பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசின் தோற்றம்

அரசின் தோற்றம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அரசின் தோற்றம் பற்றி அரசியல் அறிஞர்கள் பலவகையாக விவரித்துள்ளார்கள். அரசு எங்கு எப்போது, எவ்வாறு தோன்றியது என்பதற்கான விளக்கம் வரலாற்றில் கிடைக்கவில்லை. எனவே அரசியல் அறிஞர்கள் யூகங்கள் அடிப்படையில் அரசு இப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று பலவகைப்பட்ட விவாதத்திற்குரிய கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் பல உண்டு எனினும் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

தெய்வீக தோற்றக் கொள்கை (THEORY OF DIVINE ORIGIN)

எல்லாக் கொள்கைகளிலும் இதுவே மிகவும் பழமையானது. இதன்படி கடவுள் அரசைத் தோற்றுவித்து ஆட்சி செய்வதற்கு அரசரை நியமிக்கின்றார். கடவுளுக்குப் பதிலாக அரசர் அவரின் பிரதிநிதியாக ஆட்சி செய்கிறார் என்பது இக்கொள்கையின் கருத்து. மகாபாரதத்தில் இக்கொள்கை குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் மக்கள் குழப்பமான சூழ்நிலையில் வாழ்ந்ததாகவும், அச்சூழ்நிலையை அகற்றி அமைதியான சூழ்நிலையில் வாழ்வதற்கு உதவி கேட்டு மக்கள் இறைவனை வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி இறைவன் அவர்களுக்கு அரசரை ஆட்சி செய்ய பணித்ததாகவும் மேற்கூறப்பட்ட இதிகாசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டை முதலாம் ஜேம்ஸ் மன்னர் ஆட்சி செய்தார். அவர் பூமியில் இறைவனை போல இறை அதிகாரத்தை அரசர்கள் செய்த காரணத்தினால் அவர்கள் இறைவனுக்கு நிகரானவர்களாகக் கருதப்பட்டார்கள். இறைவனுக்கு மட்டுமே அவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தீங்கு செய்யக்கூடாதென்று சாதாரண மக்கள் தடுக்க முடியாது என்பதாகவும் வரலாற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல கிறித்துவ சமயத்திலும் அரசு மற்றும் திருச்சபைக்கு இடையே கருத்து வேற்றுமைகள் காரணமாக பிரச்சனைகள் எழுந்த போது இறை வழி தோற்றக் கொள்கை பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. அதிகாரத்தின் பிறப்பிடம் இறைவன்தான் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடு இருந்ததெனினும் அவ்வதிகாரத்தை நடைமுறையில் செலுத்துவது அரசரா அல்லது திருச்சபையா (போப் ஆண்டவர்) என்ற வேறுபாடு இருந்தது.

அரசர்கள் இறைவனின் பிரதிநிதிகளாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் தகாதவர்களாக மக்களுக்கு தீங்கு செய்தாலும் அவர்களை எதிர்க்க மக்களுக்கு உரிமை இல்லை. அவ்வாறு எதிர்த்து புரட்சி நடக்குமானால் அது இறைவனுக்கு எதிரான புரட்சி என்பதாகக் கருதப்பட்டது. அரசர் இறைவனால் நியமிக்கப்பட்ட அவருடைய பிரதிநிதி என்பதால் அரசரை எதிர்ப்பது சரியாகாது என்று வாதிக்கப்பட்டது.

தெய்வீக வழிக் கோட்பாட்டின் முக்கியமான சில கருத்துக்கள்

 1. அரசர் இறைவனால் நியமிக்கப்பட்டு ஆட்சி செய்வதற்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறார்.
 2. அரசர் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்வதற்கு இறை அதிகாரம் பெற்றிருக்கிறார். ஆட்சி செய்யும் உரிமை தந்தையிடமிருந்து மகனுக்குச் செல்கிறது.
 3. அவர் செய்யும் காரியங்களுக்கு அரசர் இறைவனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்.
 4. அரசருக்கு எதிராக செய்யப்படும் புரட்சி சட்ட ரீதியான அதிகாரத்தை எதிர்ப்பதற்குச் சமமாகும்.

இக்கொள்கை நெடுங்காலத்திற்கு மக்களிடையே நிலவிவந்தது என்றாலும் இதர பல காரணங்களால் பிற்காலத்தில் கைவிடப்பட்டது.

