பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நிறுமங்கள்

நிறுமங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கூட்டுப் பங்கு நிறுமங்கள் (Joint Stock Companies)

தொழிற்புரட்சியின் காரணமாகவும், ஆலை முறையில் உற்பத்தி செய்யத் தொடங்கியதின் விளைவாகவும், பேரளவில் உற்பத்தி செய்யும் வழக்கம் ஏற்பட்டது. வளர்ந்து வரும் மக்கள் பெருக்கத்தின் பல்வகையான தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. குறைந்த அளவே நிதி திரட்டக் கூடிய பண்டைக் காலம் முதல் இன்று வரை இயங்கிவரக் கூடிய தனியாள் வணிகமோ (sole proprietory), கூட்டு நிறுவனத் தொழிலமைப்போ, பேரளவு உற்பத்திக்கும் விற்பனைக்கும் ஏற்றதல்ல. பல நாட்டு மக்களின் தேவைகட்காகவும் இன்றைய தொழிலுலகில் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

பேரளவுத் தொழிலுக்கு, கோடிக்கணக்கான, பல்லாயிரங் கோடிக்கணக்கான பெருமுதல் தேவைப்படுகிறது. பெரிய நிறுவனங்களை நிர்வகிக்க மேலாண்மையில் சிறப்பாற்றல் உடைய வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர். கூட்டுப்பங்கு நிறுமங்களால் மட்டுமே இவர்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

நிறுமம் - பொருள்

நிறுமம் எனும் சொல் உருவாக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட அமைப்பு என்ற பொருளை உணர்த்தும். அதாவது, ஒரு குறிப்பிட்ட சட்டத்தின் கீழ், அச்சட்ட விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்ட அமைப்பு எனப்படும். அது ஒரு சட்டம் உருவாக்கிய நபர் என்றே கருதப்படுகிறது. அது ஒரு சட்ட நபர் ஆகும். இதனால், ஒரு நிறுமமானது, அதன் உறுப்பினர்களிடமிருந்து - ஏன் அதனை உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தோற்றுவிப்பாளர்களிடமிருந்தும் (Promoters) மாறுபட்டு, தனித் தன்மையுடன், தனிநபர் தன்மையுடன் விளங்குகிறது.

வரைவிலக்கணம் (Definition)

குறிப்பிட்ட வியாபாரத்தில் அல்லது தொழிலில் பயன்படுத்தி, அதன் விளைவாக ஏற்படும் இலாப-நட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் பணத்தை அல்லது பணத்தின் மதிப்பை வழங்கும் பல நபர்கள் ஒன்றுசேர்ந்த ஒரு அமைப்பே - நிறுமம் என கூறப்படுகிறது என்று நீதிபதி பிரபு லின்லே (Lord Justice Luinley) ஒரு தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேற்கண்ட வரைவிலக்கணம் கூட முழுப்பொருளையும் உணர்த்தவில்லை. ஹேனே (Haney) என்பாரின் விளக்கமே, நிறுமத்தின் இன்றியமையாக் கூறுகளை உள்ளடக்கிய இலக்கணமாகக் கருதப்படுகிறது. “நிறுமம் என்பது உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நபர். தனி நபர் தன்மையுடையது. வழிவழியாகத் தொடரக் கூடிய நீண்ட ஆயுட்காலம் உடையது. பொது முத்திரை (Seal) கொண்டு செயல்படுவது” என்று தெளிவாக அன்னார் குறிப்பிட்டுள்ளார்.

நிறுமத்தின் சிறப்புக் கூறுகள்

தனியான சட்ட நபர் தன்மையுடையது

நிறுமம் என்பது சட்டம் உருவாக்கிய நபர் என்று முன்னரே கூறியிருக்கிறோம். அதாவது (இந்தியாவைப் பொருத்தவரை) 1956-ம் ஆண்டு நிறுமங்கள் சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளை ஒட்டி, அது ஏற்படுத்தப்படுகிறது. தனக்கென்ற தனி ஆளுமை (Personality) தன்மையை உடையது. அதாவது, அதன் உறுப்பினர்களினின்றும் வேறுபட்டு, தன்னிச்சையாகச் செயல்படும் தனிநபர் தன்மையை நிறுமம் பெற்றுள்ளது. இதன் காரணமாகத்தான், வேறு எவருடனும், தனது உறுப்பினர்களிடமும் கூட, வியாபார, தொழில் ஒப்பந்தங்களில் அது ஈடுபட வல்லதாகத் திகழ்கிறது. ஒருவர் தனக்குத்தானே ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாது. ஆனால் ஒரு நிறுமம், தனது உறுப்பினர்களிடமும் செல்தகு ஒப்பந்தங்களில் (Valid Contracts) ஈடுபட முடிவதிலிருந்து, நிறுமம் என்பது வேறு, அதன் உறுப்பினர்கள் வேறு என்பது புலப்படுகிறதல்லவா? சொத்துக்களை தன் பெயரிலேயே வாங்குவதற்கும், விற்பதற்கும் உரிமை பெற்றுள்ளது. தனது பெயரிலேயே பிறர் மீது வழக்கு தொடுக்க முடியும். அவ்வாறே பிறர் எவரும் (தனது உறுப்பினர்கள் உட்பட) தன்மீது, தன் பெயரில் வழக்கு தொடுக்கவும் முடியும்.

நீடித்த வாழ்வு

உறுப்பினர்களாக நிறுமத்திற்கு நபர்கள் வரலாம் அல்லது உறுப்பினர் நிலையை விட்டுவிட்டுச் செல்லலாம். ஆனால் நிறுமம் எப்பொழுதும் இயங்கக்கூடிய ஒன்று. (கோவர் பிரபு). ஏனென்றால் நிறுமம் இயங்குவது, அதனை உருவாக்கிய தோற்றுவிப்பாளர்கள் உட்பட்ட எவரிடமிருந்தும் வேறுபட்டு இயங்குவது. நிறும உறுப்பினர்களில் ஏற்படும் மாற்றமோ, அல்லது அவர்களின் மறைவோ கூட நிறுமத்தை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை. எனவே நீடித்த வாழ்வு உடையதாக நிறுமம் செயல்படும் சீரிய நிலைமை உடையது.

