பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகளின் தோற்றம் மற்றும் வகைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் தோற்றம்

நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்து மக்கள் சமூக, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் போன்ற பொதுவான நோக்கங்களுக்காக கூட்டாகச் சேர்ந்து பெரிய அமைப்புகளை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். கட்சி என்பது கூட்டு வாழ்க்கைக்கான அமைப்பேயாகும். நிறுவப்பட்ட சமுதாயம் மட்டுமே கட்சி எனப்படும். அரசியல் கட்சி என்பது 200 ஆண்டுகட்குட்பட்ட ஒரு நவீன நிகழ்வாகும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளை உருவாக்கியவர்களுக்கு கட்சி அமைப்பு முறையில் நம்பிக்கையில்லை. இதனுடைய தாக்கம் மிகவும் மோசமானதாகயிருக்குமென அவர்கள் எண்ணினார்கள். 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தான் முதன் முதலாக கட்சியும், கட்சி அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்புதான் மற்ற நாடுகளில் இவை முழுவீச்சில் ஏற்படுத்தப்பட்டன. அரசியல் கட்சிகள் குடியாட்சி முறை பின்பற்றப்படும் நாட்டிற்கு மிகவும் அவசியமானவை. தற்போதைய உலகில் குடியாட்சிகள் பிரதிநிதித்துவ தன்மையை கொண்டிருக்கின்றன. இத்தகைய குடியாட்சி அமைப்புகளில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு அரசியலில் ஆர்வத்தை ஊட்டி பங்கேற்க கற்றுத்தருகின்றன.

கட்சி அமைப்புமுறை விளக்கம்

அரசியல் வாழ்க்கையில் தங்களுக்குள் சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்படுத்திக் கொண்டு, நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே கட்சி என்பதாகும்.

 1. எட்மண்ட் பர்க் என்பவர் "தங்களது கூட்டு முயற்சியால் குறிப்பிட்ட சில கொள்கைகளின் மீது தேசிய ஆர்வத்தை உருவாக்கி ஒத்தகருத்தை ஏற்படுத்தும் மக்கள் கூட்டமைப்பிற்கே அரசியல் கட்சி" என குறிப்பிட்டுள்ளார்.
 2. ஸ்டீஃபன் லீகாக் குடிமக்கள் ஒன்று திரண்டு அரசியல் பிரிவுகளை ஏற்படுத்தி ஒன்றாகச் செயல்படும் கூட்டமே அரசியல் கட்சி எனப்படுகிறது.
 3. கில் கிரைஸ்ட் ஒத்த அரசியல் கருத்துக்களை செயல்படுத்தும் ஒரு மக்கள் கூட்டமைப்பு அரசியல் கட்சி எனப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் தேவை

ஒரு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்கு அரசியல் கட்சி என்பது மிகவும் அவசியம். மக்கள் மற்றும் அரசாங்கம், வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தும் பாலமாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. ஒரு அரசியல் முறையில் நாட்டின் சமுதாயத் தேவை மற்றும் குறிக்கோளை அடையும் வழிகாட்டியாகவும், எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கருவியாகவும் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இவை, சில சிறந்த கருத்துக்கள் மற்றும் அரசியல் கொள்கைகளை வழங்கி அரசியல் மதிப்பீட்டினை உயர்த்துகின்றன. மேலும் மக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுத்து சமுதாய பிரச்சினைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்று திரட்டி அரசியல் மற்றும் தேர்தலில் பங்கேற்கச் செய்வதும், நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடச் செய்வதே கட்சிகளின் பணியாகும்.

கட்சிகள் தலைமையை உருவாக்கும் நோக்கத்துடன் மக்களில் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பயிற்சியளித்து உள்ளாட்சியிலிருந்து சட்டமன்றம், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் பங்கேற்கும் அளவிற்கு அவர்களைத் தயார் செய்யும் நோக்கத்தையும் அரசியல் கட்சிகள் செய்கின்றன. அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும். இவை கல்லாமை மற்றும் தீண்டாமை போன்ற சமுதாயக் கொடுமைகளை வேறோடு அழிக்கப் பாடுபடுவதுடன், பஞ்சம், வெள்ளம் போன்றவை மக்களைத் தாக்கும் பொழுது அவற்றிலிருந்து மக்களை கைதூக்கி விட்டு காப்பாற்றுவதற்காகப் பாடுபடுகின்றன. இவை அரசியலுக்காக மக்களை ஒன்று திரட்டி, ஆள்சேர்க்கும் பணியிலீடுபடுகின்றன. மேலும் இவை மக்கள்நலனுக்காக சமுதாய நல விழாக்களை நடத்துகின்றன.

