பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில்முனையும் திறன்மேம்பாடு

தொழில்முனையும் திறன்மேம்பாடு - சமூக - பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தொழில்முனையும் திறன்

இளைஞர்களிடையே தொழில்முனையும் உணர்வை ஏற்படுத்துவது சவாலான விசயம்தான் என்றாலும், எந்த ஒரு பொருளாதாரத்திலும் அதிகரித்து வரும் வேலைவாய்பின்மை பிரச்சினைக்கு இதுதான் அருமருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாடு அல்லது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்முனையும் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. சொத்துக்களை பெருக்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், புதிய மற்றும் சிறந்த பொருட்களையும், சேவைகளையும் வழங்குதல் ஆகியவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக விளங்குவது தொழில்முனையும் திறன்தான் என்று கருதப்படுகிறது. இன்றைய சூழலில் இளைஞர்களிடையே தொழில்முனையும் திறனை ஏற்படுத்துவது நமது நாட்டிற்க மிகவும் முக்கியம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், வேலை இல்லாத இளைஞர்கள் அனைவருக்கும் அரசாங்கமே வேலை வழங்க முடியாது; வணிக நிறுவனங்களால் சிறந்த திறன் கொண்ட சிலருக்கு மட்டுமே வேலை வழங்க முடியும். அதுவும் பணிப்பாதுகாப்பு இல்லாததாகவே இருக்கும். அதுமட்டுமின்றி, ஒவ்வொருவருக்கும் அவரது விருப்பத்திற்கேற்ற வேலை கிடைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.

இன்றைய சூழலில் வேலை வாய்ப்புகள் மிகவும் அரிதானதாக இருக்கும்போதிலும், தங்களது திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கான தந்திரங்களும், தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் திறனும் தொழில் முனையும் இளைஞர்களுக்கு இருந்தால் அவர்களுக்கு வளரும் நாடுகள் சொர்க்கமாக இருக்கும். வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சினைக்கு சவால், தீர்வு ஆகிய இரண்டையுமே தருகிறது தொழில் முனையும்திறன் மேம்பாடு, மக்களின் பின்தங்கிய தன்மையை போக்கவும், பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை போக்கவும், இயற்கை மற்றும் மனித வளங்களை சிக்கனமாக பயன்படுத்தவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் இது உதவுகிறது. வணிகத்தின் பாதிப்புகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு சொத்துக்ளை உருவாக்குவதற்காகவும், தனிப்பட்ட முறையிலும், பணரீதியாகவும் வெகுமதிகளை பெறுவதற்காகவும் உள்ள சிறந்த நடைமுறைதான் தொழில்முனையும்திறன் ஆகும்.

தொழில்முனையும் திறன் என்ற தத்துவம் உருவான விதம்

தொழில்முனையும் திறன் (Entrepreneur) என்ற வார்த்தை, பொறுப்பெடுத்துக் கொள்ளுதல் என்ற பொருள் கொண்ட பிரஞ்சு மொழி வார்த்தையான entrepredire - லிருந்து வந்ததாகும். வணிகப் பொருள் கொண்டு பார்க்கும்போது இதற்கு தொழில் தொடங்குதல் என்று பொருளாகும். இது, “புதுமைகளை அறிமுகம் செய்பவர் மற்றும் வேலைகளை உருவாக்குபவர், அதாவது பொருளாதாரத்தின் கதாநாயகன்" என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டுகளில் Entrepreneur என்ற வார்த்தைக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு அர்த்தத்தை பொருளாதார வல்லுனர்கள் உருவாக்கினர். பெரும்பாலான நேரங்களில் இதற்கு, ரிஸ்க் எடுப்பவர், வட்டிக்கு பணம் தருபவருக்கும், மேலாண்மைத் திறனால் இலாபம் ஈட்டுபவருக்கும் இடைப்பட்டவர் என்றே அர்த்தம் கற்பிக்கப்பட்டது. 20ஆவது நூற்றாண்டில் Entrepreneur என்ற வார்த்தைக்கு எண்ணற்ற வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் வல்லுனர்கள் உருவாக்கிய பல மாதிரிகள் / தொகுதிகள் உலகம் முழுவதும் ஏற்றுக் கெள்ளப்பட்டுள்ளன.