பொது இலச்சினை அல்லது பொது முத்திரை (Common Seal)

நிறுமம் ஒன்றின் தனிநபர் தன்மையைச் சட்டம் அங்கீகரித்திருப்பினும், மனிதர்களின் உதவியுடன் மட்டுமே அது இயங்கக் கூடியது. அதற்கு உயிரும் இல்லை உடலுமில்லை. அது ஒரு சட்ட நபர். அதாவது சட்டம் உருவாக்கிய நபர். எனவே பத்திரங்களில், ஒப்பந்தங்களில் கையொப்பம் இட முடியாது. ஆயினும் அதற்கென ஒரு முத்திரை(Seal) உள்ளது. அதன் சார்பாகக் கையெழுத்திடும் அதிகாரம் பெற்றவர்கள் உண்டு. கையெழுத்திடும் அதிகாரம் பெற்றவர்கள் கையெழுத்திடுவதுடன், நிறுமத்தின் முத்திரையைப் பத்திரத்தில் பதிந்துவிடின், நிறுமமே கையெழுத்திட்டதாகக் கருதப்படும். எனவே தனி இலச்சினை (அ) முத்திரை பெற்று செயல்படுவது, நிறுமம்.

வரையறு பொறுப்பு (Limited Liability)

 • உறுப்பினர்களின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது. பொதுவாக ஒருநபர் தான் வைத்திருக்கும் பங்குகள் மீது செலுத்தப்பெறாத தொகை அளவிற்கே, அவர்கள் பொறுப்பு வரையறுக்கப்பட்டுள்ளது.
 • பங்குகளின் முழுத் தொகையையும், அவர்கள் செலுத்தியிருப்பின், வேறு பொறுப்பு ஏதும் எழுவதில்லை.
 • வரையறு பொறுப்பு என்ற தன்மையின் காரணமாக, மக்கள் கூட்டுப் பங்கு நிறுமங்களின் பங்குகளை வாங்கத் தயக்கம் காட்டுவதில்லை.
 • எளிதில் பிறருக்கு மாற்றிக் கொடுக்கும் பங்குகளின் தன்மையும் ரொக்கமாக்கிக் கொள்ளும் தன்மையும் பொது நிறுமங்களைப் பொறுத்தவரை, முழுவதும் செலுத்தப் பெற்ற பங்குகளை மாற்றுவதில் சிக்கல் ஏதுமில்லை. எளிதானதுங்கூட அதாவது விற்றுப் பணமாக்கிக் கொள்ளலாம். ஆயினும் வரையறு பொறுப்புடைய தனி நிறுமங்களில் (Private Limited Companies) பங்குகளை மாற்றும் உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

நிறும அமைப்பு முறையின் நன்மைகள்

கூட்டுப் பங்கு நிறுமம் ஒன்றின் சிறப்புக் கூறுகளை இப்பொழுது கண்டோம். அச்சிறப்புக் கூறுகள் அனைத்துமே நிறும அமைப்பு முறையினால் கிட்டும் நன்மைகள்தான். இச்சிறப்புக் கூறுகள்தான் நிறும் அமைப்பை பரவலாக்கியிருக்கின்றது. மிகப்பெரும் தொழில் அமைப்புகளைத் தொடங்கக் காரணமாகவும் உள்ளது.

நிலைத்தன்மை

தனியாள் வணிகரின் அல்லது கூட்டாளி ஒருவரின் இறப்பு, சம மன நிலை இழப்பு (பைத்தியம் பிடித்தல்), நொடிப்பு நிலை(Insolvency) போன்ற எந்நிகழ்வும், தனியாள் வணிகத்தை அல்லது கூட்டு நிறுவனத்தை கலைக்க வல்லது. இதனால் நடந்துவரும் தொழில் தடைபடும் நிலை ஏற்படலாம். ஆனால் இத்தகைய எந்நிகழ்வும், கூட்டுப்பங்கு நிறுமத்தைத் தாக்காது. அது தொடர்ந்து செயல்படுவதில் எச்சிக்கலும் எழுவதில்லை. நிறுமம் தொடர்ந்து நடைபெறும். காரணம், நிறுமம் வேறு, அதன் உறுப்பினர்கள் வேறு. எனவே இயக்குநரவை மாற்றமோ, உறுப்பினர் மாற்றமோ நிறுமத்தின் நீடித்த வாழ்வைத் தடைப்படுத்துவதில்லை.

பேரளவு நிறுமங்கள் இலாபம் ஈட்டும் நிலையை அடையவே சில ஆண்டுகள் பிடிக்கும். எனவே, நீடித்து இயங்கக் கூடிய, தங்குதடையின்றி செயல்படக் கூடிய நிறும முறையே அவற்றிற்கு மிகவும் உகந்தவை.

வரையறு பொறுப்பு

கூட்டுப் பங்கு நிறுமம் ஒன்றின் உறுப்பினருடைய (பங்குகளுடைய) பொறுப்பு, அவர் வைத்திருக்கும் பங்குகள் மீது செலுத்தப்படாத தொகையினளவிற்கே வரையறுக்கப் பட்டுள்ளது. பங்குகட்கான முழுத் தொகையும் செலுத்தப் பெற்றுவிட்டால், நிறுமம் கலைக்கப்படும்பொழுது, அதன் கடன்களைத் தீர்க்கப் போதுமான சொத்துக்கள் இல்லாவிட்டாலும் கூட அவர் மேற்கொண்டு எதுவும் பணம் செலுத்தத்தேவையில்லை. கூட்டுப்பங்கு நிறுமத்தின் இந்த வரையறு பொறுப்பின் காரணமாக, முதலீடு செய்ய விரும்புவோர் நிறுமப் பங்குகளை வாங்க முன்வருகின்றனர். இவ்வாறு சமுதாயத்தில் பரவி முடங்கிக் கிடக்கும் சேமிப்புகளை எளிதில் திரட்டவும், அதனைப் பயன்படுத்தி தொழில் செய்யவும் நிறுமங்களால் இயலும்.

பங்குகளின் விரைவான மாற்றுகைத் தன்மை (Speedy Transferability)

1956-ம் ஆண்டைய நிறுமங்கள் சட்டம் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி ஒருவர் தான் வைத்துள்ள முழுவதும் செலுத்தப்பெற்ற பங்குகளைப் மற்றொருவருக்கு எளிதாகவும், விரைவாகவும் மாற்றித்தர இயலும். நிறுமத்தின் பங்குகளை வாங்க இத்தன்மையும் தூண்டுகிறது.