கட்சிகளின் வகைகள்

கட்சிகளை அவைகளின் நோக்கம், கொள்கை மற்றும் தங்களின் லட்சியங்களையடையக் கடைபிடிக்கும் வழிமுறைகளைக் கணக்கில் கொண்டு நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவைகள் 1 பழமைவாதிகள், 2. மிதவாதிகள், 3. பிற்போக்குவாதிகள், 4. தீவிரவாதிகள் போன்றவையாகும். இவை தவிர, இடது சாரிகள் மற்றும் வலது சாரிகள் உள்ளனர். அடிப்படை மாற்றங்களையும் சீர்திருத்த சட்டங்களையும் அறிமுகப்படுத்த விரும்பும் கட்சிகள் இடதுசாரிகள் என அழைக்கப்படுகின்றன.

மெதுவாக, நிதானமாக, மென்மையாக மாற்றங்களை வரவேற்பவர்கள் வலதுசாரிகள் எனவும் அழைக்கப்படுகின்றனர். சில சமயங்களில் ஒரே கட்சிக்குள் இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகள் உள்ளனர். உதாரணத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (இடதுசாரி) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி என இரு பிரிவு உள்ளனர் (வலதுசாரி).

பிறகட்சிகள் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

 1. அரசியல் கட்சிகளில், ஒரு கட்சி, இரண்டு கட்சி மற்றும் பலகட்சிகள் முறை ஆதிக்கம் செலுத்துகின்றன.
 2. கட்சிகளின் அமைப்பில் உள்ள முக்கிய குணாதிசயங்கள் யாவையெனில், சில கட்சிகள், தலைவனையும் சில கட்சிகள் கொள்கைகளையும், சில அமைப்புகள் ஆர்வத்தையும் முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வருகின்றன.
 3. கட்சிகள் தேசத்தின் எந்தெந்தப்பகுதியில் ஏற்படுகின்றனவோ அப்பகுதியின் செல்வாக்கைப் பயன்படுத்தி நாட்டிற்குள் ஊடுருவிப் பரவுகின்றன. இவை தேசியகட்சிகள், மண்டலக் கட்சிகள் மற்றும் உள்ளூர் கட்சிகள் என செயல்படுகின்றன.
 4. மெளரிஸ்துவேகர் என்பவர் தெரிவித்துள்ள நான்கு முனைகட்சி அமைப்பு. அவை கட்சியின் உட்குழு (Caucus) அணு (Cell) மற்றும் இராணுவம் (Mitia) என்பவையாகும்.

மக்கள் கட்சி (Mass party)

மக்கள் கட்சி என்பது கிளை வகையைச் சேர்ந்தது. இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். இது மத்திய தலைமைக்கு உட்பட்டதாகும். இது நிரந்தரமான கட்சி. இது ஆண்டு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இதன் கிளைகள் நாடு முழுவதையும் உள்ளடக்கி வெவ்வேறு பகுதி மக்களையும் சேர்த்திருப்பது இதன் பலமாகும். மேற்படி கிளைகள் கட்சியின் ஆண்டு மாநாட்டிற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றன. கட்சி மாநாடு, கொள்கையை உருவாக்கும் அமைப்பாக உள்ளது.

ஒற்றைக்கடசி

ஒற்றைக்கட்சி அமைப்பில் ஒரே ஒரு கட்சிதான் இருக்கும். இந்த நாட்டின் சட்டம் மாற்று கட்சிகளை அனுமதிக்காது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியே ஒற்றைக்கட்சி அமைப்பு உருவாவதற்கு அடிகோலியது. இதற்கு உதாரணம் கம்யூனிஸ்ட் சீனா.

நன்மைகள்

 1. வீண் விவாதங்களில் நேரத்தை வீணாக்காமல் அரசாங்கம் திறமையாக செயல்படும்.
 2. உயர்ந்த தேசீய ஒழுங்குமுறையிருக்கும்.
 3. அரசியல் எதிர்க்கட்சியினர் இருக்கமாட்டார்கள்.
 4. அனைத்து துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் வாய்ப்புண்டு.

தீமைகள்

 1. கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் வேறுபாடு இருக்காது.
 2. இதில் சட்டமன்றம் கொள்கை உருவாக்கும் அமைப்பாக இருக்கும். அங்கு மனம் திறந்த விவாதங்களுக்கோ, செயலாற்றும் தன்மைக்கோ இடமிராது.
 3. இத்தகைய கட்சி ஆட்சி சர்வாதிகார ஆட்சிக்கும் ஏதேச்சதிகாரத்துக்கும் வழிவகுக்கும்.
 4. மக்கள் இரக்கமற்ற முறையில் ஒடுக்கப்படுவார்கள்.
 5. தனிமனித ஆளுமைக்கு இங்கு மதிப்பிராது.
 6. மக்களால் எந்த உரிமையையும் அனுபவிக்க முடியாது.

