சிபில் எனப்படுவது கடன் தகவல் அலுவலகமாகும். இதுதான் இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனமாகும். இது கடந்த 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவப்பட்டது. இந்தியாவின் நிதித்துறை மேம்பாட்டிற்கு இது பெரும் பங்காற்றுகிறது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு உதவியும் வாடிக்கையாளர்கள் சிறந்த வட்டி விகிதத்தில் விரைவான முறையில் கடன்களைப் பெறவும் இது உதவுகிறது. தனிநபர் சார்ந்த கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் குறித்த விபரங்கள் அனைத்தையும் சிபில் சேகரித்து பாதுகாக்கிறது.
இந்த விபரங்கள் அனைத்தையும் ஒவ்வொரு மாதமும் சிபில் அமைப்புக்கு அதன் உறுப்பினர் வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதன் அடிப்படையிலேயே, சிபில் அமைப்பு வாடிக்கையாளர்களின் கடன்கள் குறித்த கடன் தகவல் அறிக்கைகள் மற்றும் கடன் அம்ச குறியீடுகள் ஆகியவற்றை தயாரித்து கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அளிக்கிறது.
இந்த அறிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னரே கடன் வேண்டி வரும் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த வகையான கோப்புகளை அழிக்கவோ, அதில் மாற்றங்களை ஏற்படுத்தவோ சிபில் அமைப்பு முயலாது. தவிர, வாராக் கடன் குறித்த பட்டியல் எதையும் அது பராமரிக்காது. கடன் வழங்கும் நிறுவனத்துக்கு கடன் அம்ச குறியீடுதான், முதல் அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது.
இந்த குறியீடுகள் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் வாடிக்கையாளர் கடன் பெறுவது சுலபமாக இருக்கும். சிபில் குறியீட்டை பாதிக்கும் அம்சங்கள் பல உள்ளன.
அதில் முக்கியமானது வாடிக்கையாளரின் கடன் விபரங்கள் குறித்த வரலாறு. இது கடன் அம்ச குறியீட்டை 35 சதவீதம் வரை தீர்மானிக்கிறது. மேலும், நம்முடைய அனைத்து கடன்களையும் உரிய நேரத்திற்குள் செலுத்தியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு தவறு நடந்திருந்தாலும் குறியீடு பாதிக்கப்படும். கடன் வழங்கும் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர் செலுத்தவேண்டிய தொகை குறியீட்டை தீர்மானிப்பதில் 30 சதவீதம் வரை உதவுகிறது.
ஆதாரம் : திட்டம் மாத இதழ்