பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி இங்கு கொடுக்கப்பாட்டுள்ளது.

அறிமுகம்

இந்திய மக்கள் எண்ணில்லாத் தியாகங்களைச் செய்து, அரும்பாடுபட்டு, 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திரத்தைப் பெற்றனர்.

"எங்கு பயமில்லாத மனங்கள் உள்ளதோ

எங்கு ஒவ்வொரு மனிதனின் தலையும்

நிமிர்த்தப்படுகின்றதோ / அங்கு மனிதனின்

தேவைகளை நிறைவு செய்யும்

வளமான சமுதாயம் அமையும்”

(கவிஞர். இரவீந்திரநாத் தாகூர்)

அக்கால கட்டத்தில், தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவர் மனதிலும், இந்தியக் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய சமதர்மச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதி மேலோங்கி நின்றது. இச்சூழலில் இந்திய அரசியலமைப்பை உருவாக்குதலும், சுதேச அரசுகளை ஒன்றிணைத்து, இந்திய ஒன்றியத்தைப் படைத்தலும், இன்றியமையாத முதன்மை பணிகளாக இருந்தன. இன்றுவரை நாம் பின்பற்றிவரும் அரசியலமைப்பின் உருவாக்கத்தையும், அதன் முக்கிய அம்சங்களையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

அரசியலமைப்பு

அரசியலமைப்பு என்பது அரசின் அங்கமாகிய சட்டங்களை இயற்றும் சட்டத்துறை, செயல்படுத்தும் செயல்துறை, சட்டங்களை நிலைநாட்டும் நீதித்துறை ஆகியவற்றின் அமைப்பு, குடிமக்களின் உரிமைகள், கடமைகள்; குடிமக்கள், அரசு - அரசின் அங்கங்கள் ஆகியவற்றிற்கு இடையே நிலவும் தொடர்புகள்; அவற்றை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள் ஆகியவற்றின் தொகுப்பே ஆகும். அரசியலமைப்புச் சட்டங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றியமையாதது ஆகும். இவை அனைத்துச் சட்டங்களையும்விட மேலாண்மை பொருந்திய முதன்மைச் சட்டங்களாகும்.

சுதந்திரத்திற்கு முன் அரசியலமைப்பு உருவான முறை

பூரண சுயராச்சியம், மக்களாட்சி முறை, வயதுவந்தோர் வாக்குரிமை, அடிப்படை உரிமைகள், கடமைகள் ஆகியவை தேசியக் காங்கிரசு தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. சுயராச்சிய கட்சியினரும், தேசியக் காங்கிரசும் 1934 ஆம் ஆண்டு முதல் இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய பேரவையையும், இந்திய அரசியலமைப்பு ஒன்றையும் அமைத்து, இந்திய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆங்கில அரசினை வலியுறுத்தி வந்தனர்.

கிரிப்ஸ் தூதுக்குழு (1942) (சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், பொதிக் லாரன்ஸ் மற்றும் A.V. அலெக்ஸாண்டர்) காபினட் தூதுக்குழு, இந்திய அரசியலமைப்பின் அவசியத்தை ஏற்றுச் செயல்பட்டன. இவற்றின் விளைவாக, இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டது. அச்சபை, தனது பணியினை 1946 டிசம்பர் 9 ஆம் நாள் தொடங்கியது. டாக்டர் சச்சிதானந்தா சின்கா தலைமையேற்று நடத்தினார். டிசம்பர் 11ஆம் நாள் டாக்டர் இராசேந்திரபிரசாத், அரசியலமைப்புப் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின் அரசியலமைப்பு நிர்ணயசபை இறையாண்மை கொண்ட அமைப்பாகியது. இச்சபையின் ஒரு முக்கிய உறுப்பினராக ஜவஹர்லால் நேரு செயல்பட்டார்.

ஜவஹர்லால் நேருவின் "நோக்கத்தீர்மானம்" (OBJECTIVE RESOLUTION)

இந்திய அரசியலமைப்புப் பேரவையின் முதல் கூட்டத்தொடரில், 1946 டிசம்பர் 13 ஆம் நாள், நோக்கத் தீர்மானத்தை, ஜவஹர்லால் நேரு முன் மொழிந்தார். இத்தீர்மானம் சில மாறுதல்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைக்கப்பட்டது.

1949 அக்டோபர் 17 ஆம் நாள் சிறப்பு வாக்கெடுப்பின் வழியாக அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமாகியது.

அரசியலமைப்புச் சூழல் ஆராய பல்வேறு குழுக்கள் அமைத்தல்

அரசின் அமைப்பு, ஒன்றிய அரசு, மாநில அரசு இவற்றின் இடையே நிலவக்கூடிய உறவு, அதிகாரப் பங்கீடு, அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் நலம், பழங்குடியினர் நலம், நீதிமன்றம் மற்றும் அரசின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களே இப்பல்வேறு குழுக்களிலும் இடம் பெற்றிருந்தனர்.

சுதந்திரத்திற்குப்பின் வரைவுக்குழு

1947 ஆகஸ்ட் 27 ஆம் நாள், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் தலைமையில், அரசியலமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டது. என். கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, என்.மாதவராவ் ஆகியோர் வரைவுக்குழுவின் உறுப்பினர்களாவர்.

அரசியலமைப்பு உருவாக்குவதற்கான ஆதாரங்கள்

இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டின் தீர்மானங்கள், கொள்கைகள், 1935 இந்தியச் சட்டம், உலக நாடுகளின் அரசியலமைப்பின் ஏற்புடைய சிறப்புப் பண்புகள், குழுக்களின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், இந்திய அரசியலமைப்பு அமைக்கப்பட்டது. அரசியலமைப்பு உருவாக்குவதற்கான ஆதாரங்களில் சில கீழ்க்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசியலமைப்பின் ஆதாரங்கள்

1918 - பம்பாய் காங்கிரசு மாநாடு - அடிப்படை உரிமைத் தீர்மானம்

1928 - மோதிலால் நேரு அறிக்கை - அடிப்படை உரிமைகள் - இவற்றில் பத்து உரிமைகள் இன்றைய அடிப்படை உரிமைகளாக உள்ளன.

1931- கராச்சி மாநாடு - அடிப்படைக் கடமைகள் (42 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்)

1935- இந்தியச் சட்டம் - இந்திய அரசியலமைப்பில் 60 சதவிகிதப் பகுதி இச்சட்டத்திலிருந்து பெறப்பட்டுள்ளது

இந்திய அரசியலமைப்புப் பேரவை, நீண்ட விளக்க விவாதத்திற்குப் பின்னர், 1949 நவம்பர் 26 ஆம் நாள், அரசியலமைப்பினை ஏற்றுக்கொண்டு, 1950 ஜனவரி 26 ஆம் நாள், இந்திய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தின. டாக்டர் இராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார். இந்நாளைப் போற்றும் வண்ணம் ஜனவரி 26ஆம் நாளைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகின்றோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் "முகப்புரை" (PREAMBLE)

அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், தலைமுறை தலைமுறையாக வழிகாட்டும் என்று கருதிய தத்துவக் கொள்கைகள், மதிப்புகள், எதிர்காலத் தலைமுறையினரிடம் வளர்க்க வேண்டிய உயர்ந்த பண்புகள், நோக்கங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு முகப்புரையாகப் படைத்துள்ளார்கள்.

