பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / தாய்ப்பால் / தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு

தாய்ப்பால் பெருக்கும் இயற்கை உணவு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தாய்ப்பால் கொடுப்பதால் புற்றுநோயை தடுக்கலாம்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி.

தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை. கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன்மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம்.

தாய்ப்பாலைப் பெருக்கும் உணவுமுறை

வெந்தயம்

குழந்தை பிறந்த சில நாட்களில், தாய்க்கு வெந்தய விதைகளை நீரில் ஊறவைத்துச் சாப்பிடக் கொடுக்க, அதிக அளவில் பால் சுரக்கும். அதிலுள்ள ‘Diosgenin’ பால்சுரப்பு அதிகரிக்கக் காரணமாகிறது. மகப்பேற்றுக்குப் பிறகு வெந்தயமானது கருப்பையைச் சுருங்கச் செய்து, கருப்பையின் அழுக்குகளை வெளியேற்றி, மீண்டும் பழைய நிலைக்கு விரைவில் கொண்டுவருகிறது. அமெரிக்காவின் FDA (Food and Drug Administration) வெளியிட்ட பாதுகாப்பான உணவுப் பட்டியலில் வெந்தயமும் இடம்பெற்றுள்ளது.

பூண்டு

பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள், பூண்டு பற்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமன்றி, உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவும் குறையும். பால் கொடுக்கும் தாய்மார்கள் பூண்டு, வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்வதால், தாய்ப்பாலில் உண்டாகும் ஒருவித மணம் காரணமாக, குழந்தைகள் அதிக நேரம் பால் அருந்துவதாக ‘American Academy of Pediatrics’ ஆய்விதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவு இருந்தும், பால் குடிக்கக் குழந்தைகள் மறுத்தால், மேற்குறிப்பிட்ட முறையை முயற்சித்துப் பார்க்கலாம்.

தண்ணீர்விட்டான் கிழங்கு (சதாவேரி)

 • இதிலுள்ள ‘Shatavarin’ வேதிப்பொருள், பால் சுரப்பிகளின் வளர்ச்சியை அதிகரித்துப் பால் சுரப்பைத் தூண்டுகிறது. சதாவேரியில் உள்ள “Tryptophan’ என்னும் அமினோஅமிலம் புரோலாக்டின் மூலமாகத் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் ‘Anthocyananin’ எனும் வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து, கொழுப்பு சத்தைக் கரைக்கிறது, ‘Asparagamine- A ‘புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
 • சதாவேரி கிழங்கைக் கொண்டு செய்யப்படும் சதாவேரி லேகியம் தாய்ப்பால் சுரப்பைத் தூண்டுவது மட்டுமன்றி, சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றையும் அழிக்கக்கூடியது. மகப்பேற்றுக்குப் பின்னர்க் கருப்பையை மீண்டும் பழைய நிலைக்கு விரைவாகக் கொண்டுவர, இந்தத் தண்ணீர்விட்டான் கிழங்கு உதவுகிறது.

பப்பாளிக் காய்

 • பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி, லேசாக வேகவைத்துச் சாப்பிட்டுவரப் பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது, பப்பாளிக் காயைச் சாப்பிட்டவர்களின் தாய்ப்பாலில் அதிக அளவில் வைட்டமின் ‘ஏ’ இருந்ததாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
 • நவீன சமுதாயம் மறந்த கைக்குத்தல் அரிசியை, மீண்டும் சமையல் அறைக்குள் வரவேற்பது அவசியம். ஏனெனில் ‘பழுப்பு அரிசியில்’ உள்ள செரடோனின் பால் சுரப்பைத் தூண்டும் புரோலாக்டின் ஹார்மோனைத் தூண்டுகிறது.

ஆமணக்கு இலைகள்

ஆமணக்கு இலைகளுக்குப் பால்பெருக்கி செய்கை உண்டு. ஆமணக்கு இலைகளைக் குடிநீராகவும் குடிக்கக் கொடுக்கலாம் அல்லது இலையை எண்ணெயில் வதக்கி மார்பில் போட்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதைப் போலவே இலுப்பை, காட்டாமணக்கு இலைகளையும் மார்பில் வைத்துக் கட்டலாம். வெற்றிலையை விளக்கெண்ணெயில் வதக்கி மார்பில் கட்டிவரப் பால் சுரப்பு அதிகரிக்கும்.

