பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர்கள் - வளர்ச்சிக்கான மாற்று சக்தி

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். எனவேதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் அவர்களின் கைகளில் தான் நாடு உள்ளது என்று இளைஞர்களின் சக்தியை உலகிற்கு உணர்த்தினார் சுவாமி விவேகானந்தர்.

நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு

இளைஞர்களின் பங்களிப்பும் மாறுபட்ட அணுகுமுறையும் நாட்டின் வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிப்பதற்குப் பேருதவியாக இருந்ததால் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாக கருதப்பட்டனர். எதிர்காலம் மட்டுமன்றி நிகழ்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு வளர்ச்சிச் சமத்துவத்தைப் பரவலாக்குவதற்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் வளர்ச்சிப் பங்காளிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.

உலகில் சில நாடுகள் தான் மக்கள்தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை வரப்பிரசாதமாகப் பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கும் மேல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ளனர். வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் உலக அரங்கில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பது வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளில் இளைஞர்கள் ஈடுபடுவதும் அவர்களின் உறுதிமிக்க பங்களிப்பும் தான். இவர்களின் ஈடுஇணையற்ற, நேரடியான மற்றும் மறைமுகமான பங்களிப்பால் நவீன இந்தியா சவால்களையும் சறுக்கல்களையும் எதிர்கொண்டு அதற்கான சரியான தீர்வுகளைக் கண்டறிந்து சமூக, பொருளாதாரத் தளத்தில் வளமான பாதையில் பயணித்து வருகின்றது.

எனவே ஒவ்வொரு நாட்டிலும் அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. பன்முகத் திறன் கொண்ட இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிடும் நாடுகள் பின்தங்கிய நாடுகளாகவே இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், இன்று அந்நிலை மாறி எந்தவொரு நாடு இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தத் தவறுகின்றதோ அல்லது திட்டமிடாமல் தவறான வழிகளில் பயன்படுத்திட முயலுகின்றதோ அது வளர்ந்த நாடுகளின் பட்டியலை எட்டிப் பிடிக்க இயலாது என்பதும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.

இளைஞர்கள் குறித்த ஐ.நா. சபை வரையறை

15 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களை இளைஞர்கள் என ஐ.நா. சபை வரையறை செய்துள்ளது. உலக மககள்தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இளைஞர்களாவர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். இத்தகைய வலிமை படைத்த இளைஞர்களை அதிகாரப்படுத்துவதன் மூலம் எதிர்பார்ப்பிற்கேற்ற உறுதியான கட்டமைப்பை அனைத்து நிலைகளிலும் உருவாக்க முடியும் என்று ஐ.நா. சபை நம்பிக்கை தெரிவிக்கின்றது.

நாளைய சமுதாயத்தின் தூண்களாக, வருங்காலத் தலைவர்களாக அறியப்படும் இன்றைய இளைஞர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலம் மேம்பட்ட சமுதாயத்தை உலகத் தரத்தில் ஏற்படுத்த முடியும்.

இளைஞர்கள் முன்னேற்றம்

இளைஞர்கள் முன்னேற்றம் என்பது அடிப்படையில் இரண்டு முக்கிய இலக்குகளைக் கொண்டது. அவை,

 • அக முன்னேற்றம்
 • புற முன்னேற்றம் என்பதாகும்.

அக முன்னேற்றம்

இது இளைஞர்களின் தனித் திறமை சார்ந்தது. ஒரு செயலை மேற்கொள்வதற்கான தனி நபர் திறன்களை வளர்த்தல் மற்றும் முறையாகச் செயல்படுத்துதல்.

புற முன்னேற்றம்

இது பொது நிலையில் சமூக மேம்பாடு கருதி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுதல் சார்ந்தது. குடும்பம், சமூகம், நாடு, மக்கள், வளர்ச்சி, மாற்றம் போன்றவற்றில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்றல்.

மேலும் பிறரைப் புரிந்து கொள்ளுதல், சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணுதல், உறுதியான முடிவெடுத்தல், பாதிப்புகளை உள்வாங்குதல் போன்ற திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டிள்ளது.

இன்றைய இளைஞர்கள் இந்தியாவை வல்லரசாக கட்டியெழுப்பும் திறமை படைத்தவர்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனை நிறைவேற்றுவது என்பது அவர்களின் எண்ணங்கள், பண்புகள், ஈடுபாடுகள், செயலாற்றும் முறைகள், மன உறுதி ஆகியவற்றைப் பொருத்ததாகும்.

எடுத்துக்காட்டான இளைஞர்கள்

குஜராத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற இளைஞன் மனதில் சத்தியத்திற்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருந்தது. மெலிந்த தேகமுடன் உடல் பலமற்று அந்த இளைஞன் வழக்கறிஞர் படிப்பு படித்த போதும் பெரிய வழக்கறிஞர் ஆகும் திறமை ஒன்றும் அந்த இளைஞனுக்கில்லை. ஆனால் அந்த இளைஞனின் மனதில் இருந்த அசைக்கமுடியாத மன உறுதி இந்திய மண்ணிலிருந்து அந்நிய சக்திகளை வேரோடு அகற்றி சரித்திரம் படைத்தது. கத்தியின்றி, இரத்தமின்றி நடந்த விடுதலைப் போராட்டம் உலகச் சரித்திரத்தில் பதிவாகியது.