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை வாய்ந்த சோஷலிச நெறியைச் சார்ந்த, மதச்சார்பற்ற மக்களாட்சி குடியரசாக நிறுவ உளமார உறுதி கூறுகின்றோம். சமூக, பொருளாதார அரசியல் நீதியையும் சிந்தனையில், சிந்தனை வெளிப்பாட்டில், நம்பிக்கையில் பற்றார்வத்தில், வழிபாட்டில் முழு உரிமையையும், வாழ்க்கை நிலையிலும், வாய்ப்புகளிலும், சமத்துவத்தையும், தனிமனித உயர் தகுதிக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும், உறுதுணையாக இருக்கவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும் - உளமார உறுதிபூண்டு அரசியலமைப்புச் சட்டத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம் என்று முகப்புரை தொடங்குகின்றது. 1976 ஆம் ஆண்டு, 42 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சோஷலிசம், மதச்சார்பற்ற, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்ற கொள்கைச் சொற்கள் சேர்க்கப்பட்டன.

முகப்பு அறிவிக்கும் தத்துவ நோக்கங்கள்

இறையாண்மை, சோஷலிசம், மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு, நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிநபர் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு.

சிறப்பியல்புகள், குறிக்கோள்கள், நோக்கங்கள்

இந்திய மக்களின் இறையாண்மை, மதச்சார்பற்ற சோஷலிச மக்களாட்சி குடியரசு என்ற தத்துவக் கொள்கைச் சொற்கள், இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றன. சமூகப் பொருளாதார நீதிகளையும், எண்ணம், கருத்து, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாட்டு உரிமைகள் போன்றவற்றை உள்ளடக்கிய சுதந்திரத்தினையும், வாய்ப்பு - வாழும் நிலைக்கான சமத்துவத்தையும், தனி நபர் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப் பாட்டிற்கான சகோதரத்துவத்தையும் பேணிக்காத்தலையும், அவற்றை அனைத்துக் குடிமக்களும் பெறும்படி செய்தலையும் அரசின் குறிக்கோள்கள் என்பதை முகப்புரை தெளிவாக்குகிறது.

சமூக நலன், பொருளாதார மேம்பாடு, தனிமனித வாழ்க்கை மேம்பாடுகள் இந்திய அரசியலின் நோக்கமாக முகப்புரை எடுத்துரைக்கின்றது. இந்நோக்கங்களை அடைவதற்கான ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காத்தல் குடிமக்களின் கடமைகள் என முகப்புரை சுட்டிக் காட்டுகிறது. அடிப்படை உரிமைகள், அறநெறிக் கோட்பாடுகள் தனிமனித மதிப்பினைப் பாதுகாத்து மனிதவாழ்க்கைக்கு வழிகோலுகிறது. நாடாளுமன்ற முறை, வயதுற்றோர் வாக்குரிமை தற்சார்ந்த நீதித்துறை, ஒற்றைக்குடிமை, ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையே அதிகாரப் பங்கீடு ஆகிய அனைத்துப் பண்புகளுக்கும் முகவுரை முன்னுரையைப் படைக்கின்றது. முகவுரை இந்திய அரசியலமைப்பின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றது. முகவுரையில் குறிப்பிட்டுள்ள தத்துவங்களின் விளக்கம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

இறைமை: முழு இறைமை பெற்ற மக்களாட்சி குடியரசு இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்பாகும். லிங்கன் வாக்கிற்கு ஏற்ப, மக்களால், மக்களுக்காக, மக்களே உருவாக்கிய குடியரசே இந்தியா ஆகும். பொதுத்தேர்தல் வழியே, வயதுற்றோர் வாக்குரிமையினால், மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். பெரும்பான்மை பெற்ற கட்சிகள் மத்திய - மாநில அரசுகளை அமைக்கின்றன. முழு நிர்வாக அதிகாரம் முழுமையும், பாராளுமன்றத்திற்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் குழுவிடம் உள்ளது. எனவே இப்பாராளுமன்ற முறையில் உயர்ந்த தலையாய “இறைமை” அதிகாரம் மக்களிடமே உள்ளது.

சோஷலிசம் - சமதர்மம்: மக்களிடையே சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் சமவாய்ப்பையும், சம நிலையையும் செயல்படுத்துவது, தகுதி வாய்ப்புகள், வாழ்க்கைத் தரத்தில் ஏற்றத் தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியன சோஷலிச கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட இந்திய அரசின் முக்கியக் கடமையாகும்.

மதச்சார்பின்மை: எந்த மதத்தையும் சாராமல், அனைத்து மக்களுக்கும் முழுச் சுதந்திரம் கொடுத்து, எவ்வித இடையூறுகள் நேரா வண்ணம் மக்களின் மதச் சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் சிறப்பு நோக்குடைய கொள்கைகளே மதச்சார்பின்மையாகும்.

மக்களாட்சி: “டெமோஸ்” (Demos) என்ற சொல் மக்களையும் "கிராட்ஸ்” (Kratos) என்ற சொல் அரசு அல்லது ஆட்சியினையும் குறிக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சட்டமன்றங்கள், சட்டங்கள் இயற்றி நிர்வாகத்துறையின் வழியாக நாட்டை நிர்வகிக்கின்றன. 326 ஆவது விதியின் படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வாக்குரிமையைப் பெறுகின்றனர். இது திரு. இராஜீவ் காந்தி அவர்கள் பிரதமராக இருக்கும்போது கொண்டு வரப்பட்டது.

குடியரசு: இந்தியா ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். ஆட்சித்துறைக்குத் தலைவர் 'குடியரசுத் தலைவர்' ஆவார். பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய தேர்வாளர் குழுவின் மூலம் மக்கள் தொகை விகிதாச்சார முறையில், ஒற்றை மாற்று வாக்குப்படி, குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தியக் குடியரசில் அனைத்துக் குடிமக்களும் சட்டத்திற்கு முன் சமமாகக் கருதப்படுகிறார்கள்.

நீதி - சமூகப் பொருளாதார அரசியல் நீதி: அடிப்படை உரிமைகள், அரசின் அறநெறிக் கோட்பாடுகள் சமூக நீதியை நிலைநாட்டுகின்றன. (பிரிவு 14 - 18 படி) அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சமூக நீதியாகும். (பிரிவு 39 படி) வாழ்க்கைக்குத் தேவையான வருவாய் பெறுதல், பொதுநலனுக்கு உதவுமாறு பங்கிடுதல், சமமான வேலைக்குச் சமமான ஊதியம், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் பொருளாதார நீதியை நிலைநாட்டுகின்றன. வயதுற்றோர் அனைருக்கும் வாக்குரிமை, குற்றத்தண்டனைகள் பற்றிய பாதுகாப்பு முறைகள், அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெறுதல் ஆகியவை அரசியல் நீதியைப் பாதுகாக்கின்றன.

சுதந்திரம்: சுதந்திரத்தைத் தேசிய, தனிநபர், அரசியல், பொருளாதாரச் சுதந்திரங்கள் என வகைப்படுத்தலாம். உயிர்வாழுதல், சுதந்திரமாக இருத்தல், பேச்சுரிமை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் மக்களின் அல்லது தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கின்றன. ஒவ்வொரு உரிமைக்கும் நிகராக ஒரு கடமையும் உண்டு.

சமத்துவம்: மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகிய அடிப்படைகளில் வித்தியாசம் பாராட்டுதலைத் தவிர்த்து அனைவரையும் சமமாக நடத்துதல், சமத்துவத்தின் அடிப்படைப் பண்பாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம், சமமான பாதுகாப்பு, வேலைகளில் சமவாய்ப்பு, பின்தங்கிய சிறுபான்மையின குடிமக்களுக்கு அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் ஆகியன சமத்துவத்தை மேம்படுத்துகின்றன.