இலக்கியங்களில் தாய்ப்பால் பற்றிய கருத்து

தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைகிறது என்று இன்றைய ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதை அன்றே, ‘வயிறா தாய்முலை யுண்ணாக் குழவியும் நல்குரவு சேரபட்டார்’ என வலியுறுத்தியது ‘திரிகடுகம்’ நூல். தாய்ப்பால் கொடுக்கும் முறை பற்றி, ‘புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை முலைவாய் உறுக்கும் கைப்போல’ என நற்றிணையில் தமிழர்கள் பதிவு செய்கின்றனர். இப்படியாகப் பழங்கால இலக்கியம் தொடங்கி, இன்றைய இணைய யுகம்வரை தாய்ப்பாலின் அத்தியாவசியம் பற்றி பல இடங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உணவில் கவனம்

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது, தாய்மார்கள் ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுப்பதில் தனிக் கவனம் செலுத்துவது அவசியம். தாய் உட்கொள்ளும் உணவின் குணங்களே, தாய்ப்பாலில் பிரதிபலிக்கும். எனவே, வாயுப் பொருட்கள், அதிகக் காரமான மற்றும் செரிமானத்தைப் பாதிக்கும் உணவைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாகப் பிராய்லர் கோழி, துரித உணவு, மாங்காய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இயற்கை உணவு வகைகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், தாய்ப்பாலின் தரமும் மேம்பட்டிருக்கும். சிறந்த உணவு, நிம்மதியான உறக்கம், சீரான மனநிலை எனும் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

தாய்ப்பாலின் மகத்துவம்

அதேநேரம், எதிர்காலத்தில் குழந்தை நோயின்றி வாழச் சிறந்த இயற்கை உணவாகவும் மருந்தாகவும், தாய்ப்பாலுக்கு நிகராக வேறு எதுவுமில்லை. வைட்டமின்கள், தாதுகள், புரதங்கள், கொழுப்புகள், நோய் எதிர்ப்பு பொருட்கள் எனக் குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் தாய்ப்பாலில் பொதிந்து கிடப்பது இயற்கையின் வரம்.

பாசமும் நேசமும் கலந்த தாய்ப்பால் எனும் அமுதத்தை உட்கொள்ளும் குழந்தைகள், பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்வார்கள். ‘உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை உயிரெனும் முலையினில் உணர்வெனும் பால்’ என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க, தாயின் உயிர்ச்சத்தான தாய்ப்பாலை, குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குக் கொடுப்பது சேய்க்கு மட்டுமல்ல, தாய்க்கும் நல்லது.

 • இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் கொண்ட உருளை கிழங்கை அவித்து, கொஞ்சம் சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.
 • கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கிச் சாப்பிட, பால் சுரப்பு அதிகரிக்கும்.
 • தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க, கற்பூரவல்லி இலைகளை வேக வைத்துச் சாப்பிடுவது இந்தோனேசிய மக்களின் பாரம்பரிய வழக்கம்.
 • இரும்புச்சத்து நிறைந்த அத்தி, பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுவதால் நல்ல பால்சுரப்பு உண்டாகும். தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்களை, பேரீச்சை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • காய்களை மசித்துச் செய்யப்பட்ட `சூப்’ வகைகள், நார்ச்சத்து நிறைந்த கீரைகள், வைட்டமின்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், இரும்புச்சத்துள்ள முருங்கைக்காய், நீர்ச்சத்து, கனிமச்சத்து நிறைந்த சுரைக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளலாம்.
 • அரைக்கீரை, முருங்கைக்கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
 • பால் பொருட்களைச் சாப்பிடுவதுடன் பாதாம் பருப்பைப் பாலில் ஊறவைத்து அருந்தலாம்.
 • பருத்திப் பாலுக்கும் பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை உண்டு.
 • பால்பெருக்கி மற்றும் பிரசவ அழுக்கு அகற்றிச் செய்கை சுறா மீனுக்கு இருப்பதால், குழம்பில் போட்ட சுறா மீன், சுறா மீன் புட்டு ஆகியவற்றைச் சிறிதளவு சாப்பிடலாம்.
 • அதேபோல நீரில் ஊற வைத்த வேர்க்கடலையும், முளைகட்டிய தானிய வகைகளும், சிறுதானிய உணவும் பால் சுரப்பை அதிகரிக்கும்.

ஆதாரம் : மரபு மருத்துவம் கையேடு

3.05454545455
Kasthoori Mar 12, 2020 10:34 AM

Nanri பயனுள்ள விஷயம்

கஸ்தூரி Jan 02, 2020 10:50 PM

ஆரோக்கியமான குழந்தைகளின் எதிர்காலம் தாய்பாலில் உள்ளது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top