பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய இளைஞர்கள் – புலம்பெயர்வு

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்திய இளைஞர்களின் பணி மற்றும் திறன் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

பன்னெடுங்காலமாகவே உலகம் முழுவதிலும் இந்திய ஞானம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு கொடியை உயர்த்திப் பிடிப்பவர்களாக இந்திய இளைஞர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது மதம் மற்றும் இனம் தான் உயர்ந்தது என்ற கோட்பாட்டில் மூழ்கி இருந்த போது இந்தியாவைச் சேர்ந்த இளம் துறவியான சுவாமி விவேகானந்தர் கடந்த 1893ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று அங்கு சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ மத மாநாட்டிற்குச் சென்று அங்கு மத சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம் பற்றிப் பேசி பெரும் பாராட்டினைப் பெற்றார். ஒரு இளம் வழக்கறிஞராக தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட மகாத்மா காந்தி, அங்கு முதல் முறையாக தனது சிந்தனைகளாக விளங்கிய உண்மை மற்றும் சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்க்க பின்னர் அவை உலகின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வெல்ல முடியாத ஆயுதமாக மாறிவிட்டன. மனித குலத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றை உலகத்திற்கு வெளிநாட்டுக்கே சென்று உணர்த்திய இந்தியாவின் முதலாவது மனிதர் காந்தி என நம்பப்படுகிறது. இந்தியச் சிந்தனைகள் மற்றும் மதிப்புகளை உலகம் முழுவதற்கும் சென்று பரப்பும் பாரம்பரியம் 2ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. மெளரியப் பேரரசாகத் திகழ்ந்த அசோகரின் இளம் மகன் மற்றும் மகள் இலங்கைக்குச் சென்று அங்கு முதன்முறையாக தெற்காசியாவில் புத்த மதத்தைத் தோற்றுவித்தார்கள். இத்தகைய உணர்வுகொண்ட இளைஞர்களின் மரபு இன்றளவும் தொடர்ந்து திறன் கொண்ட இலட்சக்கணக்கான இந்திய இளைஞர்களால் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் இருந்து வருகிறது.

புலம்பெயர்ந்த இந்தியர்கள் - இளம் படை

சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தவர்களின் சராசரி வயது 39 ஆண்டுகளாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச புலம்பெயர்வு அறிக்கை 2015 கூறுகிறது. இந்தியா உலகின் அதிகமான இளைஞர்கள் கொண்ட நாடாகத் திகழ்வதால் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் குடிபெயர்பவர்கள் இளம் வயதினராகவே உள்ளனர். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2.5 கோடியாக உள்ளது. 2015ஆம் ஆண்டு ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை நடத்திய ஓர் ஆய்வின்படி, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் மிக அதிகமாக உள்ளது என்று தெரிகிறது. உலகின் சில சிறிய நாடுகள் மற்றும் புதிய நாடுகளிலும் இந்தியர்கள் இருப்பதைக் காணமுடிகிறது. உதாரணத்திற்கு தெற்கு சூடானில் 100க்கும் குறைவான எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் வெவ்வேறு விதமான விசா மற்றும் குடியுரிமைகளுடன் சுமார் 32 இலட்சம் இந்தியர்கள் உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வளைகுடா நாடுகள் இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக உள்ளது. வளைகுடா நாடுகள் மெத்தம் 70 இலட்சம் இந்தியர்களைக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களின் விரிவாக்கத்தில் ஒரு உள்ளார்ந்த காலனித்துவ மரபு உள்ளது, என்பதால் இந்தப் பரவலுக்கான வடிவமைப்பு அம்சங்கள் குறித்து சிறிய ஆய்வு மேற்கொள்ளப்படுவது அவசியமாகிறது. காலனித்துவ ஆட்சியில் வெளி உலகத்துடன் இந்தியாவின் உறவுகள் பெரிதும் பிரிட்டிஷ் ஆர்வத்துடன் வடிவமைக்கப்பட்டதால், பிரிட்டிஷ் அரசால் ஆட்சி செய்யப்பட்ட இத்தகைய நாடுகளில் இந்தியர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளனர். எனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஃபிஜி, மேற்கிந்தியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க ஆகிய நாடுகளில் இந்தியப் புலம்பெயர்ந்தோர் குறிப்பிடத்தக்க அளவு அதிக எண்ணிக்கையில் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்தியர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்ததற்கு வாய்ப்புகளை விட தயக்கமே முக்கியமாக இருந்தது. அதன்படி புலம்பெயர்ந்தவர்களில் அடிமைத் தொழிலாளர்கள், படை வீரர்கள், மாலுமிகள், லஸ்கர்கள் மற்றும் ஆயாக்கள் அதிக அளவில் இருந்ததுடன் இளைஞர்களாகவும் இருந்தனர் என்பதால் அவர்களுக்கு தாங்கள் குடியேறிய நாடுகளில் உள்ள வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ளும் சுதந்திரம் அளிக்கப்படவில்லை.