இளமை முதல் ஐன்ஸ்டீனுக்கு இருந்த அறிவியல் தாகம் அவனை விஞ்ஞானத் துறை நோக்கிப் பயணம் செய்ய வைத்துப் பின்னாளில் ஈடு இணையற்ற விஞ்ஞானியாக உலகிற்குத் தந்தது. எந்தத் துறையாயினும் இளைஞர்களின் சிந்தனைகள், உறுதிமிக்க உழைப்பு, புத்தாக்க முயற்சி ஆகியவை குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை உருவாக்கி இருக்கின்றது. இவ்வாறு இளைஞர் சக்தி எந்தச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொறுத்து தனிநபர் மேம்பாடு மட்டுமன்றி நாட்டின் இலக்கு சார்ந்த முயற்சிகளும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்தகைய முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு அரசுகளும் தங்கள் பங்களிப்பைச் செலுத்துகின்றன.

இளைஞர்களின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் முயற்சிகள்

நாட்டின் இளைஞர்களை மனதில் கொண்டு நம்பிக்கைக்கான புதிய சூழலை உருவாக்கிடவும் வளர்ச்சித் தளங்களில் நாடு புதிய உச்சத்தை எட்டுவதற்கும் அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய சிறப்புத் திட்டங்களுள் சில பின்வருமாறு:

திறன்மிகு இந்தியா

வேலைவாய்ப்பிற்கான சந்தையில் நுழையும் இந்திய இளைஞர்களில் பெரும்பாலானோர் போதிய திறன்களின்றி தவித்து வருகின்றனர். இந்நெருக்கடியைச் சரிசெய்து தகுதியுள்ளவர்களுக்கு முறையான திறன் பயிற்சி அளித்து தகுதியான வேலையைப் பெறுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கின்றது. இத்திட்டம் 7 ஆண்டுகளில் அதாவது 2022க்குள் ஏறத்தாழ 40 கோடி இளைஞர்களைத் தொழில் திறன் மிக்கவர்களாக மாற்றும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் விரைவாகவும் தரமாகவும் தேசிய தகுதி வாய்ந்த திறன் பயிற்சிகளைப் பெறுவதுடன் புதுமையான அணுகுமுறைகளில் தொழில்முனைவு அனுபவம் மற்றும் உயர் தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டம் (Pradhan Mantri Kaushal Vikas Yojana)

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். தேசிய திறன் தகுதி கட்டமைப்பு மற்றும் தொழில்துறையினர் நிர்ணயித்துள்ள தரத்திற்கேற்ப திறன் பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெறுவோரின் திறன்கள் மூன்றாம் தரப்பினர் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு தகுந்த பரிசுகள் வழங்கப்படும்.

உலக நாடுகளின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கில் இந்திய இளம் தொழில்முனைவோர்களை ஊக்கப்படுத்தி சாத்தியமுள்ள துறைகளில் இந்தியத் தயாரிப்புகளை அதிகரிக்கும் சூழலை இத்திட்டம் உருவாக்கியுள்ளது. அந்நிய முதலீடுகளுக்கான வாய்ப்பு, உள்நாட்டு நிறுவனங்களே பெருமளவு முதலீடு செய்து உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதி செய்தல், புதிய தொழில்நுட்பத்தினைக் கையாளுதல், பன்முகத் திறன் மேம்பாடு போன்றவை இத்திட்டத்தின் நோக்கங்களாக உள்ளன. மேலும் இத்திட்டம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிற்சாலைகளைப் பெருக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் வழிவகை செய்கின்றது.

தொடங்கிடு இந்தியா மற்றும் எழுந்திடு இந்தியா (Startup India& Standup India)

இந்தியாவின் உந்து சக்தியாகக் கருதப்படும் இளைஞர்களின் புதிய சிந்தனைகளை, புத்தாக்க முயற்சிகளை அங்கீகாரம் செய்யும் வகையில் தொழில் துறையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு , தொழில்முனைவுகளுக்கான உதவிகள், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருதல், அதற்கான நிதி வசதிகள், தொழில்நுட்ப ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுவடைவதோடு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம்

ஊரகப் பகுதிகளில் வாழும் இளைஞர்களிடையே திறன் பயிற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் திறமைக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கான முயற்சிகளை இத்திட்டம் மேற்கொள்கின்றது. இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 10 இலட்சம் கிராமப்புற இளைஞர்கள் அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்பைப் பெருக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.

