தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்பு பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத் தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பது பற்றி சிறிய உண்மை சம்பவம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனிமையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்? அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாழாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி? தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2 கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டுப்பிடிப்பிற்காக எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறது.
மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை இங்கு தரப்பட்டதற்கான நோக்கம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான். அவனது கண்டுப்பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதற்கும் வழியாகுமல்லவா? ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.
15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மேலாளரை அணுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேண்டும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் (என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம்.
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்
செயல் துறைத் தலைவர் (வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
ஃபேக்ஸ்: 28588364
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறையை வைத்தே தக்க வைக்க முடியும்.
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும்.
ஆதாரம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு
கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020
அரிய பொது அறிவுத் தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள...
கிரிஸ்டல் நகை தயாரிப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடு...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்ப...
தமிழ்நாட்டின் பயனுள்ள இ-சேவை வலைதளங்கள் இங்கு குறி...