கல்விக்காக புலம்பெயர்ந்தவர்கள்

அடுத்த கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்களில் இந்திய மாணவர்கள், சட்டம் படித்தவர்கள் மற்றும் வர்த்தகர்கள் இருந்தனர். அவர்கள் இலண்டனிலும் அதன் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் தங்கி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தங்களால் இயன்ற ஊக்கத்தை அளித்தனர். அந்த வகையில் ஷியாம் கிருஷ்ண வர்மா என்ற பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் பிரிட்டனில் குடியேறி, புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட், பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து நவீன அறிவியல் பயில விரும்பிய ஆற்றல்மிக்க இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஹவுஸ் என்ற இல்லத்தைத் திறந்தார். திறமைமிக்க இளைஞர்களுக்கு அவர் கல்வி பயில ஊக்கத்தொகையும் அளித்தார். சாவர்க்கர், மதன் பிகாஜி காமா, மதன்லால் திங்ரா போன்ற துடிப்பான இளைஞர்கள் மற்றும் புரட்சியாளர்கள் லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸ் உடன் நெருக்கமான தொடர்பு கொண்ட சில பிரபலமானவர்கள் ஆவர். அவ்வாறு இளம் மாணவர்கள் அடங்கிய படை பிரிட்டிஷ் கொடுங்கோள் ஆட்சியின் கொடுமைகள் பற்றி பிரிட்டனின் பல்வேறு இடங்களில் எடுத்துக்கூறினார்கள். இந்திய இளைஞர்களின் நரம்பு மண்டலமாகவே இலண்டன் மாறியது. பின்னர் பாரிசில் குடியேறிய மேடம் காமா இந்தியர்களின் இருப்பைப் பரவலாக்கினார். இதேபோல் இளம் புரட்சியாளர்கள் சிலர் அமெரிக்காவிலும் கனடாவிலும் கடர் இயக்கத்தைத் தொடங்கி, இந்த நாடுகளையும் தொடர்பு மற்றும் வழக்கமான பரிவர்த்தனைகளுக்கான முக்கிய மையங்களாக மாற்றினார்கள்.

காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த பிறகு தான் இந்தியப் புலம் பெயர்வின் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டத்தைத் தொடங்கியது. இந்தியாவில் ஐ.ஐ.டிக்கள் போன்ற உயர் கல்விக்கான தரமான பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்பட்டது வளர்ந்த நாடுகளான மேற்கு ஐரோப்பியா மற்றும் வடக்கு அமெரிக்காவில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை திறமை கொண்ட இளம் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு அளித்தது. அவர்களது திறமைகளை அங்கீகரித்த இந்த நாடுகள் அவர்களுக்கு வெளிநாட்டு கரன்சியில் ஊதியம் அளித்தது. இதன் காரணமாக அவர்களில் சிலர் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் நிரந்தரமாகவே குடியேறி விட்டனர்.