மேலாண்மை முறையில் தொழில் நுணுக்கத்தின் பயன்பாடு

நிறும முறை அமைப்பில், உரிமைக்கும் மேலாண்மைக்கும் இடைவெளி உண்டு. பங்குநர்கள் ஒரு நிறுமத்தின் உரிமையாளர்கள் தான். சொந்தக்காரர்கள் எனினும், அதனை நிர்வகிக்கும் உரிமை அவர்கட்கில்லை . நிறுமத்தின் மேலாண்மை (Management) பங்குநர்கள் தங்களுக்கிடையே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் இயக்குநரவையிடம் (Board of Directors) ஒப்படைக்கப்படுகிறது. உற்பத்தி, சந்தையிடுகை, நிதியியல், ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற சிறப்புத் தொழில் நுட்ப வல்லுநர்களை அந்தந்தப் பணிகட்கு அமர்த்தி, இயக்குநரவை சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க முடியும்.

பேரளவு உற்பத்தியின் பெரு நன்மைகள்

மிகவும் பெரிய தொழில் நிறுவனங்களை அமைக்க, கூட்டுப் பங்கு நிறும அமைப்பு ஏற்றதாக இருப்பதால், பேரளவு உற்பத்தியில் கிட்டும் அனைத்து நன்மைகளும் இந்த அமைப்பு முறையில் (நிறும் அமைப்பு) விளைகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களை (Financial Resources) திரட்டுவது நிறுமத்திற்கு எளிதாக இருப்பதால், தொழில் வளர்ச்சிக்கும் இவ்வமைப்பு முறை வழிகோல்கிறது.

நிதி திரட்டுவது எளிது

பங்கு மூலதனச் சந்தையில், (Capital Market) புகழ் பெற்ற நிறுமங்கள் நிதி திரட்டுவது எளிதாகிறது. நிறுமங்களின் நலனைக் காக்கும் நோக்குடன் எண்ணற்ற நிபந்தனைகளை நிறுமங்கள் சட்டம் 1956 பொது வரையறு நிறுமங்கட்கு விதித்துள்ளது. இதனால் பெயர்பெற்ற நிறுமங்களால் இடையூறின்றி கடன் பெற, முதல் திரட்ட முடிகிறது. இத்தகைய பயன்களால், கூட்டுபங்குத் தொழில் அமைப்பு முறையாக சிறந்ததாக இருப்பது மட்டுமல்லாமல் இன்றைய பேரளவுத் தொழில் முறைக்கு ஏற்றதாக இருப்பது மட்டுமல்லாமல் - முதலீடு செய்வோரிடையேயும், தொழில் தொடங்குவோரிடையேயும் உளங்கவர்ந்த அமைப்பாகவும் உள்ளது எனில் மிகையன்று.

நிறும் அமைப்பு முறையின் குறைபாடுகள்

நிறும் அமைப்பு முறையில் விளையும் பயன்கள் பலவாயினும் குறைபாடுகளும் உண்டு. அவற்றை இனிக் காண்போம்.

சிக்கல் மிகுந்த சட்ட சடங்குகள்

நிறுமம் ஒன்றை அமைக்கும்பொழுதே கடைப்பிடிக்க வேண்டிய சட்டச்சடங்குகள் சங்கடங்களை விளைவிக்கின்றன. நிறும உருவாக்கத்திற்குப் பிறகு, பொது நிறுமம் ஒன்று, தொழில் தொடக்கச் சான்றிதழ் பெற மீண்டும் பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் நிரம்ப உள்ளன. நிறுமம் செயல்படும்பொழுதும் குறிப்பிட்ட நிகழ்வுகளின்போதும், அவ்வப்பொழுது நிறுமப் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகளும் அதிகம். பின்பற்றத் தவறும் ஒவ்வொரு குற்றத்திற்கும் உரிய தண்டனையும் அல்லது அபராதமும் உண்டு.

நிறுமத்தைத் தொடங்க ஆகும் செலவு

நிறுமமொன்றைத் தோற்றுவிக்கும் (Promotion Stage) கட்டத்திலும், உருவாக்கும் கட்டத்திலும், சிறப்புத் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களின் துணையை நாடவேண்டியுள்ளது. பல்வேறு பத்திரங்களைத் தயாரித்து, அச்சிட வேண்டியுள்ளது. தகவல் அறிக்கை (Prospectus) ஒன்றைத் தயாரிப்பதிலும், அச்சிட்டு வெளியிடுவதிலும் பல்துறை வல்லுநர்களின் துணையை நாடி, முதல் திரட்ட விளம்பரம் செய்யவும் ஆகும் செலவோ மிகவும் அதிகம். பங்கு வெளியீட்டுப் பணியை வியாபார வங்கிகள் (Merchant Bankers) எனும் சிறப்பறிவு பெற்ற நிதி நிறுவனங்களிடமோ, வங்கிகளிடமோ, ஒப்படைக்க வேண்டியுள்ளது. அன்னாருக்குக் கொடுக்க வேண்டிய தரகு (Commission) பங்கு வெளியீட்டுச் செலவினைப் பன்மடங்காய் உயர்த்துகிறது.

உரிமையும் கட்டுப்பாடும் வேறுபடுத்தப்படல்

ஒரு நிறுமத்தின் பங்குநர்கள் தான் அதன் உரிமையாளர்கள். எனினும் அந்நிறுமத்தின் நேரடி நிர்வாகத்தில் பங்கேற்கும் உரிமை பங்குநர்கட்கு இல்லை. இதன் காரணமாகப் பங்குநர்களின் நலனில் நிர்வாகம் போதிய அக்கறை காட்டுமா என்பது ஐயத்திற்குரியதே. மேலும், மோசடி எண்ணமுடையோரும், நேர்மையற்றோரும் இயக்குநர் அவையில் இடம்பெற்றுவிட்டால், நிறுமத்தின் அல்லது பங்குதாரர்களின் நலனைப் புறந்தள்ளிவிட்டு, தங்கள் தனிப்பட்ட இலாபம் ஈட்டுவதில் குறியாக இருப்பர். பங்குநர்கட்கு நிர்வாகத்தில் உரிமையில்லாததால், அத்தகைய சுயநலக் கும்பலின் இழிசெயலைத் தட்டிக் கேட்க முடியாது. இது ஒரு முக்கிய குறைபாடாகும்.