சகோதரத்துவம்: இந்தியர் அனைவரும் சகோதரர்கள்; அனைவரும் இந்தியர் என்ற உணர்வைச் சகோதரத்துவம் என்ற கொள்கையை உணர்த்துகிறது. சகோதரத்துவம் என்பது தனிநபர் கண்ணியத்தையும் நாட்டின் ஒற்றுமையையும் உறுதி செய்யும் நோக்கமுடையது. பல்வேறுபட்ட வேற்றுமைகளைக் களைந்து தேசிய ஒருமைப்பாட்டினை நிலைநாட்டக் கூடியது சகோதரத்துவம் ஆகும்.

கண்ணியம்: அடிப்படை உரிமைகள், அறநெறிக் கோட்பாடுகள், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் தனிமனிதனின் கண்ணியத்திற்கு வழி கோலுகிறது. தனிமனிதக் கண்ணியம், தனிமனித வளர்ச்சி சமுதாய முழுமைக்கான வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

ஒற்றுமையும் ஒருமைப்பாடும்: சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு வழி கோலுகின்றன. ஒத்தக் குடிமக்களின் கருத்துக்களை மதித்தல், மதித்து ஏற்றுக் கொள்ளுதல், பெரும்பான்மையினரின் கருத்தை ஏற்றுக் கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல், கூட்டுறவு நல்லிணக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகிய மாண்புகள் மக்களாட்சிக்கு இன்றியமையாத பண்புகளாகும். ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தேசிய வளர்ச்சிக்கு வித்திடும் இன்றியமையாத குடிமைப் பண்புகளாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் உயிர்நாடியாக விளங்கும் தத்துவங்கள், அடிப்படை உரிமைகளாகவும், அறநெறிக் கோட்பாடுகளாகவும் மற்றும் உள்ள சட்ட சிறப்பியல்புகளாகவும் இந்திய அரசியலமைப்பு முழுவதுமாகப் பரவிக் காணப்படுகிறது. இவை அனைத்தும் போற்றுதலுக்குரிய தத்துவ நெறிகளாகும்.

இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் (SALIENT FEATURES)

ஒப்புயர்வற்ற அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு பல்வேறு பரிமாணங்களில் தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. மிக நீண்ட விளக்கமாக எழுதப்பட்ட அரசியலமைப்பாகும். 22 பகுதிகள் 395 சரத்துக்கள் 8 அட்டவணைகள் உள்ளடக்கிய அமைப்பாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசியலமைப்பு தற்பொழுது 445 விதிகளுடன் 12 அட்டவணைகளை 24 பகுதிகள் உள்ளடக்கிய 94 அரசியலமைப்புத் திருத்தங்கள் செய்யப்பட்டு திகழ்கின்றன. எவ்வித முரண்பாடுகளும் எழக்கூடாது என்பதற்காக, அரசின் அனைத்துக் கூறுகளும் தெளிவாகவும் விளக்கமாவும் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றையும் மீறி முரண்பாடுகள் ஏற்பட்டால், அவற்றைத் தீர்க்கும் பொறுப்பு நீதித் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் பாதுகாவலனாக, “நீதித்துறை” செயலாற்றுதல் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அரசியலமைப்பின் சில அமைப்புகளில் மரபுகளும், வழக்காறுகளும் (Customs & Conventions) இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கவையாகும்.

நெகிழா மற்றும் நெகிழும் அமைப்பு

நெகிழா மற்றும் நெகிழும் தன்மை இந்திய அரசியலமைப்பின் சிறப்புத்தன்மையாகும். எடுத்துக்காட்டாக விதி 2, 3, 4 மற்றும் 169 மாநிலங்களின் இணைப்பு, அமைப்பு மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான விதிகளை, மைய அரசு சட்டசபைகளின் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் மாற்றலாம். 368 ஆவது சரத்தினைச் சார்ந்த சட்டங்கள் நிறைவேற்ற இருசட்டசபைக்கு 2/3 உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு பெரும்பான்மை அடிப்படையில்தான் மாற்ற இயலும். எனவே நெகிழும் மற்றும் நெகிழா தன்மை இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகளாகும். 57 ஆண்டுகளில் 94 அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டவை நெகிழும் தன்மையை வெளிப்படுத்துகிறது.

வலிமையான மைய அரசினைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியம்

இந்திய அரசியலமைப்பின்படி கூட்டாட்சி அரசாங்க முறைக்கு வழி வகுக்கப்பட்டுள்ளது. மைய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் பகுக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி முறையின் அடிப்படை அரசியலமைப்பு அம்சங்களாக எழுதப்பட்ட தனி அரசியலமைப்புத் திருத்த முறை, சுதந்திரமான நீதித்துறை, மாநிலங்களின் ஒப்புதல் இன்றி, மாநில அரசைப் பாதிக்கக்கூடிய மைய - மாநில உறவு தொடர்பான அதிகாரத்தை மாற்ற இயலாமை முதலியன அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ளன.

ஒற்றையாட்சி அரசுக்கான பல்வேறு தன்மைகளும் மேலாண்மை செய்கின்றன.

1. எஞ்சிய அதிகாரங்கள் மைய அரசிடம் உள்ளன. அதிகாரப் பங்கீடும் மைய அரசுக்கே அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

2. ஒற்றைக் குடி உரிமை

3. 356 & 357 சரத்துக்களின்படி மாநிலங்களில் அரசியலமைப்பு நிறுவனங்கள், நிறுவனங்கள் செயல்பட முடியாத சூழ்நிலையில் நெருக்கடி நிலையைப் (State of Emergency) பிரகடனப்படுத்தும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளமை ஆகிய தன்மைகள் ஒற்றையாட்சி முறையின் சிறப்பினை வெளிப்படுத்துகின்றன.

வலிமையான மைய அரசினைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இந்திய அரசியலமைப்பு திகழ்கின்றது. மதம், மொழி, இனம், பண்பாடு ஆகிய வேற்றுமைகளில், ஒற்றுமையான இந்திய ஒன்றியத்தைச் செயல்படுத்தும் நோக்கில் வலிமையான மைய அரசினைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றமுறை

பாராளுமன்ற மக்களாட்சி இந்திய அரசியலமைப்பின் மற்றொரு சிறப்பாகும். குடியரசுத் தலைவர் தலைமையில் ஆட்சித்துறை இயங்குகிறது. உண்மையான நிர்வாகப் பணிகளைப் பிரதம அமைச்சரும், அவரின் அமைச்சர் குழுவும் மேற்கொள்கின்றனர். மத்திய சட்டமன்றமாகிய பாராளுமன்றத்தில் “லோக்சபை”, “இராச்சிய சபை” என்ற இரு அவைகள் உள்ளன. வயதுற்றோர் வாக்குரிமை வழியாக லோக்சபை (கீழ் அவை) உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலவை நிரந்தர அங்கமாகும்.

அரசியலமைப்பின் சரத்துக்கள் 152 முதல் 237 வரை மாநில நிர்வாகம் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆளுநர் மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆவார். உண்மையான நிர்வாகப் பணிகளை, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை நிறைவேற்றி வருகின்றன. சில மாநிலங்களில் இரண்டு அவைகள் உள்ளன. தமிழகத்தில் சட்டசபை மட்டுமே உள்ளது. “உறுதியான நிலைப்பாடும் பொறுப்பும் மிக்க பாராளுமன்ற முறையே மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன” என்று டாக்டர். அம்பேத்கர் கூறியுள்ளார்.

வயதுற்றோர் வாக்குரிமை மற்றும் ஒற்றைக் குடியுரிமை

இந்தியாவில் “இந்தியக் குடியுரிமை" மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்படுகிறது.

முழு இறைமை பெற்ற மக்களாட்சி, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசு

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை முழுஇறைமை பெற்ற மக்களாட்சி, மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசு ஆகியவற்றினை வலியுறுத்துகிறது. மக்களிடையே சமவாய்ப்பையும், சமநிலையையும் பராமரிப்பது இந்திய அரசின் கடமையாகும் என்பது முகவுரையிலிருந்து தெளிவாகிறது.