உலகமயமாக்கல்

அதிகப் புலம்பெயர்தலுக்கு பின்னணியில் உள்ள ஈர்ப்பு சக்தி இந்தியாவில் தாராளமயமாக்கலின் இறுதிக் கட்டத்தில் திறன் பெற்ற இளம் இந்தியர்களுக்கு பெரும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தது. வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் தொழிலாளர் செலவுகள் அந்த நாடுகள் மலிவான மாற்று ஏற்பாடுகளைத் தேடும் நிலைக்குத் தள்ளிய போது, இந்திய நிலங்கள் மற்றும் தொழிலாளர்கள் அவர்களின் தேவைகளுக்குக் கை கொடுத்தது. பெரும் அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் அமெரிக்க தொழில்நுட்பவாதிகளுக்கு இணையான ஆனால் அதே நேரத்தில் மலிவான திறன் பெற்ற இந்திய தொழில்நுட்பவாதிகளைப் பணியமர்த்தியது. இது அமெரிக்க நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரித்துக் கொள்ள உதவியதுடன் வேலையற்ற இளம் தொழில்நுட்பப் பட்டதாரிகளுக்கு மரியாதை அளிக்கக்கூடிய வேலைவாய்ப்பை அளித்து இரு நாடுகளுக்கும் நன்மை தரும் பயன்களை அளித்தது.

புள்ளி விவரம்

1960இல் அமெரிக்காவில் 12,000 இந்தியப் புலம்பெயர்ந்தோர் மட்டுமே இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் திறன் அற்ற தொழிலாளர்கள், அல்லது குறைவான திறன் கொண்ட படிப்பறிவற்ற விவசாயத் தொழிலாளர்களாக இருந்தனர். எனினும் அமெரிக்கக் குடியேற்ற சட்டம் 1990இல் செய்யப்பட்ட நேர்மறையான மாற்றங்கள், உயர் திறன் கொண்ட இளைஞர்கள் மற்றும் படித்த இந்தியர்களை அமெரிக்கவுக்குள் ஈர்த்தது. 1980 - 2013 காலக்கட்டத்தில் திறன்பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 2,06,000 என்ற அளவில் இருந்து 20,04,000 ஆக அதிகரித்து, ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியது. இன்று தற்காலிக உயர் திறன் பணியாளர் ஹெச் 1பி விசாவை அதிக எண்ணிக்கையில் பெறுபவர்கள் இந்தியக் குடிமக்களாக உள்ளனர். 2014ஆம் நிதியாண்டில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஒப்புதல் அளித்த 3,16,000 ஹெச் 1பி மனுக்களில் 70 சதவிகிதம் இந்தியர்களுடையது. 2013-14 பள்ளி ஆண்டில் 1,03,000 இந்தியாவில் பிறந்த மாணவர்கள் அமெரிக்க கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்க மக்கள்தொகை அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கையின்படி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் சராசரி வயது 39 ஆக உள்ளது என்றும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் 83% பேர் ஏதேனும் ஒரு அறிவுசார் அடிப்படையிலான துறைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது. மொத்தம் குடியேறியவர்களில் 11% மட்டுமே 65 மற்றும் அதற்கு மேல் வயதுடையர்களாவர்.

இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் அமெரிக்கர்களின் கல்வித் தரத்தை விஞ்சி உயர் மட்ட கல்வி பெற்றவர்களாக உள்ளனர். 2015ஆம் ஆண்டில் பட்டம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்களின் எண்ணிக்கை உள்நாட்டில் பிறந்தவர்களிடையே 30% ஆக இருக்கையில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்களில் (25 மற்றும் அதற்கு கூடுதலான வயதுடையோர்) 82% பேர் பட்டம் அல்லது அதற்கு மேல் படித்தவர்களாக உள்ளனர்.