மோசடி நோக்குடைய தோற்றுவிப்பாளர்கள் (Fraudulent promoters)

கவர்ச்சியூட்டும் தகவலறிக்கை தயாரித்து, முதலீடு செய்யத் தூண்டும் விளம்பர யுக்தியால் மோசடி நோக்குடைய தோற்றுவிப்பாளர்கள் பெரும் பங்கு முதலைத் திரட்டிப் பணத்தைச் சுருட்டிவிடுவர். நிறுமச் சட்டம் எத்துணை கடுமையாக விதிமுறைகளை வகுத்திருப்பினும் பங்குகளில் முதலீடு செய்து ஒன்றுமறியா முதலீட்டாளர்கள் அரும்பாடுபட்டுச் சேர்த்த சேமிப்புகளை இழந்து விடுதலும் கண்கூடு. அத்தகைய நிறுவனங்களால் சீரிய பங்கு முதல் சந்தை உருவாவது பலவீனப்படுத்தப்பட்டு வலுவிழக்கிறது.

ஒருசிலர் கையில் நிர்வாகம் (Oligarchic Management)

இயக்குநர்கள் பங்குநர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நிறுமத்தை மேலாண்மை செய்யும் அதிகாரம் இயக்குநர் அவையில் ஒப்படைக்கப்படுகிறது. எனவே மறைமுக முறையில், நிறும மேலாண்மை மக்களாட்சித் தத்துவத்தில் இயங்குவதாக மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது தெரியும். ஆனால் ஆழ்ந்து நோக்கின் அது ஒரு மாயை என்பது புலப்படும். மேலாண்மை ஒரு சிலர் கைகளில் சிக்கி மீளமுடியாத நிலையில் மீண்டும் மீண்டும் அத்தகைய இயக்குநர்களிடம் தொடர்ந்து செயல்படுவதை உணரலாம். பங்குநர்கள் நிறும நிர்வாகத்தில் அக்கறை காட்டுவதில்லை. அவர்கள் நாடு முழுதும் சிதறிக் கிடக்கின்றனர். அவர்கள் ஒன்றுசேர்ந்து தட்டிக் கேட்கும் நிலையில்லை. ஆண்டுப் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆகவே, ஒரு சில பங்குதாரர்களே ஒவ்வொராண்டும் இயக்குநர்களாகி, நிறும நிர்வாகத்தைச் சிக்கெனப் பிடித்து, தனிப்பட்ட நலத்தைத் தங்குதடையின்றி மேம்படுத்திக் கொள்கின்றனர். ஆண்டுக் கூட்டங்கள் கேலிக் கூத்தாகின்றன.

உருவாக்க முறை (Incorporation)

அடிப்படையில் ஒரு சட்டத்தின் கீழ்தான் எந்த ஒரு நிறுமமும் உருவாக்கப்படும். எந்தச் சட்டத்தின் கீழ் அது உருவாக்கப்படுகிறதோ, அந்தச் சட்டமே அந்நிறுமத்தின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும், கட்டுப்படுத்தும். இவ்வகை நிறுமங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

பட்டய அல்லது சாசன நிறுமங்கள் (Chartered Companies)

ஒரு நாட்டின் அரசராலோ, அரசியாலோ வழங்கப்பட்ட சாசனத்தின் விளைவாக உருவாக்கப்படும் நிறுமங்கள் பட்டய அல்லது சாசன நிறுமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வழங்கப்பட்ட சாசனத்தில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி இவை செயல்படும். எடுத்துக்காட்டுகள். கிழக்கிந்தியக் கம்பெனி, இங்கிலாந்து வங்கி (Bank of England). இந்தியாவில், இவ்வகை நிறுமங்கள் நடைமுறையில் இல்லை.

சட்ட முறை நிறுமங்கள் (Statutory Companies)

நாடாளுமன்றத்தின் அல்லது மாநிலச் சட்ட மன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்படும் நிறுமங்கள் சட்டமுறை நிறுமங்கள் எனக் கூறப்படுகின்றன. எச் சட்டத்தின் கீழ் அவை அமைக்கப்படுகிறதோ, அச்சட்டம் அதன் செயல்பாட்டினைக் கட்டுப்படுத்தும். அதாவது இத்தகைய நிறுமத்திற்கென தனியான சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன்கீழ் இந்நிறுமம் உருவாக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஆகியவை இவற்றுள் அடங்கும்.

பதிவு செய்யப்பட்ட நிறுமங்கள் (Registered Companies)

1956-ம் ஆண்டைய நிறுமங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்படும் நிறுமங்கள் பதிவு செய்யப்பட்ட நிறுமங்கள் என அழைக்கப்படுகின்றன. நாம் நாடெங்கும் பார்க்கும் எண்ணற்ற நிறுமங்கள் இவ்வகையானவையே. டாடா மோட்டார்ஸ் லிமிடெட், சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸஸ் லிமிடெட், ஈ.ஐ.டி. பாரி லிமிடெட் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

பொறுப்புகளின் (Liabilities) அடிப்படையில் பங்குநர் தம் பொறுப்புகளின் அளவையொட்டி, நிறுமங்கள் மூன்று இனங்களில் வகைப்படுத்தப்படுகின்றன.

பங்குகளால் வரையறுக்கப்பட்ட நிறுமங்கள் (Companies Limited by Shares)

இவ்வகை நிறுமங்களில், ஒரு பங்குநரின் (பங்குதாரரின்) பொறுப்பு அவர் வைத்துள்ள பங்குகள் மீது செலுத்திப் பெறாதுள்ள தொகை அளவிற்கு வரையறை செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய பங்குகட்கான முழுத்தொகையையும் செலுத்திவிட்டால், நிறுமங்களின் கடன்களைத் தீர்க்கப் போதுமான சொத்துக்கள் இல்லையென்றாலும், மீண்டும் பணம் வழங்குமாறு கேட்கப்படமாட்டார். இந்தியாவில் காணப்பெறும் எண்ணற்ற நிறுவனங்கள் இவ்வகையைச் சார்ந்தவை.