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles of State Policy)

சட்டங்கள் இயற்றும்போதும் அவற்றை நடைமுறைப் படுத்தும்போதும் பின்பற்ற வேண்டிய கருத்துக்கள் கொண்ட தொகுப்பே “அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்” எனலாம். இந்திய அரசியலமைப்பு முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சமய, பொருளாதார, அரசியல், நீதி, சமத்துவம், சுதந்திரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டவல்ல கொள்கைகளாக அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் திகழ்கின்றன. இவை தார்மீகத் தன்மை பெற்றவையாகும். இந்திய அரசியலமைப்பின் நான்காம் பாகத்தில், அரசாங்கம் சட்டம் இயற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய அறநெறிக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

பிரெஞ்சுப் புரட்சியின் மானிட உரிமைப் பிரகடனம், அமெரிக்க விடுதலைப் பிரகடனம், அயர்லாந்து அரசியலமைப்பு, காந்தியக் கொள்கைகளின் தாக்கத்தினால் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் உருவாயின. இந்திய அரசியலமைப்பில் நான்காவது பகுதியில் “36 முதல் 51 விதிகள்” வரை உள்ள பகுதியில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. அடிப்படை உரிமைகளுக்கு நீதிமன்ற உத்தரவாதம் இருக்கும்போது, அறநெறிக் கோட்பாடுகளுக்குத் தார்மீக உத்தரவாதம் மட்டுமே உள்ளன. இன்றைய நிலையில் அறநெறிக் கோட்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

மக்கள் நலனை அடைய அரசு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்

 • சமூகப் பொருளாதார அரசியல் நீதி, தேசிய வாழ்வின் அனைத்து அமைப்புகளிலும் இருக்கும்படி சமுதாய அமைப்பை உருவாக்கி மக்கள் நலனைப் பேண வேண்டும். வருவாய் ஏற்றத் தாழ்வை நீக்க வேண்டும்.
 • அனைவருக்கும் வாழ்க்கைத் தேவைகளைப் பரவலாய் அளித்தல், சமுதாயப் பொருள் வளங்களைப் பொது நலனுக்காக நியாயமான முறையில் பங்கிடுதல்.
 • மக்களின் பொது நலனுக்குக் கேடு விளையும் வண்ணம் வளங்களும், உற்பத்தியும் ஓரிடத்தில் மட்டும் குவிவதைத் தடுத்துப் பொருளியலைச் சீரமைத்தல்.
 • ஆண், பெண்களுக்கு, சமவேலைக்குச் சம ஊதியம், உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காத வேலை வாய்ப்புகளை ஆண், பெண் குழந்தைகளுக்கு அளித்தல்.
 • குழந்தைகளையும், இளைஞர்களையும் சுரண்டலிலிருந்தும் ஒழுக்கக் கேடுகளிலிருந்தும் பாதுகாத்தல்.
 • சமநீதியும் இலவசச் சட்ட உதவியும் அளித்தல்.
 • அனைவருக்கும் உழைப்பதற்கான உரிமையையும் கல்வி பெறும் உரிமையையும் பாதுகாப்பதுடன், வேலையற்றோர் முதியோர், பிணியாளர், உடல் ஊனமுற்றோர் ஆகியோர்க்கு அரசு உதவி அளித்தல்.
 • பணிபுரிவதற்குத் தேவையான நியாயமும், மனிதாபிமானமும் அமைந்த பணிச்சூழல்களை அமைத்தல் மற்றும் மகளிருக்கு மகப்பேறு உதவி அளித்தல்.
 • தொழில்களின் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்புக்கு வழி வகுத்தல்.
 • குடிமக்களுக்கு ஒரே மாதிரியான குடிமையியல் (சிவில்) சட்டம்.
 • பத்தாண்டுக் காலத்திற்குள் 14 வயது வரை இலவசக் கட்டாயக் கல்வி அளித்தல்.
 • வேளாண்மை - கால்நடை வளர்ப்பு - நவீன அறிவியல் முறையில் வளர்த்தல்.
 • சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துதல் மற்றும் காடுகளையும் வன விலங்குகளையும் காத்தல்.
 • தேசிய நினைவுச் சின்னங்கள், இடங்கள், பொருட்களைப் பாதுகாத்தல்.
 • நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையை தனிப்படுத்துதல்.

காந்தியக் கோட்பாடுகளைச் செயல்படுத்த வழிகாட்டும் அறநெறிக் கோட்பாடுகள்

 • கிராமப் பஞ்சாயத்துக்களை உருவாக்கி அவை தன்னாட்சி அமைப்புகளாகச் செயல்படச் செய்தல்.
 • வேளாண்மை - தொழிற்சாலை - உழைப்பாளர்கள் வாழ்வதற்கான ஊதியம் - பணிச்சூழல்கள் - சமூக - பண்பாட்டிற்கு முழுமையான வாய்ப்புகள் ஏற்படுத்துதல் - குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் தனிநபர் - கூட்டுறவு அடிப்படையில் குடிசைத் தொழில்களை வளர்த்தல், கல்வி பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் - பழங்குடியினர் – நலிவுற்ற பிரிவினர் - நலன் பேணுதல் - சமூக அநீதி – சுரண்டலிலிருந்து பாதுகாத்தல்.
 • ஊட்டச்சத்து தரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துதல், மது மற்றும் ஊறு விளைவிக்கும் மருந்துகளையும் தடை செய்தல்.
 • கால்நடை வளர்ப்பு மேம்படுத்தல் - அவற்றைக் கொல்லுவதைத் தடுத்தல்.

பன்னாட்டு அமைதி ஏற்பட வழிமுறைகள்

 • சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு - சமூக உறவு.
 • சர்வதேசச் சட்டத்தை மதித்தல் - பிரச்சனைகளுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை ஊக்குவித்தல்.

அறநெறிக் கோட்பாட்டின் தாக்கம்

 • ஜமீன்தாரி முறை ஒழிப்பு
 • மன்னர் மானியம் ஒழிப்பு
 • தொழில்களைத் தேசிய மயமாக்கல்
 • ஐந்தாண்டுத் திட்டங்கள் - பல்வேறு திட்டங்கள் - வேலை வாய்ப்பு
 • வாழ்க்கைத்தரம் உயர்த்தல்
 • கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தல்.

அடிப்படை உரிமைகளும் கடமைகளும் (Fundamental Rights and Duties)

மக்களுக்குச் சொத்துரிமை, பேச்சுரிமை போன்ற அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பின் III ஆம் பகுதி தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி, அடிப்படை உரிமைகளைப் பெறலாம். உரிமைகளைப் பெறுவது போன்றே கடமையை ஆற்றுவது அவசியமாகும். அரசியலமைப்புச் சட்டங்கள், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியவற்றை மதித்தல், நாட்டைப் பாதுகாத்தல் போன்ற பதினோரு அடிப்படைக் கடமைகளை வலியுறுத்துகின்றன. இவை 86 ஆவது திருத்தத்தின் வழியாக விதிக்கப்பட்டுள்ளன.

அடிப்படை உரிமைகள்

இந்திய அரசியலமைப்பு, குடிமக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான உரிமைகளை “அடிப்படை உரிமைகளாகக்” கொடுத்துள்ளது. தனிமனிதன், தன் சொந்த நலத்துடன், சமுதாய நலத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நெறிமுறையே “அடிப்படை உரிமைகளாகும்.'' சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், தனிமனிதனின் கல்வி, அறிவு ஆளுமை வளர்ச்சிக்கு வழிவகுத்து, தனிமனிதனை மேம்படுத்தி அவற்றின் வழியாகச் சமுதாய மற்றும் தேசத்தின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக உள்ளது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றபொழுது, நீதிமன்றங்களில் முறையீடு செய்து நீதிப் பெறலாம்.