இருகட்சி முறை

  இரு கட்சிகள் இருக்கும். அதில் ஒன்று ஆளும் கட்சி. மற்றொன்று எதிர்கட்சி. இதற்கு உதாரணம்,

 • இங்கிலாந்து - இங்கு பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர்கட்சி ஆகிய இருகட்சிகள் உள்ளன.
 • ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) - ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி என்பன.

நன்மைகள்:

 1. பாராளுமன்ற அரசாங்க முறையில் நிலையான ஆட்சியை கொடுக்கும்.
 2. இரு கட்சி அமைப்பில் தான் உண்மையான இரு கட்சிமுறையை ஏற்படுத்த முடியும்.
 3. கட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் கருத்தை உருவாக்குவது எளிதாகும்.
 4. வாக்காளர்கள் இக்கட்சிகளின் கொள்கைகளையும், திட்டங்களையும் நன்கு அறிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தமான கட்சியை தேர்ந்தெடுக்கலாம்.
 5. எதிர்கட்சி சிறப்பாகப் பங்காற்ற முடியும். அரசாங்கத்திடம் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்ட முடியும்.

தீமைகள்:

 1. அமைச்சரவை எதேச்சதிகாரத் தன்மையை அதிகரித்து சட்டசபையின் கெளரவத்தைக் குறைக்கும்.
 2. ஆளும் கட்சி கொடுங்கோன்மை ஆட்சி புரியும் நிலை ஏற்படும்.
 3. சிறுபான்மையினரின் வெவ்வேறு வகையான ஆர்வங்கள் மற்றும் கருத்துக்கள் மறுக்கப்படும்.
 4. கட்சி மற்றும் கட்சித் தலைவன் மீது ஒரு கண்மூடித்தனமான விசுவாசம் ஏற்படும்.

பலகட்சி அமைப்பு

சமுதாய அமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் தேசிய அளவில் ஏற்பட்ட வேறுபாடுகளும் பலகட்சி முறை அமைப்பு உருவாவதற்குக் காரணம். இதில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கும். இதற்கு இந்தியா மற்றும் பிரான்சு நாடுகள் உதாரணமாகும்.

நன்மைகள்:

 1. மந்திரி சபை எதேச்சதிகாரம் இருக்காது.
 2. தனிமனித சுதந்திரம் அதிக அளவில் இருக்கும். பலவிதமான கருத்துக்கள் இக்கட்சிகளால் பிரதிபலிக்கப்படும்
 3. இம்முறையினால் வெவ்வேறு வகையான நலன்கள் பாதுகாக்கப்பட்டு அவைகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
 4. இம்முறையில் வாக்காளர்களுக்கு தங்கள் விருப்பப்படி முடிவெடுக்க அதிக அளவு வாய்ப்பு கிடைக்கும்.

தீமைகள்:

 1. நிலையான அரசாங்கம் இருக்காது. அரசியல் கட்சிகளில் பலபிரிவுகள் உண்டாவதால் நாட்டில் குழப்பம் ஏற்படும்.
 2. கட்சிகள் மக்களை எதிரி கூட்டங்களாகப் பிரிக்கும்.
 3. எந்த மந்திரி சபையாலும் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் செய்ய இயலாது.
 4. கூட்டணி மந்திரிகள் குறுகிய காலத்திற்கே பதவியில் இருப்பார்கள்.
 5. பணம் கொடுத்து ஓட்டுவாங்கும் முறை ஏற்பட்டு அரசியல் புனிதத்தைக் கெடுக்கும்.

தன்னார்வ அமைப்புகள்

அனைத்து சுதந்திர நாட்டிலும் மக்களின் பலவகையான ஆர்வங்களை வெளிப்படுத்தும் முகமாக பல தன்னார்வ அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவை தங்களுக்குள்ளும் அரசாங்கத்திற்கிடையிலும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகின்றன. இத்தன்னார்வ அமைப்புகள் மக்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தி அரசியல் கட்சிகளுக்கு பக்கபலமாக இருப்பதுடன் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுகின்றன. இவை அரசியலில் பெரும்பங்கு வகிக்கின்றன. கட்சிகள் அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெற்ற சாதனமாகவும், வெளிப்படையாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை.