பொறுப்புறுதியால் (Guarantee) வரையறை செய்யப்பட்ட நிறுமங்கள்

பொறுப்புறுதி நிறுமத்தில், நிறுமம் கலைப்பிற்குள்ளாகும் பொழுது, அதன் கடன்களைத் தீர்க்கப் போதுமான சொத்துக்கள் இல்லா நிலையில், தானே முன்வந்து தருவதாக உறுதியளித்திருந்த தொகை அளவிற்கு மட்டுமே பங்குநரின் பொறுப்பு வரையறை செய்யப்படுகிறது. அத்தகைய நிறுமத்தில் பங்கு முதல் (Share Capital) இருக்கலாம். அல்லது பங்கு முதல் இன்றியும் இயங்கலாம். பங்கு முதலைப் பெற்றிருக்கும் பொறுப்புறுதி நிறுமத்தில், உறுப்பினரின் பொறுப்பு,

 • தான் வைத்திருக்கும் பங்குகள் மீது செலுத்தப் பெறாதிருக்கும் தொகையும்,
 • தான் தருவதாக ஒப்புறுதி அளித்த தொகையுமாகும்.

அறிவியல் மேம்பாடு, கலை, விளையாட்டு, அறம் வளர்க்கும் நோக்கங்களுடன் இவ்வகை நிறுமங்கள் தொடங்கப் பெறுகின்றன. அதவாது இலாபம் ஈட்டும் நோக்குடன் இவை செயல்படுவதில்லை. உறுப்பினர்களிடமிருந்து உறுப்பினர் தொகை பெற்றும், தாளாளர்களிடமிருந்து நன்கொடை, உதவித்தொகை அல்லது பெருங்கொடை பெற்றும் இவ்வகை நிறுமங்கள் நிதி திரட்டுகின்றன.

வரையறாப் பொறுப்பு நிறுமங்கள் (Unlimited Companies)

இந்நிறுமங்களில் உறுப்பினர்களின் பொறுப்பு வரையறையற்றது. அதாவது பங்குகள் மீது செலுத்தப் பெறாதிருக்கும் தொகையுடன் இவர்களின் பொறுப்பு அடங்கிவிடுவதில்லை. தன் தனிப்பட்ட சொத்துக்களை விற்றாவது, நிறுமக் கடன்களைத் தீர்த்தாக வேண்டும். இவ்வகை நிறுமங்கள் இல்லையென்றே சொல்லலாம்.

தேசிய இனத்தின் அடிப்படையில் நிறுமங்கள் (Nationality)

இவை உள்நாட்டு நிறுமங்கள் என்றும், அயல்நாட்டு நிறுமங்கள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

அ. உள்நாட்டு நிறுமங்கள் (Domestic Companies)

நிறுமங்கள் சட்டம் 1956 அல்லது அதற்கு முன்னர் இருந்த சட்டங்களின் கீழ்ப்பதிவு செய்யப்பட்ட நிறுமங்கள் உள்நாட்டு நிறுமங்கள் என அழைக்கப்பெறுகின்றன.

ஆ. அயல்நாட்டு நிறுமம் (Foreign Company)

இந்தியாவுக்கு அப்பால் (அதாவது, வெளிநாட்டில்) பதிவு செய்யப்பட்டு ஆனால் இந்தியாவில் தொழிலிடம் உள்ள நிறுமம் அயல்நாட்டு நிறுமம் எனப்படும். நிறுமத்தின் இந்தியாவில் உள்ள முதன்மை அலுவலகம், பதிவலுவகம் உள்ள இடம், இயக்குநர்களின் பட்டியல், அறிக்கைகள் (Notices), ஆவணங்கள் முதலியவற்றை இந்தியாவில் பெறுவதற்கு அதிகாரம் பெற்ற இந்தியாவில் இருப்போரின் பெயர்கள், முகவரிகள் ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

உரிமைகளின் அடிப்படைகள் (on the basis of ownership)

நிறுமத்தின் உரிமையை வைத்திருக்கும் அடிப்படையில், நிறுமங்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

அ. பிடிப்பு நிறுமமும் (Holding company), துணை நிறுமமும் (Subsidiary Company) ஒரு நிறுமம் வேறொரு நிறுமத்தின் அனைத்து இயக்குநர்களை அல்லது பெரும்பான்மை இயக்குநர்களை நியமிக்கும் அல்லது நீக்கும் நிலையில் இருப்பின், அல்லது வேறொரு நிறுமத்தின் நேர்மைப் பங்கு முதலில் (Equity Share Capital) 50 விழுக்காடுக்கு மேல் வைத்திருப்பின் அல்லது வேறொரு நிறுமத்தில் உள்ள வாக்குகளில் 50 விழுக்காடுக்கு மேலான வாக்குகளைச் செலுத்தும் நிலையில் இருப்பின், அந்நிறுமம் பிடிப்பு நிறுமமாகும். இவ்வாறு கட்டுப்படுத்தப்படும் வேறொரு நிறுமம் துணை நிறுமம் எனப்படும்.

அரசு நிறுமங்கள் (Government Companies)

ஒரு நிறுமத்தில் செலுத்தப்பெற்ற பங்கு முதலில் 51 விழுக்காடுக்கு மேல் மைய அரசோ, ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மாநில அரசுகளோ அல்லது மைய அரசும் ஒன்று அல்லது மேற்பட்ட மாநில அரசுகளுமோ வைத்திருப்பின் அந்நிறுமம் அரசு நிறுமம் ஆகும். (எ.கா.) பெல் (BHEL), (Bharat Heavy Electrical Limited), செய்ல் (SAIL) எனப்படும்.

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(Steel Authority of India Limited).

ஒரு அரசு நிறுமத்தின் துணை நிறுமமும் அரசு நிறுமமாகவே கருதப்படும். அரசு நிறுமத்திற்கும் தனிப்பட்ட நிறும வாழ்வு உள்ளது. ஆயினும் அரசு நிறுமம் ஒன்றை அரசின் ஒரு உறுப்பாக எண்ணிவிடக்கூடாது. அதன் ஊழியர்களும் அரசு ஊழியர்கள் ஆகமாட்டார்கள்.

நிறுமத்தில் பங்குதாரர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் நிறுமத்தை தனி வரையறு நிறுமம் அல்லது பொதுவரையறு நிறுமம் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.

பொது வரையறு நிறுமம் (Public Limited Company)

பொது நிறுமத்தைத் துவங்க குறைந்தது ஏழு நபர்கள் வேண்டும். அதிகப்பட்சத்திற்கு அளவு இல்லை. பொது நிறுமங்கள் தகவலறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன் மூலம்தான் வெளியிடும் பங்குகளை வாங்குமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்ளலாம். பங்குகளை எளிதில் உரிமை மாற்றம் செய்யலாம்.