“உரிமைகள் இன்றி மனிதனால் நல்ல வாழ்க்கை வாழ இயலாது” என்பது லாஸ்கியின் கருத்தாகும். “மானிட உரிமைப் பிரகடனம்” முதன் முதலில் பிரஞ்சு புரட்சியின் போது வெளியிடப்பட்டது. "உரிமை மசோதா (Bill of Rights) பேரறிக்கை ”யை அமெரிக்கர்கள் 1791 இல் திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பில் இணைத்தனர். ஐக்கிய நாட்டுச் சபை மனித உரிமைகளை வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் அடிப்படை உரிமைகள், அரசியல் மற்றும் சட்டரீதியான சமத்துவத்துடன், சமுதாயச் சமத்துவத்தையும் அடையும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட காரணத்தினால், இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் தனித்தன்மை பெற்றதாக விளங்குகிறது.

இந்திய அரசியலமைப்பில் மூன்றாவது பகுதியில் ஏழு வகையான அடிப்படை உரிமைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை 12 முதல் 35 வரையில் உள்ள சரத்துக்களில் அடங்கியுள்ளன.

சமத்துவ உரிமை

 • சட்டத்தின் முன் அனைவரும் சமம் - சமத்துவத்திற்கு சட்ட ரீதியான பாதுகாப்பு.
 • சமயம், சாதி, பால், இனம், நிறம் அடிப்படையில் யாரையும் வேறுபடுத்தக் கூடாது.
 • பொதுப்பணி மற்றும் வேலை வாய்ப்பில் சம வாய்ப்பு.
 • தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் அதிக அதிகாரமும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் வழங்குகிறது. நிவாரணம் வழங்குவது குறிப்பிடப்பட்டுள்ளது.
 • அரசு அனுமதியின்றிப் பெறும் பட்டங்களைத் தடை செய்தல். சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கும் பழங்குடியினர்க்கும் - சிறப்புச் சலுகை - இட ஒதுக்கீடு, வழங்குவது தடை செய்யாமை.

சுதந்திர உரிமை

 • பேச்சு மற்றும் கருத்துக்களை வெளியிடும் உரிமை.
 • ஆயுதமின்றிக் கூட்டங்கள் நடத்தும் உரிமை.
 • பேச்சு மற்றும் கருத்துகளை வெளியிடும் உரிமை.
 • நாட்டின் பாதுகாப்பிற்குச் சங்கங்கள், கழகங்கள் ஏற்படுத்தும் உரிமை.
 • இந்தியாவில் எந்தப் பகுதியிலும் வாழும் உரிமை மற்றும் இந்தியாவிலிருந்து எங்கும் செல்லும் உரிமை.
 • சொத்துக்கள் வாங்குதல் - வைத்துக் கொள்ளுதல் - விற்றல்.
 • சட்டம் அனுமதிக்கக்கூடிய விரும்பும் தொழில் செய்யும் உரிமை.
 • நாட்டின் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிப்பதாகவோ வெளிநாட்டு உறவு பாதிப்பதாகவோ பொது ஒழுங்கு ஆகியவை அழிக்கக் கூடியதாகவோ இருக்கக் கூடாது.
 • குற்றங்களுக்குத் தண்டனை அளிப்பது பற்றிய பாதுகாப்பு.
 • உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரப் பாதுகாப்பு

சுரண்டலிலிருந்து பாதுகாக்கும் உரிமை

 • மனித வியாபாரத்தையும், கட்டாயப்படுத்தும் வேலை வாய்ப்பையும் தடை செய்தல்.
 • தொழிற்சாலை மற்றும் சுரங்கப் பணிகளில் 14 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள் பணி செய்வதைத் தடை செய்தல்.

மதச் சுதந்திர உரிமை

மதத்தைப் பின்பற்றிப் பரப்புவதற்கான சுதந்திரம் - அரசுக் கல்வி நிறுவனங்களில் மதபோதனை நிகழ்த்தக் கூடாது.

பண்பாடு மற்றும் கல்வி உரிமை

 • சிறுபான்மையினர் மொழிப் பண்பாட்டைப் பாதுகாத்தல், சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் உரிமை.
 • சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை விரிவு செய்தல் மற்றும் நிர்வகிக்கும் உரிமை.

சொத்துரிமை

 • தனிப்பட்டவர் அல்லது நிறுவனம் சொத்துக்களை உடைமையாக்கவும் நிர்வகிக்கவும் உரிமை.
 • அரசுப் பொது நலனுக்காகத் தனியார் சொத்துக்களை எடுத்துக்கொண்டு இழப்பீடு அளிக்கலாம்.
 • ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. 1979 -ல் 44 ஆவது திருத்தத்தின் படி சொத்துரிமை அடிப்படை உரிமைப் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டது.
 • குடிமக்களின் சொத்துரிமை மகனுக்கும், மகளுக்கும் சமம். மேலும் இந்த உரிமை இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது. அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் குடி மக்கள் நீதிமன்றம் செல்லும் உரிமை.

(44-வது அரசியல் அமைப்பு திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்டு விட்டது. ஆனால் 300 (அ) சரத்தின் படி அரசியல் அமைப்புத் திட்டத்தில் உரிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது).

அடிப்படைக் கடமைகள்

உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஒரு உரிமைக்கும் இணையாக ஒரு கடமை உண்டு. ஒழுங்காக நிறைவேற்றப்பட்ட உரிமையிலிருந்து கடமைகள் எழுகின்றன. ஒவ்வொருவரும் தங்களின் கடமையை நிறைவேற்றினால் உரிமைகள் காக்கப்படும். உரிமைகள் பணிகளுக்குத் தொடர்பு கொண்டவை. ஆற்றப்பட வேண்டிய கடமைகளுக்குப் பதிலாகவே தரப்படுகின்றன என்று ஹெரால்டு லாங்கி கூறுகிறார். இந்திய அரசியல் சட்டம் பகுதி IV அ, பிரிவு 51 அ இதில் உள்ள 42 ஆவது அரசு சட்டத்திருத்தம் இந்தியக் குடிமக்களின் கடமைகளை வலியுறுத்துகிறது. அவைகளாவன;

1. அரசியல் சட்டதிட்டம், தேசியச் சின்னம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு மதிப்பு அளித்தல்.

2. தேசிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் உன்னத உணர்வு நினைத்துப் பேணுதல்.

3. நமது நாட்டின் இறைமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு நிலைநிறுத்துதலும் பாதுகாத்தலும்.

4. நாட்டின் பாதுகாப்பிற்காகச் செயலாற்றல், தேவை ஏற்பட்டால் பாதுகாப்புப் பணியில் ஈடுபடல்.

5. மதம், மொழி, இனம், வகுப்பு வேற்றுமைகளைத் துறந்து சகோதர உணர்வுடன் தேசிய ஒற்றுமை ஓங்கச் செய்தல்.

6. நம்முடைய பண்பாடு பன்முகப் பாரம்பரியக் கலாசாரத்தின் மேன்மையை மதித்தல் பாதுகாத்தல்.

7. காடு, ஏரி, குளம், ஆறு மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தல் - மேம்படுத்துதல்.

8. அறிவியல் மனப்பான்மை மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம், சிந்தனை ஆகியவற்றை மேம்படுத்தல்.

9. நாட்டின் பொதுச் சொத்துக்களை அக்கறையுடன் பாதுகாத்தல், வன்முறையைக் கைவிடல்.

