ஆண்களைப் போல் அல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப் பை (Uterus), சிறுநீர்ப் பை (UrinaryBladder) கர்ப்பப் பை வாய்க்குழாய் (Vagina),சிறுநீர் குழாய் (Urethra) மலக் குடல் (Rectum) ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன. இதனால் பிரசவத்தின்போதும், கர்ப்பப் பை தொடர்பான அறுவைச் சிகிச்சையின் போதும் சிறுநீர்ப் பை உள்பட சிறுநீர் தொடர்பான உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. விளைவு, சிறுநீரை அடக்க முடியாத பிரச்சினை (Incontinence) 63 சதவீத பெண்களுக்கு உள்ளது. இப்பிரச்சினையை வெளியே சொல்லுவதற்கு பெண்களிடம் தயக்கம், கூச்ச சுபாவம் இன்னமும் தொடர்கிறது. மருத்துவ முன்னேற்றம் காரணமாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நவீன சிகிச்சை உள்ளது.
ஆண் பெண் இருபாலரின் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவப் பிரிவுக்கு ‘யுராலஜி (Urology) என்று பெயர்.
மகளிர் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பிரிவுக்கு ‘கைனகாலஜி’ (Gynaecology) என்று பெயர்.
மகளிர் சிறுநீர்ப் பிரச்சினைகளுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் சிகிச்சை அளிக்க ‘யுரோகைனகாலஜி’ (Urogynaecology) என்ற சிறப்பு மருத்துவப் பிரிவு உள்ளது.
இவ்வாறு மகளிர் சிறுநீரியல் மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள டாக்டருக்கு ‘யுரோகைனகாலஜிஸ்ட்’ (Urogynaecoligist) என்று பெயர்.
ஒரு பெண் வளர்ந்து பூப்பெய்து, திருமணம் செய்து கொள்ளும் வரை பெரும்பாலும் தொடர் சிறுநீர்ப் பிரச்சினைகள் வருவதில்லை. ஏற்கெனவே சொன்னது போல், பெண்களுக்கு இயற்கையிலேயே கர்ப்பப்பை, சிறுநீர்ப் பை, கர்ப்பப்பை வாய்க்குழாய், சிறுநீர்க் குழாய், மலக்குடல் ஆகியவை மிகவும் நெருக்கமாக அமைந்துள்ளன.
இயல்பான பிரசவத்தின் போது குழந்தை வெளியே வரும்போது கர்ப்பப் பையை ஒட்டினாற்போல் உள்ள சிறுநீர்ப் பை, சிறுநீர்க் குழாய் ஆகியவை அழுத்தத்துக்குள்ளாகி சிறுநீர்ப் பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. இதே போன்று பிரசவம் தாமதமாகி ஆயுதம் பயன்படுத்தப்படுதல், சிசேரியன், கர்ப்பப்பை நீக்குதல் அறுவைச் சிகிச்சைகளின் போதும் இந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரையில் ஓட்டை ஏற்படலாம். இதனால் சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை சிறுநீர்ப் பை இழக்க (Incontinence) நேரிடும். தொடர்ந்து சிறுநீர் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
சிறுநீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டை இழப்பது அல்லது அடக்க முடியாத தன்மையில் (Incontinence) சில வகைகள் உள்ளன. அறிகுறிகளும் வேறுபட்டதாக இருக்கும்.
கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினை (Continuous Incontinence) பிரசவம் உள்பட அறுவைச் சிகிச்சைகளின் போது சிறுநீர்ப் பை, சிறுநீர்த் தாரை ஆகியவற்றில் ஏற்படும் காயம் (Fistula) காரணமாக இந்த வகை சிறுநீர்ப் பிரச்சினை ஏற்படும். ஆரோக்கியமான நிலையில் மூளையிலிருந்து நரம்புகள் மூலம் சிறுநீரை வெளியேற்றும் உத்தரவு சிறுநீர்ப் பைக்கு வருகிறது. எனவே நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவும் இத்தகைய கட்டுப்பாடு இல்லாத தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினை ஏற்படலாம்.
திடீர் அசைவுகள் காரணமாக ஏற்படும் கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் வெளியேற்றம் பிரச்சினை (Stress Incontinence): இருமல் (Coughing), தும்முதல் (Sneezing), சிரித்தல் (Laughing), பொருள்களை தூக்குதல் (Lifting), குனிதல் (Bending), ஓட்டம் (Running) ஆகிய உடல் அசைவுகளின் போது கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் கசியத் தொடங்கும்.
அவசரமாக சிறுநீர் கழிக்கும் பிரச்சினை : எவ்வித முன்னெச்சரிக்கை அறிகுறியும் இன்றி திடீரென சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு கழிப்பறையை நோக்கி கால்களை அவசரமாக நடக்கச் செய்யும் பிரச்சினை இது. சில நேரங்களில் கழிப்பறையை அடையும் வரை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ஆடையிலேயே சிறுநீர் வெளியேறி விடும்.
சிறுநீர்ப் பை நிரம்பி வழியும் பிரச்சினை (Urge Incontinence): இந்த வகைப் பிரச்சினையில் சிறுநீர்ப் பையிலிருந்து முழுமையாக சிறுநீர் வெளியேறாது. அதாவது சிறுநீர் முழுவதுமாக உள்ள சிறுநீர்ப் பையில் சிறுநீரகங்களிலிருந்து மேலும் சிறுநீர் வந்து சேரும். விளைவு, நீர் நிரம்பிய பாத்திரத்தில் திறந்துள்ள குழாயிலிருந்து வரும் தண்ணீர் வழிவது போல், சிறுநீர் கசியத் தொடங்கும்.
சிறுநீர்ப் பிரச்சினை உள்ளதற்கான ஆரம்ப அறிகுறி என்ன?
பகல் நேரங்களில் 6 முதல் 7 தடவை சிறுநீர் கழிப்பதும் இரவில் ஒன்று அல்லது இரண்டு முறை சிறுநீர் கழிப்பதும் இயல்பானது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சிறுநீர்ப் பிரச்சினை உள்ளதாக அர்த்தம். மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மருத்துவ சிகிச்சை
சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாத வகைக்கு ஏற்ப அதைத் தீர்க்க நல்ல மாத்திரைகள் உள்ளன. பிரச்சினைக்கு ஏற்ப மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அறுவைச் சிகிச்சை
சிறுநீர்க் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேறும் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தற்போது நவீன சிகிச்சை முறை உள்ளது. டிவிடி (Tension Free Vaginal Tape) என்ற இந்த நவீன சிகிச்சை முறையில் டேப்பைக் கொண்டு பாதிப்புக்கு வலுப்படுத்தப்படும். இந்த நவீன எளிய சிகிச்சையை காலையில் செய்து கொண்டு மாலையில் வீடு திரும்பி விடலாம். இச்சிகிச்சை, லாப்ராஸ்கோப்பி சிகிச்சையைக் காட்டிலும் எளிமையானதும் சிறந்த பலனை அளிக்கக்கூடியதும் ஆகும்.
ஆதாரம் : மாற்று மருத்துவம் காலாண்டு இதழ்
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
24 மணிநேரத்தில் உயிரை பறிக்கக் கூடிய கொடிய நோய்கள்...
இத்தலைப்பில் மருத்துவம், காவல்துறை மற்றும் தீயணைப்...
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்க...
3 வகை உடல் 6 வகை பருமன் பற்றி இங்கு கொடுக்கப்பட்டு...