தனிவரையறை நிறுமம். (Private Limited Company)

ஒரு தனிவரையறு நிறுமத்தில் செலுத்தப்பட்ட மூலதனமானது ரூபாய் 1 லட்சத்திற்கு குறைவிலாமலும் அதற்கு மேற்பட்டோ இருக்கவேண்டும். செயல்முறை விதிகளில் கீழ்க்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்குப்பங்குகள் இருப்பின் அவற்றை மாற்றி கொடுக்கும் உரிமையில்லை இதைத் துவங்க குறைந்தது இரு நபர் வேண்டும். அதிகபட்ச உறுப்பினர்கள் 50-க்கு மிகாமல் இருக்கவேண்டும். கடந்த அல்லது தற்போது வேலையில் உள்ள பணியாளர் உறுப்பினர்களை கணக்கில் சேர்ப்பதில்லை. பொதுமக்களிடம் பங்குகளை வாங்கச் சொல்லி தகவலறிக்கை வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

பங்கு மாற்றத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிறுமத்தின் பெயர் தனி வரையறு நிறுமம் என முடிய வேண்டும். ஒரு தனி வரையறு நிறுமம் பெற்றிருக்கும் சலுகைகளும் (Privileges) சட்ட நிபந்ததைகளினின்று பெற்ற விலக்குகளும் (Excemptions) பல சிறப்புச் சலுகைகளையும் சட்ட நிபந்தனைகளினின்று விலக்கும் பெற்று இயங்குவதால், தனி வரையறு நிறுமத்தை, வரையறு பொறுப்பு எனும் பயனுடன் கூடிய, கூட்டாண்மையின் விரிவாக்கம் என்று கருதப்படுகிறது.

என்னென்ன சலுகைகளை அது பெற்றிருக்கிறது என்பதை இனி ஆய்வோம்

 • தனி வரையறு நிறுமம் ஒன்றே இரு நபர்களுடன் உருவாக்கம் செய்துகொள்ள முடியும். ஒரேவித கருத்துடைய பலரைத் தேட வேண்டுவதில்லை. இதனால் இதனை அமைப்பதும் எளிதாகிறது. அது செயல்படுவதிலும், கருத்து வேற்றுமை தலை தூக்காது. சிறந்த நிர்வாகம் நடைபெற ஏதுவாகிறது. கூட்டுருவாக்கச் சான்றிதழ் (Certificate of Incorporation) பெற்றவுடன், தனி வரையறு நிறுமமானது தொழில் தொடங்க முடியும். பொது வரையறு நிறுமத்திற்குத் தேவையான தொழில் தொடக்கச் சான்றிதழ் பெறத் தேவையில்லை. அதற்காகத் தயாரிக்க வேண்டிய பத்திரங்கள், முதல் திரட்டும் செலவுகள் அனைத்தும் மிச்சம்.
 • பங்கு முதலைத் திரட்ட, பொதுமக்களிடம் பங்குகளை வாங்கிட அழைக்கும் தகவல் அறிக்கையை (Prospectus) வெளியிட தனி வரையறு நிறுமத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்கூறியபடி, பங்கு முதல் திரட்டும் செலவு மிகவும் குறைவாகிறது.
 • குறைந்தளவு பங்கெடுப்பு பெற்ற பிறகுதான், பங்குகளை ஒதுக்கவேண்டும் என்ற விதியிலிருந்து தனி வரையறு நிறுமத்திற்கு விலக்கு தரப்பட்டுள்ளது.
 • பொது வரையறு நிறுமம் கட்டாயம் கூட்டவேண்டிய சட்ட முறைக் கூட்டத்தைத் தனிவரையறு நிறுமம் கூட்ட வேண்டுவதில்லை. மீண்டும் முதல் திரட்ட பங்கு வெளியிடும்பொழுது, தற்பொழுதுள்ள பங்குநர்கட்கு குறிப்பிட்ட அளவு பங்குகள் ஒதுக்கப்பட்ட பின்னரே, புதிய பங்குநர்கட்குப் பங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் தனி வரையறு நிறுமத்திற்குப் பொருந்தாது.
 • தனி வரையறு நிறுமம் இரு இயக்குநர்களுடனேயே செயல்பட முடியும்.
 • தனி வரையறு நிறுமத்தின் இயக்குநர்கள், அந்நிறுமத்தில் தாங்கள் இயக்குநர்களாகச் செயல்பட விரும்புவதற்கான எழுத்து மூலமான இசைவை நிறுமப் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
 • இயக்குநர்கள், குறிப்பிட்டளவுத் தகுதிப் பங்குகளை வைத்திருப்பதாக அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற்று விடுவதாக உறுதிமொழியைத் தனி நிறுமமாயின், தர வேண்டியதில்லை .

முழுத் தனி வரையறை நிறுமங்கட்கு (Independent Private Limited companies) உள்ள கூடுதல் சலுகைகள்

 • முழுத் தனி வரையறை நிறுமம் எனும் சொல், பொது வரையறை நிறுமத்தின் துணை நிறுமமாக அல்லாதத் தனி வரையறை நிறுமத்தைக் குறிக்கும். தனி வரையறை நிறுமம் ஒன்றின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் இயக்குநர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒரே தீர்மானத்தின் மூலம் நியமிக்கப்பட வேண்டும்.
 • இயக்குநர்கள் சுழல் முறையில் பதவி விலகத் தேவையில்லை. ஒரு நபர் எத்துணை முழுத் தனிவரையறு நிறுமங்களிலும் இயக்குநர்களாகச் செயல்பட முடியும்.
 • அதாவது, இயக்குநராகப் பதவி வகிக்கும் தனி நிறுமங்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு ஏதுமில்லை.
 • பொதுவரையறை நிறுமத்தில் வழங்கக்கூடிய மேலாண்மை ஊதியத்திற்கு உச்ச வரம்பு இருக்கிறது. ஆனால் தனி வரையறை நிறுமத்தின் வரம்பு ஏதுமில்லை .
 • பொது நிறுமமானது தனது உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள் அடங்கிய அட்டவணையை (Index) வைத்திருப்பது கட்டாயம்

நிறுமத் தோற்றுவிப்பும் (promotion) அமைப்பும் (Formation)

தோற்றுவிப்பு எனுஞ்சொல், நிறுமம் ஒன்றைத் தொடங்க போட்ட திட்டம். ஒரு குறிப்பிட்ட வடிவம் பெறும் கட்டத்தை எட்டி விட்டதையும், முடிவில் அது உருவாக்கப்படுதலையும் குறிப்பதாகும். நிறுமமொன்றின் அமைப்பில் இது ஒரு முதற்படி.