10. நாடு தன்னுடைய முயற்சியிலும், சாதனைகளிலும் தொடர்ந்து முன்னேறும் வகையில் அனைத்துத் துறைகளிலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகளில் மேன்மைக்குப்பாடுபடுதல்.

11. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கல்வி பெறுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இக்கடமை 2002 ஆம் ஆண்டு 86 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி இணைக்கப்பட்டது ஆகும்.

குடியுரிமை (CITIZENSHIP)

"குடிமகன் / குடிமகள்” எனப் பொருள்படும் “சிட்டிசன்” என்ற ஆங்கிலச் சொல் “சிவிஸ்” என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். City / States கிரேக்க நகர நாட்டில் வாழ்ந்தவர்களை குறித்த அச்சொல், இன்றும் குடிமக்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டில் வாழும் மனிதன், அந்த நாட்டின் குடிமகன் / குடிமகள் ஆவார். நாட்டு நிர்வாகச் செயல்களில், யார் ஒருவர் பங்கு கொள்கின்றாரோ, அவர் அந்த நாட்டின் குடிமகன் / குடிமகள் என அரிஸ்டாட்டில் கூறுகிறார்.

ஒரு நாட்டிற்கும், தனி நபருக்கும் இடையிலான சட்டரீதியான உறவே குடிமை எனக் குறிப்பிடலாம். இதன்படி தனிநபர் நாட்டிற்குக் கடமைப்படுகிறார். நாடு அவருக்குப் பாதுகாப்பளிக்க முன் வருகிறது. இந்த உறவு தேசியச் சட்டங்களினால் நெறிப்படுத்தப்படுகின்றது; சர்வதேசச் சட்டங்களால் ஆங்கீகரிக்கப்படுகிறது.

குடிமகனின் குடிமக்களின் உரிமைகளும், கடமைகளும்

(1) நாட்டைக் காக்க குடிமகன் / குடிமக்கள் பயன்படுத்தும் குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்

(2) நாட்டிற்காகக் குடிமகன் / குடிமகள் ஆற்றும் பொதுநலம் பேணுவது உள்ளிட்டக் கடமைகள்

(3) குடிமகன் / குடிமகள் நாட்டுப் பற்றுடன் இருத்தல். போன்றவை குடிமகனின் / குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் ஆகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் குடிமையுரிமைகள்

அரசியலமைப்புச் சட்டத்தின் 5 முதல் 8 வரையிலான பிரிவுகள் குடியுரிமையைக் குடிமகனுக்கு / குடிமக்களுக்கு அளிக்கின்றன.

1. இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே வசிப்பவர்கள்.

2. இந்தியாவில் பிறக்காமல் இந்தியாவில் வாழ்பவர்கள் (பெற்றோர்களில் ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்).

3. இந்தியாவில் பிறக்காமல் பொதுவாக இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவர்கள்.

4. இந்தியாவில் வசித்து 1947 மார்ச் முதல் தேதிக்குப் பின்னர் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து, பின்னர் குடியேற்ற அனுமதி மூலம் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியவர்கள்.

5. பாகிஸ்தானில் வசித்து 1947 ஜூலை 19 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள் அல்லது அந்தத் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்து இங்கே ஆறு மாதங்களுக்கு மேல் வசித்து முறைப்படி பதிவு செய்து கொண்டவர்கள்.

6. இந்தியாவிற்கு வெளியே வசிக்கின்றவர்கள் - அவர்களே இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது பாட்டியர் பாட்டன்மார்களில் ஒருவரோ இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவர்கள் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

குடியுரிமைச் சட்டம் 1955

1. 1950 ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமக்களாவர்.

2. 1950 ஜனவரி 26 ஆம் தேதிக்குப் பின்னர் இந்தியாவின் வெளியே பிறக்கின்றவரின் தந்தை பிறப்பின் போது இந்தியக் குடிமகனாக இருந்தால் - சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அப்படி பிறந்தவர்களும் இந்தியக் குடிமக்களாவார்கள்.

3. சில நிபந்தனைக்குட்பட்டு குறிப்பிட்ட முறையில் பதிவு செய்து கொள்பவர்களுக்குக் குடியுரிமை அளிக்கப்படும்.

4. சில நிபந்தனைக்குட்பட்டு, இயல்பாக்கத்திற்கு முறைப்படி விண்ணப்பிப்பதன் மூலம் வெளிநாட்டினரும் இந்தியக் குடியுரிமை பெறலாம்.

5. குடியுரிமையைத் துறப்பதின் மூலமும், சில காரணங்களால் பறிப்பதன் மூலமும் இந்தியக் குடியுரிமையை இழக்க வேண்டி வரும். மேற்குறிப்பிட்டவை “குடியுரிமைச் சட்டம் 1955 அம்சங்களாகும்.”

மக்களாட்சியில் குடிமக்களின் பங்கு

மக்களாட்சியில் குடி மக்களின் பங்கு மகத்தானதாகும். ஆள்பவரும் ஆளப்படுவர்களும் மக்களே, சட்டங்களும் அரசமைப்புச் சட்டங்களும் மட்டுமே ஒரு நாட்டை உன்னதம் ஆக்க முடியாது. குடிமக்களின் இடையுறா முயற்சியும், ஆர்வமும், ஆற்றலும், நாட்டை உன்னதம் ஆக்குகின்றன என நேரு குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்படி நடத்தல், வரிசெலுத்துதல் மற்றும் சமுதாயத்திற்குரிய தேவைகளோடு, மக்களாட்சியில் அரசியல் முனைப்போடு பங்கேற்றல், அரசு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு ஏற்றல் ஆகியவையும் மக்களாட்சியில் குடிமக்களின் பங்கு ஆகும். அடிப்படை உரிமைகள், அரசின் நெறிப்படுத்தும் கோட்பாடுகள், அடிப்படைக் கடமைகள் குடிமைக்கு மாண்புகளைச் சேர்க்கின்றன. குடிமக்களின் கடமைகளும் மக்களாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.

மக்களாட்சியின் வெற்றிக்கு முக்கியத் தேவைகள்

அரசியல் விழிப்புணர்வும், அறிவுத் திறனும் கொண்ட குடி மக்களின் ஒத்துழைப்பும் - நாட்டு நடப்புகளில் ஈடுபாடும் பங்கேற்பும், உரிமை கடமைகளைப் பாதுகாத்து வாழ்தல், ஒத்த குடிமக்களின் குடிமை மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்தல், ஒற்றுமை - ஒருமைப்பாட்டைப் பேணிக் காத்தல் ஆகியவை மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு இன்றியமையாத தேவைகளாகும்.

குடியுரிமை, வயதுற்றோர் வாக்குரிமை

இந்தியக் குடிமக்களுக்கு ஒற்றைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குகிறது. இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் - மகளிர், சிறார் மற்றும் இயலாதோர் நலன் & கல்வி தொடர்புடைய சரத்துக்கள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மகளிர் நலன் தொடர்புடைய சரத்துக்கள்

 • சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.
 • மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடும் செய்யக் கூடாது.
 • மகளிர் மற்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது.

இந்தச் சரத்தினை நிலை நாட்டும் வண்ணம் நீதிமன்றத் தீர்ப்புகளும் வெளியாகியுள்ளன. இந்தச் சரத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித் துறையில் மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 • வாழ்க்கை வாழ்வதற்கும், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு அளித்தல்.