ஆனால் தன்னார்வ அமைப்புகள் அசாதாரனமானவையாக இருக்கும். இவை ரகசியமாக செயல்படும். எதையும் ரகசியமாக திட்டம் தீட்டி செயல்படுத்துபவை. சிலசமயங்களில் இத்தன்னார்வ அமைப்புகள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாதவையாகவும் இருக்கும். பேராசிரியர் ஃபைனர் என்பவர் இதனை “பெயரிடப்படாத பேரரசு' எனவும் மற்றவர்கள் இதனை “கண்ணுக்குப் புலப்படாத அரசாங்கம்” எனவும் “அங்கீகாரமற்ற அரசாங்கம்’ எனவும் குறிப்பிடுகின்றனர்.

தன்னார்வ குழுக்களைச் சேர்ந்தவர்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக கூட்டம் சேர்ந்து அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். உதாரணமாக விவசாயிகள், தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள், வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் போன்றோரும் மருத்துவ நிபுணர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோரும் பொது நோக்கங்களுக்காகப் போராடவும், தமக்குள் ஒத்தகருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் தங்களுக்குள் அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் பொதுமக்களிடம் சாதக கருத்தை உருவாக்குவார்கள். தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாக வாதிடுவார்கள்.

தன்னார்வ அமைப்புகள் மூன்று வகைப்படும்.

சங்க அமைப்புகள்

உதாரணம் - வர்த்தக அமைப்புகள், வியாபார அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், சிறுகடை வியாபாரிகள் அமைப்புகள், மற்றும் வக்கீல் சங்கங்கள்.

நிறுவன அமைப்புகள்

உதாரணம் :

சேவை அமைப்புகளான இராணுவம், காவல் துறை, குடிமுறை அரசுப்பணி அதிகாரிகள், கல்வித்துறை ஊழியர்கள், அறிவியல் கூடம் மற்றும் பொது நிறுவனத்துறை பிரிவுகள்.

குறிப்பிட்ட முக்கிய காரணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்

தற்காலிக தேவைகளைப்பூர்த்தி செய்வதற்காக ஏற்படுத்தப்படும் தன்னார்வ அமைப்புகள் அந்தத் தேவைகள் நிறைவேற்றப்பட்டவுடன் கலைக்கப்படும். உதாரணம், விஷால் ஹரியாணை இயக்கம், தமிழ்நாட்டிற்கும், ஆந்திராவிற்கும் இடையேயுள்ள தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்கவும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவுக்கு இடையேயான எல்லை பிரச்சினை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள்.

தன்னார்வ அமைப்புகளின் பணிகள்

இவற்றின் பணியாற்றும் நடைமுறை, அரசியல் அமைப்பு முறைகளுக்கேற்ப வேறுபட்டு கீழ்க்கண்ட 5 காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

 1. அரசியல் நிறுவன அமைப்புகளின் தன்மை அல்லது வகை.
 2. கட்சி அமைப்பு முறையின் இயல்பு
 3. தலைவர்கள் மற்றும் மக்களின் நடவடிக்கை மற்றும் அரசியல் பண்பாடு.
 4. தன்னார்வ அமைப்பின் வகை மற்றும் பிரச்சினைகள்.
 5. சம்பந்தப்பட்ட தன்னார்வ அமைப்புகளின் தன்மை மற்றும் வகை.

வெவ்வேறு வகையான கட்சி அமைப்புகள் வெவ்வேறு விதமான தன்னார்வ அமைப்பு செயல்பாடுகளை ஏற்படுத்துகின்றன. எந்நாட்டில் கட்சி அமைப்பு பலவீனமாக உள்ளதோ அந்த நாடுகளில் தன்னார்வ அமைப்புகள் தாங்களாக செயல்படுகின்றன. சில நாடுகளில் இந்த அமைப்புகள் அரசியல் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளன. தன்னார்வ அமைப்புகளின் பணி நாட்டின் பொருளாதார பண்பாட்டு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தன்னார்வ அமைப்பும் அதன் இயல்பு மற்றும் குணாதிசயங்களுக்கேற்ப தங்களது அணுகுமுறை மற்றும் பிரச்சினைகளைக் கையாளும் திறமை ஆகியவற்றை ஏற்படுத்திக் கொள்கிறது. தன்னார்வ அமைப்புகளால் சட்டப் பூர்வமான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களுக்காகப் பணம் பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் நடவடிக்கைகளில் மக்கள் தொடர்பை அதிகப்படுத்துவதும், பிரச்சினைகளைப் பிரபலப்படுத்துவதற்கு மீடியாக்களை பயன்படுத்துவதும் மிகவும் அவசியமானதாகும். பலவீனமான மனம் கொண்ட அதிகாரிகள், மந்திரிகள் அரசியல் கட்சிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுப்பது தெரிந்த விஷயமாகும்.