சிறுதொழில் விரிவாக்க பயிற்சி மையம்

இந்தியாவில், தொழில் முனையும் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐதராபாத்தில் உள்ள சிறுதொழில் விரிவாக்க பயிற்சி மையம்தான் முதன்முதலில் கடந்த 1962ம் ஆண்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியது. 1961ம் ஆண்டில் தனி மனித குணம் மாதிரி (Trait Model) என்ற தத்துவத்தை உருவாக்கிய ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டாக்டர் டேவிட் மெக் லேலாந்து என்பவர் அவரது தத்துவத்தை இந்தியாவில் பயன்படுத்தி பார்ப்பதற்காக அழைக்கப்பட்டார். அவரும், சிறுதொழில் விரிவாக்கப் பயிற்சி மையமும் இணைந்து Trait Model தத்துவத்தை முதலில் ஆந்திர மாநிலம் காக்கி நாடா என்ற இடத்தில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மூலம் பயன்படுத்தினர். பின்னர் இந்த தத்துவம் தமிழ்நாட்டிலும் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது (ஆதாரம் : பேராசிரியர் டி. நாகய்யா, வடகிழக்கில் தொழில் முனையும் திறன் மேம்பாடு, ஆசிரியர் டாக்டர் டி.டி. மாலி, 2000) 1962ம் ஆண்டிற்குப் பிறகு இன்று வரை, இந்தியாவிலுள்ள பல கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இந்த தத்துவத்தை அவ்வப்போது பல்வேறு மாற்றங்களுடனோ, மாற்றங்கள் இல்லாமலோ பயன்படுத்தி பார்த்திருக்கின்றன.

ஹைதராபாத்தைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நிறுவனம் (முன்பு சிறுதொழல் விரிவாக்க பயிற்சி மையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது) அகமதாபாத்திலுள்ள தொழில் முனையும் திறன் மேம்பாட்டு நிறுவனம் (EDI) புதுதில்லியிலுள்ள தேசிய தொழில் முனைவோர் திறன் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (Nies Bud) போன்ற பிரபலமான அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் அனுபவப் பாடத்தின் அடிப்படையில் இந்தத் தத்துவத்தை பயன்படுத்துவதில் சில புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்தனர்.

தொழில் முனையும் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம்

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தேவைப்படும் முதல் தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்குவதற்காக மேலும் சிறப்பான முழுமையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டியது மத்திய அரசுக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. புதிதாக உருவாக்கப்படும் தொழில் முனைவோர் சர்வதேசத் தரத்திற்கு இணையாக இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. நகர்ப்புற இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி நிறுவனங்கள் வழங்கும் வசதிகள் அனைத்தும் கிடைத்த நிலையில், கிராமப்புற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பெரும் பணியாக இருந்தது. பல்வேறு பயிற்சி நிறுவனங்களை உள்ளடக்கி, உள்ளூர் அளவில் செயல்படும் அமைப்புகள் உள்ளிட்ட புகழ்பெற்ற அமைப்புகளின் உதவியையும் பெறுவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும் நிலை இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, ஹைதராபாத்தில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நிறுவனம், அகமதாபாத் தொழில் முனையும் திறன் மேம்பாட்டு நிறுவனம், புதுதில்லியிலுள்ள தேசிய தொழில் முனைவோர் திறன் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கவுகாத்தியிலுள்ள இந்திய தொழில் முனையும் திறன் நிறுவனம் ஆகியவை தங்களது வளாகத்திற்குள்ளும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் தொழில் முனையும் திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம் அல்லது இதே போன்ற வேறு பயிற்சி திட்டங்களை நடத்தின.