தோற்றுவிப்பாளர் (Promoter)

நிறுமம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் இவர் உள்ளத்தில் உதிக்கிறது. தனது விருப்பத்தைப் பிறரிடம் கூறி, அதை உருவாக்குவதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்பவர் இவரே. தோற்றுவிப்பாளர் எனும் சொல்லின் பெருஞ்சிறப்பைக் கீழ்க்கண்டவாறு பால்மர் (Palmer) என்பார் தெரிவிக்கின்றார்.

ஒரு நிறுமத்தை அமைக்கும் திட்டத்தை வகுத்து, அதன் இயக்குநர் அவையில் செயல்படக் கூடியோரை ஒன்று திரட்டி, வழக்கறிஞர்கள், வங்கிகள் ஆகியோரிடம் தொடர்புகளை ஏற்படுத்தி, நிறும் அமைப்பு முறை ஏடு (Memorandum of Association) செயல்முறை விதிகள் (Articles of Association) போன்ற இன்றியமையாப் பத்திரங்களைத் தயார் செய்ய ஏற்பாடு செய்து, தகவலறிக்கைத் தயாரிக்கப் பெற்று வெளியிடுவதற்கான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வதுடன் தொடக்கச் செலவுகட்கு வேண்டிய நிதி வசதிகளையும் ஏற்பாடு செய்கிறார். சுருங்கக் கூற வேண்டுமாயின், ஒரு குறிப்பிட்ட தொழில் திட்டத்திற்காக நிறுமத்தை அமைக்க அனைத்தையும் செய்து, வெற்றிகரமாகச் செயல்பட முயற்சி மேற்கொள்பவர் தோற்றுவிப்பாளராகும்.

தோற்றுவிப்பின் பல நிலைகள் (Stages in Promotion)

 • பல்வகையான தொழில்களில் ஒரு நிறுமம் ஈடுபடலாம். எனினும் அவற்றுள் ஏற்றதையும், சிறந்ததையும் தோற்றுவிப்பின் முதற்நிலை ஆகும். அதாவது, எத்தொழில் செய்ய நிறுமத்தைத் தொடங்குவது சாலச் சிறந்தது என்பதைத் தீர்மானம் செய்தல் முதல் நிலையாகும்.
 • தேர்ந்தெடுத்த தொழிலின் சாத்தியக் கூறுகளை, தடைகளை, சாதகச் சூழ்நிலைகளை ஆய்தல் அடுத்த நிலை. இது திட்டம் செயல்படுந் தன்மை குறித்த ஆய்வு (Feasibility Study) எனப்படும்.
 • இத்தொழிலைத் தொடங்க தேவையான இயந்திர தளவாடங்கள், கட்டட வசதிகள், பல நிலைச் சொத்துக்கள் (Fixed Assets), தொழில் நடத்தும்பொழுது கைவசம் இருக்கவேண்டிய நடைமுறை முதல் ஆக நிதித் தேவைகள் அனைத்தையும் சீராய்ந்து கணக்கிடுகிறார். தொழிலுக்குத் தேவையான கச்சாப்பொருள் தடையின்றி கிடைக்குமா, தொழில் நுட்பம் பெற்ற தொழிலாளர்கள், தடையற்ற மின்வசதி, அனைத்திற்கும் மேலாக உற்பத்தியான பொருள்கட்குத் தேவை (Demand) நிரம்ப இருக்குமா, சந்தையிடுகை (Marketing) போன்றவை குறித்தும் வல்லுநர்களைக் கலந்துபேசி முடிவெடுக்கிறார். சுருங்கச்சொல்லின், திட்டம்(project) செயல்படுத்தத் தக்கதா, போதிய இலாபம் ஈட்ட முடியுமா என்பதைப் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, பல்துறையைச் சார்ந்த அனுபவமிக்க ஆற்றலாளர்களுடன் விவாதித்து இறுதி முடிவெடுத்தல் அடுத்த நிலையாகும்.
 • இந்தச் செயல் திட்டத்தை நிறைவேற்ற நிறுமம் தொடங்க ஆர்வங்காட்டுவோரை அணுகி, அவர்களை ஈடுபடுத்தச் செய்தலும், திரட்ட வேண்டியிருக்கும் பங்கு முதல், பதிவு அலுவலகம் இருக்கவேண்டிய இடம் போன்றவற்றைத் தீர்மானிப்பது அடுத்த நிலையாகும்.

உருவாக்கம் (Incorporation) இறுதி நிலை

நிறுமத்தை நிறுமப் பதிவாளரிடம் பதிவு செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தோற்றுவிப்பாளரின் இறுதிநிலைப் பணியாகும். இதில் கீழே விளக்கிய செயல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1) திட்டமிட்ட நிறுமம் பெயருக்கு ஒப்புதல் பெறுதல்

ஒரு நிறுமம் எந்த ஒரு பெயரையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்பொழுது இயங்கிவரும் நிறுமத்தின் பெயர் போன்று இருத்தல் கூடாது. எனவே நிறுமத்திற்குத் தாம் வைக்கப் போகும் பெயருக்கு நிறுமப் பதிவாளரிடம் முதற்கண் தோற்றுவிப்பாளர் ஒப்புதல் பெற வேண்டும்.

2) சில ஆவணங்களை (Documents) பதிவாளரிடம் தாக்கல் செய்தல்

கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களைத் தயாரித்து, அவற்றை நிறுமத்தின் பதிவலுவலகம் (Registered Office) எம்மாநிலத்தில் உள்ளதோ அம்மாநிலத்தில் உள்ள நிறுமப் பதிவாளரிடம் (Registrar of Companies) தாக்கல் செய்ய வேண்டும்.

அமைப்பு முறை ஏடு (Memorandum of Association)

இது நிறுமம் தயாரிக்க வேண்டிய இன்றியமையாப் பத்திரங்களுள் முதன்மைச் சிறப்பு வாய்ந்தது. நிறுமத்தின் செயல்பாட்டு எல்லைகளை, நோக்கங்களை வரையறுத்துக் காண்பிப்பது.