தன்னார்வ அமைப்புகள் மக்களின் நலனுக்காக அதாவது அமைதிக்காகவும், ஆயுதக்குறைப்பு, சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு, பிரிவினைவாத எதிர்ப்பு, ஜாதி சமத்துவம், மனித உரிமை மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்றவற்றை காப்பதற்காக இவர்கள் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைபிடிக்கின்றனர். இவர்கள் இரக்கம், கருணை, நல்ல உணர்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி அனைத்து கட்சிகளிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தி பொது மக்களிடம் நல்ல கருத்தை உருவாக்குவதற்காகப் பாடுபடுகின்றனர். சுருங்கக் கூறின் அரசியல் கட்சிகளைப் போல் அல்லாமல் தன்னார்வ அமைப்புகள் அதிகாரத்தைக் காப்பாற்றுவதற்காகப் பாடுபடுவதில்லை. அவர்களின் நோக்கம் அளவானதாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கும். குடியாட்சி நன்கு செயல்படுவதற்குத் தேவையான தொடர்புகளை இவர்கள் ஏற்படுத்தித் தருகின்றார்கள்.

பொதுமக்கள் கருத்து

நவீன ஜனநாயக ஆட்சியில் மக்கள் கருத்து மிகவும் முக்கியமான பங்காற்றுகிறது. ஜனநாயகம் என்பது மக்களுக்காகவும், மக்கள் கருத்தினடிப்படையிலும், ஒப்புதலின் பேரிலும் ஏற்படுத்துவது என விவாதிக்கப்படுகிறது.

சர்வாதிகார ஆட்சியில் கூட மக்கள் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மக்கள் கருத்து என்பது, ஒரு பிரச்சினையின் மீது ஒரு குழு உறுப்பினர்கள் எண்ணங்களின் வெளிப்பாடேயாகும். இந்தக் கருத்து தேர்தலின் போதும், முறையான சட்டம் இயற்றும் போது கொள்கை முடிவெடுக்கும் போதும் வெளிப்படும்.

பொதுமக்கள் கருத்தின் முக்கியத்துவம்

பொதுமக்கள் கருத்து என்பது நவீன காலத்தில் ஒதுக்க முடியாத ஒரு மிகப் பெரிய சமூக மற்றும் பொருளாதார சத்தியாகும். அனைத்துக் கட்சிகளும் மக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக செலவழிக்கப்படும் பணம் அவர்களுக்கும் நாட்டிற்கும் நன்மை தருவனவாகவேயிருக்கும் என்று கருதப்படுகிறது. ஒரு அரசாங்கத்தின் வெற்றி மக்களின் நன்மதிப்பைப் பொறுத்தே அமைகிறது. மக்களின் விழிப்புணர்ச்சியே வெற்றிகரமான குடியரசை ஏற்படுத்தும். மக்கள் கருத்து ஆளுபவர்களின் அதிகாரத்தை அதிக அளவில் கட்டுப்படுத்துகிறது. மக்கள் கருத்துக்கு எதிராக எடுக்கப்படும் தீர்மானங்கள் அந்த கட்சிக்கும், அரசாங்கத்துக்கும் கேடு விளைவிப்பதாக இருக்கும்.

மக்கள் கருத்துக்கு தேவையான சூழ்நிலைகள்

 1. மக்களின் சிந்தனைத்திறன்
 2. தேசியப் பிரச்சினைகளில் மக்களுக்குள்ள ஆர்வம்.
 3. குழுக்கள் அமைத்தல்.
 4. அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல்.
 5. எழுத்தாளர்களின் பங்கு.
 6. சமூக ஆர்வம் மற்றும் ஒற்றுமையாக இருத்தல்.

பொதுமக்கள் கருத்து - பகுத்தாராய்தல்

மேற்கத்திய நாடுகளுக்கும், பின்தங்கிய நாடுகளுக்குமிடையே பொதுமக்கள் கருத்தில் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. மேற்கத்திய மக்கள் மிகவும் படித்தவர்கள். எனவே அவர்களிடம் ஒரு உறுதியான கருத்தை மிகச் சுலபமாக விதைக்க முடியும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளில் இது முடியாது. இந்தியாவில் அதிக அளவு மக்கள் கிராமங்களில் தான் வசிக்கிறார்கள். இவர்கள் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டதால் தங்களுக்கென்று ஒரு கருத்தை அவர்களால் ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை.

பொதுவாக மக்கள் கருத்து என்பது இந்தியாவில் பெரும் நகரங்களில் தான் தோன்றும். எனவே, அரசியல் கட்சிகள் தங்கள் கவனத்தை நகரங்களின் மீது செலுத்தி கிராமங்களைப் புறக்கணித்து விடுகின்றன. தேர்தல் நேரங்களில் மட்டும் இவர்கள் கிராமங்களுக்குச் சென்று தங்கள் கருத்துக்களை மக்கள் மீது திணிப்பர். இதனை மக்களும் கண் மூடித்தனமாக ஏற்று செயல்படுவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் அவர்களின் நல்ல குணங்களை வைத்துத் தீர்மானிக்கப்படாமல், ஜாதி, மதம் போன்ற பிற விஷயங்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மக்கள் கருத்து ஒரு அரசாங்கத்தின் மீது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெறுகிறது.