இந்தச் சரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகள், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலினக் கொடுமைகளை எதிர்த்துப் பெண்களின் உரிமைகளைக் காக்க வழி செய்துள்ளன. மேலும், விபச்சாரத்தில் ஈடுப்பட்ட பெண்களை, அதிலிருந்து மீட்டு, அவர்களின் மறுவாழ்விற்கும், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சிக்கும் வழி அமைக்கப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. பணிபுரியும் இடங்களில் எவ்விதப் பாலினக் கொடுமைகள் நேரிடக்கூடாது என்பதற்காகத் தலைமை நீதி மன்றம் நெறி முறைகளை வகுத்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

 • கொத்தடிமை, பிச்சையெடுப்பது, கட்டாயத்தால் பணியில் ஈடுபடச் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன.
 • மனிதநேய அடிப்படையில் பெண்களுக்கு மகப்பேறு உதவிகள், பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்புகள் அளிக்கப்படுகின்றன.
 • ஒற்றுமை சகோதரத்துவம் நிலைநாட்டுதல், பெண்களின் மதிப்பிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எவ்விதச் செயலிலும் ஈடுபடுவது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சொத்துரிமை தொடர்புடையது : வழி வழியாகத் தன் முன்னோர்கள் அனுபவித்த சொத்திலும் பங்கு பிரிக்கப்பட்டதன் மூலமோ, பராமரிப்பின் காரணமாகவோ, பரிசளிப்பின் மூலமோ பெற்ற சொத்துக்களின் மீதும், தன் சொந்த முயற்சியின் மூலமும் சொத்து சம்பாதிக்கவும், வாங்கவும் அவற்றை அனுபவிக்கவும் பெண்களுக்கு உரிமை உண்டு. பெண்கள் சீதனமாகப் பெற்றவையும் பெண்களுக்குரிய சொத்துகளாகும். இந்தியச் சொத்துரிமை திருத்தச்சட்டம் முதன் முதலில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது. 1982 இல் மேலும் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இதன்படி விதவை மருமகளுக்கும் மற்றும் பேரக் குழந்தைகளுக்கும் குடும்பச் சொத்தில் பங்கு உண்டு என்பது வலியுறுத்தப்பட்டது.

 • பெண், தன்னுடைய கணவனைச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு காரணத்தினால் விவாகரத்து செய்தபின், மறுமணம் செய்யும் உரிமை உண்டு.

மகளிர் மேம்பாட்டிற்குக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

1954 - சிறப்புத் திருமணச்சட்டம்

1955 - இந்து திருமணச்சட்டம்

1955 - இந்து வாரிசு உரிமைச்சட்டம்

1956 - இந்து மைனர்கள் மற்றும் கார்டியன்ஷிப் சட்டம்

1956 - பெண்கள் மற்றும் சிறுமியர் மீதான ஒழுக்கமில்லா வியாபாரத் தடைச்சட்டம்.

1961 - இந்து தத்தெடுத்தல் மற்றும் ஜீவனாம்சம் சட்டம்

1972 - மருத்துவக் கருச்சிதைப்புச் சட்டம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறார்கள் நலன் தொடர்புடைய சரத்துகள்

கொத்தடிமை, பிச்சையெடுப்பது மற்றும் கட்டாயத்தால் பணியில் ஈடுபடச் செய்வது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. தொழிலகங்கள் முதலியவற்றில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தல். பதினான்கு வயதிற்குக் குறைந்த எந்தக் குழந்தையையும் தொழிலகம் அல்லது சுரங்கத்தில் பணிக்கு அமர்த்தக் கூடாது. எவ்விதக் கடுமையான பணி செய்வதற்கும் சிறார்களைப் பயன்படுத்தக் கூடாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையாவன - தொழிற்சாலைகள் சட்டம் (1948) சுரங்கங்கள் சட்டம் (1952) மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் (1951) வியாபாரி கப்பல் போக்குவரத்துச் சட்டம் (1958) பீடி - சிகரெட் தொழிலாளர் (பணிச்சூழல்) சட்டம் (1966) குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் (1986).

அரசு நெறிமுறைக் கோட்பாடு

 • ஆண் - பெண் - தொழிலாளர் உடல் நலம் ; குழந்தைகளின் இளம்பிராயம் பாதிக்கப்படாமல் வயதிற்கும் வலிமைக்கும் ஒவ்வாத பணிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப் படுத்தலுக்கு தடைவிதித்தல்
 • குழந்தை பருவமும், இளமையும் சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்படுதல்.
 • பதினான்கு வயது வரை அனைத்துச் சிறார்களுக்கும் இலவசக் கல்வி வசதி
 • 6 முதல் 14 வயது வரையில் குழந்தைகள் கல்விபெறச் சூழ்நிலையை ஏற்படுத்துவது பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரின் கடமையாகும்.

1960 இல் குழந்தைகளைச் சுரண்டலிலிருந்து பாதுகாக்கவும் நல்ல ஆரோக்கியமான சூழலில் குழந்தைகளின் அறிவை வளர்க்கவும், குழந்தை காப்பகங்கள் ஏற்படுத்தி அவற்றில் இளம் குற்றவாளிகளையும், புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் தங்க வைத்தல் பொருட்டும் “குழந்தைகள் நலச் சட்டம் இயற்றப்பட்டது.

1979 ஆம் ஆண்டு, சர்வதேசக் குழந்தைகள் ஆண்டாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட “இளம் குற்றவாளிகள் நீதிச்சட்டம்”, பிச்சையெடுப்பதில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகள், வீடற்ற அனாதைக் குழந்தைகள், பெற்றோர்கள் இருந்தும் அவர்களது பராமரிப்பிலிருந்து விடுபட்டு குற்றவாளிகளாக மாறிய குழந்தைகள், நடத்தை கெட்ட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள குழந்தைகள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் ஆகியோரை இனம்கண்டு, அவர்களின் நலன் பாதுகாக்க வழி செய்துள்ளது.

இச்சட்டம் “இளம் குற்றவாளிகள் நலக்கழகம்” என்ற அமைப்பை ஒவ்வொரு மாநில அளவிலும் ஏற்படுத்தி, புறக்கணிக்கப்பட்ட இளம் குற்றவாளிகளை முறைப்படுத்த வகைசெய்துள்ளது. குற்றம் செய்யப்பட்ட 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் இளம் குற்றவாளிகளாக வரையறுக்கப்படுகிறார்கள். இளம் குற்றவாளிகள் காப்பகம், சிறப்பு விடுதிகள், கண்காணிக்கும் விடுதிகள், இளம் குற்றவாளிகளைச் சீர்படுத்தி பின் கண்காணிக்கும் விடுதிகள் ஆகியவற்றை நிர்வகிக்க இச்சட்டம் வழி கோலியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கல்வி தொடர்புடைய சரத்துக்கள்

 • கல்வி உரிமை - சட்ட ரீதியாக இலவச மற்றும் கட்டாயக் கல்வியை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு மாநில அரசு வழங்கலாம்.
 • சமூக மற்றும் கல்வி அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர், தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பயிலுவதற்கு மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்யத் தடையேதும் இல்லை.
 • ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமக்களுக்கும் அவர்கள் விரும்பும் பண்பாட்டு மற்றும் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது.
 • மதம், மொழி அடிப்படையில் உள்ள சிறுபான்மையினர் தங்களின் விருப்பத்தின்படி, கல்வி நிறுவனங்களை உருவாக்கி, நிர்வகிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
 • பதினான்கு வயதுவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வசதி செய்தல் வேண்டும்.
 • தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர் மற்றும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலனை மேம்படுத்துதல்.
 • தேசிய தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்.
 • சமூக மற்றும் கல்வி நிலையில் பின்தங்கிய வகுப்பினரின் வாழ்க்கையை ஆய்ந்து, தரத்தை மேம்படுத்தும் பரிந்துரைகள் செய்யுமாறு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தை நியமிக்கும் அதிகாரத்தைக் குடியரசுத்தலைவருக்கு வழங்கியுள்ளது.
 • மொழிசார்ந்த சிறு பான்மையினர் குழந்தைகளின் நலன் காப்பதும், குறைந்தது தொடக்கக் கல்வியினையாவது அவர்களின் தாய்மொழியில் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் பொறுப்பும், அரசிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இயலாதோர் நலன் தொடர்பான சரத்துக்கள்