இந்தியர்கள் வகிக்கும் பணி விவரம்

மென்பொருள் மற்றும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கான பெரும் உலகளாவிய தொகுப்பாகத் திகழும் அமெரிக்காவின் சிலிகான் வேலி கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய முகங்களையே விரும்பித் தேர்வு செய்கிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட், ஏ.எம்.டி., அடோப் போன்ற சிலிகான் வேலியில் உள்ள பெரும் மென்பொருள் நிறுவனங்களில் சில அதன் முதன்மைச் செயல் அதிகாரிகளாக இந்தியர்களையே நியமித்துள்ளது. ஃபேஸ்புக், மோடோரோலா, ரெகிட் பென்கைசர், மாஸ்டர் கார்டு போன்ற இதர பெரிய நிறுவனங்கள் முக்கிய உலகளாவிய வர்த்தக விவகாரங்களைக் கையாள இந்திய நிர்வாகிகளையே கொண்டுள்ளன. இந்தியப் பொறியாளர்களின் ஈடிணையற்ற திறன் மற்றும் மானோபலம் அவர்களுக்கு அமெரிக்கா முழுவதும் பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

பிரிட்டனுடனான இந்தியாவின் உறவுகளோ எப்போதுமே அதற்கு முன் இல்லாததாகவே இருந்துள்ளது. காலனியாதிக்கத்தின் கசப்பான பழைய நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டுப் பார்க்கையில் இந்தியா, பிரிட்டன் இரண்டுமே ஒன்றையொன்று கட்டித்தழுவி, ஒருவருக்கொருவர் அதன் வளர்ச்சிக்கான பங்குதாரர்களாகத் திகழ்கின்றனர். பிரிட்டனில் சுமார் 20 இலட்சம் பிரிட்டிஷ் இந்தியக் குடிமக்கள் பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் குடியேறி வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாகவும் மூன்றாவது தலைமுறை குடியேறிகளாகவும் இருப்பதுடன், தொழில்முனைவோராக, வர்த்தகர்களாக, தொழில்நுட்ப நிர்வாகிகளாக, மருத்துவர்களாக உயர் மதிப்புள்ளவர்களாகத் திகழ்கின்றனர். இளம் இந்தியர்கள் பலர் தங்களை பிரிட்டிஷ் அரசியல் சமூக கலாச்சாரத்தில் இணைத்துக்கொண்டு, தேர்தல்களில் போட்டியிடுவதுடன், அந்த நாட்டின் அரசியல் நடைமுறைகளில் தீவிர பங்களிப்பைக் கொண்டு இருக்கின்றனர். சாதனை எண்ணிக்கையாக 10 இந்திய வம்சாவளி போட்டியாளர்கள் 2015 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பதுடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களாவர். கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த 45 வயதான பிரீத்தி படேல் கேமரூன் அரசில் அமைச்சராக ஆக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் இந்தியப் பெண்மணியாவார்.

வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா

இந்தியாவில் இருந்து சமகால புலம்பெயர்வு பிரதானமாக இரண்டு வகையாக உள்ளது. அதிகத் திறன் பெற்ற தொழில் நிபுணர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அதாவது கெளரவமான பணிகளை நாடி புலம்பெயர்வோர் வழக்கமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு புலம்பெயர்வது முதல் வகை. எனினும் திறன் குறைந்த மற்றும் திறனற்ற தொழிலாளர்கள் வளைகுடா நாடுகள் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்காவுக்கு புலம் பெயரும் நடுத்தர வயதினரைவிட இந்த நாடுகளுக்கு புலம்பெயரும் நடுத்தர வயதினரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மேற்காசிய நாடுகளில் எண்ணெய் வளம் அதிகரிக்கத் தொடங்கிய பின்னரே இந்த நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான புலம் பெயர்வுகள் தொடங்கியது. வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் எண்ணிக்கை 60 இலட்சமாக உள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் 90% பேர் வெளிநாடு வாழ் இந்தியர்களாகவே உள்ளனர் (என்.ஆர்.ஐ.). அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவைப் போல் இன்றி, வளைகுடா நாடுகள் மிக அரிதாகவே இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு நிரந்தரப் பணி விசாக்களை அளிக்கிறது. இங்கு பணிகள் பிரதானமாக கட்டுமானம் அல்லது உடல் உழைப்பாக இருப்பதால், குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு வேலை செய்யும் திறன் குறைந்து விடுவதால், இத்தகைய நாடுகளில் வயதானவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில் தான் விரும்பப்படுகிறார்கள்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் சில ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர் வெற்றியை ருசித்துள்ள போதிலும் , பெரும்பாலான இந்தியத் தொழில்முனைவோருக்கு இந்த நாடுகளில் பிரகாசமான வாய்ப்புகள் கிட்டவில்லை. தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகின்றனர். வளைகுடா நாடுகளில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளில் கேரள இளம் பெண்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை உதவியாளர்களாக பணியாற்றுகின்றனர். இந்த நாடுகளில் குடியேறியுள்ள இந்தியர்கள் பலர் இந்தியக் கலாச்சாரத்தையும் பாலிவுட் படங்களையும் பிரபலமடையச் செய்துள்ளனர்.

அறிவாற்றல் பற்றாக்குறை

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்களிடம் இருந்து இந்தியா சுமார் 70 பில்லியன் டாலர் பெறுகிறது. உலகின் எந்தவொரு நாடும் பெறும் அதிகமான தொகை இதுதான் என்பதுடன் கேரளா பெறும் தொகையைக் கொண்டே இதன் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும். கேரளாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்றவர்கள் தங்கள் குடும்பத்தினருக்காக அங்கு செலுத்தும் தொகை கேரளாவின் நிகர உள்நாட்டு உற்பத்தில் 36% ஆக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இந்தியாவின் ஞானம், கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் நாகரிகம் ஆகியவற்றை உலகம் முழுவதும் பறைசாற்றி உள்ளனர். தாங்கள் சார்ந்திருக்கும் துறைகளில் கூர்மையான அறிவாற்றலுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றது மட்டுமின்றி, இந்திய இளம் திறனாளின் புகழையும் உயர்த்தியுள்ளனர். இதன் மூலம் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் மூலம் இந்தியா கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பயனடைந்தது.

எனினும் அதிக எண்ணிக்கையிலான நன்கு பயிற்சி பெற்ற இந்தியர்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்ததால், இயல்பாகவே இந்தியாவில் அறிவாற்றல் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. 2010ஆம் ஆண்டில் இந்தியா மற்ற நாடுகளுக்கு 60,000 பயிற்சிபெற்ற இளம் மருத்துவர்களை அனுப்பி வைத்து முதலிடம் பெற்றது. அதிகம் பயிற்சி பெற்ற மருத்துவர்களை ஆங்கிலம் பேசும் ஒ.இ.சி.டி. நாடுகளுக்கு அனுப்பி வைத்தது இந்தியா. சுகாதார நிபுணர்களில் அதிக எண்ணிக்கையில் புலம் பெயர்ந்தது காரணமாக ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவும் இந்திய கிராமப்புறங்களில் எதிர்மறைத் தாக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற மருத்துவர்களின் விகிதம் 10% ஆக உள்ள நிலையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் விகிதம் 1% ஆக மட்டுமே உள்ளது. 90% மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் தங்கள் படிப்பு நிறைவடைந்த உடனேயே அமெரிக்காவுக்கு சென்று விடுவதால், இந்திய ஆய்வகங்களும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களும் தரமான ஆராய்ச்சியாளர்கள் இன்றி அவதிப்படும் நிலை உள்ளது.