மக்கள் தொடர்பு சாதனங்களின் பங்கு

சினிமா என்பது மக்களுக்குப் படிப்பினையும், பொழுது போக்கினையும் கொடுக்கும் ஒரு பாரம்பரியமிக்க சாதனமாகும். இது நுட்பமான முறையில் மக்களிடம் பொதுக் கருத்துக்களை உருவாக்கக் காரணமாக உள்ளது. இது ஒரு மிக சத்தி வாய்ந்த மக்கள் தொடர்பு சாதனமாகும். மின்னணு புரட்சியானது நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஊடுருவிப் பாய்ந்துள்ளது. ரேடியோ, டெலிவிஷன் மற்றும் வி.சி.ஆர் போன்றவை செய்திகள், முக்கிய தகவல்கள், விளம்பரங்கள் மற்றும் பொழுது போக்கு அம்சங்களை பலதரப்பட்ட மக்களுக்கும் கொண்டு செல்லும் மிகப்பெரிய சாதனங்களாகவுள்ளன.

ஒலி-ஒளி அமைப்பானது படிப்பறிவற்றவர்களுக்குக் கூட அதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடைகள், வீடுகள், காய்கறி அங்காடிகள் மற்றும் தெரு முனைகள் ஆகிய இடங்களில் இந்தத் தொலைத் தொடர்பு சாதனங்கள் இருப்பது தொடர்பு அமைப்புகள் மற்றும் சமுதாய வாழ்க்கை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி பெரிய மாற்றங்களை உண்டாக்குகின்றன. பொதுத்கருத்தை உருவாக்குவதிலும், தகவல்களின் அளவை அதிகரிப்பதிலும், விழிப்புணர்ச்சியை விரிவாக்குவதிலும், புதிய அணுகுமுறைகளையும் கருத்துக்களை உருவாக்குவதிலும் மின்னணு சாதனம் மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவி வருகிறது.

பத்திரிகை சாதனம்

தினசரி பத்திரிகைகள், வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் போன்றவை அச்சு சாதனங்களாகும். இவை பொதுக்கருத்தை உருவாக்கி அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் சக்தி வாய்ந்த தனி ஏஜென்ஸிகளாகச் செயல்படுகின்றன. பேசுமளவில் வார்த்தைகளை விட எழுதப்படும் எழுத்துக்கள் மக்களிடம் புனிதத்தன்மை வாய்ந்ததாகவும், சட்டப்பூர்வமானதாகவும் கருதப்படுகின்றன.

செய்தித் தாள்கள் தினமும் விஷயங்களை பல இடங்களுக்குப் பரவச் செய்வதுடன் ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துக்கள் போன்றவை பொதுக் கருத்தை உருவாக்குவதற்கு தினமும் நல்ல தீனியாக விளங்குகிறது

தேர்தல் நடத்துவதற்கான அமைப்பு

சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடத்தும் முறைமைக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை எனப்படுபவர்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்தனர். எங்கு நேர்மையான சுதந்திரமான தேர்தல் நடக்கிறதோ அதுதான் ஒரு சிறந்த ஜனநாயக அமைப்பின் இருப்பிடமாகும் என அவர்கள் கருதினார்கள்.

எனவே, அதன்படி மேற்பார்வையிடுவதற்கும், வழிபடுத்துவதற்கும், மற்றும் கட்டுக் கோப்புடன் தேர்தல் நடத்துவதற்காகவும் தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்தந்த நேரத்திற்குத் தகுந்தமாதிரி வாக்காளர் பட்டியல்களில் திருத்தம் செய்வதும், பட்டியல்கள் தயார் செய்வதும் இந்த ஆணையத்தின் பணியாகும். இவ்வாணையம் பாராளுமன்றம், சட்டமன்றம், குடியரசுத்தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கும் தேர்தல் நடத்துகிறது.