 • அரசுக்குத் தன்னுடைய பொருளாதார நிலைக்கு ஏற்ப வேலையற்றவர்களுக்கு, வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இயலாதோர்கள் ஆகியோர்க்குப் பணியாற்றுவதற்கும் கல்வி பெறுவதற்கும் மற்றும் பொதுவான உதவி பெறுவதற்கும் ஏற்பாடு செய்யும் உரிமை அளிக்கப்படுகிறது.
 • உடல், மன இயக்கத்தில் குறைபாடுடையோர், இயலாதோர் ஆவார்கள். குறிப்பாக கண், வாய், உடல் மற்றும் மூளைக்குறைபாடுகள் உள்ள இயலாதோர்க்கு, அரசு, நலத்திட்டங்கள் வழியே அவர்களின் வளர்ச்சிக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
 • கோத்தாரி கல்விக்குழு (1966) கல்வியை இயலாதோருக்கு, பயனளிக்கும் வகையில் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. 1986 மற்றும் 1992 தேசியக் கல்விக் கொள்கைகளில் “இயலாதோர்களுக்கான சிறப்புக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.
 • 1956 ஆம் ஆண்டு, சமூக நலத்துறை, இயலாதோர் சிறப்புக் கல்விப் பொறுப்பை மேற்கொண்டது. 1971 இல் இயலாதோர் ஒருங்கிணைப்புக் கல்வித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. 1987 ஆம் ஆண்டு, இதனைக் கல்வித் துறைக்கு மாற்றி அமைத்தனர். அரசுடன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன.

இந்தியாவில் கட்சி முறை

அரசியல் கட்சிகள் குடியாட்சியில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. பிரதிநிதித்துவ மக்களாட்சியில் பொதுமக்கள் கருத்தை உருவாக்குவதற்கும், அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் இடையே விரும்பத்தக்க தொடர்பினை ஏற்படுத்துவதற்கும், அரசாங்கம் முழுமையாகச் செயல்படுவதற்கும் அரசியல் கட்சி முறை இன்றியமையாததாகும்.

அரசியல் கட்சியின் பெருமை

“ஏற்றுக் கொண்ட சில கொள்கைகளின் அடிப்படையில் கூட்டு முயற்சியால் தேசிய நலனை முன்னேற்றுவதற்காக அமைக்கப்படும் மக்களின் குழுவே அரசியல் கட்சியாகும்” என்பது பர்க்கின் கூற்றாகும்.

“அரசியல் கட்சிகள் என்பது சில கொள்கைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அமைப்பாகும். இத்தகைய அமைப்புகள், அரசாங்கத்தை அமைக்க முற்படுகின்றன” என்று மேக் ஐவர் தனது கருத்தினைத் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் பங்கும் பணிகளும்

அரசியல் கட்சிகள் திட்டங்களையும் கொள்கைகளையும் வாக்குறுதிகளாக, மேடை, செய்தித்தாள்கள், மக்கள் தொடர்புச் சாதனங்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் வழியாக வாக்காளர்களுக்கு அறிவிக்கின்றன. மக்களின் ஆதரவினைத் திரட்டுகின்றன. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற அரசியல் கட்சி அரசாங்கத்தை அமைக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற நீண்ட காலத் திட்டங்களையும், குறுகிய காலத் திட்டங்களையும் வகுத்து அரசாங்கத்தை நடத்துகிறார்கள். எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தில் நிகழும் குறைகளைச் சுட்டிக்காட்டி மக்களை விழிப்படைய செய்கின்றனர். ஆளும் கட்சியினர் தங்கள் தவறுகளைத் திருத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆளும் கட்சியினர் பெரும்பான்மையினரது ஆதரவு குறையாமல் கவனத்துடன் செயல்படுகின்றனர். பெரும்பான்மையை இழக்கும்போது பதவியிலிருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு இடம் அளிக்கின்றனர். கட்சி முறையினால் மட்டுமே புரட்சியின்றி அமைதியான முறையில் அரசாங்கத்தை மாற்றியமைக்க இயலும்.

அரசியல் கட்சிகளின் குறைகள்

ஒவ்வொரு கட்சியும் தங்களின் கோட்பாட்டினைப் புகழ்ந்தும், மற்றக்கட்சியை இகழ்ந்தும் பேசி, பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது கட்சி முறையின் மாபெரும் குறையாகும். கொள்கையை முன்வைத்து மக்களின் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதிலாக மக்களின் மனவெழுச்சி தூண்டப்படுகிறது.

எதிர்க்கட்சிகள், எப்பொழுதும் எதிர்ப்பதைக் கொள்கைகளாகவும், கண்டனத் தீர்மானங்களைக் கொண்டு வருவதில் முனைப்பாகவும் உள்ளன. இச்சூழலில் பயனுள்ள சட்டங்களும் முக்கியமான அவசரமான சட்டங்களும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படுகிறது. கட்சிப்பற்று, தலைவர்கள் மீது பற்று ஏற்பட்டு, தேசப்பற்று மறந்து, ஒற்றுமை ஒருமைப்பாடு குறைந்து, பிளவு மனப்பான்மை தோன்றும் சூழலும் ஏற்படுகிறது. இவையாவும் கட்சிமுறையின் குறைகளாகும்.

குறைகள் தீர்க்கும் வழிகள்

பொதுக்கல்வி வளர்ச்சி. சார்பும், அச்சமும் இல்லாத நடுநிலையான செய்தித் தாட்கள், மக்கள் தொடர்புச் சாதனங்கள், தேசப்பற்றுமிக்க கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் கருத்து முறையாக உருவாக்கப்படுதல், குடிமக்களின் ஆளுமை வளர்ச்சி, முறையான விழிப்புணர்வு ஆகியவைகளினால் கட்சி முறைகளின் குறைபாடுகளை நீக்க முடியும்.

கட்சி முறைகளின் வகைகள்

ஒருகட்சிமுறை, இருகட்சி முறை, பலகட்சி முறை என்பது கட்சி முறைகளின் வகைகளாகும்.

ஒரு கட்சி முறை: சீனா, இரஷ்யா போன்ற நாடுகளில் ஒரே கட்சி செயல்படுகிறது. பொதுவுடமை நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே செயல்படுகிறது.

இருகட்சி முறை: அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி ஆளும் கட்சியாகவும் தோல்வியுற்ற கட்சி எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது. அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரண்டு கட்சிகள் உள்ளன.

பலகட்சி முறை: இந்தியாவில் பலகட்சி முறை உள்ளது. பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. பலகட்சி முறையினால் பல்வேறு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். சிறந்த வேட்பாளரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவையே பலகட்சி முறையின் தனித்தன்மையாகும். கூட்டணி அரசாங்கம் அமைக்கவும் பலகட்சி முறையில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

முடிவுரை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கோலம் அல்ல. 1934ல் ஆரம்பித்து 1949 வரை உலக நாடுகளின் அரசியல் அமைப்புச் சட்டங்களை ஆய்ந்து உருவாக்கப்பட்ட ஒன்று. தனிமனித மாண்பு சிறப்பிற்கு இச்சட்டத்தை மதித்து வாழ்வோம். குறைகளற்ற பெருமைமிகு இந்தியாவை உருவாக்குவோம்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு புத்தகங்கள்.

Filed under:
2.89130434783
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top