக் காலகட்டத்தில் உட்கொள்ளப்படும் சில மருந்துகள், அதிக காபி குடித்தல், புகை பிடித்தல், மது அருந்துதல், எக்ஸ்ரே போன்றவை உறுப்புக்களின் அமைப்பில் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

கர்ப்பகாலத்தில் பொதுவான ஆலோசனைகள்

கர்ப்பமுற்ற ஒவ்வொரு பெண்ணும் மகப்பேறு மருத்துவமனைக்கு தவறாது குறிப்பிட்ட நாட்களில் வருகை தந்து பரிசோதனை செய்து கொள்ளல் வேண்டும். கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

தொடர்ந்து தீவிர தலைவலி, அதிக வீக்கம் தூக்கமின்மை, குறைந்த சிறுநீர் அளவு (ஒரு நாளைக்கு 5000 மி.லி குறைவாக சிறுநீர் கழிதல்), வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி, வலியுடன் கருப்பை சுருக்கங்கள், சிசுத்தாரை வழியாக இரத்தப்போக்கு, சிசுத்தாரை வழியாக திடீரென்று நீர் போன்ற திரவம் வெளிவருதல்.

அபாய நிலையிலுள்ள கர்ப்பம்

கருவின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையிலோ, பிரசவத்தை பாதிக்கும் வகையிலே சில நிலைபாடுகள் உண்டு. இவை முடிவாக குழந்தையின் அல்லது தாயின் உயிருக்கோ கூட ஆபத்து விளைவிக்கக்கூடும். இவற்றையே அபாய நிலையிலுள்ள கர்ப்பம் என்று அழைக்கின்றோம். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சை அளித்தல் வேண்டும்.

முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்

கர்ப்பமுற்ற முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு கீழ்க்கண்ட சிக்கல்கள் ஏற்படும்.

அ. கருச்சிதைவு

கரு உயிர் வாழக் கூடிய நிலையை அடையுமுன்னரே கர்ப்பம் கலைந்து அழிந்து போதலே கருச்சிதைவு எனப்படும். இது தன்னிச்சையாகவோ அல்லது திட்டமிடப்பட்டோ நடைபெறலாம்.

கருச்சிதைகள் வகைகள்

 1. தன்னிச்சையாக நடைபெற்ற கருச்சிதைவு
 2. தவிர்க்க இயலாத கருச்சிதைவு
 3. முழுமையான கருச்சிதைவு
 4. முற்றுப் பெறாத குறையான கருச்சிதைவு
 5. திட்டமிடப்பட்ட தூண்டிவிடப்பட்ட கருச்சிதைவு
 6. சட்டபூர்வமான கருக்கலைப்பு
 7. சட்ட விரோதமான கருக்கலைப்பு
 8. தொற்று வியாதியினால் ஏற்பட்ட கருச்சிதைவு

ஆ. ஹைடாடி டிஃபார்ம் மோல்

ட்ரோபோபிளாஸ்டிக் செல்கள் இயல்புக்கு மீறிய வளர்ச்சியை அடைந்து நீர் நிரம்பிய கொப்புளங்களாக மாறுகின்றன. இந்த நிலைமை ஆரம்பக் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிடில் அதிக இரத்தப்போக்கும், ஆபத்தான மாற்றங்களை அடையவோ கூடும். இதற்கான சிகிச்சை கருப்பையிலுள்ள அனைத்தையும் வெளியேற்றி பின்னரும் கண்காணித்தலே ஆகும்.

இ. கருப்பைக்கு வெளியே ஏற்படும் கர்ப்பம்

கருவுற்ற சினைமுட்டையானது, கருப்பையின் சுவரில் புதையாமல் வேறு எங்காவது புதைந்து வளர்வதையே எக்டாபிக் கர்ப்பம் என்று அழைக்கிறோம்.

இதன் வகைகள்

 1. ஃபலோப்பியன் குழாயில் ஏற்படும் கர்ப்பம்
 2. செர்விக்ஸ்ல் ஏற்படும் கர்ப்பம்
 3. கருவகத்தில் ஏற்படும் கர்ப்பம் (வயிற்றில் வேறு எங்கேனும் ஏற்படும் கர்ப்பம்)

இது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிட்சை அளிக்கப்பட வேண்டும்.