தேர்தல் ஆணையம்

இவ்வாணையம் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதரசில தேர்தல் ஆணையர்கள் அடங்கியதாகும். இவ்வாணையத்தின் உறுப்பினர்களை தேவையான போது குடியரசுத் தலைவர் நியமிக்கிரார். இவர்கள் குடியரசுத்தலைவரால் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். இவர்களது பணியும், பணிக்காலமும் பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுகிறது. இவர்கள் பணியிலிருக்கும் போது பணி விதிகளை மாற்ற இயலாது. உச்ச நீதிமன்ற நீதிபதியைப் பதிவியிலிருந்து எடுக்க எந்த விதியைக் கடைபிடிக்கப்படுகிறதோ, அதே விதியின்படிதான் தலைமை தேர்தல் ஆணையரையும் நீக்க முடியும். எனவே, நினைத்தவுடன் இவரை பதவியிலிருந்து நீக்க முடியாது. இவரை இவை வரம்புமீறும் ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் ஆணையத்தின் கிளைகளிருக்கும். இதற்கு அந்தந்த மாநிலங்களை கலந்தாலோசித்து ஒரு முதன்மைத் தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையர் நியமிப்பார். அவர்கள் மாநிலங்களில் தேர்தல் நடத்த நிலையான தேர்தல் அதிகாரிகளாகவும் அமைப்பாகவும் செயல்படுவார்கள். தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனால் தேர்தல் காலங்களில் தேவையான அதிகாரிகளும், பணியாளர்களும் பணியில் அமர்த்தப்படுவர். (உ.ம்) அரசுத்துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களும் பணிகளும்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரந்த அதிகாரமும் பணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகள்:

 1. தேர்தல் சமயங்களில் வாக்காளர் பட்டியல் தயார் செய்தல், திருத்தம் செய்தல், அப்போதைக்கப்போது சரிசெய்தல் போன்றவை.
 2. தேர்தல் மற்றும் உபதேர்தல் நடத்துதல் மற்றும் கண்காணித்தல்.
 3. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு வாக்காளர் தொகுதியை பிரித்துத்தருவதும், அவர்களுக்கு தொகுதியை ஒதுக்கித் தருவதும்.
 4. தேர்தல் திட்டம் வகுத்துக் கொடுத்தல், வேட்புமனுதாக்கல் செய்வதற்கும், அவற்றை ஆய்வு செய்து தேர்தல் நடத்துவதற்கும், தேதிகுறித்துக் கொடுப்பது, தேர்தலுக்கான ஆயத்தம் செய்வது தேர்தல் முடிவை அறிவிக்கும் தேதி போன்றவற்றைத் தீர்மானிப்பது.
 5. குடியரசுத்தலைவர் மற்றும் ஆளுனருக்கு (அந்தந்த மாநிலங்களிலுள்ள) தேர்தல் நிலவரம், வேட்பாளர்களின் தகுதியின்மை போன்றவற்றைத் தெரிவிப்பதும்.
 6. தேர்தல் நடைபெறும் நேரங்களில் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்பதற்கான நடத்தை விதிகள் தயார் செய்து அறிவித்து அவற்றை நடைமுறைப் படுத்த வற்புறுத்துவது.
 7. தேர்தல் செலவுகளுக்கு வரம்பு ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் செலவு பற்றிய அறிக்கை கொடுக்கும் பொழுது அவைகளை சரிபார்த்தல்.
 8. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கித்தருதல் அவர்கள் வானொலி மற்றும் தொலைக்காட்சியைப் பயன்படுத்த வேண்டிய நேரத்தைக் குறித்துக் கொடுப்பது.
 9. சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குவது.
 10. நாட்டின் குடியரசு தலைவர் மற்றும் ஆளுனர் அனுப்பும் தேர்தல் பிரச்சனைகள் மற்றும் விசாரணை மனுக்களை பெற்று மதிப்பிடுவது, தீர்த்து வைப்பது.

தேசியக் கட்சி

பூகோளப் பிரிவு மற்றும் பரப்பு அடிப்படையில் நான்கு வகையான கட்சிகள் உள்ளன.

 1. தேசிய கட்சிகள்
 2. மாநிலக்கட்சிகள்.
 3. ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் தொடர்புடைய கட்சிகள் (trans regional parties)
 4. உள்ளூர்கட்சிகள்.

1954-ல் நடந்த லோக்சபாவிற்கான பொதுத் தேர்தலின்போது குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது 4 சதவீதத்திற்குக் குறையாத வாக்குகள் பெற்ற சில கட்சிகளை தேசியக் கட்சிகளாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவை

 1. காங்கிரஸ் கட்சி
 2. பாரதிய ஜனதா கட்சி
 3. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ)
 4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்)

மாநில கட்சி (Regional Party)