திறனாய்வு

இக்கொள்கை பல கோணங்களில் கண்டறிந்து குறைகள் மற்றும் நிறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. நிறைகள் என்று பார்க்கும் பொழுது குழப்பமான சூழ்நிலையில் மக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்கு தெய்வீகக் கோட்பாடு உதவியிருக்கிறது. குடிமக்கள் ஒன்றுபட்டு ஆட்சி செய்பவர்க்கு அடங்கி நடக்கும் போக்கு ஏற்பட உதவி செய்திருக்கிறது. அரசர் மக்களுக்கு நன்மை மட்டுமல்லாமல் தீமைகள் செய்த போதும் அரசருக்கு எதிராக புரட்சி செய்வது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பதற்கு ஆட்சியாளர்களுக்கு அடிப்படையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை முடியாட்சி அரசிற்கு பக்க பலமாக திகழ்ந்தது. எனினும் பிற்காலத்தில் இதரவகை அரசுகள் ஏற்பட்டபோது பொது மக்களிடையே இக்கொள்கைக்கு ஆதரவு குறைந்து காலப்போக்கில் கைவிடப்பட்டடது.

குறைகள் என்று பார்க்கும்போது கடவுள் மக்களுக்காக அரசை தோற்றுவித்து அரசருக்கு முழு அதிகாரம் கொடுத்து சில சமயங்களில் சர்வாதிகாரம் செய்யவும் அனுமதித்தார் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. பகுத்தறிவாளர்களுக்கிடையே இக்கொள்கைக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. இக்கொள்கை இதர வழிகளில் அரசு தோன்றுவதற்கு பாதகமாக நெடுங்காலம் வரையிலும் இருந்து வந்தது. அரசியலில் இருந்து திருச்சபை பிரிக்கப்பட்டிருந்ததினால் ஐரோப்பிய பகுதிகள் எல்லாவற்றிலும் இக்கொள்கை மறைந்து சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு தோன்றியது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு (SOCIAL CONTRACT THEORY)

அரசு தோற்றக் கொள்கைகளில் தெய்வீக தோற்றக் கொள்கை போல இக்கொள்கை பழமையானதும் பிரசித்தி பெற்றதுமாகும். இக்கொள்கை மக்களிடையே ஏற்பட்ட ஒப்பந்த அடிப்படையில் அரசாங்கம் தோன்றியதாகக் கூறுகிறது.

ஆரம்பத்தில் மக்கள் கட்டுப்பாடுகளற்ற ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாத சமுதாய அமைப்பில் சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்கள். இப்படிப்பட்ட நிலை இயற்கை நிலை என்று சொல்லப்பட்டது. இவ்வமைப்பில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி வாழ்ந்தனர். இங்கு பலமிக்கவர்கள் பலமற்றவர்களை அடக்கினார்கள். அவர்கள் விருப்பம்போல வேண்டியதை பெற்றுக் கொண்டார்கள். மற்றவர்களுக்கு அவைகள் கிடைத்தனவா என்ற அக்கறை அவர்களுக்குக் கிடையாது. சிங்கம் காட்டில் எப்படி காட்டு ராஜா என்று கருதப்பட்டதோ அதைப்போல வலிமை உடையவர்கள் அவர்களுக்கு வேண்டியதை பெற முடிந்தது. வலிமை உடையோர் உரிமை உடையோராக விளங்கினர். ஆனால் இது மக்களுடைய முன்னேற்றத்திற்கு எவ்வழியிலும் உதவி செய்யவில்லை. அதுமட்டுமின்றி நலிந்தவர்கள் மற்றும் திறமை இல்லாதவர்கள் வாழ்க்கை நடத்துவது கடினமாக இருந்தது. இத்தகைய நிலைமையை மாற்றி எல்லோரும் முன்னேற அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பு ஒன்று தேவை என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டது.

இதன் விளைவாக அவர்கள் எல்லாம் சேர்ந்து கூடி பேசி ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டு முதலில் சமூகத்தை தோற்றுவித்து அதன் பிறகு அரசைத் தோற்றுவித்தார்கள் என்று விளக்குவதுதான் சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு என்று சொல்லப்படுகிறது.

பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டுகளில் பொது மக்களிடையே ஆதரவு பெருகி ஏறத்தாழ எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது. ஹுக்கர் (Hooker) என்பவர் முதன் முதலாக இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் தந்தார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தாமஸ் ஹாப்ஸ் மற்றும் ஜான்லாக் என்பவரும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரூஸோ என்பவரும் இக்கொள்கையின் சீரிய ஆதரவாளர்கள். இவர்கள் மூவரும் சமுதாய ஒப்பந்தக் கோட்பாட்டாளர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் மூவருடைய சமுதாய ஒப்பந்தம் பற்றிய கொள்கைகளை கீழே காண்போம்.

CONTRACTUALISTS

தாமஸ் ஹாப்ஸ் (Thomas Hobbes) [1588 – 1679] : இவரின் முக்கியான நூல்கள் லெவியாதன் (1651) சிவில் சமுதாய ஒப்பந்தம் (1762)

 1. இயற்கை நிலை (The State of Nature): இயற்கை நிலையில் மனிதன் பயம், அதிகாரம், அரசியல், சமத்துவம் ஆகியவை சரியானது என்று அறியாமல் இருந்தான். நியாய, அநியாயங்கள் என்று பாராமல் மிருகங்களுக்குச் சமமான வாழ்க்கையை நடத்தினான்.
 2. இயற்கைச்சட்டம் (Law of nature): இயற்கை நிலையில் மனிதர்களுடைய நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு சிவில் சட்டம் இல்லை. மனிதனுடைய மனசாட்சிதான் அவனுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்தது.
 3. இயற்கை உரிமை (Natural Right) : ஒவ்வொருவரின் வலிமையை பொருத்து இயற்கை உரிமை அமைகிறது.
 4. சமுதாய ஒப்பந்தம் (Social Contract): சுய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஆகியவைகளுக்கு உள்ள தன்னுடைய உரிமைகள் நீங்கலாக இதர எல்லாவற்றிற்கும் பொதுவான இறைமைக்கு மனிதன் தங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுத்து ஒப்பந்த அடிப்படையில் இறைமைக்கு கட்டுப்பட்டு நடக்கிறான்.
 5. இறையாண்மை (Sovereignty) : இறையாண்மை அளவற்றது. பிரிக்கமுடியாதது வேறு யாருக்கும் தர முடியாதது, முழுமையானது.
 6. சுதந்திரம் (Liberty): அரசுக்கு எதிராக அதனை பயன்படுத்த முடியாது.
 7. தனிமனிதனும் அரசும் (Individual and the state) :ஹாப்ஸ் கருத்துப்படி தனிமனித உரிமைகள் அனைத்தும் அரசால் வழங்கப்படுபவைகளாகும். தனிமனிதன் ஒவ்வொருவனும் இறைமை அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வரிகளை செலுத்த வேண்டும். தனிமனிதன் அவனுக்கென சிவில் அரசில் சில உரிமைகளை பெற்றிருக்கின்றான் அவைகள் (அ) இறைமையால் பணிக்கப்படுகின்ற போது தன்னை மாய்த்து கொள்ளும் உரிமை (ஆ) அரசு சீண்டுகின்றபொழுது, உயிரை பாதுகாத்து கொள்ளும் உரிமை (இ) அவனுடைய உயிருக்கு உத்திரவாதம் தர முடியாத அரசனுக்கு எதிரான உரிமை.
 8. அரசு மற்றும் அரசாங்கம்: அரசு மற்றும் அரசாங்கம் என்று அல்லது சட்டப்படியான மற்றும் நிகழ்முறையிலான இறைமை என்று ஹாப்ஸ் வேறுபடுத்தவில்லை.

ஜான் லாக் (John Locke) [1632 – 1704]

அரசாங்கம் (1690) இயற்கைநிலை: இயற்கை நிலையில் மனிதன் சுமுகமான சூழ்நிலையில் வாழ்ந்தான் என்றாலும் அரசு என்ற அமைப்பு அவனுடைய நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தி நடத்திச் செல்ல தேவை என்று உணர்ந்தான்.

இயற்கை சட்டம்: இயற்கைச் சட்டம் மனித உணர்வுகளை பிரதிபலிக்காமல் அவனுடைய நடவடிக்கையை கட்டுபடுத்துகின்ற நெறியை பிரதிபலிக்கும் சட்டமாக இருக்கின்றது.

இயற்கை உரிமை: உரிமை மனிதனிடம் இயல்பாகவே இருப்பதாகும். உயிர், சுதந்திரம் மற்றும் உடைமையாகியவற்றிற்கு மனிதனுக்கு இயற்கையிலேயே உரிமை இருக்கிறது.

சமுதாய ஒப்பந்தம்: இயற்கை சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக தேவைப்படும் செயல் ஒன்றை ஏற்படுத்த மனிதன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்கிறான். சில உரிமைகள் தவிர இதர உரிமைகள் அந்த செயலுக்குத் தராமல் அவனே வைத்துக்கொள்கின்றான்

சுதந்திரம்: உயிருக்கு உரிமை, சுதந்திரம் மற்றும் உடமைக்கு உரிமை என்பதெல்லாம் மனிதனுக்கு இயற்கையாகவே உள்ளவையாகும் இவைகளை அரசாங்கம் மறுக்க முடியாது.

அரசு மற்றும் அரசாங்கம்: அரசு மற்றும் அரசாங்கம் மேலும் அரசு மற்றும் சமுதாயம் ஆகியவைகளை லாக் வேறுபடுத்துகிறார். அவருடைய கொளகை வரையறுக்கப்பட்ட சட்ட ரீதியான அரசாங்கத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றது

ரூஸோ (Rousseau) [1712 - 1778]

இயற்கை நிலை: இயற்கை நிலையில் மனிதன் தன்னுடைய தேவைகளை பெற்றுக் கொண்டு அமைதியான சூழ்நிலையில் நல்ல முறையில் வாழ்ந்தான். இருப்பினும் தனக்கு என்று உடைமை வேண்டுமென்று சேர்க்க ஆரம்பித்தபோது சமநிலை மாறுபட்டது.

இயற்கை சட்டம் : பகுத்தறிவு அடிப்படையில் அல்லாமல் மனித எண்ணம் மற்றும் சமூக உணர்வு அடிப்படையில் இயற்கை சட்டம் ஏற்படுகிறது.

இயற்கை உரிமை: இயற்கை நிலையில் மனிதன் சுதந்திரமானவனாக இருக்கிறான். மனிதன் என்ற அடிப்படையில் அவனுக்குரிய உரிமைகளை அவன் பெற்று அனுபவிக்கிறான்.

சமுதாய ஒப்பந்தம்; அரசு என்ற அமைப்பு மனிதர்கள் தன்னுடைய தனிப்பட்ட முறையிலும் அவர்களுடைய ஒட்டு மொத்த கூட்டு அடிப்படையிலும் ஏற்படுத்திக்கொள்ளும் அமைப்பாகும்..

இறையாண்மை: ஒன்று திரண்ட மக்களின் அமைப்பிடமே இறையாண்மை இருக்கிறது. பொதுகருத்து ஒன்றே இறையாண்மையாகும். இந்த இறையாண்மையின் முக்கிய அம்சங்கள் ஒற்றுமை, தனித்தன்மை, நிரந்தரத்தன்மை பிறருக்கு கொடுக்க முடியாதது, முழுமையானது மற்றும் வேறுயாரும் உரிமை கொண்டாட முடியாதது. அரசாங்கம் இறையாண்மையின் அடிப்படையில் இயங்கியது ஆகும். ரூஸோ இறையாண்மையுடைய அரசையும் அதன் கீழ் இயங்கும் அரசாங்கத்தையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளார்.

சுதந்திரம்: சிவில் அரசில் தனிமனித சுதந்திரம் என்பது என்பதெல்லாம் மனிதனுக்கு இறையாண்மையுடைய அரசால் இயற்கையாகவே தரப்படுவது. இறுதி ஆட்சி அதிகாரமுடைய அரசுக்கு எதிராக இதனை பயன்படுத்த மறுக்க முடியாது. அரசுடன் இணைந்து அதனை பெறுதல் வேண்டும்.

அரசு மற்றும் அரசாங்கம்: இறைமையுடைய அரசையும் அதற்கு கீழ்ப்படிந்து செயலாற்றும் அரசாங்கத்தையும் ரூஸோ வேறுபடுத்திக் காட்டுகிறார்.

ஹாப்ஸ், லாக் மற்றும் ரூஸோ

இந்த மூவருடைய கருத்துக்களை ஒப்புவமை அடிப்படையில் காணலாம். ஹாப்ஸின் சில கருத்துக்களையும் லாக்கின் சில கருத்துக்களையும் ரூஸோ எடுத்துக்கொண்டு சமுதாய ஒப்பந்தக்கொள்கையை விவரிக்கிறார். ரூஸோ மற்றும் லாக் ஆகிய இருவரும் இயற்கை நிலையில் மனிதன் மகிழ்ச்சியுடனும் சுதந்திரமாகவும் இருந்தான் என்ற கருத்தில் ஒன்றுபட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் ஏற்படும் சிவில் அரசாங்கம் அவசியமானது என இவர்கள் கருதினார்கள். இருவரும் அரசு வேறு அரசாங்கம் வேறு என்று கருதினாலும் ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு அரசாங்கம் தோன்றியது என்ற கருத்தை ரூஸோ ஏற்றுக் கொள்ளவில்லை. இருவரும் மக்களிடம் உள்ள இறைமை அதிகாரத்தை ஒப்பந்தம் நீக்கவில்லை என்று கருதினார்கள். ரூஸோவினுடைய குரலும் லாக்கினுடைய குரலும் ஒன்றே என்றாலும் அவர்களுடைய கைகள் ஹாப்ஸுக்கு சொந்தமானவை.

சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு - ஒரு மதிப்பீடு

ஹாப்ஸ், லாக் மற்றும் ரூஸோ ஆகியவர்களின் சமுதாய ஒப்பந்தக் கோட்பாடு அரசின் தோற்றம் பற்றி விவரிக்கவில்லை. இவர்களுடைய கொள்கைகளுக்கு ஆதாரம் இல்லை. அதற்கு சரியான எடுத்துக்காட்டுகள் கிடையாது. ஹாப்ஸ் எதேச்சதிகார கொள்கையை முன் வைத்தார். லாக் வரையறை செய்யப்பட்ட அரசாங்கம் என்ற கருத்தை எடுத்துரைத்தார். ரூஸோ மக்கள் இறைமையை எடுத்துரைத்து அதனை வற்புறுத்தியுள்ளார்.

சமுதாய ஒப்பந்த கோட்பாடு - திறனாய்வு

பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் அரசு தோன்றியது என்ற கருத்து மிக பிரபலமாக இருந்தது. ஆனால் இது வெறும் கட்டுக்கதையே. வரலாற்றில் இப்படித்தான் அரசு தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆரம்பகாலத்தில் வாழ்ந்த மனிதர்களின் ஒப்பந்த அடிப்படையில் அரசு தோன்றியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் அரசு ஏற்பட்டதென்று சொல்லக்கூடிய அளவிற்கு அறிவாற்றல் உடையவர்களாக அவர்கள் இருந்திருக்க முடியாது. எனவே இது வரலாற்றுக்கு புறம்பான கட்டுக்கதை என்பது நிதர்சனமான உண்மை.

சட்ட அடிப்படையிலும் இதனில் குறைகள் உண்டு. செல்லத்தக்க சட்ட அடிப்படையிலான ஒப்பந்தம் ஒன்று வலுவான ஆட்சி அதிகாரமுடைய அரசு இல்லாமல் ஏற்பட்டிருக்க முடியாது. ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது இத்தகைய அதிகாரமுடைய அரசு நடைமுறையில் இருக்கவில்லை என்பது உண்மையே. எனவே இக்கொள்கை வரலாறு, சட்டம் மற்றும் தத்துவம் எனப்படும் இயல்களுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக் கொள்ள முடியாததாக செயற்கையானதாகக் கருதப்படுகிறது.

தாய்வழிக் கொள்கை (MATRIARCHAL THEORY)

மக்லனன் (Mclennan), மார்கன் (Morgan), ஜென்க்ஸ் (Jenks) ஆகிய அறிஞர்கள் இக்கோட்பாட்டைப் பற்றி அவர்களுடைய கருத்துக்களை விளக்கமாகத் தெரிவித்துள்ளனர். அக்காலத்தில் திருமணம் என்ற பந்தத்தால் ஒன்றுபட்ட மக்கள் இருந்திருக்கவில்லை. அதனால் ஒரு பெண்ணிற்கு பல கணவன்மார்கள் இருந்தார்கள் என்றும் அதனால் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தகப்பன் யார் என்று அறியமுடியாத நிலையிருந்த காரணத்தால் தாய்வழிமுறை அரசு தோன்றியிருக்ககூடும் என்ற கருத்து நிலவியிருந்தது. குடும்பம் என்பதற்கு பதிலாக அக்காலத்தில் மக்கள் குழுக்களாகவோ பிரிவுகளாகவோ வாழ்ந்து வந்தனர். அவர்கள் பிற்காலத்தில் கீழே சொல்லப்பட்டுள்ள அடிப்படையில் அரசு தோன்றுவதற்கு காரணமாக இருந்திருக்க கூடுமெனக் கருதப்படுகிறது.

 1. தொடக்கத்தில் பழங்குடி அமைப்பொன்று இருந்தது. அது பழமையான மற்றும் முதன்மையான சமூக அமைப்பாக இருந்திருக்கின்றது.
 2. காலம் செல்லச் செல்ல பழங்குடி அமைப்புகள் பலவாக பெருகி குலங்களாக பிரிந்தன.
 3. இந்த குலங்கள் ஒவ்வொன்றும் பல நூற்றுக் கணக்கான குடும்பங்களாகப் பெருகின. இக்குடும்பங்கள் தனித்தனி வீடுகளாக மாறியதால் அவையெல்லாம் சேர்ந்து அரசாக மாறின.
 4. இந்த அடிப்படையில் தற்காலத்தில் குடும்பம் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு ஏற்பட்டது.

திறனாய்வு

இக்கொள்கை குடும்பம் எவ்வாறு தோன்றிந்து என்று விவரிக்கின்றது என்பதல்லாமல் அரசு தோற்றத்தை பற்றி சொல்லவில்லை. இது ஒரு சமுதாய கொள்கையே தவிர அரசியல் கொள்கை அல்ல. இவ்வாறு தான் சமூகமும் அரசும் தோன்றியிருக்க கூடும் என்ற ஆதாரங்கள் கிடையாது.

தந்தைவழிக் கொள்கை (PATRIARCHAL THEORY)

தந்தைவழி முறையில் அதாவது குடும்பத் தலைவன் அல்லது குடும்பத்திற்கு தலைவர் தந்தை என்ற அடிப்படையில் அரசு தோன்றியதாக விவரிக்கின்றது. குடும்பத்தின் விரிவாக்கமே அரசு. ஆரம்பத்தில் குடும்பத்தில் ஒரு மனிதன் ஒரு மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். குடும்பத்தின் தலைவராக தந்தை மற்ற உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அவர்கள் மேல் அதிகாரம் செலுத்தினார். காலப் போக்கில் குடும்பத்திலிருந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் திருமணம் செய்து கொண்டு அவர்களும் குழந்தைகளை பெற்றார்கள். தொடர்ந்து இவ்வாறு ஒரு குடும்பம் பல குடும்பங்களாக மாறி அதன் அடிப்படையில் அரசு தோன்றியது என்று கருதப்படுகிறது. இக்கருத்தை சர் ஹென்றி மெயின் (Sir Henry Maine) என்னும் ஆங்கில அறிஞர் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். இக்கொள்கையின் முக்கியமான கருத்துக்கள் வருமாறு

 1. தந்தைவழி குடும்ப அமைப்பில் தந்தை முக்கியமானவர்.
 2. வாரிசு முறை ஆண்களை அடிப்படையாக கொண்டு அந்த ஆண்களின் முன்னோர்கள் அடிப்படையிலும் விவரிக்கப்பட்டது. பெண்கள் வழி வாரிசுகள் இந்த கணக்கில் குடும்பத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனவே உறவுமுறை எதிர்மறையானதாக இருந்தது.
 3. நிரந்தர திருமணம் என்பது ஒரு மனைவி அல்லது பல மனைவியர்களை கொண்ட அமைப்பாக இருந்தது.
 4. மேற்கூறப்பட்ட குடும்பத்தின் தலைவராக ஆண்மகன் ஒருவர் இருந்தார். அவர் குடும்பத்தில் உள்ள அனைவர் மேலும் மற்றும் அவர்கள் சந்ததியினர் மேலும் அதிகாரம் செலுத்தினார்.
 5. அவர் குடும்ப விவகாரங்களை கட்டுப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தின் மதம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த உட்ரோ வில்சன் (Woodrow Wilson) என்பவர் அரசியல் சமுதாயத்தின் விதையாகவும் அதிலிருந்து ஏற்பட்ட அரசாங்கங்களின் ஆணிவேராகவும் குடும்ப அமைப்பு இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு குடும்பம் பல குடும்பங்களாகவும், பல அமைப்புகளாகவும் விரிவடைந்த போதும் அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளும் அதன் உறுப்பினர்களுக்கிடையே உள்ள இரத்த பந்தமும் ஒற்றுமைக்கு ஆதாரமாக இருந்தன. நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் விவசாயம் போன்ற தொழில்கள் செய்ய ஆரம்பித்த பொழுது குறிப்பிட்ட ஏதேனும் ஒரு இடத்தில் தங்கினார்கள். அவ்வாறு தங்கிய குடும்பங்களும் அக்குடும்பங்களின் விரிவாக்கமும் பிற்காலத்தில் அரசு என்ற அமைப்பை தோற்றுவித்தன. இதை வலியுறுத்தும் வகையில் சர் ஹென்றி மெயின் இந்தியாவில் காணப்படும் கூட்டுக்குடும்ப அமைப்பு, ரோமாபுரியில் காணப்படும் தந்தைவழி அமைப்பு அதன் ஆதிக்கம் மற்றும் கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகர மக்களிடையே காணப்படும் குடும்ப அமைப்புகள், அக்குடும்ப அமைப்புகளிடையே நிலவும் சகோதரத்துவம் போன்றவற்றை உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

திறனாய்வு

தந்தைவழி தோற்றக் கொள்கை பரவலாக பல தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதென அறிஞர்கள் கூறுகின்றனர். தந்தைவழி மற்றும் தாய்வழி கொள்கைகள் அரசியல் கொள்கைகள் அல்ல. இருப்பினும் ஸ்டீபன்லீகாக் (Stephen Leacock) என்பவர் இக்கொள்கைகள் அரசுக்கும் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன என்று கூறுகிறார். மேலும் இவை ஆரம்ப காலத்தில் இருந்த சமுதாய அமைப்புகளை எடுத்துக்காட்டுபவைகளாகவும் அவைகளுடைய நடைமுறைகளை விவரிப்பவைகளாகவும் இருக்கின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகும்.

வலிமை கொள்கை (FORCE THEORY)

வலிமை கொள்கைப்படி எளியோர் மேல் வலியோர் செலுத்திய ஆதிக்கம் காரணமாக அரசு தோன்றியது எனப்படுகிறது. போர்க்காலங்களில் வலியோர் அவர்களுடைய போர்த் திறமையை வெளிப்படுத்தி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுகின்ற போது அவர்கள் வாழும் பகுதிகளுக்கு சுலபமாக தலைவர்களாகி விடுகிறார்கள். இவர்களே நாளடைவில் அரசர்களாக ஆட்சியும் செய்வோர்களாகிறார்கள். இந்த அடிப்படையில் பல இடங்களில் பல அரசுகள் தோன்றியிருக்கின்றன.

அரசர்களாவதற்கு போர்கள் உதவுகின்றன என்று ஹுயூம் (Hume), ஒப்பன்ஹிம் (Oppenheim), ஜென்கஸ் பிரன்ஹார்டி (Jenks-Bernhardy) மற்றும் டிரியட்ஸ்கி (Trietschke) போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இம்முறையில் வலிமை உரிமையாகிறது என்ற கருத்து வற்புறுத்தப்பட்டாலும் தனி நபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்பது தெளிவாகும். வலிமைக் கொள்கை அரசு தோற்றத்தின் ஒரு அம்சத்தை மட்டும் விளக்குகிறது. ஆனால் வேறு சில காரணிகளும் அரசின் தோற்றத்திற்கு ஆதாரமாக இருந்தன என்பது தான் உண்மையாகும்.

திறனாய்வு

அரசு தோற்றத்தில் வலிமை கொள்கையினுடைய பங்கு இன்றியமையாதது. பேரரசுகள் எழுந்ததும் வீழ்ந்ததும் வலிமையின் காரணமாக என்பதை முழுவதுமாக ஏற்க முடியாது. இக்கொள்கை தகுதியுடையவர்கள் மட்டுமே வாழ்வதற்கு அருகதை படைத்தவர்கள் என்னும் கொள்கையை அளவுக்கும் அதிகமாக வற்புறுத்துகிறது. எளியோர் வீழ்வதும் வலியோர் வாழ்வதும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இம்முறை விவேகமானதும் சிறந்ததுமாகாது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால் போரிடுவது தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டேயிருக்கும். இவ்வாறு குழப்பம் ஓங்கி அமைதி குறைந்து, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும் போது போரிடுவதற்காக ஆயுதங்கள் மேலும் உற்பத்தி செய்யப்படுவதோடு மக்களும் அதற்காகவே தயார் செய்யப்பட நேரிடும்.

எனவே நாடு மற்றும் மக்கள் எந்த நேரமும் அழிவை நோக்கி செல்வதால் உண்மை மறைந்து, ஒழுக்கக் குறைவு ஏற்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரும் மடிந்து போவதோடு மனித நேயமும் இல்லாமல் போய்விடும். எனவே வலிமைக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளதக்கதல்ல எனலாம்.

வரலாறு அல்லது பரிணாமக் கொள்கை

அரசு கடவுளால் உருவாக்கப்பட்டதென்றோ அல்லது குடும்பம் பெரிதாகி அதனால் ஏற்பட்டதென்றோ அல்லது வலிமை காரணமாக ஏற்பட்டதென்றோ குறிப்பிட முடியாது. பேராசிரியர் கார்னர் (professor Garner) என்பவர் செயற்கை அல்லது இயந்திரத்தனமான முறையில் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரலாறு கூறுவது போல இயற்கையாக ஏற்பட்ட அமைப்பு தான் அரசு என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசின் தோற்றத்தில் பல மூலக்கூறுகள் இருக்கின்றன. அவற்றில் இனப்பற்று, மதம், போர், இடம் பெயர்தல், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஆகியவை முக்கியமானவைகளாகும்.

1. இனப்பற்று (Kinship) : பொதுவாக மக்கள் குடும்ப அமைப்பு, குல அமைப்பு போன்றவைகளில் வாழ்கின்ற பொழுது அவர்களிடையே உறவு முறை தொடர்பு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பந்தம் பாசம் என்பவைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மேற்பட்ட அமைப்புகள் எவ்வளவு பெரியவைகளாக அதிக உறுப்பினர்களை கொண்டதாக மாறினாலும் அவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு மூத்த குடும்பத்தை சேர்ந்த ஆண்மகனை தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு கட்டுப்பட்டு அவன் கட்டளைப்படி நடக்கின்றார்கள்.

இக்கருத்தை பேராசிரியர் மாக்ஐவர் (Professor. Mac Iver)மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறார். அதாவது பல தலைமுறைகளை சேர்ந்த மக்கள் எல்லோரும் இன அடிப்படையில் ஒன்றுபட்டு அவர்களுக்கு இடையே சகோதரத்துவ பாசத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் மற்றொருவரை விட்டுக் கொடுக்காமலும் சார்ந்தும் வாழ்கிறார். இத்தகைய அமைப்பு இன அடிப்படையில் பிற்காலத்தில் அரசாக ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

2. மதம் (Religion) : இனத்தைப் போல மதமும் மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. பொதுவாக மக்கள் எப்பகுதிகளில் வாழ்ந்தாலும் அவர்களுடைய மூதாதையர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்களோ அந்த மதத்தையே பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். மதம் அவர்களை அனைத்து ஒன்றுபடுத்தியிருக்கிறது. மதத்தலைவர் அவ்வப்பகுதி மக்களுக்கு தலைமை ஏற்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். பொதுவாக மதம் பற்றிய பயம் மக்களிடையே காணப்பட்டாலும் இன அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசை தோற்றுவித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் வற்புறுத்தப்படுகிறது.

3. வலிமை (Force) : வலிமை அல்லது வல்லமை என்பதும் உலகின் பல பகுதிகளில் அரசுகள் மற்றும் பேரரசுகள் ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் அரசுகள் பல மறைந்து புதிய அரசுகள் தோன்றியிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் வலிமை என்பது தான் ஆகும்.

4. உடைமை மற்றும் பாதுகாப்பு (Property and defence) : உடைமை மற்றும் பாதுகாப்பு இரண்டும் அரசு தோன்றுவதற்கு பழங்காலத்தில் காரணிகளாக இருந்திருக்கின்றன என்று பேராசிரியர் லாஸ்கி போன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் தமக்கென்று பொருள்களையும் இதர உடைமைகளையும் சேர்க்கவும் அவற்றை பாதுகாக்கவும் மற்றும் தங்களை சேர்ந்தவர்களுக்கு அவைகள் கிடைக்க வேண்டுமென்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதற்கு பக்க பலமாக, பாதுகாப்பாக அமைந்த ஏற்பாடு பிறகு அரசாக ஏற்பட்டது என்றும் கூறுகின்றார்கள்.

அரசின் தோற்றத்திற்கு அரசியல் விழிப்புணர்வும் முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிரயதரமாக வாழ்க்கையை நடத்த முற்பட்ட போது உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட்டன. அதோடு அவர்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் சமுதாய அமைப்பு முறையில் அமைதி மற்றும் பாதுகாப்பு சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. இவைகளை தீர்த்து வைக்கவும் அவைகள் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் தோன்றிய அமைப்பே அரசு என்பதாக கருதப்பட்டது.

மேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து எந்த ஒரு கொள்கையும் அரசின் தோற்றத்திற்கு முழுமையான காரணியாக அமையவில்லை. ஒவ்வொரு காரணியும் ஏதேனும் ஒரு வகையில் தான் அரசு தோன்றுவதற்கும் மக்கள் திருந்தி சிறந்த குடிமக்களாக வாழ்வதற்கும் துணையாக இருந்திருக்கின்றது என்பது தெளிவாகிறது. இக்கொள்கைகள் எல்லாவற்றிலும் வரலாறு சார்ந்த பரிணாமக் கொள்கை அரசு இயற்கையாக காலப்போக்கில் மெல்ல மெல்ல தடைகள் பலவற்றைக் கடந்து தோன்றியதெனக் குறிப்பிடுகிறது. இது அறிவியலடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பதால் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
3.04347826087
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top