அடுத்த மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்கள்

இரண்டாவது மூன்று மாதங்களில் கீழ்க்கண்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும்

பாலி ஹைட்ராம்னியாஸ்

கர்ப்பபையில் அதிக அளவு ஆம்னியாடிக் திரவம் இருக்கும் நிலையையே பாலிஹைட்ராம்னியாஸ் என்று அழைக்கிறோம். இந்நிலை கருப்பையின் மேல் அழுத்தம் ஏற்படுத்துவதோடு அல்லாமல் குறைப்பிரசவம், குழந்தையின் தலை இடுப்புக் குழிக்குள் கீழிறங்காமல் இருத்தல், தொப்புள் கொடி முதலில் வெளிவருதல் பிரசவத்திற்குப் பின் இரத்தப்போக்கு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு வியாதி

கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாகவும் சர்க்கரை சிறுநீரில் வெளியேறவும் செய்யும். இதுவே கர்ப்பகாலத்தில் மட்டும் சில பெண்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயாகும்.

கர்ப்பத்தினால் ஏற்படும் அதிக இரத்த அழுத்தம் மற்றும் ப்ரீஎக்லாம்சியா

சில பெண்கள் கர்ப்பகாலத்தில் அதிக இரத்த அழுத்தம், சிறுநீரில் புரதம் வெளியேறுதல், வீக்கம் ஆகிய சிக்கல்களை 20 வாரங்களுக்குப் பிறகு அடைவர்.

கடைசி மூன்று மாதங்களில் ஏற்படும் சிக்கல்கள்

அ. கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு

சரியான இடத்தில் புதைக்கப்பட்ட நச்சுக்கொடி குழந்தை வெளியேருவதற்கு முன்பாகவே பிரிந்து வெளிவந்தாலோ அல்லது நச்சுக்கொடியே இயல்புக்கு மாறான இடத்தில் புதைக்கப்பட்டிருந்து முன்பாகவே பிரிந்து வெளிவந்தாலோ, பிரசவம் தொடங்குவதற்கு முன்பாகவே அதிக இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இம்மாதிரியான நிலைகள் அறுவைச் சிகிச்சை மூலமாகவே சமாளிக்கப்பட வேண்டும்.

ஆ. குறைப்பிரசவம்

கர்ப்பமுற்ற 37 வாரங்களுக்கு முன்னதாகவே பிரசவம் நிகழ்வதையே குறைப்பிரசவம் என்று அழைப்பர்.

கர்ப்பத்தின் போது ஏற்படக்கூடிய பிற சிக்கல்கள்

அதிக ரத்தச்சோகை சிக்கலான பிரசவத்தை ஏற்படுத்தும். கர்ப்ப சவ்வுகள் முன்னதாகவே கிழிந்து போதல், காலம் தாழ்ந்தும் பிரசவம் தொடங்காமல் இருத்தல் (42 வாரங்களுக்குப் பிறகும்), கர்ப்பத்தோடு சேர்ந்த பிற மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சிக்கல்கள்.

கர்ப்ப காலத்தில் சத்துணவு

கர்ப்ப காலத்தில் முதிர்கருவின் துரித வளர்ச்சியினாலும் தாய் உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் அதிகரிக்கும் தேவைகளுக்கேற்ப தாயின் உணவு முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். தாயின் உணவு உட்கொள்ளும் முறையில் மாற்றங்கள் கீழ்க்கண்டவற்றைச் சார்ந்து செய்யப்படும்.

 • கர்ப்பமடைவதற்கு முன்னால் தாயின் உணவு பழக்க முறைகள் மற்றம் சத்துணவு நிலை
 • தாயின் ஆரோக்கியம்
 • வயது மற்றும் தற்போதைய கர்ப்பத்தின் எண்ணிக்கை
 • தாயின் பல கர்ப்பங்களுக்கு இடையே உள்ள இடைவெளி.
 • தாயின் எடை உயரம் மற்றும் செயல்பாட்டுத்திறன்

கலோரித் தேவை அதிகரிப்பு

பூப்படைந்த பெண்கள் இனப்பெருக்க உறுப்புகள் முழு வளர்ச்சி அடையும் முன்னரே கர்ப்பமுற நேரிட்டால் அதனை தாங்குவதற்கான போதிய பலம் அவர்கள் உடலில் இருப்பதில்லை. அவர்களுடைய சத்துணவுத் தேவைகள் மேலும் அதிகமாக இருக்கும்

முதிர்க்கருவின் துரித வளர்ச்சியாலும் தாயின் சுய தேவைகள் அதிகரிப்பதாலும் கர்ப்ப காலத்தில் கலோரித் தேவைகள் 10-15% வரை அதிகரிக்கின்றது. தோராயமாக கர்ப்பகாலத்தில் 80000 கலோரிகள் மொத்தமாக செலவழிக்கப்படுகின்றன. எனவே கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொரு நாளும் வழக்கமாக எடுத்துக்கொள்வதை விட 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பமுற்ற பெண்ணின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய 2500 கலோரிகள் கிடைக்கக்கூடிய சரிவிகித உணவினை திட்டமிடல் வேண்டும்.

