பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாலியல் நலம்

பாலியல் நலம் பற்றிய குறிப்புகள்

பாலியல் பற்றி விழிப்புணர்வு

பாலியல் கல்வி என்றவுடனேயே கமுக்கமாக ஒரு சிரிப்பும், ‘அதெல்லாம் வெளிப்படையா பேச முடியுமா?', ‘நம்முடைய கலாசாரம் என்ன?' என்றெல்லாம் குரல்கள் எழும். ஆனால், பாலியல் கல்வியும் பாலியல் சார்ந்த சரியான புரிதலும் இல்லாமல் இருப்பதால்தான் பரவலாகப் பாலியல் பலாத்காரங்கள், எப்பொழுது கருத்தரிக்கலாம் - எப்பொழுது கருத்தரிக்கக் கூடாது என்பது பற்றிய புரிதலின்மை, திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒருவருக்கு உள்ள உரிமை பற்றியெல்லாம் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.

பாலியல் உரிமை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 4-ம் தேதி உலகப் பாலியல் நல நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு பாலியல் நல நாளுக்கான மையப்பொருள் ‘பாலியல் நலம், ஒரு நியாயமான சமூகத்துக்கு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் (WHO), உலகப் பாலியல் அமைப்பு (WAS), பான் அமெரிக்கன் சுகாதார அமைப்பு (PAHO), சர்வதேச பிளாண்டு பாரன்தூடு அமைப்பு (IPPF) ஆகிய அமைப்புகளே உலகப் பாலியல் நல நாளை அனுசரித்து வருகின்றன.

ஒருவருடைய ஆரோக்கியம் என்பது உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்று உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. பாலியல் நலனையும் பாலியல் உரிமைகளையும் மக்கள் நலம் சார்ந்த விஷயமாகவே பார்க்க வேண்டும். அத்துடன் பாலியல் நலனை, அடிப்படை மனித உரிமைகளின் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்.

பாலியல் உரிமை

உலகத்திலுள்ள அனைத்து உயிரினங்களிடமும் பாலுணர்வு இருக்கிறது. பாலுணர்வு இயற்கையானது, மகிழ்ச்சி தருவது. அதேநேரம் ஒருவருடைய பாலுணர்வும், பாலியல் தொடர்பும் நியாயமானதாகவும், மதிக்கப்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இனம், நிறம், பாலின வேறுபாடு, மதம், சமூகம், பொருளாதாரம், மூடப் பழக்கவழக்கம், பிறப்பு, வயது, மாற்றுத்திறனாளி அல்லது ஹெச்.ஐ.வி. போன்றவை பாலியல் நலனை, பாலுணர்வை, பால் இயல்புகளைக் கட்டுப்படுத்தவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ காரணமாக இருக்கின்றன. மேற்கூறியவற்றின் மூலம் பாலியல் நலம் கட்டுப்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

பாலியல் நலம்

நோய்கள் இல்லாமல் நலமாக வாழ்வதுதான் பாலியல் நலம் என்று பொதுவாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் பாலுறவு கொள்வதில் மகிழ்ச்சி, பாலுணர்வு திருப்தி, பிறப்புறுப்புகளைச் சிதைக்காத - கொடுமையற்ற தன்மை, பாலுறவில் இயலாமையைப் புரிந்துகொள்வது, மனநலம் போன்றவையும் இதில் அடங்கும்.

கிடைக்காத மருத்துவ வசதி

ஒருவருடைய பாலியல் நலம் சுதந்திரமில்லாமலும், பாகுபாடு உடையதாகவும் இருக்கும்போது அது சமூகநலனை பாதிக்கிறது. உதாரணமாக, ஆரோக்கியமான கருக்கலைப்பு மற்றும் கருத்தடுப்பு ஏழைகளுக்குக் கிடைக்காமல் இருப்பதைக் கூறலாம்.

இதனால் அவர்கள் தேவையில்லாத கர்ப்பத்தைச் சுமக்க வேண்டியிருக்கிறது. ஏழ்மை நிலையிலுள்ள தாய்மார்கள், குறிப்பாகப் பழங்குடிப் பெண்களுக்கு இந்த வசதி கிடைக்காததால் அவர்களுடைய வாழ்க்கை சுமை இரட்டிப்பாகிறது. குறைந்த வாழ்வாதாரங்களை வைத்துக்கொண்டு குழந்தைகளைப் பராமரிப்பது அவர்களுக்குச் சிரமமாக உள்ளது. தேவையில்லை என்று கருதும் கர்ப்பத்தைக் கலைக்கப் பாதுகாப்பில்லாத முறைகளில் அவர்கள் ஈடுபடும்போது, உயிரிழப்பும் ஏற்படுகிறது.

பாலியல் கல்வி

பாலியல் நலம் என்பதில் பாலியல் கல்வியும் அடங்கியுள்ளது. பாலியல் கல்வியைத் தவறுதலான புரிதலுடன் அணுகக் கூடாது. வயதுக்கேற்ற பாலியல் கல்வியை அறிவியல் ரீதியாகக் கற்றுத்தருவது இளம் வயதினரிடையே மனித இனம் குறித்த மதிப்பை உயர்த்தும்.

ஆண் -பெண் சமத்துவம், குடும்ப உறவு, சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கு இது உதவும். உடற்கூறு சம்பந்தப்பட்ட விவரங்களை உள்ளடக்கியதாகவும், அறிவியல்பூர்வமான உண்மைகளைச் சொல்வதாகவும், கலாசாரத்துக்குப் பொருந்தக்கூடியதாகவும், மனித உரிமை, பாலியல் சமத்துவத்தை உள்ளடக்கியதாகவும் பாலியல் கல்வி இருக்க வேண்டும். இது இளம் வயதினரிடம் பாலியல் சார்ந்த சரியான புரிதலை ஏற்படுத்தும். வெளிநாடுகளில் இந்த மாற்றத்தைப் பார்க்க முடிகிறது. நம் நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பாலியல் நலம் எப்படியிருக்க வேண்டும்?

  1. பாலியல் நலம் மற்றும் குழந்தைப் பேறு நலனை, வளர்ச்சியின் ஒரு அம்சமாகவே பார்க்க வேண்டும். இவை மனித உரிமைகளாக மதிக்கப்பட வேண்டும்.
  2. ஆரோக்கியம், உடல் நலம், மன நலம், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை மனித உரிமைகளோடு சேர்க்க வேண்டும்.
  3. பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
  4. பாலியல் நலம், மகப்பேறு, ஹெச்.ஐ.வி. ஆகியவற்றைக் கையாளும் ஒருங்கிணைந்த திட்டம் தேவை.
  5. பாலியல் நலன்களை உள்ளடக்கிய பாலியல் கல்வி தேவை.
  6. பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளால் ஏற்படும் தாய்மார்களின் இறப்பைக் குறைக்க வேண்டும்.
  7. இந்த முறைகளுக்குப் போதுமான நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர்

3.01351351351
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top