பாடத்திட்டத்தில் தொழில் முனையும் திறன்

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தொழில்முனையும் திறன் பயிற்சியை அளிப்பதில் CED/IED போன்ற மாநில அளவிலான பல்வேறு தொழில் முனையும் திறன் பயிற்சி நிறுவனங்களும் முழு வீச்சில் ஈடுபட்டிருக்கின்றன. 20ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் தங்களது பாடத்திட்டத்தில் தொழில் முனையும் திறன் மேம்பாட்டு தத்துவத்தையும் ஒரு பாடமாக சேர்த்தன. இந்தியாவில் தற்போதைய நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அங்கங்கள் தொழில் முனையும் திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு பயிற்சிகளையும், பாடங்களையும் நடத்துகின்றனர். இது தவிர கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழங்களும், பொறியியல் மேலாண்மை, வணிகவியல் போன்ற கல்வி நிறுவனங்களும் தொழில் முனையும் திறன் மேம்பாடு பற்றி பாடத்தை தங்களது பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளன. இவற்றின் பாடத்திட்டங்கள் பொது தொழில் முனையும் திறன் மேம்பாடு, ஊரக இளைஞர்களுக்கான தொழில் முனையும் திறன் மேம்பாடு, பெண் தொழில் முனையும் திறன் மேம்பாடு, வேளாண் தொழில் முனையும் திறன் மேம்பாடு தொழில்நுட்ப தொழில்முனையும் திறன் மேம்பாடு நீடித்த தொழில் முனையும் திறன் மேம்பாடு, பெரு வணிக நிறுவனங்கள் தொழில் முனையும் திறன் மேம்பாடு, உலக தொழில் முனையும் திறன் மேம்பாடு என விரிவாக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர EDI, NIESBUD, EMP, வணிகப் பள்ளி, மேலாண்மைக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் தொழில் முனையும் திறன் மேம்பாடு, ஊரகத் தொழில் முனையும் திறன் மேம்பாடு ஆகிய படிப்புகளைத் தொடங்கியுள்ளன.

மாநிலங்களில் தொழில் முனையும் திறனை மேம்படுத்துல்

சிறு தொழில் முனையும் திறன் மேம்பாடு என்ற தத்துவம் முதன் முதலில் 1973ம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அஸ்ஸாம் மாநில முதலமைச்சராக அமரர் சரத் சந்திர சின்ஹா இருந்தபோதுதான் 'அரை மில்லியன் வேலைகள்' என்ற தலைப்பில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு தொழில் முனையும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி மையம் என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தொழில்முனையும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் தொழில் முனையும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்துடன் (EMTC) இணைந்து செயல்படும்படி ஐதராபாத்தை சேர்ந்த சிறுதொழில் விரிவாக்க பயிற்சி மையத்தை அஸ்ஸாம் அரசு கேட்டுக் கொண்டது.

அஸ்ஸாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் EMTC நிறுவனத்தின் 9 கிளைகள் தொடங்கப்பட்டன. அதேபோல் 1973ஆம் ஆண்டில் வளர்ச்சி நிதி நிறுவனங்களும், வங்கிகளும் இணைந்து உருவாக்கிய வடகிழக்கு தொழில்துறை ஆலோசனை அமைப்பு (NETCO) கவுகாத்தியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பாட்டைத் தொடங்கியது. NETCO அமைப்பின் முக்கியப் பணிகளில் ஒன்று மேம்பாட்டு தொழில் முறையும் திறன் தொடர்பான பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்வதாகும். 1979ம் ஆண்டில் ஐதராபாத்தைச் சேர்ந்த சிறுதொழில் விரிவாக்க பயிற்சி மையம் அதன் வடகிழக்கு பிராந்திய கிளையை கவுகாத்தியில் அமைத்தது. இந்த கிளை நிறுவனம் 1984ம் ஆண்டில் தேசிய சிறுதொழில் விரிவாக்க பயிற்சி மையம் (வடகிழக்கு மண்டல மையம்) என்றும், 1994ல் இந்திய தொழில் முனையும் திறன் மேம்பாட்டு கல்வி நிறுவனம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1987ம் ஆண்டில் வளர்ச்சி நிதி நிறுவனங்களும், வங்கி களும் இணைந்து வடகிழக்கு ஆலோசனை அமைப்பு (NECON) என்ற இன்னொரு நிறுவனத்தைத் தொடங்கின.

 • சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSMED)
 • தேசிய சிறு தொழில்கள் கழகம் (NSIC)
 • கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC)

ஆகியவையும் தொழில் முனையும் திறனை மேம்படுத்தவும், சிறுதொழில்களை வளர்க்கவும் வசதியாக வடகிழக்கு மாநிலங்களில் செயல்படத் தொடங்கின.

 • தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம் (NIRD)
 • தேசிய கிராமிய வளர்ச்சி நிதி நிறுவனம் (RGVN)
 • மக்கள் செயல்பாடு மற்றும் ஊரகத் தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கான குழு (CAPART)

மற்றும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் வடகிழக்கு பகுதியில் தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தொழில் மற்றும் வணிக இயக்குனரகம், அதன்

 • மாவட்ட மையங்கள்,
 • ஊரக வளர்ச்சி இயக்குனரகம், அஸ்ஸாம் சிறு தொழில் வளர்ச்சிக்கழகம் (ASIDC)
 • அஸ்ஸாம் தொழில் வளர்ச்சிக்கழகம் (ADC)
 • நாகலாந்து தொழில் வளர்ச்சிக்கழகம்
 • திரிபுரா தொழில் வளர்ச்சிக் கழகம்
 • மேகாலயா தொழில் வளர்ச்சிக்கழகம் (NIDC)
 • மணிப்பூர் தொழில் வளர்ச்சிக் கழகம்
 • அருணாச்சல பிரதேச மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (APSFDC)
 • சிக்கிம் மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் (SIDICO)

மாநில தொழில் வளர்ச்சிக் கழகங்களும், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனங்களும், நாகலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகங்களும் தங்களது மாநிலத்திற்குட்பட்ட பகுதிகளில் தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

KVIC, NSIC, NERAMAL (வடகிழக்கு பகுதி வேளாண் சந்தைக் கழகம்) NEHHDL (வடகிழக்குப் பகுதி கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்) மசாலாப் பொருட்கள் வாரியம், மத்திய பட்டு வாரியம், தேயிலை வாரியம், காஃபி வாரியம், தென்னை வளர்ச்சி வாரியம், ரப்பர் வாரியம், APEDA, MPEDA, NHB, TRIFED, NIRD ஆகியவையும் தொழில் முனையும் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு பயிற்சித் திட்டங்களையும் ஆராய்ச்சிகளையும் நடத்துகின்றன. அதேபோல், மாநில நிதிக் கழகங்கள், சிறுதொழில் வளர்ச்சி வங்கி, இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி, நபார்டு வங்கி, வடகிழக்கு வளர்ச்சி நிதி நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்களும் வணிக வங்கிகளும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் அப்பகுதியில் தங்களது கிளைகள்/ மண்டல அலுவலகங்களை திறந்துள்ளன.

மேலும் வடகிழக்குப் பகுதி தொழில் வணிக கூட்டமைப்பு (FINER), வடகிழக்கு மண்டல சிறுதொழில் சங்கம் (NESIA), வடகிழக்கு பகுதி தொழில், வணிக கூட்டமைப்பு (NECCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CI) இந்திய வணிகக் கூட்டமைப்பு (ICC) ASSIA, MEA, NEWEA / அமைப்புகள் / சங்கங்கள் போன்றவையும் தொழில் முனையும் திறன் மேம்பாடு தொடர்பாக கருத்தரங்குகள், பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை நடத்துவதுடன், இது தொடர்பாக வடகிழக்கு மண்டலத்தில் எழும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பான தங்களின் பரிந்துரைகளை அவ்வப்போது மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பிவைக்கின்றன. இவ்வளவு பணிகள் செய்யப்படும்போதிலும் இப்பகுதியில் தொழில் முனையும் திறன் மேம்பாடு என்பது மந்தமாகவே உள்ளது; ஊக்கமளிக்கும் வகையில் இல்லை.

பூகோள ரீதியில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பது, ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ளாகவே உட்கட்டமைப்பு வசதிகள் இருப்பது, போதிய நிதி வசதி இல்லாமை, போதிய அளவில் தொழில்நுட்ப - பொருளாதார தலைவர்கள் இல்லாமை, பிற பகுதிகளிலிருந்து ஏற்படும் கடுமையான போட்டி, அதிக உற்பத்திச் செலவு போன்ற காரணங்கள்தான் இந்தப் பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளன. எனினும் தொழில் முனையும் திறன் போதிய அளவு இல்லாததுதான் தொழில்முனையும் திறன் போதிய அளவு வளர்ச்சி அடையாததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்தக் குறையை போக்குவதற்காக இந்தப் பகுதியில் உள்ள சில நிறுவனங்கள் தங்களது அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களைச் செய்து இந்தப் பகுதியில் தொழில் முனையும் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆக்கம் : டாக்டர் சுனில் குமார் சைக்கியா, தலைவர், தொழில் நிறுவன மேம்பாடு மற்றும் மேலாண்மை மையம், இந்திய தொழில் முனையும் திறன் மேம்பாட்டு நிறுவனம்

2.95918367347
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top