இளைஞர்கள் மேம்பாட்டிற்கான சிறப்பம்சங்கள்

இவ்வாறு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்பம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றுள் சில:

 • 3 கோடி இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல்
 • வெளிநாட்டு மொழிக் கல்வி கற்றுத் தர நடவடிக்கைகள்
 • இளைஞர்களின் வருடாந்திரக் கற்றலை அளவிடப் புதிய முறை
 • மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றியமைத்தல்
 • தேவைப்படும் துறைகளில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
 • இளைஞர் நலன், வேலைவாய்ப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தல்
 • திறன் சார் பணியாளர்களை தேவையான அளவில் உருவாக்குதல்
 • புதிதாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் ஏற்படுத்துதல்
 • நிலையான வாழ்வாதாரம் கிடைத்திடும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஒருங்கிணைந்த தேசியக் கொள்கை உருவாக்குதல்
 • திறன் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பிற்கான தேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம் ஏற்படுத்துதல்
 • இளைஞர்களுக்கான தேசியத் திறன் தகுதிக் கட்டமைப்பு ஏற்படுத்துதல்
 • உள்ளுர் அளவில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்தல்
 • தேசிய அளவில் வேலைவாய்ப்பு மையங்கள் அமைத்தல்
 • தற்காலச் சூழலுக்கேற்ப இளைஞர் மேம்பாட்டிற்கான புதிய முயற்சிகள், புத்தாக்கச் செயல்களை வெளிப்படுத்துதல்

மேம்பாட்டு நடவடிக்கைகள்

எதிர்காலத் தலைமுறையின் தூண்களாகக் கருதப்படும் இளைஞர்கள் சமூகம், மக்கள், நாடு ஆகியவற்றின் மீது அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டால் சமூகச் சீர்கேடுகள் குறைந்து வளர்ச்சிக்கான நேர்மறைச் சூழல் உருவாகும். இளைஞர்கள் தங்களது தனித் திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்தி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கிடவும் அதனைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வழிகளில் பாதுகாத்திடவும் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அவை:

 • இளைஞர்களை இலக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வைத்தல்
 • வளர்ச்சியை முன்னெடுக்கும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்தல்
 • மாற்றங்களை முன்னெடுக்கும் கல்வியை வழங்குதல்
 • சரியான முடிவுகளைப் பின்பற்றிட வலியுறுத்துதல்
 • பாரபட்சமின்றி செயல்பட அறிவுறுத்துதல்
 • சுய கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த செயல்பாடு, புரிந்து செயல்படுதல் போன்ற திறன்களை வளர்த்தல்
 • சமூகம் மற்றும் வளர்ச்சியின் பரிமாணங்கள் பற்றிய புரிதலை உருவாக்குதல்
 • புத்தாக்க முயற்சிகளுக்குத் தேவையான களம் அமைத்துத் தருதல்

இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் பணியை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் வேடிக்கை பார்க்க இயலாது. நம் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். உலக நாகரிகத்தின் சிகரத்தைத் தொட்ட ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களாக இளைஞர்கள் ஆடம்பரங்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார் சிந்தனைகளையும் உழைப்பையும் இழந்ததுதான் என்று வரலாறு சுட்டுகின்றது. எனவே தற்காலச் சூழலில் இளைஞர் சக்தி எந்த நிலையில் இருக்கின்றது? எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது? என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் தனித் திறன்களை இழந்துவிடாமலும் அல்லது தவறான வழிகளில் பயன்படுத்தி விடாமலும் இருக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் முறையான கண்காணிப்பு தொடரும் பட்சத்தில் அவர்கள் வளர்ச்சிக்கான மாற்று சக்திகளாக அடையாளம் காணப்பட்டு திறன்மிகு இந்தியா மட்டுமல்ல வல்லரசு இந்தியாவை, வளர்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். அதற்கு அரசுகள், மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு இயக்கங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.07586206897
அ.அருள்பாண்டி . பெரியகுமட்டி கடலூர் May 01, 2020 05:22 PM

தற்போதைய இளைஞர்களின் வளர்ச்சி குறைந்ததே, அவர்களின் நோக்கம் சமுக வலைதளங்களில் தேவையற்ற பரிமாற்றமே
கை அடக்கத்தில் உலக்கத்தை தெரிந்துக்கொளள்ளும் கைப்பேசி இப்போது அதுதான் நம்முடைய இளைஞர்களை நாசமாக்கும் கருவியாக இருக்கிறது எங்கள் கிராமத்தை பொறுத்தவரை படும்மோசம் என்னுடைய மனதில் ஆதங்கம் என்னையே நான் கொலை செய்யும் அளவிற்கு இருக்கிறது சொல்வதற்கு பல இருக்கிறது. நன்றி

மா.கிருட்டிண சேனன் Dec 27, 2019 08:11 PM

என் கருத்து என்னவென்றால் இந்த கட்டுரை மிகவும் நன்றாக இருக்கிறது.
இதை போன்ற தகவல்கல் நமக்கு ஒரு பாடம் தெரிந்து கொள்ளலாம்.

BERLIN MARS Nov 15, 2018 08:07 PM

மிக அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top