অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை

மலட்டுத்தன்மை பிரச்னைக்கான தீர்வுகள்

மலட்டுத்தன்மை... பூதாகரமாக பயமுறுத்திக் கொண்டிருக்கிற இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதிக்கிறசின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! 

நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது இயற்கையான பேதி 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும்.

நீங்கள் அணிகிற உடைக்கும், உங்கள் கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா? ‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற  நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும்.

பிரச்சினைக்கான தீர்வுகள்

விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு - எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும்.

ஆதாரம்: தினகரன் நாளிதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/22/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate