பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசியல் அறிவியலின் அடிப்படைகள்

அரசியல் அறிவியலின் அடிப்படைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அரசியல் அறிவியல்

ஜின்போடின் (1530-1596) எனும் பிரெஞ்சு நாட்டு அரசியல் தத்துவ ஞானிதான் அரசியல் அறிவியல் என்ற சொல்லை உருவாக்கினார். அரசியல் அறிவியல் என்பது சமூக அறிவியலின் ஒரு பிரிவு ஆகும். இன்றைய நிலையில் அரசியல் அறிவியலைக்கற்பது மிகவும் தேவையானதும், முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். அரசைப் பற்றிய படிப்பே அரசியல் அறிவியல் ஆகும். கார்னர் என்ற அறிஞர், அரசியல் அறிவியலில் ஆரம்பமும் முடிவும் அரசு பற்றியதுதான் என்று கூறுகிறார். அரசியல் அறிவியல் என்பது, மனிதன் தன்னை எவ்வாறு ஆளுகிறான் என்பது பற்றி கூறுவதாகும்.

கேட்டலின் என்னும் அறிஞர் “அரசியல் என்பது அரசியலோடு இணைந்த வாழ்க்கை சம்மந்தப்பட்ட செயல்பாடுகள் அல்லது அரசாங்கம் தொடர்புடைய நிறுவனங்களின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய படிப்பாகும்’ என்று கூறுகிறார். “அரசியல் என்பது அரசாங்கத்தின் பிரச்சினைகளைப் பற்றியது” என்று R.N. கில்கிரைஸ்ட் கூறுகிறார். கிரேக்க அரசியல் தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் என்பவர் (கி.மு.384-322) அரசியல் என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தினார்.

அரசியல் என்ற சொல் நகர அரசு என்ற பொருள்படும் போலிஸ் (POLIS) என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து ஆங்கிலச் சொல்லான “பாலிடிக்ஸ்’ எடுத்தாளப்பட்டது. போலிஸ் அல்லது நகர அரசு என்பது ஒரு சிறிய சுயாட்சியுடைய, தன்னிறைவையுடைய ஒர் அரசியல் சமுதாயத்தைக் குறிப்பிடுகின்றது. கிரேக்கர்கள் அரசியல் மற்றும் ‘சமுதாயம்' என்பதை வேறுபடுத்தவில்லை. 'அரசியல் அறிவியல்' என்ற பாடம் முறையாக படிப்பதற்கு கிரேக்க நகர அரசுகள் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. கிரேக்கர்கள் போல் அல்லாமல் நாம் பரந்த நிலப்பரப்பு உள்ள அரசுகளில் வசிக்கிறோம். கிரேக்கர்களுடைய அரசு பற்றிய கருத்து தற்கால அரசுகளைப் பற்றிய கருத்துக்கும் பொருந்தும். பால்ஜேனட் எனும் பிரெஞ்சு ஆராய்ச்சியாளரின் கருத்துப்படி அரசியல் அறிவியல் என்பது சமூக அறிவியலின் ஒரு பகுதி ஆகும். அரசியல் அறிவியல் அரசின் அடிப்படைகளையும் அரசாங்கத்தின் கோட்பாடுகளையும் பற்றியது ஆகும்.

அரசியல் அறிவியலின் எல்லைப்பரப்பு

எல்லைப்பரப்பு என்பது ஒரு பாடப் பிரிவின் பொருளை அல்லது எல்லைகளை குறிப்பது ஆகும். 1948 ஆம் ஆண்டு, சர்வதேச அரசியல் அறிவியல் சங்கமானது தனது பாரீஸ் மாநாட்டில் அரசியல் அறிவியலின் எல்லைப்பரப்பை பின்வருமாறு வரையறுத்தது.

 • அரசியல் கோட்பாடு
 • அரசியல் கருத்துக்கள்
 • அரசியலமைப்பு
 • தேசிய அரசாங்கம்
 • வட்டார மற்றும் உள்ளாட்சி அரசாங்கம்
 • பொது நிர்வாகம்
 • அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் பணிகள்
 • ஒப்பீட்டு அரசியல் நிறுவனங்கள்
 • அரசியல் கட்சிகள்
 • குழுக்கள் மற்றும் சங்கங்கள்
 • அரசாங்கத்திலும் நிர்வாகத்திலும் குடிமகனின் பங்கேற்பு
 • மக்கள் கருத்து

சர்வதேச உறவுகள்:

 • சர்வதேச அரசியல்
 • சர்வதேச அமைப்பு மற்றும் நிர்வாகம்
 • சர்வதேச சட்டம்

அரசியல் அறிவியலின் எல்லைப்பரப்பை பரந்த வகையில் மூன்றாக பிரிக்கலாம்.

 1. அரசு தொடர்பான அரசியல் அறிவியலின் எல்லைப்பரப்பு.
 2. மனித உரிமைகள் தொடர்பான அரசியல் அறிவியலின் எல்லைப்பரப்பு.
 3. அரசாங்கம் தொடர்பான அரசியல் அறிவியலின் எல்லைப் பரப்பு.

அரசு தொடர்பான அரசியல் அறிவியலின் எல்லைப்பரப்பு

அரசியல் அறிவியலில் நாம் தற்போதைய அரசின் வகை, அதன் குறிக்கோள்கள், நோக்கங்கள் மற்றும் இந்த குறிக்கோள்களை அடைவதற்கு அரசு கையாளும் வழிமுறைகள் ஆகியன பற்றி கற்கிறோம். இதனை கெட்டல் என்பார் அரசு பற்றிய பகுப்பாய்வு முறை எனக் குறிப்பிடுகிறார். இன்றைய அரசின் வடிவமானது வரலாற்று ரீதியான வளர்ச்சியின் விளைவாகும். அரசியல் அறிவியல் வரலாற்று ரீதியான பகுப்பாய்வில் அரசின் தோற்றம் பற்றியும், அரசு பற்றிய கோட்பாடுகள் பற்றியும், விளக்குகிறது.

அரசியல் அறிவியல் படிப்பானது எதிர்கால அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதனை கணிக்கிறது. கெட்டலின் கருத்துப்படி அரசியல் அறிவியல் என்பது அரசு எப்படி இருந்தது என்பது பற்றிய வரலாற்று ஆய்வாகவும், தற்போதைய அரசு எப்படிப்பட்டது என்பது பற்றிய பகுப்பாய்வாகவும் மற்றும் அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய அரசியல் நெறி சார்ந்த விவாதமும் ஆகும்.

மனித உரிமைகள் தொடர்பான அரசியல் அறிவியலின் எல்லைப்பரப்பு

குடிமக்கள், குடிமை, அரசியல், மற்றும் பொருளாதார உரிமைகளை பெற்றுள்ளார்கள். இவ்வுரிமைகள் குடிமக்களின் நலன் பொருட்டு அரசினால் பாதுகாக்கப்படவும், பராமரிக்கப்படவும் வேண்டும்.

அரசாங்கம் தொடர்பான அரசியல் அறிவியலின் எல்லைப் பரப்பு:

ஸ்டீபன் லீகாக் எனும் அறிஞர் அரசியல் அறிவியல் அரசாங்கம் பற்றியது ஆகும் எனக் குறிப்பிடுகிறார். அரசாங்கம் என்ற அமைப்பு இல்லாமல் அரசு இயங்க முடியாது. அரசாங்கமானது அரசின் பணியாற்றும் செயலி ஆகும். அரசாங்கத்தின் பல்வேறு வகைகள், அரசாங்கத்தின் அங்கங்கள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சி சுய அரசாங்கங்கள், நீதித்துறை, சர்வதேசத்துவம், ஆகியன அரசியல் அறிவியலில் அடங்கும்.

அரசியல் அறிவியல் - ஒரு கலை அல்லது அறிவியல்

அரசியல் அறிவியல் தந்தை எனக் கருதப்படும் அரிஸ்டாட்டில் அரசியல் அறிவியலை அனைத்து அறிவியல்களிலும் தலையாயது என்றார்.

லாஸ்கி, பர்க், மெய்ட்லாண்ட், போன்ற சிந்தனையாளர்கள் அரசியல் அறிவியல் என்பதற்கு பதிலாக அரசியல் என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள். மாறாக காட்வின், விக்கோ, ஹியூம், போடின், ஹாப்ஸ், மாண்டெஸ்கியூ போன்ற சிந்தனையாளர்கள் அரசியல் அறிவியல் எனக் குறிப்பிட்டனர்.

“நான் அரசியல் அறிவியல் என்ற தலைப்பிலான தேர்வுவினாத்தாளை காணும்போது அந்த வினாக்களுக்காக வருத்தப்படுவதில்லை. ஆனால் அரசியல் அறிவியல் என்ற தலைப்பிற்காக வருந்துகிறேன்” பக்கில் என்பார் “தற்போதைய அறிவு நிலையில் அரசியல் அறிவியல் என்ற நிலையிலிருந்து விலகி அதே நேரத்தில் கலைகளில் பின்தங்கிய ஒன்றாக உள்ளது” எனக் குறிப்பிடுகிறார். அரசியல் அறிவியல் ஒரு அறிவியலா அல்லது கலையா என்பது பற்றி பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

முறைமைப்படுத்தப்பட்ட அறிவின் தொகுப்பே அறிவியல் ஆகும். அறிவியல் சில குறிப்பிட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதாகும். மாறாக கலை என்பது மனித வாழ்வின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முறைமைப் படுத்தப்பட்ட அறிவாகும்.

பெளதீகம், வேதியியல் போன்ற பெளதீக அறிவியல்கள் ஒரு கருத்தை அல்லது பொருளை அறிவதில் அறிவியல் முறையை பயன்படுத்துகின்றன. உதாரணமாக புவி ஈர்ப்பு விதி, நீ ஒரு பந்தை மேல் நோக்கி எரிந்தால் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக அப்பந்து பூமியில் விழுகிறது. அதே போல் இருபங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு ஆக்ஸிஜனும் இணைந்தால் தண்ணிர் ஆகிறது. அறிவியலில் எந்த ஒரு பரிசோதனையையும் எந்த இடத்திலும் எந்த பரிசோதனைக் கூடத்திலும் எத்தனை முறை செய்து பார்த்தாலும் ஒரே விளைவே ஏற்படும். அந்த விளைவு சரியானதாகவும், ஒரே தன்மையுடையதாகவும் இருக்கும்.

வரலாறு, சமூகஇயல், அரசியல் அறிவியல் பொருளியல் போன்ற சமூக அறிவியல்களும் ஒரு சமூகப் பொருளை அறிவதற்கு அறிவியல் முறையை பயன்படுத்துகின்றன. ஆனால் சமூக அறிவியல்களில் பரிசோதனைக் கூடங்கள் அல்லது பரிசோதனைகள் சாத்தியமில்லை. பெளதீக அறிவியல்கள் ஒரு திட, திரவ அல்லது வாயுப்பொருளை ஆராய்கின்றன. ஆனால் சமூக அறிவியல்கள் மனிதர்களைப் பற்றி ஆராய்கின்றன.

பெளதீகப் பொருள்களின் தன்மைகள், துல்லியமானதாகவும், மிகச் சரியானதாகவும் ஒரே தன்மையுடையதாகவும் விளங்குகின்றன. இத்தகைய தன்மைகள் சமூக அறிவியல்களில் சாத்தியமில்லை. அதே நேரத்தில் இதன் காரணமாக அரசியல் அறிவியல் ஒரு அறிவியல் அல்ல என்று நிராகரிக்கவும் இயலாது.

அரசியல் அறிவியல் ஒரு முழுமையான அறிவியலாக இயலாது என்பது உண்மை. ஏனெனில் அதன் விதிகள், மற்றும் முடிவுகள் ஆகியவற்றை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாது. ஏனெனில் அரசியல் நிகழ்வுகளை துல்லியமாக அதனால் கணிக்க இயலாது, மேலும் சமூக மற்றும் அரசியல் உறவுமுறைகள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். இன்று உண்மை எனத் தோன்றுவதெல்லாம் எதிர்காலத்தில் உண்மை எனத் தோன்றாமல் போகலாம். எனவே அரசியல் அறிவியல் ஒரு அறிவியல் என்றும் கலை என்றும் அழைக்கப்படலாம்.

அரசியல் அறிவியலின் இரு முகங்கள்

மோதல் மற்றும் ஒத்துழைப்பு ஆகியன அரசியல் அறிவியலின் இரு முகங்கள் ஆகும். உண்மையில் அவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை ஆகும். எதிர்ப்பு என்பது விரும்பத் தகுந்ததல்ல, ஆகத் தவிர்க்கக் கூடியதும் அல்ல. மனித சமூகத்தில் மோதல்கள் பலவகைப்படும். சமூக பொருளாதார கலாச்சார மற்றும் உளவியல் காரணங்களுக்காக மோதல்கள் வரலாம். மோதல் என்பது எத்தகைய நிலையில் இருந்தாலும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும்.

அரசு சமூகத்தில் இறுதி ஆணையுரிமை (AUTHORTY) உடையதாகும். ஒருங்கிணைப்பதன் மூலமாக அரசு தீர்வுகளை காண்கிறது. அரசு சட்டங்களை இயற்றி, விதிகளை உருவாக்கி, அதை சமூகத்தில் நடைமுறைப்படுத்துகிறது. ஒருங்கிணைப்பில் கல்வி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் ஆகியன முக்கியமானவை ஆகும். அரசு காவல்துறை, ராணுவம், மற்றும் சிறைத் துறை போன்றவற்றின் மூலமாக மக்களை கட்டாயப்படுத்தலாம். ஆனால் இவை எல்லாம் வேறு வழி இல்லாத நிலையில் கடைசியாக பிரயோகிக்கப்பட வேண்டும். முக்கியமாக கட்டாயப்படுத்துதல் கடைசி நிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மக்களின் நல் வாழ்வு எல்லா அரசுகளின் கோட்பாடு ஆகும்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக புதிய வகை மோதல்கள், தோன்றுவதை மறுக்க முடியாது.

மோதல்களை தீர்வு செய்து மக்களின் பொது நல வாழ்விற்கு வகை செய்வது அரசின் பொறுப்பாகும். அதுவே அரசின் நோக்கம் என்பதை மறுக்க இயலாது.

மதிப்பீடுகளின் அடிப்படை மற்றும் ஆய்ந்தறிதல் அடிப்படையிலான அறிவு

அரசியல் கோட்பாடுகள் இரண்டு வகைப்படும். அவை

 1. மதிப்பீடுகளின் அடிப்படை அல்லது பரிந்துரைத்தன்மை உடையன.
 2. ஆய்ந்தறிதல் அடிப்படை அல்லது விவரிப்புத்தன்மை உடையன.

மதிப்பீடுகளின் அடிப்படை கோட்பாடுகள் சில தீர்மானங்களின் அடிப்படையிலானவை ஆகும். சில கருத்துக்கள், மதிப்பீடுகள் மற்றும் அனுமானங்கள் ஆகியவற்றை சார்ந்தே மதிப்பீடுகளின் அடிப்படை கோட்பாடுகள் அமையும். அவை பின்வரும் பொருள்களை குறித்தனவாகும்.

 1. சமூகத்தின் நல்ல முறை
 2. அரசின் நோக்கங்கள்

பிளேட்டோவின் குடியரசு, ரூசோவின் சமூக ஒப்பந்தம் ஆகியன மதிப்பீடுகளின் அடிப்படையிலான நூல்கள் ஆகும். உதாரணமாக இந்திய குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்தை ஏற்கக் கூடாது என்று ஒருவர் கூறினால் அந்த கூற்று அவரது மதிப்பீடுகளின் அடிப்படை கூற்றாகும்.

ஆய்ந்தறிதல் அல்லது விவரிப்புத்தன்மை

இவ்வகைக் கோட்பாடுகள் அரசின் கட்டமைப்பு, அரசின் செயல் தொடர், ஆகியன பற்றியது ஆகும். ஒரு பொருள் பற்றி நேரடியான அனுபவம் மூலம் கண்டு அறிவதே ஆய்ந்தறிதல் முறையாகும். மாக்ஸ் வீபரின் “அதிகாரவர்க்கம்” கிரஹம்வேல்ஸின் “அரசியலில் மனிதர்களின் தன்மை", ஆர்தர் பெட்டேலியின் “அரசாங்கத்தின் செயல் தொடர்” ஆகியன அரசியலை அறிவது பற்றி ஆய்ந்தறிதல் முறையில் எழுதப்பட்டது. ஒரு அரசியல் கட்சியைவிட வேறு ஒரு அரசியல் கட்சி அதிக அளவிலான வாக்காளர் ஆதரவை பெற்றுள்ளது எனக் கூறுவது ஆய்ந்தறிதலில் அடிப்படையானதாகும். ஏனெனில் வாக்காளர் ஆதரவு என்பது எண்ணிப்பார்க்கக்கூடிய, ஆய்ந்தறியக் கூடிய, சரிபார்க்கக்கூடிய உண்மையின் அடிப்படையில் ஆனதாகும்.

நடத்தை சார் இயக்கம்

இரண்டாம் உலகப்போரின் (1939-45) முடிவுக்கு பின்பு நடத்தை சார்இயக்கம் தோன்றியது. இக்கால கட்டத்தில் நடத்தை சார் சிந்தனையாளர்கள் அரசியல் அறிவியலில் தங்களது முக்கிய பங்களிப்பினை தந்துள்ளனர். கேப்பிரியல் ஆல்மாண்ட், ராபர்ட் எதால் (ROBERTADAHL) டேவிட் ஈஸ்டன் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்க சிலர் ஆவர். ராபர்ட் எ. தால் கருத்துப்படி நடத்தை சார் என்பது அரசியல் அறிவியலில் தோன்றிய எதிர்ப்பு இயக்கம் ஆகும். சில அமெரிக்க அரசியல் அறிவியல் அறிஞர்கள் பாரம்பரியமான அரசியல் அறிவியல் வரலாற்று அணுகுமுறை, தத்துவ அணுகுமுறை மற்றும் நிறுவன விவரிப்பு அணுகுமுறை ஆகியவற்றின் மீது அதிருப்தி கொண்டு நடத்தை சார்இயக்கத்தை துவக்கினர். இத்தகைய பாரம்பரியமான அணுகுமுறையன்றி வேறு புதிய அணுகுமுறைகளை வகுத்து அவற்றின் மூலமாக அரசியல் அறிவியல் கண்டறிய இயலும் என்பது அவர்களது வாதமாகும். மேலும் அரசியல் அறிவியல் கோட்பாடுகளை முறைமை ஆனதாகவும், சோதிக்கப்பட்டதாகவும் உருவாக்க இயலும் என்று கருதினர்.

நடத்தை சார் முறையின் நிறைகள்

 1. இவ்வகையில் ஒரு கலாசாரம் சார்ந்த நிறுவனங்களை வேறு ஒரு கலாசாரம் சார்ந்த நிறுவனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்பு அரசியல் அறிவியல் மாணவர்களுக்கு உதவும்.
 2. நடத்தை சார் என்பது வளரும் தன்மை உடையதாகும். அரசியல் முறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சமூக முறையில் ஏற்படும் மாற்றங்களையும் அறிய தக்க வகையில் வளரும் தன்மை கொண்டதாகும்.
 3. உலகில் அரசியல் நிகழ்வுகள் எவ்வாறு நிகழும் என “கருதுகோள்” உருவாக்க, மாதிரிகளை வடிவமைக்க இயலும்.
 4. “கருதுகோள்களை’ (hypothesis) சேகரிக்கவும் மக்களின் கருத்துக்களை அறியவும், அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் முன்பு எவ்வாறு இருந்தன இப்போது எவ்வாறு இருக்கின்றன என்ற அடிப்படையில் கள ஆய்வை மேற்கொள்ளவும் உதவும்.

குறைகள்

 1. நடத்தை சார் அணுகுமுறை என்பது சிறிய அளவிலான ஆய்வுகளுக்கு மட்டுமே உதவும். நீதி என்றால் என்ன? அல்லது சுதந்திரம் என்பது யாது? போன்ற பொதுவான கேள்விகளுக்கு நடத்தை சார் அணுகுமுறை பதில் காண உதவாது.
 2. நடத்தை சார் வாதிகள் அறிமுகப்படுத்திய கருத்துக்கள் அரசியல் அறிவியலில் புதியதாக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை ஏற்கெனவே இருந்த சில கருத்துக்களுக்கு மாற்றுப் பெயர்கள் என்றே கொள்ள வேண்டும்.
 3. இயல்களுக்கு (Inter disciplinary) இடையிலான அணுகு முறையை பின்பற்றுவதன் மூலமாக அரசியலின் பரப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது.

பிந்தைய நடத்தையியல்

1960ம் ஆண்டு பிற்பகுதி காலத்தில் நடத்தை சார் இயக்கத்திற்கு எதிராக ஒரு புது இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் பிந்தைய நடத்தையியல் இயக்கம் என்று அழைக்கப்பட்டது. பிந்தைய நடத்தையியல் வாதிகள் அறிவியல் சார்ந்த அணுகுமுறையை நிராகரிக்கவில்லை. அவர்கள் நடத்தை வாதிகளின் தற்போதைய சமூகப் பிரச்சனைகளை எடுத்து ஆளவில்லை என்பதை குறிப்பிட்டார்கள்.

பிந்தைய நடத்தையியல் வாதிகள் அரசியல் அறிவியல் என்பது மானிட வாழ்க்கை அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளைச் சார்ந்து அவைகளை தீர்ப்பதாக இருக்க வேண்டுமென கருதினார்கள். பிந்தைய நடத்தையியல் காலம், அரசியல் ஆராய்ச்சியில் நுணுக்கங்களை விட பொருளின் சாராம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. மேலும், தற்காலத்து பிரச்சனைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. டேவிட் ஈஸ்டன் என்பவர் பின்நடத்தையியல் வாதிகளில் குறிப்பிடத் தகுந்தவர். பிந்தைய நடத்தையியல் என்பது செயல், மற்றும் பொருத்தம் சார்ந்ததாகும்.

அரசியல் அறிவியலும் பிற சமூக மற்றும் மானிட இயல்களும்

சமுதாய அறிவியல்கள், சமுதாயத்தில் வாழும் மனிதனின் நடவடிக்கைகள் பற்றிய படிப்பு ஆகும். அரசியல் அறிவியல், பொருளியல், வரலாறு மற்றும் புவியியல், ஆகியவை சமுதாய அறிவியல்களில் அடங்கும். சமுதாய அறிவியலில் உள்ள ஒவ்வொரு பாடமும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டும், ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுக்கொன்று உதவியாகவும் இருந்து வருகிறது.

அரசியல் அறிவியலும் வரலாறும்

அரசியல் அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. சர். ஜான் சீலி என்ற அறிஞர் அரசியல் அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பை கீழ்க் கண்டவாறு அழகாக விளக்குகிறார்.

“வரலாறும் அரசியல் அறிவியலும் ஒரு செடியின் வேரும் கனியும் போன்றது என்றும் வரலாறு அச்செடியின் வேர் போன்றதும், அரசியல் அறிவியல் அச்செடியினின்று கிடைக்கும் கணி” போன்றதாகும்.

“வரலாற்றினுடைய சுதந்திரத் தன்மையைப் பெறாத அரசியல் கீழ்த்தரமானதாகிறது. அரசியல் நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் விளக்காத வரலாறு இலக்கியமாக அமையும்’ என மேலும் அவர் விளக்குகிறார். “வரலாறு என்பது கடந்தகால அரசியல், அரசியல் என்பது தற்போதய வரலாறு’ என பிரிமேன் குறிப்பிடுகிறார். மான்டெஸ்கியூ மற்றும் பிரைஸ் போன்றோர் வரலாற்று நிகழ்ச்சிகளை அரசியல் அறிவியல் பாடம் படிப்பதற்கு உபயோகப்படுத்திக் கொண்டனர்.

பிரைஸ் பிரபு அவர்கள் அரசியல் அறிவியல் பாடம் வரலாற்றுக்கும் அரசியலுக்கும் மற்றும் கடந்தகாலம் நிகழ்காலம் ஆகியவற்றின் நடுவே உள்ளது என்றும் வலியுறுத்துகிறார். வரலாறும் அரசியல் அறிவியலும் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன.

வரலாறு, கடந்தகால நிகழ்ச்சிகள், இயக்கங்கள், புரட்சிகள் மற்றும் தேசிய போராட்டங்கள் போன்றவற்றின் மூலமாக அரசியல் நிறுவனங்கள் மற்றும் அரசியல் கொள்கைகள் தோன்றி வளர்ந்த முறையை தெரிவிக்கிறது. அரசியல் அறிவியலில் பல பிரச்சினைகள், கருத்துக்கள், சொற்கள், கருப்பொருள்கள் பற்றி விவாதிக்கப்படும்போது அவை தோன்றிய விதம் வளர்ச்சி ஆகியன கருத்தில் கொள்ளப்படுகின்றன.

அரசியல் அறிவியலும் பொருளியலும்

அரசியல் அறிவியலும் பொருளியலும் நெருங்கிய தொடர்புடையன. கடந்த காலத்தில் பொருளியல் அரசியல் அறிவியலின் கிளையாக கருதப்பட்டது. ஆடம் ஸ்மித் (ADAM SMITH) பொருளாதாரத்தின் தந்தையென போற்றப்பட்டார். ஆடம் ஸ்மித் தன்னுடைய “உலக நாடுகளின் செல்வத்தின் தன்மை மற்றும் தோற்றம் பற்றிய ஆய்வு'நூலில் பொருளியல் அரசியல் அறிவியலின் ஒரு கிளை என்று குறிப்பிட்டுள்ளார். இதுவே “அரசியல் பொருளாதாரம்” என்று (Political Economy) அழைக்கப்பட்டது.

தற்போது அரசியல் அறிவியலும், பொருளியலும் தனித்தன்மை வாய்ந்த பாடங்களாக உள்ளன. பொருளியல் நாம் உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் மற்றும் நுகர்வு ஆகியவை பற்றிக் கூறும் சமுதாய அறிவியல் ஆகும். எல்லா பொருளியல் செயல்களும் அரசினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

ஐந்தாண்டு திட்டங்கள், சமதர்ம பாங்குடைய சமுதாயம், அரசாங்க பொருளாதார மற்றும் பொது நல செயல்கள் அனைத்தும் அரசியல் அறிவியல் மற்றும் பொருளியல் பாடங்களில் அடங்குகின்றன. பொருளாதாரச் சூழ்நிலைகள் நாட்டின் அரசியல் போக்கை மாற்றி அமைக்கும் வலுவுடையவை. ஒரு நாட்டின் வலுவான மற்றும் சிறந்த நிர்வாகத்தை பொருத்து தான் ஆரோக்கிய பொருளாதாரம் அமையும்.

அரசியல் அறிவியலும் புவி இயலும்

அரசியல் அறிவியலுக்கும் புவி இயலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கிறது. Geo-என்பதன் பொருள் புவி graphy - என்பது ‘விளக்கம். Geography என்பது புவி விளக்கம் அல்லது புவிஇயல் என்று சொல்லப்படுகிறது. இவ்வியல் புவி அமைப்பு, கால நிலை, இயற்கை மற்றும் அரசியல் ரீதியான பிரிவுகள், மக்கள் தொகை ஆகியவற்றை பற்றி விளக்குவதாகும். புவி இயல் சூழ்நிலைகள் எவ்வாறு அரசியல் நிறுவனங்களை தாக்கம் செய்கின்றன என்பது பற்றியும் நாம் புரிந்து கொள்ள உதவுகின்றன. புவியியல் அரசியல் (Geo Politics) ஒரு தனியான பாடப் பிரிவாகும்.

மாண்டெஸ்கியூ "மக்களுடைய சுதந்திரம், அரசாங்க அமைப்புக்கள் புவி அமைப்பையொட்டி ஏற்படுகின்றன. பூமி அரசின் இன்றியமையாத அங்கம்" என்றார்.

ரூசோ, புவியியல் மற்றும் கால நிலைகளுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் இடையே தொடர்புகள் இருக்கின்றன. வெப்ப கால நிலை சர்வாதிகாரம் தோன்றவும் குளிர் காலம் காட்டுமிராண்டி ஆட்சி ஏற்படவும் இடைப்பட்ட காலநிலை நல்லாட்சி ஏற்படவும் உதவுமென்றார்.

அரசியல் அறிவியலும் சமூகவியலும்

சமுதாய அறிவியல்களுக்கு வேர் போன்றது சமூகவியலாகும். சமூகவியலின் தந்தை அகஸ்தே காம்தே ஆவார். சமூகவியல் சமுதாயத்தை பற்றி படிப்பதாகும். அரசியல் அறிவியலும் சமூகவியலும் ஒன்றோடொன்று தொடர்புடையன. அரசியல் அறிவியல் வல்லுநர்கள் மற்றும் சமூகவியல் வல்லுநர்கள் ஒத்துழைத்து சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபடுகிறார்கள்.

உதாரணமாக, திருமணம் மற்றும் அதன் பிறகு எழும் பிரச்சினைகளான திருமண முறிவு இது போன்ற சமூகவியல் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்து வைத்து மனித வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது போன்றவை அரசியல் அறிவியலில் அடங்கும். அரசியல் சமூகவியல் (Political Sociology) தற்போது அரசியல் அறிவியல் பாடத்தின் உட்பிரிவாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top