பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

முதியோரைப் பேணுதல் இளைஞர் கடனே

முதியோரைப் பேணுதல் இளைஞர் கடனே பற்றிய குறிப்புகள்

முன்னுரை

"மற்ற குழந்தைகளை விட எனது குழந்தை எப்போதும் சிறந்தவனாக இருக்கவேண்டும். அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்" என்ற மனநிலைதான் பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது.. அதுமட்டுமில்லாமல் வயதானகாலத்தில் நம் குழந்தைகள் நம்மைக் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் கூட சில பெற்றோரிடம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் குழந்தைகள் வளர்ந்தபின்னர் பெற்றோர்களின் தியாகத்தை மறந்துவிடுவதால் தான் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன.

உலக அளவில் முதியோர்

உலகிலேயே முதியோர்கள் அதிகமாய் இருக்கும் நாடு எனும் பெயரை சீனா தக்கவைத்திருக்கிறது. சீன மக்கள் தொகையில் 14 சதவிகிதம் பேர் முதியோர். சீனாவில் 16 கோடிக்கும் அதிகமான முதியோர்கள் இருக்கிறார்கள். ஆண்டு தோறும் மூன்று சதவிகித முதியோர்கள் அதிகரிப்பதாகவும் சீன தேசிய முதியோர் குழு தலைவர் ஹ¨ய் சொல்கிறார். இதே நிலை நீடித்தால் 2020ம் ஆண்டில் 26 கோடி முதியவர்கள் சீனாவில் இருப்பார்களாம். அதிகரித்து வரும் முதியோர்களால் சீனாவில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் முதியோர் உதவித் தொகை, மருத்துவக் காப்பீடு, மற்றும் சமூக பாதுகாப்பு அம்சங்கள் பாதிப்படைவதாக சீனா கவலை கொண்டுள்ளது. இதனால் சீனாவின் பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு அந்நாடு முன்னுரிமை அளித்துள்ளது.

இந்தியாவில் முதியோர்

முதியோர்களின் எண்ணிக்கை இந்தியாவிலும் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்றைய இந்திய மக்கள் தொகையில் 8.2 சதவிகிதம் பேர் முதியோர்கள். உலக முதியோர்களில் பாதிபேர் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் வசிக்கிறார்கள். 1996ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டில் முதியோர் இந்தியாவில் 167 சதவிகிதம் அதிகரித்திருப்பார்கள். இந்தியாவில் 2016ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 12 கோடிப் பேர் இருப்பார்கள். இவர்களில் 51 விழுக்காட்டினர் பெண்களாவர். தமிழகத்தில் 1991இல் 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை 44 லட்சம். இவர்களில் 60 விழுக்காட்டினர் போதிய உணவு, உடை, உறையுள் ஆகிய வசதிகளின்றி தவித்தனர், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றது ஒரு புள்ளி விவரம். இது கவலைக்குரிய விஷயம்.

முதியோர் தற்கொலை

குழந்தைகளின் சித்ரவதை தாங்கமுடியாதபோது பெற்றோர் தற்கொலை முடிவைத் தேடிக் கொள்கின்றனர். அண்மைக்காலமாக தற்கொலை செய்து கொள்ளும் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறது ஹெல்ப் ஏஜ் இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம்.

பெண் முதியோர்

தந்தை, சகோதரர், கணவர், மகன் என வாழ்நாள் முழுவதும் ஆண் உறவுகளையே சார்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் நம் பெண்களில் பலருக்கு உண்டு. கணவன் இறந்துவிட்டால், பிள்ளைகளைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். மகன்களோ, இன்றைய அவசர யுகத்தில் பொருளாதாரத் தேவைகளுக்காக வெளியூர் அல்லது வெளிநாடு சென்றுவிடுகின்றனர். அதனால், பல தாய்மார்கள் ஆதரவற்றுப் போகின்றனர். வயோதிகக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் துயரங்கள். உடல் ஆரோக்கியம் தொடங்கி சமூகப் பாதுகாப்பு, பொருளாதாரத் தேவைகள் என எல்லாவற்றிலும் பிரச்சினைகள்தான். அனைத்து வகையிலும் பாதுகாப்பற்ற சூழலில் அவர்கள் வாழ்கின்றனர்.

சட்டம்

"பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம்- 2007" நம் நாட்டில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது.   பெற்றோரைப் புறக்கணித்தால், மூன்று மாதம் சிறைத் தண்டனை என அரசு சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டம் குறித்து முதியோர் பலருக்கும் விழிப்புணர்பு இல்லை. இது குறித்துத் தெரிந்திருந்தாலும், தங்கள் கஷ்டத்தை குடும்ப கௌரவம் கருதி அடுத்த நபரிடம் கூட சொல்லாமல் தவிர்க்கும் முதியோர் 80 விழுக்காடு உள்ளனர் என்கின்றது ஆய்வு.

முதியோர் என்ன செய்யவேண்டும்

முதியோர்களும் அந்தப் பருவத்தை சூழலை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும். வீட்டிலோ, சமூகத்திலோ தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். புத்துணர்ச்சியான மனம் நோய்களின் முதல் எதிரி.

பல இடங்களைச் சென்று பார்ப்பதும், புதியவர்களுடன் நட்பு கொள்வதும், இயற்கை அழகை ரசிப்பதும் மனதிற்குத் தெம்பூட்டும். பிடித்தமான நூலை படிப்பதற்கும், படைப்பதற்கும் முதுமை ஒரு வரப்பிரசாதம் எனக் கொள்ளவேண்டும். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் எண்பது வயதைத் தாண்டியபின்னும் எழுதிக் கொண்டிருந்ததார். ஜான் கிளென் தன்னுடைய 77வது வயதில் தன்னுடைய இரண்டாவது விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாய் நடத்தினார்.

பொழுதுபோக்குகளைத் தொடர்வதும், காலத்துக்கேற்ற புதிய பொழுதுபோக்குகளைக் கையாள்வதும் உற்சாகத்தை மீட்டெடுக்கும். மன மலர்ச்சிக்கு தொடர்ந்து பல பொழுதுபோக்குகளைக் கையாளுங்கள் என அறிவுறுத்துகின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

அரசு என்ன செய்யலாம்

65 வயது என்பது முதுமையின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. அந்த வயதில் அமெரிக்கர்கள் பணியிலிருந்து விடுபட்டு முழுமையான அரசு காப்பீடு மற்றும் சலுகைகள் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். அந்த முறையை நம்நாட்டிலும் அமல்படுத்தலாம்.

வரும் தலைமுறையினர் மத்தியில் முதியோர்களை மதித்தல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மிக அவசியம். தற்போது அந்த முயற்சியை சில தன்னார்வ நிறுவனங்கள் முன்னெடுத்திருக்கின்றன. அரசு சார் நிறுவனங்களின் ஆதரவு இருக்கும்பட்சத்தில் இதனை இன்னும் வெற்றிகரமாக நடத்திடமுடியும்.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முதியோர் பெருமைகள் பற்றி ஆராயப்படுதல், வெகுசனத்தொடர்பு சாதனங்களில் அடிக்கடி இதுபற்றி பேசுதல் மிகவும் இன்றியமையாதது. முதியோர் இயல் (Geriatrics) ஒரு பாடமாக்கப்பட வேண்டியது அவசியம்.

ஆதாரம் : டாக்டர். ஆர். ராதிகா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் - (தினமணி)

 

3.11538461538
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top