இந்தியா - இளமையான நாடு

அதிக மக்கள்தொகை கொண்ட நாடு அதிக புலம்பெயர்ந்தவர்கள் நாடாகிறது பெரும்பாலான ஆசிய, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளின் மக்கள் விரைவில் வயது முதிர்ந்தோராக உள்ள நிலையில், இந்தியா மட்டும் 2025ஆம் ஆண்டில் உலகின் மிக இளமையான நாடாகத் திகழவுள்ளது. இந்தியர்களின் சராசரி வயது 25 ஆண்டுகளாக மட்டும் இருக்கும். 2020ஆம் ஆண்டில் உலகின் ஒட்டுமொத்த பணியாற்றும் மக்கள் தொகையில் இருபது சதவீதம் இந்தியாவைச் சார்ந்ததாகவே இருக்கும். ஏற்கனவே உலகின் அதிக புலம்பெயர்ந்தவர்கள் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, இந்தியப் புலம்பெயர்ந்தவர்களின் பணிபுரியும் கரங்களும் அதிகரிக்கும். இதன்படி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்நாட்டிலும், சர்வதேச அளவில் அதிக புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையுடனும் இரட்டைப் பயன்களை இந்தியா பெறும். அனைத்து பெரிய நாடுகளிலும் இளம் இந்தியப் புலம்பெயர்ந்தோர் பரவி இருப்பது, இந்திய மென் ஆற்றலுக்கான ஒரு கருவியாக இருக்கும்.

வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் அதிக அளவு தாய்நாட்டுக்காக பணம் அனுப்புவதால் மட்டுமின்றி, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மேற்கொள்ளும் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் மூலமாகவும் இந்தியா பயனடையும். எனினும் இந்தியப் புலம்பெயர்ந்தவர்கள் மேற்கொண்ட வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மீண்டும் தாய்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான அர்ப்பணிக்கப்பட்ட முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் சென்ற சீனர்கள் பெரும்பாலானவர்கள் ஒரு கட்டத்தில் அதிக அளவில் இருந்த போதும், வெற்றிகரமான சீன தொழில்முனைவோர் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி, உள்நாட்டு புதிய தொழில்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்குத் தேவையான ஊக்கத்தை அளித்தனர். ஆனால் இந்தப் போக்கு இந்திய புலம்பெயர்ந்தோரிடையே காணப்படவில்லை.

அறிவாற்றல் இலாபத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட சில திட்டங்கள்

பிரவாசி பாரதிய திவஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்)

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சாதனைகளைக் கொண்டாடவும் அவர்கள் வசிக்கும் நாடுகள் மற்றும் இந்தியா இடையிலான இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் அவர்களது முயற்சிகளுக்கு உதவவும் வசதி ஏற்படுத்திக் கொடுக்க ஆண்டுதோறும் நடத்தப்படும் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில் அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அம்சகங்களை எடுத்துரைக்கும் மேடையாகவும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் பயன்படுத்தப்படுகிறது.

பி.ஐ.ஒ மற்றும் ஒ.சி.ஐ. அட்டைகள் இணைப்பு

இந்திய வம்சாவளியினர் (பி.ஐ.ஒ.) மற்றும் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள் (ஒ.சி.ஐ.) அட்டைகள் இணைப்பு நடவடிக்கை இந்திய வம்சாவளியினர் சிக்கல் எதுவும் இன்றி இந்தியாவுக்கு வருகை புரியவும், அடிக்கடி காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டியதைத் தவிர்த்து அவர்கள் நீண்ட காலம் இந்தியாவில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகிறது.

இளம் வெளிநாடு வாழ் இந்தியர் தினம்

இளம் இந்திய புலம் பெயர்ந்தோரின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, இந்தியாவின் வளர்ச்சியுடன் அவர்கள் இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதன் அவசியம் காரணமாகவும், அரசு உலகின் பல பகுதிகளிலும் அதிகரித்து வரும் புதிய தலைமுறை இளைஞர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் மையம்