இந்தியாவில் மாநிலக்கட்சிகள் அந்தந்த மாநில அடிப்படையிலும், குடியாட்சி முறைப் பண்பாடு சமூக பொருளாதார மற்றும் குடிமக்களிடையே நிலவும் பிரிவுகளுக்கு ஏற்ப தோன்றியிருக்கின்றன. (உ.ம்) இந்தியாவில் அஸ்ஸாம், நாகலாந்து, மிசோரம், பஞ்சாப், ஒரிசா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு. இவை ஒவ்வொன்றும் தனக்கென சில திட்டங்களையும் மாநில தன்னாட்சியை நிறைவேற்றும் எண்ணமும் கொண்டவை. இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில் தான் வேற்றுமையில் ஒற்றுமையை பார்க்க இயலும். முதல்வகை : இந்தியாவில் மூன்று வகையான மாநிலக் கட்சிகள் உள்ளன. இவற்றில் முதலாவது காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் தோற்றுவித்ததாகும். இவைகள் காளான்கள் போல் மறைந்து விட்டன. தற்காலிகப் பிரச்சினைகளுக்காக தோன்றியவை இவை. பேரம் பேசுவதற்கான சக்தியை இவை பெற்றன. (உம்) வங்காள காங்கிரஸ், கேரளா காங்கிரஸ், உட்கல் காங்கிரஸ், தெலுங்கானா பிரஜா கமிட்டி இரண்டாவது வகை : மலைவாழ் ஜாதியினர் கட்சிகள் மலைவாழ்மக்களின் ஒற்றுமை அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து தங்கள் இனத்தவருக்கு அதிக சலுகைகள் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இவைகள் தங்களின் முழு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டன. இந்த இயக்கங்களின் செயல்பாடு ராணுவ இயக்கங்கள் போலிருக்கும். (உ.ம்) நாகா தேசியக் குழு, மிசோரம் தேசிய முன்னணி காரோ தேசியக் குழு, மணிப்பூர் தேசிய மக்கள் கட்சி போன்றவை

மூன்றாவது வகை:

தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் போன்ற பெரிய மாநிலங்களில் ஏற்பட்டவை. இக்கட்சிகள் மிகப் பெரியவை. பலகட்சி முறையைக் கொண்ட இந்தியாவில் கட்சிகள் மிகப் பலம் வாய்ந்தவையாக அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு அதிக அளவில் வாக்காளர்கள் உள்ளதால் தங்கள் கட்சி உறுப்பினர்களை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி பாராளுமன்றத்தில் உள்ள ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் சமநிலையாளர்களாக செயல்படுகின்றனர். இதற்கு (உ.ம்) தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. அசாம் கணபரிஷத், பிஜு ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ்.

ஜாதிக் கட்சி

பொதுவாக மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதி, தொழில், ஜாதி, சமுதாயம், மதம், மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர். சிலசமயங்களில் அவர்களின் உடல் நிறத்தினடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர். அதில் ஜாதி ஒருவகை, இத்தகைய பிரிவு இந்தியாவில் மட்டும்தான் உள்ளது. இந்தியாவில் பலவகையான ஜாதி அமைப்புகள் உள்ளன. இந்து மதத்திலுள்ள சாதிப் பிரிவினை வாதம் தான் இதற்குக் காரணம்.

பொதுவாக பெரிய கட்சிகள் ஜாதியைப் பொருட்படுத்துவதில்லை. இருப்பினும் தேர்தல் சமயங்களில் ஜாதியும் முக்கிய பங்குவகிக்கிறது. தங்கள் ஜாதியைச் சார்ந்த தலைவர்களையும், கட்சியையும் தான் மக்கள் ஆதரிக்கின்றனர். தங்கள் ஜாதியைச் சார்ந்த மக்களுக்கு அரசிடமிருந்து அதிக சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவும், பாதுகாப்புக் கொடுப்பதற்குமே இத்தகைய ஜாதிக் கட்சிகள் ஏற்படுத்தப்பபடுகின்றன. தாம் விரும்பும் சலுகைகளைப் பெருவதற்காக இத்தகைய ஜாதிக்கட்சிகள் பெரிய கட்சிகளின் ஆதரவைப் பெறவிழைகின்றன.

வகுப்புவாதக் கட்சி

இனஉணர்வுகள் மற்றும் இனநம்பிக்கையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை தான் வகுப்புவாதக் கட்சிகள். இவைகளும் சாதிக் கட்சிகளைப் போன்று குறிப்பிட்ட இனமக்களைக் கொண்டவையாகும். இவற்றின் நோக்கம் தன் இனமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அரசிடமிருந்து தம் இனமக்களுக்கு அதிக சலுகைகள் பெறுவதுமாகும். இவர்கள் சுயலாப விரும்பிகளாகவும் இருப்பர். இக்கட்சிகள் பொதுவாக மற்ற கட்சிகளின் எண்ணங்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. எனவே, ஜாதி, மத, நிற உணர்வில்லாத பிறகட்சிகள் இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதில்லை.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.025
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top