புரதச் சத்து

கர்ப்பமுற்ற பெண்ணின் புரதத் தேவைகள் அதிகரிப்பதால் ஒரு நாளைக்கு 60 கிராம் வரை புரதம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். புரதச்சத்தானது கூடுதலான அமினோ அமிலங்கள் கிடைக்கவும் முதிர்கரு மற்றும் நச்சுக்கொடி ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் மார்பகங்கள் மற்றும் கருப்பையின் வளர்ச்சிக்கும் தாயின் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதற்கும் பிரசவ வலி குழந்தைப் பிறப்பு மற்றும் தாய்ப்பாலூட்டும் போது ஏற்படும் அதிகப்படியான தேவைகளை எதிர்கொள்ளவும் தாய்க்கு உதவி செய்கிறது.

புரதசத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்

பால், சீஸ், முட்டை, மாமிசம், மீன், தானியங்கள், பருப்புகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. காய்கறி புரதங்களை முழு தானியங்களோடு சேர்த்து உண்ணலாம். அல்லது இரண்டு வகையான காய்கறிகளை ஒன்றில் உள்ள குறைபாட்டை மற்றொன்று சரி செய்யும் வகையில் சேர்த்து உண்ணுவதால் முழுமையான புரதச்சத்து கிடைக்கப் பெறும்.

உதாரணம் - அரிசி உணவோடு பீன்ஸ், பால் மற்றும் அரிசி / கோதுமை

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து

மகப்பேற்றின் போது கருவளர்ச்சி மற்றும் தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்கவாறு தாய்க்கு அதிக கலோரித் தேவைகள் ஏற்படுகிறது. இந்த அதிக கலோரித் தேவைகளை ஈடுகட்டுவதற்கு கார்போஹைட்ரேட்டுகளும் கொழுப்புச்சத்துமே உதவுகின்றன.

பழங்கள், முழு தானியங்கள், பருப்புகள், பால், ரொட்டி ஆகியவை அதிக கார்போஹைட்ரேட் கொண்டவை. கொழுப்புச்சத்து, வெண்ணை, எண்ணெய், சீஸ் மற்றும் கொட்டை வகைகளில் அதிகம் உண்டு.

உயிர்ச்சத்துக்கள்

கர்ப்பகாலத்திலும் தாய்ப்பாலூட்டும் காலத்தில் தாய் அதிக அளவு உயிர்ச்சத்துக்கள் உள்ள உணவினை உட்கொள்ள வேண்டும். சரிவிகித உணவினை உண்ணுவதன் மூலம் தேவையான அளவு உயிர்ச்சத்துக்களைப் பெற முடியும். செல்களின் அமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பாதுகாக்கவும் மற்றும் புதிய திசுக்கள் உருவாவதிலும் உயிர்ச்சத்துக்கள் பெரும்பங்கு வகிக்கின்றது. உயிர்ச்சத்துக்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை கொழுப்பு சத்தில் கரைபவை. இவை உணவில் உள்ள கொழுப்புச்சத்தோடு சேர்த்து உண்ணப்படும்.

உயிர்ச்சத்து ஏ

செல் வளர்ச்சி, பற்களை உருவாக்க மற்றும் எலும்பு வளர்ச்சி ஆகியவற்றுக்கு உயிர்ச்சத்து ஏ மிகவும் இன்றியமையாததாகும். மேலும் அது கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கின்றது.

உயிர்ச்சத்து ஏ குறைபாடு மாலைக்கண் நோயை உண்டாக்கும். மாமிசம், முட்டைக்கரு, வெண்ணெய், மஞ்சள் நிறத்தில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள், பச்சைக் கீரை மற்றும் காய்கறிகளில் உயிர்ச்சத்து ஏ அதிகம் உள்ளது. அதிக அளவு உயிர்ச்சத்து ஏ உட்கொண்டாலும் அது நச்சுத்தன்மை கொண்டதாகிவிடும். எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு விட்டமின் ஏ கூடுதலாக கொடுப்பதில்லை.