150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியப் புலம்பெயர்ந்தோர், இனி, வெளிநாடு வாழ் இந்தியர் மையம் என்றழைக்கப்படும் புதுதில்லியில் அமைந்துள்ள புதிய இல்லத்திற்கு வருகை தந்து அங்கே தங்க முடியும். அவர்கள் இங்கு தங்களது வேர்களைத் தேடுவது, முதலீட்டுக்கான ஆலோசனைகளைப் பெறுவது, உள்நாட்டு பயண முன்பதிவு, பெரும் அரங்கங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் வர்த்தக சந்திப்புக்களை நடத்துவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

வஜ்ரா - இணைந்த கூட்டு ஆராய்ச்சி வசதியைப் பார்வையிடுவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்தியாவை தெரிந்து கொள்ளுங்கள் திட்டம் (கே.ஐ.பி.)

18 முதல் முதல் 26 வயது வரையிலான புலம்பெயர்ந்த இளம் இந்தியர்களுக்கு இந்தியாவைப் பற்றியும் அவர்களது முன்னோர்கள் குறித்தும் எடுத்துக்கூறி, அவர்கள் தங்களது கருத்துக்கள், எதிர்பார்ப்புக்கள், அனுபவங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு, நவீன இந்தியாவுடன் தங்களது நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

அறிவாற்றல் இலாபம் மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவற்றுக்காக விடுக்கப்பட்ட அழைப்பு, உலகம் முழுவதும் தங்கி விட்ட இந்திய இளைஞர்களிடையே குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தாயகம் திரும்பி தங்களது மன, உடல் மற்றும் பொருளாதார நிபுணத்துவத்தை இந்தியாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வருகின்றனர். 2000 மாவது ஆண்டில் மும்பை மற்றும் தில்லி ஐ.ஐ.டி.யில் படித்த இளம் பட்டதாரிகளுக்கு சர்வதேச அளவில் வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் 100 சதவீதம் இருந்தது. இது இன்றளவும் தொடருகின்ற போதிலும், முன்னணி கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.

முடிவுரை

வெளிநாடுகளில் வாழும் இளம் இந்தியர்கள் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். உயர் திறன் கொண்ட இந்தியர்களுக்கு பணி விசாக்கள் அளிக்கப்படுவதைக் குறைக்கப் போவதாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள அரசுகள் அறிவித்துள்ளன. இத்தகைய விசாக்களின் மூலம் அதிகம் பயனடைபவர்கள் இந்தியர்களாகவே உள்ளனர் என்பதால், இத்தகைய நடவடிக்கைகள் அவர்களது தொழில் வாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இந்தியப் புலம்பெயர்ந்தோரின் தங்கும் மற்றும் குடியிருக்கும் அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும். சவூதி அரேபியாவும் வெளிநாட்டினரிடம் இருந்து தங்களது உள்நாட்டுப் பணி வெளியைப் பாதுகாக்கும் நிடாகட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஏமன், சூடான், கென்யா, அல்லது ஈராக் போன்ற நாடுகளில் போர் போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அவ்வாறு சிக்கிய தனது நாட்டு குடிமக்களை மீட்க இந்திய அரசு தனித்துவமான நிபுணத்துவத்தையும் திறனையும் காட்டிய போதிலும், பிரிவினை வாதிகளிடம் இருந்து தனது இளம் பணியாளர்களைப் பாதுகாக்க அர்ப்பணிக்கப்பட்ட மீட்புக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. குழப்பம் நிறைந்த ஜி.ஏ.ஏ.ஆர். நடைமுறைகள் வெளிநாடு வாழ் இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவில் புதிய தொழில்களில் முதலீடு செய்வதைத் தடுக்கிறது என்பதால், இந்த விதிகள் உரிய முறையில் விளக்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச அளவில் இருப்பது போலவே உள்நாட்டிலும் இளைஞர்கள் சொத்தாக உள்ளனர் என்பதால், நாடுகளின் தேவைக்கேற்ப அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதற்கு, பிரவாசி கவுசல் விகாஸ் திட்டம் போன்ற திட்டங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட வேண்டும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.13636363636
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top