நிறுமத்தின் பெயர், பதிவலுவலகம் உள்ள இடம், அனுமதிக்கப்பட்ட (பதிவு செய்யப்படும்) பங்கு முதல், நிறுமத்தின் நோக்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருப்பது இந்த ஆவணம். இது அச்சிடப்பட வேண்டும். உரிய பத்திரத் தலைகள் (stamps) ஒட்டப்பட்டிருக்க வேண்டும். முறைப்படி கையொப்பமிடப்பட்டிருப்பதுடன், சாட்சிகளின் கையெழுத்தும் உடையதாக இருக்கும்.

தனி வரையறை நிறுமமாயின், குறைந்தது இரு நபர்களும், பொது வரையறை நிறுமமாயின் குறைந்தது ஏழு நபர்களும் அமைப்பு முறையேட்டில் கையெழுத்திட வேண்டும்.

செயல்முறை விதிகள் (Articles of Association)

நிறுமத்தின் உள் மேலாண்மைக்குத் தேவையான நடைமுறை விதிகளை உள்ளடக்கியிருப்பது, செயல்முறை விதிகள் ஆகும். இந்த ஆவணத்திலும் போதிய பத்திரத்தலைகள் ஒட்டியிருக்கும். அமைப்பு முறையேட்டில் கையொப்பமிட்ட அனைவரும் இதிலும் கையெழுத்திட வேண்டும். சாட்சிகள் கையெழுத்தும் இருக்க வேண்டும்.

சட்டமுறை உறுதிபிரகடனம் (Statutory Declaration)

 • நிறுமத்தைப் பதிவு செய்ய போதுமான சட்ட விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டுவிட்டன என்ற உறுதி விளம்பலை (Declaration) பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். மன்ற அல்லது உயர்நீதி மன்ற வழக்கறிஞரோ, இந்நிறும அமைப்பில் ஈடுபட்டுள்ள பட்டயக் கணக்காளரோ (Chartered Accountant) அல்லது செயல்முறை விதிகளில் இயக்குநர் எனக் குறிப்பிட்டுள்ள எந்நபருமோ அல்லது நிறுமத்தின் செயலரோ கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
 • இந்த ஆவணங்கள் அனைத்தையும் நிறுமப் பதிவாளர் கூர்ந்தாய்வார். அவை சரியாக இருப்பின், உருவாக்கச் சான்றிதழை(Certificate of incorporation) வழங்குவார்.
 • நிறுமம் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே முடிவான சான்றாகும்.
 • இவ்வுருவாக்கச் சான்றிதழ் பெற்றவுடன், தனி வரையறை நிறுமம் தொழில் தொடங்கலாம். ஆனால் பொது வரையறை நிறுமத்தைப் பொருத்தவரை மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழில் தொடக்கச் சான்றிதழ் என்ற ஒன்றைப் பெற்றாக வேண்டும்.

தகவலறிக்கையை (Prospectus) வெளியிடுதல்

 • பொதுமக்களிடமிருந்து முதல் திரட்ட வேண்டியிருப்பின், இயக்குநர் அவை, தகவல் அறிக்கை தயாரிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். இந்நிறுமத்தில் பங்குகள் வாங்கிட விண்ணப்பிக்கப் பொதுமக்களைக் கவரும்வகையில், தேவையான அனைத்து விவரங்களையும், புள்ளிவிவரங்களையும் அதில் தரவேண்டும். பொதுமக்களிடம் தகவலறிக்கையை வெளியிடும் முன்பு, அதன் நகலொன்றையும் பதிவாளரிடம் சேர்ப்பிக்கவேண்டும்.

குறைந்தளவு பங்கெடுப்பு (Minimum Subscription)

தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தளவு பங்கெடுப்புத் தொகையை ரொக்கமாகப் பெற்றாலன்றி, இயக்குநரவை பங்குகளை ஒதுக்கீடு(Allotment) செய்ய முனைதல் கூடாது

தகவலறிக்கைக்கு மாற்றறிக்கை (Statement in lieu of Prospectus)

நிறுமத்தின் தோற்றுவிப்பாளர்கள் நிறுமத்திற்கு வேண்டியிருக்கும் பங்கு முதல் முழுவதையும் தனிப்பட்ட ஏற்பாட்டின்படி திரட்டுவார்களேயானால், தகவலறிக்கையை நிறுமம் வெளியிட வேண்டுவதில்லை. ஆயினும் தகவலறிக்கையில் காணப்பட வேண்டிய அனைத்து விவரங்களையும் அடக்கிய தகவலறிக்கைக்கு மாற்றறிக்கை என்ற ஒன்றைத் தயாரித்து, பங்குகளை ஒதுக்கீடு செய்ய முற்படும் மூன்று நாட்களுக்கு முன்னர் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும்.

தாக்கல் செய்ய வேண்டிய பிற ஆவணங்கள்

 • மேலும் சில ஆவணங்களைப் பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும். தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தளவுப் பங்கெடுப்பு ரொக்கமாக வசூல் செய்யப்பட்டு விட்டது என்ற உறுதி பிரகடனம். (Declaration). ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் வாங்க ஒப்புக்கொண்ட பங்குகள் மீதான விண்ணப்ப மற்றும் ஒதுக்கீட்டுப் பணத்தை (Application and allotment money) ரொக்கமாகச் செலுத்தி விட்டதாக உறுதிவிளம்பல்.
 • அங்கீகரிக்கப்பெற்ற பங்கு மாற்றகங்களில் (Recognized stock exchanges) பங்குகளையோ, கடனீட்டுப் பத்திரங்களையோ (Debentures) வாங்க, விற்கப் பட்டியலிடும் (Listing) உரிமையைப் பெறாத காரணத்தால், நிறுமத்தில் பங்கு வாங்க விண்ணப்பபித்திருந்தோருக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என்ற உறுதிபிரகடனம்.
 • மேற்சொன்ன அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று நிறுமத்தின் இயக்குநர்கள் ஒருவரோ அல்லது செயலரோ தரும் உறுதி விளம்பல்.
 • இந்த ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால், நிறுமப் பதிவாளர் நிறுமம் தொழில் தொடங்கச் சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள். இது தொழில் தொடக்கச் சான்றிதழ் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இச்சான்றிதழைப் பெற்ற பின்னரே, பொது நிறுமம் தான் மேற்கொள்ள திட்டமிட்டத் தொழிலைத் தொடங்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
2.9512195122
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top