உயிர்ச்சத்து டி

வளர்ந்து வரும் முதிர்கருவின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உறிஞ்சப்படுவதற்கு உயிர்ச்சத்து டி மிகவும் இன்றியமையாததாகும். கல்லீரல், முட்டை, பால், காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவை அதிக அளவு உயிர்ச்சத்து டி கொண்டுள்ளன. சூரிய வெளிச்சமும் உடலில் உயிர்ச்சத்து டி-இன் அளவை அதிகரிக்கும்.

உயிர்ச்சத்து ஈ.

இது ஒரு ஆண்டி - ஆக்சிடன்ட் ஆக செயல்படுகிறது. உயிர்ச்சத்து ஈ ஆனது ஒரு பொருளில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுத்து அப்பொருளில் ரசாயன மாற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

காய்கறிகள், கொழுப்புகள், முழு தானியங்கள், முட்டை, கீரை ஆகியவற்றில் அதிக அளவு உயிர்ச்சத்து ஈ உள்ளது.

உயிர்ச்சத்து கே

இரத்தம் உறைவதற்கும் இரத்தப்போக்கு ஏற்படாது தவிர்ப்பதற்கும் உயிர்சத்து கே இன்றியமையாததாகும். தினப்படி தேவை 65 கிராம் ஒரு நாளுக்கு. சரிவிகித உணவை உட்கொண்டாலே தேவையான அளவு உயிர்சத்து கே கிடைக்க ஏதுவாகும்

உயிர்சத்து பி காம்ப்ளெக்ஸ்

விட்டமின் பி (தயாமின்) பி, (ரிபோபிளாவின்) பி, (பைரிடாக்சின்) பி, (கோபாலமின்) நியாசின் ஆகியவை இணைந்து பி காம்ப்ளெக்ஸ் என்று அழைக்கப்படும். இவையும் ஃபோலிக் அமிலமும் இணைந்து வளர்சிதை மாற்றத்திலும் எனர்ஜி உருவாக்கத்திலும் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகையால் கலோரித் தேவைகள் அதிகரிக்கையில் பி காம்ப்ளெக்ஸ் தேவையும் அதிகரிக்கின்றது.

உயிர்ச்சத்து பி புரதச்சத்தின் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிப்பதனால் புரதச்சத்து அதிகம் உட்கொள்ளும் போது உயிர்சத்து பி-யும் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். சிசுவின் மத்திய நரம்பு மண்டலம் உருவாவதில் பி பெரும்பங்கு வகிக்கின்றது.

விலங்கு மாமிசத்தில் அதிகம் உள்ள விட்டமின் பி, சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றது. பி, குறைபாடு பெரினீசியஸ் இரத்த சோகை என்ற நோயை உண்டு செய்யும்

நியாசின்

கர்ப்பிணிப் பெண்ணுக்கு நியாசின் தினப்படித் தேவை 17 மி.கி. நியாசின் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள், மாமிசம், கோழி, மீன், கல்லீரல், முழு தானியங்கள், ரொட்டி, கொட்டைகள் ஆகியவை.

ஃபோலிக் அமிலம்

கருவுயிரின் சீரான வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் இன்றியமையாததாகும். கர்ப்பகாலத்தில் தினப்படி தேவை 400 மி.கி. உணவுப்பொருட்கள் : பச்சைக் கீரை, காய்கறிகள், மாமிசம், வாழைப்பழம், சிறுநீரகம், கல்லீரல், பீன்ஸ் ஆகியவை. சமைக்கும் பொழுது 80% ஃபோலிக் அமிலம் உணவுப் பொருட்களில் இருந்து இழக்கப்படுகிறது.

ஃபோலிக் அமில குறைபாட்டினால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் கருவுயிரின் உருவ அமைப்பில் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. கர்ப்பகாலத்தில் ஒரு நாளைக்கு 400 மி.கி ஃபோலிக் அமிலம் தேவைப்படுகிறது.

உயிர்ச்சத்து சி

கர்ப்பகாலத்தில் கருவுயிரின் தோல் வளர்ச்சிக்கும் இரத்த ஓட்ட மண்டலத்தின் வளர்ச்சிக்கும் உயிர்ச்சத்து சி மிகவும் இன்றியமையாததாகும். மேலும் இரும்புச்சத்து உறிஞ்சப்படவும் சேமித்து வைக்கப்படவும் உயிர்ச்சத்து சி உதவுகிறது.

குறைபாடு : ஸ்கர்வி என்ற வியாதியை உண்டாக்கும். சிட்ரஸ் பழங்கள், ஸ்டாபெர்ரி, தக்காளி, உருளைகிழங்கு, பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் உயிர்சத்து சி அதிகம் உள்ளது.

ஆதாரம்: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.01098901099
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top